Skip to content
Home » சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

சாதியின் பெயரால்

நாம் இதுவரை பார்த்த ஆணவக்கொலைகளில் சில பொதுவான அம்சங்களைக் கண்டிருப்போம். எல்லாமே கலப்பு மணங்கள். கொன்றவர் பிற்படுத்தப்பட்ட, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் கொலையுண்டவர் தலித்துகளாகவும் இருப்பார்கள். ஒபிசி பிரிவுகளுக்கு இடையிலும் பிரிவுகளுக்குள்ளும் நடைபெறும் திருமணங்களிலும் எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன, கொலைகள் நடைபெற்றிருக்கின்றன.

தலித் சாதிகளுக்கு இடையிலும் பகைமை தோன்றும், ஆணவக்கொலை நடக்கும் என்பதை தூத்துக்குடி சம்பவம் நிரூபித்திருக்கிறது. தலித்துகள் பாதிக்கப்பட்டவர்கள் என்னும் பொது பிம்பத்தை அசைத்துப் பார்ப்பதாக இச்சம்பவம் அமைந்துவிட்டதால் முற்போக்குச் சிந்தனையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. ஆணாதிக்கம், சாதித் தூய்மை, சாதிக் கலப்பு, அசுத்தம் ஆகிய கருத்தாக்கங்கள் தலித்துகளுக்கு மத்தியிலும் பரவியிருப்பதையும் அவர்கள் ஆழ்மனதிலும் இடம் பிடித்துவிட்டதையும் இந்நிகழ்வு புலப்படுத்துகிறது. குறிப்பாக, 2014 அரசியல், சமூக மாற்றங்களுக்குப் பிறகே இரு முக்கிய சாதிப் பிரிவினரான பள்ளர்களும் பறையர்களும் இந்தத் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த அடிப்படைப் புரிதலின் அடிப்படையில்தான் தூத்துக்குடி கொலைகளை அணுகவேண்டும்.

தூத்துக்குடியிலுள்ள குளத்தூர் பகுதியிலுள்ள தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் டி. சோலைராஜ். அதே குளத்தூரிலுள்ள பல்லாகுளத்தில் வசித்து வந்தவர் பேச்சியம்மாள் (இன்னொரு பெயர், ஜோதி). சோலைராஜுக்கு 24 வயது, ஜோதிக்கு 21. இருவருமே உப்பளத்தில் வேலை செய்து தினக்கூலி பெற்று வந்தனர். இருவருமே தலித்துகள். சோலைராஜ் பறையர் சாதியைச் சேர்ந்தவர் என்றால் ஜோதி பள்ளர் பிரிவில் வருபவர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இருவருமே தலித்துகள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்திருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் அவர்களுக்கு இடையிலும் ஒரு தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டுதான் இருந்தது. மேல், கீழ் எனும் பாகுபாடு அவர்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது. இந்து சாதியமைப்புக்கு வெளியில்தான் இருவருமே தள்ளப்பட்டிருந்தனர் என்றாலும் பறையர்களைக் காட்டிலும் பள்ளர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். எனவே சோலைராஜை மணந்துகொள்ளக்கூடாது என்று ஜோதி அறிவுறுத்தப்பட்டார். அதை மீறி 15 ஏப்ரல் 2019 அன்று ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சோலைராஜின் பெற்றோர் வசிக்கும் இடத்துக்கு அருகில் ஓர் அறை கொண்ட வீட்டில் தங்கள் புதுமண வாழ்வைத் தொடங்கினார்கள்.

3 ஜூலை 2019 அன்று மின்வெட்டு இருந்ததால் சோலைராஜும் ஜோதியும் வீட்டுக்கு வெளியில் வந்து படுத்து உறங்கினார்கள். மறுநாள் காலை அவர்கள் இருந்த இடத்தில் ரத்த வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. நினைக்கும்போதே உறைய வைக்கும் வகையில் கொடூரமாக இருவரும் கொல்லப்பட்டிருந்தனர். இருவருடைய தலைகளும் வெட்டப்பட்டு கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. ஜோதியின் மணிக்கட்டு அறுக்கப்பட்டிருந்தது.

காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபால் நேரில் வந்து பார்த்ததைத் தொடர்ந்து இரு உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குற்றவாளிகள் யார் என்பதை யூகிக்க அதிக காலம் பிடிக்கவில்லை. திருமணம் முடிந்த கையோடு இருவரையும் பெண் வீட்டார் மிரட்டத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிய வந்தது. ஜோதியின் அப்பா தன் உறவினர்களோடு கூடி வந்து சோலைராஜையும் அவர் பெற்றோரையும் தொடர்ச்சியாக மிரட்டி வந்திருக்கிறார். மிரட்டுவதோடு விட்டால் பரவாயில்லை, நம்மைத் தாக்கினால் என்ன செய்வது என்னும் அச்சம் இருவருக்கும் எழுந்திருக்கிறது. கொளத்தூர் காவல் நிலையம் சென்று, எங்கள் இருவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இன்னார்தான் பொறுப்பு என்று ஒரு புகார் எழுதிக்கொடுத்திருக்கின்றனர். இருவருமே தலித் பிரிவினர் என்பதால் அப்படி ஏதும் நடக்காது என்றே காவல் துறை நம்பியிருக்கிறது. பெண் வீட்டாரை வரவழைத்து எச்சரித்துவிட்டு, உங்களுக்குள் பேசி சுமுகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஆனால் ஜோதியின் வீட்டாருக்குப் பேசித் தீர்ப்பதில் விருப்பம் இல்லை. பிரச்சினை தீர்வதற்கு அவர்களுக்குத் தெரிந்த வழி ஒன்றுதான்.

ஜோதியின் அப்பா சிறிதும் தயங்காமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஒரு துளி குற்ற உணர்வும் இல்லை அவரிடம். என் மகள் பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்ததையும் திருமணம் செய்துகொள்வதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு ஒரு குழந்தையை வேறு அவள் சுமந்துகொண்டிருந்ததை அறிந்தோம். என் மகளின் குற்றம் மன்னிக்கமுடியாதது. எங்கள் குடும்பத்துக்குத் தீரா அவப்பெயரை ஏற்படுத்திவிட்டாள். எனவே இருவரையும் கொன்றோம். அவ்வளவுதான்.

மிக எளிதாக அவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் இச்சொற்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. சாதித் தூய்மை, ஆணாதிக்க உணர்வு, பொருளாதார நிலை என்று பல அம்சங்கள் இக்கொலைகளை இயக்கியிருக்கின்றன. தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் உளவியலை ஆராயும்போது தூத்துக்குடி கொலைகளுக்குத் தனிக்கவனம் செலுத்தவேண்டியது முக்கியம்.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *