உங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததற்காக கோகுல் ராஜ் கொல்லப்பட்டதை நீங்கள் ஏற்கிறீர்களா?
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் (கேஜேகே) மாநில அமைப்பாளரான 35 வயது கே. கோபால் ரமேஷிடம் இக்கேள்வியை முன்வைத்தேன். தனது கொங்கு வேளாளர் அடையாளத்தை மிகுந்த பெருமிதத்தோடும் முன்னிறுத்திக்கொள்பவர் இவர். ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ எனும் பெயரில் இயங்கிவந்த ஓர் அமைப்பிலிருந்து ஜி.கே. நாகராஜ் பிரிந்து வந்து கேஜேகேவைத் தோற்றுவித்தபோது மிகுந்த ஆர்வத்தோடு இணைந்துகொண்டார் கோபால் ரமேஷ். முன்னதாக, உ. தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் ஈரோடு நகர இளைஞர் அணிச் செயலாளராக இருந்திருக்கிறார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ் இதே அமைப்பின் இளைஞர் அணித் தலைவராக சங்ககிரியில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கோகுல்ராஜின் மரணம் துயரமானது, அதிர்ச்சியூட்டக்கூடியது’ என்றபடி உரையாடலைத் தொடங்கினார் கோபால் ரமேஷ். ‘நடந்திருப்பது கொலையென்றால் அதை எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.’
கோகுல் ராஜ் கொலையை நீங்கள் ஏற்கவில்லை, நல்லது. அவர் காதலை ஏற்பீர்களா? உங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்திருந்தால் அது தவறென்று சொல்வீர்களா? ‘ஆம்’ என்கிறார் கோபால் ரமேஷ். ‘கோகுல் ராஜ் ஒரு தலித். அதை அவர் உணர்ந்திருக்கவேண்டும். தன் எல்லை என்னவென்பதை அவர் நிச்சயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். எல்லைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. நாங்கள் பிற சாதிகளை மதிக்கிறோம். அவர்களை எந்த வகையிலும் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களும் அதேபோல் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அமைதி நிலவவேண்டுமென்றால், நாம் அனைவரும் சேர்ந்து ‘லட்சுமணக் கோட்டை’ மதிக்கவேண்டும். எல்லைக்கோடுகள் மீறப்படும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன.’
கோகுல் ராஜ் அவருக்கென்று வகுக்கப்பட்டிருக்கும் வட்டத்துக்குள் வாழ்ந்திருக்கவேண்டும். தன் கனவுகளை அவர் எல்லைக்கு உட்பட்டே வளர்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்கிறார் கோபால் ரமேஷ். கோகுல் ராஜுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும் எனும் கேள்விக்கு அவர் அளித்த பதில் இது. ‘ஏனென்றால் நாங்கள் கொங்கு வேளாளர்கள். எங்கள் பெண்களை நாங்கள் மிக உயர்வாக மதிக்கிறோம் என்கிறார் கோபால் ரமேஷ். எங்கள் குடும்பத்துப் பெண்களை நாங்கள் இளவரசிகளாகவே பார்க்கிறோம். அன்போடு செல்லம் கொடுத்து, ஊட்டி ஊட்டி வளர்க்கிறோம். நம் மரபுகளை, பழக்கவழக்கங்களை வளர்ப்பவர்கள் அவர்கள். அவர்களுக்கு அவப்பெயர் நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது எங்கள் கடமையல்லவா?’
இப்படிப் பெருமிதத்தோடு இவர் குறிப்பிடும் மரபு, கலாசாரம், பழக்கவழக்கம் என்பதன் பொருள் சாதிய மரபு, சாதிய கலாசாரம், சாதிய பழக்கவழக்கம் என்பதுதான். லட்சுமணக் கோட்டை ஒரு பெண் மீறும்போது அது தனிப்பட்ட மீறலாக இருப்பதில்லை. ஒட்டுமொத்த சாதி சமூகத்தின் மீறலாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஒட்டுமொத்த பெண்களையும் பாதுகாப்பதன்மூலம் சாதியமைப்பைப் பாதுகாக்கமுடியும் என்பது இவர்கள் நம்பிக்கை.
‘எங்கள் பெண்கள் வெறுமனே குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்களாக மட்டும் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தை நடத்துபவர்களே அவர்கள்தாம்’ என்கிறார் கோபால் ரமேஷ். ‘அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். எவ்வளவு குறைவான வருமானம் வந்தபோதும் சிக்கனமாகச் செலவிட்டு, ஓரளவு சேமிக்கவும் இவர்களால் முடியும். ஓபிசி பிரிவைச் சேர்ந்த பலர் வெற்றிகரமானவர்களாகத் திகழ்பவர்களுக்குக் காரணம் இவர்கள்தாம். சேமிப்பு எனும் வழக்கமே கொங்கிலிருந்துதான் தொடங்கியது, தெரியுமா? என்னுடைய 75 வயது அப்பா தினமும் பால் கறந்து விற்று, ஒரு நாளைக்கு ரூ.350 சம்பாதிக்கிறார். என் 64 வயது அம்மாவும் மோர், தயிர் விற்றுச் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார். எங்கள் குடும்பங்களுக்கிடையே நெருக்கமான பிணைப்புகள் உள்ளன. எங்கள் சமூகப் பண்பாட்டு நெறிமுறைகளை நாங்கள் கவனமாகப் பாதுகாக்கிறோம்.’
ஆனால் இந்த வேலைகளெல்லாம் செய்தால் போதுமா? மரபும் கலாசாரமும் காப்பது மட்டும்தான் பெண்களின் வேலையா? பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ‘ஒரு சமூகம் முன்னுக்கு வருவதற்குக் கல்வி அவசியம் என்பதை ஏற்கிறேன். ஆனால் அது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பிற சமூக விழுமியங்களை நாம் மறந்துவிடக்கூடாது. பல்லாண்டுகளாக நாம் கற்று வைத்திருப்பதைக் கல்வியின் பெயரால் துறந்துவிடக்கூடாது.’
ஒரு பெண் எதுவரை படிக்கலாம் என்பதற்கும் ஒரு லட்சுமணக் கோடு வைத்திருக்கிறார். ‘என்னைப் பொருத்தவரை 18 வயதுவரை ஒரு பெண் படிக்கலாம். 19 வயதுக்குமேல் படிப்பது அவளையும் அவள் குடும்பத்தையும் அசுத்தப்படுத்திவிடும். சமூகத்தில் மேலான நிலையை அடைந்துவிட்டோம், போதுமான பணம் இனி கிடைக்கும் என்றொரு மாயத் தோற்றத்தைக் கல்வி கொடுத்துவிடும். ஆனால் கல்வி ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நம் சாதிப் பெருமிதத்துக்கு அது மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.’
சாதித் தூய்மை காப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் தனி நபர் ஒழுங்கு ஏன் அவசியம் என்பதையும் இளையோருக்குப் பரப்புரை செய்து வருவதாகச் சொல்கிறார் கோபால் ரமேஷ். இந்த நவீனக் காலத்தில் இப்படியொரு பரப்புரை தேவைதானா என்றால் ஆம் என்கிறார். ஒரு சமூகமாக நாங்கள் ஏற்கெனவே நன்றாக வாழ்ந்துவருகிறோம்; நன்றாக முன்னேறி வருகிறோம் எனும்போது ஏன் கல்விக்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும்? குறிப்பாக, பெண்களுக்கு ஏன் அதைத் திணிக்கவேண்டும்? குடும்ப அமைப்பு கற்றுக்கொடுக்காத எதைக் கல்வி புதிதாகக் கற்றுக்கொடுத்துவிடப்போகிறது?
கல்வி தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கிறது என்கிறார் கோபால் ரமேஷ். ’18 வயதுக்குப் பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும். ஒருவேளை உயர் கல்வி படிக்கவேண்டும் என்று ஒரு பெண் விரும்பினால் திருமணத்துக்குப் பிறகு படித்துக்கொள்ளட்டும்.’ திருமணம் வேண்டாம், படிக்கிறேன் என்று பெண்கள் சொல்வது கவலையளிக்கக்கூடிய போக்காக இவருக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பெண்கள் பெருகுவது சாதியமைப்புக்கு எதிரானது என்று இவர் அஞ்சுகிறார். ‘ஆண்கள் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவரை போதும் என்றால் மேலும் படித்தால்தான் மேலும் சம்பாதிக்கமுடியும் என்கிறார்கள்.’
ஆண்களுக்கு அளிப்பதற்கு வேறொரு அறிவுரையை இவர் வைத்திருக்கிறார். ‘வணிகம் முக்கியம். சம்பாத்தியம் முக்கியம். அதற்கு முன்னால் முதலில் நம் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் கோகுல் ராஜ் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்.’
பழமைவாதி என்றோ அல்லது வேறு எப்படியோ என்னை நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள், எனக்குக் கவலையில்லை என்று தீர்க்கமாகச் சொல்கிறார் கோபால் ரமேஷ். ‘கோகுல் ராஜின் மரணத்தை நான் நியாயப்படுத்தவில்லை. அதே சமயம், எங்களை அசுத்தப்படுத்தும் எந்தச் செயலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எக்காரணம் கொண்டும் எங்கள் சாதி அடையாளத்தை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம்.’
(தொடரும்)