Skip to content
Home » சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

சாதியின் பெயரால்

இதயம் நிறைந்த கனவுகளோடு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது அந்தக் கனவுகளோடு சேர்த்துக் கொல்லப்படுவதென்பது சொற்களில் விவரிக்கமுடியாத பெருந்துயர். சாதியின் எல்லைக்கோட்டை, மதத்தின் எல்லைக்கோட்டைக் கடந்து ஒரு காதல் மலருமென்றால் அந்தக் காதல் கருகித்தான் தீரவேண்டியிருக்கும். ஒவ்வோர் ஆணவக்கொலையின் அடிநாதமும் இதுதான்.

கொலையுண்ட பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் பெண்களே அதிகம் மாண்டுபோயிருக்கின்றனர். பெற்றோரின் எல்லைமீறிக் கலப்பு சாதி மணம் செய்துகொள்ளும் ஆணைக் காட்டிலும் பெண் அதிக சீற்றத்தையும் அவமானத்தையும் குடும்பத்துக்குள் ஏற்படுத்துகிறார். சாதியின் புனிதத்தைப் பாதுகாக்கவேண்டியது பெண் எனும் கருத்து நம் சமூகத்தில் அழுத்தமாக நிலைகொண்டுவிட்டதால் ஒரு பெண்ணின் நடத்தையைக் கண்காணிக்கவேண்டியது நம் பொறுப்பு என்று பெற்றோர் நம்புகின்றனர். கலப்பு மணம் என்பது நடத்தை விதிகள் யாவற்றையும் நொறுக்குவதாலும் குடும்பத்தின் மாண்பைக் குலைப்பதாலும் கோபம் கொண்டு கொல்லும் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதுவும் ஒரு வகையான மூடநம்பிக்கைதான். மத்தியகால, நிலப்பிரபுத்துவக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் மூடநம்பிக்கை.

ஓர் ஆணோ பெண்ணோ தக்க வயதில் தனக்கான துணையைத் தேடிக்கொள்வதென்பது எந்தவொரு நாகரிகச் சமூகத்திலும் இயல்பானதொரு நிகழ்வாகவே பார்க்கப்படும். இங்கு மட்டும் அது இயல்பு மீறலாகப் பார்க்கப்படுவதற்குச் சாதியமைப்பு ஒரு முக்கியக் காரணம். காதல் சாதி பார்த்து தோன்றுவதில்லை என்பதோடு சாதியின் இருப்பையே தகர்க்கும் வலிமை கொண்டதாக இருக்கிறது. அதனால்தான் அது ஓர் அரக்கனைப் போல் காதலர்களைக் கண்காணிக்கிறது. சாதி எல்லைகளை மீறுவோரை அடித்துக்கொன்றுப் புசிக்கிறது. அந்த அரக்கரிடமிருந்து மீண்டெழுந்து வந்தவர்கள் வெகு சிலர்தான்.

ஆணாதிக்கம் புரையோடியுள்ள சமூகத்தில் சாதிகளுக்குள்ளும் சாதிகளுக்கு இடையிலும் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். வலிமைமிக்க சாதியமைப்பை எதிர்க்க இயலாமல் மடிகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை சாதி என்பது மறுக்கமுடியாத, கடக்கமுடியாத யதார்த்தம். பெருமிதத்தோடு, நெஞ்சை உயர்த்தி பெரியார் மண் என்று அவ்வப்போது பலரும் இங்கே சொல்லிக்கொள்வதுண்டு என்றாலும் சாதி ஒழிந்துவிடவில்லை என்பதோடு மேலும் பலம் பெற்றிருக்கிறது. சாதிகளுக்கு இடையிலான வெறுப்பு வளர்ந்து நிற்கும் நிலையில் சமூகநீதி ஒரு வெற்று முழக்கமாக மட்டும் சுருங்கி நிற்பதைக் காண்கிறோம். ஆணவக்கொலை நம் புனிதக் கற்பிதங்களையெல்லாம் உடைத்து நொறுக்குகிறது. நம்மைக் காட்டுமிராண்டிச் சமூகத்துக்கே மீண்டும் இழுத்துச் செல்கிறது.

ஆணவக்கொலை குறிப்பாக அதிக அதிர்ச்சியூட்டுவதற்குக் காரணம் பெற்றவர்களும் உறவினர்களுமே நேரடியாகத் தங்கள் குழந்தைகளைக் கொல்வதுதான். ‘தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி நிலையைக் காணும்போது விசித்திரமாக இருக்கிறது. நம் நிலத்தில் காதல் இயல்பானதொன்றாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்று காதல் பற்றிய நம் பார்வை சுருங்கிவிட்டது. சாதி நம்மை மாற்றிவிட்டது’ என்கிறார் வீ. அரசு. ‘நியோ லிபலிரசம் நம் வாழ்வை முற்றிலுமாக மாற்றிவிடும் என்னும் கணிப்பு முழுக்கப் பலிக்கவில்லை. சாதிப் பெருமிதத்தை எதுவும் அசைக்கவில்லை.’

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 900 ஆணவக்கொலைகள் நிகழ்கின்றன. நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஆணவக்காலைகள் நடைபெறுவது உத்தரப் பிரதேசத்தில். 2015ஆம் ஆண்டு 131 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2015 தொடங்கி கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை 800 மடங்கு அதிகரித்திருப்பதாக 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

இத்தகைய கொலைகள் எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் இவை அதிகம் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லமுடியும். இருளில் கிடந்த பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து கல்வி, வேலைவாய்ப்பு என்று விரிந்து செல்லத் தொடங்கிவிட்டார்கள். இரண்டாவது, ஊடகத்தின் வளர்ச்சி. வெறுமனே கொலைகளாக இதுவரை நாம் கடந்து சென்றுகொண்டிருந்ததை ஆணவக்கொலைகள் என்று தனிக்கவனம் கொடுத்து நாம் ஆராய்வதற்குக் காரணம் ஊடகத்தின் வெளிச்சம்.

இந்தியா இன்னமும் முழுமையான நவீனத்தை எட்டிப்பிடிக்கவில்லை. நிலப்பிரபுத்துவம் பல இடங்களில் இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கப் பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் கிராமிய அமைப்புகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கின்றன. உள்ளூர் வழக்குகள் இவர்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஊர் பெரியவர்களான பஞ்சாயத்துத் தலைவர்கள் வழக்கை விசாரித்துத் தங்களுக்குத் தெரிந்த நீதி பரிபாலனத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள். சாதி, கோத்திரம், குலப்பெருமை, குடும்ப மானம் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாப்பும் பகுதிகளாக இவை இருப்பதால் அங்குள்ள பஞ்சாயத்துத் தலைவர்கள் அதே விழுமியங்களை ஏற்றவர்களாக இருக்கிறார்கள். காதல், கலப்புமணம் ஆகிய ‘குற்றங்களுக்கு’ இவர்கள் வழங்கும் நீதித்தீர்ப்புகள் அதிர்ச்சியூட்டுபவை.

பிற்போக்கான சமூகத்தில் ஆணாதிக்கம் செழித்து வளர்கிறது. அங்கே பெண்கள் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறார்கள். உடைமைபோல் பாவிக்கப்படுகிறார்கள். அவர்கள்மீது இழைக்கப்படும் வன்முறை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமூகம் ஒரு பெண்ணைக் கேள்வி கேட்கலாம், அவளுடைய தனிப்பட்ட வாழ்வில் தலையிடலாம் என்று அந்தப் பெண்ணின் பெற்றோரை நம்புகின்றனர். இந்நிலையில், என் வாழ்வை நானே தீர்மானித்துக்கொள்வேன், எனக்கான முடிவை நானே எடுப்பேன் என்று சொல்லும் பெண் ஒரு முரணாக மட்டுமே பார்க்கப்படுகிறார். அந்த முரண் முற்றும்போது தண்டனை அளிக்கப்படுகிறது.

0

ஆணவக்கொலை இந்தியாவுக்கு மட்டுமே உரிய சாபமல்ல. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 5000 ஆணவக்கொலைகள் நிகழ்கின்றன என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்று. பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் 1000 பேர் கொல்லப்படுவதாக மனித உரிமைக் குழுக்களின் அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. தென் கிழக்கு நாடுகளிலிருந்தும், மத்தியக் கிழக்கிலிருந்தும் குடிபெயர்ந்த பலர் இந்நாடுகளில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

2003இல் பிரிட்டனில் ஷஃபீலா அகமது தனது பெற்றோரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்தபோது, பிரிட்டனிலும் இப்படியெல்லாம் நடக்குமா என்று பலர் அதிர்ச்சியடைந்தனர். ஓர் அறிக்கையின்படி ஒவ்வோர் ஆண்டும் 12 பேர் பிரிட்டனில் மட்டும் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவில் 23 முதல் 27 பேர் ஆண்டுதோறும் கொல்லப்படுவதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நீதித்துறை அறிக்கை குறிப்பிடுகிறது. ஜெர்மனியிலும் ஆணவக்கொலைகள் நடைபெறுகின்றன. இந்நாடுகளிலெல்லாம் பிற கொலைகளிலிருந்து ஆணவக்கொலைகள் தனித்து அடையாளப்படுத்தப்படுவதைக் காணலாம்.

மக்கள் எங்கு குடிபெயர்ந்தாலும் சாதியையும் சுமந்தே செல்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. பிற பகுதிகளிலும் நடைபெறுகிறது என்றாலும் இந்திய ஆணவக்கொலைகள் அளவில் மட்டுமல்ல, நிகழ்த்தப்படும் முறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் ஆணவக்கொலைகள் அதிகரித்திருப்பது பெருகும் சகிப்பின்மைக்குச் சான்றாக இருக்கிறது. 2013 முதல் 2019 வரை 190 ஆணவக்கொலைகள் நடைபெற்றிருக்கின்றன என்கிறார் எவிடென்ஸ் கதிர். கொல்லப்பட்டவர்களில் 80% பேர் பெண்கள், பதின் பருவத்தினர்.

தமிழகத்தில் சாதியமைப்பு ஏன் சிக்கலானதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஓபிசி உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மனநிலையை நாம் உணரவேண்டும். மாற்றுச் சாதியினரிடையே மட்டுமல்ல, சொந்த சாதிக்குள் நடைபெறும் கலப்பு மணங்களும்கூட எதிர்க்கப்படுகின்றன; இங்கும் கொலைகள் நடைபெறுகின்றன. தலித்துகளை ஒடுக்கப்பட்டோராக மட்டும் சுருக்கிவிடமுடியவில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவர்களும் காதலை எதிர்க்கிறார்கள். கொடூரமான முறையில் கொல்லவும் துணிகிறார்கள். தலித்துகளைச் சமூகம் ஒதுக்கிவைக்கிறது என்றால் தலித்துகளும் தங்களுக்குள் சிலரை அதே போல் ஒதுக்குவதைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சாதியமைப்பின் பலத்தையும் மனித மனத்தின் பலவீனத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் நடைபெறும் அனைத்துவிதமான குற்றச்செயல்கள் குறித்தும் புள்ளிவிவரங்களைத் திரட்டி அறிக்கை வெளியிடும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், 2017ஆம் ஆண்டு தொடங்கி அமைதியாகிவிட்டது. ஆணவக்கொலை குறித்த எந்தத் தகவலும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் போன்ற அரசு சாரா அமைப்புகளின் தரவுகளே நமக்கு உதவுகின்றன. காவல் துறை ஆவணங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு பெறப்பட்ட தரவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இத்தகைய அமைப்புகள் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. நீதிமன்றங்களில் பல சமயம் அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்படும் புள்ளிவிவரங்களை எவிடென்ஸ் போன்ற அமைப்புகள் வெளியிடும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது பெரிய மாறுபாட்டைக் காணமுடியும். குற்றச்செயல்களை அரசு தரப்பு எப்போதும் குறைத்தே காட்டும். அரசு சாரா அமைப்புகள் அளிக்கும் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *