Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

Measure for Measure

அங்கம் 2 – காட்சி 4

இசபெல்லா மீதான தனது ஆசைக்கும், சட்டத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ஏஞ்சலோ தனியே போராடிக் கொண்டிருக்கிறார். அப்போது இசபெல்லா உள்ளே வருகிறாள்.

தன்னுடைய முடிவை மாற்றமுடியாது என்று ஏஞ்சலோ தெரிவிக்கிறார். ஆனால் அவரது குரலில் முன்னிருந்த உறுதி இல்லை. ‘அவன் மீது படிந்திருக்கும் கறையை நீ ஏற்றுக்கொண்டால் அவனை விடுவிப்பேன் என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்கிறான். அதாவது, அவன் விடுதலைக்கு உன் கன்னித்தன்மையைக் கொடுப்பாயா என்று கேட்கிறார்.

தன்னுடைய ஆன்மாவைக் கொடுப்பதைவிடத் தன்னுடைய உடலை கொடுப்பதே மேல் என்று இசபெல்லா சொல்கிறாள். ஏஞ்சலோ இன்னமும் தெளிவாகக் கேள்வியை வைக்கிறார். அவளது சகோதரனை விடுதலை செய்ய, அவள் பாவம் செய்யத் தயாராக இருக்கிறாளா என்று கேட்கிறார்.

ஆனால், சட்டத்தைமீறி விடுதலை செய்வதையே ஏஞ்சலோ பாவம் என்று சொல்கிறார் என்று தவறாகப் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய வார்த்தைகளை அவள் வேண்டுமென்றே தவறாகப் புரிந்து கொள்வது போல நடிப்பதாக ஏஞ்சலோ தெரிவிக்கிறார். மீண்டும் ஏஞ்சலோ அவளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். கிளாடியோவைக் காப்பாற்ற அவள் இன்னொருவனுடன் உடலுறவு கொள்ளத் தயாரா என்று சொல்கிறார்.

அதற்குப் பதிலாகத் தான் மரணமடையத் தயாராக இருப்பதாக இசபெல்லா சொல்கிறாள். அப்படியென்றால் அவளது சகோதரன் மரணமடைய வேண்டியதுதான் என்று ஏஞ்சலோ சொல்கிறார். மேலும் பாவம் செய்வதைவிட இருவரும் இறந்துவிடுவது சரிதான் என்று இசபெல்லா சொல்கிறாள்.

தான் அவளைக் காதலிப்பதாக ஏஞ்சலோ தெரிவிக்கிறார். ‘என் சகோதரனும் ஜூலியட்டைக் காதலித்தான். அவனைக் கொல்லாதீர்கள்!’ என்கிறாள் இசபெல்லா. அவள் ஒப்புக்கொண்டால் அவளது சகோதரன் மரணமடையத் தேவையில்லை என்று ஏஞ்சலோ சொல்கிறார். தான் ஏஞ்சலோவின் நடத்தை பற்றி அனைவரிடமும் சொல்லப்போவதாக இசபெல்லா சொல்கிறாள்.

தன்னுடைய பதவி மற்றும் அதிகாரத்திற்கு எதிராக எவரும் இசபெல்லா சொல்வதை நம்பமாட்டார்கள் என்று ஏஞ்சலோ சொல்கிறார். எனவே தன்னுடைய ஆசைக்கு அவள் இணங்க வேண்டும், இல்லையென்றால் அவளது சகோதரன் மரணமடைவது உறுதி என்றும் சொல்கிறார். மறுநாள் அவள் தனது முடிவைச் சொல்லவேண்டும் என்றும் சொல்கிறார்.

இசபெல்லா தனியே தன்னுடைய நிலையை எண்ணிப் பார்க்கிறாள். தான் சொல்வதை யாரும் நம்பப் போவதில்லை என்று உணர்கிறாள். கிளாடியோவைப் பார்த்து தன்னுடைய நிலையைச் சொன்னால் அவனும் அப்படியே ஒப்புக் கொள்வான் என்று நினைக்கிறாள்.

அங்கம் 3 – காட்சி 1

பாதிரி போன்ற மாறுவேடத்தில் இருக்கும் வின்சென்டியோ பிரபு கிளாடியோவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். தான் மரணத்திற்குத் தயாராக இருப்பதாக கிளாடியோ சொல்கிறான். பிரபுவும் சாவதைவிட வாழ்வது கடினமானது என்று சொல்கிறார். அவரது ஆறுதலான வார்த்தைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கிறான்.

தன்னுடைய சகோதரனுடன் பேசுவதற்கு இசபெல்லா அங்கே வருகிறாள். பாதிரி வேடத்தில் இருக்கும் வின்சென்டியோ பிரபு அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக மறைவாக நின்று கொள்கிறார். தன்மீதான தீர்ப்பை மாற்றுவதற்கு எதாவது வழியிருக்கிறதா என்று கிளாடியோ கேட்கிறான். அதைக் கேட்டால் அவனது மனம் உடைந்துவிடும் என்று இசபெல்லா தெரிவிக்கிறாள். ஏஞ்சலோ அவனது தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றிவிட்டார் என்றும், ஆனால் அவன் சிறைக்கு வெளியில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் இசபெல்லா சொல்கிறாள். புரியாமல் ஏஞ்சலோ அவளிடம் விளக்கமாகச் சொல்லும்படியாகக் கேட்கிறான்.

அதனால் அவனது மானமே போய்விடும் என்று இசபெல்லா சொன்னவுடன், கிளாடியோ இன்னமும் தெளிவாகச் சொல்லும்படியாக வற்புறுத்துகிறான். அவன் மரணத்தில் இருந்து தப்பிக்க விரும்புவான் என்று தான் பயப்படுவதாக இசபெல்லா தெரிவிக்கிறாள். மரணத்தை ஏற்றுக் கொள்ளத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறான் கிளாடியோ. சிறிது நம்பிக்கையுடன் இசபெல்லா, தங்களுடைய மறைந்த தந்தையைப் போலப் பேசினான் என்று சொல்லி, ஏஞ்சலோவின் கேவலமான ஆசையை அவனிடம் சொல்கிறாள்.

கிளாடியோ ஏஞ்சலோவைக் கடுமையாகப் பேசுகிறான். அவனுக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்கவும் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் தன்னுடைய கன்னித்தன்மையை இழக்க முடியாது என்றும் இசபெல்லா கூறுகிறாள். கிளாடியோ மறுநாளே தான் மரணமடையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறான்.

கிளாடியோ ஏஞ்சலோவைப் பற்றி யோசிக்கிறான். தானே அப்படியான ஆசையை வைத்துக் கொண்டு, அவன் எப்படித் தன்னைத் தண்டிக்க முடியும் என்று யோசிக்கும் அவன், மரணம் பயங்கரமானது என்று சொல்கிறான். ஏழு பெரிய பாவங்களில் சிற்றின்பம் சாதாரணமானது என்றும் சொல்கிறான். மரணத்தைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறான்.

அந்தப் பயத்திலேயே இசபெல்லாவை, ஏஞ்சலோவின் ஆசைக்கு இணங்க சொல்கிறான். ஓர் உயிரைக் காப்பாற்ற பாவம் செய்யலாம் என்றும் சொல்கிறான். இசபெல்லா கோபமடைகிறாள். அவனைக் கோழை என்றழைத்து, தன் சகோதரியின் அவமானத்தில் இருந்து அவனது உயிரை காப்பாற்றிக் கொள்வது தகாத உறவுக்குச் சமம் என்று சொல்கிறாள். அவன் ஜூலியட்டுடன் உறவு கொண்டது விபத்து அல்ல என்றும் அவனது கெட்ட குணத்தின் பிரதிபலிப்பு என்றும் கடுமையாகப் பேசுகிறாள்.

மறைந்திருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரபு, வெளியே வந்து தான் அவர்களிடம் தனித்தனியே பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். காவல் அதிகாரி அதற்கு ஒப்புக் கொண்டவுடன், முதலில் கிளாடியோவுடன் பேசுகிறார்.

ஏஞ்சலோ இசபெல்லாவின் தூய்மையைச் சோதிக்கவே அப்படிப் பேசியிருக்க வேண்டும் என்றும், மறுநாள் அவனை விடுதலை செய்து விடுவார் என்றும் சொல்கிறார். எனவே கிளாடியோ தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

அடுத்து இசபெல்லாவுடன் பேசும் அவர், அவள் என்ன திட்டம் வைத்திருக்கிறாள் என்று கேட்கிறான். இசபெல்லா ஏஞ்சலோவின் ஆசைக்கு இணங்குவதைவிட, தன்னுடைய சகோதரன் மரணமடைவதையே தான் விரும்புவதாக இசபெல்லா சொல்கிறாள்.

வின்சென்டியோ பிரபு இப்போது அவளிடம் மரியானாவைத் தெரியுமா என்று கேட்கிறார். முன்பு ஏஞ்சலோ மரியானாவைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது என்றும், அவளது செல்வம் முழுவதும் கடலில் மூழ்கியதால், ஏஞ்சலோ அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். எனவே, இப்போது இசபெல்லா ஏஞ்சலோவின் ஆசைக்கு இணங்குவது போல நடிக்க வேண்டும். இரவில் வின்சென்டியோ பிரபு இசபெல்லாவிற்குப் பதிலாக மரியானாவை அனுப்பிவிடுவார். இசபெல்லாவின் மானத்திற்கு ஆபத்தில்லாமல், அவளது சகோதரனைக் காப்பாற்றிவிடலாம் என்று தெரிவிக்கிறார்.

அங்கம் 3 – காட்சி 2

சிறைக்கு வெளியில் இருக்கும் தெருவில் மாறுவேடத்தில் இருக்கும் வின்சென்டியோ பிரபு, காவல் அதிகாரி எல்போ, கோமாளி பாம்பேவை அழைத்து வருவதைப் பார்க்கிறார். அவன் என்ன குற்றம் செய்தான் என்று வின்சென்டியோ பிரபு கேட்கிறார். அவன் சிறு திருட்டுகள் செய்பவன் என்று எல்போ கூறுகிறான். அப்படியென்றால் அவன் சிறைக்குச் செல்வது சரிதான் என்று வின்சென்டியோ பிரபு சொல்கிறார். அப்போது லூசியோ வருகிறான்.

லூசியோவும் என்னவென்று கேட்கிறான். பாம்பே சிறைக்குச் செல்வதாகச் சொல்கிறான் எல்போ. தன்னுடைய பிணையைக் கட்ட லூசியோவை பாம்பே கேட்கிறான். லூசியோ மறுத்துவிடுகிறான்.

பாதிரி மாறுவேடத்தில் இருக்கும் பிரபுவிடம், லூசியோ வின்சென்டியோ பிரபு எங்கே இருக்கிறார் என்று கேட்கிறான். வின்சென்டியோ பிரபு தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். பிரபு இல்லாமல் ஏஞ்சலோ இன்னமும் கடுமையாகச் சட்டங்களை அமுல்படுத்துவதாக லூசியோ தெரிவிக்கிறான். பிரபு அதுதான் சரி என்று வாதிடுகிறார். பதிலுக்கு லூசியோ, ஏஞ்சலோ உடலுறவின் மூலமாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், பிரபு பெண்கள் இன்பத்தை அனுபவிப்பவர் என்பதால் அவர் மிகவும் கடுமையாகச் சட்டத்தை அமுல்படுத்தவில்லை என்று பேசுகிறான். இருவரும் கடுமையாக வாதிடுகிறார்கள். மாறுவேடத்தில் இருக்கும் பிரபு, தான் லூசியோவை பிரபுவிடம் காட்டி கொடுக்கப்போவதாகத் தெரிவிக்கிறார். ஆனால் லூசியோ தனக்குப் பயமில்லை என்று சொல்கிறான். சிறிது நேரம் பேசிவிட்டு லூசியோ சென்றுவிடுகிறான்.

எஸ்கலஸ் அப்போது திருமதி ஓவர்டன் மற்றும் காவல் அதிகாரியுடன் வருகிறார். திருமதி ஓவர்டன் பாலியல் விடுதி நடத்துவதால் அவளைக் கைது செய்யவேண்டும் என்று எஸ்கலஸ் தெரிவிக்கிறார். திருமதி ஓவர்டன், முதலில் லூசியோவைக் கைது செய்யவேண்டும் என்றும் அவன்தான் விடுதியில் கும்மாளமிட்டுவிட்டு, தன்னைக் காட்டிக் கொடுத்தது என்றும் கூறுகிறாள்.

மாறுவேடத்தில் இருக்கும் பிரபு, எஸ்கலசிடம் ஏஞ்சலோ பற்றி விசாரிக்கிறார். தான் வெளியூர்காரன் என்றும் சொல்கிறார். ஏஞ்சலோ மிகவும் நேர்மையான, கடுமையானவர் என்றும் கூறுகிறார். தான் அதை நேரில் பார்க்க விரும்புவதாக வின்சென்டியோ பிரபு தெரிவிக்கிறார். எஸ்கலஸ் சென்றவுடன், தான் ஏஞ்சலோவை முட்டாளாக்கப் போவது குறித்துத் தனியே பேசுகிறார்.

அங்கம் 4 – காட்சி 1,2

வின்சென்டியோ பிரபு மாறுவேடத்தில் மரியானாவைச் சந்திக்கிறார். அப்போது இசபெல்லா வருகிறாள். ஏஞ்சலோ தனக்கு இரண்டு சாவிகளைக் கொடுத்து, இரவில் தோட்டத்திற்கு வரச் சொல்லி இருப்பதாகத் தெரிவிக்கிறாள். அங்கிருந்து அறைக்கு வழி சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தாள். தான் தன்னுடைய வேலையாளுடன் வருவதாகச் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறாள்.

வின்சென்டியோ பிரபு இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்களது திட்டங்களை அவர்களே பேசிக் கொள்ளலாம் என்று வின்சென்டியோ பிரபு சொல்கிறார். இருவரும் தோட்டத்திற்குச் சென்று தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏஞ்சலோவின் அறையில் இருந்து வெளியே வரும் போது ‘என்னுடைய சகோதரனை நினைவில் கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு இசபெல்லா தெரிவிக்கிறாள். வின்சென்டியோ பிரபு மரியானாவிடம், அவளும் ஏஞ்சலோவும் திருமணம் செய்ய நிச்சயமாகி இருப்பதால், அவள் எந்தப் பாவமும் செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்.

வின்சென்டியோ பிரபு சிறைக்கு மீண்டும் மாறுவேடத்தில் வருகிறார். அங்கே அதிகாரி கிளாடியோ காப்பாற்றப்படுவதற்கு எதாவது வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறார். கிளாடியோவிற்கு மன்னிப்பு சிறிது நேரத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார். அப்போது வரும் வேலையாள் ஒருவர், நான்கு மணிக்கு கிளாடியோவின் மரண தண்டனையையும், மதியம் பர்னாடினின் மரண தண்டனையையும் நிறைவேற்ற ஏஞ்சலோ உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறான்.

வின்சென்டியோ பிரபு பர்னாடின் யார் என்று கேட்கிறார். அவன் ஒன்பது மாதங்களாகச் சிறையில் இருப்பதாகவும், இப்போதுதான் அவனது தண்டனை உறுதி ஆகியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். கிளாடியோவின் தண்டனையை நான்கு நாட்கள் தள்ளி வைக்கும்படியாக வின்சென்டியோ பிரபு கேட்கிறார். ஆனால், ஏஞ்சலோவின் கட்டளை தெளிவாக இருப்பதால் தன்னால் மீற முடியாது என்று அதிகாரி தெரிவிக்கிறான். கிளாடியோவிற்குப் பதிலாகப் பர்னாடினின் தண்டனையை நிறைவேற்றிவிட்டு, அவனது தலையை ஏஞ்சலோவிற்கு அனுப்பச் சொல்கிறார் பிரபு.

அங்கம் 4 – காட்சி 3,4

திருமதி ஓவர்டனின் பாலியல் விடுதிக்கு வருபவர்களில் பலரும் சிறைக்கும் வருகிறார்கள் என்று பாம்பே சொல்லிக் கொண்டிருக்கிறான்.

சிறை அதிகாரி, பர்னாடினை மரண தண்டனையை நிறைவேற்ற அழைத்து வருமாறு பாம்பேயிடம் சொல்கிறார். முந்தைய இரவு முழுவதும் தான் குடித்துக் கொண்டிருந்ததால், அன்று மரணமடைய தனக்கு விருப்பமில்லை என்று பர்னாடின் சொல்கிறான்.

அப்போது இறுதி பிரார்த்தனை செய்ய பாதிரி வேடத்தில் இருக்கும் வின்சென்டியோ பிரபு அங்கே வருகிறார். அவரிடமும் பர்னாடின் தனக்கு அன்று இறக்க விருப்பமில்லை என்று சொல்கிறான்.

அப்போது அதிகாரி, சிறையில் வெகுகாலம் இருந்த கொள்ளையன் ஒருவன் முந்தைய தினம் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார். ‘அது கடவுளே கொடுத்திருக்கும் விபத்து’ என்று சொல்லும் பிரபு, அவனது தலையை வெட்டி ஏஞ்சலோவிற்கு அனுப்பச் சொல்கிறார். அப்படியே கிளாடியோவின் தலை என்று அந்தக் கொள்ளையனின் தலை அனுப்பப்படுகிறது.

இசபெல்லா வருகிறாள். கிளாடியோ கொல்லப்பட்டுவிட்டதாக வின்சென்டியோ பிரபு சொல்கிறார். இசபெல்லா ஏஞ்சலோவைப் பார்க்க கிளம்புகிறாள். அவளைத் தடுக்கும் பிரபு, ஏஞ்சலோ அவளைப் பார்க்கமாட்டார் என்றும், அவள் வின்சென்டியோ பிரபு வரும்வரை காத்திருந்து, அவரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அவள் சென்று பீட்டர் பாதிரியை காணுமாறு, அவளுக்கு ஒரு கடிதம் கொடுக்கிறார்.

கிளாடியோவின் மரணத்திற்குத் தான் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே லூசியோ அங்கே வருகிறான். வின்சென்டியோ பிரபு வியன்னாவில் இருந்தால் கிளாடியோ இறந்திருக்க மாட்டான் என்று லூசியோ சொல்கிறான். இசபெல்லா சென்றவுடன், மீண்டும் அவன் வின்சென்டியோ பிரபு பல பெண்களிடம் இருந்த கதைகளை மாறுவேடத்தில் இருக்கும் பிரபுவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். வின்சென்டியோ பிரபு தனக்கு அதைக் கேட்பதில் விருப்பமில்லை என்று சொல்கிறார்.

அங்கம் 5 – காட்சி 1

நகருக்குத் திரும்பும் வியன்னா பிரபுவை வரவேற்க ஏஞ்சலோவும் எஸ்கலசும் நகர வாயிலில் காத்திருக்கிறார்கள். வருகை தரும் வின்சென்டியோ பிரபு அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். பீட்டர் பாதிரியுடன் அங்கே இசபெல்லா வருகிறாள். பிரபுவிடம் பேசவேண்டும் என்று சொல்லும் அவள், அவரிடம் நீதி கேட்கிறாள். அவர் ஏஞ்சலோவிடம் குறைகளைச் சொல்லும்படியாகக் கூறுகிறார். ஏஞ்சலோ நடந்ததைச் சொல்வதற்கு முயல்கிறார். இசபெல்லா அவரைக் கொலைகாரன், ஏமாற்றுக்காரன், திருடன், பெண்களின் கற்பைச் சூறையாடுபவன் என்றல்லாம் பேசுகிறாள். அவளுக்குப் பைத்தியம் என்று வின்சென்டியோ பிரபு அவளை அங்கிருந்து செல்ல சொல்கிறார்.

ஏஞ்சலோ போன்று நல்லவர்களைப் போல இருப்பவர்களும் தீயவர்களாக இருக்கலாம் என்று இசபெல்லா சொல்கிறாள். வின்சென்டியோ பிரபு அவளது கதையைச் சொல்லச் சொல்கிறார். தன்னுடைய சகோதரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், லூசியோ தன்னை ஏஞ்சலோவைப் பார்க்கச் சொன்னதாகச் சொல்கிறாள். லூசியோ ஆமோதிக்கிறான். ஏஞ்சலோ அவளது சகோதரனை விடுவிக்க, அவருடன் உடலுறவு கொள்ளச் சொன்னதையும், தான் அவ்வாறு செய்த பின்னரும் அவர் தன்னுடைய சகோதரனைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறாள். ஏஞ்சலோ அவ்வாறு நடந்து கொள்வது நம்ப முடியாததாக இருக்கிறது என்றும், அவளுக்கு வேறு சாட்சிகள் இருக்கிறார்களா என்றும் கேட்கிறார்.

இசபெல்லா தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறாள். வின்சென்டியோ பிரபு அவளை அங்கே அனுப்பியது யார் என்று கேட்கிறார். தன்னை லோடோவிக் பாதிரி (மாறுவேடத்தில் இருந்த பிரபு) அனுப்பியதாகச் சொல்கிறாள். வின்சென்டியோ பிரபு தான் அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார். லூசியோ அந்தப் பாதிரி ஒரு போக்கிரி என்றும், அவர் பிரபுவைப் பற்றி மோசமாகப் பேசினார் என்றும் கூறுகிறார். பீட்டர் பாதிரி, அவர் நல்லவர் என்று சொல்கிறார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லுகிறார். வின்சென்டியோ பிரபு இசபெல்லாவைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறார்.

மரியானா முகத்தை மூடிக் கொண்டு நுழைகிறாள். வின்சென்டியோ பிரபு அவளது முகத்தைக் காட்டச் சொல்கிறார். தன்னுடைய கணவர் சொன்னால் மட்டுமே முகத்தைக் காட்டுவேன் என்கிறாள். அவளுக்குத் திருமணமாகிவிட்டதா என்று வின்சென்டியோ பிரபு கேட்கிறார். இல்லை என்கிறாள். அவளுக்கு ஒன்று பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அவள் கைம்பெண்ணாக இருக்க வேண்டும் என்று வின்சென்டியோ பிரபு சொல்கிறார். இரண்டுமில்லை என்கிறாள். அவளிடம் விளக்கம் கேட்கிறார். தனக்குத் திருமணமாகவில்லை என்றாலும், தனக்கு நிச்சயம் செய்த மனிதருடன் உடலுறவு கொண்டதால் தான் அப்படிச் சொன்னதாகத் தெரிவிக்கிறாள். ஏஞ்சலோ மீதான வழக்கில் அவள் சாட்சியாக இருக்கமுடியாது என்கிறார் பிரபு. அவளோ ஏஞ்சலோதான் தன்னுடைய கணவன் என்கிறாள்.

துணியை விலக்கி முகத்தைக் காட்டுகிறாள். ஏஞ்சலோ தனக்கும் அவளுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் நிச்சயம் நடைபெற்றதாகவும், ஆனால் அதற்குப் பின் தான் அவளைப் பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார். மரியானா இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடன் உறவு கொண்டதாகத் தெரிவிக்கிறாள். ஏஞ்சலோ மறுக்கிறார். இரண்டு பெண்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது என்கிறார். இதைத் தீர்க்க லோடோவிக் பாதிரி (மாறுவேடத்தில் இருக்கும் பிரபு) வர வேண்டும் என்று அவரை அழைத்துவர ஆட்களை அனுப்புகிறார். எஸ்கலஸ் விசாரணையைத் தொடர வேண்டும் என்று சொல்லிவிட்டு, வின்சென்டியோ பிரபு அங்கிருந்து செல்கிறார்.

எஸ்கலஸ் இசபெல்லாவை தனியே விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவளிடம் எப்படியாவது உண்மையைப் பெற முயல்கிறார். இப்போது பாதிரியாக மாறுவேடமிட்ட வின்சென்டியோ பிரபு நுழைகிறார். ஏஞ்சலோவின் பெயரைக் கெடுக்க இசபெல்லாவையும் மரியானாவையும் அவருடன் அனுப்பினாரா என்று கேட்கிறார். மாறுவேடத்தில் இருக்கும் வின்சென்டியோ பிரபு மறுக்கிறார். எஸ்கலஸ் பாதிரி பிரபுவைச் சித்திரவதை செய்யப்போவதாக மிரட்டுகிறார். ஏஞ்சலோ லூசியோவைப் பேச சொல்கிறார். அவனும் மாறுவேடமிட்ட பிரபு, வியன்னா பிரபுவைப் பற்றி மோசமாகப் பேசியதாகச் சொல்கிறான். வின்சென்டியோ பிரபு மறுக்கிறார். எஸ்கலஸ் அவரைச் சிறைக்கு அனுப்பப் போவதாகத் தெரிவிக்கிறார். வின்சென்டியோ பிரபு காவல் அதிகாரியைத் தடுக்கிறார். இந்தக் குழப்பத்தில் லூசியோ, மறுவேடமிட்ட பிரபுவின் முகத்தை மறைத்திருந்த துணியைப் பிடித்திழுக்கிறான். அனைவரும் அங்கே வின்சென்டியோ பிரபு நிற்பதைப் பார்க்கிறார்கள்.

ஏஞ்சலோ தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, தனக்கு மரணத் தண்டனை விதிக்கச் சொல்கிறார். வின்சென்டியோ பிரபு அவரை மரியானாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இசபெல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவர் சிறிது முன்பே தன்னை யார் என்று சொல்லியிருந்தால் கிளாடியோ உயிருடன் இருந்திருப்பான் என்கிறாள். அவர் தான் எதிர்பார்த்ததற்கு முன்பே அவன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிறார். இசபெல்லாவின் வேண்டுகோளின்படி, அவர் ஏஞ்சலோவிற்கு மரண தண்டனை விதிக்கிறார்.

மரியானா தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் செய்து, உடனே கைம்பெண்ணாக்குவது சரியா என்று கேட்கிறாள். வின்சென்டியோ பிரபு மறுக்கிறார். மரியானா இசபெல்லாவின் உதவியைக் கேட்கிறாள். இசபெல்லாவும் ஏஞ்சலோவை மன்னிக்கும்படியாக பிரபுவை வேண்டுகிறாள்.

அதற்குள் பிரபு, கிளாடியோவை அவசரப்பட்டுக் கொன்றுவிட்டதாக அங்கிருக்கும் காவல் அதிகாரியை அவரது வேலையில் இருந்து நீக்குகிறார். ஆனால் அவன் தான் வேறொரு குற்றவாளியை அழைத்து வருவதாகக் கூறி, கிளாடியோவை அழைத்து வருகிறான். பிரபு கிளாடியோவை மன்னித்து, அவன் ஜூலியட்டைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இசபெல்லா தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். முடிவாக, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறார்.

0

நியாயத் தராசு – அலசல்

எங்கிருந்து ஆரம்பிப்பது? முடிவில் இருந்து ஆரம்பிப்போம். ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் திருமணத்துடன் முடிகின்றன. இங்கும் ஒன்றுக்கு மூன்று திருமணங்கள் திட்டமிடப்படுகின்றன. இசபெல்லா கன்னியாஸ்திரி ஆனாளா அல்லது பிரபுவைத் திருமணம் செய்து கொண்டாளா என்பது தெளிவாக இல்லை.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரிதும் இன்றைய பெண்ணிய விழுமியங்களுடன் ஒத்துப்போவதில்லை. இவற்றைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்து நாடகங்களாக நடத்தப்படுவது கடந்த நூறாண்டுகளில் சாதாரணமாக இருந்தாலும், இந்த நாடகத்தில் முடிவு மட்டுமே பிரச்சினை அல்ல. சகோதரனுக்காக ஏஞ்சலோவுடன் இணங்க இசபெல்லா ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், கிளாடியோ அவளை வற்புறுத்துவது, மரியானா அப்படியே உறவு கொள்வது போன்றவற்றை எப்படியாக எடுத்துக் கொள்வது என்று புரியாமல் இருக்கிறது. ஒருபக்கம் கன்னித்தன்மை பற்றிப் பெரும் மதிப்புடன் பேசப்படும் இடத்தில், இது போன்ற தகாத, அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் விருப்பம் எப்படியாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன.

உதாரணமாக, ஒருவிதத்தில் ஷேக்ஸ்பியர் இதில் கன்னித்தன்மை போன்ற விஷயங்களைக் கேலி செய்வதாகவும் பார்க்கலாம். கதையில் ஜூலியட், மரியானா என இருவரும் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்கிறார்கள். கன்னியாஸ்திரியாகப் போவதாக இருக்கும் இசபெல்லா, திருமணம் செய்துகெள்கிறாள். உயிரைக் காப்பாற்ற கன்னித்தன்மையை இழக்கலாம் என்றும் கிளாடியோ ஓரிடத்தில் சொல்கிறான்.

இதில் ஷேக்ஸ்பியர் எங்கும் இது சரி, தவறு எங்கும் விவாதங்களில் நுழைவதில்லை. அவர் ஒரு நாடக ஆசிரியராக நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே செல்கிறார், அவ்வளவே. எனவே நம்மால் இந்த நிகழ்வுகளில் ஷேக்ஸ்பியரின் தெளிவான நிலைப்பாடு என்ன என்று புரிந்து கொள்ள இயலவில்லை. வாசகன் தனக்கு என்ன முடிவு விருப்பம் என்று நினைக்கிறானோ, அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சாமுவேல் ஜான்சன் எழுதியதை போல ‘ஷேக்ஸ்பியர் எந்த ஒழுக்கக் காரணங்களும் இல்லாமல் எழுதினார்… அவரது எழுத்து மகிழ்விக்கவே அல்லாது, போதிக்க அல்ல’ என்பதைத்தான் விளக்கமாகக் கொடுக்கவேண்டும்.

நாடகத்தின் தலைப்பு வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பது போலவே, கதையும் வேதாகம ஒழுக்கங்களை வலியுறுத்துவதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாடகத்தின் முதலில் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் பிரபு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அனைத்துப் பாத்திரங்களின் நடத்தையையும் தானே நடத்துகிறார். இவரை ஒரு ‘தீர்க்கதரிசி’ பாத்திரமாகப் பார்க்கலாம். அதே நேரத்தில் கதையைத் தானாக நகற்ற முயலாமல், ஒரு ‘deu ex machina’ பாத்திரமாக ஷேக்ஸ்பியர் இவரை உண்டாகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல கிளாடியோவைக் காப்பாற்ற இன்னொரு குற்றவாளி, அவனுக்கு விதிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே கொலை செய்யப்படுகிறான். இது எந்த விதத்தில் வின்சென்டியோ பிரபுவின் நியாயத்தின்கீழ் வரும் என்பதும் தெரியவில்லை. கதையை நகர்த்த வேண்டி, ஷேக்ஸ்பியர் செய்து கொண்ட சமரசங்களாக இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

(தொடரும்)

படம்:  ‘Measure for Measure’, Act V, Scene 1  by Frederick William Davis – Royal Shakespeare Company Collection

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *