Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2

ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2

The Merry Wives of Windsor

அங்கம் 3 – காட்சி 1-3

அதே நேரத்தில் எவன்ஸ் சண்டை எங்கே என்று தெரியாமல் வயல்களுக்கு இடையில் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சிம்பிள் அங்கே வந்து எவன்ஸை ஷாலோ, சிலண்டர், பேஜ் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அப்போது கயஸ் அங்கே வருகிறார். இருவரும் சண்டையிடத் தயாராகிறார்கள். ஆனாலும் தங்களைச் சண்டையிடத் தூண்டிவிட்டு, மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். மதுக்கடை உரிமையாளர்தான் இதற்குக் காரணம் என்றும் தாழ்ந்த குரலில் பேசிக் கொள்கிறார்கள். இப்போது மதுக்கடை உரிமையாளர் தனக்குப் பாதிரியையோ மருத்துவரையோ இழக்க விருப்பமில்லை என்று சொல்லி சண்டையைப் பிரித்து விடுகிறார். இருவரும் மதுக்கடை உரிமையாளரை எப்படிப் பழிவாங்குவது என்று திட்டமிடுகிறார்கள்.

தெருவில் திருமதி பேஜை போர்ட் சந்திக்கிறார். திருமதி பேஜுடன் பால்ஸ்டாப்பின் வேலையாள் ஒருவனும் இருக்கிறான். தான் திருமதி போர்டை சந்திக்கச் செல்வதாக அவரிடம் சொல்லிவிட்டு அவள் சென்றுவிடுகிறாள். போர்டின் சந்தேகம் இப்போது உறுதியாகிவிட்டது.

பேஜ், ஷாலோ, சிலண்டர், மதுக்கடை உரிமையாளர், எவன்ஸ், கயஸ் முதலியோர் வருகிறார்கள். போர்ட் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைக்கிறார். அவர்கள் அனைவரும் சிலண்டருக்கும் ஆன் பேஜிற்கும் திருமணம் செய்து முடிப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போர்ட் மீண்டும் அவர்களை அழைக்கவே, அவர்கள் அனைவரும் போர்டின் வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

போர்டின் வீட்டில், திருமதி பேஜும், திருமதி போர்டும் பால்ஸ்டாப்பின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களது வேலையாட்களைப் பெரிய அழுக்குத் துணிக் கூடையைத் தயாராக வைக்குமாறும், தாங்கள் சொல்லும் போது, அதைத் தூக்கி சென்று தேம்ஸ் நதியில் வீசிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். திருமதி பேஜ் ஒளிந்து கொள்கிறாள். பால்ஸ்டாப் நுழைகிறான். திருமதி போர்டின் கணவன் மட்டும் உயிருடன் இல்லை என்றால், தானே அவளைத் திருமணம் செய்து கொண்டுவிடுவதாகத் தெரிவிக்கிறான். இன்னமும் பல காதல் வசனங்கள் பேசப்படுகின்றன.

அப்போது ஒரு வேலையாள் திருமதி பேஜ் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். பால்ஸ்டாப் ஒளிந்து கொள்கிறான். உள்ளே நுழைந்தவுடன், திருமதி பேஜ், முன்பே பேசி வைத்திருந்தது போல, திருமதி போர்டின் கணவன் வின்ட்சர் நகர அதிகாரிகளுடன் அங்கு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறாள். அவர்களது வீட்டில் திருமதி போர்ட் யாரோ ஓர் ஆணை ஒளித்து வைத்திருப்பதாக அவன் சந்தேகப்படுவதாகவும் தெரிவிக்கிறாள். முதலில் தன்னுடைய வீட்டில் யாருமில்லை என்று மறுக்கும் திருமதி போர்ட், அடுத்து பால்ஸ்டாப் இருப்பதை ஒப்புக்கொள்கிறாள். அவனை அழுக்குத்துணிக் கூடையில் வைத்து வெளியே அனுப்பலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

பால்ஸ்டாப் வெளியே வந்து, அழுக்குத்துணிக் கூடையில் ஒளிந்து கொள்ளச் சம்மதம் என்று தெரிவிக்கிறான். ஆச்சரியமடைந்தது போல நடிக்கும் திருமதி பேஜ், அவன் தனக்கும் கடிதம் எழுதியிருப்பதைத் தெரிவிக்கிறாள். தான் அவளை விரும்புவதாக முணுமுணுத்துக் கொண்டே, பால்ஸ்டாப் அழுக்குத்துணிக் கூடைக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறான். அவன்மீது பழைய துணிகளைப் போட்டு மூடிவிட்டு அனுப்பும்போது, போர்ட், பேஜ், கயஸ், எவன்சுடன் உள்ளே நுழைகிறார்.

கூடையுடன் வேலையாட்கள் வெளியே சென்று விடுகின்றனர். போர்டும் மற்றவர்களும் வீடு முழுவதும் தேடுகிறார்கள். பால்ஸ்டாப்மீது போர்ட் பொறாமை கொண்டுள்ளதை பார்த்து, அவரை இன்னமும் கோபப்படுத்த இரண்டு பெண்களும் முடிவு செய்கிறார்கள்.

வீட்டில் யாருமில்லை என்று அனைவரும் வந்து சொல்கிறார்கள். அனைவரும் திருமதி போர்ட் குற்றமற்றவள் என்று சொல்கிறார்கள். மறுநாள் அனைவரும் வேட்டைக்குச் செல்லலாம் என்றும் முடிவு செய்கிறார்கள்.

அங்கம் 3 – காட்சி 4, 5

ஆன் பேஜ், பென்டனுடன் வீட்டிற்கு வெளியே பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் உண்மையில் பென்டனைத்தான் விரும்புகிறாள் என்று நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் தன்னுடைய தந்தை சிலண்டரைத் திருமணம் செய்யச் சொல்வதாகத் தெரிவிக்கிறாள். பென்டன் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தாலும், அவனிடம் பணம் இல்லை. தன்னுடைய தந்தையின் சம்மதத்தை எப்படியாவது வாங்குமாறு சொல்கிறாள்.

சிலண்டர், ஷாலோ, குயிக்லி மூவரும் வருவதைப் பார்த்து, காதலர்கள் இருவரும் மறைந்து கொள்கிறார்கள். குயிக்லி, ஆனிடம் சிலண்டர் அவளிடம் பேச விரும்புவதாகத் தெரிவிக்கிறாள். அங்கிருந்து பென்டனை அழைத்துக் கொண்டு போகிறாள். சிலண்டர் முட்டாள்தனமாக ஆனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். ஆன் வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஷாலோவும் பேஜும்தான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், தனக்குத் திருமணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை என்றும் தெரிவிக்கிறான்.

பேஜும் திருமதி பேஜும் வருகிறார்கள். அங்கே எதற்காக பென்டன் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று பேஜ் கேட்கிறார். அவனிடம் பணம் இல்லை என்றும், ஆனின் வரதட்சணை பணத்திற்காகவே அவன் காதலிப்பதாகச் சொல்லித் திரிகிறான் என்றும் கூறுகிறாள். ஆன் அவளது தாய் திருமதி பேஜிடம் தனக்கு உதவக் கேட்கிறாள். ஆனால் அவளோ மருத்துவர் கயஸ் அவளுக்குச் சரியான இணையாக இருப்பார் என்று சொல்கிறாள்.

பென்டன் குயிக்லிக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் செல்கிறான். குயிக்லி தான் மூன்று காதலர்களையும் ஏமாற்றுவதைப் பற்றி யோசிக்கிறாள். ஆனால் அவள் திருமதி பேஜ் மற்றும் திருமதி போர்ட் சார்பில் பால்ஸ்டாப்பைக் காண செல்ல வேண்டும்.

சொட்டச் சொட்ட நனைந்தபடி பால்ஸ்டாப் மதுவிடுதிக்குள் நுழைகிறான். மது அருந்திக்கொண்டே, தன்னுடைய கெட்ட நேரத்தை நொந்து கொள்கிறான். அப்போது குயிக்லி வருகிறாள். வேலையாட்கள் திருமதி போர்டின் கட்டளையைச் சரியாகக் கேட்காமல் அவனை தேம்ஸ் நதியில் போட்டுவிட்டார்கள் என்று தெரிவிக்கிறாள். அன்று மாலை எட்டு மணிக்கு மீண்டும் திருமதி போர்ட் அவனை வரச்சொல்லி இருப்பதாகத் தெரிவிக்கிறாள். மீண்டும் உற்சாகமாக பால்ஸ்டாப் தயாராகிவிடுகிறான்.

புரூக் மாறுவேடத்தில் போர்ட் உள்ளே வருகிறார். அன்று நடந்தவற்றைப் பற்றி பால்ஸ்டாப்பிடம் கேட்கிறான். பால்ஸ்டாப்பும் தான் திருமதி போர்டிடம் பேச ஆரம்பித்த நேரத்தில் அவளது கணவன் வந்துவிட்டதால், தான் ஒரு கூடையில் அமர்ந்து தப்பித்து வந்துவிட்டதாகத் தெரிவிக்கிறான். ஆற்றில் போராடி தப்பித்து வந்ததாக நீண்ட கதையைச் சொல்கிறான். தான் சென்ற நேரத்தில் அங்கே பால்ஸ்டாப் இருந்திருக்கிறான் என்பது புரூக்குக்கு (போர்ட்) ஆச்சரியத்தைத் தருகிறது. மறுபடியும் அன்று மாலையே திருமதி போர்டைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்துவிட்டுச் செல்கிறான். மிகுந்த கோபமும் ஆத்திரமும் கொண்ட போர்ட், இந்த முறை பால்ஸ்டாப்பைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்கிறான்.

அங்கம் 4 – காட்சி 1, 2

திருமதி பேஜ், அவளது மகன், குயிக்லி மூவரும் நுழைகிறார்கள். பால்ஸ்டாப் திருமதி போர்டின் வீட்டிற்கு வந்திருப்பானா என்று திருமதி பேஜ் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது பள்ளி ஆசிரியர் எவன்ஸ் அங்கே வருகிறார். அவர் திருமதி பேஜின் மகனிடம் கேள்விகள் கேட்கிறார்.

திருமதி போர்டின் வீட்டிற்குப் பால்ஸ்டாப் மீண்டும் வந்து சேருகிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே, திருமதி பேஜ் வருகிறாள். பால்ஸ்டாப் மறைந்து கொள்கிறான். திருமதி போர்ட் தனியாக இருக்கிறாளா என்று கேட்கிறாள். அவளும் ஆமாம் என்று சொல்ல, திருமதி போர்டின் கணவன் கோபமாக வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறாள். திருமதி போர்ட் பால்ஸ்டாப் வந்திருப்பதைச் சொல்லி, என்ன செய்வது என்று யோசிக்கிறாள். அங்கே வரும் பால்ஸ்டாப், தான் மீண்டும் கூடைக்குள் ஒளியமுடியாது என்று தெரிவிக்கிறான். தன்னுடைய வயதான அத்தையின் உடைகள் இருப்பதாகவும், அதை அணிந்து கொண்டு வெளியே செல்லலாம் என்றும் திருமதி போர்ட் சொல்லுகிறாள்.

பால்ஸ்டாப் உடையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய அத்தையைப் போர்டிற்குப் பிடிக்காது என்றும், அவளைப் பார்த்தால் அடித்துத் துரத்தவேண்டும் என்று அவர் சொன்னதாகவும் திருமதி போர்ட் கூறுகிறாள். எனவே மாறுவேடத்தில் இருக்கும் பால்ஸ்டாப்பை போர்ட் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும் என்றும் கூறுகிறாள். உண்மையிலேயே போர்ட் அங்கே வருவதாக திருமதி பேஜ் தெரிவிக்கிறாள். போர்டை முட்டாளாக்க மீண்டும் ஒரு முறை அழுக்குத்துணிக் கூடையை வெளியே கொண்டு செல்வது போல நடிக்கலாம் என்றும் திருமதி போர்ட் தெரிவிக்கிறாள்.

அப்போது போர்ட், பேஜ், கயஸ், ஷாலோ, எவன்ஸ் முதலியோர் நுழைகிறார்கள். வேலையாட்கள் அப்போது அழுக்குத்துணிக் கூடையை வெளியே எடுத்துச் செல்ல முயலவே, போர்ட் அவர்களை நிறுத்தி, கூடையைத் திறந்து சோதனை இடுகிறார். தன்னைக் காரணமின்றிச் சந்தேகப்படுவதாகத் திருமதி போர்ட் கூறுகிறாள். மற்றவர்களும் போர்ட் பொறாமையின் காரணமாகவே அப்படி நடப்பதாகச் சொல்கிறார்கள்.

திருமதி பேஜும் பெண் வேடத்தில் இருக்கும் பால்ஸ்டாப்பும் வருகிறார்கள். கடுமையான கோபத்தில் இருக்கும் போர்ட், பெண் வேடத்தில் இருக்கும் பால்ஸ்டாப்பை, திருமதி போர்டின் அத்தை என்று நினைத்து அடித்துத் துவைக்கிறார். பால்ஸ்டாப் அங்கிருந்து ஓடிவிடுகிறான். அப்போதுதான் எவன்ஸ் அவளுக்குப் பெரிய தாடி இருந்ததாகத் தெரிவிக்கிறான். அப்போதுதான் போர்ட் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, அனைவரும் வெளியே செல்கிறார்கள்.

திருமதி பேஜும் திருமதி போர்டும் தங்களது திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். தங்களது கணவர்களிடம் உண்மையைத் தெரிவிக்கலாமா என்று யோசிக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பால்ஸ்டாப்பை அனைவரின் முன்பாகவும் அவமானப்படுத்தினால் மட்டுமே அவன் திருந்துவான் என்று முடிவு செய்கிறார்கள்.

அங்கம் 4 – காட்சி 3, 4

மதுவிடுதியில், பார்டோல்ப் மூன்று ஜெர்மானியர்கள் குதிரைகள் வாடகைக்குக் கேட்பதாகச் சொல்லி, உரிமையாளரின் மூன்று குதிரைகளை வாங்கிக் கொடுக்கிறான்.

போர்டின் வீட்டில், போர்ட், பேஜ், திருமதி போர்ட், திருமதி பேஜ், எவன்ஸ் முதலியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா உண்மைகளையும் திருமதி போர்ட் தெரிவித்துவிடுகிறார். போர்ட் தனது மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறார். ஆனால் தங்களது விளையாட்டை இப்போது நிறுத்தக்கூடாது என்றும், பால்ஸ்டாப்பைப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்த வேண்டும் என்றும் பேஜ் கூறுகிறார்.

திருமதி பேஜ் நகருக்கு வெளியில் இருக்கும் ஓக் மரத்தை பற்றிச் சொல்கிறாள். அங்கு ஹெர்னே என்ற வேட்டைக்காரனின் ஆவி சுற்றுவதாக நகரில் அனைவரும் பயப்படுவார்கள் என்பதால், பால்ஸ்டாப்பை அங்கே ஹெர்னேவின் வேடத்தில் வர சொல்லலாம். வந்தவுடன், குழந்தைகளை எல்லாம் பல தேவதைகள், ஆவிகள் போல வேடமிட்டு அங்கே அவனைப் பயமுறுத்தி, பால்ஸ்டாப்பின் நோக்கத்தை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும், அதன் மூலம் வின்ட்சர் நகரம் முழுவதும் அவனைக் கண்டு சிரிக்க வேண்டும் என்றும் கூறுகிறாள்.

புரூக் வேடத்தில் சென்று பால்ஸ்டாப், திருமதி போர்டின் மூன்றாவது அழைப்பை ஏற்றுக் கொள்கிறானா என்று பார்க்கப் போவதாகத் தெரிவிக்கிறான் போர்ட். எவன்ஸ் அனைவருக்கும் மாறுவேடமிட உடைகளைத் தயார் செய்யப் போகிறார்.

பால்ஸ்டாப்பின் அறையில் ஒரு வயதான பெண்மணி நுழைந்ததைப் பார்த்ததாக மதுவிடுதி உரிமையாளரும் சிம்பிலும் பேசிக் கொண்டிருந்தார்கள். பால்ஸ்டாப்பின் அறையில் யாரோ திருட முயல்கிறார்கள் என்று அங்கே சென்று பார்த்தால், பால்ஸ்டாப் வருத்தமாக இருக்கிறார். ஆனால் பால்ஸ்டாப் அவர்களது எந்தக் கல்விக்கும் சரியான பதில் சொல்லவில்லை.

அப்போது நுழையும் பார்டோல்ப், ஜெர்மானியர்கள் குதிரைகளோடு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கிறான். அப்போது நுழையும் எவன்ஸ், நகருக்குள் சில ஜெர்மானியர்கள் குதிரைகளைத் திருடுவதாகத் தெரிவிக்கிறான். கயசும் அங்கே வந்து அப்படியே தெரிவிக்கிறான். தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாக மதுக்கடை உரிமையாளர் உணர்கிறார்.

அப்போது வரும் குயிக்லி, திருமதி போர்டும் அடிக்கப்பட்டதாகக் கூறி, திருமதி போர்டும், திருமதி பேஜும் பால்ஸ்டாப்பிற்குச் செய்தி அனுப்பியிருப்பதாகத் தெரிவிக்கிறாள்.

வெளியே மதுக்கடை உரிமையாளரும் பென்டனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தான் ஆன் பேஜைக் காதலிப்பதாகத் தெரிவித்துத் தனக்கு அவளிடம் இருந்து கடிதம் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அவளது தந்தை அவளை வெள்ளை உடையில் தேவதைபோல வேடமிட்டு, பால்ஸ்டாப்பை அவமானப்படுத்த நடக்கப் போகும் நாடகத்தின் நடுவே, சிலண்டருடன் ஓடிவிடச் சொல்லியிருப்பதாகவும், அவளது தாய் அது போலவே பச்சை ஆடையணிந்து தன்னை கயசுடன் ஓடிப்போகச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்திருப்பதாக பென்டன் சொன்னான். மதுக்கடை உரிமையாளர் அவள் யாரை ஏமாற்ற போகிறாள் என்று கேட்கிறான். பென்டன் இருவரையும் ஏமாற்றிவிட்டு, அவன் தன்னைத் திருமணம் செய்யப் போவதாகத் தெரிவிக்கிறான்.

அங்கம் 5 – காட்சி 1-5

மதுவிடுதியில் பால்ஸ்டாப் குயிக்லியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். மூன்றாவது முறையாகத் தான் திருமதி போர்டைப் பார்க்க போவதாகவும், இந்த முறையாவது எல்லாம் சரியாக நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். குயிக்லி அங்கிருந்து கிளம்பியவுடன், புரூக் வருகிறான். முந்தைய தினம் நடந்ததைப் பற்றிக் கேட்கிறான். முந்தைய தினம் தான் பெண்வேடமணிய நேர்ந்ததாகத் தெரிவிக்கிறான்.

பேஜ், சிலண்டர், ஷாலோ ஆகியோர் அன்றைய மாலை நிகழ்வுகளுக்குத் தயாராகின்றனர். சிலண்டரிடம் தந்தையை மகள் வெள்ளை உடை அணிந்திருப்பாள் என்று பேஜ் தெரிவிக்கிறார். திருமதி பேஜ், திருமதி போர்ட், கயஸ் ஆகியோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய மகள் பச்சை ஆடை அணிந்து வருவாள் என்று திருமதி போர்ட் கூறுகிறாள். அனைவரும் ஓக் மரத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

பால்ஸ்டாப்பும் வேட்டைக்காரன் ஹெர்னே வேடத்தில் ஓக் மரத்திற்கு அருகில் வருகிறான். தலையில் பெரிய கொம்புகளும் கூட வைத்திருக்கிறான். அங்கே திருமதி போர்டும், திருமதி பேஜும் வருகிறார்கள். பால்ஸ்டாப் திருமதி போர்டை கட்டி அணைக்கிறான். அப்போது வேறு சத்தம் கேட்கவே, பெண்கள் இருவரும் ஓடுகிறார்கள். எவன்ஸ் வேடமிட்டு இருக்கும் குழந்தைகளுடன் வருகிறார். குயிக்லி தேவதைகளின் ராணி போலவும், தேவதை போல ஆன் பேஜும் கூட இருக்கிறார்கள். அனைவரும் போடும் சத்தத்தில் பயந்த பால்ஸ்டாப், தரையில் குப்புறப் படுத்து முகத்தை மூடிக் கொள்கிறான்.

அங்கே யாரோ மனிதனின் வாடை அடிப்பதாக எவன்ஸ் சொல்கிறார். கீழே கிடக்கும் பால்ஸ்டாப்பை பார்த்து, குயிக்லி அவனை எரிக்க வேண்டும் என்றும், அவன் எரிந்தால் அவன் கெட்டவன் என்றும் கூறினாள். மெழுகுவர்த்தியைக் கொண்டு அவனை எரிக்க முயல்கிறாள். அவன் உடைகள் எரிய ஆரம்பிக்கவே, அவனைக் கெட்டவன் என்று அறிவிக்கிறாள். குழந்தைகள் பால்ஸ்டாப்பைக் கிள்ளுகின்றன.

கயஸ் அவர்களில் வெள்ளை ஆடை அணிந்த பையன் ஒருவனுடனும், சிலண்டர் பச்சை ஆடை அணிந்த ஒருவனுடன் அங்கிருந்து ஓடுகிறார்கள். பென்டன் மற்றும் ஆன் இன்னொரு புறமாக ஓடுகிறார்கள். குழந்தைகளும் அங்கிருந்து ஓடி விடுகிறார்கள். பால்ஸ்டாப் எழ முயற்சிக்கிறான். அப்போது போர்ட், பேஜ், அவர்களது மனைவிகள் அங்கே வருகிறார்கள். புரூக்காக நானே வந்தேன் என்று போர்ட் தெரிவிக்கிறான். தன்னை அனைவரும் முட்டாளாக்கிவிட்டார்கள் என்று பால்ஸ்டாப்பிற்குப் புரிகிறது. தான் தோற்றுவிட்டதாக பால்ஸ்டாப் ஒப்புக் கொள்கிறான். அவன் வின்ட்சர் நகருக்கு வந்து, அவர்களது செலவுகளை எல்லாம் திரும்பத் தரவேண்டும் என்று போர்ட் தெரிவிக்கிறார்.

அன்று மாலை தன்னுடைய மகளின் திருமண விருந்திற்கு அனைவரையும் பேஜ் அழைக்கிறார். அப்போது வரும் சிலண்டர், தான் ஒரு சிறுவனைக் கிட்டத்தட்ட திருமணம் செய்துவிட்டதாகக் கோபமாகத் தெரிவிக்கிறான். கயஸ் அதே நேரத்தில் வந்து, தான் ஒரு பையனைத் திருமணம் செய்துவிட்டதாகத் தெரிவிக்கிறான். பேஜ் அவர்களை முட்டாள்கள் என்று திட்டுகிறார். ஆன் எங்கே போனாள் என்று அவர்கள் யோசிக்கிறார்கள்.

பென்டன் ஆனுடன் வருகிறான். அவள் விரும்பாத நபர்களை அவளுக்குத் திருமணம் செய்ய முயற்சித்ததற்குப் பென்டன் அவர்களைக் கடிந்து கொள்கிறான். போர்டும் அவர்கள் காதலை மதிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். பேஜ் பென்டனைக் கட்டி அணைத்துக் கொள்கிறார். அனைவரும் மாலை விருந்திற்குப் பேஜின் வீட்டிற்குச் செல்கின்றனர். போர்ட் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். பால்ஸ்டாப் தனக்கு அவமானம் கொடுக்க வேண்டிய நிகழ்வு பலருக்கு மகிழ்ச்சியான நிகழ்வாக ஆனதற்காக மகிழ்கிறான்.

0

வின்ட்சரின் மனைவிகள் – அலசல்

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாக பிரெடெரிக் எங்கெல்ஸ் இந்நாடகத்தைக் கூறுகிறார். அப்போதுஇங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தையும், அவர்களின் வாழ்வையும் காட்டியதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாடகம் முழுவதும் அதன் கதாபாத்திரங்களின் வேடிக்கையான ஆனால் சரியான நடத்தையை மையமாகக் கொண்டே நடக்கிறது. நாடகத்தின் ஓரிடத்தில் சொல்வது போல மனைவிகள் உண்மையாக மட்டுமில்லாமல், விளையாட்டுத்தனமாகவும் மகிழ்ச்சியுடனும்கூட இருக்கலாம் என்பதுதான் நாடகத்தின் மைய கருத்தாக இருக்கிறது. அவர்கள் அதற்காகத் தங்களது கடமைகளை மறந்துவிடுவதில்லை. பேஜ் தன்னுடைய மனைவியை முழுவதுமாக நம்புகிறார். போர்ட் தன்னுடைய சந்தேகத்தால் தன்னையும் வருத்தி, மற்றவர்களையும் வருந்துகிறார். நல்ல கணவனின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஷேக்ஸ்பியர் காட்டுவதாகக்கூட எண்ணலாம்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஓரளவிற்கு அன்றைய சமூகச்சூழலைச் சரியாக எடுத்துக்காட்டிய நாடகம் இதுவாகும். பென்டன் பெரியக் குடும்பத்து பையன் என்றாலும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பேஜ் அவனை நிராகரிக்கிறார். தன்னுடைய பணத்தை எண்ணியே அவன் காதலிப்பதாக நடிக்கிறான் என்று அவர் நினைக்கிறார். இறுதியில் பென்டன், ஆன் திருமணம் ஒருவிதத்தில் இந்த இடைவெளியை நிரப்பி விடுகிறது.

அதே நேரத்தில், நாடகத்தின் தலைப்பே பெண்களை முதன்மையாகக் கொண்ட நாடகம் என்று தெரிவிக்கிறது. திருமதி பேஜும் திருமதி போர்டும் தங்களுக்கே உரிய முறையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வேடிக்கை விளையாட்டுகளை நடத்துகிறார்கள். ஆனால் எதற்காக? அவர்கள் என்ன சாதிக்கிறார்கள்? போர்டின் பொறாமை விலகுகிறது. பால்ஸ்டாப்பைப் பழி வாங்குகிறார்கள். அவர்களது சுதந்திரம் அவர்களது கணவர்களின் சமூக நிலையில் இருந்தும், செல்வத்தில் இருந்தும் தோன்றுகிறது. உண்மையில் இங்கே சுதந்திரமாக இருக்கும் பெண் ஆன் மட்டுமே. தனக்கு விருப்பமானவனை அவள் பல்வேறு தடைகளுக்கு இடையில் திருமணம் செய்து கொள்கிறாள்.

ஷேக்ஸ்பியரின் காலத்தில் பெண்கள் நாடகங்களில் நடிப்பதில்லை. ஆண்களே பெண் வேடத்தில் நடித்தார்கள். எனவே நாடகத்தின் இறுதியில் சிலண்டரும், கயசும் மட்டுமல்ல, பென்டனும் கூடப் பெண் வேடமிட்டிருந்த ஆணையே திருமணம் செய்தார்கள். ஒருவிதத்தில் ஷேக்ஸ்பியர் அப்போதைய நாடக வரைமுறையையே கேலி செய்கிறார் என்று சொல்லலாம். கதை முழுவதும் பல விதங்களில் நடக்கும் பெண்/ஆண் மாற்றங்களும் இத்தகைய கேலியாகவே தெரிகிறது.

பால்ஸ்டாப்பை அவமானப்படுத்துவதற்காக ஆரம்பித்த திட்டம் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தோல்வியில் முடிகிறது. ஆனின் திருமணத்தில் தங்களது விருப்பம் நிறைவேறாமல் போனதால், பேஜும் அவமானப்படுகிறார். தனது மனைவியைச் சந்தேகப்பட்டு இரண்டு முறை போர்டும் அவமானப்படுகிறார். ஒருவிதத்தில் அனைவரும் சரிசமமாக ஆகி விடுகிறார்கள். பால்ஸ்டாப்பும் கூடத் திருமண விருந்திற்குச் செல்கிறார். ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடுகின்றன.

ஆனாலும் ‘வின்ட்சரின் மனைவிகள்’ இலக்கிய மதிப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் உயரமான இடத்தில் இருப்பதாக ஷேக்ஸ்பியரிய அறிஞர்கள் கருதுவதில்லை. அவரது வரலாற்று நாடகங்களில் இருக்கும் பால்ஸ்டாப்பின் நகைச்சுவைப் பகுதிகளோடு பார்க்கும்போது, இதில் இருக்கும் பால்ஸ்டாப்பின் பகுதிகள் சற்று மாற்று குறைந்ததாகவே சொல்லப்படுகிறது. இதற்கு ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தை மிகவும் அவசரமாக எழுதியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

(தொடரும்)

படம்: ‘The Merry Wives of Windsor’, Act IV, Scene 1 – Royal Shakespeare Company Collection

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *