சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இலக்கியங்களில் செய்யுள் மற்றும் நாடகம் ஆகிய வடிவங்களில் என்னவிதமான ரசனைக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம். இது சார்ந்து நாம் கண்டடையும் தீர்மானங்கள் எல்லாம் இலக்கியத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்துக் கலைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கின்றன.
முதலில் செய்யுள் – கவிதை ரசனை பற்றிப் பார்ப்போம். நான்கு ஆஸ்ரமங்களின் இலக்குகளையும் அடைய உதவுவதுதான் இந்த ரசனையின் அடிப்படை என்று ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ‘இலக்கியம் என்பது அனைத்து வளங்களையும் அருளும் காமதேனுபோல் இருக்கவேண்டும்’ என்று இதைச் சொல்லலாம். ஒருவருக்கு லெளகிக நன்மையைத் தரும் ஒரு செய்யுள் இன்னொருவருக்கு ஆன்மிக நன்மையைத் தருவதாக இருக்கும். ஒரே நபருக்கே கூட வேறொரு தருணத்தில் அதே செய்யுள் அப்படியான அனுபவத்தைத் தரவும் கூடும்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது: கவிதையின் ஆன்மா / சாராம்சமானது எது? வடிவம், பாணி அல்லது குறியீட்டு மொழியே பிரதானமானது என்று சிலர் சொல்வார்கள் (வ்யன்ஜனா – செய்யுள் வகைகளைப் பற்றிப் பார்க்கும்போது இதை விரிவாகப் பார்ப்போம்). ஆனால் பலர் இதை மறுதலிக்கிறார்கள். அவர்கள் ரசம் (நவ ரசம்) இதுவே செய்யுளின் ஆதாரமான அம்சம் என்று சொல்கிறார்கள். இதை ரசனை, அழகு, உணர்ச்சி என்று சொல்லலாம். செளந்தர்யம், ரூபம் ஆகியவற்றைப் பேரழகு அல்லது வசீகரம் என்று சொல்லலாம்.
செய்யுள் என்பது வெறும் அசை, தளை, எதுகை, மோனை என இலக்கண விதிகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல. நீதி சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் ஆகியவையும் கூட தாள லய ஒழுங்குக்கு உட்பட்ட செய்யுளினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் இலக்கிய உலகில் பலரும் இப்படித் தவறாகவே நினைத்து விடுகிறார்கள். இலக்கண வாய்ப்பாடு விதிகளுக்குக் கட்டுப்பட்ட செய்யுள்கள் பத்ய காவ்யம் எனப்படும். வசன கவிதைகள் ‘கத்ய காவ்யம்’ எனப்படும். ஆனால் ரச பாவமே ஒரு செய்யுளைக் கவித்துவம் மிகுந்ததாக ஆக்குகிறது.
ஒரு படைப்பு, அழகியல் ரசனை மிகுந்தாக இருக்கவேண்டும். அதை ரசிப்பவர் ரசிகர் எனப்படுவார். அழகியல் ரசனை என்பது ரசிக்கத் தகுந்ததைப் புரிந்துகொண்டு ரசித்தல் எனப்படுகிறது.
ஒட்டு மொத்த இலக்கியமும் ரச பாவத்தின் அடிப்படையிலும் அதன் அனுபவங்களின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகிறது. இலக்கியங்களில் காளிதாசர் மற்றும் பிறருடைய செவ்வியல் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டே செய்யுள், நாடகம் ஆகியவற்றின் அழகியல் கோட்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைப்புகள் பெருமளவுக்கு மதம் சாராதவை. வெளிப்பாட்டில் உணர்ச்சிமயமானவை.
அழகியல் ரசனை என்பது, விபாவம், அனுபாவம், பாவம், சத்வபாவம் ஆகியவற்றினால் மட்டுமே உருவாக்கப்படுவது இல்லை; ரசிகரின் மனதில் உருவாகும் விஷயம் என்று சொல்லப்படுகிறது.
விபாவம் என்பது கருப்பொருள், உள்ளடக்கம், களம் போன்றவற்றைக் குறிக்கும். அதாவது கதாநாயகர், பிற கதாபாத்திரங்கள், கதை நிகழும் காலம், இடம் போன்றவை. பெனிடெட்டோ க்ரொஸ் இதை ‘ரசானுபாவத்தை உருவாக்கும் பெளதிக, புறக் காரணிகள்’ என்று குறிப்பிடுகிறார்.
அனுபாவம்: உணர்ச்சிகள், உணர்வுநிலைகள் போன்றவை.
பாவம்: மகிழ்ச்சி, வலி எனக் கதாபாத்திரங்களில் தூண்டப்படும் மாறும் மனநிலைகள் (33). சந்தோஷம், பதற்றம், கொதிப்பு போன்றவை. நவ ரசங்கள்: காமம், வீரம், சோகம், கோபம், சிரிப்பு, பயம், பரிதாபம், ஆச்சரியம், சாந்தம்.
சத்வபாவம்: தன்னிச்சையான உணர்ச்சி வெளிப்பாடுகள். உள் மனதில் தன்னிச்சையாக எழும் உணர்வுகள். மயிர்க்கூச்செறிதல், நடுக்கம் போன்றவை.
அடிப்படையான நவ ரசங்களில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியைப் பிரதானமாகவும் பிறவற்றை அதன் துணை நிலை அங்கங்களாகவும் கொண்டு ஒரு படைப்பு இயங்கும்.
‘மன்னருக்கு மக்கள் அடிபணிவதுபோல், குருவுக்குச் சீடர் பணிவதுபோல் பிரதான உணர்ச்சி நிலையே பிற அனைத்தின் எஜமானாகத் திகழும்’.
மாறாக தற்காலிகமான உணர்ச்சி ஒன்றைப் பிரதானமாகக் கொண்டிருந்தால், அந்தப் படைப்பில் ரச பாவம் வலுவிழந்துபோய் காணப்படும். வெறும் மலின உணர்ச்சியைத் தூண்டும் படைப்பாகிவிடும். உணர்ச்சிமயமாகவும் அந்தரங்க (தனிப்பட்ட) உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தும் உருவாக்கப்படும் படைப்புகள் அழகியல் மிகுந்தவையாகவோ உண்மைக்கு நெருக்கமானவையாகவோ இருக்காது. சொர்க்கத்தில் மீண்டும் ஒன்று சேர்வதாகச் சொல்லி முடியும். காலத்தையும் நிரந்தரத்தன்மையையும் அழகையும் உயிர்த்துடிப்பையும் காதலையும் சுய மோகத்தையும் (பாரபட்சமான உணர்வையும்) ஒன்றுடன் ஒன்று குழப்பியடித்துவிடும்.
நிலையான ஆதார உணர்வுகளான ஒன்பதும் ஒன்பது ரசங்கள் அல்லது பாவங்களுக்கு இசைவானவை. அதேநேரம், இங்கு நாம் பேசும் அழகியல் ரசனை என்பது இந்த ஒன்பதில் இருந்தும் வேறுபட்டது. நவ ரசங்கள் என்பவை ஒரு கலை அனுபவத்தின் பல்வேறு சாயல்கள் மட்டுமே. வகைப்படுத்திக் காட்டவேண்டும் என்ற வசதிக்காகச் சொல்லப்படும் அடிப்படை வார்த்தைகள் மட்டுமே. செய்யுள் தன்மை, காவிய குணம், நாடகீயம் என்றெல்லாம் சொல்வது போன்றதுதான். ஆனால் உண்மையில் கவித்துவம் என்பது இதையெல்லாம் கடந்த ஒரு நிலை.
ரசம் என்பது ருசிக்கப்படுவது; அழகு என்பது உணரப்படுவது. அதாவது ஒரு குறிப்பிட்ட உணர்வுக்குள், ஆதார உணர்ச்சி நிலைக்குள் ஆழ்வது. ஆனால் அது அந்த உணர்ச்சியை மட்டுமே சார்ந்தது அல்ல. இதன் அடிப்படையில் பார்த்தால், என்ன ஆதார குணத்தை அடிப்படையாகக் கொண்டு அழகியல் ரசனை உருவாகிறது என்பது முக்கியமில்லை.
யதார்த்த அம்சங்கள், கேளிக்கை அம்சங்கள் ஆகியவற்றைச் சார்ந்த நிலைகளில் இருந்து ஹிந்து அழகியல் ரசனை என்பது எவ்வளவு தூரம் விலகிவந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சோகம், மகிழ்ச்சி, உணர்வெழுச்சி, தளர்ச்சி, கொடூரம், கருணை, புரியாதது – புதிரானது, வெளிப்படையானது (உண்மையானது) அல்லது கற்பனையானது என எல்லாமே ஒரு ரசிகரின் மனதில் ரசனையைத் தூண்ட முடியும். அழகியல் ரசனை என்பது உணர்வுகளைச் சாராதது என்று தனஞ்ஜெயர் எழுதிய தசரூபா தெரிவிக்கிறது.
லட்சிய அழகியல் தொடர்பான அறிதல் என்பது கற்றுக்கொண்டு வரக்கூடியது அல்ல. அது பிறவியிலேயே வரவேண்டியது என்று பிளேக் இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். ‘விண்ணுலகின் இசையை ஒவ்வொருவரும் அவரவருக்கேற்ற வகையில் விளங்கிக் கொள்கின்றனர். அது ஒத்திசைவுடனோ அல்லாமலோ இருப்பதென்பது முன்னாளைய காரணங்களைச் சார்ந்தது’ என்று பூ சங் லிங் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு கலைப்படைப்பு அழகியல் ரசனை சார்ந்து அல்லாமல், நமக்கு நேர் வழியிலான புலன் இன்பத்தைத் தரக்கூடும். படைப்பின் தொனி, தாளம், லயம், போன்ற புற அம்சங்கள் சார்ந்து இந்த மகிழ்ச்சி கிடைக்கக்கூடும். அல்லது கருப்பொருளின் தார்மிக ஒழுக்கம், போதனை ஆகியவை சார்ந்து அந்த உணர்வு கிடைத்திருக்கலாம். அழகியல் ரசனை என்பது இவற்றில் இருந்து வேறுபட்டது. இவற்றைச் சாராதது. புலனின்பம் அல்லது தனஞ்ஜெயர் சொல்வதுபோல் ஒழுக்கம் சார்ந்த மகிழ்ச்சியின்மை மூலமாகவும் இந்த அழகியல் ரசனை வெளிப்படக்கூடும்.
அழகியல் ரசனை என்பது மகிழ்ச்சி அல்லது சோகம் ஆகியவற்றைச் சார்ந்தது அல்ல என்ற விஷயமே தூய்மைவாதிகளைக் கலைகள் மீது அச்சம் கொள்ளவைக்கக் காரணமாக இருந்திருக்கும். இது உடனடி அனுபவங்கள் சார்ந்தது அல்ல; நல்லது கெட்டது என்ற பார்வைகளுக்கு அப்பாற்பட்டது. எனவே இது நிச்சயம் ஒழுக்கம் சார்ந்த லட்சியங்களைக் கொண்டதாக இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
அழகியல் ரசனை என்பது அதற்கான தகுதியும் திறமையும் கொண்டவர்களால்தான் ருசிக்கப்பட (அனுபவிக்க) முடியும் என்று விஸ்வநாதர் குறிப்பிட்டிருக்கிறார். தர்மதத்தர் சொன்னதை மேற்கோள் காட்டியபடி அவர் சொல்கிறார்:
‘நாடகக் கலையின் கற்பனை அம்சங்கள் இல்லாதவர்கள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மரச் சிற்பம் அல்லது கல் சிற்பம் போன்றவர்கள்தான்’.
அழகியல் உணர்வுநிலையை அடையாமலேயே ஒருவர் தன் வாழ் நாள் முழுவதும் கலை பற்றிப் படிப்பதில், ஆராய்வதில் நேரத்தைச் செலவிடவும் முடியும். கலை தொடர்பான வரலாற்று ஆராய்ச்சி என்பது கலையை மதிப்பிடும் இடத்துக்கு இட்டுச் செல்கிறது. அதனாலேயே நம் ஆன்மாவில் அந்தக் கலையை உணர்ந்து மகிழ்ந்ததாகச் சொல்லிவிடமுடியாது.
‘ஓவியங்கள், செய்யுள்கள் என எல்லாக் கலைப்படைப்புகளுமே அதை ஏற்க / ரசிக்கத் தயாராகாத மனங்களில் எந்தவொரு விளைவையும் உருவாக்குவதில்லை’ என்று க்ரோஸ் குறிப்பிடுகிறார். ’செய்யுள் / கவிதைகள் தொடர்பான ஆர்வம் மிகுந்த மாணவர்கள் / ஆய்வாளர்கள் கூட உரிய அழகிய ரசனை கொண்டவர்களாக இருப்பதில்லை’ என்று விஸ்வநாதர் இதையே குறிப்பிடுகிறார்.
அழகிய ரசனை மற்றும் தன் மேதைமை என்பது ஒரு பாதி உள்ளார்ந்தது (மரபானது) ஒரு பாதி கற்றுக் கொள்ள முடிந்தது (சம காலத்தியது). வெறுமனே கற்றுக் கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. ஒரு கவிஞர் எப்படி தன்னெழுச்சியாகப் பிறக்கிறாரோ அதுபோலவேதான் ஒரு ரசிகரும் தானாக உருவாகிறார். கற்றுக் கொடுத்து, கற்றுக்கொண்டு இதை உருவாக்க முடியாது. விமர்சன மனநிலை என்பது ஒருவகையில் நிபுணத்துவம் அல்லது மேதைமைக்கு இணையானது.
கலையின் இலக்கு போதனை அல்ல என்பதில் இந்தியக் கலைக் கோட்பாடு தெளிவாகவே இருக்கிறது. தனஞ்ஜெயர் இதுபற்றிச் சற்றுக் கிண்டலுடன் சொல்கிறார்:
‘வரலாறு போன்றவற்றில் மூலம் கிடைக்கும் அறிவைப் போலவே மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாடகங்களின் மூலம் அறிவு (போதனை) மட்டுமே கிடைப்பதாக ஒரு குறைமதியாளர் கூறுகிறார் என்றால், அவருக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போடுகிறேன். பாவம் அவர் கலையின் பேரின்பங்களுக்குத் தன் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்’.
ஒரு கலையின் அழகியல் ரசனை என்பது ரசிகரின் கற்பனையைச் சார்ந்தது. ‘களிமண் யானை பொம்மையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள் அதை யானையாகவே உணர்ந்து மகிழ்ச்சியடைவதைப்போன்றது’ என்கிறார். ‘நாடக மேடையில் நடிக்க விரும்புபவர், இயற்கையை, புற உலகை அதனுடைய இடத்தில் விட்டுவிட்டு விலகிவிடவேண்டும். குழந்தைகள் பொம்மைகளைக் கொண்டு அட்டைப் பெட்டி, திரைச்சீலைகள் கொண்டு விளையாடுவது போன்ற மனநிலைக்குச் சென்றுவிடவேண்டும்’ என்று கதேயும் ‘த மாஸ்க்’ என்ற படைப்பில் இதையே குறிப்பிட்டிருக்கிறார்.
கலைப் படைப்பில் விவரிக்கப்படும் யதார்த்தம் மட்டுமே அழகியல் ரசனைக்குக் காரணமல்ல. ‘நம் தேசத்தில், ரசனைத் திறம் மிகுந்த பார்வையாளர்கள் ஒரு பாடலைத் தமது மனதுக்குள் தமது உணர்வுகளின் துணை கொண்டு முழுமையை நோக்கி நகர்த்திக் கொள்வதில் மன நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள்’ என்று தாகூர் குறிப்பிட்டிருக்கிறார். சுக்ராச்சார்யர் தெய்வத் திருமேனிகள்பற்றிச் சொன்னதில் இருந்து இது எந்தவகையிலும் வேறுபடவில்லை:
‘பக்தருடைய பக்தி பாவத்தினால் சிலைகளில் இருக்கும் குறைபாடுகள் எல்லாம் களையப்பட்டுவிடுகின்றன. அவர்களுடைய மனதில் எப்போதும் இறைவன் குடிகொண்டிருக்கிறார். எல்லா சிலைகளிலும் அவர்கள் அந்த இறைவனைக் கண்டடைகிறார்கள்’.
இந்த மனோபாவம் விமர்சனப் பார்வையற்றதாக நமக்குத் தோன்றலாம். அதாவது கலை மேன்மைக்கும் சாதனைக்கும் எதிரானதாக, அபாயகரமானதாகவும் தோன்றலாம். ஆனால் இப்படியான பார்வையே சிருஷ்டிகரம் பற்றி எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கிறது. பக்தியும் நம்பிக்கையும் வீழ்ச்சியடையத் தொடங்கியதைத் தொடர்ந்து கலையும் வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது.
ஒரு கலைப்படைப்பில் இருக்கும் குறைபாடுகளை இரண்டு காரணங்களினால் ஒருவர் பொறுத்துக்கொண்டு போகக்கூடும். ஒன்று விமர்சனப் பார்வை இல்லாமை. ஒரு கலைஞர் அல்லது கலைப்படைப்பின் மீதான கரிசனம் மூலம் இது உருவாகலாம். கலைப்படைப்பானது உள்ளடக்கம், வடிவம் சார்ந்து உணர்வுநிலைகளைக் கடத்தமுடியாமல் போவதைப் பொறுத்துக் கொண்டு மனம் ஏற்றுக்கொண்டுவிடலாம்.
இன்னொரு காரணம் சிருஷ்டிகரம் சார்ந்தது. ரசிகரின் மனமானது கலைப்படைப்பில் இல்லாத அல்லது எட்டப்படாத இடைவெளிகளைத் தனது கற்பனைத் திறன் கொண்டு நிரப்பிக் கொண்டுவிடுவதன் மூலம் அந்தப் போதாமைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.
விமர்சனப் பார்வையற்றுப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது ‘அழகாக இருத்தல்; நீதி போதனைகளைச் சொல்லுதல்; புரியாதவற்றிலிருந்து விலகிச் சென்று திருப்தியடைதல்’ என்பதாக இருக்கிறது.
சிருஷ்டிகரமான சகிப்புத்தன்மை என்பது வெறும் அழகு, போதனை இவற்றையெல்லாம் தாண்டியது. வெறும் ஒரு ‘ஆதிகால’ கச்சாவான அல்லது உடைந்த துண்டாக இருந்தாலும் குறியீடாக இருந்தாலும் அதைக் கொண்டே முழுமையான அழகியல் ரசனை அனுபவத்தை மீட்டெடுத்துக்கொள்ளும் திறன் கொண்டது.
மேலும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாயகர் மூலமாகவோ கலைப்படைப்பானது அழகியல் உணர்ச்சியை எழுப்ப முயற்சி செய்கிறது என்பதாலோ அல்லாமல், படைப்பின் பிரதான உணர்வு நிலையானது ரசிகரின் ரசிப்புத் திறமை மூலமாகவே பேரனுபவத்தைத் தருவதாக ஆகிறது. அழகியல் உணர்ச்சியை உருவாக்கும் நோக்கில் அதாவது அழகாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட எத்தனை படைப்புகள் அந்த இலக்கில் தோற்றுப் போயிருக்கின்றன தெரியுமா?
காவ்ய பிரகாஸா மற்றும் சாஹித்ய தர்பணா ஆகிய படைப்புகளில் செய்யுளின் / கவிதையின் கலை மேதைமை பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளன. நேரடியாகச் சுட்டும் விஷயங்களைத் தாண்டி, சொல்லாமல் சொல்லும் அம்சங்கள் மிகுதியாக இருக்கும் படைப்புகளே ஆகச் சிறந்தவை. இந்தக் குறியீட்டு அணுகுமுறையைக் கடைநிலைக் கவிதைகள் மிகக் குறைவாகவே கொண்டிருக்கும். இவை அனைத்தையும் அப்பட்டமாக விளக்கிக் கொண்டிருக்கும். ரொமாண்டிக் அல்லது தாழ் நிலைக் கவிதைகளில் கலையம்சம் என்பது அது பயன்படுத்தும் அலங்கார வார்த்தைகளில் மட்டுமே இருக்கும். வெளிப்படையாகச் சொல்வதைத் தாண்டி அவற்றில் எந்தவொரு மறை ஞானமும் இருக்காது. இப்படியான விவரணை சார்ந்த விளக்கப் பாடல்கள் எல்லாம், ஆட்களின் உருவப்படங்களை (Portrait) வரையும் ஓவியங்களைப் போல் தாழ்நிலை வகையைச் சேர்ந்தவை. சாஹித்ய தர்பண நூலானது இப்படியான கவிதைகளை முழுமையாக நிராகரிக்கிறது.
குறியீட்டு மொழி என்பது இரு பொருள் (சிலேடை) அல்லது குறிப்பால் உணர்த்துவது என்பதையெல்லாம் தாண்டியது. இதில் முதலாவது வெறும் வார்த்தை விளையாட்டாக இருக்கும். இரண்டாவது சுருக்கிச் சொல்லியிருப்பதை வெறுமனே விரித்துப் பொருள் கண்டுகொள்வதுபோல் இருக்கும். குறியீட்டு மொழியில் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து புரிந்துகொள்ளப்படவேண்டியதென்பது 9 ரசங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கும்.
இந்த இடத்தில் கொஞ்சம் கிளைபிரிந்து ஒரு விஷயம் சொல்கிறேன். ‘ கலை என்பது வெளிப்பாடு’ என்று க்ரோச் கூறுகிறார். வெறுமனே விளக்கிச் சொல்லும் ஒரு வாக்கியம், உதாரணமாக, ஒரு மனிதர் நடக்கிறார்; அல்லது (a+b)2 = a2+2ab+b2 என்பது கலை அல்ல.
கவிதை / செய்யுள் என்பது ஒரு வகையான வாக்கியமே. ஆனால் எப்படியான வாக்கியம்? அழகியல் ரசனையை ஆன்மாவாகக் கொண்ட வாக்கியம். அதாவது அதில் நவ ரசங்களில் ஏதேனும் ஒன்று குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும் அல்லது சொல்லப்பட்டிருக்கும். தேவையான ரசனை உணர்வு (ரசாஸ்வாதனா) இருந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்பதுதான் அழகியலின் (ரசம்) அடிப்படை அம்சம்.
ரசம் மற்றும் ரசாஸ்வாதனா என்றால் என்ன? அழகு மற்றும் அழகியல் ரசனை, உணர்வு என்றால் என்ன?
சாஹித்ய தர்பணாவில் விஸ்வநாதர் இந்த அனுபவம் பற்றி விவரிக்கிறார்:இது தூய்மையானது; பிளவுபடுத்தமுடியாதது; சுயமாக உருவாகக்கூடியது; மகிழ்ச்சியும் பிரக்ஞை நிலையும் கலந்தது; முன் அனுமானங்கள் எதுவும் கலக்காதது. புதிரான அனுபவத்தின் இரட்டைப் பிறவி போன்றது. முழுக்கவும் புலன் உணர்வுகளைக் கடந்த பெரு அதிசயம் (உலகியல் இலக்குகளைக் கடந்தது – லோகோத்தாரம்)’.
இங்கு அதிசயம் என்பது ‘பாராட்டுணர்வில்’ மனம் விரிவதைக் குறிப்பிடுகிறது.
‘மேலும் இதைத் தகுதியுள்ளவர்களால் மட்டுமே உணரமுடியும். கடவுளின் திரு உருவத்தையே கடவுளாக உணர்ந்து களிகூர்வதுபோன்றது. ரசாஸ்வாதானா என்பது கற்பனை. தூய பக்தி நிலையில் வழிபடப்படும் உருவம் (தெய்வம்), வழிபடும் பக்தர் என இரண்டும் ஒன்றாகியிருக்கும். காரண காரியம் இரண்டும் இருக்கும்’.
இந்த ஒரு காரணத்தினாலேயே இது கற்றறிதலுக்கு அப்பாற்பட்டதாகத் திகழ்கிறது. அதன் இருப்பிலிருந்து அதன் புரிதலைப் பிரித்தறியமுடியாது. அதுவாக ஆனாலே அதை உணரமுடியும். புரிதலுக்கு அப்பால் அதற்கென்று தனி இருப்பும் இல்லை. காலவெளியில் நிரந்தரமானது என்று கருதப்படவோ விளக்கப்படவோ கூடியது அல்ல. அது காலமும் கடந்தது. அது புலன்களால் உணரமுடியாதது; மீ மெய்யியல் தன்மை கொண்டது. அது இருப்பதை அதை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே நிரூபிக்கமுடியும்.
கலைகளை வெறுப்பவர் கேட்கும் கேள்விக்கு, ரசிகர் ஒருவர் எதையும் சொல்லிப் புரியவைக்கமுடியாது. ருசித்துப் பார். அப்போதுதான் அதன் அருமை புரியும். நான் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறேனோ அதை நான் அறிந்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்லமுடியும்.
அப்படியாக மதம் மற்றும் கலை என்ற இரண்டுமே ஒரே அனுபவத்துக்கான வெவ்வேறு வார்த்தைகளே. யதார்த்தம் மற்றும் அடையாளத்தின் உள்ளொளியே அது. இது இந்துக்களுடைய பார்வை மட்டுமே அல்ல. நவ பிளேட்டோனியர்கள், ஹீஷ் கோ, கதே, பிளேக், ஸ்கோபென்ஹர், ஸ்கில்லர் போன்ற பலரும் இதற்கு இணையான பார்வை கொண்டவர்களே. பெர்டினண்ட் க்ரோஸும் இதை மறுக்கவும் இல்லை.
கலை ரசனையில் உன்னத எழுச்சித் தருணத்தில் யதார்த்த உலகில் இருந்து முளைத்தெழுந்து வரும் ஒருவித உணர்ச்சியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாக எளிதில் நம்பிவிடுகிறோம். இதைச் சொல்பவர்கள் எல்லாக் கலைகளும் யதார்த்த அம்சங்களினால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியாக வேண்டியிருக்கும். ஆனால், கலைஞனின் விசேஷத் தன்மை என்னவென்றால், யதார்த்தத்தை ஆக்கிரமித்து (அதன் தூய வடிவில் இருப்பதைக் கைப்பற்றி) அதை, தான் உணர்ந்த மொழியில் அதி தூய வடிவில் வெளிப்படுத்துவதில் இருக்கிறது.
இந்த இடத்தில் தூய வடிவம் என்பது அழகியல் ரசனை இல்லாத பொருள்களின் கலப்பு இல்லாத நிலையைக் குறிக்கிறது.
இந்தப் பார்வை ஒருமைத்தன்மையை (Monism) முன்வைப்பது போல் தோன்றலாம். பரம்பொருளே எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் அம்சம். அதுவே அனைத்திலும் நிறைந்திருக்கும் யதார்த்தம். உலகம் முழுவதும் மாயையே என்ற கோட்பாட்டுக்கு இது எதிரானது. ஆனால் அன்றாட அனுபவங்கள் எனும் மாய உலகில் கவிஞர்கள், பக்தர்கள், தத்துவஞானிகள் இந்த மாய உலகைக் கடந்து நிற்கும் சத்தியத்தின் கீற்றுகளைத் தரிசிக்க முடியும் என்பதை அது குறிக்கிறது. நாம் நினைக்கும் வடிவிலானது அல்ல உலகம். நாம் அறிந்தவற்றையும் தாண்டி அறியமுடியாத தன்மை கொண்டது உலகம்.
ஒரு பக்தன் உணரும் பக்தியைப்போல், தத்துவ ஞானிகள் உணரும் சத்தியமும் நிஜமும் போல் ஒரு கலைஞரால் அழகியலானது அவருக்கான சத்தியமாக அனுபவிக்கப்படுகிறது. இவை பரம்பொருளின் மூன்று நிலைகள். ஒரு கலைஞர், தான் அனுபவித்த இந்த அனுபூதி நிலையை ரசிகருக்குக் கடத்துவதே கலையின் நோக்கம். இதைச் சாதிக்க அவருக்கு உகந்த எந்தவொரு கருப்பொருளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் பரம்பொருள், சிறியது – பெரியது, உயிருள்ளது – உயிரில்லாததது நல்லது – கெட்டது என்ற பேதங்களில்லாமல் உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.
பரம்பொருள் போன்ற எல்லையற்ற அழகியல் ரசனை உலகை, அந்தரங்க அனுபவங்கள் மூலமாகவே உணரமுடியும். அப்படியானால் உலகில் இருக்கும் பொருள்களை எல்லாம் விலக்கிவிட்டு, கலையை அனைத்திலிருந்தும் திட்டமிட்டுத் தூய்மைப்படுத்துவதன் மூலம் அடைந்துவிடமுடியுமா? அழகியலை உருவாக்கத் திட்டமிடுவது மட்டுமே போதாது என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதற்கு ஒருவித ஆத்மார்த்தமான அர்ப்பண உணர்வு தேவை. தரையிலிருந்து விலகிச் சென்றால் தான் பறத்தல் சாத்தியம். அது இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது. அதேநேரம் வெறுமனே விலகிச் செல்வதன் மூலமும் வெறுமனே துறப்பதன் மூலமும் முழுமையை அடைந்துவிடமுடியாது.
உலக நிகழ்வுகள் மற்றும் உலகப் பொருள்களைப் பார்க்காமல் விலகி நிற்பதன் மூலம் அழகியலை அடைந்துவிடமுடியாது. வெறும் மறுதலிப்பின் மூலம் எதையும் அடைந்துவிடமுடியாது. உலகில் இருக்கும் பொருள்களையெல்லாம் அவற்றின் முழுமையான அழகு மற்றும் உண்மை நிலையில் பார்க்க முடிந்தாலே கலைச் சாதனைகள் செய்யமுடியும். எப்போதெல்லாம் ஒரு கலைஞரின் மனம் இவற்றில் தோய்கிறதோ அப்போதெல்லாம் அவற்றின் அழகை வெளிக்கொணர்கிறார். கலைஞரின் மனமானது பரம்பொருளுடன் நேரடியாக இணைவதில்லை. அவருடைய விருப்பத்துக்குரிய பொருள்களுடன் தன்னை இணைத்துக்கொள்கின்றன.
அப்படியாக நாம் பூமிக்குத் திரும்பிவருகிறோம். நாம் தேடும் பொருளை வேறொரு இடத்தில் கண்டடையவேண்டும் என்று நினைத்தால் அது தவறு. புருஷ மற்றும் பிரக்ருதி அதாவது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களைக் கொண்ட இரண்டு உலகங்களும் ஒன்றே. பக்தன், தத்துவஞானி ஆகியோருக்கு தெளிவாகப் புரிந்திருப்பதுபோல் கலைஞருக்கும் இது புரிந்திருக்கிறது. கலை உணர்வற்றவர்களுக்கு இது புரிவதில்லை. ஒரு லெளகீகவாதி அல்லது இருண்மவாதம் பேசுபவர்களிடம் பேசுவதுபோல் இவர்களிடம் பேசவேண்டும். இவர்களுக்கு உணர்வுகள் என்பவையே எல்லாமும் அல்லது ஒன்றுமே இல்லை.
விஸ்வநாதர் மற்றும் அழகியல் ரசனை சார்ந்து பேசிய அனைவரும் முன்வைத்த கோட்பாடானது முழுமையான ஒருமைவாதத்தைக் கொண்டது. அது வேதாந்தத்துடன் கை கோர்த்து நடக்கிறது. நம் தேசத்தைப் போன்ற ஒன்றில் கலைச் சிந்தனை அதனளவில் மரபான தத்துவங்களுடன் ஒருமுகப்பட்டதாகவே இருக்கிறது. எனவே இதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.
(தொடரும்)
___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின் தமிழாக்கம்.