அறிமுகம்
ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் பொதுவாகச் சில பொதுவான கருத்துகளை அடிநாதமாகக் கொண்டிருப்பதை உணரலாம். உதாரணமாக, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை பெரும்பாலான நகைச்சுவை நாடகங்களில் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு மேலேதான் நாடகம் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களில் சிறந்தது Love’s Labour’s Lost என்கிறார் புகழ்பெற்ற இலக்கிய விமரிசகர் ஹெரால்ட் ப்ளூம். துரதிர்ஷ்டவசமாக இது பொதுக் கருத்து இல்லை. உதாரணமாக, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டதாகவே தெரியவில்லை.
தலைப்பு ‘Love’s Labor Lost’என்று எழுதுவதா அல்லது ‘Love’s Labor’s Lost’ என்றெழுதுவதா? எது சரி என்ற கேள்விக்கு இன்னமும் விடை கண்டபாடில்லை. காரணம், எங்கே ஒற்றை மேற்கோள் குறி இருக்கிறது என்பதைப் பொறுத்து ‘காதலின் உழைப்பு வீணானது’ அல்லது ‘காதலுக்காக வீணான உழைப்பு’ என்று அர்த்தம் மாறுபடும்.
கிறிஸ்டோபர் மார்லோ ஷேக்ஸ்பியரின் காலத்திற்குச் சற்று முந்தைய காலத்தின் மிகச்சிறந்த நாடகாசிரியராகக் கருதப்படுபவர். 1594இல் தன்னுடைய இளவயதிலேயே மறைந்த அவரது பாதிப்பு இல்லாத நாடகாசிரியர் அந்தக் காலகட்டத்தில் இல்லை. ஷேக்ஸ்பியரும் விதிவிலக்கல்ல. ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால நாடகங்களில் சில மார்லோவின் நாடகங்கள் என்றும்கூடச் சொல்லப்படுகின்றன. மார்லோவின் பாதிப்பில் இருந்து விடுபட்டு முதலில் எழுதப்பட்ட நாடகங்களில் ஒன்று, ‘வீணான காதல்’.
ஷேக்ஸ்பியர் எழுதியவற்றுள் மிகவும் கவித்துவமான சில வரிகள் இந்த நாடகத்தில் உள்ளன. அதனாலேயே ப்ளூம் இதை மிகச் சிறந்த நாடகம் என்கிறார். கவிதையாகத் தோற்றமளிக்கும் இந்த நாடகம், நவீனக் காலத்தில் பாடல்களுடன் சேர்த்து மேடை ஏற்றப்பட்டிருக்கிறது. நாடகத்தின் ஒலி என்று ப்ளூம் குறிப்பிடுவது இதையே. நாடகம் முழுவதும் இசை தொடர்ந்து வருகிறது. அத்துடன் அவரது ஏனைய நகைச்சுவை நாடகங்களைப் போலவே இதிலும் நாம் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் வார்த்தைகளால் சண்டையிடுவதைப் பார்க்கிறோம். நாடகத்தின் கடைசி அங்கம், அவரது நாடகங்களில் மிகவும் சிறந்தது என்றும் கருதப்படுகிறது.
நாடகத்தின் ஆரம்பத்தில் பெண்களை மயக்குபவர்கள், ஏமாற்றுக்காரிகள் என்று நினைக்கும் ஆண் பாத்திரங்கள், கதையின் முடிவில் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்வதையும் பார்க்க வேண்டும். இதுவுமே பெண்களைப் பற்றிய அந்தக் காலத்து முன்முடிவுகளும் அவை எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன என்பதையும் காட்டுகின்றன.
நாடகத்தை மேலும் அலசுவதற்கு முன், காட்சி சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.
0
அங்கம் 1 – காட்சி 1,2
நவார் நாட்டின் அரசர் தன்னுடைய மூன்று பிரபுக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். புதிதாக ஒரு கல்விச்சாலை ஆரம்பிக்கவேண்டும். பெரௌன், லோங்காவில், டூமைன் ஆகிய மூன்று பிரபுக்களிடமும் அத்தகைய கல்விச்சாலையின் மூலமாகத் தாங்கள் பெறப்போகும் புகழைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அனைவரும் மூன்று வருடங்கள் தன்னுடைய விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கையெழுத்திட்டுத் தரவேண்டும் என்று அரசர் கூறுகிறார். உண்ணாவிரதம், குறைந்த தூக்கம், பெண்களிடம் பேசாமல் இருப்பது என்று எழுதப்பட்டிருக்கும் விதிகளுக்கு மற்ற இருவரும் சம்மதித்தாலும், பெரௌன் மட்டும் தன்னால் அதில் கையெழுத்திட முடியாது என்று சொல்கிறான். ஆனால் அரசர் அவனை வற்புறுத்துகிறார்.
பெரௌன் தன்னிடம் இருக்கும் விதிகளின் பட்டியலை வாசிக்கிறான். ‘மூன்று வருடங்களுக்குள் எவராவது எந்தப் பெண்ணுடனாவது பேசினால், அவர்கள் பொதுவில் அவமானப்படுத்தப்படுவார்கள்’ என்பதை வாசிக்கும் பெரௌன், அந்த விதியை அரசராலேயே பின்பற்ற முடியாது என்கிறான். பிரெஞ்சு இளவரசி விரைவில் அங்கே வரப்போவதால் அவரால் அவளிடம் பேசாமல் இருக்க முடியாது என்கிறான். அரசரும் தேவையேற்பட்டால் விதிகளைத் தளர்த்திக் கொள்ளலாம் என்று சொல்ல, பெரௌன் கையெழுத்திடுகிறான்.
அப்போது காவலதிகாரி டல் கோமாளி காஸ்டர்ட்டுடன் நுழைகிறார். டான் அர்மாடோ தன்னிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறார். அரசர் கடிதத்தை வாசிக்கிறார். ஜாக்குவெனிட்டாவிடம் காஸ்டர்ட் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக அதில் டான் அர்மாடோ குற்றம் சாட்டியிருக்கிறார். அரசர் காஸ்டர்டுக்கு ஒரு வாரம் வெறும் தண்ணியை மட்டுமே குடிக்க வேண்டும் என்று தண்டனை வழங்குகிறார்.
டான் அர்மாடோ தன்னுடைய பணியாளிடம், ஜாக்குவெனிட்டாவின் மீதான தன்னுடைய காதலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது டல், காஸ்டர்ட், ஜாக்குவெனிட்டா ஆகியோரோடு வருகிறார். காஸ்டர்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை டல் தெரிவிக்கிறார். ஜாக்குவெனிட்டாவைத் தான் காதலிப்பதாகத் தெரிவிக்கிறார் அர்மாடோ. அவள் பதில் எதுவும் சொல்லாமல் டல்லுடன் வெளியேறுகிறாள். அர்மாடோ காஸ்டர்ட்டைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறார். தனியே இருக்கும் போது, ஜாக்குவெனிட்டாமீதான காதலால் சத்தியத்தை மீற வேண்டியிருக்கும் என்று சொல்லிக்கொண்டே எழுத ஆரம்பிக்கிறார்.
அங்கம் 2 – காட்சி 1
பிரெஞ்சு நாட்டு இளவரசி தன்னுடைய பரிவாரத்தோடு வருகிறாள். நவார் நாட்டு அரசர் பெண்களுடன் பேசமாட்டார் என்று கேள்விப்பட்டிருந்ததால், தாங்கள் வந்துவிட்டதைத் தெரிவிக்க அவளது பணியாள் போயிதை அனுப்புகிறாள். அவன் சென்ற பின்னர், தன்னுடைய பணிப்பெண்களிடன் அரசரைப் போலவே சத்தியம் மேற்கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றிக் கேட்கிறார். மரியா, லோங்காவில் பிரபு, காதரின் டூமைன் பற்றியும் ரோசலின், பெரௌன் பற்றியும் தெரிவிக்கிறார்கள்.
வேலையாள் போயித் திரும்புகிறான். அரசர் தன்னுடைய சத்தியத்தை உடைக்க விரும்பாததால், அவர்களைத் தன்னுடைய வீட்டில் தங்க வைக்க விரும்பவில்லை என்றும், அவர்கள் அங்கேயே கூடாரங்களில் தங்கிக்கொள்ளலாம் என்றும் சொல்கிறான். அப்போது தன்னுடைய பிரபுக்களுடன் வரும் நவார் நாட்டு அரசர், தன்னுடைய சத்தியத்தின் காரணமாக அவர்கள் அரசவைக்கு அழைக்க முடியவில்லை என்று சொல்கிறார். பிரெஞ்சு இளவரசி அரசியல் சம்பந்தமாகப் பேசுகிறாள். தான் மறுநாள் வருவதாகத் தெரிவித்துவிட்டுக் கிளம்புகிறார். கிளம்புவதற்கு முன் பெரௌன், லோங்காவில், டூமைன் மூவரும் தங்களுக்கு விருப்பமான பெண்களின் பெயர்களைப் போயிதிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் சென்ற பின்னர், நவார் நாட்டு அரசர் இளவரசியின்மீது காதல் கொண்டுவிட்டதாக போயித் தெரிவிக்கிறான்.
அங்கம் 3 – காட்சி 1
காஸ்டர்ட்டைச் சிறையில் இருந்து அழைத்து வருமாறு டான் அர்மாடோ தன்னுடைய வேலையாளை அனுப்புகிறார். அவனும் அழைத்து வருகிறான். இருவரும் விடுகதைகள், வேடிக்கைப் பேச்சுகள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்குவெனிட்டாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும் அதை அவளிடம் சென்று கொடுத்தால் அவனை விடுதலை செய்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார். அவன் சம்மதிக்கவே, அவனிடம் சிறிது பணம் கொடுத்து அனுப்புகிறார்.
அப்போது வரும் பெரௌன், காஸ்டர்ட்டிடம் ரோசலினிற்குத் தன்னுடைய கடிதம் ஒன்றை எடுத்துச் சென்று கொடுக்கும்படிக் கூறுகிறான். காஸ்டர்டுக்கு இன்னமும் சிறிது பணம் கொடுக்கிறான். அவன் சென்றவுடன் தன்னுடைய காதல் குறித்துப் பேசுகிறான்.
அங்கம் 4 – காட்சி 1,2
பிரெஞ்சு இளவரசி வேட்டையாடுவதற்காகச் சென்றிருக்கிறாள். அங்கே வரும் காஸ்டர்ட், இளவரசியிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்து, அவளுடைய தோழிகளில் ஒருத்தியான ரோசலினுக்கு பெரௌன் எழுதியது என்று சொல்கிறான். போயித் அதை வாசிக்கும்போது அது அர்மாடோ ஜாக்குவெனிட்டாவுக்கு எழுதிய கடிதம் என்று தெரிய வருகிறது.
ஹோலோபோர்னேஸ், சர் நதானியேல், டல் மூவரும் அப்போது நடந்த வேட்டையைப் பற்றியும் அதில் கொல்லப்பட்ட மானைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கே ஜாக்குவெனிட்டாவும் காஸ்டர்ட்டும் வருகிறார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தை வாசிக்கச் சொல்லி ஜாக்குவெனிட்டா ஹோலோபோர்னேசைக் கேட்கிறாள். அவனும் வாசிக்கிறான். அது பெரௌன் ரோசலினிற்கு எழுதிய கடிதம். ஹோலோபோர்னேஸ் கடிதத்தில் இருக்கும் கவிதையை விமர்சிக்க ஆரம்பிக்கிறான். அந்தக் கடிதம் ரோசலினிற்குப் பெரௌன் எழுதியது என்றும் அதை அரசரிடம் தெரிவிக்வேண்டும் என்றும் சொல்கிறான்.
அங்கம் 4 – காட்சி 3
ரோசலினுக்குத் தான் எழுதிய கவிதையை எடுத்துக்கொண்டு பெரௌன் நுழைகிறான். வேறு யாரோ வரும் சத்தம் கேட்க, ஒளிந்துகொள்கிறான். நவார் நாட்டின் அரசர் காதல் மயக்கத்தில் வருகிறார். அரசர் காதல் வயப்பட்டு, கவிதை வாசிப்பது பெரௌனிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது சத்தம் கேட்கவே, அரசரும் ஒளிந்து கொள்கிறார். அங்கே லோங்காவில் பிரபுவும் மரியா மீதான காதலில் கவிதை சொல்லிக் கொண்டே வருகிறான். மறுபடியும் வேறொருவர் சத்தம் கேட்க, லோங்காவில்லும் ஒளிந்து கொள்கிறான். இப்போது டூமைன் கேட்டின் மீதான தன் காதலைச் சொல்லிக் கொண்டு, கவிதையாகப் பாடிக் கொண்டு வருகிறான். தன்னைப் போலத் தன்னுடைய நண்பர்கள் காதலில் சிரமப்படவில்லை என்று வருத்தத்துடன் சொல்லவும் செய்கிறான்.
லோங்காவில் வெளியே வந்து டூமைன், தாங்கள் எடுத்துக்கொண்ட சத்தியத்தை உடைப்பதாகச் சொல்கிறான். அப்போது வெளியே வரும் அரசர், லோங்கோவில் மரியாவை பற்றிப் பேசியதைக் கேட்டதாகவும், அவர்கள் இருவரும் சத்தியத்தை உடைத்துவிட்டதாகவும் இருவரையும் திட்டுகிறார். அப்போது வெளியே வரும் பெரௌன், அரசரும் காதலில் உளறியதைத் தான் கேட்டதாகத் தெரிவிக்கிறான். ஆனால் சத்தியத்தை மீறும் பாவத்தைத் தான் ஒருவன் மட்டுமே செய்யவில்லை என்றும், இப்படிப்பட்ட நண்பர்களைப் பெற்றதற்காகத் தான் வருந்துவதாகவும் தெரிவிக்கிறான்.
ஜாக்குவெனிட்டா அப்போது காஸ்டர்ட்டுடன் நுழைகிறாள். பெரௌனின் கடிதத்தைக் காட்டி அது துரோகத்திற்கு ஒப்பான குற்றம் என்று தெரிவிக்கிறாள். கடிதத்தை பெரௌனை வாசிக்கச் சொல்கிறாள். அவனோ அது ரோசலினிற்குத் தான் எழுதியது என்று உணர்ந்து, கிழித்துப்போடுகிறான். ஆனால் டூமைன் அதில் பெரௌனின் பெயர் இருப்பதைத் தெரிந்து கொண்டு தானும் காதலில் இருப்பதை ஒப்புக்கொள்கிறான். நால்வரும் தங்களுடைய காதலிகளில் யார் அழகானவர் என்று சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் காதலில் இருப்பதை உணரும் அரசர், அனைவரும் விதியை மீறிவிட்டதாகச் சொல்கிறார். பெரௌனிடம் தங்களின் காதல் விதிகளுக்கு உட்பட்டது என்பதையும் காதலிப்பது சட்டத்திற்கு உட்பட்டது என்றும் நிரூபிக்கச் சொல்கிறார். இங்கே பெரௌன் காதலுக்கு ஆதரவாக நீண்ட பேச்சை நிகழ்த்துகிறான். பெண்களின் அழகைப் படிப்பதே உண்மையான கல்வி என்றும் சொல்கிறான். எனவே தங்களது விதிகள், உண்மையான கல்வியைத் தங்களுக்குத் தடை செய்துவிட்டது என்கிறான். அரசரும் அதை ஒப்புக்கொண்டு, காதலைத் தொடர்கிறார்.
அங்கம் 5 – காட்சி 1
ஹோலோபர்ன்சும் நதானியேலும் டான் அர்மாடோவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு அறிவு குறைவு என்று கேலி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அர்மாடோவும் காஸ்டர்ட்டும் நுழைகிறார்கள். விருந்தாளிகளாக வந்திருக்கும் பிரெஞ்சு இளவரசிக்கும் மற்றவர்களுக்கும் கேளிக்கைக்காக விருந்தும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருப்பதாக அர்மோடா தெரிவிக்கிறார். அதற்கு உதவுமாறு அவர் ஹோலோபர்ன்ஸ் மற்றும் நதானியேலைக் கேட்டுக் கொள்கிறார். ஒன்பது பெரிய மனிதர்கள் பற்றிய நாடகத்தை நடத்தலாம் என்று ஹோலோபர்ன்ஸ் தெரிவிக்கிறான்.
யார் அந்தப் பாத்திரங்களில் நடிப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹோலோபர்ன்ஸ் தான் அதில் மூன்று பாத்திரங்களை எடுத்துக் கொள்ளப் போவதாகத் தெரிவிக்கிறான். இன்னமும் வேறு திட்டங்களைப் பேசிக் கொள்கிறார்கள்.
அங்கம் 5 – காட்சி 2
அரசர் பரிசாக அனுப்பி இருக்கும் நகையை இளவரசி தன்னுடைய தோழிகளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறாள். நான்கு பெண்களும் காதலைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காதரின் தனது சகோதரி காதலுக்காக உயிரை விட்டதாகச் சொல்கிறாள். பெரௌன் தனக்குக் கவிதைகளும் தன்னுடைய ஓவியம் ஒன்றையும் அனுப்பியிருப்பதாக ரோசலின் கூறுகிறாள். டூமைன் தனக்குக் கடிதமும் கையுறைகளும் அனுப்பி இருப்பதாக காதரின் சொல்கிறாள். லோங்காவில் பிரபுவும் தனக்குக் கடிதமும் முத்து நகையும் அனுப்பியிருப்பதாக மரியா சொல்கிறாள்.
அப்போது போயித் அங்கே வந்து, அரசரும் அவரது பிரபுக்களும் ருஷ்யர்களைப் போல மாறுவேடத்தில் அங்கே வருவதாகத் தெரிவிக்கிறான். இளவரசியும் தோழிகளும் முகமூடி அணிந்து கொண்டு அவர்களைக் குழப்ப வேண்டும் என்கிறாள்.
அரசரும் மற்றவர்களும் ருஷ்யர்களைப் போல உள்ளே வருகிறார்கள். அவர்கள் யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று ரோசலின், இளவரசியைப் போலக் கேட்கிறாள். அரசரும்,அவளை இளவரசி என்று எண்ணிக் கொண்டு அவர்களிடம் பேச வந்ததாகத் தெரிவிக்கிறார். அப்படியே ஒவ்வொருவரும் தங்களது காதலி என்று எண்ணும் பெண்ணிடம் பேசுகிறார்கள். சிறிது நேரத்தில் ரோசலின் அவர்கள் கிளம்பும் நேரம் வந்து விட்டது என்கிறாள். அப்படியே அவர்களும் கிளம்பிவிடுகிறார்கள். அவர்களை எளிதாக ஏமாற்றிவிட்டதாகப் பெண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இப்போது அரசரும் பிரபுக்களும் தங்களது உண்மையான உருவத்தில் வருகிறார்கள். அரசவைக்கு வருமாறு அவர்களை அழைக்கிறார்கள். இளவரசியும் தோழிகளும் அவர்களது சத்தியத்தை உடைக்கத் தாங்கள் காரணமாக இருக்கப் போவதில்லை என்கிறார்கள். அங்கே சில முட்டாள் ருஷ்யர்கள் வந்ததாகக் கூறி, அவர்களைக் கேலி செய்கிறார்கள். இறுதியில், ருஷ்யர்களாக வந்தது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்றும் சொல்கிறார்கள்.
அரசர், தாங்கள் வேடமிட்டு வந்ததை ஒப்புக் கொள்கிறார். இளவரசியும் ரோசலினும் அவர்கள் தங்களது காதலை மாறுவேடத்தில் ஒப்புக்கொண்டதைக் கேட்கிறார்கள். அவர்களது வார்த்தைகளைக் கொண்டே அவர்கள் காதலித்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். தாங்கள் மீண்டும் தங்களது சத்தியத்தை உடைத்ததாக பெரௌன் நொந்து கொள்கிறார்.
நாடகத்தை ஆரம்பிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக காஸ்டர்ட் சொல்கிறான். மீண்டும் அவமானப்படக்கூடும் என்று அரசர் கூறுகிறார். தாங்கள் நடந்து கொண்டதைவிட மோசமாக இப்போது நாடகம் இருக்கப் போகிறது என்று பெரௌன் கூறுகிறார். இளவரசி நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று கூற, நாடகம் ஆரம்பிக்கிறது.
காஸ்டர்ட், ரோமானியத் தளபதி பாம்ப்பேயாக நுழைகிறான். போயத் அவனைக் கேலி செய்கிறான். அனைவரும் போயெதைப் பாராட்டுகிறார்கள். நதானியேல் அலெக்சாண்டராக வருகிறான். மீண்டும் அனைவரும் கேலி செய்கிறார்கள். அலெக்சாண்டரும் பாம்பேயும் வெளியே செல்கிறார்கள். ஹோலோபர்ன்ஸ் யூதாஸாகவும் இன்னொருவன் ஹெர்குலசாகவும் வருகிறார்கள். அனைவரும் ஹோலோபர்ன்சைக் கேலி செய்ய குழப்பம் நேர்கிறது. அனைவரும் மோசமாக நடந்து கொள்வதாக ஹோலோபர்ன்ஸ் சொல்லிவிட்டு வெளியே செல்கிறான். அர்மாடோ ஹெக்டராக வருகிறான். அவன் பேச ஆரம்பிக்கும்போது, காஸ்டர்ட் நுழைந்து, ஜாக்குவெனிட்டா இப்போது கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறான். அர்மாடோ கோபப்பட, மீண்டும் குழப்பமேற்படுகிறது. அர்மாடோவும் காஸ்டர்ட்டும் சண்டையிடத் தயாராகிறார்கள்.
அப்போது நுழையும் தூதன் ஒருவன், இளவரசியிடம் பிரெஞ்சு அரசரைப் பற்றிச் செய்தி கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். தன்னுடைய தந்தை இறந்துவிட்டதை அறிந்த இளவரசி, தான் அன்றிரவே கிளம்பப்போவதாகத் தெரிவிக்கிறாள். அரசரும் மற்றவர்களும் அவர்களைத் தங்கச் சொல்கிறார்கள். அரசர் அடுத்த 12 மாதங்களுக்குத் துறவியைப் போல இருக்கவேண்டும் என்று இளவரசி கூறுகிறாள். அதன் பின்னர், தன்னைத் தேடி வர வேண்டும் என்றும் சொல்கிறாள். காதரினும் மரியாவும் அதையே டூமைன், லோங்கோவில் இருவரிடம் சொல்கிறார்கள். ரோசலினும் அப்படியே பெரௌன் நகைச்சுவையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். பெரௌன் ஒப்புக்கொள்கிறான்.
பெண்கள் அனைவரும் கிளம்பும்போது, அர்மாடோ நாடகத்தின் இறுதியில் பாட வேண்டிய பாடலைப் பாட அனுமதி கேட்கிறான். மேடையில் இருக்கும் அனைவரும் வசந்தம் பற்றிய பாடலைப் பாடுகிறார்கள்.
0
வீணான காதல் – அலசல்
ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களில் திருமணத்தில் முடிவடையாத ஒரே நாடகம் இதுதான். இதுவே பல்வேறு கருத்துகளுக்கும் காரணமாகிறது. நாடகத்தின் முடிவு ஒருவிதத்தில் சோகமாகவே இருக்கிறது. பிரெஞ்சு அரசர் இறந்து, இளவரசி அங்கே கிளம்புகிறாள் என்பதில் என்ன விதமான நகைச்சுவை நாடக முடிவு இருக்கிறது என்பதே இந்த நாடகத்தின் குறித்து எதிர்மறை கருத்துக்கள் வைத்திருப்பவர்களின் விமர்சனம். அது சரியும்கூட.
ஆங்கில மறுமலர்ச்சி காலத்தின் நகைச்சுவை நாடகங்களுக்கு இருந்த சில விதிகளில் முக்கியமானது நாடகம் சுபமாக முடிய வேண்டும் என்பதுதான். அது இங்கே மீறப்படுகிறது. ஆனாலும் ஷேக்ஸ்பியர் இதை நகைச்சுவையாகவே மேடையேற்றுகிறார். இதைக் கொண்டு ஷேக்ஸ்பியர் கலகக்காரர் என்று சொல்பவர்களும் உண்டு. அன்றைய விதிகளை மீறி, பரிசோதனை முறையில் நாடகங்களை நடத்தியவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எவ்விதமாகப் பார்த்தாலும், ஒரு திருப்திகரமான முடிவு இல்லாத நாடகம் இது என்பது பொதுவான விமர்சனமாகும்.
அதே நேரத்தில் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த 16ஆம் நூற்றாண்டில், ஆங்கிலக் கவிதைகளில் காதல் ஒன்று உணர்ச்சிகரமானதாகப் பார்க்கப்பட்டது அல்லது தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது. காதலும் காதலியும் தொடமுடியாத இடத்தில் இருப்பதைக் கண்டு மருகி கவிதை எழுதி, வருந்துவது தெய்வீகக் காதலாகக் கருதப்பட்டது. இன்றும் நாம் இத்தகைய சொல்லாடல்களைக் கேட்கலாம். அடுத்த வகை காதல் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கே ஷேக்ஸ்பியர் இரண்டையும் புறக்கணித்துவிட்டு காதலைக் கேலி செய்கிறார்.
நாடகத்தில் இருக்கும் அனைவரும் காதலிக்கிறார்கள். அவர்களது காதல் அனைத்தும் கேலி செய்யப்படுகிறது. இரண்டு விதமான காதல்களையும் ஷேக்ஸ்பியர் இரக்கமில்லாமல் கேலி செய்கிறார். இறுதியில், அனைவரும் தங்களது நடைமுறைக்கு ஏற்ற ‘சரியான’ முடிவை எடுத்துக் கொள்கிறார்கள். இதை என்ன விதமான காதல் என்று எடுத்துக் கொள்வது? இறுதியில், திருமணமும் நடப்பதில்லை என்பதையும் சேர்த்து யோசித்தால், இந்தக் கேள்வி இன்னமும் சரியானதாகவே தெரியும்.
ஆனால் அதைத் தாண்டி, இந்த நாடகம் இன்னமும் பல விதங்களில் நம்மைக் களிப்படையச் செய்கிறது. ஷேக்ஸ்பியரின் பல நாடக உத்திகளை இங்கே பார்க்கிறோம். குறிப்பாக, அவரது நாடகத்திற்குள் நாடகம் என்கிற உத்தி. அதுவும் மிகவும் திறமையாகக் கையாளப்படுகிறது. அங்கம் ஐந்து, காட்சி ஒன்று, ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் உச்சமான காட்சியாக இதனாலேயே சுட்டப்படுகிறது. அப்போதைய நாடகங்களின் உத்தியை எள்ளலும் துள்ளலுமாக இதில் எடுத்தாண்டு, ஒன்பது பெரிய மனிதர்கள் நாடகம் திட்டமிடப்படுவதை வேடிக்கையாக எழுதியிருப்பார். அந்தக் காட்சியில் இருக்கும் ஆறு சிறு கதாபாத்திரங்களும் வார்த்தைகளால் விளையாடி, ஒருவரை ஒருவர் வெட்டி, ஒட்டி, ஆங்கிலத்தின் முழுச் சாத்தியதையும் கொண்டு வந்திருப்பார்கள். இதனாலேயே இந்தக் காட்சியைத் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்று ஆங்கிலேயே எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் குறிப்பிடுகிறார்.
அது போலவே, முதல் அங்கத்தில், நவார் அரசர் தங்களது உன்னத நோக்கத்தைப் பற்றி ஆற்றும் சொற்பொழிவும் அதன் வெறுமையான வார்த்தை விளையாட்டிற்காகவும் அர்த்தமில்லாத வரிகளுக்காகவும் பாராட்டப்படுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த பகுதி, பெரௌன் அரசரிடம் தாங்கள் காதலிப்பதும் பெண்களின் அழகை ரசிப்பதும் தவறல்ல என்று எடுத்துச் சொல்லும் இடம். ஷேக்ஸ்பியரின் கவிதைகளைவிட மிகவும் உன்னதமான இடம் இங்கே வருகிறது. பெண்களின் கண் அழகை விவரித்து அவன் பேசுமிடம் அபாரமானது. கண்களும் வெளிச்சமும் துள்ளியாடும் அந்த இடத்தின் முக்கியமான வரி, ‘Light seeking light doth light of light beguile’ என்பதாகும்.
இந்த ஒற்றை வரி குறித்துப் பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒப்பிலக்கண அறிஞரும் விமரிசகருமான ஹென்றி லெவின், இந்த வரியை ‘புரிதலைத் தேடும் அறிவு, பகுத்தறிவை முட்டாளாக்கிவிடும்’ என்று சற்று நேரடியாக மொழிபெயர்க்கலாம் என்கிறார். இது ‘லைட்’ என்ற வார்த்தையின் வெவ்வேறு அர்த்தங்களான அறிவு, புத்தி, கண் பார்வை, வெளிச்சம் போன்றவற்றைக் கொண்டு எழுதப்பட்ட வரி. இதே வரியை 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் ராய் கிளாப்பெர் தன்னுடைய நன்றியுரையில் எடுத்துக் காட்டுகிறார்.
ஷேக்ஸ்பியரின் மேதமை இது போன்று பலவிடங்களில் புதைந்து கிடக்கிறது. அதைத் தேடி, கண்டறிந்து, புரிந்து அனுபவிப்பது ஒரு தீராத அனுபவமாக இருக்கும். இதைச் சில நூறு வருடங்களாகப் பல அறிஞர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், நாமும் நம்மால் முடிந்த அளவுக்குப் புதிது புதிதாகப் பல முத்துக்களை எடுத்துக்கொண்டே இருக்கலாம்.
0
படம்: ‘Love’s Labour’s Lost’ Act II, Scene 1, the Arrival of the Princess of France Thomas Stothard (1755–1834) – Royal Shakespeare Company Collection