Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

‘குளோப்’ நாடக அரங்கம்

ஷேக்ஸ்பியரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது பெயரை நாம் வாழ்வில் ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் சிலவற்றைப் படித்திருப்போம் அல்லது பெயரை மட்டுமாவது கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய உரையாடலில் அவரது பெயரை நிச்சயம் உபயோகித்திருப்போம்.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் ஒரு சிறு நகரில் நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த ஷேக்ஸ்பியர் எப்படி இத்தகைய புகழை அடைந்தார்? அப்படி அவர் என்னதான் எழுதினார்? காலத்தைக் கடந்து நிற்கும் அளவிற்கு அவர் எழுதிய கதைகளில் என்னதான் இருக்கிறது? இக்கேள்விகள் உங்களைப் போலவே எனக்கும் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரைகள்.

யார் இந்த ஷேக்ஸ்பியர்? அவரது படைப்புகளை அணுகுவதற்குமுன், ஷேக்ஸ்பியரின் பின்புலத்தையும் அவர் வாழ்ந்த காலத்தையும் சிறிது தெரிந்து கொள்வது நல்லது. கூடவே அப்போதைய அரசியல் சூழலையும் தெரிந்து கொள்வது அவரது கதைகளைப் புரிந்துகொள்ள உதவும். எனவே முதலில் ஷேக்ஸ்பியரின் வாழ்விலிருந்து ஆரம்பிப்போம்.

ஷேக்ஸ்பியரின் வாழ்வைப் பற்றி நமக்குத் தெரிந்தவை மிகவும் குறைவே. காலத்தின் இடைவெளியில் அவரது வாழ்வில் நிகழ்ந்தவை எவை, பின்னாட்களில் சேர்க்கப்பட்ட கதைகள் எவை என்பதைப் பிரித்தறிவது ஆய்வாளர்களுக்குமேகூடச் சுலபமல்ல. நமக்கு உறுதியாகத் தெரிந்தவை இவைதான்.

ஷேக்ஸ்பியர் 1564ம் வருடம் இங்கிலாந்தில் இருக்கும் ஸ்ட்ராட்போர்ட் (Stratford-upon-Avon) என்ற சிறிய நகரில் பிறந்தார். அவரது தந்தை ஜான் ஷேக்ஸ்பியர் கையுறைகள் தயாரித்து விற்கும் சிறு வியாபாரி. தாய் மேரி சிறிது வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். ஷேக்ஸ்பியருடன் ஏழு குழந்தைகள் இருந்தாலும், அவர்களைப் பற்றி உறுதியான தகவல்கள் நம்மிடம் இல்லை. அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும், அப்போதைய அரசரால் புதிதாகத் திறக்கப்பட்ட இலவசப் பள்ளி ஒன்றில் அவர் படித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் அவர் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இவர்களது திருமணச் சான்றிதழ் இதை உறுதி செய்கிறது. அடுத்தடுத்து இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததை அங்கிருக்கும் தேவாலயப் பதிவேடு உறுதி செய்கிறது. ஆனால் இதற்குப் பின்னர் அவரது வாழ்வில் என்ன நடந்தது என்பதில் தெளிவில்லை. நமக்குக் கிடைக்கும் அடுத்த வரலாற்றுச் சான்று, ஷேக்ஸ்பியரை லண்டனின் ஓரளவிற்குப் புகழ்பெற்ற நாடகாசிரியராகக் காட்டுகிறது. தன்னுடைய தகுதிக்கு மேலான இடத்தை அவர் ஆசைப்படுவதாக, அவரைத் தாக்கி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை ஒன்று சொல்கிறது. 1592இல் (அவரது 28ஆம் வயதில்) லண்டனின் நாடகாசிரியர்களில் ஒருவராக ஷேக்ஸ்பியர் இடம்பெற்றுவிட்டதை இது காட்டுகிறது.

1594ஆம் வருடம் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அவரது குழுவால் மட்டுமே நடிக்கப்பட்டது. தனது நாடகங்களின்மூலம் ஷேக்ஸ்பியர் நல்ல வருமானத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்பது 1599ஆம் வருடம் அவர் தேம்ஸ் நதிக்கரையில் இடத்தை வாங்கி, தன்னுடைய நாடகங்களுக்கு என ‘குளோப்’ நாடக அரங்கைக் கட்டியதிலிருந்து தெரியவருகிறது. தனது குடும்பத்திற்கு எனப் பெரிதாக ஒரு வீட்டையும் வாங்கிக்கொண்டார். 1603ஆம் வருடம் முதலாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பின்னர், அவருக்குப் புதிய அரசர் முதலாம் ஜேம்சின் ஆதரவும் கிடைத்தது.

‘குளோப்’ நாடக அரங்கம்
‘குளோப்’ நாடக அரங்கம்

1609ஆம் ஆண்டு லண்டனில் பரவிய பிளேக் நோய் நாடக அரங்குகளை மூடச் செய்தது. இந்தக் காலத்தில் ஷேக்ஸ்பியர் லண்டனிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அவர் லண்டனுக்குத் திரும்பினாலும், புதிதாக நாடகம் எதுவும் எழுதவில்லை. தனது சொந்த வீட்டிலேயே 52வது வயதில் அவர் மறைந்தார்.

ஷேக்ஸ்பியரின் 25 வருட நாடக வாழ்வில் அவர் நடிகராக, ஆசிரியராக, கவிஞராகப் பலவிதங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அவர் வாழ்ந்த காலகட்டம் ஆங்கில மறுமலர்ச்சி காலம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு ஷேக்ஸ்பியர் மட்டுமே காரணகர்த்தா அல்ல. கிறிஸ்டோபர் மார்லோ, பிரான்சிஸ் பேகன், பென் ஜான்சன் எனப் பல புகழ்பெற்ற நாடக ஆசிரியர்கள் வாழ்ந்த காலம் அது. ஜான் டன், தாமஸ் மோர், தாமஸ் ஹோப்ஸ் போன்ற தத்துவவாதிகளும் பல ஓவியர்களும் இசைக் கலைஞர்களும் வாழ்ந்த பொன்னான காலமும்கூட.

எட்டாம் ஹென்றி அரசரும் முதலாம் எலிசபெத்தும் பெரும் புரவலர்களாக விளங்கியது கலைகளும் இலக்கியமும் விரைவாக வளர்வதற்குக் காரணமாக இருந்தது. அத்துடன், மத்திய காலத்தின் இருளிலிருந்து மெதுவாக வெளிவந்து கொண்டிருந்த இங்கிலாந்தின் செல்வம் மேலும் பெரிதாக அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நிலத்தின் வழியே தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த புதிய, பெரிய நடுத்தர வர்க்கம் ஒன்று இங்கிலாந்தின் புதிய பலமாக உருவாகிக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் ஷேக்ஸ்பியர் போன்ற நாடகாசிரியர்கள் வளர்வதற்கு உதவின. புதிதாக, மலிவாகத் தாள்களை உருவாக்கும் தொழில்நுட்பமும் அப்போது உருவாகியிருந்தது. இதைக் கொண்டு படைப்பாளர்கள் தங்களது நாடகங்களையும் கவிதைகளையும் பதிப்பித்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முடிந்தது.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பலவும் அவரது காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டன. ஆனால் அவரது மரணத்திற்குப் பின்னரே அவரது படைப்புகள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியாயின. ‘First Folio’ என்று அழைக்கப்பட்ட இந்தத் தொகுப்பு அவரது 36 படைப்புக்களைக் கொண்டிருக்கிறது. இதுவே இன்றுவரை அதிகாரப்பூர்வமான ஷேக்ஸ்பியரின் நாடகத் தொகுப்பாக பார்க்கப்படுகிறது. வரும் பக்கங்களில் நாம் காணப் போகும் கதைகள் இந்தத் தொகுப்பையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஷேக்ஸ்பியர் தன்னுடைய வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட Sonnet என்ற வகையிலான கவிதைகளை எழுதி இருக்கிறார். 14 வரிகளைக் கொண்ட இந்தக் கவிதைகள், ஷேக்ஸ்பியரை இன்றளவும் ஆங்கிலக் கவிஞர்களில் முக்கியமானவராக வைத்திருக்கிறது.

Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate…

போன்ற வரிகள் இன்றும் நம்மை வசீகரிக்கின்றன.

நமது கட்டுரைகள் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ‘First Folio’வை அடிப்படையாகக் கொண்ட 36 நாடகங்களை நாம் பார்க்கப் போகிறோம். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மூன்று வகைமையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் மற்றும் சோக நாடகங்கள். அவரது 36 படைப்புகளில் 14 நகைச்சுவை நாடகங்கள், 10 வரலாற்று நாடகங்கள், 12 சோக நாடகங்கள்.

இந்தக் கட்டுரைகளை எழுதுவது பற்றிய யோசனையைக் கிழக்கு பதிப்பக ஆசிரியர் மருதன் தெரிவித்தபோது, இந்த நாடகங்களைச் சுருக்கமாக அப்படியே மொழிபெயர்க்கவே திட்டமிட்டேன். ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் கூடுதல் விவரங்களுடன் ஷேக்ஸ்பியரை முழுமையாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினால் என்னவென்று என் யோசனையை விரிவாக்கிக்கொண்டேன்.

ஒவ்வொரு கட்டுரையும் குறிப்பிட்ட நாடகத்தின் பின்னணியைத் தெரிவித்துவிட்டு, நாடகத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும். அதைத் தொடர்ந்து, நாடகம் குறித்த சிறிய அலசலும் இருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் தமிழாக்கமாக இதைக் கருதவேண்டாம். மூல வடிவத்தை வாசிக்கத் தூண்டும் ஒரு முயற்சியாகவே இதனை அனைவரும் எடுத்துக்கொள்ளவேண்டும். நாடகச் சுருக்கத்தைக் கதையாகக் கொடுக்காமல், நாடக வடிவிலேயே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் நாடகங்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய வீட்டுக்கு அருகிலிருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் கடனாக வாங்கிய முழுமையான ஷேக்ஸ்பியர் நாடகங்களை நான் வாசித்தபோது எனக்கு வயது பதினாறு. ஆங்கில வழியில் படித்திருந்தாலும், சிறிய நகரவாசியான எனக்கு அந்தப் புத்தகம் பெரும் சவால்களைக் கொடுத்தது. ஆனாலும் ஷேக்ஸ்பியரின் கதை சொல்லும் உத்தி, புரியாதவற்றைத் தாண்டி தொடர்ச்சியாக வாசிக்க வைத்தது. அதன் பின்னர், அந்த நாடகங்களைப் பலமுறை, பல விதங்களில் வாசித்திருக்கிறேன். ஆர்சன் வெல்லஸ், கென்னத் பிரனாக் ஆகியோரின் திரைமொழியில் அவற்றைப் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக, சில முறை நியூயார்க் நகரின் பிராட்வே நாடகங்களாகவும் பார்த்திருக்கிறேன். இன்னமும் இந்த நாடகங்களின் மீதான பிரேமை குறையவில்லை. நமது நவீனத் திரை மொழியிலும் மாறிய கலாசாரச் சூழலிலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் கொண்டுவரும் சாத்தியங்கள் மிகவும் அதிகம். நமது கட்டுரைகளின் உள்ளே ஷேக்ஸ்பியரின் சில உத்திகளைப் பற்றியும் பார்க்கப் போகிறோம். இன்னமும் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்படுவதன் காரணம் அதற்குள்ளும் இருக்கலாம்.

ஷேக்ஸ்பியரின் உலகம் மந்திரம், தந்திரம், நகைச்சுவை, சோகம், வேடிக்கை, குழப்பம் எனப் பலவும் நிறைந்த ஒரு மாய உலகம். ஒருமுறை அதற்குள் நுழைந்துவிட்டால், வெளியில்வர இயலாது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

1 thought on “ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?”

  1. Waiting to read. செம சார். அவருடைய பிரபலமான வரிகள் குறித்தும் விளக்கவும்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *