அங்கம் 4 – காட்சி 1, 2
தங்கச்சங்கிலியைச் செய்வதற்கு ஏஞ்சலோ இன்னொரு வணிகனிடம் கடன் வாங்கி இருந்தான். ஆண்டிபோலஸ்-இயிடம் பணத்தை வாங்கித் தருவதாகக் கூறி இருந்தான். அப்போது அந்த வழியே வரும் ஆண்டிபோலஸ்-இயையும், டிரோமியோ-இயையும் காணும் அவன், அவர்களை நோக்கி வருகிறான்.
ஆண்டிபோலஸ்-இ தன்னுடைய அடிமையைக் கயிறு வாங்கி வரச்சொல்லி அனுப்புகிறான். அதைக்கொண்டு தன்னை வீட்டிற்குள் வரவிடாத தன்னுடைய மனைவியையும் வேலையாட்களையும் அடிக்கப்போவதாகச் சொல்கிறான். அங்கே வரும் ஏஞ்சலோ தன்னுடைய பணத்தைத் திரும்பக் கேட்கிறான். ஆண்டிபோலஸ்-இ தான் இன்னமும் சங்கிலியைப் பெறவில்லை என்பதால் பணம் தர முடியாது என்று வாதாடுகிறான். எனவே ஏஞ்சலோ அவனைக் கைது செய்ய வைக்கிறான். அப்போது அங்கே வரும் டிரோமியோ-சி, புறப்படத் தயாராக இருக்கும் கப்பல்கள் பற்றிச் சொல்கிறான். கோபப்படும் ஆண்டிபோலஸ்-இ, அவனை வீட்டிற்குச் சென்று அட்ரியானாவிடம் தன்னுடைய பிணைத்தொகையைப் பெற்று வரும்படி உத்தரவிடுகிறான்.
அட்ரியானாவின் ‘கணவன்’ தன்னிடம் அவன் காதலைத் தெரிவித்ததாக லூசியானா சொல்கிறாள். ஆனால் தான் அவனிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும் உறுதியளிக்கிறாள். இதனால் கோபமான அட்ரியானா தனது கணவனைத் திட்டுகிறாள். ஆனாலும் அவனை இன்னமும் சிறிது விரும்புவதாகச் சொல்கிறாள். அப்போது அங்கே வரும் டிரோமியோ-சி, ஆண்டிபோலஸ் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், பிணைத்தொகையைக் கொண்டுவரச் சொன்னதாகவும் சொல்கிறான். லூசியானாவைப் பணத்தை எடுத்துவரச் சொல்லும் அட்ரியானா, பணத்தை டிரோமியோ-சியிடம் கொடுத்து, உடனே தனது கணவனைக் கூட்டிவரச் சொல்கிறாள்.
அங்கம் 4 – காட்சி 3,4
நகரில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்டிபோலஸ்-சி, தான் இதுவரை பார்த்தேயிராதவர்கள் எல்லாம் தனக்கு வணக்கம் தெரிவிப்பதும், தனக்கு நன்றி தெரிவிப்பதும், அவன் கேட்டதாகப் பொருட்களைக் கொடுப்பதுமாக இருப்பதையும் எண்ணி ஆச்சரியப்படுகிறான். அப்போது அங்கே வரும் டிராமியோ-சி, ஆண்டிபோலஸ்-இயை சிறையில் இருந்து மீட்க அட்ரியானா கொடுத்தனுப்பிய பணத்தை அவனிடம் தருகிறான். ஆண்டிபோலஸ்-சிக்கு அவன் எதற்காகப் பணம் தருகிறான் என்றே தெரியவில்லை. துறைமுகத்தில் அடுத்துக் கிளம்பும் கப்பல்கள் எவை என்று அவனிடம் கேட்டான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அங்கு வரும் ஆண்டிபோலஸ்-இயுடன் உணவருந்திய நடனக்காரி, முந்தைய இரவில் தன்னிடம் கடன் வாங்கிய மோதிரத்தைத் திருப்பிக் கேட்கிறாள். அவளைச் சூனியக்காரி என்று எண்ணும் ஆண்டிபோலஸ்-சியும், டிரோமியோ-சியும் அங்கிருந்து ஓடுகிறார்கள். அவர்களுக்குப் பைத்தியம் என்று நினைக்கும் நடனக்காரி, அட்ரியானாவிடம் நேராகச் சென்று, தன்னுடைய மோதிரத்தை அவளது கணவன் திருடிவிட்டான் என்று சொல்லி, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறாள்.
கைது செய்யப்பட்டிருக்கும் ஆண்டிபோலஸ்-இயை டிராமியோ-இ பார்க்கிறான். தன்னைச் சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டிய பிணைத்தொகை எங்கே என்று ஆண்டிபோலஸ்-இ கேட்கிறான். டிராமியோ-இக்கு என்னவென்றே புரியவில்லை. அவன் கேட்டதைப்போலவே தான் கயிறு வாங்கி வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். கோபத்தில் ஆண்டிபோலஸ்-இ அவனை அடிக்கிறான். அப்போது, அங்கே அட்ரியானா, லூசியானா, நடனக்காரி ஆகியோரும், ஆண்டிபோலசிற்குப் பைத்தியம் பிடித்திருப்பதால் அதை ஓட்டுவதற்கு ஒரு மந்திரவாதி வைத்தியன் பின்ச்சும் வருகிறார்கள். ஆண்டிபோலஸ்-இ தனக்குப் பைத்தியம் இல்லை என்று வாதிடுகிறான். அட்ரியானா அவன் தன்னுடன் இரவு உணவை அருந்தியதாகச் சொல்கிறாள். அவனோ தானும், டிரோமியோவும் அவளுடன் உணவருந்தவில்லை என்கிறான். பின்ச் ஆண்டிபோலஸ்-இயையும், டிரோமியோ-இயையும் பைத்தியங்கள் என்று சொல்ல, இருவரையும் கட்டி வீட்டிற்குத் தூக்கிச் செல்கிறார்கள்.
காவல் அதிகாரிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவதாக அட்ரியானா தெரிவிக்கிறாள். ஆண்டிபோலஸ்-இ, தங்க ஆசாரியான ஏஞ்சலோவிற்கும் பணம் தர வேண்டும் என்று அதிகாரி தெரிவிக்கிறார். நடனக்காரி சங்கிலியுடன் அவனைப் பார்த்ததாகத் தெரிவிக்கிறாள். ஆனால் அட்ரியானா அதைப் பார்க்கவேயில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே, ஆண்டிபோலஸ்-சியும், டிரோமியோ-சியும் அங்கே உருவிய வாட்களுடன் வருகிறார்கள். அவர்கள் மருத்துவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்ட ஆண்டிபோலஸ்-இ என்று எண்ணும் அவர்கள், அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். சூனியக்காரிகளும் மந்திரவாதிகளும் வாளுக்குப் பயப்படுகிறார்கள் என்று சொல்லும் ஆண்டிபோலஸ்-சி, தன்னுடைய பெட்டி, படுக்கைகளைக் கப்பலுக்குக் கொண்டுவரும்படியாக டிரோமியோ-சியை அனுப்புகிறான்.
அங்கம் 5 – காட்சி 1
ஏஞ்சலோ, மற்றொரு வணிகனிடம் ஆண்டிபோலஸ்-இ தன்னிடம் தங்கச்சங்கிலியை வாங்கிக்கொண்டு இல்லை என்று சாதித்ததைச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அப்போது அவர்கள் ஆண்டிபோலஸ்-சியையும், டிரோமியோ-சியையும் பார்க்கிறார்கள். ஆண்டிபோலஸ்-சியின் கழுத்தில் தொங்கும் தங்கச் சங்கிலியையும் அவர்கள் பார்கிறார்கள். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பிக்க, இருவரும் வாளை உருவுகிறார்கள். அப்போது அங்கே அட்ரியானா, லூசியானா மற்றும் நடனக்காரி ஆகியோரும் வருகிறார்கள்.
அவர்களைக் கண்டவுடன், ஆண்டிபோலஸ்-சியும், டிரோமியோ-சியும் அருகில் இருந்த மடத்திற்குள் சென்று மறைந்துகொள்கிறார்கள். மடத்தின் தலைமை கன்னியாஸ்திரி வெளியே வருகிறாள். அட்ரியானா தன்னுடைய கணவனின் பைத்தியத்தை விளக்கிச்சொல்லி, அவனை வெளியே அனுப்பும்படியாகக் கேட்கிறாள். அவளது கதையைக் கேட்கும் கன்னியாஸ்திரி, அட்ரியானாவின் மீதுதான் தவறு என்று சொல்லி, தானே அவனைத் தெளியவைப்பதாகத் தெரிவித்தாள்.
இப்போது மணி ஐந்து. சொலினஸ் பிரபு, ஏகியனிற்குக் கொடுத்த ஒரு நாள் அவகாசம் முடிகிறது. அவனுக்குத் தண்டனை அளிக்க அழைத்துச் செல்கிறார்கள். சொலினஸ் பிரபுவைப் பார்த்த, அட்ரியானா, தன்னுடைய கணவனை மடத்தில் இருந்து வெளியே கொண்டுவரும்படிக் கேட்டுக்கொண்டாள். அவர்களுக்குச் சொலினஸ் பிரபுதான் திருமணம் செய்துவைத்தவர் என்பதால், தானே அவர்களைச் சேர்த்துவைப்பதாகத் தெரிவிக்கிறார்.
அப்போது அங்கே வரும் ஒருவன், ஆண்டிபோலஸ்-இயும், டிரோமியோ-இயும் மருத்துவர் பின்ச்சிடம் இருந்து தப்பித்துவிட்டதாகத் தெரிவிக்கிறான். அட்ரியானா அவன் சொல்வது பொய் என்று சொல்லி, தன்னுடைய கணவன் மடத்தின் உள்ளே இருப்பதாகத் தெரிவிக்கிறாள். அப்போது அங்கே வரும் ஆண்டிபோலஸ்-இயும், டிரோமியோ-இயும், தன்னுடைய மனைவியின் நடத்தையைச் சரி செய்துதரும்படி சொலினஸ் பிரபுவிடம் கேட்கிறாள். ஆண்டிபோலஸ்-இயும், அட்ரியானாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி குற்றம்சாட்டுகிறார்கள். இதைத் தீர்த்துவைக்கச் சொலினஸ் பிரபு, கன்னியாஸ்திரியை அழைக்கிறார்.
அப்போது ஏகியன், ஆண்டிபோலஸ்-இயை தன்னுடைய மகன் என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் சென்று பேசுகிறான். அவனோ தான் தன்னுடைய தந்தையைப் பார்த்ததே இல்லை என்றும், தான் எபேசஸ் நகரைவிட்டு எங்கும் சென்றதில்லை என்றும் தெரிவிக்கிறான். அப்போது அங்கே வரும் கன்னியாஸ்திரி, ஆண்டிபோலஸ்-சி மற்றும் டிரோமியோ-சியுடன் வருகிறாள். அங்கே இருந்த அனைவரும் திகைப்படைகிறார்கள்.
ஏகியனைப் பார்த்த கன்னியாஸ்திரி, தான் அவனிடம் இருந்து பிரிந்து வாழும் அவளது மனைவி எமிலியா என்றும், இரண்டு ஆண்டிபோலஸ்களும் அவனது இரட்டை மகன்கள் என்றும் தெரிவிக்கிறாள். மற்றவை அனைத்தும் இப்போது விளக்கப்படுகிறது. நடனக்காரியின் மோதிரம் திருப்பிக் கொடுக்கப்படுகிறது. தங்கச் சங்கிலிக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. ஏகியனின் பிணைத்தொகையைச் சொலினஸ் பிரபு மறுத்து, அவரை மன்னித்துவிடுகிறார். அனைவரும் ஒன்றிணைந்ததைக் கொண்டாட மடத்திற்குள் விருந்து ஏற்பாடு செய்யபடுகிறது. அனைவரும் ஒன்றாகச் செல்கிறார்கள்.
0
வேடிக்கையான தவறுகள் – அலசல்
ஆங்கிலத்தில் ‘farce’ என்றொரு வகைமை உண்டு. கிட்டத்தட்ட நடக்க முடியாத சம்பவத்தை, அபத்தமும் நகைச்சுவையும் சேர்த்துக் கொடுப்பது. அபத்த நாடகம் என்று சொல்லலாம். இதனுடன் ‘slapstick’ என்னும் வன்முறை கலந்த நகைச்சுவையையும் சேர்த்தால் அதுவே ‘வேடிக்கையான தவறுகள்’ நாடகம். ஷேக்ஸ்பியர் இவற்றைக் கலந்து தன்னுடைய நாடகத்தில் கொண்டுவந்தாலும், வேடிக்கையான தவறுகள் உண்மையில் ஒரு நகைச்சுவை நாடகமா?
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்திலும் நாம் எல்லாவிதமான சூழல்களையும் பார்க்கிறோம். நகைச்சுவை நாடகங்கள் நகைச்சுவையாக மட்டுமே இருப்பதில்லை. உதாரணமாக, இங்கே நாம் ஏகியன் நாடகம் முழுவதும் தன் மீது விதிக்கப்பட்ட மரணத் தண்டனையுடன் அவன் அலைந்துகொண்டிருக்கிறான். அவனது கதையோ, மனைவியையும் மகன்களையும் இழந்து துயரத்தில் உழலுவதாக இருக்கிறது. உண்மையில், முதல் அங்கத்தில் இது ஒரு நகைச்சுவை நாடகமாக மாறுவதற்கான சாத்தியமே தெரியவில்லை.
ஆனாலும், ஷேக்ஸ்பியர் இரண்டு இரட்டையர்களைக் கொண்டு, இதை முழுமையான farceஆக நடத்துகிறார். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சுருக்கத்தில், நான் சி என்றும், இ என்றும் இரட்டையர்களைப் பிரித்து, வாசிக்க ஏதுவாக மாற்றியிருந்தேன். ஆனால் நாடக மேடையில் இத்தகைய வித்தியாசங்கள் இருப்பதில்லை. அவர்களது உடையும் கூட, பெயரைப்போலவே ஒன்றாகவே இருக்கும். நாடகப் பாத்திரங்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் நாடகத்தின் இறுதிக் காட்சி வரை மேடையில் நிகழும் அபத்தங்களில் குழம்பி, தங்களையும் நாடகத்தின் அங்கமாகவே பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
‘வேடிக்கையான தவறுகள்’ ஷேக்ஸ்பியர் முதலில் எழுதிய நாடகங்களில் ஒன்று. முதல் நாடகம் என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது. 1594இல் எழுதப்பட்ட இந்த நாடகம் அவரது காலத்தில் பல முறை மேடையேற்றப்பட்டாலும், அவரது காலத்திற்குப் பின்னர் இன்னமும்கூட அதிகமாக மேடையேற்றப்பட்டது. ஒவ்வொரு முறையும் நாடகத்தின் புகழ் அதிகரித்தது. இதுபோன்ற நாடகத்தை மேடையேற்றுவதில் இருக்கும் சாத்தியங்கள், இன்றுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இதைப் புகழ்ப்பெற்றதாகவே வைத்திருக்கிறது.
நாடகம் முழுவதும் வன்முறை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இரட்டையர்கள் தங்களது அடிமைகளை அடிக்கிறார்கள். மனைவியை அடிக்கத் திட்டமிடுகிறார்கள். வாட்கள் உருவப்படுகின்றன. கோபமாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும் எல்லாம் அபத்த நகைச்சுவையாகவே கடந்து செல்லப்படுகிறது. இத்தகைய வன்முறை கலந்த நகைச்சுவை, உடலை முன்னிறுத்திய நகைச்சுவை ‘slapstick’ என்று அழைக்கப்படுகிறது. ஒருவிதத்தில் நமது கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையைப்போல. நாமும் அதில் இருக்கும் வன்முறையைக் கடந்து, நகைச்சுவையை மட்டுமே பார்க்கிறோம்.
ஆண்டிபோலஸ்-சி, தன்னுடைய சகோதரனைவிட மிகவும் சிந்தனை செய்பவனாகவே இருக்கிறான். வேதாகமத்தில் புனித பால், எபேசஸ் நகரை ‘வினோதமான கலைகள்’ நிறைந்த நகரமாகக் காட்டுகிறார். ஆண்டிபோலஸ்-சியும் அந்த நகரைச் சூனியக்காரிகளும் மந்திரவாதிகளும் நிறைந்ததாகவே பார்க்கிறான். அங்கே என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். தன்னுடைய குடும்பத்தைத் தேடி அலைந்துகொண்டிருக்கும் ஆண்டிபோலஸ்-சி, அந்த மாய நகரில் கிட்டத்தட்ட தன் சுயத்தை இழந்து, தான் யார் என்பதையும் தேடி அலைய வேண்டி வந்துவிடுகிறது.
புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரிய அறிஞரான ஹரால்டு ப்ளூம், தன்னுடைய புத்தகமான ‘Shakespeare – The Invention of Human’இல், இந்த நாடகத்திலேயே ஷேக்ஸ்பியர் மனிதனை மீண்டும் கண்டறிய ஆரம்பிக்கிறார் என்கிறார். சுயத்தை உணர்ந்து, அதைத் தனக்குத் தானே ஆராய்வதன் மூலமே மனிதன் மாறுகிறான். அதைத் தன்னுடைய நாடகங்களில் மீண்டும் மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஷேக்ஸ்பியர், மனிதனின் சுயத்தை உணர்த்தி, அவனை மீண்டும் கண்டறியச் செய்கிறார் என்பது அவரது கருத்து.
ஆண்டிபோலஸ்-சி தன்னைப் பற்றிய அறிதலைப் பேசுவதன் மூலமாக, இந்த நாடகத்திலேயே அதைத் தொடங்குகிறார் என்றும் அவர் கூறுகிறார். நவீன மேற்கத்திய நாகரீக – தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து அறிந்துகொள்ளும் – மனிதனைத் தன்னுடைய நாடகங்களின் மூலமாக ஷேக்ஸ்பியரே அறிமுகப்படுத்துகிறார் என்றும் எழுதுகிறார். இத்தகைய சுயபரிசோதனையின் உச்சத்தை நாம் அவரது சோக நாடகங்களில் இன்னமும் ஆழமாகப் பார்க்கப்போகிறோம்.
0
படம்: ‘The Comedy of Errors’ Act IV, Scene IV by John Massey Wright – Folger Shakespeare Library.