காவிரி ஆற்றிலிருந்து முதலில் ஓர் இளைஞனின் உடலைத்தான் இழுத்து வெளியில் கொண்டுவந்தார்கள். இரு தினங்கள் கழித்து அதே இடத்தில் ஒரு பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் எனும் ஐயமே ஒருவருக்கும் ஏற்படாத வகையில் இரு உடல்களிலும் கடுமையான, கோரமான வெட்டுக்காயங்கள் பரவிக்கிடந்தன. தவிரவும், நீரில் மூழ்கிக்கிடந்ததால் இருவருடைய உடல்களும் அழுகிப்போயிருந்தன.
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்திலுள்ள சிவசமுத்திரத்துக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற உடல்கள் இவை. ஆணின் உடல் 13 நவம்பர் 2019 அன்றும் பெண்ணின் உடல் 15 நவம்பர் அன்றும் மீட்கப்பட்டிருக்கின்றன. இருவருடைய கைகளும் கால்களும் கயிறு போட்டு இறுக்கக் கட்டப்பட்டிருந்தன. பெண்ணின் தலைமுடி அகற்றப்பட்டிருந்தது. ஆணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. உடல் கிடைத்தாலும் இருவருடைய அடையாளமும் தெரியக்கூடாது என்பதில் கொன்றவர்கள் உறுதியோடு இருந்திருக்கின்றனர்.
வீசப்பட்ட உடல் வந்ததுபோல் மறைக்கப்பட்ட அடையாளம் வெளிப்பட அதிக காலம் பிடிக்கவில்லை. கொலையுண்டவர்கள் என். நந்தீஷ் (26), அவர் மனைவி ஸ்வாதி (21) ஆகிய இருவரும்தான் என்பது விரைவில் தெரியவந்தது. அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணமும் கொல்லப்பட்ட விதமும் தெரிய வந்தபோது தமிழகமெங்கும் அதிர்ச்சி அலைகள் உண்டாயின. இருவரும் ஓசூருக்கு அருகிலுள்ள சூடகொண்டப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தலித் பிரிவைச் சேர்ந்த நந்தீஷும் அதே பகுதியில் வசிக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த (எம்பிசி) ஸ்வாதியும் கிட்டத்தட்ட நான்காண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால், நந்தீஷின் சாதி ஸ்வாதி வீட்டினரை வெகுண்டெழச் செய்திருக்கிறது. காதல், திருமணம் எதற்கும் அனுமதியில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். மறுப்பதோடு நிறுத்திக்கொள்பவர்களல்லர், தாக்கவும் துணிந்தவர்கள் என்பதை உணர்ந்ததும் இருவரும் ஓசூருக்குச் சென்றனர். அச்சம் அவர்களை விரட்டியடித்திருக்கிறது.
ஓசூரில் ஒரு மரக்கடையில் இருவருக்கும் வேலை கிடைத்திருக்கிறது. அருகில் ஒரு சிறு வீடு பிடித்துக்கொண்டார்கள். அதன்பின் திருமணமும் நடந்திருக்கிறது. சூளகிரி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 6 செப்டெம்பர் அன்று திருமணத்தைப் பதிவு செய்துகொண்டார்கள். நான்கு நாள்கள் கழித்து புதுமணத்தம்பதியினர் உற்சாகத்தோடு வெளியில் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் பிரதானமாக இரு பணிகள் இடம்பெற்றிருந்தன. முதல் வேலை, துணி மணி வாங்கவேண்டும். இரண்டாவது, கமலஹாசனைப் பார்க்கவேண்டும். முதல் வேலை முடிந்ததும் கமலைப் பார்க்க ஆசையோடு சென்றிருக்கிறார்கள். புதிய அரசியல்வாதியாக உருமாறியிருந்த கமல் அப்போது பல இடங்களுக்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் நின்றிருக்கிறார்கள். அதன்பின் அவர்களைக் காணவில்லை. வீட்டுக்கு வரவில்லை. இருவருடைய கைபேசியும் அணைக்கப்பட்டுவிட்டன. அவர்களைக் குறித்து எந்தத் தகவலும் யாரிடமும் இல்லை.
முதலில் கலவரமடைந்தது நந்தீஷின் தம்பி சங்கர்தான். பதறியடித்து, ஓசூர் நகரக் காவல்துறைக்குச் சென்று அண்ணன், அண்ணி இருவரையும் காணவில்லை என்று நவம்பர் 11ஆம் தேதி புகார் அளித்திருக்கிறார். காணாமல் போனதற்கு மறுநாள். இதற்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்பதையும் சங்கர் சரியாகவே யூகித்திருக்கிறார். நந்தீஷின் பின்னணி, காதல், திருமணம், ஸ்வாதி வீட்டிலிருந்து கிளம்பி எதிர்ப்பு அனைத்தையும் காவல் துறையிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஸ்வாதியின் அப்பா சீனிவாசனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதையும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார். நந்தீஷ், ஸ்வாதி ஒளிப்படங்களைப் பெற்றுக்கொண்டு இந்த இருவரையும் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து, தமிழ்நாடு, கர்நாடக காவல் நிலையங்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பி வைத்துள்ளது ஓசூர் காவல் துறை.
இது நடந்து மூன்று தினங்கள் கழித்து கர்நாடகாவிலிருந்து ஓசூர் காவல்துறைக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. சிவனசமுத்திர ஆற்றிலிருந்து ஓர் உடல் கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு நாள் கழித்து மீண்டும் அவர்களே அழைத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணின் உடலும் கிடைத்திருக்கிறது. ஓசூரில் கடத்தப்பட்டு மாண்டியாவில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடும். மற்றபடி, உடல்களை அடையாளம் காண எந்தத் தடயமும் இல்லை. உங்களால் சரி பார்க்கமுடியுமா?
காணாமல் போனவர்களின் உடல்கள்தாம் அவை என்பது உறுதியானதும் ஓசூர் காவல் துறை இந்தியக் குற்றவியல் சட்டம், பிரிவு 329 மற்றும் 201 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. ஸ்வாதியின் தந்தை சீனிவாசன், உள்பட மூன்று பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். முழு விவரங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன.
கமலஹாசனைப் பார்ப்பதற்காகத் திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் நந்தீஷ், ஸ்வாதி இருவரையும் பெண் வீட்டார் கண்டுபிடித்துவிட்டார்கள். நெருங்கிச் சென்று நட்போடு பேசவும் செய்திருக்கிறார்கள். பயப்படவேண்டாம், எங்கள் கோபம் தணிந்துவிட்டது. உடனடியாக இருவரும் கிளம்பி வாருங்கள். முறைப்படி வீட்டில் திருமணச் சடங்குகள் செய்துவிடலாம். இருவரும் நம்பி கிளம்பியிருக்கிறார்கள். ஆனால், கிராமத்துக்குச் செல்வதற்குப் பதில் வண்டி மாண்டியா மாவட்டத்திலுள்ள சிம்ஷா எனும் இடத்துக்குத் திரும்பியிருக்கிறது.
அங்கே இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஸ்வாதியின் உடலில் பரவலாகக் காணப்பட்ட காயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. அவசர, அவசரமாக மொட்டையடிக்க முயற்சி செய்து முடியாமல் போனதன் அடையாளம் ஸ்வாதியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. அவர் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறது. உயிரோடு இருக்கும்போது இழிவு செய்யமுடியாததால், இறந்த உடலையேனும் இழிவு செய்யலாம் என்று கருதியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஸ்வாதி மூன்று மாதங்களாகக் கருத்தரித்திருக்கும் விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தை பிறந்து வருவது மேலதிக அவமானத்தையே அளிக்கும் என்னும் அச்சமும் இருந்திருக்கிறது. ஆனால் ஸ்வாதியைக் கொல்வது மட்டும் போதுமானதாக இல்லை. அவர் வயிற்றைக் குத்திக் கிழித்திருக்கிறார்கள். வெறுப்பும் வன்மமும் குரூரமும் எந்த அளவு ஆக்கிரமித்திருந்தால் தன் மகளை மற்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஒரு தந்தை இப்படிச் செய்திருப்பார்! எல்லாம் முடிந்த பிறகு இறுதியில் கையையும் காலையும் கட்டி இரு உடல்களையும் ஆற்றில் வீசிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். எதுவுமே நடக்காததுபோல் இயல்பு வாழ்வையும் அதன்பின் அவர்களால் தொடர முடிந்திருக்கிறது.
கொன்றவர்களையும் கொலையுண்டவர்களையும் அடையாளம் காண்பதற்கு கர்நாடகக் காவல்துறை அளித்த காணொளிக் காட்சிகள் பெரிதும் உதவிக்கு வந்தன. அம்பேத்கர் படமும் கீழே கிராமத்தின் பெயரும் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்த இளைஞன் நந்தீஷ்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது. உடனிருந்த ஸ்வாதியைக் கண்டறிவதும் எளிதாகவே இருந்தது. இருவரும் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட காட்சியும்கூடப் பதிவாகியிருந்ததால் கொலையாளிகளால் தப்பமுடியவில்லை. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் போக, ஸ்வாதியின் சித்தப்பா வெங்கட்ராஜ், உறவினர்களான அஷ்வத்தப்பா, லஷ்மண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வாடகை வண்டியை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் சாமிநாதன் தலைமறைவாக முயன்றபோது பிடிபட்டார்.
தந்தை தொடங்கி அனைத்து உறவினர்களும் மொத்தமாகப் பிடிபட்டதற்கு ஸ்வாதியும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளார். தனக்கும் தன் கணவருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதை எப்படியோ முன்கூட்டியே கணித்து, காவல் துறையை அணுகி, எங்கள் இருவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் இன்னின்ன உறவினர்கள்தாம் காரணம் என்று கொல்லப்படுவதற்கு முன்னதாகப் புகார் அளித்திருந்தார்.
மறுக்கமுடியாத சான்றுகள் இருந்ததால் தந்தை சீனிவாசன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது. இரட்டைக் கொலைகளை ஏன் செய்தோம் என்பதற்கான காரணத்தையும் சீனிவாசன் விசாரணையின்போது சொல்லியிருக்கிறார். உன் மகள் ஒரு தலித்தைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாளே என்று என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னைக் கேலி செய்துகொண்டே இருந்தனர். என் மகளின் செய்கையால் என் மதிப்பும் குடும்ப கௌரவமும் பறிபோய்விட்டதை உணர்ந்தேன். அதனால்தான் கொல்லத் துணிந்தோம்.
நந்தீஷின் தம்பி சங்கர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இவை. உண்மையில் நந்தீஷைக் காட்டிலும் இந்தத் திருமணத்தில் உறுதியாக நின்றது ஸ்வாதிதான். என்ன நடந்தாலும் நந்தீஷைத்தான் மணந்துகொள்வேன் என்று நான்காண்டுகளாக ஸ்வாதி தன் குடும்பத்திடம் திரும்பத் திரும்ப மன்றாடியிருக்கிறார். வந்து என் வீட்டில் பேசுங்கள் என்று நந்தீஷின் அப்பா நாராயணப்பாவிடமும் ஸ்வாதி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரும் வீட்டுக்கு வந்து சீனிவாசனிடமும் மற்றவர்களிடம் பேசியிருக்கிறார். திருமணத்துக்கு ஒப்புதலும் பெற முயன்றிருக்கிறார். இயலவில்லை. ஏமாற்றத்தோடு வீடு திரும்பியிருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஸ்வாதி தன் வீட்டைவிட்டு வெளியேறி நந்தீஷின் வீட்டுக்கு வந்திருக்கிறார். திருமணமும் செய்துகொண்டிருக்கிறார்.
மதிப்பு, மரியாதை, குடும்ப மானம் ஆகியவற்றின் பெயரால் இந்த இரட்டைக் கொலைகளைத் தன் உறவினர்களோடு இணைந்து கொடூரமாக நடத்தி முடித்திருக்கிறார் சீனிவாசன். இந்தப் பளபளப்பான பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் உண்மையான காரணம், சாதிப் பெருமிதம். அதுதான் இந்த இரட்டை ஆணவக்கொலைகளை அரங்கேற்றியிருக்கிறது.
இந்த வழக்கு இன்னமும் கர்நாடக நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உதவியோடு வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார் சங்கர். பல தலித் அமைப்புகள் நந்தீஷின் குடும்பத்தை நேரில் கண்டு ஆறுதல் தெரிவித்திருக்கின்றன. மற்றொரு பக்கம், சிலர் பெயிலில் ஏற்கெனவே வெளியில் வந்துவிட்டனர். வழக்கைத் திரும்பப்பெற்றுக்கொண்டுவிடு என்று சங்கருக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு நபர்களால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நந்தீஷின் குடும்பம் அடிபணிவதாக இல்லை. நீதிக்கான பயணம் நீண்டது, நெடியது, கடினமானது என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படியொரு பயணத்தை மேற்கொள்வதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்பதிலும் அவர்கள் உறுதியோடு இருக்கிறார்கள்.
(தொடரும்)