Skip to content
Home » சிவ தாண்டவம் #7 – (அந்த) அழகென்பது ஒரு நிலை

சிவ தாண்டவம் #7 – (அந்த) அழகென்பது ஒரு நிலை

சிவ தாண்டவம்

மனிதர்கள், விலங்குகள், நிலப்பரப்புகள் மற்றும் தொழிற்சாலைகள், நெசவாலைகள், திட்டமிட்ட கலைப்படைப்புகள் போன்ற செயற்கை உற்பத்திகள் இவற்றை அழகானவை அல்லது அழகற்றவை என்றெல்லாம் வகைப்படுத்தமுடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எனினும் இது தொடர்பான பொதுவான கோட்பாடு எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. ஒருவருக்கு அழகாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அழகற்றதாகத் தோன்றக்கூடும். ‘ஒவ்வொருவரும் தமது ரசனைக்கு ஏற்ப அழகிய பொருள்களில் தமக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்’ என்று பிளேட்டோ குறிப்பிட்டிருக்கிறார்.

மனிதர்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்: ஒவ்வொரு இனமும், ஒருவகையில் ஒவ்வொரு நபரும், தமக்கென தனியான விருப்பங்களைக் கொண்டிருக்கிறார். நம்மிடையே ஒரு பொதுவான இறுதி முடிவை எட்டவே முடியாது. ஐரோப்பியர் ஒருவருக்கு மங்கோலிய அம்சங்கள் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அதுபோலவே மங்கோலியருக்கு ஐரோப்பிய அம்சங்கள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமக்கான தனி ரசனை உணர்வைக் கொண்டிருப்பார்கள். பிறவற்றை அழகற்றது என்று சொல்வார்கள்.

மத்திய கால நாயகர் ஒருவர், ‘தனது காதலியே பிற பெண்கள் அனைவரையும்விடப் பேரழகி’ என்று சொல்வார். பல்வேறு தத்துவ மரபுகள், மதங்கள் எல்லாம் தத்தமது தர்ம விதிமுறைகளே மிக உயர்ந்தவை என்று சொல்வார்கள். ஆனால் இவையெல்லாம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த கூற்றுகள் மட்டுமே. ஏனென்றால் இந்த இனம் தான் உயர்ந்தது என்றோ இந்த ஒழுக்க மரபுதான் உன்னதமானது என்றோ யார் சொல்லமுடியும்?

நமக்கு எது பிடித்திருக்கிறதோ அதுவே மிகச் சிறந்தது என்று சொல்லிவிடுவது மிகவும் எளிது. உண்மையில் நமக்கு அது மிகவும் உகந்தது என்று சொல்ல மட்டுமே இடம் உண்டு. லைலா அழகற்றவர் என்று உலகில் பலரும் சொன்னபோது, ‘லைலாவின் அழகைக் காணவேண்டுமென்றால் மஜ்னுவின் கண்கள் தேவைப்படும்’ என்று சொல்லப்படும் செவ்வியல் கூற்றைவிட, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பற்றிச் சொல்லும்போது வேறெதைச் சொல்லிக்காட்டிவிடமுடியும்?

கலைப் படைப்புகளுக்கும் அது பொருந்தும். ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு பொருளினால் உத்வேகம் பெற்றிருப்பார். ஒருவருக்கு வசீகரமானதாகவும் உத்வேகமூட்டுவதாகவும் இருப்பது இன்னொருவருக்குச் சோர்வூட்டக்கூடியதாகவும் மந்தமானதாகவும் தோன்றக்கூடும். இனத்துக்கு இனம், கால கட்டத்துக்குக் காலகட்டம் இந்த ரசனைகள், தேர்வுகள், வெளிப்பாடுகள் எல்லாம் மாறுபடும். படைப்புகளை ரசிப்பது தொடர்பாகவும் இதே விஷயம் பொருந்தும்.

மனிதர்கள் பொதுவாகக் கல்வி அல்லது மனநிலையின் மூலம் எவ்விதமான கலைப்படைப்புகளை ரசிக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்களோ அப்படியானவற்றையே ரசிக்கிறார்கள். பரிச்சயமற்ற கலையை ரசிக்க வேண்டுமென்றால் கடினமான முயற்சி எடுக்கவேண்டியிருக்கும். அதற்குப் பலரும் தயாராக இருப்பதில்லை.

ஒரு செவ்வியல் ஆராய்ச்சியாளர் (ரசிகர்) கிரேக்கக் கலைகளுக்கு இணையாகவோ அதை மிஞ்சும்படியாகவோ எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. இனியும் அப்படி ஒன்றை உருவாக்கிவிடமுடியாது என்றே சொல்வார். மைக்கேல் ஏஞ்செலோ நினைத்ததுபோல், ‘இத்தாலிய ஓவியம் மிகச் சிறந்தது. எனவே மிகச் சிறந்தது எதுவோ அது இத்தாலிய ஓவியமாகவே இருந்தாகவேண்டும்’ என்று பலரும் நினைக்கிறார்கள்.

எகிப்திய சிற்பங்கள், சீன அல்லது இந்திய இசை, ஓவியம் இவற்றின் அழகுகளையெல்லாம் அறிந்தே இருக்காத பலர் இருக்கிறார்கள். இப்படியானவற்றின் அழகுகளை அவர்கள் மறுதலிக்கிறார்கள் என்பதால் அவை அழகற்றவையாகிவிடுவதில்லை.

சில படைப்புகள் அழகு மிகுந்தவை என்பதை நாம் மறந்துவிடவும் கூடும். கோதிக் சிற்பக் கலை, ஆரம்ப இத்தாலிய ஓவியம் ஆகியவற்றை 18-ம் நூற்றாண்டு மறந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளினாலேயே அவற்றின் அழகியல் அம்சங்கள் மீண்டும் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டன. பல இயற்கைப் பொருள்கள், கலைப் பொருள்கள் ஆகியவற்றை மனித இனம் மிக மெதுவாகவே ரசிக்கக் கற்றுக் கொள்வதும் உண்டு. பாலைவனம் மற்றும் மலைகளின் இயற்கை அழகு ஆகியவற்றை மேற்குலகம் 19-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே ரசிக்கக் கற்றுக் கொண்டது.

உலகின் மகத்தான கலைஞர்கள் பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே உலகப் புகழ் பெற்றனர். மனிதர்களின் தேர்வுகளை நாம் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த வெறுப்பு விருப்பு பற்றிய இன்னும் மேலான முடிவுகளுக்கே சென்று சேருவோம்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட முழுமையான நன்மை, முழுமையான சத்தியம் என்றெல்லாம் இருப்பதாகச் சிலர் சொல்வதுபோல் முழுமையான அழகியல் (ரசனை) இருக்கிறது என்று சில தத்துவவாதிகள் (கோட்பாட்டாளர்கள்) சொல்வதுண்டு. இறை நம்பிக்கை கொண்டவர்கள் இந்த முழுமைகளையெல்லாம் இறைவனுடன் தொடர்புபடுத்திச் சொல்வதுண்டு. இறைவன் மட்டுமே முழுமையான அழகு, முழுமையான அன்பு, முழுமையான சத்தியம் என்று சொல்வார்கள்.

உண்மையான ரசிகரால் எந்தக் கலைப் படைப்புகள் அழகானவை; எவையெல்லாம் அப்படியற்றவை என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று பொதுவாக நம்பவும் படுகிறது. எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், உண்மையான கலைப்படைப்புகள் எவை; எவை அப்படியற்றவை என்பதைத் தீர்மானிக்க அவரால் முடியும். அதேநேரம் ரசனை சார்ந்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எல்லாத் தெய்வங்களும் தேவர்களும் அவரவருக்குப் பிடித்தவகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கூற்றுகளில் இருக்கும் முரணை எப்படித் தீர்ப்பது என்று பார்ப்போம். மிகத் துல்லியமான பதங்களைப் பயன்படுத்தியே இதைச் செய்யமுடியும். இதுவரையில் அழகியல் பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தத்தை இதுவரை நான் வரையறுக்கவில்லை. அந்த ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் வரும்படியாகவே பயன்படுத்தியிருக்கிறேன். ஓர் அழகிய பெண் அல்லது அழகிய கவிதை பற்றிச் சொல்லும்போது அப்படிச் சொல்வதில்லை. அழகிய ஓவியம் என்றோ அழகிய தட்பவெப்பநிலை என்றோ சொல்லும்போது இரண்டு வெவ்வேறு விஷயங்கள் பற்றிப் பேசுகிறோம் என்பது புலப்படும். அழகியல் கோட்பாடு விஷயத்தில் அழகிய என்ற வார்த்தையை ரசனை சார்ந்து ரசிப்பின் வெளிப்பாடாகவே பயன்படுத்தவேண்டும். இயற்கையான பொருள்களை அழகான என்று சொல்லும்போது ரசனை சார்ந்த தீர்மானமாக அதைச் சொல்வதில்லை. அவற்றை அழகானவை என்று யதார்த்தத்தில் அல்லது தார்மிக அளவில் நமது மனதுக்கு இதமானவற்றையே அப்படிச் சொல்கிறோம். ஒரு கலைப்படைப்பையும் அப்படியாக மதிப்பிடுவதாகவே நாம் பாவனை காட்டுகிறோம்.

நாம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும் விஷயத்தை அல்லது அம்சத்தைக் கொண்ட படைப்பை அழகானது என்கிறோம். அதன் நிறம் அல்லது இதம் அல்லது இனிமை அல்லது இனிய இசை அல்லது வசீகரம் ஆகியவற்றினால் நம்மைக் கவர்ந்தால் அதை அழகானதாகச் சொல்கிறோம். இப்படியான உணர்வின் அடிப்படையில் ஒரு நடனம் இனிமையாக இருந்தது என்பதை அந்த நடனக் கலைஞரின் வசீகரம், திறமை, நடனக் கருப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாராட்டிச் சொல்வதைத் தூய கலை ரசனை என்று சொல்லக்கூடாது. கலை ரசனை சார்ந்து மதிப்பிடும்போதுதான் அழகான, அழகற்ற என்று பேசலாம். ஆனால் யதார்த்த அல்லது தார்மிகச் செயல்பாடு சார்ந்து ஓர் ஓவியம், பாடல், நடிப்புத் திறமை இவை பற்றிச் சொல்வதென்றால் அந்தப் பாடல் விரும்பத்தகுந்தது; அந்த நடிப்பு கண்ணியமாக இருந்தது; அந்த நிறம் அருமையாக இருந்தது; அந்த அசைவு இதமாக இருந்தது’ என்பதுபோல்தான் சொல்லவேண்டும்.

இப்படிச் செய்யும்போது நாம் அந்தக் கலைப் படைப்பை எடைபோடவில்லை. உள்ளடக்கம், பொருள், அதை உருவாக்கியிருக்கும் தனித்தனி அம்சங்கள், செயல்பாடுகள் அல்லது அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் இவை பற்றி மட்டுமே பேசுகிறோம்.

ஒரு கலைப்படைப்பை மதிப்பிடும்போது இப்படியான உணர்வுகள், தார்மிகக் கணிப்புகள் இவற்றின் தாக்கமானது நம் கலைத் தீர்மானத்தில் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் என்ற கேள்வி எழக்கூடும். ஒரு கலை விமர்சகர் தன் அறையில் ஒரு நிர்வாணப் புகைப்படத்தைத் தொங்கவிட்டு தன் ரசனையின் தனித்தன்மையை நமக்கு எரிச்சலூட்டும் வகையில் காட்டியாகவேண்டுமா? ஒரு படைத் தளபதி போர்க்களத்தில் தாலாட்டுப் பாட்டைப் பாடச் சொல்வதுபோல் ஓர் அதிர்ச்சி மதிப்பு கொண்டதாகவே கலை விமர்சனம் இருக்கவேண்டுமா?

ஒவ்வொரு கலை ரசிகரும் ஒவ்வொரு போர் வீரரும் ஒரு கலைஞராகிவிட்டால் கலைப்படைப்புகளின் அவசியமே இருக்காது. அப்படி இல்லாதவரையில் ரசனை சார்ந்த கலைத் தேர்வுகளுக்கு இடமும் முக்கியத்துவமும் நாம் தரத்தான் வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்ற தெளிவு ஒருவருக்கு இருந்தாகவேண்டும். இதனால் என்ன பலன், இதில் என்ன போதனைகள் இருக்கிறது என்பதுபோன்ற பார்வைகள் இடையில் புகுந்து முடிவற்ற பிழைகளுக்கு வழிவகுக்காமல் இருக்கவேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும். நாயகராக நடிப்பவரைவிட வயலின் இசைக்கலைஞர் மாபெரும் கலைஞராக இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மில்லடின் வார்த்தையில் சொல்வதென்றால், ‘அழகென்பது கலைப் படைப்பிலிருந்து உருவாவதில்லை; அந்தக் கலைப்படைப்பை உருவாக்கத் தூண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தே அழகியல் பிறக்கிறது’.

ஒரு படைப்பின் அழகிய ரசனை அம்சத்தின் அடிப்படையில் மட்டுமே நல்ல படைப்பு அல்லாத படைப்பு என்று சொல்லவேண்டும். கலைப்படைப்பின் கருப்பொருள் மற்றும் பிற பொருள்கள் மட்டுமே விருப்பு வெறுப்புகள் சார்ந்தவை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கலைப்படைப்பு எந்த அளவுக்கு அழகாக இருக்கிறது என்று சொல்வது, எந்த அளவுக்கு அது ஒரு கலைப்படைப்பாக இருக்கிறது; வெறும் விளக்க, பிரசாரப் படைப்பாக இல்லை என்பதைக் குறிக்கும். அப்படியான கலைப்படைப்பில் மனச்சாய்வு சார்ந்த வசீகரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அதன் யதார்த்த வெளிப்பாடுகள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் கலைப் படைப்பின் அழகியல் அவற்றில் நிச்சயம் இல்லை.

அப்படியானால் அழகு, அழகியல் ரசனை என்றால் என்ன? பல்வேறு வகையான கலைப்படைப்புகள் எல்லாம் தம்மில் கொண்டிருக்கும் அந்தப் பொதுவான, தனிப்பட்ட அம்சம் எது? ஒரு கலைப்படைப்பின் உருவாக்கம் பற்றிப் பார்ப்போம். 1. கவிஞர் அல்லது படைப்பாளியின் அழகியல் உள்ளுணர்வு (உள்ளொளி) மற்றும் இந்த உள்ளுணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடு; 2. உண்மையான படைப்பு அல்லது அழகியல் தரிசனம் 3. பிறருக்குத் தெரிவிக்கும் நோக்கில் இவற்றை வெளிப்படுத்தும் புற அடையாளங்கள் (மொழி போன்றவை) – கலையின் தொழில்நுட்பச் செயல்பாடு 4. இறுதியாக மூல உள்ளுணர்வை அல்லது அதற்கு இணையான ஒன்றை விமர்சகர் அல்லது ரசிகரின் மனதில் மீளுருவாக்கம் செய்தல்.

கலைப்படைப்பின் மூல உள்ளுணர்வானது வாழ்வின் எந்தவொரு அம்சமாகவும் இருக்கக்கூடும். ஒரு கலைஞருக்கு மீனின் செதில்கள் ஒரு கலை உணர்வை உருவாக்கக்கூடும். வேறொருவருக்கு நிலவியல் இயற்கைக் காட்சிகள் அந்த உள்ளுணர்வைத் தூண்டக்கூடும். மூன்றாமவர் ஏழ்மையில் இருக்கும் குடிசை பற்றிப் பேசக்கூடும். நான்காமவர் அரண்மனைகளின் பெருமைகளைப் பாடக்கூடும். ஐந்தாமவர் இந்த உலகில் நடக்கும் அனைத்துமே ஆடலரசன் ஒருவனின் பெரு நடனத்துடன் தொடர்புடையதாக அதில் கட்டுண்டதாகக் கருதுபவராக இருக்கலாம். அந்த உணர்வை ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்றோ ‘ஒரு சிட்டுக் குருவியின் ஒற்றைச் சிறகுகூட அவருக்குத் தெரியாமல் பூமியில் விழாது’ என்றோ கவித்துவமாகச் சொல்லக்கூடியவராக இருக்கலாம்.

ஒவ்வொரு கலைஞரும் அவருக்கான அழகியலைக் கண்டடைகிறார்கள். ஒவ்வொரு விமர்சகரும் / ரசிகரும் அந்தக் கலைஞர் வெளிப்படுத்தும் புற அடையாளங்கள், சமிக்ஞைகளை ரசிப்பதன் மூலம் அதைக் கண்டடைகிறார்கள். அப்படியானால் அழகியல் எங்கிருக்கிறது? நிச்சயம் சிலவற்றில் மட்டும் இருக்கிறது; பிறவற்றில் இல்லை என்று சொல்லவே முடியாது. அழகியல் / கலையம்சம் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருக்கிறது. நான் இதை மறுக்கவில்லை. ஆனால், நான் இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல விரும்புகிறேன். அதாவது எல்லாவற்றிலும் கலையம்சத்தைக் கண்டடைய முடியும் என்று தெளிவாகச் சொல்லவிரும்புகிறேன்.

எல்லா இடங்களிலும் அழகியல் / கலையம்சம் இருக்கிறதென்று சொன்னால் அவற்றைப் புகைப்படக் கருவிகள்கொண்டு நம்மால் எளிதில் கண்டடைய முடியும்; நம் அளவுகோல்களினால் அதை அளந்துவிடமுடியும் என்று ஆகிவிடும். நாம் அப்படிச் செய்தால் சராசரி ரசனைகளுடனான பரிச்சயம் மட்டுமே கிடைக்கும். கலையம்சம் மிகுந்தவற்றில் இருந்து அல்லாதவற்றைப் பிரித்தறியும் வழிகளைக் கண்டடைய முடியாது. அழகியல் ரசனையை / கலையம்சத்தை இந்த வழியில் அளவிடவே முடியாது. ஏனென்றால் அது கலைஞனுக்குள்ளேயும் அவருடைய உள்ளுணர்வு அனுபவத்துக்குள் இறங்கி அதைப் பகிர்ந்துகொள்ளும் ரசிகரிடமும் மட்டுமே இருக்கிறது. இதைத்தான் ‘கலையின் ரகசியம் கலைஞனுக்குள்ளேயே இருக்கிறது’ என்று கூ ஜோ சூ (Kuo Jo Hsu) குறிப்பிட்டிருக்கிறார். (12-ம் நூற்றாண்டு) ‘த கோக்கா (Kokka)’ என்ற நூல் 244 பக்கம்).

ஒரு கட்டுமானத்தின் கலை அழகு என்பது
நீங்கள் அதைப் பார்ப்பதில்தான் இருக்கிறது
வெள்ளை அல்லது சாம்பல் கற்களில் இருப்பதாகவோ
முகப்பு வளைவுகளிலோ விதானங்களிலோ
தூண்களிலோ இருப்பதாகவா நினைக்கிறீர்கள்?
இசை என்பது இசைக்கருவிகள் உங்களுக்கு
எதை எழுப்புகிறதோ அதில் இருக்கிறது
வயலினிலோ இசைக் கச்சேரிகளிலோ
பாடகரின் குரலிலோ இருப்பதாகவா நினைக்கிறீர்கள்
அவற்றுக்கெல்லாம் வெகு அண்மையில்
அவற்றிலிருந்தெல்லாம் அதி தொலைவில் இருக்கிறது.

மனச் சாய்வு சார்ந்த கணிப்புகளை எல்லாம் புறமொதுக்கிவிட்டுப் பார்த்தால், அழகானவை அல்லாதவை என்ற வகைப்பாட்டில் ஒருவித அறிவார்ந்த அம்சம் இருக்கவே செய்கிறது. ஆனால் படைப்பின் எந்த அம்சங்களுக்கு இவை குறிப்பாகப் பொருந்தும்? அழகிய ரசனை மிகுந்த படைப்பு என்று நாம் சொல்பவற்றில் படைப்பின் கருப்பொருள், வெளிப்பாடு, உள்ளடக்கங்கள், வடிவம் எல்லாம் எந்த அளவுக்குப் பார்வையாளருக்குக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு சொல்கிறோம். அழகியல் ரசனை இல்லாதவை என்று நாம் சொல்பவற்றில் உள்ளடக்கம், வடிவம் எல்லாம் வெவ்வேறு தரத்தில் இருக்கும்.

கால வெளி சார்ந்த அம்சங்களில் கலைப்படைப்பு உணர்த்தும் விஷயங்கள் தனி அடையாளமாகத் திகழ்வதில்லை. கலைப் படைப்பினூடாக நமது மன உணர்வுகளே லட்சியத் தொடர்பை, பந்தத்தை முழுமையடையச் செய்கின்றன. இதனால்தான் அழகியல் என்பது ஒரு படைப்புக்கு நாம் ‘அளிப்பதாக’ இருக்கிறது; அந்தப் படைப்பில் இல்லை. படைப்பைப் பொறுத்தவரையில் கூடுதல் குறைவாக இருக்கும் அழகியல் அம்சம் என்பது படைப்புக்கும் வடிவத்துக்கும் இடையில் எந்த அளவுக்குக் கூடுதல் குறைவான பந்தம் உருவாகியிருக்கிறது என்பதைக் குறிப்பதாக அமையும். படைப்பு பற்றி நம்மால் சொல்ல முடிவது அதுவாக மட்டுமே இருக்கும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சிறந்த கலை என்பது அவ்வகையானவற்றில் சிறந்த என்று அர்த்தம். உள்ளார்ந்த கலை ரசனை சார்ந்து சொல்வதென்றால் அழகியல் ரசனை என்பது முழுமையானது; துண்டு துண்டாக இருக்காது.

அழகியல் ரசனை / பார்வை என்பது தன்னியல்பானது. ஒரு பக்தருக்குள் இருக்கும் உள்ளொளி போன்றது. திட்டமிட்டெல்லாம் அந்தப் பரவச நிலையை எட்ட முடியாது. அந்த உள்ளுணர்வைத் தடுக்கும் அம்சங்களை நம்மால் பிரக்ஞை பூர்வமாக அப்புறப்படுத்த முடியலாம். ஆனால், அனைத்துக் கலை சாதனைகளின் ரகசியம் என்பது நம்மை மெய்மறக்கச் செய்வதில் இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

‘இசை – ஒரு வருங்கால மதமாக (Music as a Religion of the Furure)’ என்ற நூலில் ஈ.ஜி. ரிக்கோடோ கனெளடோ (E. G. Riciotto Canudo), ‘கலையின் ரகசியம் என்பது சுய உணர்விழப்பில் தான் இருக்கிறது’ என்று இதையே குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பரவச நிலை என்பது மகிழ்ச்சியைத் தேடிச் செல்வதன் மூலம் அடையப்படுவதில்லை. அப்படிச் செல்பவர்களுக்கு அவர்களுக்கான வரையறுக்கப்பட்ட இன்பமே கிடைக்கும். ஆனால் அவர்கள் மனச் சாய்வுகளோடு, அருமையானவற்றினோடு கட்டிப் போடப்பட்டிருப்பார்கள். ஒரு கலைஞரோ எல்லையற்ற அழகை, அழகியலை உருவாக்கிக் கடத்தியிருப்பார்.

கலைப் படைப்புகளின் அழகியலைப் பற்றிப் பேசும்போது நாம் அவையெல்லாம் உண்மையான மகத்தான கலைப் படைப்புகள் என்ற அர்த்தத்தில் தான் சொல்கிறோம். கருப்பொருள், தொடர்பாக்கம், தொழில் நுணுக்கத் திறமை இவையெல்லாவற்றையும் தாண்டி முழுமையாகச் சொல்லும்போது ஒருவிதப் புதிரான மனநிலையிலேயே சொல்கிறோம். கவிதைகள், ஓவியங்கள், நடனம் போன்ற புற வெளிப்பாட்டு அம்சங்கள் இவையெல்லாம் தேர்ந்த நினைவூட்டல் அம்சங்களாகத் திகழ்கின்றன. இவையெல்லாம் தெளிவான வடிவத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஆனால் இவற்றின் வடிவமானது நமக்கு அழகியல் உணர்வை ஏற்படுத்துகின்றன. நம் மனதில் அழகிய ரசனை உணர்வைக் கிளர்ந்தெழ வைக்கின்றன என்றே இதற்கு அர்த்தம்.

தெளிவான வடிவம் என்பதன் விளக்கம் என்னவென்றால், பொருள்களின் (கலைப்படைப்பில் உள்ளவற்றின்) உள்ளார்ந்த பந்தங்களை வெளிப்படுத்தும் வடிவம் என்று சொல்லலாம். அல்லது ஷீ ஹோ சொன்னதுபோல் ‘உயிருள்ள பொருள்களின் ஆன்மாவின் லயத்தை வெளிப்படுத்தும் வடிவம்’ என்று சொல்லலாம். இப்படியான தெளிவான வடிவமைப்பு கொண்ட எல்லாப் படைப்புகளும் மொழியால் விவரிக்க முடிந்தவையே. இதை நாம் மனதில் கொண்டால், வார்த்தை விளையாட்டு அல்லது மொழியை மொழிக்காகவே பயன்படுத்தும் படைப்புகளைத் தெளிவான கலைப்படைப்புகளுடன் குழப்பிக் கொள்ளமாட்டோம். அல்லது தர்க்கரீதியாக எதைச் சொல்கிறது என்பதையோ அதன் போதனை மதிப்பு என்ன என்பதையோ எல்லாம் அழகியலோடு குழப்பிக் கொள்ளமாட்டோம்.

அழகியல் கோட்பாடென்பது கோட்பாட்டாளரால் உருவாக்கப்பட்டதுதான். கலைஞரால் அல்ல. ஒரு கலைஞர், தான் சொல்ல விரும்பியதுடன் (எதைச் சொல்ல வேண்டுமோ அதனுடன்) மட்டுமே எப்போதும் கவனத்தைக் குவித்திருப்பார். எல்லாக் காலகட்டங்களிலும் கலைஞர்கள் தமது குறிப்பிட்ட கருப்பொருள் மீது மிகுந்த பற்று கொண்டவராகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருந்திருக்கவில்லையென்றால், அந்தப் படைப்பை நம்மால் ‘உணர’ முடியாமல்தான் இருந்திருக்கும்; அந்தக் கலைஞர் தனது கலை உன்னதத்தை அழகியலை எட்ட முடிந்திருக்காது. சிறகில்லாமல் பறக்க முயன்றவரைப் போலவே அவருடைய கலைப்படைப்பு மாபெரும் விபத்தாகவே ஆகிவிட்டிருக்கும்.

கருப்பொருள் முக்கியமானதல்ல என்று கலைஞரைப் பார்த்துச் சொல்லக்கூடாது. கலைகளைப் பிடிக்காது என்பதால் அதை வெறுப்பவர்களைப் பார்த்துத்தான் ஒரு கோட்பாட்டாளர் இதைச் சொல்லவேண்டும்.

உண்மையான ரசிகர், ஒரு கலைஞர் தன் படைப்பில் புற வடிவம், அடையாளங்கள், பொருள்கள் இவற்றின் மூலம் உருவாக்கியிருக்கும் கலையின் அழகியலைப் புரிந்துகொண்டுவிடுகிறார். கலைஞர் என்ன நோக்குடன், அர்த்தத்துடன் அதை வடிவமைத்திருக்கிறாரோ அதை அந்த ரசிகர் அப்படியே ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்று அவசியமில்லை. எந்தவொரு கலையுமே காமதேனுவைப் போல் ஏராளமான அர்த்தங்களை வாரி வழங்கக்கூடியது. இது எதைப் பற்றியது என்ற கேள்வி மனதில் எழும் முன்பே கலையின் அழகியல் அம்சத்தால் அவர் ஆட்கொள்ளப்பட்டுவிடுவார்.

கலை ரசனையைக் கல்வியின் மூலம் பெற முடியாது என்று ஹிந்து அழகியல் கோட்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். முந்தைய ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் எத்தனையோ திறமைசாலிகள், கலை ஆய்வாளர்களாக ஆகப்போகிறவர்கள் எனப் பலருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்திருப்பதில்லை. கவிஞர்கள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை. ஒரு கலை ரசிகரும் அப்படியே. கலை ரசனையின் அளவு வேறுபடலாம். ஆனால் கலைஞரின் தரம் மற்றும் தகுதியில் அல்ல.

மேற்குலக வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால் ‘அனுபவ நேர்த்தியை அனுபவத்தின் மூலமே பெறமுடியும். கருத்துச் சொல்லும் திறமையானது கடின முயற்சியின் மூலமே பெறப்பட முடியும்’. எல்லாக் கலைப்படைப்புகளும் அழகியல் ரசனை மிகுந்தவையே என்று பீடத்தில் ஏறி நின்று சொல்வதன் மூலம் நாம் எதையும் பெறவோ உணரவோ செய்வதில்லை. அவற்றின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதே நியாயமான விஷயம். அந்த ரசனையைப் பெறும் காலம் நமக்கும் வரும்.

ரசிகர் (விமர்சகர்) தன் கலையில் தேர்ச்சி பெற்றதும் தனது திறமையை நிரூபித்தாக வேண்டியிருக்கும். வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து இதை அவரால் செய்துகாட்டமுடியாது. புதிதான ஒரு கலையை அதாவது விமர்சனக் கலைப்படைப்பை உருவாக்குவதன் மூலமே செய்துகாட்டமுடியும். கலைப்படைப்பைப் பார்த்து நேரடியாகக் கலை அனுபவத்தைப் பெறாமல் விமர்சகரின் விவரணைகள் மூலம், அதாவது இரண்டாம் நிலையில் இருந்து, கலையை ரசிக்கும் நபர்களான விமர்சகரின் ரசிகர்களுக்கு மூலக் கலைப்படைப்பை இரண்டாவது முறையில் கூடுதல் மரியாதையுடன் அணுக விமர்சகர் வழியமைத்துத் தருகிறார்.

கலைப் படைப்புகள் எல்லாம் அழகியலை நினைவூட்டும் அம்சங்கள் மட்டுமே. கலை விமர்சகரின் செயல்பாடு என்பது மறு உருவாக்கம் செய்ததுதான். இந்த முயற்சியில் மூலப்படைப்பின் தரிசனத்தைக் கண்டடைதல் என்பது புதிய கண்டுபிடிப்பாகத்தான் இருக்கும். புதிய கலை சிருஷ்டியாக இருக்காது. எல்லாவற்றிலும் இந்தக் கலை அழகியல் கண்டுபிடிக்கப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது நமது கண்டடைதலுக்காகக் காத்திருக்கிறது. பக்தி, கலை ஞானம் ஆகியவற்றில் கலை ரசனையின் மூலம் நமது தனித்தன்மையில் இருந்து விடுவிக்கப்பட்டு அனைத்தையும் இணைக்கும் பொது அம்சத்துடன் தற்காலிகமாக இணைப்பு பெறுகிறோம்.

அழகியலில் பல படிநிலைகள் கிடையாது. மிகவும் சிக்கலான மற்றும் மிகவும் எளிய கலை வெளிப்பாடுகள் எல்லாம் ஒரே அழகியல் நிலையையே நமக்கு உணர்த்துகின்றன. எளிய பாடல் வரியைவிட,மிக விரிவாகப் பேசுகிறது என்பதால் காவியமே அழகானது என்று சொல்லமுடியாது. ஓர் எளிய கோட்டுச் சித்திரத்தைவிட அதிக விவரணைகள் கொண்ட பெரிய ஓவியமே அழகானது என்று சொல்லமுடியாது. வசீகரமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் ஆதிகால ஓவியங்களைவிட நாகரிக மனிதரின் ஓவியம் சிறந்தது என்று சொல்லமுடியாது.

கணித ஒத்திசைவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் சிறிய வட்டங்களைப் போன்றதுதான் பெரிய வட்டங்களும். இந்த இரண்டும் அளவில்தான் வேறுபடுகின்றன; வட்டத்தன்மையில் அல்ல. அதுபோலவே கலையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் என்றெல்லாம் ஒன்று கிடையாது. ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வு மிக நேர்த்தியான வெளிப்பாட்டைக் கண்டடைந்திருந்தால், அதன் பின் அது பல்கிப் பெருகும். அதே வெளிப்பாட்டையே மீண்டும் நிகழ்த்திக்காட்டும். இந்த மீளுருவாக்கம் பல காரணங்களுக்காக விரும்பத் தகுந்ததுதான். ஆனால் அது ஒருவகையில் படிப்படியான தரமிறக்கத்துக்கு வழிவகுத்துவிடும். நாம் அது தரும் கலை அனுபவத்தைப் பெற உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுவோம்.

ஒரு கலை மரபின் உயிர்த்தன்மை என்பது கற்பனையின் வீரியம் அதை வளர்த்தெடுக்கும் வரையில்தான் சாத்தியம். சிருஷ்டிகரம் மிகுந்த கலைப்படைப்பு என்று நாம் சொல்வது புதுமையான கருப்பொருளை அல்ல; அதுவும் அதன் ஓர் அம்சம்தான். ஆனால் அதுவே எல்லாமும் அல்ல. எங்கெல்லாம் அழகியல் கவனிக்கப்படாமல் இருக்கின்றனவோ அதையெல்லாம் நமக்கு உணர்த்துவது அல்லது நாம் ஏற்கெனவே உணர்ந்திருப்பதைவிட அதிகமாக உணரவைப்பதுதான் சிருஷ்டிகரம். அழகுகளை நாம் எதனால் தவறவிட்டுவிடுகிறோமென்றால், சில வெளிப்பாடுகள் அளவுக்கு ‘அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு விட்டிருக்கும்’. அப்படி ஆகும்போது சிருஷ்டிகரம் மிகுந்த கலைஞர் நமக்கு நாம் இழந்த கலை அனுபவத்தை மீட்டுக்கொடுப்பார். புதியவை, பழையவை என அனைத்து அழகியல்களையும் வெளிப்படுத்தும் சவாலை ஒரு கலைஞர் சந்தித்தாக வேண்டியிருக்கும்.

கலைப்படைப்பின் அழகிய ரசனை என்பது கருப்பொருளைச் சாராதது என்று பலர் மிகச் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். கலைப்படைப்புக்கான உந்துதலை எல்லா இடங்களில் இருந்தும் பெறமுடியும். ஒரு பிராமணரையும் ஒரு நாயையும் அதாவது அனைத்து உயிர்களையும் ஒரே மாதிரியாக நேசிக்கும் அன்பைப் போன்றது. விஞ்ஞானமானது மிகச் சிறியதையும் மிகப் பெரியதையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பது போன்றது. ஏனென்றால் எல்லாமே பிளவுபடாத பேரடையாளம் ஒன்றின் அதே அம்சங்களைக் கொண்டவையே. நாம் பார்க்கும் ஒன்று அழகுடன் திகழ்கிறதென்றால், இறைவனின் சித்தம் அதனூடாகப் பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.

முழுமையான அழகு என்று நாம் எதைச் சொல்கிறோம்? இறைவனுடன் அந்த அழகை அடையாளப்படுத்தும்போது நாம் கடவுள் மிக அழகான உருவம் கொண்டவர் என்றோ அதை நாம் அறிந்துகொள்ளமுடியும் என்றோ சொல்வதாக அர்த்தமில்லை. ஆனால், அழகை நாம் உணரும் போதெல்லாம் இறைவனைப் பார்க்கிறோம்; அவருடன் ஒன்றிணைகிறோம்.

கடவுளே முதல் பெரும் கலைஞர் என்று சொல்லும்போது குயவனாக இருந்து அவர் உருவாக்கியதில் பிழை ஏதேனும் இருந்திருந்தால் உலகில் உருவாக்கப்பட்டவை அழகற்றுப் போயிருக்கும் என்று சொல்லவில்லை. உலகில் இருக்கும் அத்தனை இயற்கைப் பொருள்களும் அவரை உணரவழிவகுக்கக்கூடியவையே. இந்தக் கலை ரசனை வெளிப்பாடானது, நம்மை மீறி வெளிப்படும் தன்மையிலால் சிருஷ்டிச் செயல்பாட்டுக்கு இணையானது. கற்பனையின் உலகுக்குள் எந்தவொரு தன் விருப்பம் சார்ந்த, பிரக்ஞை பூர்வமான தேர்வு நிலைக்கும் வாய்ப்பில்லை. அது ஆன்மா, உடல், உள்ளுணர்வு ஆகியவை ஒன்றிணைந்து வெளிப்படக்கூடியது. ‘இங்கு அல்லது அங்கு என எங்கும் அழகைக் காணும் ஒரு கலைஞரே தன்னுடைய குரு’ என்று கபீர் கூறியிருக்கிறார். ஏனென்றால் ‘அவரே எங்கெல்லாம் மனம் லயிக்கிறதோ அங்கெல்லாம் எல்லாவற்றையும் கடந்த உன்னதமான பரமாத்மாவைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்துகிறார்’.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *