யுவராஜ் போன்ற கலாசாரக் காவலர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் தோதான களமாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. கவுண்டர்கள் விவசாயத்தைப் பிரதானமாகக் கருதியவர்கள். ஒரு கட்டத்தில் விவசாயத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து, ஆழ்குழாய்க் கிணறு தோண்டுதல், போக்குவரத்து, வாகனக் கட்டமைப்பு, கால்நடைப் பண்ணை, கல்வி உள்ளிட்ட துறைகளில் நுழைந்து வெற்றிகரமாகத் தங்களை நிறுவிக்கொண்டனர். தமிழகத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் கொங்கு மண்டலம் முக்கியத் தொழில்நுட்ப மையமாகத் திகழ்வதற்கு கவுண்டர்களின் வர்த்தக நுழைவு ஒரு முக்கியக் காரணம்.
கொங்கு மண்டலத்தின் இதயப் பகுதி என்று திருச்செங்கோட்டையும் மலையுச்சியில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலையும் சொல்லமுடியும். சமீப காலங்களில் தொலைதூரங்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் இக்கோயிலுக்குத் திரண்டு வருவதும் கிரிவலம் செல்வதும் புது வழக்கமாக மாறியிருக்கிறது. இக்கோயிலை மையப்படுத்தி பல சிறிய, பெரிய வர்த்தக நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
கொங்கு மண்டலத்தின் பிரமிக்க வைக்கும் இந்த வர்த்தக வெற்றியோடு சாதியம் தன்னைக் கச்சிதமாகப் பிணைத்துக்கொண்டது. செல்வம், செல்வாக்கு, சாதியம் மூன்றும் பிரிக்கமுடியாதபடி ஒன்று சேர்ந்தன. இந்தக் கலவை கலாசாரக் காவலர்கள் செழித்து வளர்வதற்குத் தோதானதாக அமைந்துவிட்டது. சாதி அடையாளத்தின் பின்னால் பல்வேறு தரப்பினரையும் ஒன்று திரட்ட ஆரம்பித்தனர். பெருமாள் முருகனின் நூலிலிருந்து பகுதிகளைப் பிரதியெடுத்து வினியோகம் செய்து பரப்புரை மேற்கொண்டவர்கள் இவர்கள்தாம். இந்தப் பரப்புரை எதிர்பார்த்த பலனைக் கொடுத்தது. ஏற்கெனவே சாதிய உணர்வோடு இருந்தவர்கள் மேலும் தீவிரமடைந்தனர். அதுவரை சுய சாதி அடையாளத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்தவர்களை இந்தப் பரப்புரை மாற்றியமைத்தது.
மற்றொரு பக்கம், பெண் சிசுக்கொலையும் கருக்கலைப்பும் அதிகம் நிகழும் பகுதிகளாகவும் இவை முன்னரே அறியப்பட்டுள்ளன. வரதட்சணைக்குப் பயந்து பெண் குழந்தைகளைத் தவிர்க்கும் குடும்பங்களை அதிகம் காணமுடியும். சேலத்திலுள்ள ஓமலூர், பெண் சிசுக்கொலைக்குப் பெயர் போன இடம். அரசும் தனியார் தொண்டு அமைப்புகளும் தொடர்ந்து இப்பகுதியில் இயங்கியிராவிட்டால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளைக் காப்பாற்றமுடியாமல் போயிருந்திருக்கும். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தைகள் திட்டத்தை சேலத்தில்தான் தொடங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஆணாதிக்கமும் பெண்களை உடைமையாகக் கருதும் போக்கும் எல்லா இடங்களிலும் இருக்கின்றன என்றாலும் இங்கே குறிப்பிடத்தக்க அளவுக்குக் கூர்மையாக வெளிப்படுவதைக் காணமுடியும். சாதியம் கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படும் இடங்கள் இவை. கோகுல் ராஜின் மரணத்தை ஆராயும்போது கொங்கு மண்டலத்தின் இந்தச் சாதிய, பொருளாதார, அரசியல் பின்புலத்தை மனத்தில் கொள்வது அவசியமாகிறது.
0
காணாமல் போன யுவராஜைத் தேடத் தொடங்கும்போது அவரைப் பற்றிய வேறு சில தகவல்களும் கிடைத்திருக்கின்றன. ஏராளமான மோசடி வழக்குகள் முன்பே அவர்மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை போக, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கின்றன.
ஒரு பக்கம் தேடுதல் வேட்டை நடைபெற்றுக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் கோகுலின் உடல் வைக்கப்பட்டிருந்த சேலம் மருத்துவமனைக்கு வெளியே ஒரு விசித்திரமான போராட்டம் தொடங்கியிருந்தது. கோகுலின் மரணத்துக்கு நீதி வாங்கித் தரவேண்டும் என்ற பொறுப்பை யார் ஏற்பது என்பதில் தலித் அமைப்புகளுக்கு இடையில் போட்டி உருவாகியிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்திருந்த பார்த்திபன், கோகுலின் நண்பர் என்றும் பிஎஸ்பி கட்சியின் மாவட்டச் செயலாளர் என்றும் பார்த்தோம். கோகுல் காணாமல் போனபோது காவல் நிலையத்துக்கு நேரில் வந்தவர் இவரே என்றும் பார்த்தோம். ஆனால் கோகுலின் தாய் மாறுபட்ட அறிக்கையொன்றை வெளியிட்டார். பார்த்திபன் மனு சமர்ப்பித்ததே எனக்குத் தெரியாது. எங்கள் சார்பாக அல்ல, அவரே தன்னிச்சையாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்றார் சித்ரா. அவருடைய நடவடிக்கைகளை ஏற்கமுடியாது என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நுழைவுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி இந்த வழக்கிலிருந்து பின்வாங்கி, மறைந்துவிட்டது. தலித் விவகாரத்தில் நாங்கள் மட்டுமே தலையிடுவோம் என்று விசிக வலியுறுத்துவதை ஏற்கமுடியாது; அரசியல் லாபத்துக்காகவே அவர்கள் இப்போது இதைக் கையிலெடுத்துள்ளனர் என்பது பார்த்திபனின் குற்றச்சாட்டு. ‘கோகுல் என்னுடைய நண்பர். ஆரம்பத்திலிருந்தே நான் அவருடைய குடும்பத்தினரோடு சேர்ந்து நின்றுகொண்டிருக்கிறேன். காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் வழக்கை அவசர அவசரமாக முடித்து வைக்கவிருந்த நிலையில் நான் தலையிட்டு நீதிமன்றத்தில் மனு செய்தேன். அதிலென்ன தவறு? நீதி வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வாறு செய்தேன்? அதன்பிறகுதான் இது கொலை வழக்காக மாறியது? அவர்கள் (விசிக) வேண்டுமென்றே எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். கோகுலின் குடும்பத்தினரையும் மூளைச்சலவை செய்துவிட்டார்கள்.’
விசிகவின் மாணவர் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் அ. வசந்த் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார். ‘தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாங்கள் பலமிக்க தலித் அமைப்பாகத் திகழ்கிறோம். தலித்துகள் பாதிக்கப்படும்போதெல்லாம் உதவிக்கு வருகிறோம். எங்களுடையது ஓர் இயக்கம். இத்தகைய வழக்குகளில் தலையிட்டுதான் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இது பெரிய விவகாரம். எங்களால் மட்டுமே இதைத் தீர்க்கமுடியும்.’
சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் பூமொழி இந்த விளக்கத்தை ஏற்கத் தயாராகயில்லை. ‘கோகுல் விஷயத்தில் மனித உரிமை இயக்கங்கள் பல விலகி நிற்பதற்குக் காரணம் தலித் அமைப்புகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மோதல்கள்தாம். இந்த விவகாரத்தை யார் கையகப்படுத்துவது என்று அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கையில் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள்தாம்’ என்கிறார் இவர்.
‘கால் நூற்றாண்டுக் காலமாக இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திப் போராடி வருகிறோம். ஒடுக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தருவதே எங்கள் நோக்கம். அதற்கான தார்மிக உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களை நாங்கள் கைவிடமாட்டோம்’ என்கிறார் விசிகவின் பொதுச்செயலாளர் ரவிக்குமார்.
ஓர் ஆணவக் கொலையின் பின்னணியில் இப்படியோர் போட்டி நடைபெற்றிருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மனிதன் தொட்டு உருவாக்கிய அனைத்து விதமான அமைப்புகளிலும் சாதி ஊடுருவி இரண்டறக் கலந்திருக்கிறது எனும்போது கடும் போட்டி நிலவும் அரசியல் அமைப்பை மட்டும் அது விட்டு வைக்குமா என்ன?
0
எல்லாம் முடிந்தபிறகு கோகுலின் உடல் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி சேலத்திலிருந்து 20 கிமி தூரத்திலுள்ள ஓமலூர் எனும் பகுதிக்கு ஊர்வலமாக உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார்.
தன் சகோதரனின் நினைவுகளில் மூழ்கிக்கிடந்தார் கலைச்செல்வன். ‘அவன் கவிதைகளை மிகவும் நேசித்தான். பல கவிதைகளை எழுதியிருக்கிறான். அவற்றுள் ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினைகளைப் பேசும் கவிதைகள் நிறைய இருந்தன. மறைமலையடிகளின் தத்துவத்திலும் கோகுலுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.’ கோகுலின் நோட்டு புத்தகங்களை ஏனோ காவல் துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். கோகுல் தனது கவிதைகளை அவற்றில்தான் எழுதி வைத்திருந்தார்.
கோகுலின் அப்பா வேங்கடாசலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர். இருபதாண்டுகளுக்கு முன்பு பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டார். அம்மாதான் தன்னந்தனியாக இரு குழந்தைகளையும் தூக்கி வளர்த்து, பெரியவர்களாக்கியிருக்கிறார்கள். ‘எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் அம்மா எங்களைப் படிக்க வைத்தார்’ என்கிறார் கலைச்செல்வன். ‘காதல் கனவெல்லாம் இல்லை அவனிடம். நிறைய படிக்கவேண்டும், சாதிக்கவேண்டும் எனும் கனவில்தான் மூழ்கிக்கிடந்தான். கோகுலை அவர்கள் சும்மா ஒரு தட்டு தட்டி எச்சரித்து அனுப்பி வைத்திருக்கலாம். நாங்கள் பாட்டுக்கு எங்கள் வழியில் வாழ்ந்திருப்போம்.’
(தொடரும்)