Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

Measure for Measure

அறிமுகம்

‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.’ – மத்தேயு 7:1-2, வேதாகமம்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நகைச்சுவை, சோக நாடகங்கள் என்று பிரிக்கலாம் என்று பார்த்தோம். ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகங்களை எழுதும்போதே, அவை நகைச்சுவை நாடகமா, சோக நாடகமா, வரலாறா என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இங்கே ஒரு நாடகம் நகைச்சுவையா அல்லது சோகமான நாடகமா என்பதற்கான அளவீடு என்ன? என்ற கேள்வி எழும். நகைச்சுவை என்பதற்கான கூறுகள் ஓரளவிற்கு உலகம் முழுவதும் ஒன்று போலவே இருந்தாலும், ஒவ்வொரு கலாசாரத்திலும் சிறு வேறுபாடுகளும், அந்தக் கலாசார விழுமியங்களின் அடிப்படையிலான மாறுதல்களும் இருப்பது இயல்புதான்.

பொதுவாக ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களில் வார்த்தை விளையாட்டுகள், வேடிக்கையான நிகழ்வுகள், முரண்கள் போன்றவை நிரம்பியிருக்கும். மாறுவேடமிடுவது, தவறாகப் புரிந்துகொள்வது ஆகியவையும் அடிக்கடி நிகழும். நாடகத்தின் கரு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல இருக்கும். சில நேரங்களில் கதையைத் தொடர்வதும்கூடச் சவாலாகவே இருக்கும். கதையின் முடிவும் எதிர்ப்பாராத விதத்தில், எதிர்பார்த்த முடிவு முன்பே திட்டமிட்டது போல எட்டப்படும்.

ஒவ்வொரு கதையிலும் மேலே சொன்னவற்றில் சில விஷயங்களோ, அனைத்துமோ இருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு நாடகத்தையும் அதன் கதையையும், அதில் நிகழும் நிகழ்வுகளையும் வைத்து மட்டுமே அளவிட முடியும். நகைச்சுவை என்பது நாடகத் தயாரிப்பு, நடிகர்களின் நடிப்பு போன்ற பிரதிக்கு வெளியிலான விஷயங்களாலும்கூட நிர்ணயிக்கப்படும்.

ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களிலேயே மிகவும் பிரச்சினைக்குரிய ‘நகைச்சுவை’ நாடகமாக ‘நியாயத் தராசு’ (Measure for Measure) பார்க்கப்படுகிறது. ‘ஷேக்ஸ்பியரிய நாடகங்களின் மகிழ்ச்சியைக் கொல்லக்கூடியது’ என்று 19ஆம் நூற்றாண்டு கவிஞரான காலரிட்ஜ் இந்த நாடகத்தை விவரிக்கிறார். தொடர்ச்சியாக எதிர்மறையான விமர்சனங்களைப் பலரும் வைத்திருக்கின்றனர். இத்தகைய எதிர்மறை விமர்சனங்களுக்கு முக்கியக் காரணமாகக் கருதுவது, இதை நகைச்சுவை நாடகமாக வகைப்படுத்தியுள்ளதுதான்.

Measure for Measure என்ற நாடகத்தின் தலைப்பு இயேசுவின் மலைப்பிரசாங்கத்தில் வரும் வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் பிறருக்குச் செய்ய எண்ணுவதுதான் நமக்கு நடக்கும் என்ற அர்த்தத்திலேயே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாடகத்திலும் அப்படியே நடக்கிறது.

நாம் மேலே பார்த்த பல நகைச்சுவைக் கூறுகளை இந்நாடகத்தில் காணமுடியும் என்றாலும் இங்கே ஷேக்ஸ்பியர் ஒழுக்கம், மதம் போன்றவற்றின் விழுமியங்களை எடுத்துக்கொண்டு அவற்றை விமர்சிக்கவும் முயல்கிறார். ஏனைய நாடகங்களைப் போல அல்லாமல், இந்த ஒழுக்கப் போதனைகளும் நாடகத்தை நகைச்சுவையாகப் பார்ப்பதற்குத் தடையாகி விடுகிறது எனலாம்.

பொதுவாக ஒரு நகைச்சுவை நாடகத்தில் சோக நிகழ்வுகள் இருக்கக்கூடாது. இங்கே தவிர்க்கமுடியாத நிலையில் சில சோக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கதையின் முக்கியப்பாத்திரங்கள் தப்பித்தாலும், மரணம் நிகழத்தான் செய்கிறது. இது போன்ற நிகழ்வுகள் ஷேக்ஸ்பியரின் வேறு நகைச்சுவை நாடகங்களிலும் இருந்தாலும், இங்கே அவை நாடகத்தின் அடிப்படை மனநிலையைப் பாதிக்கிறது.

மேலும் நாடகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒருமுறை அதன் சுருக்கத்தை வாசித்துவிடுவது, நம்முடைய அலசலை இன்னமும் அர்த்தமுள்ளதாக மாற்றும்.

0

அங்கம் 1 – காட்சி 1,2

அரசியல் பயணம் செல்லவிருப்பதால், தான் திரும்ப வரும் வரை நகரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏஞ்சலோ பிரபுவிடம் கொடுக்கிறார் வியன்னாவின் வின்சென்டியோ பிரபு. முதலில் மறுத்தாலும், ஏஞ்சலோ பிரபு பின்னர் ஏற்றுக் கொள்கிறார்.

வியன்னாவின் மற்றொரு பகுதியில் லூசியோ, இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான். வியன்னா நகரப் பிரபு, ஹங்கேரி செல்வதைக் குறித்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். லூசியோவின் நண்பர்கள் அமைதி பேச்சை விரும்பவில்லை. லூசியோ அவர்களை இறைவனின் பத்துக் கட்டளைகளுடன் கொள்ளையடிக்கப் போகும் கொள்ளையர்களுடன் ஒப்பிடுகிறார். எப்படிக் கொள்ளையர்களால் ‘திருடக்கூடாது’ என்ற கடவுளின் கட்டளையை ஏற்று நடக்க முடியாதோ, அப்படியே போர் வீரர்களால் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது என்று பேசிக் கொள்கிறார்கள்.

அத்துடன் நகருக்குள் பரவிவரும் பாலுறவு நோய்களைப் பற்றியும் அவர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது திருமதி ஓவர்டன் வருகிறாள். ஜூலியட்டைக் கர்ப்பமாக்கியதற்காக கிளாடியோ கைது செய்யப்பட்டுச் சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார். லூசியோவும் நண்பர்களும் மேலும் விவரம் சேகரிக்கச் செல்கிறார்கள்.

அப்போது அங்கே கோமாளி பாம்பே வருகிறான். திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டதற்காகவே கிளாடியோவைக் கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அத்துடன் வியன்னா நகரின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் பாலியல் விடுதிகள் அனைத்தையும் மூடச் சொல்லி உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறான். ஆனால் நகருக்குள் இருக்கும் விடுதிகள் எல்லாம் இயங்கும் என்றும் தெரிவிக்கிறான். திருமதி ஓவர்டன் தன்னுடைய ‘தொழிலை’ எண்ணி பயப்படுகிறாள். கோமாளி அவளுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று கூறுகிறான். அப்போது கிளாடியோவைக் கைது செய்து அழைத்து வருகிறார்கள்.

தன்னை எதற்காகச் சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று கிளாடியோ தன்னைக் கைது செல்லும் அதிகாரியைக் கேட்கிறான். தான் ஏஞ்சலோ பிரபுவின் கட்டளைப்படியே நடப்பதாகச் சொல்கிறான். அங்கே வரும் லூசியோ, கிளாடியோவிடம் கைதிற்கான காரணத்தைக் கேட்கிறான். கிளாடியோ பதில் சொல்லத் தயங்குகிறான். லூசியோ ஒவ்வொரு காரணமாகக் கேட்கிறான். இறுதியில் சிற்றின்ப நடத்தை என்று கேட்கும்போது, கிளாடியோ ஒப்புக் கொள்கிறான்.

ஆனால் தான் ஜூலியட்டைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்பியதாகவும், ஆனால் ஜூலியட்டின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாததால், இருவரும் காத்திருக்க முடிவு செய்ததாகவும், அப்போது தங்களுக்கிடையிலான ‘விளையாட்டில்’ ஜூலியட் கருவுற்றதாகவும் தெரிவிக்கிறான். தீடீரென்று நகர அதிகாரிகள் அதைக் குற்றமென்று கைது செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறான்.

எதற்காக ஏஞ்சலோ பிரபு இப்படிக் கடுமையாகச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கிளாடியோ யோசிக்கிறான். ஒருவேளை தானே அதிகாரத்தைக் கைப்பற்ற முயலலாம் என்றும் சொல்கிறான். வியன்னா பிரபுவிடம் முறையிடலாம் என்று லூசியோ யோசனை கூறுகிறான். ஆனால் வின்சென்டியோ பிரபு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று சொல்லும் கிளாடியோ, தன்னுடைய சகோதரி இசபெல்லா கன்னியாஸ்திரி மடத்தில் இருப்பதாகவும், அவளை ஏஞ்சலோ பிரபுவைப் பார்த்து முறையிட சொல்வதாகவும் தெரிவிக்கிறான்.

அங்கம் 1 – காட்சி 3,4

வின்சென்டியோ பிரபு அருகில் இருக்கும் மடம் ஒன்றில், அங்கிருக்கும் பாதிரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அனைவரிடமும் சொன்னதுபோல தான் ஹங்கேரி செல்லவில்லை என்றும், மாறாக மாறுவேடமிட்டு நகரின் சட்ட, ஒழுங்கைச் சோதனை செய்யப் போவதாகவும் தெரிவிக்கிறார். அவருடைய ஆட்சியில் சட்டம் பயமுறுத்த மட்டுமே பயன்பட்டது என்றும், அதைச் சரியாக அதிகாரிகள் அமுல்படுத்தாதால் மக்களுக்கு எந்தப் பயமும் இல்லாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார். மக்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் அது தங்களது அதிகாரத்தை இல்லாமல் ஆக்கிவிடும் என்றும் தெரிவிக்கிறார். எனவே பொறுப்பை ஏஞ்சலோ பிரபுவிடம் கொடுத்துவிட்டு, தான் மறுவேடமிட்டு அவரது ஆட்சி நடத்தும் விதத்தைப் பார்க்கப் போவதாகத் தெரிவிக்கிறார். அதற்கு மாறுவேடமிட தனக்குப் பாதிரி உடை ஒன்று வேண்டும் என்று கேட்கிறார்.

கன்னியாஸ்திரி மடத்தில் இசபெல்லா உறுதியேற்கும் நிகழ்வு ஆரம்பிக்க இருக்கிறது. அப்போது மடத்தின் வாசலில் ஒருவன் வந்திருப்பதாகவும், அவன் இசபெல்லாவைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்னமும் இசபெல்லா கன்னியாஸ்திரியாக ஆகவில்லை என்பதால், அவள் இன்னமும் ஆண்களிடம் பேசலாம் என்று அனுப்புகிறார்கள். வெளியே லூசியோ, இசபெல்லாவிடம் நடந்ததை எல்லாம் தெரிவிக்கிறான்.

தன்னுடைய சகோதரன் அப்படியான காரியத்தைச் செய்திருக்கமாட்டான் என்று இசபெல்லா தெரிவிக்கிறாள். லூசியோ, அவளது தோழி ஜூலியட்தான் கர்ப்பமாக இருப்பது என்றும் தெரிவிக்கிறான். அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்குள் கைது செய்து விட்டதாகவும், கிளாடியோவைத் தூக்கிலிடுவதன்மூலம் அனைவருக்கும் பாடம் புகட்டமுடியும் என்று ஏஞ்சலோ சொல்வதாகவும் தெரிவிக்கிறான். எனவே, அவனது சகோதரியான இசபெல்லா, ஏஞ்சலோவைச் சந்தித்து, எப்படியாவது தண்டனையை மாற்ற வேண்டும் என்றும் கேட்கிறான். உடனடியாகச் செல்கிறேன் என்கிறாள் இசபெல்லா.

அங்கம் 2 – காட்சி 1

ஏஞ்சலோ பிரபுவும் எஸ்கலேசும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘தன்னுடைய முடிவில் இருந்து எப்போதும் மாறுவதில்லை என்று ஏஞ்சலோ சொல்லிக் கொண்டிருக்கிறார். எஸ்கலஸ், சட்டம் என்பது சற்று நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றும், மிகவும் கடுமையாக இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார். ஆனால் ஏஞ்சலோ ஒப்புக்கொள்ளவில்லை. எஸ்கலஸ், கிளாடியோவின் வழக்கை உதாரணம் காட்டி, தன்னுடைய வாழ்வில் ஏஞ்சலோ அது போன்ற தவறைச் செய்ததில்லையா என்று கேட்கிறார்.

ஆசைப்படுவது வேறு, அதை நிறைவேற்றிக்கொள்வது வேறு என்கிறார் ஏஞ்சலோ. சட்டம் இயற்றுபவனே குற்றவாளியாக மாறுவதும், குற்றவாளி சட்டம் இயற்றுபவனாக மாறுவதும் இயற்கைதான் என்றும், ஆனால் சட்டம் மட்டும் மாறக்கூடாது என்றும் தெரிவிக்கிறார். தானும் தவறு செய்வதில் இருந்து விதிவிலக்கல்ல என்றும், அப்போதும் சட்டம் அதே கடுமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கிளாடியோ கொல்லப்படுவது உறுதி என்றும் சொல்கிறார்.

காவல் அதிகாரி எல்போ, கோமாளி பாம்பே மற்றும் பிராது இருவருடனும் உள்ளே நுழைகிறான். ஏஞ்சலோ விசாரிக்கிறார். மாறி மாறி தவறான வார்த்தைகளை உபயோகித்து வேடிக்கையாக விசாரணை செல்கிறது. அவர்கள் இருவரும் திருமதி ஓவர்டனின் பாலியல் விடுதியில் இருந்ததாக எல்போ தெரிவிக்கிறார். அவர்கள் இருவரும் விடுதியில் வேலை செய்வதாக ஒப்பு கொள்கிறார்கள். பாலியல் தொழில் நடத்துவது சட்டவிரோதம் என்று எஸ்கலஸ் தெரிவித்து, அவர்களை எச்சரித்து அனுப்பிவிடுகிறார்.

அங்கம் 2 – காட்சி 2,3

காவல் அதிகாரி ஒருவர் ஏஞ்சலோவிடம் கிளாடியோவிற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஜூலியட் சீக்கிரமே குழந்தை பெற்றுவிடுவாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இசபெல்லா, ஏஞ்சலோவைப் பார்க்க வந்திருப்பதாக வேலையாள் வந்து சொல்கிறான். உள்ளே வரும் இசபெல்லா, தானும் கிளாடியோவின் குற்றத்தை கண்டிப்பதாகவும், திருமணத்திற்கு முன் உடலுறவைத் தான் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறாள். அவனது குற்றத்தைக் கண்டிக்கும் அதே நேரம், அவனை மன்னிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறாள். ஆனால் ஏஞ்சலோ, குற்றத்தையும், குற்றம் செய்பவனையும் தனித்தனியே பார்க்கமுடியாது என்று தெரிவிக்கிறார். இசபெல்லாவுடன் வந்திருக்கும் லூசியோ, அவள் எளிதாக ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும், ஏஞ்சலோவின் முன் மண்டியிட்டு, இன்னமும் கெஞ்ச வேண்டும் என்றும் தெரிவிக்கிறான்.

இசபெல்லாவும் மண்டியிட்டு கெஞ்சுகிறாள். ஆனால் ஏஞ்சலோ அவளை அங்கிருந்து செல்ல சொல்கிறான். ஏஞ்சலோவைத் தொட்டு பேசி, இன்னமும் கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் பேசவேண்டும் என்று லூசியோ சொல்கிறான். இசபெல்லாவும் அப்படியே பேசிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய சொந்தம் என்றாலும் அதே தண்டனைதான் என்று ஏஞ்சலோ சொல்கிறார். ஆனாலும் இசபெல்லா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இறுதியில், தான் அதுபற்றி யோசிப்பதாகச் சொல்லி, இசபெல்லாவை மறுநாள் திரும்ப வரச்சொல்கிறார்.

என்ன வேண்டும் என்றாலும் தருகிறேன் என்கிறாள் இசபெல்லா. ஏஞ்சலோ எப்படி என்று கேட்கிறார். அவருக்காகத் தான் பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறாள். மறுநாள் காலை வந்து சந்திப்பதாகவும் சொல்கிறாள்.

இசபெல்லா அகன்றவுடன், ஏஞ்சலோ தான் அவளை நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்கிறார். அவளது சகோதரனை வாழ வைப்பது சரியானதாக இருக்குமா என்றும் யோசிக்கிறார்.

(தொடரும்)

படம்:  ‘Measure for Measure’, Act II, Scene 1  by Robert Smirke – Royal Shakespeare Company Collection

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *