நாம் படித்துக்கொண்டிருப்பது வெவ்வேறு மனிதர்களின் கதைகளையா அல்லது ஒரே மனிதனின் கதையை மீண்டும், மீண்டுமா எனும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. கொல்லப்படும் ஆள்கள் மாறுகிறார்கள். அவர்கள் வாழும் இடங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அடிப்படை மாறுவதாக இல்லை. உனக்கான வட்டத்தைவிட்டு வெளியில் வந்து உனக்கு மேலுள்ள அடுக்கைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தால் நீ எங்கள் பகைவன். எனவே அழிக்கப்படவேண்டியவன்.
கரூரின் இதயப் பகுதியில், பட்டப் பகலில், மக்கள் இயல்பாக நடமாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு கோயிலின் முன்பு 23 வயது இளைஞர் ஒருவர் வெட்டிச் சாய்க்கப்பட்டார். இது நடந்தது 6 ஜனவரி 2021 அன்று. அவர் பெயர் ஹரிஹரன். வஞ்சியம்மன் கோயில் தெருவில் வீடு. காமராஜபுரத்திலுள்ள மேட்டுத் தெருவில் முடி திருத்தும் கடையொன்றை வைத்து நடத்தி வந்தார். ஹரிஹரன் ஒரு பொருளியல் பட்டதாரி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் வரும் மருத்துவர் சாதியைச் சேர்ந்த அவர் பிற்படுத்தப்பட்ட செட்டியார் சாதியைச் சேர்ந்த மீனாவை மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்தார். மீனாவும் அதே தெருவைச் சேர்ந்தவர்தான்.
விஷயம் தெரிய வந்ததும் அதிர்ந்துபோன மீனாவின் குடும்பத்தினர் எல்லோரையும்போல் முதலில் மிரட்டலில் இறங்கினர். இனி அவனைப் பார்க்கக்கூடாது. பேசக்கூடாது. எல்லாவற்றையும் மறந்துவிடு. இது தொடர்ந்தால் நம் மானமும் மரியாதையும் குலைந்துவிடும். மீனாவும் அஞ்சி ஹரிஹரனைச் சந்திப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் ஹரிஹரனால் மீனாவை மறக்கமுடியவில்லை. தொலைபேசிமூலம் அவரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றிருக்கிறார். இயலவில்லை. ஒரு வழியாக ஜனவரி 6ஆம் தேதி மீனாவிடம் பேச முடிந்திருக்கிறது. கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வா, எதுவாக இருந்தாலும் ‘பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று அழைத்திருக்கிறார் மீனா.
தனது தந்தை சிவலிங்கம் ஜெயராமனையும் இரு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு மீனா வரச் சொன்ன இடத்துக்குச் சென்றிருக்கிறார் ஹரிஹரன். மீனாவைக் காணவில்லை. சரி, வரட்டும் என்று அனைவரும் அமைதியாகக் காத்திருந்திருக்கிறார்கள். இறுதிவரை மீனா வரவேயில்லை. அவருக்குப் பதிலாக ஒரு கும்பல் திரண்டு வந்திருக்கிறது. மீனாவின் தந்தை வேலன், உறவினர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரைக் கொண்ட கும்பல். திட்டமிட்டு, போதுமான ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். என்ன, ஏது என்பதை உணர்வதற்குள் ஹரிஹரனும் உடனிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர்.
உடனே விலகிச் செல்லுமாறு ஹரிஹரனின் நண்பர்கள் எச்சரிக்கப்பட்டனர். ஹரிஹரனையும் அவர் அப்பாவையும் விரட்டுவதோ மிரட்டுவதோ நோக்கமல்ல என்பதால் மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். ஒரு பக்கத்திலிருந்து கற்கள் பறந்து வந்திருக்கின்றன. இன்னொரு பக்கத்திலிருந்து சரமாரியாக அரிவாள் வெட்டுகள். மதியம் 1.30 வாக்கில், அனைவர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டுத் தாக்குதல் இது என்பதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்திருக்கிறார் ஹரிஹரன். வந்த வேலையை முடித்துக்கொண்டு கும்பல் மறைந்ததும், கீழே விழுந்து கிடந்த ஹரிஹரனை அள்ளிப்போட்டுக்கொண்டு கரூர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது என்றாலும் காயங்கள் கடுமையாக இருந்ததால் அவரை மீட்கமுடியவில்லை. அன்று மாலை மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது.
தந்தை ஜெயராமன் கரூர் நகரக் காவல்துறையில் புகாரளித்தார். எங்கே நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவார்களோ எனும் அச்சத்தில் தெரிந்தவர்களைத் திரட்டிக்கொண்டு வந்து, என் மகனை அடித்துக்கொன்றவர்கள் அனைவரையும் கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராடியிருக்கிறார். உயிரற்ற உடல் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்னும் நிலையில் அதையே ஒரு கருவியாக மாற்றிக்கொண்டு போராடும் இந்த உத்தியைப் பிற வழக்குகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். இரண்டு பிரதான நோக்கங்கள் இந்தப் போராட்ட முறைக்கு உண்டு. முதலாவது, காவல் துறைக்கும் பிற அதிகாரிகளுக்கும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது, உடலை வாங்க மறுக்கும்போது அது செய்தியாகிறது. உறங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தின் கண்களையும் காதுகளையும் திறக்க இது உதவும்.
இங்கு நடந்ததும் அதுதான். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இறங்கி வந்து பேசினார்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம், உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கோரினார்கள். பலத்த காவலோடு உடல் தகனம் செய்யப்பட்டது. அடுத்தடுத்து மீனாவின் தந்தை வேலனும் நான்கு உறவினர்களும் (சங்கர், கார்த்திகேயன், வேலுச்சாமி, முத்து) கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 147, 141, 142, 341, 342, 294(b), 323, 307, 302, 506(2) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹரிஹரனின் படம் ஊடகத்தில் வெளிவந்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. கொலை விவரங்களும் அதிர்ச்சியளித்தன. உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற சம்பவம் அல்ல இது. கொல்லவேண்டும் எனும் முடிவோடு ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். ஹரிஹரனின் தந்தையைக் காயப்படுத்தியதோடு நிறுத்தியிருக்கிறார்கள். ஹரிஹரன்தான் பிரதான எதிரி என்பதால் தாக்குவதற்கு முன்பு முதலில் அவர் தலையை சிமெண்ட் சுவர்மீது மோதி உடைத்திருக்கிறார்கள். அதன்பின் வெட்டுகள் விழுந்திருக்கின்றன.
எவிடென்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையின்படி, 12 பேர் கொண்ட கும்பல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கொலை நடந்த இடத்திலிருந்து காவல் துறை 200 மீட்டர் அருகில் இருந்திருக்கிறது. ஆனால் முதல் தகவல் அறிக்கையின்படி 4 மணிக்குப் புகார் அளிக்கப்படும்வரை அவர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
என் மகனின் காதல் குறித்து நான் தெரிந்துகொண்டதே மீனாவிடமிருந்துதான் என்கிறார் தந்தை ஜெயராமன். ‘சம்பவம் நடைபெறுவதற்குச் சில நாள்களுக்குமுன்பு மீனா என் மனைவியை போனில் அழைத்து, உங்கள் மகனை நான் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான் எங்களுக்கே விஷயம் தெரிந்தது. அப்போதே ஹரிஹரனைக் கூப்பிட்டுப் பேசினோம். இது நமக்கு ஒத்துவராது என்று சொன்னோம். என் மகனை மறந்துவிடு என்றுதான் மீனாவிடமும் சொன்னோம்.’
அதன்பின் மீனாவின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, நீங்கள் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? நாங்கள் யார் தெரியுமா? எங்கள் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணம் நடந்துவிடுமா? என்றெல்லாம் ஜெயராமனைத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். மிரட்டலுக்கெல்லாம் காதல் மசியாது என்பது தெரிந்ததும் கொல்லும் மனநிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
இந்த வழக்கு முடிவடையும்வரை சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் பிணையில் விடுவிக்கக்கூடாது என்கிறார் எவிடென்ஸ் கதிர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 25 லட்சம் இழப்பீடு அரசு வழங்கவேண்டும் என்றும் கோருகிறார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. காரணம், குற்றவாளிகள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அல்ல. குற்றம் என்னவோ ஒன்றுதான் என்றாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முறையினால் ஒரு தலித்துக்குக் கிடைத்திருக்கவேண்டிய நியாயமான இழப்பீடும் ஹரிஹரன் குடும்பத்தினருக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
கரோனா தொற்று நிலவிய காலத்தில் மட்டும், 11 மாதங்களில் தமிழகமெங்கும் இதேபோல் 9 கொலைகள் நடைபெற்றிருக்கின்றன என்கிறார் எவிடென்ஸ் கதிர். திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரைக்கு அருகிலுள்ள தென்னம்பட்டி எனும் கிராமத்தில் வசிக்கும் கதிர்வேலின் மகள் ஜெயஸ்ரீ (21 வயது) வடிவேலின் மகன் தங்கதுரை (26 வயது) என்பவரைக் காதலித்திருக்கிறார். பெண், தலித் பறையர் சாதியைச் சேர்ந்தவர்; இளைஞர் வெள்ளாள கவுண்டர். ஜெயஸ்ரீயை உடல் ரீதியாகவும் உள்ளம் ரீதியாகவும் சுரண்டியிருக்கிறார் தங்கதுரை. திருமணம் செய்துகொள் என்று ஜெயஸ்ரீ கேட்டுக்கொண்டபோது ஒரு தலித்தான உன்னை நான் எப்படித் திருமணம் செய்துகொள்ளமுடியும் என்று மறுத்திருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயஸ்ரீ திருமணத்தில் உறுதியாக நின்றதைக் கண்டதும் தங்கதுரை தன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு வசைகளைப் பொழிந்திருக்கிறார். தொடர்ந்து ஜெயஸ்ரீ கொல்லப்பட்டிருக்கிறார்.
உடல்கள் பெருகிக்கொண்டே போகின்றன. இவ்வளவு ரத்தம் குடித்த பிறகும் சாதிப் பெருமிதத்தின் பெருந்தாகம் அடங்குவதாக இல்லை.
(தொடரும்)