Skip to content
Home » சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

சாதியின் பெயரால்

கோகுல்ராஜ் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறந்து கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பிறகு 11 அக்டோபர் 2015 அன்று யுவராஜ் சரணடைந்தார். எல்லா ஊடகங்களிலும் அச்சமின்றி உலாவரும் ஒரு குற்றவாளியை ஏன் காவல் துறையால் மட்டும் கைது செய்யமுடியவில்லை என்று எல்லாத் திசைகளிலிருந்தும் அழுத்தம் கூடி வந்த பிறகே யுவராஜ் இந்த முடிவை எடுத்தார்.

ஆம், இறுதிவரை காவல் துறை அவரைக் கைது செய்யவில்லை. சரி போகட்டும் என்பதுபோல் அவராகவே விருப்பப்பட்டு நாமக்கல்லில் சிபி சிஐடி அலுவலகத்தில் வந்து சரணடைந்தார் யுவராஜ். செல்வாக்குமிக்க ஓர் அரசியல் தலைவர்போல் தனது பரிவாரங்களைத் திரட்டிக்கொண்டு, புன்னகையோடு கையசைத்துக்கொண்டே அவர் வந்து சேர்ந்த விதம் பல கதைகளைச் சொன்னது. யுவராஜைக் குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்குமாறு 2 டிசம்பர் 2015 அன்று அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கோகுல்ராஜ் குடும்பம் நான்கரை நிமிடப் பதிவொன்றைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டது. கோகுல்ராஜ் இறுதியாகச் சந்தித்த சுவாதியின் குரல் அது. நாங்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள்தாம் என்று சுவாதி அதில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். வா, வந்து யுவராஜிடம் பேசு என்று சொல்லி ஒரு கும்பல் கோகுல்ராஜை இழுத்துச் சென்றது என்றும் சுவாதி குறிப்பிட்டிருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கெனவே இருவரைக் கைது செய்திருந்தார் விஷ்ணுபிரியா. அடுத்து யுவராஜைக் கைது செய்யும் திட்டத்தில் இருந்தபோது இறந்துபோனார். யுவராஜ் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரது சகோதரர் தங்கதுரை, கார் ஓட்டுநர் பி. அருண் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இருவரோடு சேர்த்து மொத்தம் 17 பேர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் தீவிரம் பெற்றன. 7 ஜனவரி 2016 அன்று சிபி சிஐடி 725 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்டுள்ள 17 பேருக்கும் கோகுல்ராஜ் கொலையில் தொடர்பு இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. முதன்மைக் குற்றவாளியாக யுவராஜும் இரண்டாம் நிலைக் குற்றவாளியாக ஓட்டுநர் அருணும் பட்டியலிடப்பட்டிருந்தனர்.

கோகுல்ராஜ் வழக்குக்கும் எனக்கும் தொடர்பில்லை; எனக்குப் பிணை வழங்கவேண்டும் என்று வேலூர் சிறையிலிருந்த யுவராஜ் தரப்பிலிருந்து ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று மே 2016இல் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. புன்னகையோடு கையசைத்தபடி வெளியில் வந்தார் யுவராஜ். சட்டத்தைக் காட்டிலும் சாதி வலுவானது என்று உள்ளுக்குள் அவர் மகிழ்ந்திருக்கவேண்டும். அந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆகஸ்ட் மாதம் மீண்டும் யுவராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், அவர் மனைவி ஜோதிமணி இருவரும் 2017ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 பேரிலிருந்து 15 பேராக மாறியது. கைதுக்கு எதிராக அவர்கள் தரப்பு தொடர்ந்த மேல் முறையீடு செய்துகொண்டிருந்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 மாதங்களுக்குள் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் அவருக்குப் பிணை வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டது. தொடர்ந்து, கோகுல்ராஜின் தாய், சகோதரர், தோழி என்று 106 பேர் அரசுத் தரப்புச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 30 ஆகஸ்ட் 2018 அன்று அவர்களிடம் விசாரணை ஆரம்பமானது.

இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாய் சித்ரா அவ்வப்போது இடையீடு செய்துகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அரசு கூடுதல் வழக்கறிஞராக பா. மோகனை நியமிக்கவேண்டும் என்று சித்ரா விடுத்த கோரிக்கையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நிராகரித்தார். ஓய்வுபெற்ற ஒருவர் அரசு கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நாமக்கல் நீதிமன்றம் இவ்வழக்கை நடத்தும் விதம் திருப்திகரமாக இல்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் சித்ரா. சட்டம் தனது கடமையைச் செய்வதற்கான சாத்தியம் நாமக்கல்லில் குறைவு. எனவே பா. மோகனை நியமிக்கவேண்டும் என்று மீண்டுமொருமுறை கோரினார்.

சென்னை உயர்நீதிமன்றம் அவர் மனுவை ஏற்றுக்கொண்டது. மொத்தம் 41 சாட்சியங்களை விசாரித்த பிறகே என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று நினைவுகூர்கிறார் மோகன். ஆனால் அப்போதும் சிக்கல் தீரவில்லை. உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அரசு கூடுதல் வழக்கறிஞராக மோகனை அஇஅதிமுக நியமனம் செய்யவில்லை. மீண்டும் சித்ரா தலையிட்டு, வழக்கை வேறோர் இடத்துக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மே 2019இல் மாற்றப்பட்டது. ஆனால் அங்கும் போதுமான நீதிபதிகள் நியமிக்கப்படாததால் விசாரணை துரிதமாக நடத்தப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே நீதிபதி சம்பத்குமார் நியமிக்கப்பட்டார்.

செப்டெம்பர் 2020இல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு கோகுல்ராஜ் வழக்கு விவரங்களை விசாரித்து, நடைபெற்றிருப்பது ஆணவக்கொலை என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியது. கொடூரமான முறையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட விதத்தைக் கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்திய நீதிபதிகள், யுவராஜுக்குப் பிணை என்னும் பேச்சுக்கே இனி இடமில்லை என்றும் வலியுறுத்தியது.

யுவராஜ்மீது ஏற்கெனவே சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்று, கொங்கு மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2012 ஈமு கோழி மோசடி வழக்கு. அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரில் ஒருவர் யுவராஜ். ஈமு கோழி வளர்த்து பெரும் செல்வந்தராகலாம் எனும் திட்டத்தால் கவரப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் இவர்களிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இந்த மோசடி வழக்கு கோவை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 2021இல் வெளிவந்த தீர்ப்பின்படி யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கும் பத்தாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. கைதானபோது எப்படிப் புன்னகையோடு காட்சியளித்தாரோ அதேபோல் இத்தீர்ப்பையும் அலட்டிக்கொள்ளாமல் எதிர்கொண்டார் யுவராஜ். காவலர்களோடு இயல்பாகப் பேசிச் சிரித்தபடி அவர் தோன்றும் புகைப்படம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பத்தாண்டு சிறை அடுத்து வரும் தீர்ப்புக்கான முன்னோட்டமாக அமைந்துபோனது.

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தீர்ப்பு 8 மார்ச் 2022 அன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வெளியானது. 106 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். 500 சான்றுகள், 74 தடயப் பொருள்கள் பரிசோதிக்கப்பட்டன. சுவாதி பிறழ் சாட்சியாக மாறி, கோகுல்ராஜ் யாரென்றே எனக்குத் தெரியாது என்று அறிவித்தார். முன்பே வேறு சிலரும் இதேபோல் பிறழ் சாட்சியங்களாக மாறியிருந்தனர். முதன்மை குற்றவாளியான யுவராஜ்மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையிலான துல்லியமான சாட்சியங்கள் கிடைக்காமல் போனது. திருச்செங்கோடு மலையில் பதிவான சிசிடிவி காட்சிகள், ஊடகங்களுக்கு யுவராஜ் அளித்த நேர்காணல்கள் போன்றவற்றை பா. மோகன் முன்னிறுத்தி வாதங்களைக் கட்டமைத்தார். தான் மலையில் ஏறியதை யுவராஜே ஓர் ஊடகப் பேட்டியில் சொல்லியிருந்தது அதுவரையிலான புலன் விசாரணையில் இடம்பெறாமல் இருந்தது. இப்போது அதுவும் இணைத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை எப்படி நடைபெற்றது என்பதையும் கோகுல்ராஜின் தாய் சித்ரா நீதிமன்றத்திடமிருந்து என்ன எதிர்பார்த்தார் என்பதையும் நீதிபதி சம்பத்குமாரின் தீர்ப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.`அரசு சிறப்புக் குற்றத்துறை வழக்கறிஞர் தனது வாதத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான ஆணவக் கொலை என்றும், குற்றத்தின் தன்மை மிகவும் கடுமையானது என்றும், எனவே அதற்குத் தகுந்தார்போல தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்பட வேண்டும், 1,2 ஆகிய எதிரிகள்தான் இந்தக் கொலைக்கு மூலக்காரணம் என்றும் வாதிட்டார்.

‘பிரிவு 15 ஏ(5) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடைச்சட்டத்தின்கீழ் புகார்தாரர் சித்ராவிடம், `எதிரிகளுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை பற்றி ஏதும் கூற விரும்புகிறாரா?’ எனக் கேட்டபோது, அவர், `மரண தண்டனை வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.’

கோகுல்ராஜோடு சேர்ந்து அவர் கனவுகளும் கொல்லப்பட்டதை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார். `இறந்துபோன கோகுல்ராஜ் பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், அவரது விதவைத் தாயான சித்ராவின் இளைய மகன். கோகுல்ராஜ் நிச்சயமாக வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தை அடைய வேண்டுமென்ற கனவோடு இருந்திருப்பார். அதுபோல தனது இளைய மகனின் நிழலில் மற்றும் பாதுகாப்பில் தனது கடைசிக்காலம் வரையில் சந்தோஷமாக வாழலாம் என்று ஒரு கனவுடன் இருந்திருப்பார். ஆனால், மேலே கண்ட எதிரிகளால் அந்தக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.’

விசாரணையின் முடிவில் யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அருணுக்கும் அதே மூன்று ஆயுள் தண்டனைகள் கிடைத்தன. குமார் என்கிற சிவக்குமார், சதீஷ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோருக்குத் தலா இரண்டு ஆயுள் தண்டனைகளும் சந்திரசேகர், பிரபு, கிரிதர் ஆகியோருக்குத் தலா ஒரு ஆயுள் தண்டைனையும் வழங்கப்பட்டன.

நடைபெற்றிருப்பது வெறும் கொலையல்ல, ஆதிக்கச் சாதி வெறியின் வெளிப்பாடு என்பதைத் தனது 368 பக்கத் தீர்ப்பில் அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் நீதிபதி சம்பத்குமார். ‘காதலுக்குச் சாதி, மதம், இனம் முக்கியமல்ல. ஆதிக்கச்சாதி என்ற ஆணவத்தால் எதிரிகள் தாழ்த்தப்பட்ட பொறியியல் படித்த ஓர் இளைஞனைத் தங்கள் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார் என்ற சந்தேகம் கொண்டு அந்த இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது உணர்வு மற்றும் மனது சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பல சரிதங்களும் இதிகாசங்களும் நமக்கு உணர்த்துகின்றன. காதலுக்குச் சாதி, மதம், இனம் போன்றவை முக்கியம் அல்ல. அவற்றால் காதலைத் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. கோகுல்ராஜின் ஆணவக் கொலை ஆதிக்கச்சாதி வெறியின் மற்றொரு ரத்தச் சரித்திரம்.’

(தொடரும்)

பகிர:
nv-author-image

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

2 thoughts on “சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’”

  1. தீர்ப்பை வெளியிட்ட நீதி அரசர்களுக்கு அனந்தகோடி நன்றிகள் உரித்தாருக ! இது போன்ற ஆவணக் கொலைகள் அநேகம் கடந்தகாலத்தில் நடைபெற்றுள்ளன . நூற்றுக்கணக்கான யுவராஜ் க்கள சாற்றிச் சாதியின் பெருமையை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் . நாமக்கல் SP க்கு உரிய தண்டனை என்ன ? விஷ்ணுபிரியாவின் கதி தான் நிர்க்கதி ! இது போன்ற ஆவணக் கொலைகளை வழக்கு பதிவு செய்யும்போதே , அண்டை மாநிலத்திற்கு மாற்றியாக வேண்டும் !

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *