அங்கம் 2 – காட்சி 2,3
கிளாடியோவிற்கும் ஹீரோவிற்கும் திருமணம் நடக்க இருப்பது டான் ஜானிற்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசிக்கிறான். அப்போது அவனது வேலையாளான போராசியோ ஒரு திட்டம் வகுக்கிறான்.
ஹீரோவின் பணிப்பெண்களில் ஒருத்தியான மார்கரெட்டும் போராசியோவும் காதலர்கள். டான் ஜான் சென்று டான் பெட்ரோ, கிளாடியோவிடம் ஹீரோ கன்னிப்பெண் இல்லை என்றும், அவள் விருப்பத்துடன் தன்னுடைய உடலைப் பலருக்கும் கொடுப்பவள் என்றும் சொல்ல வேண்டும் என்கிறான். அவர்கள் அதை நிரூபிக்கக் கேட்கும்போது, திருமணத்திற்கு முந்தைய தின இரவில் ஹீரோவின் படுக்கையறைக்கு வரச் செய்ய வேண்டும். அங்கே மார்க்ரெட்டை ஹீரோவின் ஆடைகளை அணிய செய்து, போராசியோ அவளுடன் அறையின் பலகணியில் உறவு கொள்வான். அதைக் கண்டு அவர்கள் ஹீரோ என்று நினைத்து, திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சொல்கிறான். இதைக் கேட்டு மகிழும் டான் ஜான், திட்டம் வெற்றியடைந்தால் அவனுக்குப் பெரிய பரிசு தருவதாகத் தெரிவிக்கிறான்.
அதே நேரத்தில் இன்னொருபுறம் பெனெடிக்கின் நண்பர்கள் அவனைப் பியேட்ரிஸ் மீது காதல் கொள்ள வைக்கும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். பெனெடிக் அப்போது தோட்டத்தில் தனியே உலாவிக் கொண்டிருந்தான். களத்தில் மிகவும் புத்திசாலியாகவும் வீரத்துடனும் நடந்து கொள்ளும் கிளாடியோ, எப்படிச் சட்டென்று மென்மையான காதலனாக மாறினான் என்று யோசித்துக் கொண்டிருந்தான். தன்னால் அப்படி மாறவே முடியாது என்றும் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது டான் பெட்ரோ, கிளாடியோ, லியோனாடோ ஆகியோர் அங்கே வருவது தெரிகிறது. அவர்களுடன் அப்போது பேச விரும்பாத பெனெடிக், தோட்டத்தின் உள்ளே ஒளிந்து கொள்கிறான். பெனெடிக் அங்கே ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ளாதது போலச் சத்தமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். பியேட்ரிஸ் பெனெடிக்கை ஆழமாகக் காதலிப்பதாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தோட்டத்தில் மறைந்திருக்கும் பெனெடிக் இதை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும் டான் பெட்ரோ மிகவும் உணர்ச்சியோடு பியேட்ரிஸ் மிகவும் தீவிரமாகப் பெனெடிக்கை காதலிப்பதாகவும், அந்தக் காதல் அவளைப் பைத்தியமாகச் செய்துவிடும் அல்லது தற்கொலைக்குத் தள்ளிவிடும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவள் தன்னுடைய காதலை பெனெடிக்கிடம் சொன்னால் அவன் தன்னைக் கேலி செய்வான் என்று அவள் மறைத்து வைத்திருக்கிறாள் என்றும் சொல்கிறார். பியேட்ரிஸ் போன்ற பெண்ணை நிராகரிக்க பெனெடிக் ஒரு முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என்று மூவரும் பேசிக் கொள்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் உணவருந்த செல்கிறார்கள். டான் பெட்ரோவின் திட்டம் வேலை செய்கிறது. வெளியில் வரும் பெனெடிக், அழகிய பியேட்ரிஸ்மீது ‘இரக்கம் கொண்டு’ காதலிக்கப் போவதாகச் சொல்லிக் கொள்கிறான். சற்று முன் வரை நிரந்தரப் பிரம்மச்சாரியாக இருக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்த பெனெடிக், இப்போது பியேட்ரிஸை எப்படியாவது திருமணம் செய்வது என்று முடிவு செய்கிறான். அப்போது பியேட்ரிஸ் அவனை உணவுக்கு வரவேற்க அங்கே வருகிறாள். எப்போதும் போலவே அவனிடம் கூர்மையான வார்த்தைகளால் பேசுகிறாள். ஆனால் பெனெடிக் பதிலுக்கு மிகவும் பணிவோடும் அவளைப் புகழ்ந்தும் பேசுகிறான். பியேட்ரிஸ் இந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாலும் குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் அவள் கேலி செய்வதை நிறுத்தவில்லை. அவள் சொல்வதையெல்லாம் காதல் வார்த்தைகள் என்று புரிந்து கொள்ளும் பெனெடிக், அவளது முகத்தைச் சிறு ஓவியமாகத் தீட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறான்.
அங்கம் 3 – காட்சி 1,2
லியோனாடோவின் தோட்டத்தில், ஹீரோ, அவளது பணிப்பெண்கள் மார்கரெட், உரசுலாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். டான் பெட்ரோவும் அவரது நண்பர்களும் செய்தது போலவே இவர்களும் பியேட்ரிஸைக் காதலில் விழவைக்கத் திட்டமிடுகிறார்கள். மார்கரெட் பியேட்ரிஸை அழைத்து வருகிறாள். அவர்கள் வருவதைக் கவனிக்காதது போல ஹீரோ உரசுலாவுடன் பேச ஆரம்பிக்கிறாள்.
பெனெடிக் பியேட்ரிஸ்மீது காதலுடன் இருப்பதாக டான் பெட்ரோ தன்னிடம் சொன்னதாக ஹீரோ சொல்கிறாள். அதை பியேட்ரிஸிடம் சொல்ல வேண்டியதுதானே என்று உரசுலா சொல்கிறாள். ஆனால் அவளை யார் விரும்பினாலும், பியேட்ரிஸ் இரக்கம் பார்க்காமல் கேலி செய்வாள் என்றும், அதைச் சொன்னதற்காகத் தன்னையும் கேலி செய்வாள் என்றும் எனவே தேவையில்லாமல் பெனெடிக்கின் இதயத்தை உடைக்கப் போவதில்லை என்றும் ஹீரோ சொல்கிறாள்.
பெனெடிக் காதலில் அமைதியாகவே இறக்க வேண்டியதுதான் என்று ஹீரோ சொல்கிறாள். புரியாதது போல உரசுலா, பியேட்ரிஸ் மிகவும் அறிவு நிறைந்தவள் என்றும், அவள் பெனெடிக் போன்ற நல்ல மனிதனை நிராகரிக்க மாட்டாள் என்றும் சொல்கிறாள். இத்தாலியில் இருக்கும் சில அழகான, புத்திசாலி ஆண்களில் அவனும் ஒருவன் என்றும் சொல்கிறாள். ஹீரோ ஒப்புக்கொண்டு, தன்னுடைய திருமண உடையை அணிந்து பார்க்க போவதாகச் சொல்லி அங்கிருந்து செல்கிறாள்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், பெனெடிக்கை போலவே பியேட்ரிஸும் தான் கேட்ட செய்தியை எண்ணி அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் பெனெடிக்கை போலவே, தானும் அவன் மீது ‘இரக்கத்துடன்’ காதல் செய்யப் போவதாகச் சொல்கிறாள். அதுவும் பெனெடிக் நல்ல மனிதன் என்பதால் தன்னுடைய செருக்கையும், கோபத்தையும் சிறிது குறைத்துக் கொண்டு அவனைக் காதலிக்க முடிவு செய்கிறாள்.
அதே நேரத்தில், பெனெடிக் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்பதற்காக டான் பெட்ரோ, கிளாடியோ, லியோனாடோ ஆகியோர் அவனைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். பெனெடிக் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு விட்டதாகத் தெரிவிக்கிறான். அவன் மிகவும் அமைதியாக இருப்பதால், அவன் காதலில் இருக்க வேண்டும் என்று கேலி செய்கிறார்கள். ஆனால் பெனெடிக் பதில் சொல்லாமல், லியோனாடோவிடம் தனியே பேச சென்று விடுகிறான்.
அப்போது அங்கே வரும் டான் ஜான், டான் பெட்ரோவும், கிளாடியோவும் தனியே இருப்பதைப் பார்க்கிறான். அவர்களிடம் வந்து தான் டான் பெட்ரோவின் மானத்தைக் காக்கவும், கிளாடியோவை மோசமான திருமணத்தில் இருந்து காப்பாற்றவும் விரும்புவதாகச் சொல்கிறான். ஹீரோ ஒரு பாலியல் தொழிலாளி என்றும் கிளாடியோ அவளைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறான். இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தன்னுடன் அன்றிரவு ஹீரோவின் படுக்கையறைக்கு வெளியே வந்தால், அவள் வேறொருவனிடம் உறவு கொள்வதைத் தான் காட்டுவதாகவும் டான் ஜான் சொல்கிறான். ஏற்கனவே சந்தேகபுத்தியும் யாரையும் நம்பாத குணமும் கொண்ட கிளாடியோ, டான் ஜான் சொல்வது மட்டும் உண்மையாக இருந்தால், மறுநாள் மணமேடையில் வைத்து அவளை அவமானப்படுத்துவதாகச் சொல்கிறான். டான் பெட்ரோவும் அதற்கு ஒப்புக் கொள்கிறார்.
அங்கம் 3 – காட்சி 3
லியோனாடோவின் மாளிகைக்கு வெளியே மெசினா நகரக் காவலர்கள் இருக்கிறார்கள். அன்றிரவு அவர்களுக்கு என்ன கடமைகள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தலைமை காவலர் டாக்பெர்ரியும், அவரது துணை காவலர் வெர்கசும் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நல்லவர்கள் என்றாலும், கேலிக்கிடமாக நடந்து கொள்பவர்கள். அவர்களது காவலர்கள் மிகவும் பணிவாக நடந்து கொண்டாலும், அவர்களால் எந்தக் குற்றத்தையும் தடுக்க முடியாது.
டாக்பெர்ரி அவர்களுக்கு அன்றிரவு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது பேச்சு குழப்பமாகவும் அவர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் சொல்வது போல இருந்தது. அதாவது, தெருவில் குடிகாரர்கள் இருந்தால், அவர்களை வீட்டிற்குப் போகச் சொல்ல வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால், அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். திருடர்களைக் கண்டால் பிடிக்கக்கூடாது. ஏனென்றால், நல்ல மனிதர்கள், கெட்டவர்களுடன் சேர்க்கை வைத்துக் கொள்ளக் கூடாது. சுருக்கமாக, அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். அல்லது அவர்கள் எதுவுமே செய்யாமலும் இருக்கலாம். அவர்களது ஈட்டிகளை மட்டுமாவது தொலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற குழப்பமான பேச்சை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இறுதியாக, மறுநாள் லியோனாடோவின் மாளிகையில் திருமணம் நடக்க இருப்பதால், பலரும் வருவார்கள் என்றும், எனவே அங்கே இன்னமும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். மீதமிருந்த காவலர்கள் அங்கிருந்த பலகை ஒன்றில் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.
அப்போது அங்கே டான் ஜானின் வேலையாட்களான பொரோசியோவும் கான்ராட்டும் வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு நடந்தவற்றை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். டான் ஜான் சொன்னபடியே, டான் பெட்ரோவும், கிளாடியோவும் ஹீரோவின் படுக்கையறைக்கு வெளியே இருந்து பார்த்தார்கள். அங்கே போராசியோ, ஹீரோவின் உடைகளை அணிந்திருந்த மார்கரெட்டுடன் உறவு கொண்டதைக் கண்டார்கள். அதனால் மனமுடைந்த கிளாடியோ, மறுநாள் திருமணத்தின்போது, அவளது துரோகத்தைப் பலரின் முன் அம்பலப்படுத்தி, அவமானப்படுத்தப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த காவலர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரணைக்கு டாக்பெர்ரியிடம் அழைத்துச் சென்றார்கள்.
அங்கம் 3 – காட்சி 4, 5
திருமணத்தன்று காலை ஹீரோ எழுந்து, பியேட்ரிஸை எழுப்ப உரசுலாவை அனுப்புகிறாள். மார்கரெட்டும் ஹீரோவும் அன்று என்ன உடை அணிவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோ மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் அவளுக்கு எதுவோ தீயது நடக்கப்போகிறது என்றும் தோன்றுகிறது. பியேட்ரிஸ் வருகிறாள். காதல் வயப்பட்டிருப்பது போலிருக்கிறாள் என்று மார்கரெட், பியேட்ரிஸைக் கேலி செய்கிறாள். தனக்கு எதுவும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல், மார்கரெட் கேலி செய்கிறாள். கிளாடியோ தன்னுடைய நண்பர்களுடன் வருகிறான். அனைவரும் திருமணத்திற்குத் தேவாலயத்திற்குச் செல்ல தயாராகிறார்கள்.
லியோனாடோ தேவாலயத்திற்குள் நுழையும்போது டாக்பெர்ரி, வெர்கஸ் இருவரும் அவரைத் தடுத்து நிறுத்த முயலுகிறார்கள். இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து வைத்திருப்பதாகவும், அவர்களின் விசாரணையை லியோனாடோவின் முன் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் வழக்கம் போல, அவர்கள் யார், எதற்காக லியோனாடோவின் முன் விசாரணை செய்யவேண்டும் என எதையும் விளக்காமல், குழப்பமாகப் பேசுகிறார்கள். எனவே லியோனாடோ விசாரணையை அவர்களே நடத்திக் கொள்ளலாம் என்றும், தனது மகளின் திருமணம் அன்றிருப்பதால் தன்னால் விசாரணைக்கு வர முடியாது என்றும் கூறிவிட்டு, அவர் தேவாலயத்திற்குள் திருமணத்தில் பங்கெடுக்க நுழைகிறார்.
(தொடரும்)
படம்: ‘Much Ado About Nothing’ by Reverend Matthew William Peters (British, 1742–1814), Hero, Ursula, and Beatrice in Leonato’s Garden