Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

சூறாவளி

அங்கம் 2 – காட்சி 1

தீவின் மற்றொரு பக்கம், கப்பலில் இருந்து கரை சேர்ந்த நேபிள்ஸ் அரசர் அலான்சோ, அவரது சகோதரர் செபாஸ்டியன், பிராஸ்பரோவின் சகோதரன் ஆண்டனியோ முதலியோர் தங்களது நிலை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அரசரின் மகளான கிளாரிபெல்லின் திருமணத்தை அல்ஜீரியாவில் முடித்துவிட்டு தங்களது தாய் நாடான இத்தாலிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்கிறோம்.

தன்னுடைய மகளை ஆப்பிரிக்காவில் திருமணம் செய்து கொடுத்ததை அலான்சோ தவறான முடிவு என்றும், அதனாலேயே தாங்கள் சூறாவளியில் சிக்க நேர்ந்தது என்றும் சொல்கிறார். அதைவிட, அனைவரது கவலையும் இளவரசர் பெர்டினாண்ட் என்னவானார் என்பதிலேயே இருக்கிறது. அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற பயம் அனைவருக்கும் இருந்தாலும், தங்களைப் போல அவரும் தப்பித்திருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நேரத்தில், ஏரியல் தன்னுடைய மந்திர வாத்தியத்தை வாசிக்க, செபாஸ்டியன் மற்றும் ஆண்டனியோவைத் தவிர மற்றவர்கள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். ஆண்டனியோ, தன்னுடைய சகோதரன் பிராஸ்பரோவை வஞ்சித்து தான் நாட்டை கவர்ந்ததைத் தெரிவித்து, பெர்டினாண்ட் சூறாவளியில் இறந்திருக்கலாம் என்ற நிலையில், ஆண்டனியோவும் அவனுடைய சகோதரனான அரசர் அலான்சோவைக் கொன்றுவிட்டு, நேபிள்சிற்கு அரசராகலாம் என்று வஞ்சகமாக யோசனை கூறுகிறான்.

அதனை ஏற்றுக்கொள்ளும் செபாஸ்டியனும் தன்னுடைய வாளை உருவிக்கொண்டு, உறங்கி கொண்டிருக்கும் அலான்சோவைக் கொல்ல முன்வருகிறான். அதற்குள், ஏரியல் தன்னுடைய இசையை நிறுத்தவே, அலான்சோவின் தூக்கம் கலைகிறது. பெரிய சத்தம் ஒன்று கேட்டதாலேயே தாங்கள் வாளை உருவியதாக செபாஸ்டியன் சமாளித்துவிடுகிறான். அலான்சோவின் வேலையாள் கோன்சாலோ மட்டும் அவர்கள் சொல்வதை நம்பவில்லை.

அங்கம் 2 – காட்சி 2

இந்தக் காட்சியில் நாம் அரசவைக் கோமாளி திரின்கலோ மற்றும் அரசரின் தனி உதவியாளன் ஸ்டெபனோவைச் சந்திக்கிறோம். அவர்கள் தீவின் மற்றொரு பகுதியில், விறகு பொறுக்கிக் கொண்டிருக்கும் காலிபனைச் சந்திக்கிறார்கள். காலிபன், மனிதனா, வேறு மிருகமா என்று விவாதிக்கிறார்கள். அவர்களுடன் காலிபனும் சேர்ந்துகொள்கிறான். தன்னை பிராஸ்பரோவின் மந்திரங்கள் எத்தகைய சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றன என்று யோசிக்கிறான்.

அங்கம் 3 – காட்சி 1

காட்சி இப்போது பிராஸ்பரோவின் சிறைக்கு மாறுகிறது. பெர்டினாண்ட் விறகுகளை பொறுக்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் தன்னுடைய காதலுக்காக தான் வேலை செய்வதாக எண்ணி மகிழ்ச்சியுடன் இருக்கிறான். அப்போது அங்கே மிராண்டா வருகிறாள். அவர்கள் இருவருக்கும் தெரியாமல், மறைவாக பிராஸ்பரோவும் இருக்கிறார்.

பெர்டினாண்ட்டிற்கு கொடுக்கப்பட்ட தண்டனையில் பங்கெடுக்கவே தான் வந்திருப்பதாக மிராண்டா தெரிவிக்கிறாள். அவனை ஓய்வெடுக்கச் சொன்னதை மறுத்துவிட்டு, பெர்டினாண்ட் அவளது பெயரைக் கேட்டு தெரிந்து கொள்கிறான். தொடர்ந்து, பெர்டினாண்ட் அவளை வர்ணித்து, புகழ்ந்து பேச ஆரம்பிக்கிறான். ஆனால் மிராண்டா, தான் வேறு பெண்களைப் பார்த்ததில்லை என்று கூறி அவனைத் தடுத்து விடுகிறாள். அவனிடம் அன்பாகப் பேச ஆரம்பித்தவள், தன்னுடைய தந்தையின் உத்தரவை எண்ணி பாதியில் நிறுத்திவிடுகிறாள்.

தன்னுடைய தந்தையும் சூறாவளியில் தப்பித்திருக்க வேண்டும் என்று நம்பினாலும், அவர் மரணமடைந்திருந்தால் தான் அரசன் என்று பெர்டினாண்ட் கூறுகிறான். மிராண்டா அதைப் பற்றி பேசாமல், அவன் தன்னைக் காதலிக்கிறானா என்று நேராகக் கேட்கிறாள். அவனும் உற்சாகமாக ஆம் என்று சொல்ல, அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டுகிறாள். அவனும் ஒப்புக்கொள்ளவே இருவரும் அங்கிருந்து செல்கிறார்கள். தான் நினைத்தது போலவே எல்லாம் நடக்கவே, பிராஸ்பரோவும் மகிழ்ச்சியுடன் அடுத்த நடவடிக்கைக்குச் செல்கிறார்.

அங்கம் 3 – காட்சி 2

இப்போது நாம் மீண்டும் அரசவைக் கோமாளி திரின்கலோவைச் சந்திக்கிறோம். ஸ்டெபனோ மற்றும் காலிபனும் அவனுடன் இருக்கிறார்கள். காலிபன் தன்னை பிராஸ்பரோ அடிமையாக வைத்திருப்பது பற்றியும், பிராஸ்பரோவின் மந்திர சக்திகள் பற்றியும் சொல்கிறான். தன்னுடன் இணைந்து பிராஸ்பரோவைக் கொல்ல அவர்கள் உதவ வேண்டும் என்று கேட்கிறான்.

அதே இடத்தில் ஏரியல், மந்திரத்தால் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களிடையே அவ்வப்போது மாறும் குரலில் பேசி சண்டை மூட்டி விடுகிறான்.

பிராஸ்பரோவைக் கொன்றுவிட்டால், ஸ்டெபனோ தீவின் அரசனாகலாம் என்றும், பிராஸ்பரோவின் மகள் மிராண்டாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறான். ஸ்டெபனோவிற்கு இந்தத் திட்டம் பிடிக்கிறது. பிராஸ்பரோவின் மந்திரப் புத்தகங்களை முதலில் திருடிவிட்டால் மட்டுமே அவர்களது திட்டம் வெற்றி பெறும் என்று காலிபன் தெரிவிக்கிறான். பிராஸ்பரோ இன்னமும் அரைமணி நேரத்தில் தூங்கிவிடுவார் என்றும் தெரிவிக்கிறான்.

அப்போது ஏரியல் வாசிக்கும் இசையின் ஒலி கேட்கிறது. முதலில் பயந்தாலும், அவர்கள் அந்த இசையை முதலில் தொடர்ந்து செல்வது என்றும், பின்னர் பிராஸ்பரோவைக் கொல்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

அங்கம் 3 – காட்சி 3

நேபிள்ஸ் அரசன் அலான்சோ தன்னுடைய மகனைக் காணும் நம்பிக்கையை இழந்துவிடுகிறான். அலான்சோவின் களைத்த நிலையில், அவனது துயரமும் சேர்ந்திருப்பதால், அவனை அன்று மாலைக்குள் கொன்றுவிடலாம் என்று ஆண்டனியோ, செபாஸ்டியனிடம் தெரிவிக்கிறான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அருமையான இசை கேட்கிறது. அந்த இசைக்கு ஏற்றவாறு பல்வேறு வினோதமான வடிவங்களில் ஏரியலைப் போலவே பல தேவதைகளும் ஆவிகளும் வரிசையாக வருகின்றன. அவை பலவிதமான உணவுகளைக் கொண்டுவந்து மேசையில் பரப்பி, அவர்களை அதை உண்டுக் களிக்குமாறு கேட்டுக் கொண்டு, அங்கிருந்து நடனமாடிக் கொண்டே செல்கின்றன. அதே நேரத்தில், பிராஸ்பரோ மந்திரத்தால் மறைந்துகொண்டு அங்கே நடப்பதை கவனிக்கிறார். அலான்சோவும் மற்றவர்களும் அந்த உணவை உண்பதா வேண்டாமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் அதை உண்பதாக முடிவெடுக்கிறார்கள்.

அதே நேரத்தில் இடியும் மின்னலும் அடிக்க, ஏரியல், பெண் முகம் கொண்ட கழுகு உருவத்தில் மேசையில் வந்து அமர்கிறது. தன்னுடைய சிறகை ஒரு முறை அடித்தவுடன், அங்கிருந்த உணவு எல்லாம் மறைந்துவிடுகிறது. தன்னை அவர்களது விதி என்று கூறிக்கொண்டு, பயங்கரமான குரலில் அவர்கள் பிராஸ்பரோவிற்கும், அவரது சிறு குழந்தைக்கும் செய்த துரோகத்தைச் சொல்கிறது. அதற்கு பழிவாங்கவே விதி அவர்களின் கப்பலை மூழ்கச் செய்து, பெர்டினாண்டை எடுத்துக் கொண்டதாகக் கூறிவிட்டு, அங்கிருந்து மறைந்துவிடுகிறது. மற்ற ஆவிகள் மீண்டும் நடனமாடிக்கொண்டு வந்து மேசையை எடுத்துக் கொண்டு செல்கின்றன. பிராஸ்பரோ, அங்கிருந்து பெர்டினாண்ட் மற்றும் மிராண்டாவைப் பார்க்கச் செல்கிறார்.

அரசர் அலான்சோ தான் கேட்டதை எண்ணி வருந்துகிறார். மீண்டும் பிராஸ்பரோவின் பெயரைக் கேட்க நேர்ந்தது, தன்னுடைய மகனின் மரணத்தை முன்னறிப்பதாகத் தெரிகிறது என்று எண்ணுகிறார். கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு ஓடுகிறார். செபாஸ்டியனும் ஆண்டோனியோவும் ஆவிகளைத் தேடிப் போகிறார்கள். அவர்களது வேலையாள் கோன்சாலோ, அவர்கள் எதுவும் அவசரப்பட்டு செய்யவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு மற்ற பிரபுக்களை அவர்களின் பின்னே அனுப்புகிறான்.

அங்கம் 4 – காட்சி 1

பெர்டினாண்ட் மற்றும் மிராண்டாவின் காதலுக்கு பிராஸ்பரோ தன்னுடைய ஒப்புதலைத் தெரிவிக்கிறார். மிராண்டாவின் ‘கன்னித்தன்மைக்கு’ எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். அவர்களது நிச்சயத்தைக் கொண்டாட, விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஏரியலிடம் தெரிவிக்கிறார். சிறிது நேரத்தில் மூன்று கிரேக்கக் கடவுள்களின் உருவத்தில் ஆவிகள் தோன்றுகின்றன. முகமூடி அணிந்து நடத்தும் சிறிய நாடக வடிவத்தை நடத்திக் காட்டுகின்றன.

அவர்களின் காதலைக் கொண்டாட ஆரம்பிக்கும் ஆவிகள், அவர்களுக்கு செல்வமும், வளமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு விதங்களில் கொண்டாட்டத்தை நடத்துகின்றன. பெர்டினாண்ட் அந்தக் கொண்டாட்டத்தின் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து, தான் அந்த தீவிலேயே இருந்துவிடுவதாகத் தெரிவிக்கிறான். இப்போது இன்னமும் அழகான பெண் தேவதைகளின் நடனம் ஆரம்பிக்கிறது. அப்போது பிராஸ்பரோவிற்குத் தன்னைக் கொல்ல காலிபன் போட்டிருக்கும் திட்டம் நினைவிற்கு வரவே, கொண்டாட்டத்தை அப்படியே நிறுத்திவிடுகிறார்.

அவரது கோபம் பெர்டினாண்ட் மற்றும் மிராண்டாவிற்கு பயத்தைத் தருகிறது. தனக்கு அவசர வேலை என்று அங்கிருந்து கிளம்புகிறார். அதற்கு முன் ஒரு அருமையான உரையை நிகழ்த்துகிறார். மனிதர்கள் கனவுகளால் ஆனவர்கள் என்றும், அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த நாடகம் போலவே உலகமும் எந்த அர்த்தமுமற்றது என்றும் சொல்கிறார்.

ஏரியல் அவரிடம் காலிபன் மற்றும் மற்றவர்களின் திட்டத்தை கூறுகிறான். அவர்கள் பிராஸ்பரோவின் மந்திரப் புத்தகத்தைத் திருட முயற்சிப்பார்கள் என்று தெரிவிக்கிறான். அவர்களை முட்காடுகளின் வழியிலும், அழுக்கான குளத்தின் வழியாகவும் தவறாக அனுப்பிவிட்டதாகத் தெரிவிக்கிறான். பிராஸ்பரோவின் அறையில் அவர்கள் புதிய ஆடைகளைத் தொங்க விட்டிருக்கிறார்கள்.

காலிபன், அவனது கூட்டாளிகளுடன் அங்கே வருகிறான். குளத்தில் விழுந்ததாலும், முட்களால் கிழிக்கப்பட்டும் அவர்களது உடைகள் இருக்கின்றன. அங்கே தொங்கும் புதிய உடைகளை அவர்கள் தொட்டவுடன், வேட்டைநாய்களின் சத்தம் அவர்களை அங்கிருந்து துரத்திவிடுகிறது.

அங்கம் 5 – காட்சி 1

அன்று மாலை 6 மணியுடன் தன்னுடைய சிறைவாசம் முடிகிறது என்று ஏரியல், பிராஸ்பரோவிடம் தெரிவிக்கிறான். பிராஸ்பரோவும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அலான்சோ மற்றும் மற்றவர்களை ஒரு தோப்பில் சிறை வைத்திருப்பதாகவும், அவர்கள் பயத்தால் அலறிக் கொண்டிருப்பதாகவும் ஏரியல் தெரிவிக்கிறான். அவர்களை விடுவித்து அழைத்து வருமாறு பிராஸ்பரோ தெரிவிக்கிறார்.

ஏரியல் சென்றவுடன், பிராஸ்பரோ தன்னுடைய புகழ்பெற்ற தனிமொழிப் பேச்சை நிகழ்த்துகிறார். தன்னுடைய கடைசி கடமையைச் செய்தவுடன், தன்னுடைய மந்திரப் புத்தகங்களை நீரில் போட்டுவிட்டு, மந்திர சக்தியை விட்டுக்கொடுத்துவிடப் போவதாகத் தெரிவிக்கிறார்.

அரசர் அலான்சோவும் மற்றவர்களையும் ஏரியல் அழைத்து வருகிறான். அவர்கள் மந்திரத்தால் கட்டுப்பட்டு இருக்கும் நிலையில், பிராஸ்பரோ அவர்களிடம் பேசுகிறார். மிலன் நகர பிரபுவாக இருந்தபோது அணிந்திருந்த உடைகளை எடுத்து வரச்சொல்லி ஏரியலை அனுப்புகிறார். தன்னுடைய உடைகளை அணிந்துகொள்கிறார். தன்னுடைய விசுவாசமான ஏரியலிற்கு விடுதலை கொடுத்துவிட்டு, கப்பலின் மாலுமிகளை அழைத்துவர அனுப்புகிறார்.

இப்போது அலான்சோ மற்றும் பிறரை மந்திரத்தில் இருந்து விடுவித்து, அவர்களிடம் பேசுகிறார். தன்னுடைய சகோதரன் ஆண்டனியோவை மன்னித்துவிட்டதாகவும், தன்னுடைய நகரைத் தன்னிடம் திரும்ப கொடுக்கவேண்டும் என்றும் சொல்கிறார். அலான்சோ தன்னுடைய மகன் பெர்டினாண்ட் காணாமல் போனதைத் தெரிவிக்கிறார். தன்னுடைய மகள் மிராண்டாவும் காணாமல் போய்விட்டதாக பிராஸ்பரோ தெரிவிக்கிறார். அலான்சோ இன்னமும் துயரத்துடன் இருக்கவே, அங்கிருக்கும் திரையை விலக்குகிறார். அங்கே பெர்டினாண்டும் மிராண்டாவும் சதுரங்கம் விளையாடுவதைப் பார்க்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்கிறார்கள். அலான்சோ மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். பிராஸ்பரோ அவரைத் தடுத்துவிடுகிறார்.

அவர்கள் அனைவரும் அன்றிரவு தன்னுடன் விருந்து சாப்பிடவேண்டும் என்று பிராஸ்பரோ கேட்டுக்கொள்கிறார். மறுநாள் காலை அவர்கள் ஒன்றாக நேபிள்ஸ் சென்று, அங்கே பெர்டினாண்ட் மற்றும் மிராண்டாவின் திருமணத்தை நடத்தவேண்டும் என்றும், அதன் பின்னர் தான் மிலன் நகருக்கு சென்று தன்னுடைய இறுதிக்காலத்தை கழிக்கப்போவதாகவும் தெரிவிக்கிறார்.

மற்ற அனைவரும் மேடையில் இருந்து செல்கிறார்கள். பிராஸ்பரோ நேராக பார்வையாளர்களை நோக்கி இறுதி உரையை நிகழ்த்துகிறார். தான் மேடையில் சிறைப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், தங்களின் கைதட்டல் மூலமே பார்வையாளர்கள் தன்னை விடுவிக்க முடியும் என்றும் கேட்கிறார்.

0

சூறாவளி : ஓர் அலசல்

முதலில், நாம் நமக்கு நேரடியாகத் தெரிவதைப் பேசிவிடுவோம். ‘சூறாவளி’ நாடக மேடைக்கு என்றே எழுதப்பட்ட கதை. இழப்பும் பழிவாங்கலுமே கதை என்றாலும் மந்திரம், ஆவிகள் எல்லாம் சேர்த்து கட்டிப்போடும் வகையில் கதையை நகர்த்துகிறார் ஷேக்ஸ்பியர். கதை ஆரம்பமே சூறாவளியுடன் இருக்கிறது. அதைத் தொடர்ந்து நாம் விருந்துகள், மந்திர நிகழ்வுகள் என்று மேடையுடன் ஒன்றிவிடுகிறோம். பிரமாண்டமான ஷேக்ஸ்பியர் நாடகம் நிகழ்த்த விரும்பும் எவரும் சூறாவளியைத் தவிர்த்துவிட முடியாது.

மற்றொரு விதத்தில், நாடகத்தை பிராஸ்பரோவின் பரிசோதனைகளில் ஒன்றாகப் பார்க்கலாம். தன்னுடைய மந்திர உலகிற்கு பிராஸ்பரோ மனிதர்களை வரவழைத்துப் பார்க்கிறார். அது அவருக்கு நல்லதாகவே முடிகிறது. ஒருவிதத்தில் பிராஸ்பரோ நாடகத்திற்குள்ளேயே ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறார். கதையின் காரணகர்த்தாவாக அனைத்துக் கதாபாத்திரங்களையும் நகர்த்துகிறார். இந்த ‘இரட்டை நாடகத்தை’ பார்க்கும்/படிக்கும் உணர்வின்றியே நாமும் அந்தப் பரிசோதனையை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பரிசோதனை இன்னொரு விதத்திலும் வெற்றியடைகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், எதிரிகள் மனம் மாறுகிறார்கள். பிராஸ்பரோவின் பரிசோதனையில் இந்த மனமாற்றம் மந்திரங்கள், ஆவிகளின் உதவியுடன் நிகழ்த்தப்படுகிறது. அதே நேரத்தில் நாம் இன்னுமொரு பெரும் மாற்றத்தை பிராஸ்பரோவிடமும் காண்கிறோம். நாடகத்தின் ஆரம்பத்தில் மிகுந்த வெறுப்பும் காழ்ப்பும் கொண்டிருக்கும் அவரும், இறுதியில், எந்த மந்திரத்தின் உதவியும் இல்லாமல், மனம் மாறிவிடுகிறார். தன்னுடைய எதிரிகளை மன்னித்தும் விடுகிறார்.

ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பெரும்பாலும் ஆங்கில மற்றும் பிறமொழி எழுத்தாளர்களால் பல விதங்களில் எடுத்தாளப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சி கற்பனை செய்யப்படுகிறது. சிறிய கதாபாத்திரங்கள் குறித்துகூடத் தனியாக எழுதப்படுகிறது. பலவிதமான ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. நீண்ட கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ‘சூறாவளி’ அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால் இவை அனைத்தையும் இங்கே விவாதிக்கமுடியாது என்பதால், காலிபன் குறித்து ராபர்ட் பிரவுனிங் எழுதிய கவிதையைப் பற்றி மட்டும் பேசிவிடுவோம்.

நாடகத்தின் இறுதியில் அனைவரும் நேபிள்ஸ் செல்லும்போது, காலிபன் அவர்களுடன் செல்லவில்லை. அவன் தீவிலேயே தங்கிவிடுகிறான். அவனுக்கும் ‘விடுதலை’ கிடைத்துவிடுகிறது. ஐரோப்பியர்கள் பல்வேறு நாடுகளைக் கைப்பற்றி அவற்றின் பூர்வகுடிகளை அடிமைப்படுத்தியதன் அடையாளமாக இன்று காலிபன் பார்க்கப்படுகிறான். ஷேக்ஸ்பியரின் காலத்திலேயே அமெரிக்கக் கண்டத்தை நோக்கிய ஐரோப்பியர்களின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது என்பதையும், உலகின் மற்ற பகுதிகளை நோக்கிய அவர்களது பயணமும் துவங்கிவிட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாடகத்தில் ஐரோப்பியர்கள் தீவிற்கு வந்து அந்த தீவின் உரிமையாளனை அடிமைப்படுத்துகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள். பிரதியை இப்படியும் வாசிக்கலாம்.

பிரவுனிங் காலிபன் தனியாக சிந்திப்பதாக தன்னுடைய கவிதையை எழுதுகிறார். சிறிய கவிதையில் காலிபன் தன்னுடைய கடவுளை நோக்கி பேசுவதாக இருக்கிறது. காலிபன் காட்டுமிராண்டித்தனத்துடன் இருந்தாலும், அவனும் தனக்கு என்று ஒரு கடவுளைக் கண்டறிந்து, முறையிடுவதாக ஒரு வெள்ளை ஐரோப்பியரின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. இன்னமும் சிறிது காலம் கழித்து எழுதிய டி.எச். லாரன்ஸ், காலிபன், இயற்கையாகவே அடிமை என்று எழுதுகிறார். இது போன்ற எழுத்துகள் ‘சூறாவளி’ எப்படிப் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்களால் வாசிக்கப்பட்டது என்பது குறித்து நமக்குச் சிறிய சாளரத்தை காட்டுகிறது.

0

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *