Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #14 – வெற்று ஆரவாரம் 3

ஷேக்ஸ்பியரின் உலகம் #14 – வெற்று ஆரவாரம் 3

Much Ado About Nothing

அங்கம் 4 – காட்சி 1,2

அனைவரும் தேவாலயத்தில் கிளாடியோ, ஹீரோ திருமணத்திற்குக் கூடியுள்ளார்கள். பாதிரி பிரான்சிஸ் திருமணத்தை நடத்துகிறார். கிளாடியோவிடம் ஹீரோவை மணக்கச் சம்மதமா என்று கேட்கிறார். இங்கே கிளாடியோ கோபமாகப் பேச ஆரம்பிக்கிறான். ஹீரோவைத் தான் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், அவளைத் திரும்பவும் லியோனாடோவிடம் அனுப்புவதாகவும் கூறுகிறான்.

வெளியில் ஹீரோ நல்லவளாகவும், தூய்மையானவளாகவும் தெரிந்தாலும், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று குற்றம் சாட்டுகிறான். தேவாலயம் முழுவதும் குழப்பம் சூழ்கிறது. லியோனாடோவும் ஹீரோவும் ஒன்றும் புரியாமல், கிளாடியோவிடம் என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். டான் பெட்ரோ, டான் ஜான் ஆகியோருடன் தான் முந்தைய இரவில் ஹீரோ இன்னொரு ஆண் மகனோடு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், அந்த மனிதனும் ஹீரோவுடன் தனக்குத் தொடர்பிலிருப்பதை ஒப்புக்கொண்டதாகவும், அனைவரின் முன்னும் கிளாடியோ கூறுகிறான். டான் பெட்ரோவும் டான் ஜானும் தாங்களும் அதைப் பார்த்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.

லியோனாடோ தற்கொலை செய்துகொள்ள கத்தியை தேடுகிறார். ஹீரோ அங்கேயே மயக்கமாகிவிடுகிறாள். அவளுக்கு உதவ பெனெடிக்கும் பியேட்ரிசும் அருகில் செல்கிறார்கள். டான் பெட்ரோ, டான் ஜான், கிளாடியோ ஆகியோர் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். இந்த அவமானத்தைவிட ஹீரோ மரணமடைவது மேல் என்று லியோனாடோ அரற்றுகிறார். ஆனால் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியை கிளாடியோ அவமானப்படுத்திவிட்டதாக பியேட்ரிஸ் மட்டும் மிகுந்த கோபத்துடன் பேசுகிறாள்.

அதுவரை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாதிரி பிரான்சிஸ் தானும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறார். கிளாடியோ குற்றம் சாட்டியபோது ஹீரோவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவள் குற்றமற்றவள் என்பதையே உணர்த்துகிறது என்கிறார் அவர். அப்போது மயக்கம் தெளிந்து எழும் ஹீரோ, தான் குற்றமற்றவள் என்றும் கிளாடியோவும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறாள். புத்திசாலியான பெனெடிக், கிளாடியோ சொன்னது பொய் என்றால், இந்தச் சதிக்குப் பின் டான் ஜான் இருக்கவேண்டும் என்று சரியாக ஊகிக்கிறான்.

பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவர பாதிரி ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். மயக்கமடைந்த ஹீரோ, அதிர்ச்சியினாலும் துக்கத்தினாலும் மரணமடைந்து விட்டதாக லியோனாடோ அனைவரிடமும் கூறவேண்டும். ஹீரோ அப்போது மறைவாக இருக்க வேண்டும். அவள் இறந்துவிட்டதாக, அவள்மீது குற்றம் சாட்டியவர்களுக்குத் தெரிய வரும்போது, அவள் குற்றமற்றவள் என்று அவர்களும் உணர்வார்கள். உண்மையிலேயே சதி நடந்திருந்தால், அதுவாகவே வெளியே வந்துவிடும் என்றும் தெரிவிக்கிறார். இது எதுவும் நடக்காத நிலையில், வேறு வழியில்லை என்றால், யாரும் அறியாமல் ஹீரோவை ஏதாவது கன்னியாஸ்திரி மடத்தில் சேர்த்துவிடலாம் என்றும் சொல்கிறார். வேறு வழியில்லாத லியோனாடோ இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

பெனெடிக், பியேட்ரிஸ் தவிர மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். பெனெடிக், பியேட்ரிஸைத் தேற்ற முயலுகிறான். அவன் தன்னிடம் உண்மையிலேயே நட்புடன் இருக்கிறானா என்று பியேட்ரிஸ் கேட்கிறாள். அப்போது பெனெடிக் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறான். பியேட்ரிஸ் இப்போது திடுக்கிட்டாலும், தன்னுடைய காதலையும் தெரிவிக்கிறாள். ஆனால் உண்மையில் அவன் தன்னைக் காதலிக்கிறான் என்றால் அவன் கிளாடியோவைக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்கிறாள். அதிர்ச்சியடைந்த பெனெடிக் மறுக்கிறான்.

காட்டுமிராண்டியைப் போல கிளாடியோ நடந்து கொண்டதைச் சுட்டிக் காட்டும் பியேட்ரிஸ், அவனது திட்டம் கொடூரமாக அனைவரின் முன்பாக ஹீரோவை அவமானப்படுத்துவது என்றும், தான் ஆணாக இருந்திருந்தால் அங்கேயே அவனைக் கொன்றிருப்பேன் என்றும் சொல்கிறாள். இதை ஒப்புக்கொள்ளும் பெனெடிக், பியேட்ரிசுக்காகவே அவனைச் சண்டைக்கு அழைப்பதாகத் தெரிவிக்கிறான்.

அங்கம் 5 – காட்சி 1

லியோனாடோ மிகுந்த துக்கத்துடனும் அதிர்ச்சியுடனும் இருக்கிறார். தன்னுடைய மகள் உண்மையில் தவறு செய்தாளா என்று தெரியாத நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அவர் எதுவும் செய்ய முடியாதவராக இருக்கிறார். அவரது சகோதரர் அன்டோனியோ அங்கே வந்து பொறுமையாக இருக்கும்படிச் சொல்கிறார். ஆனால் எவரும் அறிவுரை சொல்லலாம் என்றும், துயரத்தில் இருப்பவர்களால் அதைக் கடைபிடிக்க முடியாது என்றும் கசப்புடன் கூறுகிறார்.

அங்கே டான் பெட்ரோவும் கிளாடியோவும் நுழைகிறார்கள்.

லியோனாடோவைப் பார்த்ததும் திரும்பிச் செல்ல முயலுகிறார்கள். ஆனால் லியோனாடோ அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். பொய்யான குற்றச்சாட்டின்மூலம் தன்னுடைய மகளை மரணமடையச் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். தன்னுடன் சண்டையிட அழைக்கிறார். தனக்கு வயதாகிவிட்டாலும், தன்னுடைய மகளின்மீதான அன்பின் காரணமாக கொல்லவும் கொல்லப்படவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அவர் சொல்வதைக் கவனியாதது போல அங்கிருந்து செல்கிறார்கள். கட்டாயம் பழிவாங்க போவதாக அன்டோனியோவும் லியோனாடோவும் தெரிவிக்கிறார்கள்.

அன்டோனியோவும் லியோனாடோவும் வெளியேறியவுடன், பெனெடிக் வருகிறான். கிளாடியோவும் டான் பெட்ரோவும் சிறிது நேரம் வேடிக்கையாகப் பேசும்படிக் கேட்கிறார்கள். ஆனால் ஓர் அப்பாவி பெண்ணின் பெயரை அவர்கள் கெடுத்துவிட்டதாகக் கூறி, தான் கிளாடியோவை வாட்சண்டைக்கு அழைக்கவே வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அவர்கள் இதை வேடிக்கை என்று நினைக்கும்போது, அவர்களது பொய் குற்றச்சாட்டினால் ஒரு பெண் இறந்துவிட்டதால், தன்னால் அவர்களுடன் நட்புடன் இருக்க முடியாது என்று கூறுகிறான். டான் ஜான் நகரை விட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கிறான். பெனெடிக் கூறியதைக் கேட்டு, டான் பெட்ரோவும், கிளாடியோவும் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் பீட்ரைசின் காதலின் காரணமாகவே அவன் கிளாடியோவுடன் மோத தயாராக இருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

டாக்பெர்ரியும் வெர்கசும் அப்போது குற்றவாளிகளான கான்ராட்டையும் போராசியோவையும் அங்கே அழைத்து வருகிறார்கள். அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். போராசியோ மீண்டும் ஒருமுறை நடந்ததைத் தெரிவிக்கிறான். டான் பெட்ரோவும் கிளாடியோவும் நடந்ததைத் தெரிந்து கொண்டு, அதிர்ச்சி அடைகிறார்கள். ஹீரோ அப்பாவி என்றும், அவளது பெயரைத் தாங்கள் தவறுதலாகக் களங்கப்படுத்தியதாலேயே அவளது குடும்பவும் சிதைந்து, அவளும் இறந்துவிட்டாள் என்றும் கலங்குகிறார்கள்.

லியோனாடோவும் அன்டோனியோவும் வருகிறார்கள். டான் பெட்ரோ மன்னிப்புக் கேட்கிறார். அவரது மகளைக் கொன்றதற்காக எந்தத் தண்டனையையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறார். பதிலுக்கு லியோனாடோ தன்னுடைய மகள் குற்றமற்றவள் என்று கிளாடியோ ஊரெங்கும் சொல்ல வேண்டும் என்றும், அவளது கல்லறையில் அவளது தூய்மையைச் சொல்லும்படியாக ஒரு கவிதையை வாசிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கிறார். மேலும், ஹீரோவைப் போலவே அன்டோனியோவிற்கு ஒரு பெண் இருப்பதாகவும், அவளைக் கிளாடியோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். லியோனாடோ தன்னை மன்னித்துவிட்டதாக கிளாடியோ அழுதுகொண்டே ஒப்புக் கொள்கிறான். போராசியோவைச் சிறையில் தள்ளும்படியாக லியோனாடோ உத்தரவிடுகிறார்.

அங்கம் 5 – காட்சி 2

பியேட்ரிசுடன் தனியே பேசுவதற்காக அவளை அழைத்துவர மார்கரெட்டை அனுப்பிவிட்டு பெனெடிக் தனியே இருக்கிறான். தன்னால் கவிதை எழுத முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறான். பியேட்ரிஸ் வந்தவுடன் இருவரும் வழக்கத்திற்கு மாறாக காதல் வார்த்தைகள் பேசிக் கொள்கிறார்கள். அவள் கூறியது போலவே தான் கிளாடியோவைச் சண்டைக்கு அளித்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அப்போது அங்கே வரும் பணிப்பெண் உரசுலா, உண்மை வெளிவந்துவிட்டது என்று தெரிவிக்கிறாள்.

அங்கம் 5 – காட்சி 3,4

அதிகாலையில் ஹீரோவின் ‘கல்லறையில்’ கிளாடியோ தன்னுடைய தண்டனையின் முதல்பகுதியை நிறைவேற்ற நின்று கொண்டிருக்கிறான். ஹீரோவின் தூய்மை, அவள்மீது தான் சொன்ன குற்றச்சாட்டால் அவள் மரணமடைந்து பேன்றவற்றை கவிதையாக வாசிக்கிறான். அதை அவளது கல்லறையில் தொங்கவிட்டு, ஒவ்வொரு வருடமும் தான் அங்கு வந்து அதை வாசிப்பதாகத் தெரிவிக்கிறான். அன்று அன்டோனியோவின் மகளுடன் அவனுக்குத் திருமணம் நடக்க இருப்பதால், அங்கே செல்கிறான்.

அதே நேரத்தில், அனைவரும் கிளாடியோவின் இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நடந்த சதி குறித்து மார்கரெட்டிற்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் நிரபராதி என்று தீர்ப்பு சொல்லப்பட்டுவிட்டது. அனைவரும் டான் ஜானின் சதியை இப்போது புரிந்து கொண்டார்கள்.

பெனெடிக் லியோனாடோவிடம் பியேட்ரிஸைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்கிறான். அனைவரும் பெண்களின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். பெண்கள் அனைவரும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு வருகிறார்கள். யாராக இருந்தாலும் தான் மணந்து கொள்ளப் போவதாகக் கிளாடியோ தெரிவிக்கிறான். முகமூடியை அகற்றியவுடன், உண்மையில் ஹீரோதான் அங்கிருக்கிறாள் என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறான். அவனது அவதூறுகளில் இருந்து விடுபட்டு, அவள் புதிதாகப் பிறந்து வந்திருப்பதாக லியோனாடோ தெரிவிக்கிறார்.

பெனெடிக்கும் பியேட்ரிசும் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் செய்ய மறுக்கிறார்கள். ஆனால் இந்த முறை டான் பெட்ரோ வும் கிளாடியோவும் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட அரைகுறை காதல் கவிதைகளை வாசித்துக் காட்டி, இனியும் அவர்கள் யாரையும் ஏமாற்ற முடியாது என்று சொல்லி, திருமணத்திற்குச் சம்மதம் வாங்குகிறார்கள்.

பெனெடிக் பியேட்ரிஸை முத்தமிடுகிறான். அனைவரையும் ஒரு நடனத்திற்கு அழைக்கிறான். அப்போது வரும் ஒரு தூதன், மெசினா நகருக்கு வெளியே டான் ஜான் கைது செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறான். அவனைப் பற்றி நாளை சிந்தித்துக்கொள்ளலாம் என்று பெனெடிக், டான் பெட்ரோவிடம் சொல்லிவிடுகிறேன். அனைவரும் வரப்போகும் இரட்டைத் திருமணங்களைக் கொண்டாடி நடனமாடுகிறார்கள்.

0

வெற்று ஆரவாரம் – அலசல்

முதலில் எது ‘வெற்று ஆரவாரம்’? காதல்தான். ஷேக்ஸ்பியரின் காதல் கதைகளிலேயே காதல் இல்லாத கதை இதுதான் எனலாம். மற்ற எந்த நாடகத்தையும் விட இங்கே காதல் மிகவும் சாதாரணமாகக் கையாளப்படுகிறது.

பெனெடிக்கும் பியேட்ரிசும் தங்களது புத்திசாலித்தனத்தையும் வார்த்தை ஜாலத்தையும் மற்றவர்களுக்கு முன் காட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, தங்களது காதலில் காட்டுவதில்லை. அவர்கள் இருவருமே ஒருவிதத்தில் எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்ப்பவர்கள். அவர்களது காதலையும்கூட அர்த்தமில்லாத சண்டைகளை நாடகம் முழுவதும் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பியேட்ரிஸ் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறாள்.

ஆனால் நாடக ஆரம்பத்தில் நாம் பெனெடிக் போரில் இருந்து வெற்றிகரமாகத் திரும்புவதைப் பார்க்கிறோம். ஆனால் அவன் பியேட்ரிசுடன் தோல்வியடைந்து கொண்டே இருக்கிறான். அவளது ஒவ்வொரு வார்த்தையும் தன்னைக் கத்தியைக் கொண்டு குத்துவது போல இருக்கிறது என்று பெனெடிக் சொல்கிறான். ஆனால் அவனால் அவளைக் காதலிக்காமல் இருக்க முடியாது. ஆனால் பியேட்ரிஸ் தன்னையே முதலில் காதலிப்பவள். அவள் பெனெடிக்கிடம் மெதுவாகவே வருகிறாள். அவர்களது ‘காதல்’ வெற்று ஆரவாரமாகவே இருக்கிறது. ஆனால் ஷேக்ஸ்பியரின் காதல் ஜோடிகளில் மிகவும் சுதந்திரமானவர்கள் இவர்கள்தான்.

கதையின் மற்றொரு காதல் இணை கிளாடியோ-ஹீரோ. இது மேலும் பிரச்சினைக்குரியது. கிளாடியோ பார்த்தவுடன் ஹீரோவின்மீது காதல் கொள்கிறான். அதே வேகத்தில் அவளைச் சந்தேகிக்கிறான். அவள்மீது குற்றம் சாட்டுகிறான். அவள் இறந்தவுடன் வருந்துகிறான். அடுத்த திருமணத்திற்கும் தயாராகிறான். ஷேக்ஸ்பியரிய நாயகர்களில் மிகவும் சாதாரணமான, நிலையான மனமில்லாத நாயகன் கிளாடியோ. திருமணத்தின்போது தன்னைத அவமதித்தவனைச் சாவில் இருந்து எழுந்து வரும் ஹீரோ அப்படியே ஏற்றுக் கொள்கிறாள். அதே நேரத்தில், வில்லனாக இருக்கும் டான் ஜானின் திட்டம் அவனும் ஒரு வெற்று ஆரவார வில்லன்தான் என்று காட்டுகிறது. மிகவும் சாதாரணமான ஒரு திட்டம், மற்றவர்களின் மூடத்தனத்தால் நிறைவேறுகிறது. ஷேக்ஸ்பியர் கதைக்கு முக்கியத்துவம் தராமல், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவாக இருக்கலாம்.

கிளாடியோ-ஹீரோவின் காதல் அன்றைய நடைமுறைக்கு ஏற்றது. போரில் இருந்து வரும் கிளாடியோ, திருமணத்திற்குத் தயாராக இருக்கிறான். அது ஹீரோவோ அல்லது வேறொருவளா என்பது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எனவேதான் இந்த நாடகத்தின் வெற்று ஆரவாரம் காதலாக இருக்கிறது.

அதே நேரத்தில், ஹீரோவுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்குக் கோபமாகக் குரல் எழுப்புவது பியேட்ரிஸ் மட்டுமே என்பதையும் கவனிக்கவேண்டும். தன்னுடைய நண்பன் தவறு இழைக்கிறான் என்று தெரிந்தும் பெனெடிக் அவனை நேரடியாக எதிர்க்க யோசிக்கிறான். பியேட்ரிஸின் உந்துதலின் பேரிலேயே சண்டைக்குச் செல்கிறான்.

இங்கே நாம் ஷேக்ஸ்பியரின் காலத்தையும் நினைவில் கொள்வோம். பெண்கள், ஆண்களின் உடைமைகளாக இருந்த நாட்களில் இருந்து, ஒரு பெண்ணை அரசியாக அமர்த்தியிருந்த காலம் அது. அவளும் இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தாள். பெண்களின் நிலை மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் பியேட்ரிஸ் போன்ற வசதியான பெண்கள் படிக்கவும் பயணம் செய்யவும் ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் திருமணம் போன்ற நிறுவனங்களை மட்டுமல்ல, ஆண்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தார்கள். இது பெண்கள்மீதான பொதுவான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

மாறிக் கொண்டிருந்த காலத்தைப் பயத்துடன் பார்த்தவர்கள், முன் போல எதுவும் இல்லை என்றும் மாற்றங்கள் வேகமாக நடக்கிறது என்றும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கே, கிளாடியோ அந்தச் சந்தேகத்தையே பிரதிபலிக்கிறான். தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை எந்த விசாரணையும் இல்லாமல் கூண்டில் ஏற்றி, தண்டனையும் கொடுத்து விடுகிறான். இறுக்கமான சமூகக் கட்டுகள் விடுபடும்போது, அனைத்தும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

பெனெடிக்கும் இதில் இருந்து விதிவிலக்கல்ல. இறுதியில் டான் பெட்ரோவிடம் பேசும்போது, அவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், திருமணத்தின் பின் மனைவியால் ஏமாற்றப்படுவதுதான் எல்லாவற்றிலும் நல்லது என்றும் பேசுகிறான். (Prince, thou art sad; get thee a wife! There is no staff more reverend than one tipped with horn).

பெனெடிக் வேடிக்கையாகப் பேசுவதாக இருந்தாலும், நமக்குச் சற்றுக் கசப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் ஷேக்ஸ்பியரின் காலத்தில் இது சரியாகவே இருந்திருக்க வேண்டும். ஒருவேளை இது ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களிலேயே மிகவும் புத்திசாலிகளான பெனெடிக், பியேட்ரிஸ் இருவரின் திருமணம் பற்றியதாகவும் இருக்கலாம். இருவரும் சண்டைக்குப் பயந்தவர்களோ தோல்வியை எதிர்பார்ப்பவர்களோ இல்லை என்றாலும், திருமணத்தில் இணைவது என்று முடிவு எடுத்தார்கள், இல்லையா?

0

படம்:  ‘Much Ado About Nothing’ The wedding scene by Alfred Elmore

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *