Skip to content
Home » சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

சிவ தாண்டவம்

பொருள் ஈட்டுதல், காமத்தைத் துய்த்தல் (புலன் இன்பங்களைத் துய்த்தல்) ஆகிய இரண்டுமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும்; அதுவே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாக்கும் என்று பிராமணர்கள், லௌகிக – வெளிவட்ட வாழ்க்கையை வாழ விரும்புபவர்களுக்கு விதி வகுத்திருக்கிறார்கள்.

தர்மம் என்றால் சமூக ஒழுங்கைக் காப்பாற்ற உதவும் ஒழுக்கம் என்று அர்த்தம். ‘தர்மத்தின் மூலமே நாகரிகம் நிலைநிறுத்தப்படுகிறது’ என்று மத்ஸ்ய புராணம் 145:27 தெரிவிக்கிறது. சமூக நடைமுறை, ஒழுக்க விதி, ஒழுங்கு, கடமை, நேர்மை அல்லது மத நம்பிக்கை என்று இதைப் புரிந்துகொள்ளலாம். நவீன மேற்குலகில், சந்தைச் சக்திகளின் தார்மிக அடிப்படையிலான போட்டியின் மூலம் இந்தச் சமூக நிலை எட்டப்படுகிறது.

சுய முனைப்பு துளியும் இல்லாதவர்களின் படைப்பூக்கம் மிகுந்த சிந்தனைகளால் வழிநடத்தப்படாதவரையில் எந்தவொரு சமூகமும் முன்னேறமுடியாது. இவர்களை நாம் நாயகர்கள், காவலர்கள், பிராமணர்கள், சாமுராய்கள் அல்லது மேதைமை மிகுந்தவர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இவர்கள்தான் ஒரு சமூகத்தைத் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.

தூய்மைவாதம் இளம் வயதிலேயே புலனடக்கத்தை வலிந்து திணிக்க விரும்புவதாக இருக்கிறது. முழுமையான ஒழுக்கம், ஒரே உயரிய தத்துவம் என்ற நடைமுறை சாத்தியமற்றதும் முழுவதும் கோட்பாட்டு ரீதியிலானதுமான கொள்கைகளின் அடிப்படியில் இது முன்வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாகத் தொழில்மய சமூகம் இருக்கிறது. அது சந்தையின் போட்டிகளையும் சுய நல முனைப்பையும் இயல்பானதாக ஏற்கிறது. தத்துவம், ஒழுங்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை மறுதலிக்கிறது.

பிராமண சமூகவியல் அதனுடைய வலுவான தத்துவார்த்த அடிப்படைகளின் காரணமாக இந்த இரண்டு அணுகுமுறைகளில் இருக்கும் குறைகளையும் எளிதில் தவிர்த்துவிடுகிறது. ஒவ்வொருவருடைய சமூக, ஆன்மிக நிலைக்கு ஏற்ப அவரவருக்கான ஸ்வ தர்மம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. அதுபோலவே ஈஸ்வரன் பல வடிவங்கள் கொண்டவர் என்பதையும் முன்வைக்கிறது. இதை மிஷனரிகள் பல தெய்வக் கோட்பாடு என்று மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டனர்.

ஆன்ம ஞானமே மனித வாழ்க்கையின் ஒரே இலக்கு; அதேநேரம் இதை எடுத்த எடுப்பிலேயே சுய நல, சுய மைய சிந்தனைகளில் இருந்து மேலெழாத சமூக உறுப்பினர்கள் மேல் திணிப்பது சரியாக இருக்காது என்று பிராமணர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தனர். மனிதர்களின் இயல்புநிலை பற்றிய இந்தப் புரிதலே பிராமணச் சமூகவியல் பிற சமூக அமைப்புகளைவிட மேலானதாக விளங்க முக்கியமான காரணமாகத் திகழ்கிறது.

இந்த இடத்தில் நாம் கொஞ்சம் கிளை பிரிந்து மறு பிறவிக் கோட்பாடு பற்றிப் பார்த்தாகவேண்டும். அது முடிவற்ற வாழ்க்கைச் சுழலை முன்வைக்கிறது. இந்தக் கோட்பாடு பிராமணச் சமூகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் நடைமுறையாக்கம் பற்றி நாம் தெளிவாகப் புரிந்துகொண்டாகவேண்டும்.

மறுபிறவிக் கோட்பாடு என்பது ஒரு மூட நம்பிக்கை; அதை நம்மால் திறம்பட மறுதலிக்க முடியும்பட்சத்தில் (‘முடியும்பட்சத்தில்’ என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும்) அதற்கு எந்தவொரு நடைமுறை முக்கியத்துவமும் இருக்கவே முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. அணுக்களும் எலக்ட்ரான்களும் கூட வெறும் குறியீடுகள்தான். கோலிக்குண்டுகள்போல் நம்மால் கண்ணால் பார்க்க முடியக்கூடியவை அல்ல; மிகப் பெரிய நுண்ணோக்கி கொண்டுதான் அணுக்களைப் பார்க்க முடியும். ஆனால், அவை தொடர்பான அணுவியல் கோட்பாட்டின் நடைமுறை முக்கியத்துவம் என்பது அவற்றைப் பார்க்க முடிகிறதா இல்லையா என்ற அவற்றின் பண்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அணுவியலின் கடந்த காலப் புரிதல்கள், வருங்காலக் கணிப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தது.

ஓர் ஆத்மாவின் வயது என்பது அது இருக்கும் உடம்பின் வயதைச் சார்ந்தது அல்ல என்ற அடிப்படையில் மறு பிறவிக் கோட்பாடு அமைந்திருக்கிறது. ‘தலை முடி நரைப்பதனாலேயே ஒருவர் பெரியவர் ஆகிவிடுவதில்லை’ (தர்மபாதா-260). சில நேரங்களில் இளைய தோள்களில் ஞானம் மிகுந்த தலை இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

சிலர் பொறுப்பற்று நடந்துகொள்வார்கள்; சுய நலம், சுய முனைப்பு, எதற்கும் கட்டுப்படாத தன்மை, இறுதி நாளில் என்ன நடக்கும் என்ற சிந்தனை இல்லாத குணம் ஆகியவை கொண்டவர்களாகவே வாழ்க்கை முழுவதும் இருப்பார்கள். வேறு சிலர் இளம் வயதிலிருந்தே மிகுந்த அக்கறை, சுய ஒழுக்கம், திறமை, நட்பார்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படியான நிகழ்வுகளுக்குப் புத்தி பூர்வமான அல்லது புதிரான, மதம் சார்ந்த விளக்கமாக மறு பிறவிக் கொள்கை இருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிராமணர்கள் மிகச் சரியாக மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். ஏனென்றால் இதுவே மனிதக் குணம் அல்லது பரம்பரை குணம் என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவே மனிதர்களிடையே இயல்பாகவே இருக்கும் சமமின்மைக்குக் காரணமாக அமைகிறது. மேற்குல ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த இயற்கையான சமமின்மையைக் கணக்கில் கொள்வதே இல்லை.

பிராமண சமூகவியலைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். உலக நிகழ்வுகளுக்கு இடையில் ஒருவித ஒத்திசைவான தாளகதி / லயம் இருக்கிறது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த லயமானது பருப்பொருள் – பருப்பொருள் கடந்தது, சுயம் – சுயம் கடந்தது, கருத்து – பொருள், ஒற்றுமை – பன்மை, அன்பு – வெறுப்பு மற்றும் இதுபோன்ற ‘இருமை’களால் ஆனது. இந்த இரண்டு எதிர் நிலைகளின் ஊடாடலே அனைத்துவிதமான மகத்தான, ஆவணப்படுத்தத் தகுந்த வாழ்க்கையின் அதாவது சம்சார சாகரத்தின் நிரந்தர இருப்புக்கு அடிப்படையாகத் திகழ்கின்றன. பிறப்பு, இறப்பு, பரிணாம வளர்ச்சி, உள் ஒழுங்குதல், மேல் முகப் பயணம், இறங்குமுகப் பயணம், சிருஷ்டி – சம்ஹாரம் (படைப்பு – அழித்தல்) ஆகியவற்றின் மூலம் அது வெளிப்படுகிறது.

தனிமங்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அல்லது தனி நபர் கடவுள்கள் அனைத்துக்குமே ஓர் ஆரம்பமும் முடிவும் உண்டு. படைப்பு – அழிப்பு, தோற்றம் – மறைவு இவையெல்லாமே உலக நடப்புகளின் ஆதார அம்சம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எப்போதும் இருந்த, இருக்கப்போகிற விஷயம். இந்தக் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு சுய மைய சிந்தனையும் (ஜீவாத்மா) வாழ்வதற்கான ஆசையும் (த்ரிஷ்ணா, இச்சகா) தனக்கேயான சுழற்சியில் (கதி) ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியிருப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேசம், கிரஹம் அல்லது பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த வாழ்வுக்கும் இது பொருந்தும்.

இந்தப் பரிணாம நகர்வில் மனிதப் படைப்பின் மூலம் ஒரு திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. இதனால்தான் ஹிந்துக்கள் (பௌத்தர்களும்) மனிதப் பிறப்புக்கு இவ்வளவு மிக அதிக முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். இந்தத் திருப்புமுனையை எட்டுவதற்கு முன்பாக, கிறிஸ்தவ இறையியலின் மொழியில் சொல்வதென்றால், இயற்கை மனிதன் (இயல்பான குணங்கள் கொண்டவர்) இருந்தார். அதன் பின்னர் மறு மலர்ச்சி தொடங்குகிறது.

இந்தத் திருப்புமுனை திடீரென்று எட்டப்பட்டு விடவில்லை. பிறவிகளின் தொடர்ச்சியை, ஒன்றுடன் ஒன்று கலப்பது மற்றும் உளவியல் மாற்றம் ஆகிய இரண்டும் தீர்மானிக்கும். திருப்புமுனை திடீரென்று நடந்துவிட்டதாகத் தோற்றமளித்தால், நன்கு கனிந்த பழம் சட்டென்று விழுவது திடீரென்று நடப்பதுபோல் தோன்றுவது போல்தான் இருக்கும். நடக்க வேண்டியவை ஏற்கெனவே நடந்தேறியிருக்கவேண்டும்.

இந்த மாபெரும் நகர்வில் ஒருவருடைய இடம் அதாவது அவருடைய ஆன்மிக ஞானம் சார்ந்த வயதுக்கு ஏற்ப மூன்று விதமான மனிதர்களை நாம் வகைப்படுத்தமுடியும்.

நான், எனது என்ற எண்ணங்கள் நிரம்பியும் சுய நலன் மட்டுமே இலக்காகவும் இருக்கும் நபர்கள் முதல் வகையினர். இவர்கள் எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்தினாலும் சட்டரீதியான அல்லது மறு உலகில் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினாலும் அதோடு குடும்பம், தேசம் மீதான அன்பினாலும் இவர்களுடைய நடவடிக்கைகள் வழிநடத்தப்படும். இவர்கள் நீட்சே சொல்லும் அடிமைகள், பிளேக் சொல்லும் ‘படைப்பூக்கம் அற்றவர்கள்’.

அடுத்ததாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், சிந்தனைத் திறமையும் நற்பண்புகளும் கொண்டவர்கள். இவர்கள் கடமை உணர்ச்சி மிகுந்தவர்கள். ஆதி மனிதருக்கும் புதிய மனிதருக்கும் இடையிலான மோதல் இவர்கள் மனதில் நடந்துகொண்டிருக்கும். இவர்கள் அதிகாரம், புகழ் இவற்றில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாணயமான அல்லது அல்லாத வகையிலான உத்வேகம் கொண்டிருப்பார்கள். மனித குலம் மீது தன்னலமற்ற அன்பு கொண்டிருப்பார்கள். ஆனால், இவர்கள் ஒட்டு மொத்த மனித இனம் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பது அரிது. இவர்களுடைய சிந்தனை சுய நலமற்றதாகவும் அதே நேரம் உலகம் தழுவியதாக இல்லாமல் குறுகியதாகவும் இருக்கும்.

நெருக்கடியான நேரங்களில் இவர்களுடைய சுய ரூபம் வெளிப்படும். எந்த நிலையை எட்டியதாகத் தோற்றமளித்தார்களோ அது அல்லாமல் எந்த அளவுக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலை தெரியவரும். இவர்கள் சுதந்திரத்தைத் துய்க்க ஆரம்பித்தவர்கள் என்றபோதிலும் (சுதந்தரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் முடிந்தவர்கள்) இவர்களை விதிமுறைகளால் நல்வழிப்படுத்த வேண்டியிருக்கும்.

இறுதியாக இன்னும் சொற்பமாகவே இருக்கும் நபர்கள்: நாயகர்கள், ரட்சகர்கள், துறவிகள், அவதாரங்கள். இவர்கள் எல்லாவித நெருக்கடிகளையும் தாண்டி சமாதானத்தை அடைந்தவர்கள்; அல்லது வாழ்க்கையின் முழுமை பற்றி மிகவும் தெளிவான தரிசனத்தைப் பெற்றவர்கள். பிளேக் குறிப்பிடும் சிருஷ்டிகர்த்தாக்கள் இவர்களே. நீட்சே சொல்லும் எஜமானர்கள். இவர்கள் எல்லாம் அவர்களுக்கே உரிய வகையில் பிராமணர்கள். அதி மனிதர்கள், போதிசத்துவர்கள் ஆகியோருக்கு இணையானவர்கள். அன்பு, ஞானம் ஆகியவையே இவர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும்; விதிமுறைகளோ சட்ட திட்டங்களோ அல்ல. இந்த உலகில் மனிதக் குலத்தின் மண மிகு மலர்கள். இந்த உலகினால் உருவானவர்கள் அல்ல; இந்த உலகுக்காக உருவானவர்கள். அவர்களே சமூகத்தின் தலைவர்கள், குருமார்கள்.

இந்த மூன்று பிரிவுகள் மனித சமூகத்தில் இயல்பான படிநிலையை, ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றன. ஒரு லட்சியச் சமுதாயத்தில், அதாவது மனித இனம் தமது இலக்கை (புருஷார்த்தத்தை) அடைவதற்கு உகந்ததாக உருவாக்கிக் கொள்ளும் சமுதாயத்தில், ஒவ்வொருவருக்கும் தனது அந்த இலக்கை அடைய வழிவகை செய்து தரவேண்டும். அதேநேரம் ஆகச் சிறந்தவர்களும் ஞானவான்களும் மட்டுமே வழிகாட்டியாக / ஆட்சியில் இருக்கவேண்டும்.

புருஷார்த்தம் என்பது பிராமணியப் பயன்பாட்டியல் தத்துவம். சமூக விதிமுறைகளுக்கு அடிப்படையான அம்சம். ஒரு குறிப்பிட்ட செயலானது தர்ம, அர்த்த, காம, மோட்ச விதிகளின்படி இருக்கிறதென்றால் அது சரியான செயல். அதாவது செயல்பாடு, வளர்ச்சி, மகிழ்ச்சி, ஆன்மிகச் சுதந்தரம் ஆகியவற்றுக்கு உகந்ததாக இருந்தால் அது சரியான செயல். அல்லது இதில் எந்த ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளுக்கு முரணாக இல்லாமல் இருக்கவேண்டும்.

பிராமணப் பயன்பாட்டுத் தத்துவமானது மனிதர்களை முழுமையானவராகப் பார்க்கிறது. தொழில்மய சமூகவியலாளர்கள் பயன்பாடு சார்ந்து குறுகிய பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அரசியல் பொருளாதாரம் என்பது இந்தப் பயன்பாடுகளைச் சார்ந்ததாகவே இருக்கிறது (நிக்கோல்சன் எழுதிய பிரின்சிபில்ஸ் ஆஃப் எக்கானமி, பதிப்பு 2, பக் 28).

அதிகாரவர்க்க அமைப்பு இல்லாமல் அதாவது அதிகாரப் படிநிலை இல்லாமல் ஒரு லட்சியச் சமுதாயம் இருக்கவே முடியாது என்று பிராமணச் சமூகவியலாளர்கள் (ரிஷிகள்) கருதினார்கள். அந்த அதிகாரப் படிநிலையானது ஞானம் மிகுந்ததாகவும் ஆன்மிக அடிப்படை கொண்டதாகவும் இருந்தாக வேண்டும். ரத்த வழி (வாரிசு வழி) மற்றும் கலாச்சார வழியிலான பரம்பரை அம்சங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பிராமண சமூகவியலாளர்கள் ஏற்கெனவே நிலவி வந்த தொழில் குலங்களின் அடிப்படையில் லட்சிய சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்று தீர்மானித்தனர்.

இயற்கையான அடுக்குகளை நம்மால் இனம் காண முடிந்தால், ஒவ்வொரு பிரிவுக்கும் அவர்களுக்கு உகந்த கடமைகளை (ஸ்வ தர்மங்களை) உரிய அந்தஸ்துடன் வகுத்துக் கொடுக்கமுடியும். சமூகத்துக்குத் தேவையான தொழில் பகுப்புக்கும் இது உதவிகரமாக இருக்கும். வாரிசுகளுக்குத் தொழிலைக் கைமாற்றித் தருவதன் மூலம் பரம்பரைத் தொழில் திறமையையும் கைமாற்றித் தரமுடியும். சமூக மோதலைத் தவிர்க்க முடியும்; ஒவ்வொருவரும் அவருக்குச் சொந்தமானதும் அவருக்குத் தேவையானதுமான அனுபவத்தையும் செயல்பாடுகளையும் அது அனுமதிக்கவும் செய்யும் என்று பிராமணச் சமூகவியலாளர்கள் நினைத்தனர்.

இயற்கை விதிகளின்படி ஒரு தனி நபரின் சுயமானது (ஜீவாத்மாவானது) எப்போதும் அல்லது பெரும்பாலான நேரங்களில் அதற்கு உகந்த சூழலில் பிறந்திருப்பதாகக் கருதினர். அவர்களுடைய இந்தச் சிந்தனை தவறு என்று ஒருவர் நினைத்தால், இதே விளைவுகளைத் தரக்கூடிய மேலான வழிமுறை ஒன்றைக் கண்டு சொல்லவேண்டும். அது சாத்தியமே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், சமத்துவத்துக்கான போட்டிகள் நிலவும் சமூகம் அல்லாமல், அனைத்துத் தரப்புகளின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் சமமானதாகக் கருதப்படக்கூடிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதில் பிராமண ஜாதிய சமுதாயமே மிக நெருங்கி வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித ஆன்மாவின் வயது ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர்களுக்கு இதுவே உண்மையான கம்யூனிஸமாக (கூட்டு வாழ்க்கை முறையாக) தோன்றும்.

ஜாதி அமைப்பை ஒரு கருத்து என்ற அளவில் அல்லது அதன் உண்மையான நடைமுறை வடிவம் என்ற அளவில் விவரிப்பதென்றால் தனிப் புத்தகம் தேவைப்படும். எனினும் அவற்றின் சில கூறுகளை இங்குப் பார்ப்போம். பிராமணருக்கும் சூத்திரருக்கும் இடையிலான வேறுபாட்டை, ‘சூத்திரர் செய்யும் எதுவுமே தவறில்லை’ (மனு 10:126) என்ற பார்வையின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, உயர் ஜாதியினர் மிகுந்த பொறுமையுடன், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். அரசர் தவறே செய்ய முடியாது (செய்யக்கூடாது) என்று மேற்குலகில் சொல்லப்படுவதற்கு இணையானது இது. குற்றச் செயல்களுக்கான தண்டனை என்ற விஷயத்தில் மனு ஸ்மிருதி சொல்வதில் இருந்து இது நன்கு புலனாகும்.

ஒரு தவறுக்கு சூத்திரர்களுக்குத் தரப்படும் தண்டனையைவிட வைஸ்யருக்கு இரண்டு மடங்கு தண்டனை தரப்படவேண்டும். அதே தவறுக்கு க்ஷத்திரியருக்கு நான்கு மடங்கு தண்டனை தரப்படவேண்டும். அதே தவறை பிராமணர் செய்தால் எட்டு மடங்கு அல்லது 16 மடங்கு தண்டனை தரவேண்டும். ஏனென்றால் சமூக அந்தஸ்தும் ஞானமும் அதிகரிக்க அதிகரிக்க பொறுப்புகளும் அதிகரிக்கும்.

பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற சுய மறுப்பு – புலனடக்க விதிமுறைகள் எதுவுமே சூத்திரர்களுக்குக் கிடையாது. அவர் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்; சூத்திர விதவைகள் மறு மணம் செய்துகொள்ளலாம். சூத்திரர்களின் எண்ணிக்கை பிற ஜாதியினரின் எண்ணிக்கையைவிட ஒருபோதும் அதிகரித்துவிடக்கூடாது என்ற விதிமுறையும் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கிரேக்கத்தில் அடிமைகளின் எண்ணிக்கை சுதந்தரமானவர்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்ததால்தான் வீழ்ச்சியைச் சந்தித்தது. சூத்திரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், குறைவான ஞானம் கொண்டிருக்கும் நபர்களுடைய குரல், அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிடும்.

இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை வேண்டும் என்று சொல்லக்கூடிய நவீனத் தொழில் கலைஞர்கள் எல்லாம் மிகப் பிரமாண்டமான இயந்திரங்கள், தொழிற்சாலைகள் இவற்றையெல்லாம் தனி நபர்களின் பொறுப்பில் அல்ல; பொதுமக்களின் மீது அக்கறைகொண்டதாகவே இயங்க அனுமதிக்கவேண்டும்; அப்படிச் செய்யாதது மிக மிகப் பெரிய தவறாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தில் இருக்கும் நபர்களுடைய எதிர்பார்ப்புகளில் ஓர் ஒற்றுமை இருந்தால்தான் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்கமுடியும். சமூகப் பழக்கத்தை எவ்வளவு சீக்கிரம் மாற்றியமைக்கமுடியும் என்பது நேச நாட்டு அரசாங்கங்கள் தொழில் உற்பத்தித் துறையில் சில நிறுவனங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதில் இருந்து நன்கு புரிந்துகொள்ளமுடியும். லாபங்களைக் குவிப்பதில் வரையறைகள் வேண்டும் என்ற மிக எளிய விஷயத்தைப் புரிந்துகொள்ள மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க நேர்ந்திருப்பது வேதனைக்குரிய விஷயமே.

அதுபோல் ராணுவ வீரர்களுடைய நலன் சார்ந்து இன்று (போர்க்காலங்களில்) மிக அதிகமாகச் செலவிடப்படுகிறது. அமைதிக் காலங்களில் தொழிலாளர் சந்தையின் இளகிய மனதின் கருணையை எதிர்பார்த்துத்தான் இருந்தாக வேண்டியிருக்கும். தேசம் அமைதிக் காலத்தில் வளமான வாழ்க்கைக்கான திட சித்தத்துடன் இருந்தால் போருக்குச் செலவிடும் தொகையில் மிகச் சொற்பமானதைக் கொண்டே அனைத்தையும் செய்துமுடித்துவிட முடியும். ஒரு தேசம் போர்க்காலத்தில் தற்காப்புக்காகக் கூட்டுறவாகச் செயல்பட முடியுமென்றால் சுய வளர்ச்சிக்கு அமைதிக் காலத்தில் ஏன் ஒற்றுமையாகச் செயல்படமுடியாது?

இயற்கையான மனிதப் பிரிவுகள் இருக்கும் நிலையில், ஜாதிகளுக்கு அவற்றைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ளும் உரிமை கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரு மனிதர் தவறு செய்தால் சக மனிதர்களால் ஆன அமைப்பு அவரை விசாரணை செய்யலாம். ஜனநாயகம் என்று இப்போது சொல்லப்படும் கொள்கை முன்வைக்கும் நல்ல விஷயங்களில் ஒன்று இந்த சுய நிர்ணய உரிமை. அது அன்றைக்கு ஜாதிகளுக்கு இருந்தது.

தொழில் துறை சார்ந்த ஜனநாயகத்தில் ஒரு தொழிலாளி தவறு செய்தால் அவருடைய தொழில் குழும ஜூரிகள் அல்லது ஒரு வயல், தோப்புகளில் நுழைந்து திருடுபவரை நில உடமையாளர் குழு விசாரிக்கும். ஒரே ஜாதிக்குள் அனைவருக்கும் சம வசதி வாய்ப்புகள் இருந்தன. ஒவ்வொரு ஜாதிக்கும் பொதுவான சலுகைகளும் கடமைகளும் இருந்தன. இப்படியாக நிர்வகிக்கப்பட்ட சமுதாயம் தொழில் குழும சோஷியலிசம் என்று இன்று சொல்லப்படும் அமைப்பைப் போன்றதுதான்.

நியாயமான ஆரோக்கியமான சமுதாயத்தில் திறமைக்கு ஏற்பவே பொறுப்புகள் இருக்கவேண்டும். திறமையும் ஆர்வமும் தனி நபரைப் பொறுத்தவரையில் பிரித்துப் பார்க்க முடியாதவை. அதுவே ஒவ்வொருவருடைய தொழிலுக்கான உள்ளுணர்வு. எனவே, தொழிற்சங்கக் கோட்பாட்டின்படியும் இந்தியாவில் இருந்த ஜாதி அமைப்பின்படியும் கடமையும் மகிழ்ச்சியும், கட்டுப்பாடும் சுதந்தரமும் ஒரு லட்சியவாத அளவில் ஒருங்கிணைந்ததாக இருந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தொழில் அல்லது தர்மம் என்பது இந்த அடையாளத்தையே குறிக்கிறது. கடமை என்ற கருத்தாக்கத்தில் தனி நபர் வாதமும் சோஷியலிசமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பிராமணியச் சிந்தனைகள் கல்வி தொடர்பான பிரச்னைகளிலும் தமது செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. ஞானம் இல்லாதவருக்குக் கல்வி என்பது கண் இல்லாதவருக்குத் தரப்படும் கண்ணாடி போன்றது என்று கருட புராணம் சொல்கிறது. (தர்மத்துடன்) ஒருங்கிணைப்பு பெறாத அறிவு, அல்லது முறையாகப் பெறாத கருத்துகள் இவையெல்லாம் பிராமணர்களைப் பொறுத்தவரையில் பயனற்றவை. அதுமட்டுமல்லாமல் இவையெல்லாம் திறமையற்ற தொழிலாளியின் கையில் இருக்கும் அபாயகரமான கருவிகள் என்றும் கருதினர்.

சமூகத்தில் ஒரு நபரின் நடத்தை, நல்லொழுக்கம் இவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. குலத் தொழிலில் நிபுணத்துவம் என்பது ஒரு ஜாதிக்குள் அந்தத் தொழிலைக் கற்றுத் தருவதன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், உயர் கல்வி என்று நாம் இன்று சொல்லும் விஷயத்தில் நவீனக் காலச் சிந்தனைகளில் இருந்து பிராமணச் சிந்தனை பெரிதும் வேறுபடுகிறது.

எல்லாக் கல்வியும் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று அது கருதவில்லை. கல்விக்கு அடிப்படை அதைப் பெறுபவரின் ஆளுமையே. கற்றுத் தருவதென்பதைக் கடமையாக / தொழிலாக மதிக்காத ஒருவர் ஆசிரியராக (குருவாக) இருக்கக்கூடாது. (வேதக் கல்வியை விற்கக்கூடாது). மாணவர் ஒன்றைக் கற்றுக் கொள்ளத் தயாராகாதவரையில் அவருக்கு அதை ஓர் ஆசிரியர் கற்றுத் தரக்கூடாது. சரியான கேள்விகளைக் கேட்டு மாணவரின் தகுதியை எடைபோடவேண்டும். மண் வெட்டியால் விடா முயற்சியுடன் பூமியைத் தோண்டுபவருக்குத் தண்ணீர் கிடைப்பதுபோல் ஆசிரியரிடம் பணிவாக இருக்கும் மாணவருக்கு ஆசிரியரிடம் இருக்கும் ஞானம் கிடைக்கும் (மனு 2:218).

ஆண், பெண் இருவருடைய இடங்களுமேகூட குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம்தான். ஒருவகையில் பெண்கள் பொதுவாகவே இள நிலையில் இருப்பவர்கள். பாராசெலஸ் சொன்னதுபோல், ‘ஆண்களைவிட உலகுக்கு மிகவும் நெருங்கியவர்கள்’. ஆனால் ஆணா, பெண்ணா யார் பெரியவர் என்ற மோதலே தேவையில்லை. ஏனென்றால் இதில் அவரவருடைய திறமைகள், முக்கியத்துவம் பற்றிய பார்வை இல்லை. ஹிந்து திருமண பந்தம் சமத்துவத்தைப் பேசவில்லை; அடையாளத்தை, ஆளுமையைப் பேசுகிறது. ‘ஆண் என்பவர் தனியானவர் அல்ல; அவர் அவராகவும் அவருடைய மனைவியாகவும், குழந்தையுமாகவும் இருக்கிறார்; எனவே ரிஷிகள், கணவர் என்பவர் மனைவியைப் போன்றவரே (சமமானவரே) என்று கூறியிருக்கிறார்கள் (மனு 9:45).

திருமண பந்தத்தின் நோக்கம் தனிநபர்களின் உடல் சார்ந்த இன்பம் அல்ல; வாழ்க்கையின் லட்சியமான புருஷார்த்தத்தை அடைவதுதான். சகதர்மினி (சக தர்ம ஆச்சாரினி) என்று மனைவி அழைக்கப்படுகிறார். அதாவது ‘சமூக, மத கடமைகளைப் பூர்த்தி செய்வதில் கணவருக்கு உறுதுணையாக இருப்பவர்’ என்று அர்த்தம்.

அதேபோல் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், ஜாதிகள் என்பது சமூகத்தைப் பிளவுபடுத்த அல்ல; ஒன்று சேர்க்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு இடையே இருக்கும் பொதுவான அம்சங்களைவிடப் பல்வேறு ஜாதிகளில் இருக்கும் ஆண்களிடையே பொதுவான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு தொழில்மய ஜனநாயகத்திலும் மதச்சார்பற்ற கல்வி வழங்கப்படும் இடங்களிலும் ஆண்கள் மிகத் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்குலகப் பேராசிரியரும் கடைநிலைத் தொழிலாளியும் பரஸ்பரம் புரிந்துகொள்வதைவிட ஒரு பிராமணரும் சூத்திரரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு நடந்துகொள்வார்கள். ஹிந்து சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு பறையர், எந்தவொரு பிராமண அர்ச்சகரைப் போலவே பிராமண லட்சியங்கள் மேல் மதிப்பு கொண்டவராகவே இருப்பார்.

இன்றைய பிரச்னைகளுக்கு இப்போது சொல்லியிருப்பவற்றை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று பார்ப்போம். மத தத்துவம் மற்றும் அதைச் சமூகப் பிரச்னைகளுக்குப் பயன்படுத்தித் தீர்வு காண்பது என்பதே உலகுக்கு இந்தியாவின் மிகப் பெரிய கொடை என்று முன்பே சொன்னேன். கீழைத்தேயத்துக்கும் மேற்குலகுக்கும் இடையிலான இன்றைய நெருக்கடி மற்றும் தொடர்புகள் சார்ந்து சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் இப்போது நாம் பார்ப்பது கூட்டுறவுடன் இருந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சிப் பருவம். மேற்குலகம் நம்மைப் போல் இதற்கு முன்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வளவு ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததோ அதனுடைய வீழ்ச்சியானது இந்திய சமூக அமைப்பின் வீழ்ச்சியைவிட மிக வேகமாக இருக்கிறது. தொழில்மயப் போட்டியில் முதலில் வீழ்ந்த ஐரோப்பா, முதலில் கரையேறிவிடும். எதிர்கால நன்மைக்கான கூட்டுறவின் விதைகள் நீண்ட காலமாகவே ஊன்றப்பட்டுள்ளன. மிகவும் தெளிவான, பிரக்ஞை பூர்வமான அல்லது பிரக்ஞை பூர்வமற்ற முறையில் மறு கட்டமைப்புக்கான நடவடிக்கைகள் அங்கு முன்னெடுக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.

ஆனால், கீழைத்தேய நாடுகள்… குறிப்பாக இந்தியாவின் நிலை என்ன?

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *