Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

A Midsummer Night’s Dream

அறிமுகம்

கிரேக்க இலக்கியத்தின் தாக்கம் இல்லாத மேற்கத்திய இலக்கியம் இல்லை. இது ஷேக்ஸ்பியருக்கும் பொருந்தும். குறிப்பாக, ‘ஒரு கோடை இரவின் கனவு’ நாடகத்தில் கிரேக்கத் தாக்கத்தை அழுத்தமாகவே காண இயலும்.

கிரேக்கர்களைத் தோற்கடித்துத் தங்களது அரசை நிறுவிய ரோமானியர்களும் கிரேக்கப் புராண, இதிகாசக் கதைகளைத் தங்களுடையதாக வரித்துக் கொண்டார்கள். கிரேக்கத்தில் இருந்து லத்தீனுக்குக் கடவுள்களின் பெயரை மாற்றிக் கொண்டார்கள். கடவுள்களின் பெயர் வேறாக இருக்குமே தவிர, கதைகள் ஒன்றாகவே இருக்கும். அப்படியான ஒரு கதைதான் வீனசும் அடோனிசும். இதை ஷேக்ஸ்பியர் நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார்.

காதல் மற்றும் காமத்தின் கடவுளான வீனஸ், மனிதனான அடோனிஸ்மீது காதல் கொள்கிறாள். அவனும் அவளை விரும்புகிறான். அவர்களது மகிழ்ச்சியான நாட்களின் முடிவில், அடோனிஸ் ஒரு காட்டுப் பன்றியால் தாக்கப்பட்டு, வீனஸின் கரங்களிலேயே இறந்துவிடுகிறான். வீனஸின் கண்ணீரும் அடோனிசின் ரத்தமும் கலந்து பல காட்டுப்பூக்கள் உருவானதாகக் கிரேக்க, ரோமானியர்கள் நம்பினார்கள். வீனஸ், அடோனிஸ் காதல் கதை பல பிற்காலக் காதல் கதைகளுக்கு அடிப்டையாகவே இருந்திருக்கிறது. சாத்தியமில்லாத காதல் என்பது பல வருடங்களாக மனிதர்களால் விரும்பப்பட்டதாகவே இருக்கிறது.

‘ஒரு கோடை இரவின் கனவு’ இது போன்ற கதையை நகைச்சுவையாகச் சொல்கிறது. இரண்டு காதல் ஜோடிகள், தங்களது காதலைப் பல வேடிக்கையான தடைகளுக்குப் பின்னர் அடைவதுதான் கதை. அதில் கற்பனையை மட்டுமல்ல, நடக்க முடியாத மந்திர, மாயங்களையும் சேர்த்து ஷேக்ஸ்பியர் விருந்து படைக்கிறார்.

ஷேக்ஸ்பியரை வாசித்தவர்களில் ‘ஒரு கோடை இரவின் கனவை’ விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்வார்கள். காதலைப் பற்றிய பெரும் கனவாக விரியும் இந்த நாடகத்தை வாசிப்பது மட்டுமல்ல, மேடையிலும் திரையிலும் காண்பதும் மயக்கும் அனுபவம்தான்.

ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களைப் போலல்லாது இந்த நாடகம் ஒரு பெரிய பிரபுவின் திருமணத்திற்காக எழுதப்பட்டு, மேடையேற்றப்பட்டது. அதுவேகூட நாடகத்தின் கொண்டாட்டமான மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம். ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகங்களைப் பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகள் அல்லது வேற்று மொழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே எழுதினார். ஆனால் இங்கே நாம் எந்த ஒரு பொதுவான கதையின் தாக்கத்தையும் பார்க்க முடிவதில்லை. பல்வேறு கதைகளை அறிஞர்கள் பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படையாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவும் எவ்வளவிற்குச் சரி என்று தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் இது ஷேக்ஸ்பியரின் கதை என்றே கருதுகிறார்கள். ஷேக்ஸ்பியர் சொந்தமாகக் கதைகளை அதிகமாக எழுத முயற்சிக்கவில்லை. பெரும்பாலும் தான் கேள்விப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டே எழுதினார். ஆனால் இங்கே அவர் சொந்தமாக, விரிவான, வழக்கத்தை மீறிய பிரதியை எழுதுகிறார்.

நாடகத்தின் தலைப்பில் இருக்கும் கனவு யாருடையது? பல அறிஞர்களும் இந்த நாடகமே ஒரு கனவு என்பதில் இருந்து, சில காட்சிகள் மட்டும் கனவாக இருக்க வேண்டும் என்பதுவரை பலவிதங்களில் விளக்குகின்றனர்.
ஷேக்ஸ்பியர் உருவாக்கும் உலகம் கனவும் கற்பனையும் உடைய தேவதைகளும் வினோதமான உயிரிகளும் இருக்கும் ஓர் உலகுக்கும் அந்த உலகை கண்டறிந்ததாக அறியப்படும் ஏதென்ஸ் நகரத்துக்கும் இடையிலான ஒரு வெளி. இத்தகைய உலகில் நாமும் எது கனவு, எது நனவு என்ற மயக்கத்திலேயே நாடகத்தை வாசித்து முடித்து விடுகிறோம்.

அங்கம் 1 – காட்சி 1

ஏதென்ஸ் நகரின் பிரபுவான தேசெஸ், தான் மணக்கவிருக்கும் ஹிப்போலிட்டாவுடன் தங்களது திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது திருமணம் இன்னமும் நான்கு நாட்களில் நடக்கவிருந்தது. ஆனால் அதுவரை பொறுமையாக இருக்க முடியாமல், தன்னுடைய நகரக் கொண்டாட்டங்களின் தலைவனான பிலோஸ்ட்ராட்டிடம் உடனடியாகத் திருமணக் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கச் சொல்கிறார். ஏதெனிய இளைஞர்களுக்குக் கொண்டாட நிகழ்வுகளையும் நான்கு நாட்கள் தானும், தான் மணக்கவிருக்கும் பெண்ணும் நேரத்தைக் கடத்த வேடிக்கைகளையும் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். அமேசானியர்களின் ராணியான ஹிப்போலிட்டாவை தேசெஸ் போர்க்களத்திலேயே சந்தித்திருந்தார். ஆனாலும் அவளை மிகுந்த கொண்டாட்டம், ஆடம்பரத்துடன் திருமணம் செய்யவிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது ஏதெனிய குடிமகனான ஏஜெஸ், தன்னுடைய மகள் ஹெர்மியாவுடனும், லைஸாண்டர், டெமெட்ரிஸ் என்னும் இரண்டு ஏதெனிய இளைஞர்களுடனும் உள்ளே வருகிறார். தன்னுடைய மகளை டெமெட்ரிஸ்சிற்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஆனால் அவளோ லைஸாண்டரை விரும்புவதால் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் என்றும் சொல்கிறார். எனவே அவளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

தேசெஸ், ஹெர்மியாவிடம் அவளது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கடுமையாகச் சொல்கிறார். இல்லையென்றால் அவளைக் கன்னியாஸ்திரி மடத்திற்கோ தூக்கு மேடைக்கோ அனுப்பிவிடுவேன் என்று மிரட்டுகிறார். லைஸாண்டர் குறுக்கிட்டு, டெமெட்ரிஸ் காதலில் உண்மையாக இல்லை என்றும், முதலில் ஹெலெனா என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், ஹெர்மியாவைக் கண்டவுடன் அவளைக் கைவிட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறான். தேசெஸ், இது பற்றி ஏஜெஸ் மற்றும் டெமெட்ரிசுடன் தனியாகப் பேசுகிறார். முடிவாக, தனது திருமணம் நடக்கும் தினத்திற்கு முன் ஹெர்மியா முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். லைஸாண்டரையும் ஹெர்மியாவையும் தவிர மற்றவர்கள் வெளியேறுகிறார்கள்.

காதலில் இருப்பவர்கள் சந்திக்கும் சோதனைகளைப் பற்றி லைஸாண்டரும் ஹெர்மியாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘உண்மைக் காதலின் பாதை எப்போதும் கரடுமுரடாகவே இருக்கும்’ என்று லைஸாண்டர் சொல்கிறான். தன்னுடைய அத்தை ஒருத்தி ஏதென்சில் இருந்து இருபது மைல் தொலைவில் இருப்பதாகவும் அதனால் அங்கே ஏதெனியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் சொல்கிறான். மறுநாள் இரவு தன்னுடன் ஹெர்மியா வந்துவிட்டால், அங்கே சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறான். ஹெர்மியா உற்சாகமாக ஒத்துக் கொள்கிறாள்.

டெமெட்ரிஸ் கைவிட்ட ஹெலெனா அங்கே வருகிறாள். தன்னுடைய காதல் தோல்வி அடைந்ததை எண்ணி மிகுந்த சோகத்துடன் இருக்கிறாள். ஹெர்மியாவும் லைஸாண்டரும் தங்களது திட்டத்தை அவளிடம் தெரிவிக்கிறார்கள். அவளுக்கு டெமெட்ரிஸ் கிடைக்க வாழ்த்துகிறார்கள். அவர்கள் வெளியேறியவுடன் ஹெலெனா இந்தத் திட்டத்தை டெமெட்ரிசிடம் தெரிவித்துவிட்டால், அவன் ஹெர்மியாவைப் பின்தொடர்ந்து செல்வான். அப்போது வழியில் இருக்கும் காட்டில் அவனை வழிமறித்து அவனது மனதை மாற்ற முயலலாம் என்று நினைக்கிறாள்.

அங்கம் 2 – காட்சி 2

ஏதென்ஸ் நகரின் மறுபுறம். தேசெஸ் மற்றும் ஹிப்போலிட்டாவின் திருமணக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடக்கவிருக்கும் நாடகத்திற்கான ஒத்திகை பீட்டர் குவின்ஸ் என்ற தச்சனின் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவனை நடத்தவிடாமல் நிக் பாட்டம் என்னும் நெசவாளி தொடர்ந்து பேசிக்கொண்டும் அறிவுரை சொல்லிக் கொண்டும் இருக்கிறான். அவர்கள் ‘பயர்மஸ் மற்றும் திசுபேயின் வருத்தமான நகைச்சுவையும், கொடுமையான மரணமும்’ என்ற நாடகத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் பயர்மஸ் மற்றும் திசுபே என்னும் காதலர்கள், தங்கள் வீட்டுச் சுவற்றில் இருக்கும் துளை ஒன்றின் வழியாகப் பேசிப் பேசித் தங்களது காதலை வளர்க்கிறார்கள். அப்போது திசுபேயை ஒரு சிங்கம் தாக்கி அவளது உடையைக் கிழிக்கிறது. ரத்தத்துடன் கிடக்கும் திசுபேயின் உடையைக் காணும் பயர்மஸ், வருத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது உடலைக் காணும் திசுபேயும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

யார் எந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்வது என்று அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது. நிக் பாட்டம் தன்னுடைய குரல் திசுபேவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்கிறான். அதே நேரத்தில் தன்னால் அருமையாக உறும முடியும் என்பதால், சிங்க வேடமும் தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று குழப்புகிறான். ஒருவழியாகக் குவின்ஸ், அவனுக்குப் பயர்மசின் வேடம்தான் சரியாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ள வைக்கிறான்.

அதே நேரத்தில் சிங்க வேடம் போடப்போகும் ஸ்னக், தன்னால் அந்தப் பாகத்தைக் கற்றுக் கொள்ள முடியாது என்று சொல்கிறான். சிங்கத்துக்கு உறுமுவது மட்டுமே வேலை என்று ஒப்புக்கொள்ள வைக்கிறான். இப்போது அவர்கள் அனைவருக்கும் மேடையில் சிங்கம் உறுமுவது அரசகுலப் பெண்களைப் பயமுறுத்திவிடும் என்றும், உழைப்பாளிகளான அவர்கள் தூக்கு மேடைக்கும் அனுப்பப்பட்டலாம் என்றும் அஞ்சுகிறார்கள். மறுபடியும் குவின்ஸ் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு, மறுநாள் இரவில் ஏதென்ஸ் நகருக்கு அருகில் இருக்கும் காட்டில் ஒத்திகைக்காக ஒன்று கூடலாம் என்று சொல்கிறான். அனைவரும் கலைகிறார்கள்.

அங்கம் 2 – காட்சி 1

ஏதென்ஸ் நகருக்கு அருகில் இருக்கும் காடு. அங்கே இரண்டு தேவதைகள் சந்திக்கின்றன. அவர்களில் ஒருவன் தேவதைகளின் அரசன் ஓபரானின் வேலையாள். மற்றவன் அரசி டைட்டானியாவின் வேலையாள். அரசனும் அரசியும் ஒருவர்மீது கோபமாக இருப்பதால், அவர்களைச் சந்திக்கவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசுகின்றனர். தனக்கு உதவியாக ஓர் இந்தியச் சிறுவனை டைட்டானியா வேலைக்கு எடுத்திருக்கிறாள். ஆனால் அந்தச் சிறுவன் அழகாக இருப்பதால் ஓபரான் அவனைத் தன்னிடம் கொடுக்கக் கேட்கிறான். அதற்கு டைட்டானியா மறுத்ததால் இருவரும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் பேசுகிறார்கள்.

ஓபரானின் வேலையாளாக வந்திருப்பது ராபின் குட்பெல்லோ என்னும் பக். பக் மிகவும் விஷமக்கார தேவதை. அவனுடைய விளையாட்டுகளும் வேடிக்கைகளும் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஒருபுறம் ஓபரான் தன்னுடைய பரிவாரங்களுடனும் மறுபுறம் டைட்டானியா தன்னுடைய பரிவாரங்களுடனும் வருகிறார்கள். இருவரும் நேருக்கு நேராகச் சந்திக்கிறார்கள். தேசெஸ்சிற்கும் ஹிப்போலிட்டாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில், ஏதென்ஸ் நகருக்கு அருகில் வரவேண்டிய காரணம் என்ன என்று மாறி, மாறி குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள். ஓபரான், ஹிப்போலிட்டாவின்மீது மயக்கம் கொண்டிருப்பதாலேயே அங்கு வந்திருக்கிறான் என்று டைட்டானியாவும் டைட்டானியாவிற்கு தேசெஸ்சின்மீது காதல் என்று ஓபரானும் குற்றம் சாட்டுகிறார்கள்.

உரையாடல் இந்தியச் சிறுவனைப் பற்றித் திரும்புகிறது. தன்னிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று ஓபரான் கேட்கிறார். ஆனால் அந்தச் சிறுவனின் தாய் தன்னை உண்மையாக வழிபட்டு வந்தவள் என்றும் எனவே அவனை வளர்ப்பது தன்னுடைய கடமை என்றும் டைட்டானியா தெரிவிக்கிறாள். அத்துடன், தன்னுடைய கானகத்திற்குள் இரவு உலாவிற்கு வரவும் அழைக்கிறாள். ஆனால் அந்தச் சிறுவனைத் தன்னிடம் கொடுக்கும் வரை ஆவலுடன் எங்கும் வரப்போவதில்லை என்று ஓபரான் தெரிவிக்கிறார். டைட்டானியா கோபத்தில் அங்கிருந்து கிளம்புகிறாள். அன்றிரவு முடிவதற்குள் அவளைப் பழிவாங்கப் போவதாக ஓபரான் தெரிவிக்கிறார்.

வெள்ளையும் கருஞ்சிவப்பும் கலந்த காட்டுப்பூ ஒன்றைக் கொண்டு வருமாறு பக்கிற்கு ஓபரான் ஆணையிடுகிறார். அந்த மலரில் இருந்து சாறெடுத்து, அதைத் தூங்குபவரின் கண்களில் பிழிந்துவிட்டால், அவர்கள் கண் விழிக்கும் போது யாரை முதலில் பார்க்கிறார்களோ, அவர்கள்மீது காதல் கொண்டு விடுவார்கள். அந்தச் சாற்றை டைட்டானியாவின் கண்களில் பிழிய போவதாகவும், அவள் அந்தக் காட்டில் இருக்கும் எதாவது ஒன்றின்மீது காதல் கொள்வதைக் கண்டு ரசிக்கப்போவதாகவும், அவள் அந்த இந்திய சிறுவனைத் தன்னிடம் கொடுத்தால் மட்டுமே அவளை அந்த மலரின் தாக்கத்தில் இருந்து விடுவிக்கப்போவதாகவும் ஓபரான் தெரிவிக்கிறார்.

அங்கம் 2 – காட்சி 2

பூவைத் தேடி பக் சென்றவுடன் அங்கே ஹெலெனாவும் டெமெட்ரிசம் வருகிறார்கள். அவர்கள் வந்தவுடன் ஓபரான் தன்னை மறைத்துக் கொள்கிறார். தான் அவளைக் காதலிக்கவில்லை என்றும் அவளைப் பார்க்க விரும்பவில்லை என்றும் தன்னைப் பின்தொடர்வதை அவள் நிறுத்தவேண்டும் என்றும் டெமெட்ரிஸ், ஹெலெனாவிடன் கடுமையாகச் சொல்கிறான்.

லைஸாண்டரையும் ஹெர்மியாவையும் கோபமாகப் பேசிக் கொண்டே, அவர்களைக் கண்டவுடன் தான் ஹெர்மியவை திருமணம் செய்து கொண்டு, லைஸாண்டரைக் கொல்லப்போவதாகத் தெரிவிக்கிறான். தான் அவனை விரும்புவதாக மீண்டும், மீண்டும் ஹெலெனா தெரிவிக்கிறாள். ஆனால் டெமெட்ரிஸ் அவளை அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அவன் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுகிறான். ஹெலெனா அவனைத் தொடர்ந்து செல்கிறாள். ஓபரான் மீண்டும் அங்கே தோன்றுகிறார். அன்றிரவிற்குள் தான் டெமெட்ரியசை ஹெலெனாவின் பின்னே செல்ல வைக்கப் போவதாகத் தெரிவிக்கிறார்.

காதலை வரவழைக்கும் பூக்களுடன் பக் அங்கே வருகிறான். அவனிடமிருந்து பூக்களை எடுத்துக்கொள்ளும் ஓபரான், டைட்டானியா, பூக்கள் மலர்ந்திருக்கும் கரையில் தூங்குவது தனக்குத் தெரியும் என்றும் எனவே அவளது கண்களில் தானே சாறைப் பிழிய போவதாகவும் தெரிவிக்கிறார். அதற்குமுன் ஓபரான் பக்கிடம்,காட்டில் ஒரு ஏதெனிய இளைஞனையும் அவனைத் தொடர்ந்து செல்லும் பெண்ணையும் கண்டால் அந்த இளைஞனின் கண்களிலும் சிறிது சாறு பிழிந்துவிடும்படி சொல்கிறார். அவனது ஏதெனிய உடைகளில் இருந்து அவனை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்கிறார்.

தன்னுடைய உலாவையும் நடனத்தையும் முடித்துவிட்டு, டைட்டானியா ஓடையின் கரையில் தூங்குகிறாள். ஓபரான் மெதுவாக அவளது கண்களில் பூவின் சாற்றைப் பிழிந்துவிடுகிறார். அத்துடன் சில மந்திரங்களும் சொல்கிறார்.

காட்டின் உள்ளே இப்போது லைஸாண்டரையும் ஹெர்மியாவையும் பார்க்கிறோம். தன்னுடைய அத்தை வீட்டிற்குப் புறப்பட்ட லைஸாண்டர், வழி தவறிவிட்டான், எனவே அவர்கள் காட்டில் அலைந்து, திரிந்து களைத்திருந்தார்கள். இரவாகிவிட்டதால் காலை வரை அங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று லைஸாண்டர் சொல்கிறான். அப்படியே அவர்கள் அங்கே உறங்க இடம் பார்க்கிறார்கள். லைஸாண்டர் அவளைத் தன்னருகே படுக்கச் சொல்ல, ஹெர்மியா மறுக்கிறாள். திருமணம் முடியும் வரை அவர்கள் தள்ளி இருப்பது நல்லது என்கிறாள்.

பல இடங்களில் தேடியும் அந்த ஏதெனிய இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சலித்துக்கொண்டே, பக் அங்கே வருகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் லைஸாண்டரையும் சற்று தள்ளி படுத்திருக்கும் ஹெர்மியாவையும் பார்த்து அவர்கள்தான் அந்த இளைஞனும் அவனைப் பின்தொடரும் பெண்ணுமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். பூவின் சாற்றை லைஸாண்டரின் கண்களில் பிழிந்து விடுகிறான்.

அதே நேரத்தில் ஹெலெனா, டெமெட்ரிசைப் பின்தொடர்கிறாள். அவனோ அவளைத் தொடரவேண்டாம் என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து செல்கிறான். அவனைப் பின் தொடர முடியாமல், தன்னால் நடக்க முடியவில்லை என்று ஹெலெனா களைத்து அமர்கிறாள். ஆனால் இருளைக் கண்டு பயத்துடன் அவள் தன்னுடைய காதல் தோல்வியை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாள்.

அப்போது அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் லைஸாண்டரைப் பார்க்கிறாள். அவனை எழுப்பவே, அவன் எழுந்தவுடன் ஹெலெனாவின்மீது காதல் கொள்கிறான். அவளது அழகை வர்ணித்து, அவள்மீது காதல் கொண்டுவிட்டதாகப் பேசுகிறான். அவள் தன்னைக் கேலி செய்வதாக எண்ணும் ஹெலெனா, அவனுக்கு ஹெர்மியாவை நினைவுபடுத்துகிறாள். அவனோ ஹெலெனாவிற்கு முன் ஹெர்மியா ஒன்றுமில்லை என்கிறான். அவன் இன்னமும் தன்னைக் கேலி செய்வதாக எண்ணி கோபமடையும் ஹெலெனா அங்கிருந்து வெளியேறுகிறாள். லைஸாண்டரும் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறான். சிறிது நேரம் கழித்து எழும் ஹெர்மியா லைஸாண்டரைக் காணாமல் அதிர்ச்சியுடன் காட்டிற்குள் அவனைத் தேடி செல்கிறாள்.

அங்கம் 3 – காட்சி 1

காட்டின் உள்ளே நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. பல பிரபுக்களுக்கு முன் நாடகத்தை நடத்தவிருப்பத்தால், சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பாட்டம் சொல்கிறான். பயர்மஸின் தற்கொலையும் சிங்கமும் பெண்களைப் பயமுறுத்தும் என்பதால் நாடகத்திற்கு முன் சிங்கம் உண்மையில் சிங்கமல்ல என்றும் தற்கொலைக்கு உபயோகப்படுத்தும் வாளும் உண்மையில் வாள் இல்லை என்றும் ஓர் அறிவிப்பைச் சேர்க்க வேண்டும் என்கிறான்.

ஒத்திகை நடக்கும்போதே பக் அங்கே வருகிறான். அவர்கள் நடிக்க முயற்சி செய்வதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது மற்றவர்களிடம் இருந்து பாட்டம் சிறிது விலகி வரவே, அவனது தலையைக் கழுதையின் தலையாக மாற்றிவிடுகிறான். மீண்டும் ஒத்திகைக்குப் பாட்டம் நுழையும்போது, அவனைப் பார்த்து பயந்து அனைவரும் ஓடிவிடுகிறார்கள். குழப்பத்துடன் பாட்டம் அங்கே இருந்து மெல்ல நகர்கிறான்.

அதே இடத்தில் டைட்டானியா தன்னுடைய தூக்கத்தில் இருந்து எழுகிறாள். அங்கே கழுதை தலையுடன் இருக்கும் பாட்டம்மீது காதல் கொள்கிறாள். தன்னுடனே அவன் இருக்கவேண்டும் என்று சொல்லி, அவனைக் கட்டி தழுவுகிறாள். அவனது விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற, அவனுக்கு நான்கு தேவதைகளை வேலையாட்களாக நியமிக்கிறாள். தன்னுடைய தலை, கழுதை தலையாக மாறிவிட்டதை அறியாத பாட்டம் தன்னுடைய தோழர்கள் முட்டாள்கள் என்று சொல்லி அந்தத் தேவதைகளுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவன்மீது தீராத காதலோடு டைட்டானியா பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

அங்கம் 3 – காட்சி 2, 3

காட்டின் மறுபுறம் டைட்டானியா, கழுதை தலையுடன் இருக்கும் பாட்டம்மீது காதல் கொண்டுவிட்டதை பக், ஓபரானிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய திட்டம் நன்றாக வேலை செய்வதாக ஓபரான் மகிழ்ச்சி அடைகிறார். லைஸாண்டரிடம் இருந்து பிரிந்துவிட்ட ஹெர்மியா, டெமெட்ரிசைப் பார்த்து அவனிடம் செல்கிறாள். தான் முன்பு பார்த்த பெண், வேறொரு ஆணுடன் இருப்பதைப் பார்த்து பக்கும், தான் காதலில் விழச்செய்யச் சொன்ன ஆண், வேறொரு பெண்ணுடனும் இருப்பதைப் பார்த்து ஓபரானும் ஆச்சரியப்படுகிறார்கள். தனது திட்டம் குழப்பப்பட்டுவிட்டதை உணரும் ஓபரான், தன்னுடைய தவறைச் சரி செய்யும்படி பக்கிற்கு உத்தரவிடுகிறார்.

லைஸாண்டர் எங்கிருக்கிறான் என்று ஹெர்மியா டெமெட்ரிசைக் கேட்கிறாள். ஆனால் தன்னை நிராகரித்துவிட்டு ஹெர்மியா லைஸாண்டரை விரும்புகிறாள் என்று வெறுப்புடன் பேசும் டெமெட்ரிஸ், தனக்குத் தெரியாது என்று சொல்கிறான். ஆனால் ஹெர்மியா கோபமாக அவனது பின்னே சென்று கொண்டிருக்கிறாள். எரிச்சலடையும் டெமெட்ரிஸ் தான் அங்கேயே படுத்து ஓய்வெடுக்கப்போவதாகச் சொல்லிவிடுகிறான். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு ஹெர்மியா அங்கிருந்து சென்றுவிடுகிறாள்.

ஹெர்மியா அங்கிருந்து சென்றவுடன், ஹெலேனாவைக் கண்டுபிடித்து அழைத்துவர பக்கை அனுப்பிவிட்டு ஓபரான் டெமெட்ரிஸ்சின் கண்களில் பூவின் சாற்றைப் பிழிந்துவிடுகிறார். அப்போது லைஸாண்டர் தன்னுடைய காதலைச் சொல்லிக்கொண்டிருக்க, ஹெலெனா அங்கே வருகிறாள். இன்னமும் ஹெலெனா அவனிடம் கோபமாகத் தன்னைக் கேலி செய்வதை நிறுத்தும்படியாகக் கேட்கிறாள். இந்தச் சண்டையின் சத்தத்தில் எழுந்து கொள்ளும் டெமெட்ரிஸ், ஹெலெனாவைக் கண்டவுடன் காதலில் விழுந்துவிடுகிறான். அவனும் ஹெலெனாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறான். லைஸாண்டரும் டெமெட்ரிஸும் தங்களுக்குள் யார் ஹெலெனாவை உண்மையாகக் காதலிக்கிறார்கள் என்று சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். இருவரும் சேர்ந்து கொண்டு தன்னைக் கேலி செய்வதாக நினைக்கும் ஹெலெனா இருவரையும் நம்ப மறுக்கிறாள்.

லைஸாண்டரின் குரலைக் கேட்டு அங்கே வரும் ஹெர்மியா லைஸாண்டரும் டெமெட்ரிஸும் அங்கே ஹெலெனாவின் காதலுக்காக வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை நம்ப முடியாமல் பார்க்கிறாள். தன்னைக் கேலிபண்ணும் இந்தத் திட்டத்தில் ஹெர்மியாவும் பங்கெடுத்திருக்க வேண்டும் என்று ஹெலெனா கோபப்படுகிறாள். தன்னுடைய நட்பை அவள் அவமானப்படுத்துவதாக ஹெர்மியா பதிலுக்குச் சொல்கிறாள். அதற்குள் லைஸாண்டரும் டெமெட்ரிஸும் வாள் சண்டையிடத் தயாராகிறார்கள். ஹெர்மியா லைஸாண்டரைத் தடுக்க முயல்கிறாள். சுற்றிவளைக்கும் பாம்பு போல அவள் தன்னைத் தொடுவதாக லைஸாண்டர் சொல்லவே, ஹெர்மியா அதிர்ச்சி அடைகிறாள். எப்படியோ ஹெலெனா, லைஸாண்டரை மயக்கிவிட்டாள் என்று அவளுக்கும் கோபம்வர, ஹெலெனாவின் கண்களைத் தோண்டப்போவதாகக் கோபமாகச் சொல்கிறாள்.

தன்னைவிட ஹெர்மியா நன்றாகச் சண்டையிடுவாள் என்று ஹெலெனா பயப்படுகிறாள். அவளை ஹெர்மியாவிடம் இருந்து காப்பற்றுவதாக லைஸாண்டரும் டெமெட்ரிஸும் உறுதியளிக்கின்றனர். அதற்கும் அவர்கள் இருவரும் மீண்டும் சண்டையிட ஆரம்பிக்கின்றனர். காட்டிற்குள் சென்று தங்களது பிரச்சினையை வாள் சண்டை மூலமாக முடித்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். ஹெலெனா ஹெர்மியாவிடமிருந்து ஓடுகிறாள். எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாக ஹெர்மியா ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.

இரவுக்குள் எல்லாவற்றையும் சரி செய்துவிட வேண்டும் என்று அனைத்தையும் மறைந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஓபரான் பக்கிடம் சொல்கிறார். பக்கும் லைஸாண்டரையும் டெமெட்ரிசையும் தொடர்ந்து செல்கிறான். லைஸாண்டரும் டெமெட்ரிஸும் காட்டிற்குள் தொலைந்துவிடுகின்றனர்.

அங்கம் 4 – காட்சி 1

ஏதெனிய காதலர்கள் அனைவரும் களைத்து தூங்கி கொண்டிருக்கிறார்கள். கழுதை தலையுடைய பாட்டமுடனும் மற்ற பரிவாரங்களுடனும் டைட்டானியா நுழைகிறாள். பாட்டமின் கழுதை தலையைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, அவனது தலையில் ரோஜாப்பூக்களை வைத்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறாள். அவனது ‘பெரிய காதுகளில்’ முத்தமிடுகிறாள். சுற்றியுள்ளவர்களைத் தனது தலையைச் சொறிந்துவிடச் சொல்கிறான் பாட்டம். அவனுக்குப் பசியிருக்கிறதா என்று டைட்டானியா கேட்கிறாள். தனக்கு வினோதமாக வைக்கோல் சாப்பிடத் தோன்றுவதாகப் பாட்டம் கூறுகிறான். அவனுக்கு அணில்கள் சேகரித்து வைத்திருக்கும் பருப்புகளைக் கொண்டு வரப்போவதாக டைட்டானியா சொல்கிறாள். அப்படியே இன்னமும் பல காதல் வசனங்களைப் பேசிக் கொண்டே இருவரும் உறங்குகிறார்கள்.

ஓபரானின் பழிவாங்கும் படலம் வெற்றிகரமாக முடிந்ததாக பக், ஓபரானிடம் சொல்கிறான். கழுதை தலையை உடைய பாட்டமிடம் அவள் காதல் கொண்டிருப்பதைச் சொல்லி கேலி செய்ததாகவும் அந்த இந்தியச் சிறுவனைத் தன்னிடம் கொடுத்தால் தானே அவளை அந்த மயக்கத்தில் இருந்து விடுவிப்பதாகவும் அவளிடம் சொல்லிவிட்டதாகத் தெரிவிக்கிறார். தூங்கி கொண்டிருக்கும் டைட்டானியாவின் காதுகளில் மாற்று மந்திரத்தைச் சொல்லி, அவளை மயக்கத்தில் இருந்து விடுவிக்கிறார். தான் ஒரு கழுதையுடன் தூங்குவதைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். இசை பரவுகிறது. டைட்டானியாவும் ஓபரானும் நடனமாடுகிறார்கள். காலை பொழுது விடியவே, அவர்கள் அங்கிருந்து மறைகிறார்கள். பக் பாட்டமின் காதுகளில் மாற்று மந்திரம் சொல்லி அவனையும் பழைய நிலைக்கு மாற்றிவிடுகிறான்.

விடியும்போது காட்டிற்குள் தேசெசும் ஹிப்போலிட்டாவும் ஏஜெஸ்சும் தங்களது வேட்டைநாய்கள் மற்றும் பரிவாரங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே ஏதெனிய காதலர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை எழுப்பிவிடுகிறார்கள். காதலர்களுக்கும் இரவில் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அல்லது மிகவும் குறைவாகவே நினைவில் இருக்கிறது. அவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஹெர்மியாவை லைஸாண்டரும் ஹெலெனாவை டெமெட்ரிசும் காதலிப்பது மட்டும்தான். தேசெஸ் அனைவரையும் தனது திருமண விருந்திற்கு வருமாறு ஆணையிடுகிறார். அவர்கள் சென்றவுடன் பாட்டமும் எழுந்து கொள்கிறான். தன்னுடைய கனவை எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொள்கிறான். அது குறித்துத் தங்களது நாடகத்தின் இறுதியில் ஒரு பாடலை எழுதச் சொல்லவேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறான்.

அங்கம் 4 – காட்சி 2

குவின்ஸின் வீட்டில் நாடக ‘நடிகர்கள்’ அனைவரும் கவலையோடு இருக்கிறார்கள். தொலைத்துவிட்ட அவர்களது நண்பன் பாட்டமைப் பற்றிய கவலை. அவனை இறுதியாக அவர்கள் பார்த்தது அந்தக் கழுதைத் தலை பூதத்தைப் பார்த்தபோதுதான். அந்தப் பூதம் அவனைக் கொன்றிருக்குமோ? இன்னமும் சிலர் அவனைத் தேவதைகள் மந்திரம் செய்து மறைய செய்திருக்கலாம் என்றார்கள். ஆனால் பாட்டம் இல்லாமல் தங்களால் நாடகம் நடத்த முடியாது என்பதில் அனைவரும் ஒத்துப் போனார்கள். பாட்டம் மட்டுமே ஏதெனிய நகரத்தின் மிகவும் புத்திசாலியான, வேடிக்கையான மனிதன் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வரும் ஸ்னக், தேசெஸ் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவருடன் இன்னமும் சில பிரபுக்களும் திருமணம் செய்துகொண்டனர் என்றும் தெரிவிக்கிறான். அவர்கள் நாடகத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தான். நாடகத்தில் மட்டும் பாட்டம் நடித்தால், தேசெஸ் பிரபு அவனுக்குப் பணம் கொடுத்து பாராட்டியிருப்பார் என்றும் வருத்தமாகச் சொல்கிறான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளே வரும் பாட்டம், அனைவரும் ஏன் சோகமாக இருக்கிறார்கள் என்று கேட்கிறான். முந்தைய இரவு காட்டில் தான் ஒரு ஆச்சரியமான சாகசத்தில் இருந்ததாகத் தெரிவிக்கிறான். ஆனால் அதைச் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை என்றும், அவர்கள் அனைவரும் நாடக உடைகளை அணிந்து, நாடகம் நடத்த கிளம்பவேண்டும் என்றும் தெரிவிக்கிறான்.

அங்கம் 5 – காட்சி 1

தேசெஸ்சின் மாளிகை. தேசெஸ், ஹிப்போலிட்டாவிடம் தன்னிடம் ஏதெனிய இளைஞர்கள் சொன்ன கதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் அந்தக் கதைகளை எல்லாம் நம்பவில்லை என்றும், இரவின் இருட்டும் காதலின் மயக்கமும் அவர்களின் கற்பனையைத் தூண்டியிருக்கும் என்றும் சொல்கிறார். ஆனால் ஹிப்போலிட்டா, அவர்கள் சொல்வது கதை என்றால், எப்படி அனைவரும் ஒன்றுபோலச் சொல்லமுடியும் என்று கேட்கிறாள்.

அப்போது லைஸாண்டரும் டெமிட்ரிசும் தங்களது மனைவிகளோடு உள்ளே வருகிறார்கள். உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் தேசெஸ், படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு நாடகம் பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார். ஏஜெஸ் நாடகங்களின் பட்டியலை வாசிக்கிறார். அதில் பயர்மஸ் மற்றும் திசுபேவின் கதையைத் தொழிலாளர்கள் நாடகமாக நடிக்க இருக்கிறார்கள் என்றும் ஆனால் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் தேசெஸ் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதையே பார்க்கலாம் என்று சொல்கிறார்.

நாடகம் ஆரம்பிக்கிறது, குவின்சும் பாட்டமும் நாடகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். குவின்ஸ் தவறாக உச்சரித்து நாடகத்தை ஆரம்பிக்கிறான். அடுத்த நடிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மோசமாகப் பேசி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கும் பெண்கள் அனைவரும் அதையே கேலியாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கமாக வரும் ஸ்னக், உள்ளே நுழையும்போதே தான் உண்மையில் சிங்கமல்ல என்று நீண்ட விளக்கம் அளிக்கிறான். பயர்மசாக பாட்டம், திசுபேவை மிகவும் குழப்பமான காதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாகச் சிங்கம் திசுபேவை கொல்ல முயன்று, பயர்மஸ் தற்கொலை செய்து கொள்கிறான். திசுபேவும் தற்கொலை செய்து கொள்கிறாள். இறுதியாக ஒரு நடனமாடிக் கொள்வதாகச் சொல்லி, பாட்டம் நடனம் ஆடுகிறான்.

அங்கம் 5 – முடிவு

இரவு வந்தவுடன், பக் மாளிகைக்கு வருகிறான். இரவாகிவிட்டதால் தேவதைகள் அங்கே வரப்போவதாகத் தெரிவிக்கிறான். ஓபரானும் டைட்டானியாவும் வருகிறார்கள். மாளிகையில் இருப்பவர்களைப் பாடலின் மூலமாக வாழ்த்துகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக அன்புடன் அழகான பிள்ளைகளைப் பெற்று வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறார்கள். பக்கைத் தவிர அனைவரும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள். நாடகம் மோசமாக இருந்தததாகப் பார்வையாளர்கள் நினைத்தால், அதைக் கனவாக எண்ணி மறந்துவிடலாம் என்று பக் தெரிவிக்கிறான். நன்றாக இருந்தால், அனைவரும் கைதட்டி வரவேற்கலாம் என்றும் சொல்கிறான்.

0

ஒரு கோடை இரவின் கனவு – அலசல்

நாம் காணும் உலகமே யாரோ ஒருவரின் கனவு என்று சொல்லப்படுவதுண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் நாம் ஒரு கனவுலகமாகவே காணலாம். அதிலும் ஷேக்ஸ்பியரின் மேதமையை ‘ஒரு கோடை இரவின் கனவில்’ பார்க்கலாம்.

நாம் முன்பே கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்போம். நாடகம் முழுவதுமே பாட்டம் விவரிப்பது போலவே இருப்பதால், இதைப் பாட்டம் கண்ட கனவாகக் கருதலாம். அதற்கான சில குறிப்புகளும் நாடகத்தில் இருக்கிறது. ஆனால், முடிவுரையில் பேசும் பக் நாடகத்தைப் பார்வையாளர்களின் கனவு என்று கூறுகிறான்.

Think but this, and all is mended:
That you have but slumbered here,
While these visions did appear.

பக், பார்வையாளர்களின் அனுபவத்தையே கேள்விக்கு உட்படுத்துகிறான். நாடகத்தில் நடந்த மாய நிகழ்வுகளை எல்லாம் நாடக பாத்திரங்கள் கனவாகவே எண்ணுகிறார்கள். அப்படியே நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இதை ஒரு கனவாக எண்ணிவிடவேண்டும் என்று கூறுகிறான்.

மற்ற நாடகங்களைப் போலில்லாமல் இங்கே நாம் கதையை நகர்த்துபவராக, கதையின் முன்னணிப் பாத்திரமாக பாட்டம் என்ற சாதாரண நெசவாளியை பார்க்கிறோம். அவனே கதையை முழுவதுமாக நெய்து முடிக்கிறான். அந்தச் சாதாரண மனிதனின் கனவின் கதையாகவும் நாடகத்தை நாம் பார்க்கலாம். பாட்டம் கதையில் கோமாளியாக அல்லாமல், வெகுளியாகவே வருகிறான். அவனது தலை கழுதையாக மாறிய பின்னரும், அவன் தன்னுடைய குணத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை.

அது மட்டுமல்லாமல், நாடகத்தில் வரும் தேவதைகளுடன் பேசும் ஒரே பாத்திரமும் பாட்டம் மட்டுமே. அவனும், டைட்டானியாவும் கொண்ட காதலில் காமமும் இருந்ததா என்ற கேள்வி குறித்துப் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அது ஒருபுறமிருக்க, பாட்டம் அந்தக் கனவுலகிலும் நனவுலகிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தன்னைப் போலவே இருக்கும் மனிதர்களிடமும் டைட்டானியாவின் பரிவாரங்களிடமும் ஒன்றுபோலவே நடந்து கொள்கிறான்.

அவனைப் பொறுத்தவரை கனவிற்கும், நனவிற்கும் நடுவே எந்தவித வித்தியாசமும் இல்லை. 16ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு மறுமலர்ச்சியின் பெரும் தத்துவவாதியான மைக்கேல் மாண்டேய்ன், தன்னுடைய ‘அனுபவம் குறித்து’ என்ற கட்டுரையில் ‘உலகின் மிகப்பெரிய சிம்மாசனத்திலும் மனிதன் தன்னுடைய பிருஷ்டத்தின் மேலேயே அமரவேண்டும்’ என்று சொன்னது ஷேக்ஸ்பியருக்கும் தெரிந்திருக்கத்தான் வேண்டும்.

கதையின் இன்னொரு முக்கியப் பாத்திரம் பக் என்னும் ராபின் குட்பெல்லோ. அவனது சேட்டைகளும் வேடிக்கைகளும் பாட்டமின் பாத்திரத்திற்கு நேரெதிராக இருக்கிறது. ஆனால் அவனும் ஓபரானின் வேலையாளாக, ஒரு சாதாரண ‘தேவதையாகவே’ வருகிறான். அவனது பெயரின் அர்த்தமே சாத்தான் என்பதுதான். ஓபரானின் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர, அவன் நாடகத்தில் செய்யும் ஒரே சேட்டை, பாட்டமின் தலையைக் கழுதை தலையாக மாற்றுவதுதான். எனவே கதையில் பக்கும், தன்னுடைய சாத்தான் என்ற அர்த்தத்தையும் மீறி, நல்லவனாகவே இருக்கிறான். பக்கிற்கும் பாட்டமிற்கும் இடையிலான வேறுபாட்டிலேயே கனவு நிகழ்கிறது.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எல்லாம் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளில் இருந்தும் வேறு இடங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை என்று பார்த்தோம். ஆனால் அதிலும் இந்த நாடகத்தின் பாத்திரங்கள் பல்வேறு முந்தைய கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு நெய்யப்பட்டவை. கிரேக்க வரலாற்று எழுத்தாளரான ப்ளுட்டாக் எழுதிய தேசெஸ்சின் வரலாற்றில் வரும் வரலாற்று கதாபாத்திரமான தேசெசே ஷேக்ஸ்பியரின் ஏதெனியப் பிரபு. ஆனால் ப்ளுட்டாக்கின் தேசெஸ் பெண் பித்தன். ஆனால் இங்கே நாம் காணும் தேசெஸ், அதைக் கடந்து திருமணத்திற்குத் தயாராகிவிட்டவன். அது போலவே ஆங்கிலக் கவியான எட்மண்ட் ஸ்பென்சரின் நீண்ட கவிதையான ‘ ஃபேரி குயினில்’ வரும் சிறு பாத்திரமான ஒபரான் இங்கே முதன்மை பாத்திரமாக வருகிறார்.

மற்ற நகைச்சுவை நாடகங்களைப் போலவே இங்கும் ஷேக்ஸ்பியர் காதலை அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார். கண்டதும் காதல் குறித்த அவரது புகழ்பெற்ற கதை இன்னமும் எழுதப்படவில்லை. ஆனால் இங்கே அவர் கண்டதும் காதல் என்பதை அபத்தமாகவே எழுதியிருக்கிறார். லைஸாண்டரும் டெமெட்ரிசும் மாறி, மாறிக் கண்டதும் காதல் கொள்கிறார்கள். களைத்துப் போய்த் தூங்கவும் செய்கிறார்கள். நமது கேள்வியெல்லாம் லைஸாண்டர் ஹெலெனாவையும் டெமெட்ரிஸ் ஹெர்மியாவையும் திருமணம் செய்திருந்தால் என்னவாகி இருக்கும்?

ஒன்றும் ஆகியிருக்காது என்றே ஷேக்ஸ்பியர் சொல்கிறார். அப்படியென்றால் காதல் என்பதற்கு என்னவிதமான மதிப்பை தரவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நாடகத்திலோ அல்லது மற்றவற்றிலோ திருமணத்திற்குப் பிறகான வாழ்வு துயரத்தை நோக்கிச் செல்வதாக ஷேக்ஸ்பியர் கருதுவதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. பக் தனது தவறைச் சரி செய்யாமல் விட்டிருந்தால், ஹெலெனாவும் ஹெர்மியாவும் வருந்தியிருப்பார்களா அல்லது தங்களது துணையை மாற்றிக்கொண்டு மகிழ்வாக இருந்திருப்பார்களா என்பதை நாமே யோசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஷேக்ஸ்பியரின் மற்ற நாடகங்களைப் போலவே இங்கும் நாடகத்திற்குள் ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. மிகவும் மோசமாகத் தயாரிக்கப்பட்டு நடிக்கப்படும் அந்த நாடகத்தில் அனைவரும் ஒரு காதல் கதையை முழுவதுமாகச் சிதைத்து, அதையும் நகைச்சுவையாக்கி விடுகிறார்கள். தன்னுடைய நாடகத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது கனவையும் பாடலாக எழுத சொல்ல வேண்டும் என்று பாட்டம் சொல்கிறான்.

இந்த நாடகம் ஒரு பிரபுவின் திருமணக் கொண்டாட்டத்தின் பகுதியாக எழுதப்பட்டது என்று பார்த்தோம். அந்தத் திருமணக் கொண்டாட்டத்திற்கு முதலாம் எலிசபெத் மகாராணியும் வந்து, நாடகத்தைக் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர் நாடகத்தில் சொல்லப்படும் காதலின் அபத்தங்களைக் கண்டு ரசிக்கவே செய்திருப்பார் என்று நம்பலாம். இறுதியாக, இங்கே தூக்கத்தில் இருந்து எழும் பாட்டம் சொல்லும் வார்த்தைகளோடு முடிக்கலாம். அதுவே பொருத்தமாக இருக்கும்.

‘மிகவும் அரிதான கனவை கண்டேன். என்ன கனவு என்று சொல்லக்கூடிய மனிதனின் அறிவிற்கும் அப்பாற்பட்டதான கனவு. இதை விவரிக்க முயலும் எவனையும் நான் கழுதை என்றே சொல்லுவேன்.’

0

படம்:  ‘A Midsummer Night’s Dream’ The Quarrel of Oberon and Titania, 1849  by Sir Joseph Noel Paton, Scottish National Gallery, Edinburgh, UK.

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *