Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

வெரோனாவின் இரண்டு கனவான்கள்

அறிமுகம்

ஷேக்ஸ்பியர் அன்று எழுதிய அதே வடிவில்தான் இன்று அவர் நாடகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவா? இந்த விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலும் அப்போதைய ஐரோப்பிய நாடோடிக் கதைகளையோ வரலாற்றுக் கதைகளையோ அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஷேக்ஸ்பியர் தன்னுடைய முதல் பிரதியை எழுதுவார்.

கதையின் வடிவமும் காட்சிகளின் வரிசையும் நடிகர்களின் வசனமும் விரிவாக இருக்கும். இந்தப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியரான ஷேக்ஸ்பியரோ அவரது எழுத்தரோ அல்லது இருவருமாகவோ இதை இன்னமும் விரிவான விளக்கங்களுடன் எழுதுவார்கள். இந்தப் பிரதி, நாடகம் பற்றிய முழுமையான விவரங்கள், நாடக மேடை விவரணைகள், நடிகர்களின் ஆடைகள் எனப் பல விவரங்களுடன் விரிந்திருக்கும். இதுவே நாடகத் தயாரிப்பின் ஆதாரமாக இருக்கும்.

இது போக, நாடகத்தின்போது, நடிகர்களுக்கு வசனங்களை நினைவுபடுத்த மேற்கண்ட பிரதிகளோ அல்லது வசனம் மட்டுமே உள்ள பிரதி ஒன்றோ ‘பிராம்ட் புக்’ ஆகப் பயன்படுத்தப்படும். பின்னாளில் நாடகம் பதிப்பிக்கப்படும்போது, இவற்றில் எந்தப் பிரதியையாவது அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்படும்.

நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஃபர்ஸ்ட் ஃபோலியோ பதிப்பு வெவ்வேறு நாடகங்களுக்கு வெவ்வேறு விதமான பிரதிகளை அடிப்படையாகக் கொண்டே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் காலத்திற்கு மிக அருகில் பதிப்பிக்கப்பட்டிருப்பதால், இது ஷேக்ஸ்பியரின் மூலப் பிரதிக்கு மிக அருகில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இத்தகைய வெவ்வேறு பிரதிகளின் காரணமாகக் கடந்த 400 வருடங்களில் இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

‘வெரோனாவின் இரண்டு கனவான்கள்’ ஷேக்ஸ்பியர் முதலில் எழுதிய நாடகங்களில் ஒன்று. 1593-94 வருடங்களில் அவர் இதை எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரது பின்னாளைய நாடகங்களின் பல பொதுவான அம்சங்களின் ஆரம்பத்தை நாம் இதிலே காணலாம்.

ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களைப் போல, இதுவும் ஒரு ஸ்பானிஷ் மொழிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ‘டயானாவின் ஏழு புத்தகங்கள்’ என்ற புத்தகத்தின் கதையை எடுத்துக்கொண்டு பல்வேறு மாற்றங்களைச் செய்ததாகத் தெரிகிறது.

நாடக மேடைக்காக ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட முதல் கதை என்று பெரும்பாலான ஷேக்ஸ்பியர் அறிஞர்கள் இதைக் கருதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணமாக இந்த நாடகத்தின் முதிர்ச்சியில்லாத தன்மையைக் கூறுகிறார்கள். அவரது பின்னாளைய நாடகங்களை நோக்கும்போது, இதில் கதை சொல்லும் விதமும், கதாபாத்திரங்களின் வசனங்களும் அவ்வளவு நேர்த்தியாக இல்லாமல் இருப்பதும்கூடக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் காலக்கிரம வரிசை குறித்த சர்ச்சைகளைத் தனியாகவே பார்க்க வேண்டும்.

அங்கம் 1 – காட்சி 1

வெரோனாவின் நகரின் தெரு ஒன்றில் நண்பர்களான பிரோட்டசும் வாலெண்டினும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.வாலெண்டின் மிலன் நகருக்குப் பிரயாணம் செய்யப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். இளைஞர்கள் பல இடங்களுக்குச் செல்வதன் மூலமே முதிர்ச்சியடைய முடியும் என்றும் தெரிவிக்கிறான். ஜூலியாவின் மீதான தனது காதலே தன்னை வெரோனாவில் வைத்துள்ளது என்று பிரோட்டஸ் தெரிவிக்கிறான். காதலில் மூழ்கியிருப்பதைக் குறை கூறும் வாலெண்டின், காதலே அவனை முட்டாளாக்கிவிடும் என்று தெரிவிக்கிறான். சிறிது நேரத்தில் வாலெண்டின் கிளம்பிவிடுகிறான். ஜூலியாவின் காதலுக்காகத் தன்னுடைய நண்பர்கள், படிப்பு, அறிவு என அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தனிமையில் பிரோட்டஸ் வருத்தத்துடன் பேசுகிறான்.

அப்போது வாலெண்டினின் வேலையாளான ஸ்பீட் அங்கே வருகிறான். தன்னுடைய காதல் கடிதத்தை ஜூலியாவிடம் கொடுத்துவிட்டானா என்று பிரோட்டஸ் கேட்கிறான். தான் கொடுத்துவிட்டதாகவும், ஆனால் ஜூலியா எந்த உணர்வும் இல்லாமல், வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டு வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அவனது கடிதத்தைக் கண்டு அவள் பெரிதாக மகிழ்ச்சி அடையவில்லை என்றும் தெரிவிக்கிறான். எரிச்சலும் கோபமும் கொண்ட பிரோட்டஸ் அவனை அங்கிருந்து துரத்திவிட்டுவிட்டு, தன்னுடைய காதலை எண்ணி வருந்துகிறான்.

அங்கம் 1 – காட்சி 2, 3

ஜூலியா, அவளது தோழி லூசட்டாவுடன் அமர்ந்திருக்கிறாள். எப்படிக் காதலில் வீழ்வது என்று அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். காதலில் கவனமாக விழ வேண்டும் என்றும், அவசரப்படக்கூடாது என்றும் லூசட்டா கூறுகிறாள். தன்னிடம் காதலை தெரிவித்திருக்கும் அனைவரையும் கூறி, அவர்களில் தான் யாரை காதலிக்கலாம் என்று ஜூலியா கேட்கிறாள். தான் பிரோட்டசின் காதலால் ஈர்க்கப்பட்டதாக லூசட்டா தெரிவிக்கிறாள். தன்னிடம் பிரோட்டஸ் இதுவரை காதலைத் தெரிவிக்கவில்லை என்று ஜூலியா சொல்கிறாள். ரகசிய காதல் மட்டுமே எப்போதும் தீவிரமானது என்று லூசட்டா பதில் கூறுகிறாள்.

இப்போது, ஜூலியாவிற்குப் பிரோட்டஸ் எழுதிய காதல் கடிதத்தைத் தான் வாங்கி வைத்திருப்பதாக லூசட்டா தெரிவிக்கிறாள். தன்னிடம் காட்டாமல் அந்தக் கடிதத்தை லூசட்டா வைத்திருப்பதை நினைத்து ஜூலியா கோபப்படுகிறாள். ஆனால் அதை வெளியில் காட்டாமல், நல்ல பெண்கள் அப்படிப்பட்ட கடிதத்தை வாசிக்கமாட்டார்கள் என்று சொல்லி லூசட்டாவை அனுப்பிவிடுகிறாள். அதே நேரத்தில் கடிதத்தை வாசிக்க வேண்டும் என்று மீண்டும் அவளை வேறு காரணம் சொல்லி அழைக்கிறாள். மீண்டும் அவர்களிடையே சண்டை ஏற்படவே, கடிதத்தைக் கிழித்துவிட்டு லூசட்டாவை அனுப்பிவிடுகிறாள். கிழிந்த கடிதத்தைப் பொறுக்கி எடுத்து வாசிக்க முயற்சிக்கிறாள்.

அதே நேரத்தில், பிரோட்டசின் தந்தை அன்டோனியோ தன்னுடைய வேலையாளிடம், தன் மகனை மிலனில் இருக்கும் அரசரின் சபைக்கு அனுப்பலாமா என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிரோட்டஸ் தன்னுடைய பிரபுத்துவப் பிறப்பின் பலனைப் பெற, அரசரின் அருகில் இருப்பது அவசியம் என்று தெரிவிக்கவே, அவனை மிலனிற்கு அனுப்ப அண்டனியோ முடிவு செய்கிறார்.

அன்டோனியோ பிரோட்டசைச் சந்திக்கச் செல்கிறார். அப்போதுதான் கிடைத்த ஜூலியாவின் காதல் கடிதத்தைப் பிரோட்டஸ் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை அங்கே வந்துவிடவே, தனக்கு நண்பன் வாலெண்டின் கடிதம் எழுதியிருப்பதாகவும், தன்னை மிலனிற்கு வரச்சொல்லி இருப்பதாகவும் பொய் சொல்கிறான். அன்டோனியோ மகிழ்ச்சியுடன் அவன் மறுநாளே மிலனிற்குச் சென்று அரசவையில் இருக்கலாம் என்று தெரிவிக்கவே, பிரோட்டஸ் வருத்தமடைகிறான். ஜூலியாவுடனான தன்னுடைய காதலைத் தைரியமாகச் சொல்ல முடியவில்லை என்று வருந்துகிறான்.

அங்கம் 2 – காட்சி 1, 2

மிலன் நகரம். வாலெண்டினின் வேலையாள் ஸ்பீட், வாலெண்டினிற்குக் கையுறைகளை அணிவித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அங்கே மூன்று கையுறைகள் இருக்கின்றன. மூன்றாவது, வாலெண்டினின் மனதைக் கவர்ந்த சில்வியாவின் கையுறை என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஸ்பீடும் அவளை ‘வாலெண்டினின் மனதைக் கவர்ந்தவள்’ என்று கூறவே, வாலெண்டின் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்கிறான். ஸ்பீடும் அவன் எப்போதும் காதல் பாடல்கள் கேட்பது, பெருமூச்சு விடுவது, பசியில்லாமல் இருப்பது எனப் பல காரணங்களைச் சொல்கிறான், வேறு ஒருவனுக்குக் காதல் கடிதம் எழுதும் பணியைத் தனக்குச் சில்வியா தந்திருப்பதாக வாலெண்டின் வருத்தத்துடன் தெரிவிக்கிறான்.

அப்போது சில்வியா அங்கே வருகிறாள். அவளிடம் கடிதத்தைத் தருகிறான். அது மிகவும் ‘பண்டிதத்தனத்துடன்’ இருப்பதாகக் கூறி, கடிதத்தைத் திரும்பக் கொடுத்து விடுகிறாள். அவனைத் தனக்குக் கடிதம் எழுதவே சொன்னதாகவும், அவன் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்கிறாள். வாலெண்டின் இன்னமும் வருத்தமடைகிறான். சில்வியா அங்கிருந்து சென்றுவிடுகிறாள்.

வெரோனாவில் பிரோட்டஸ் மற்றும் ஜூலியா இருவரும் கண்ணீருடன் பிரிகிறார்கள். அதற்கு முன் இருவரும் தங்களது மோதிரங்களை மாற்றிக் கொள்கிறார்கள். பிரோட்டஸ் மிலன் நகருக்கு செல்ல கப்பல் ஏறுகிறான்.

அங்கம் 2 – காட்சி 3, 4

பிரோட்டசின் வேலையாள் லான்சும், அவனது நாயும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரோட்டஸ் மிலன் நகருக்கு வந்தபோது, தானும் தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்து வர நேர்ந்ததைக் குறித்து நாயிடம் லான்ஸ் பேசிக் கொண்டிருக்கிறான்.

மிலன் நகரில் சில்வியாவின் வீட்டு வாசலில் வாலெண்டின், சில்வியாவை விரும்பும் மற்ற நகர இளைஞர்களுடன் நின்று கொண்டிருக்கிறான். வாலெண்டினின் வேலையாள் ஸ்பீட், வாலெண்டின் மற்றவர்களுடன் சண்டையிட வேண்டும் என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே மிலன் நகரப் பிரபு வருகிறார்.

சில்வியாவை விரும்பி நிறைய இளைஞர்கள் அங்கே இருப்பதைக் கண்டு பிரபு ஆச்சரியப்படுகிறார். வாலெண்டினிடம் அவனது நண்பன் பிரோட்டஸ் பற்றி விசாரிக்கிறார். பிரோட்டஸ் ஒரு கனவான் என்று வாலெண்டின் அவனைப் புகழ்ந்து பேசுகிறான். பிரோட்டஸ் மிலனிற்கு வரப்போவதாகப் பிரபு தெரிவிக்கிறார். அப்போது பிரோட்டஸ் அங்கே வருகிறான். வாலெண்டின் அவனை சில்வியாவிற்கு அறிமுகப்படுத்துகிறான்.சில்வியாவும் பிரபுவும் அங்கிருந்து செல்கிறார்கள்.

பிரோட்டஸ் காதலித்ததற்காக அவனை மிகவும் கடிந்து கொண்டாலும், தானும் இப்போது சில்வியாவின்மீது காதல் கொண்டு விட்டதாக வாலெண்டின் கூறுகிறான். சில்வியாவின் அழகைக் குறித்து வாலெண்டின் விவரித்துச் சொல்கிறான். தானும், சில்வியாவும் காதலிப்பதாகவும், அன்றிரவே இருவரும் அங்கிருந்து ஓடிவிட முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறான். அவளது வீட்டு பால்கனிக்கு ஏற ஒரு ஏணி தயார் செய்து வைத்திருப்பதையும் தெரிவிக்கிறான். தனக்கு அன்றிரவுக்கு உதவி வேண்டும் என்று கேட்டவுடன், பிரோட்டஸ் தனக்கு வேலையிருப்பதாகத் தட்டி கழிக்கிறான்.

வாலெண்டின் அங்கிருந்து சென்றவுடன், பிரோட்டஸ் ஜூலியாவை மறந்து, தானும் சில்வியாவின் மீது காதல் கொண்டுவிட்டதாகத் தெரிவிக்கிறான். வாலெண்டின் மீதான நட்பை விடச் சில்வியா மீதான காதல் பெரிது என்றும் தெரிவிக்கிறான்.

அங்கம் 2 – காட்சி 5, 6

வாலெண்டினின் வேலையாள் ஸ்பீடும், பிரோட்டசின் வேலையாள் லான்சும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜூலியா மீதான பிரோட்டசின் காதல் பற்றிக் குழப்பமாகப் பேசுகிறார்கள். இருவரும் குடிப்பதற்கு மது விடுதியை நோக்கி செல்கிறார்கள் என்று நமக்குத் தெரிகிறது.

பிரோட்டஸ், சில்வியா மீதான தன்னுடைய காதல் குறித்துத் தனியே குழம்பிக் கொண்டிருக்கிறான். ஜூலியாவின் காதலையும், வாலெண்டினின் நட்பையும் அதனால் இழக்க வேண்டியிருக்கும் என்பது அவனுக்குத் தெரிகிறது. ஆனாலும் தனக்குச் சில்வியா மீது அதீத காதல் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறான். அவளை வாலெண்டினிடமிருந்து பிரிக்கத் திட்டம் தீட்டுகிறான். அவர்கள் இருவரும் இரவில் ஓடிப் போகத் திட்டம் தீட்டியிருப்பதைச் சில்வியாவின் தந்தையான மிலனின் பிரபுவிடம் தெரிவித்தால், அவரது நல்ல எண்ணத்தைப் பெறுவதோடு, அவர்களைப் பிரித்துவிடவும் முடியும் என்று எண்ணுகிறான். சில்வியாவிற்குப் பிரபு பார்த்திருக்கும் துரியோவையும் தந்திரமாக ஏமாற்றிவிட்டால், சில்வியாவை அடைவது எளிது என்று திட்டம் தீட்டுகிறான்.

அங்கம் 2 – காட்சி 7

தானும் மிலன் நகருக்குச் செல்ல விரும்புவதாக ஜூலியா, தனது தோழி லூசட்டாவிடம் தெரிவிக்கிறாள். காதல் பித்து அவளுக்கு அதிகமாகிவிட்டது என்று லூசட்டா பதில் கூறுகிறாள். மேலும், மிலன் செல்லும் பாதை ஆபத்து நிறைந்தது என்றும், தனியே அந்த வழியே செல்வதன் மூலம், ஜூலியாவின் நற்பெயர் கெட்டுப் போகும் என்றும் தெரிவிக்கிறாள். ஆனாலும் ஜூலியா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

பயணத்தின்போது தான் ஆண் வேடமிட்டுக் கொள்ளப் போவதாக ஜூலியா தெரிவிக்கிறாள். நல்ல உயர்ந்த இடத்து வேலையாள் போன்ற ஆடைகளைத் தயார் செய்யும்படியாகவும் சொல்கிறாள். தன்னை எச்சரிக்கை செய்யும் லூசட்டாவிடம், பிரோட்டஸ் எந்தக் குறையுமற்றவன் என்றும், அவனைக் காண்பதற்குத் தான் எந்த ஆபத்தையும் சந்திக்கத் தயார் என்றும் கூறுகிறாள். பிரோட்டஸ் குற்றமற்றவன் என்பதை லூசட்டா நம்ப மறுக்கிறாள். தன்னைப் போலவே லுசட்டாவும் பிரோட்டசின் நல்ல குணத்தை நம்பவேண்டும் என்று ஜூலியா தெரிவிக்கிறாள்.

(தொடரும்)

படம்: Two Gentlemen of Verona by Angelica Kauffman (1789)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *