Skip to content
Home » சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உடல் கூறாய்வு அறிக்கை கோகுல் ராஜின் மரணம் கொலைதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகும் இல்லை, அது தற்கொலை என்று தொடர்ந்து சாதிக்குழுக்கள் வாதிட்டுக்கொண்டிருந்தன. ஒரு பக்கம் யுவராஜை காவல்துறை தேடிக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் யுவராஜ் தடாலடியாக பல வீடியோக்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பிக்கொண்டே இருந்தார். நான் என் விருப்பப்படி எதையும் செய்வேன், ஒருவரும் என்னை ஒன்றும் செய்துவிடமுடியாது என்னும் மமதை அவர் குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது. காவல் துறையோ அரசோ தன்னை எதுவும் செய்யாது என்பது அவருடைய தீவிரமாக நம்பிக்கை. இந்த அசாத்திய நம்பிக்கையை, துணிவை அவருக்கு அளித்தது சாதியைத் தவிர வேறொன்றுமில்லை.

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி எனும் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். ஆழ்துளைக் கிணறு உருவாக்கும் பணியில் இருந்தவர். இது வெளித்தோற்றத்துக்கு. மற்றபடி, பலவிதமான மோசடிச் செயல்களுக்காக மேற்குப் பகுதியில் பிரசித்தி பெற்றவர். சாதி அடையாளத்தை முதன்மையானதாகக் கருதியிருக்கிறார். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைமூலமாகச் சாதிப் பெருமித உணர்வைத் தன் மக்களுக்குப் பரப்பி வந்திருக்கிறார். குறிப்பாக, தலித் ஆண்களோடு கவுண்டர் பெண்கள் பழகக்கூடாது என்பது அவருடைய பரப்புரைகளுள் முக்கியமானது. நம் சமூகத்துப் பெண்களைக் கவனிப்பது நம் அனைவரின் பொறுப்பு. எங்கும், யாரும் தவறிழைக்காதவாறு காப்பது நம் கூட்டுக்கடமை என்று இளைஞர்களிடம் பேசி வந்திருக்கிறார். தேடப்படும் குற்றவாளியாக மாறியிருக்கிறோம் என்பது தெரிந்தும் அச்சமின்றித் தனது சாதிப் பெருமிதப் பரப்புரையை மேற்கொண்டு வந்திருக்கிறார். வாட்ஸ் அப் போதாது என்று தொலைக்காட்சி சானல்களுக்கும் பேட்டி கொடுக்கத் தொடங்கியிருந்தார்.

கோகுல்ராஜ் வழக்கை விசாரித்து வந்தவர் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) இருந்த விஷ்ணுப்ரியா. ஏழு மாதங்களுக்கு முன்புதான் அவர் இக்காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். கோகுல்ராஜ் வழக்கை நீங்கள்தான் விசாரிக்கவேண்டும் என்று மேலிருப்பவர்கள் கேட்டுக்கொண்டதால்தான் இந்த வழக்கு அவர் கரங்களுக்கு வந்து சேர்ந்தது. தற்கொலை வழக்கைக் கொலை வழக்காக மாற்றியவர் இவரே. இறந்துபோனது ஒரு தலித் என்பதால் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989இன் கீழ் வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தார் விஷ்ணுபிரியா.

தொடங்கும்போதே கடும் நெருக்கடிகள். ஊடகங்களில் தோன்றுகிறார், பேசுகிறார். வாட்ஸ் அப் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் கைது மட்டும் செய்யமுடியவில்லை. இது வெளிப் பிரச்சினை என்றால் உள்ளே அதற்கு மேல் கொடுமை. உயர் பதவியில் இருந்தபோதும், விஷ்ணுபிரியாவால் தான் விரும்பிய திசைகளில் செல்லவோ விரும்பியபடி வழக்கை முன்னெடுத்துச்செல்லவோ இயலவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இடர்பாடுகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று யாரேனும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். யுவராஜை இயக்கிய அதே சக்திதான் நம்மையும் அலைக்கழிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஷ்ணுபிரியாவுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஒரு தலித்தாக அது அவரைக் கடுமையாகப் பாதித்தது.

விசாரணையின் போக்கைத் திட்டவட்டமான முறையில் மாற்றியமைக்கும் நோக்கத்தோடு சில அரசியல் குழுக்கள் முனைப்போடு இயங்கி வந்ததை அவர் கண்டார். ‘மேலிடத்திலிருந்து மட்டுமல்ல கீழே பணிபுரிந்துகொண்டிருந்த சில காவல் துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுத்ததை விஷ்ணுபிரியாவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை’ என்கிறார் அவருடைய தந்தை எம். ரவி. புதுச்சேரி அரசில் பணியாற்றிவருபவர்.

16 செப்டெம்பர் 2015 அன்று சொந்த ஊரான கொண்டூருக்கு வந்து வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியிருக்கிறார். ‘அவர்தான் பூஜை செய்தார். நன்றாக சமஸ்கிருத பஜனைப் பாடல்கள் பாடினார். இன்னொரு நாள் எங்களோடு இருந்துவிட்டுப் போயேன் என்று கேட்டேன். இல்லை, வேலை இருக்கிறது. கோகுல்ராஜ் வழக்கில் ஒரு முக்கியமான துப்பு கிடைத்திருக்கிறது. மறுநாள் திருச்செங்கோடு போயாகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அதன்பின் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது’ என்கிறார் ரவி. நீங்கள் பார்த்தபோது விஷ்ணுபிரியா எப்படி இருந்தார் என்று நான் கேட்டதற்கு, எப்போதும் போல் இயல்பாகவே இருந்தார் என்றார். தனது மன உளைச்சலைத் தனக்குள் போட்டு மறைத்து வைத்திருந்தார் போலிருக்கிறது. செப்டெம்பர் 18ஆம் தேதியன்று 27 வயது விஷ்ணுபிரியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் அவருடைய இல்லத்தில் தூக்கில் அவர் உடல் தொங்கிக்கொண்டிருந்தது. தற்கொலை என்று சொல்லப்பட்டது.

விஷ்ணுபிரியாவின் மரணம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. மனித உரிமைக் காவலர்களும் தலித் செயற்பாட்டாளர்களும் உடனடியாகக் களத்தில் குதித்தனர். ஒரு தலித் இளைஞனின் கொலையை விசாரித்து வந்த ஒரு தலித் அதிகாரியின் மரணத்தைத் தற்கொலை என்று சொல்லி முடித்துக்கொள்வதை அனுமதிக்கமுடியாது. சிபிஐ இதை விசாரிக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்.

கோண்டூரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்தன. ‘என் மகள் தைரியமானவர், புத்திசாலி. அவர் நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர். அதுவே அவர் கனவாக இருந்தது. அந்தக் கனவோடுதான் காவல் துறையிலும் சேர்ந்துகொண்டார். ஆனால் அங்கே அதிர்ச்சியும் ஏமாற்றமும்தான் காத்திருந்தது. கடுமையான அடக்குமுறையும் கொடுங்கோன்மையும் நிலவும் இடம் அது. என் மகளைப் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அங்கே இடமில்லை’ என்று வருந்துகிறார் ரவி. ‘மாலை 5 மணிக்கு எங்களை அழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். நம்பவே முடியவில்லை.’

விஷ்ணுபிரியாவோடு உடன் படித்தவரும் அவருடைய நண்பருமான கே. மகேஷ்வரி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை சப் டிவிஷன் காவல்துறையில் டிஎஸ்பியாக இருப்பவர். விஷ்ணுபிரியா எவ்வாறு கைவிடப்பட்டார் என்பதைத் தெளிவாக வெளியில் பகிர்ந்துகொண்டார் இவர். ‘ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவவேண்டும் என்று விரும்பியவர் விஷ்ணுபிரியா. கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகு தனக்கு நேர்ந்த எல்லா மோசமான விஷயங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட செப்டெம்பர் 18ஆம் தேதியன்றுகூடச் சில மணி நேரங்களுக்கு முன்பு என்னை அழைத்தார். என்னால் அப்போது அழைப்பை எடுக்கமுடியவில்லை. நான் திரும்ப அழைத்தபோது, (நாமக்கல்) எஸ்பி கூப்பிடுகிறார். நான் பிறகு பேசுகிறேன் என்றுதான் சொன்னார்.’

சேலம் அரசு மருத்துவமனையில் விஷ்ணுபிரியாவின் உடலைக் கண்டதும் கதறியழுதிருக்கிறார் மகேஷ்வரி. மேலதிகாரிகள்தான் இதற்குக் காரணம். குறிப்பாக நாமக்கல் எஸ்.பி., எஸ்.ஆர். செந்தில்குமார்தான் விஷ்ணுபிரியாவைத் துன்புறுத்தி வந்தவர். சிலருடைய பெயர்களைச் சொல்லி, குண்டர் சட்டத்தில் இவர்களையெல்லாம் உள்ளே தள்ளு என்று விஷ்ணுபிரியாவிடம் அவர் சொல்லியிருக்கிறார். அவர்கள் அப்பாவிகள் என்பதை உணர்ந்ததும் விஷ்ணுபிரியா மறுத்திருக்கிறார். அதனால் எஸ்பியின் கடும் கோபத்தை அவர் சம்பாதித்துக்கொள்ளவேண்டியிருந்தது என்கிறார் மகேஷ்வரி. நீ இந்த வேலைக்குப் பொருத்தமானவளே இல்லை என்றும் எதற்கும் உதவாத நபர் என்றும் கோபத்தோடு எல்லோர் முன்னிலையிலும் அவர் விஷ்ணுபிரியாவைத் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார். ஒரு பெண்ணாகவும் தலித்தாகவும் இருந்ததால் இரட்டை அவமானத்தை என் நண்பர் சந்திக்கவேண்டியிருந்தது என்று வெடிக்கிறார் மகேஷ்வரி.

இப்படி வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறீர்களே, உங்களுக்குப் பயமில்லையா என்று கேட்டதற்குத் திடமாக மறுக்கிறார். ‘என்ன விளைவுகள் வரும் என்று தெரியும். எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். என்னையோ விஷ்ணுபிரியாவையோ யாரேனும் தவறாகக் குற்றம்சாட்டிவிடமுடியுமா? ஒரேயொரு தேநீராவது நாங்கள் காசு கொடுக்காமல் வாங்கி பருகியிருப்போமா? அந்தச் சாதிக்கு ஆதரவாக நடந்துகொண்டோம், இந்தச் சாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்று யாராவது எங்களைக் குறை சொல்லமுடியுமா? இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் இந்தத் தாக்குதல்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கவேண்டும்? பெண் அதிகாரிகளைத் துன்புறுத்தும் அநீதியான வழக்கம் எப்போது ஒழியப்போகிறது?’

கீழக்கரையில் எனக்கொரு நல்ல எஸ்பி (மயில்வாகனன்) கிடைத்துள்ளார். அவர் எனக்குக் குரு போன்றவர். பாவம், விஷ்ணுபிரியாவுக்கு அந்த அதிர்ஷ்டம் அமையவில்லை என்று வருந்துகிறார் மகேஷ்வரி. எதிர்பார்த்ததைப் போலவே இவருடைய சொற்கள் காவல் துறைக்குள் பலத்த சர்ச்சைகள் ஏற்படுத்தின. குறிப்பாக, பெண்கள் சக அதிகாரிகளாலும் மேலிடத்திலிருப்போராலும் நடத்தப்படும் விதம் விவாதங்களைக் கிளப்பியது. ஒரு வழியாக, பூனைக்கு மணி கட்டும் வேலையை இந்தப் பெண் அதிகாரி செய்திருக்கிறார் என்று பெயர் சொல்ல விரும்பாத, நீண்ட அனுபவமிக்க ஒரு காவல் துறை அதிகாரி ஆசுவாசத்தோடு கூறினார்.

மகேஷ்வரியின் ஆதங்கத்தை, கோபத்தை ரவியும் பகிர்ந்துகொள்கிறார். ‘பாலினம் சார்ந்து, அறம் சார்ந்து பல முக்கியமான பாடங்களைப் படித்துக்கொள்ளவேண்டிய இடத்தில் காவல் துறை இருக்கிறது. காலம் மாறிவிட்டது. முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்கூட இன்று கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பம் அனுப்புகிறார்கள். அவர்கள் தகுதியை உணர்ந்து நல்லவிதமாக மரியாதையோடு அவர்களை நடத்தவேண்டும். ஆனால் மூத்த அதிகாரிகள் பலர் நிலப்பிரபுக்கள் போல் அவர்களிடம் நடந்துகொள்கின்றனர். மக்களிடமிருந்து அல்ல, சகப் பணியாளர்களிடமிருந்தும் இந்த அதிகாரிகள் விலகி நிற்கின்றனர்’ என்கிறார் ரவி.

இதில் எதுவுமே புதிதல்ல என்கிறார் முன்னாள் டிஜிபி திலகவதி. ‘நான் பணியாற்றிய காலத்திலேயே இதுபோன்ற துன்புறுத்தல்களைப் பெண்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள்கூட உங்களை மோசமாக நடத்தவே துணிவார்கள். எல்லாத் துறைகளையும் போல் காவல் துறையிலும் பெண்கள் பாரபட்சத்தோடுதான் நடத்தப்படுகின்றனர். இதற்குத் தீர்வு மனமுடைந்துபோவதல்ல, மாறாக எதிர்த்து நின்று போராடுவதன்மூலமே நிலைமையை மாற்றமுடியும். அக்காலத்தில் நாங்கள் பாலினப் பாகுபாடுக்கு எதிராகக் கடுமையாகப் போராடினோம். சட்டம்தான் நம் அனைவரையும் நிர்வகிக்கிறது. நாம் அதற்கு மட்டுமே கட்டுப்படவேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் சமம் என்றெல்லாம் அப்போது வலியுறுத்தியிருக்கிறோம். இப்போது செய்யவேண்டியதும் அதேதான்.’

விஷ்ணுபிரியாவின் மரணம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா? ‘இல்லை என்கிறார் திலகவதி. எதுவும் மாறாது. ஆணாதிக்கம் அவ்வளவு எளிதாக மறையக்கூடியதல்ல. இறுதிவரை தொடர்ந்து போராடவேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினை இது’. தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் நிறுவனர் பூமொழியின் கருத்தும் இதுவேதான். ‘நிலப்பிரபுத்துவ மனநிலையோடு இருக்கும் அதிகாரிகளால்தான் விஷ்ணுபிரியா போன்றவர்கள் இறந்துபோகிறார்கள். 2006 முதல் 2013வரை தமிழகக் காவல் துறையில் 200 தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் நாம் இருக்கிறோம்’ என்கிறார் இவர்.

‘காவல் துறையினர் சங்கம் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இடமளிக்கவேண்டும். ஆண்களைக் காட்டிலும் பெண் காவலர்கள் கூடுதல் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். சமூகரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படும் பெண் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குத் தக்க வழிமுறைகள் காவல் துறைக்குள் இருக்கவேண்டியது அவசியம். மிக முக்கியமாக, மனிதத்தன்மைகொண்ட ஓரிடமாகக் காவல் துறை மாறவேண்டும்’ என்கிறார் பூமொழி.

விஷ்ணுபிரியாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் எனும் கோரிக்கையை அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. அதேசமயம் விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் இருவருடைய மரணங்களையும் விசாரிக்கும் பொறுப்பை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பறித்து சிபி சிஐடி பிரிவுக்கு மாற்றினார்.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

1 thought on “சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு”

  1. அநீதிகளுக்கு எதிராக களமாடியிருக்கும் கட்டுரையாளர் அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்❤️

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *