அங்கம் 3 – காட்சி 1,2
வாலெண்டினின் திட்டத்தை பிரபுவிடம் பிரோட்டஸ் தெரிவிக்கிறான். வாலெண்டின் சில்வியாவுடன் ஓடிப்போவதைத் தடுப்பது தன்னுடைய கடமை எனவும், இல்லையென்றால் தனது நண்பனுக்குத் தான் துரோகம் செய்திருக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கிறான். தன்னுடைய மகளை வாலெண்டின் சந்திப்பது தனக்குத் தெரியும் என்றாலும், இதுவரை தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருந்ததாக பிரபு தெரிவிக்கிறார். வாலெண்டினின் திட்டத்தைத் தானே சொல்லி கொடுத்ததாக வெளியே தெரியவேண்டாம் என்றும் பிரோட்டஸ் கேட்டுக்கொள்கிறான்.
அரண்மனை முற்றத்தில் வாலெண்டின் வேகமாகச் செல்லும்போது அவனைப் பிரபு நிறுத்திப் பேச்சு கொடுக்கிறார். பிரபுவின் இந்தச் செய்கை வாலெண்டினிற்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவன் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறான். சில்வியா துரியோவை மணக்க மறுப்பது தனக்கு வருத்தமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். சில்வியாவைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தானும் மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கிறார். அந்தப் பெண் மிலனில் இருப்பதால் அவளை எப்படிக் காதலிப்பது என்று வாலெண்டினிடம் கேட்கிறார்.
வாலெண்டினும் பெண்கள் நகைகளை விரும்புவார்கள் என்பதால் அவர்களுக்கு அதைப் பரிசாகக் கொடுக்கலாம் என்றும், காதலிக்க அணுகும்போது பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் பிரபுவிற்கு எடுத்துச் சொல்கிறான். அப்படியே இரவு நேரங்களில் பிரபு அவர் விரும்பும் பெண்ணின் வீட்டிற்கு ரகசியமாகச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் என்றும், அதற்காக மடக்கி வைத்துக் கொள்வது போல ஒரு ஏணி தயார் செய்து கொள்ளலாம் என்றும் சொல்கிறான். பிரபுவிற்குத் தானே அப்படியான ஏணி ஒன்றையும் தயார் செய்து தருவதாகத் தெரிவிக்கிறான்.
ஆனாலும் பிரபு அவனை விடுவதாக இல்லை. இன்னமும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஏணியை எப்படி உடைக்குள் மறைத்து வைத்து எடுத்து செல்வது என்றும் அவனிடம் கேட்கிறார். வாலெண்டின் அதைச் செய்து காட்டவே, வாலெண்டினின் உடையைத் தான் ஒரு முறை அணிந்து பார்க்க விரும்புவதாகத் தெரிவிக்கிறார். அப்படியே வாலெண்டினின் உடையை அணிந்து பார்க்கும்போது, அதில் வாலெண்டின், சில்வியாவுடன் ஓடிப்போகப் போட்டிருக்கும் திட்டம் குறித்த கடிதம் ஒன்றையும் வாசிக்கிறார். மிகுந்த கோபத்துடன் அவனை அரசவையில் இருந்து வெளியேற்றுகிறார். வருத்தத்துடன் இருக்கும் வாலெண்டினை ஆறுதல் படுத்துவது போலப் பிரோட்டஸ் நடிக்கிறான்.
அங்கம் 4 – காட்சி 1,2
நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட வாலெண்டின், மிலனில் இருந்து செல்லும் பாதையில் சில திருடர்களைச் சந்திக்கிறான். அவர்கள் அவனது சோகமான கதையைக் கேட்கிறார்கள். வாலெண்டினும் அவர்களைக் கவர, தான் ஒருவனைச் சண்டையில் வெட்டி வீழ்த்தியதாகவும் தெரிவிக்கிறான். அவர்களும் அவனது திறமைமீது நம்பிக்கை கொண்டு, தங்களுடன் இணைந்துவிடும்படியாகக் கேட்கிறார்கள். சேர மறுத்தால், அவனைக் கொன்று விடுவதாகவும் தெரிவிக்கிறார்கள். பெண்களுக்கும் ஏழைகளுக்கும் தீங்கிழைக்காமல் இருந்தால் அவர்களுடன் சேர்வதாகத் தெரிவிக்கிறான். அவர்களும் ஒப்புக் கொள்ளவே வாலெண்டின் அந்தத் திருடர் கூட்டத்தில் சேர்கிறான்.
மிலன் நகரில் இப்போது துரியோவின் முதுகில் குத்த பிரோட்டஸ் தயாராகிறான். அவனுக்கு உதவுவதாகக் கூறி, அவனுடன் சில்வியாவின் வீட்டின் முன்னே, இசை கலைஞர்களுடன் நிற்கிறான். அவர்கள் காதல் பாடல்களை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஆண் வேடத்தில் இருக்கும் ஜூலியா வருகிறாள் (இப்போது அவளது பெயர் செபாஸ்டியன்.). கலைஞர்களில் ஒருவன் அவள் ஏன் சோகமாக இருக்கிறாள் என்று கேட்கிறான். அவனே சில்வியாமீது பிரோட்டஸ் கொண்டிருக்கும் காதலைத் தெரிவித்து, அதற்காகவே அவர்கள் அங்கே வாசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறான். இசை நின்றவுடன், பிரோட்டஸ் அங்கிருந்து துரியோவை அகற்றிவிடுகிறான். அப்போது வெளியே வரும் சில்வியா, தன்னிடம் காதலை தெரிவிக்க பிரோட்டஸ்தான் அந்த ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
வெரோனாவின் இரண்டு கனவான்களில் இருந்து ஒரு காட்சி – ஜான் மாசி ரைட் (பதினெட்டாம் நூற்றாண்டு)
நண்பனுக்குத் துரோகம் செய்தவன், விசுவாசமில்லாதவன் என்று சில்வியா அவனைக் கடுமையாகப் பேசுகிறாள். வாலெண்டினையும், ஜூலியாவையும் ஏமாற்றியது போலத் தன்னை ஏமாற்றமுடியாது என்றும் தெரிவிக்கிறாள். பிரோட்டஸ், ஜூலியா இறந்துவிட்டதாகச் சொல்கிறான். அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஜூலியா, எந்தப் பதிலும் சொல்லவில்லை. சில்வியாவின் படுக்கையறையில் தொங்கும் அவளது படத்தைத் தனக்குத் தரும்படியாகப் பிரோட்டஸ் கேட்கிறான். சில்வியாவிற்கு விருப்பமில்லை என்றாலும், பிரோட்டஸ் பொய்யான உருவங்களையும் நிழலையும் உபாசனை செய்வதால், அவனுக்கு மனிதர்களின் பொய்யான உருவத்தைக் காட்டும் படத்தைத் தருவது சரிதான் என்று சில்வியா தெரிவிக்கிறாள். அனைத்தையும் கேட்ட ஜூலியா, கனத்த மனதுடன் தன்னுடைய இடத்திற்குத் திரும்புகிறாள்.
அங்கம் 4 – காட்சி 3,4
துரியோவுடனான திருமணத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றி மிலனில் இருந்து அழைத்துச் செல்லுமாறு, சில்வியா தன்னுடைய நண்பனான எகில்மோர் பிரபுவிடம் உதவி கேட்கிறாள். மனைவியை இழந்த அவர், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பவர் என்பதால் அவள் அவரைத் துணைக்கு அழைக்கிறார். அவர்கள் இருவரும் மறுநாள் அருகில் இருக்கும் பாதிரியின் வீட்டில் சந்தித்து அங்கிருந்து தப்பிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.
ஆண் வேடத்தில் இருக்கும் ஜூலியாவை பிரோட்டஸ் சந்திக்கிறான். தனக்கு உதவியாக ஒரு மோதிரத்தை சில்வியாவிடம் சென்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அது ஜூலியா அவனுக்குக் கொடுத்த மோதிரம். பிரோட்டசின் துரோகத்தால் மனமுடையும் ஜூலியா, அவனிடம் மோதிரத்தை பெற்றுக் கொண்டு சில்வியாவின் அறைக்குச் செல்கிறாள். மோதிரம் ஜூலியாவிற்குச் சொந்தமானது என்று அறிந்து, தனக்குப் பிரோட்டசை பிடிக்காது என்று சில்வியா, ஜூலியாவிடம் தெரிவிக்கிறாள். ஜூலியாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்ப்பதற்காக ஆண் வேடத்தில் இருக்கும் ஜூலியா, சில்வியாவிற்கு நன்றி தெரிவிக்கிறாள். அவனுக்கு ஜூலியாவைத் தெரியுமா என்று சில்வியா கேட்கிறாள். ஜூலியாவின் உடைகளை அணியும் அளவிற்கு அவளுக்கு நெருக்கமாக இருந்ததாக ஜூலியா தெரிவிக்கிறாள். தன்னுடைய படத்தையும் ஜூலியாவிடம் கொடுத்துவிட்டு, சில்வியா அங்கிருந்து சென்றுவிடுகிறாள். படத்தைப் பார்க்கும் ஜூலியா, சில்வியாவை விடத் தானே அழகி என்று சொல்லிக் கொள்கிறாள்.
அங்கம் 5 – காட்சி 1-3
எகில்மோர் பிரபுவும், சில்வியாவும் பாதிரியின் வீட்டில் சந்திக்கிறார்கள். அதே நேரத்தில் பிரோட்டஸ், ஆண் வேடத்தில் இருக்கும் ஜூலியாவிடம் சில்வியா உடனான சந்திப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே வரும் மிலனின் பிரபு, சில்வியாவைக் காணவில்லை என்று தெரிவிக்கிறார். பிரோட்டஸ், செபாஸ்டியன் (ஜூலியா), துரியோ, பிரபு முதலியோர் அவளைத் தேடக் கிளம்புகிறார்கள்.
மிலனில் இருந்து தப்பிச் செல்லும் சில்வியாவை, திருட்டுக் கூட்டம் பிடித்துவிடுகிறது. எகில்மோர் பிரபு அவளைக் கைவிட்டுவிட்டு ஓடி விடுகிறார். இப்போது அந்தக் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் வாலண்டினிடம் அவளை அழைத்து வருகிறார்கள்.
அங்கம் 5 – காட்சி 4
பிரோட்டசும் செபாஸ்டினும் (ஆண்வேடத்தில் இருக்கும் ஜூலியா) சில்வியாவைக் கடத்திச் செல்லும் கூட்டத்தைக் கண்டு, அவர்களைத் தடுத்து, சில்வியாவைக் காப்பற்றுகிறார்கள். ஆனால் அவளை மீண்டும் மிலனிற்கு அழைத்துச் செல்லாமல், பிரோட்டஸ் காட்டிற்குள் அழைத்துச் செல்கிறான்.
வாலெண்டின் தனியே காட்டிற்குள் உட்கார்ந்து இருக்கிறான். இயற்கையின் நடுவே வாழும் வாழ்க்கையின் இனிமையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே பிரோட்டஸ், சில்வியா, ஜூலியா மூவரும் வரவே, புதருக்குள் ஒளிந்து கொள்கிறான். பிரோட்டஸ், சில்வியாவைக் காப்பாற்றியதற்குப் பரிசாக அவள் தன்னை அன்புடன் ஒருமுறை பார்த்தாலும் போதும் என்கிறான். வாலெண்டின் எல்லாவற்றையும் மறைவில் கேட்டுக் கொண்டிருக்கிறான். பிரோட்டசால் காப்பாற்றப்படுவதைவிட, சிங்கத்தால் உண்ணப்படுவதையே தான் விரும்புவதாக சில்வியா கூறுகிறாள். தான் வாலெண்டினை காதலிப்பதாகவும், அவனுக்குத் துரோகம் செய்த பிரோட்டசை வெறுப்பதாகவும் கூறுகிறாள். ‘காதலில் யார் நண்பர்களை மதிப்பார்கள்?’ என்று பிரோட்டஸ் கேட்கிறான். ‘பிரோட்டசை தவிர அனைவரும்’ என்று சில்வியா பதில் கூறுகிறாள்.
சில்வியா இப்படியே பேசிக் கொண்டிருப்பது, பிரோட்டசுக்குக் கோபத்தை வரவழைக்கிறது. அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சில்வியா அலறவே, வாலெண்டின் புதரில் இருந்து வெளியே வந்து, பிரோட்டசை நோக்கி கோபத்துடன் பேசுகிறான். வாலெண்டினைக் கண்டவுடன், பிரோட்டஸ் பயந்து, அவனிடம் மன்னிப்பை வேண்டுகிறான். வாலெண்டினும் அவனை மன்னித்து, அவனே சில்வியாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான்.
இப்போது ஆண் வேடத்தில் இருக்கும் ஜூலியா மயக்கம் அடைகிறாள். மீண்டும் நினைவு திரும்பியதும், பிரோட்டஸ் சில்வியாவிற்குக் கொடுக்கச் சொன்ன மோதிரத்தை தான் கொடுக்கவில்லை என்று கூறுகிறாள். தன்னுடைய பையில் இருந்து இரண்டு மோதிரங்களை எடுத்து காட்டுகிறாள். ஜூலியாவின் மோதிரம் அவனிடம் எப்படி வந்தது என்று பிரோட்டஸ் கேட்கவே, தன்னுடைய வேடத்தைக் கலைத்து காட்டுகிறாள். சில்வியாவைவிட ஜூலியாவே அழகி என்று பிரோட்டஸ் கூறுகிறான்.
துரியோவும் பிரபுவும் மற்ற திருட்டு கூட்டத்தினரும் அங்கு வந்து சேர்கிறார்கள். சில்வியா தன்னுடையவள் என்று துரியோ சொல்கிறான். வாலெண்டின் அவனைக் கொன்றுவிடுவதாகத் தெரிவித்தவுடன், துரியோ பின்வாங்கி விடுகிறான். தான் காதலிக்காத ஒருத்திக்காக உயிரைவிடத் தயாராக இல்லை என்று தெரிவித்து விடுகிறான். வாலெண்டினைச் சிறந்த கனவான் என்று கூறும் பிரபு, திருட்டுக் கூட்டத்தையும் மன்னித்து, இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
0
வெரோனாவின் இரு கனவான்கள் – அலசல்
ஷேக்ஸ்பியரின் அதிகப் பிரபலமில்லாத படைப்புகளில் ஒன்று ‘வெரோனாவின் இரு கனவான்கள்’. வாசிக்கும் எவரும் இது ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகம் அல்ல என்பதையும் உணர்ந்து விடுவார்கள். உதாரணமாக, காட்சியில் இருக்கும் அனைத்துப் பாத்திரங்களும் வசனம் பேசுவதில்லை. சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் வசனம் எதுவும் இல்லாமலேயே நின்று கொண்டிருப்பது போன்றவை இந்த நாடகத்தில் உண்டு.
ஆனால், இவை எல்லாவற்றையும்விட அதிகமான விவாதத்தை உருவாக்குவது இந்த நாடகத்தின் ஐந்தாவது அங்கத்தில் நிகழும் காட்சிகள்தான். பிரோட்டஸ் சில்வியாவைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். அதைத் தொடர்ந்த நிகழ்வுகளில், வாலெண்டின் அவனை மன்னித்துச் சில்வியாவை ஏற்றுக் கொள்ளக் கேட்கிறான். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் மிகவும் பிரச்சினைக்கு உரிய காட்சிகளில் இதுவும் ஒன்று.
நண்பனா, காதலா என்ற கேள்விக்கு வாலெண்டின் தன்னுடைய காதலை விட்டுக்கொடுத்துப் பதில் கூறுகிறான். இதில் பெண்ணின் விருப்பம் பற்றிய கேள்வியே இல்லை. பதினாறாம்-பதினேழாம் நூற்றாண்டின் பெண்கள், அரசகுலப் பெண்களும்கூட, பெரிதாக எந்த உரிமையும் இல்லாமலேயே இருந்தார்கள். அவர்களது பெற்றோரும் சகோதரர்களும் அவர்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டி வைக்கும் நிலையே அவர்களுக்கு இருந்தது. சொத்துரிமை இல்லாமல், சொற்பமானவர்களே கல்வி பெற்ற காலத்தில் பெண்ணுரிமை என்பது குறித்த கேள்வியே இல்லை. ஷேக்ஸ்பியரின் பின்னாளைய நாடகங்களின் பெண்கள் இன்னமும் சிறிது முற்போக்காக இருந்தாலும், அவர்களும் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும் ஆட்டிப் படைக்கப்படுபவர்களாகவே இருந்தார்கள். எனவே வாலெண்டின், சில்வியாவின் விருப்பம் என்னவென்று அறியாமலேயே அவளை பிரோட்டசுக்குத் தாரை வார்க்க முடிவு செய்ததில் ஆச்சரியமில்லை. அது குறித்து அந்த இடத்தில் சில்வியாவிற்கு எந்த வசனமும் இல்லை.
இன்றும் இந்தக் காட்சி பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. இன்றைய பெண்ணிய விழுமியங்களால் பார்ப்பது சரியோ, தவறோ நம்மால் சற்றுத் திடுக்கிடாமல் இந்தப் பகுதியை கடக்க முடியாது. (பலாத்காரம் செய்தவனுக்கே பெண்ணைக் கட்டி கொடுக்கவேண்டும் என்று சொல்பவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்). அதே நேரத்தில், தன்னை ஏமாற்றிய பிரோட்டசையே ஜூலியா திருமணம் செய்து கொள்வதும் நம்மை ஏமாற்றுவதாகத் தெரிகிறது. அன்றைய காலகட்டத்தின் விழுமியங்களுக்கு அது ஏற்றதாக இருந்திருக்கலாம்.
இதே காட்சியை ஆண் நண்பர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் காதலுக்கு இடையிலான மோதலாகவும் பார்க்கலாம். வாலெண்டின் இங்கே ஆண்களுக்கு இடையிலான நட்பை மேலானதாகப் பார்க்கிறான். கதையின் முக்கியப் பாத்திரங்களைவிட, அவர்களின் வேலையாட்கள், லூசட்டா, ஸ்பீட் போன்றவர்கள், சமூகப் பிரச்சினைகளைத் தெளிவாகப் பேசுவதைப் பார்க்கிறோம். பணம் படைத்த பிரபுக்களை விட அவர்களது வாழ்வு இன்னமும் சற்று அதிகச் சுதந்திரத்தோடு இருந்ததாக இதைக் கருதலாம்.
ஆனால் ‘வெரோனாவின் இரண்டு கனவான்கள்’ நமக்கு முழுமையான திருப்தி தரும் நாடகமாக இருப்பதில்லை. பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் நாடகம், எந்தப் பக்கத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சட்டென்று முடிந்து விடுகிறது. தன்னை இப்படித்தான் என்று யாரும் முத்திரை குத்திவிடக் கூடாது என்று ஷேக்ஸ்பியர் முடிவு செய்து கொடுத்த முடிவாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
(தொடரும்)
படம்: Valentine Rescuing Silvia from Proteus by William Holman Hunt (1851)