Skip to content
Home » சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1

சிவ தாண்டவம் #9 – ‘சிவதாண்டவம்’ – 1

சிவதாண்டவம்

சிவபெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஆகச் சிறந்த பெயர்: நடராஜர். நடனங்களின் அரசர் அல்லது ஆடவல்லான். பிரபஞ்சமே அவருடைய நடன மேடை. எண்ணற்ற அடவுகள் கொண்ட ஆடலரசன். அவரே நடனமாடுகிறார்… அவரே பார்வையாளராகவும் இருக்கிறார்.

ஆடலரசன் உடுக்கையை ஒலிக்கும்போது
அனைவரும் கண்டு களிக்கக் கூடுகிறார்கள்
ஆடலரசன் திரையை மூடும்போது
அனைத்தும் முடிவுக்கு வருகிறது.

சிவ பெருமானின் பக்தர்களுக்கு அவருடைய எத்தனை நடனங்கள், தாண்டவங்கள் தெரியும் என்று யாருமே எண்ணிச் சொல்லிவிடமுடியாது. இந்தத் தாண்டவங்கள் அனைத்தின் பின்னால் இருக்கும் அம்சம் ஒன்றே: ஆதி மூல சக்தி அவரே. சிவ பெருமான் கிரேக்கக் கடவுளான ஏரோஸ் போன்ற மூல முதற் கடவுள். லூசியன் தன் கிண்டல் படைப்பில் சொன்னது:

‘பிரபஞ்சத்தில் அனைத்துக்கும் முன்னால் இந்த நடனமே இருந்தது என்று தோன்றுகிறது. ஈரோஸுடன் அதுவும் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிவிட்டது போலிருக்கிறது. அவ்வளவு பழமையானது போலிருக்கிறது. ஏனென்றால் பிரபஞ்ச வெளியில் சுழலும் கிரஹங்கள், நிலையாக நின்று ஒளிரும் விண்மீன்கள் அவற்றின் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி, ஒருங்கிணைந்த ஒழுங்குக்கு உட்பட்ட ஒத்திசைவான இயக்கம் போலவே இந்த தொல் நடனம் இருக்கிறது.’

பித்துப் பிடித்து அல்லது போதை தலைக்கேறி ஆடியவர்களின் மனதில் சிவனின் இந்த நடனம் இருந்திருக்கும் என்று சொல்லவரவில்லை. அதாவது ஆரியர்களின் மலைக்கடவுளாக இருந்தவர் பின்னர் சிவனாக மாற்றம் பெற்றதாகச் சொல்ல வரவில்லை. மதம் அல்லது கலையில் இடம்பெற்றிருக்கும் மகத்தான குறியீடானது அதை நம்பி, மதித்துப் போற்றும் மக்களுக்கு எல்லாமுமாக இருக்கும்.யுக யுகமாக, காலகாலமாக இவை அவர்களுக்கு மகத்தான பொக்கிஷமாக இருக்கும்.

சிவனுடைய தாண்டவத்தின் மூலாதாரம் எதுவாக இருந்தாலும் காலப்போக்கில், இறைவனின் செயல்பாடு என்று மதம் அல்லது கலை உலகம் முன்வைக்கக்கூடிய மிகத் தெளிவான அழுத்தமான சித்திரமாகவும் குறியீடாகவும் அது ஆகிவிட்டது. சிவபெருமானின் பல்வேறு நடனங்களில் மூன்றைப் பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் ஒன்று மட்டுமே நமது அக்கறைக்குரியது.

முதலாவது தாண்டவம், சிவ பிரதோஷ ஸ்லோகத்தில் தேவ கணங்களுடன் சிவ பெருமான் ஆடும் நடனம்.

மூவுலகங்களின் அன்னையை நவரத்தினங்கள் பதித்த பொன் சிம்மாசனத்தில் அமர வைத்து, சூலபாணி கைலாசத்தில் களி நடனம் புரிகிறார். அத்தனை தெய்வங்களும் அவரைச் சுற்றி நின்று பார்க்கிறார்கள்.

சரஸ்வதி தேவி வீணை வாசிக்கிறார்; இந்திரன் புல்லாங்குழல் இசைக்கிறார். பிரம்மா கைத்தாளம் இசைக்கிறார். லக்ஷ்மி தேவி இனிமையாகப் பாடுகிறார். மகா விஷ்ணு மத்தளம் இசைக்கிறார்.

கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், சித்தர்கள், நந்தி, கருடன், வித்யாதரர்கள், அமரர்கள், அப்சரஸ்கள் என மூவுலகிலும் இருப்பவர்கள் அனைவரும் சிவனின் தாண்டவத்தையும் தேவ கானத்தையும் கண்டுகளிக்கக் கூடியிருக்கிறார்கள்.

கதா சரித சாகரம் என்ற நூலிலும் சிவ பெருமானின் இந்த மாலை நேர நடனம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நடனத்தை சித்திரிக்கும் ஓவியத்தில், இரு கரங்கள் கொண்ட சிவனும் மற்ற தெய்வங்களும் அவரவர் இசைக்கருவிகளுடன் அவரவருக்கான இடங்களில் இருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் சிவனின் காலடியில் எந்தவொரு அரக்கனும் கிடத்தப்படவில்லை. சைவ இலக்கியங்களில் எனக்குத் தெரிந்தவரையில் இந்த நடனம் குறித்து எந்தவொரு விளக்கமும் இடம்பெற்றிருக்கவில்லை.

இரண்டாவது நடனம், சிவ தாண்டவம் எனப்படுகிறது. சிவ பெருமானின் தாமஸ அம்சமான பைரவர் அல்லது வீர பத்ரரின் தாண்டவமாகச் சொல்லப்படுகிறது. சுடுகாட்டில் மயானங்களில் பத்து கரங்கள் கொண்ட சிவன் தேவியுடன் ஆடுகிறார். பூத கணங்களும் உடன் கூத்தாடுகின்றன. எல்லோரா, எலிஃபண்டா, புவனேஷ்வரம் போன்ற இந்திய பழங்காலச் சிற்பங்களில் இது இடம்பெற்றிருக்கின்றது.

இந்தத் தாண்டவம் பாதி கடவுள் பாதி பூதம் என்ற அம்சம் கொண்ட ஆரியருக்கும் முந்தைய தெய்வத்தில் தன் வேர்களைக் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் சுடுகாட்டில் இப்படி அவர் கூத்தாடுவது உண்டு. பின்னாட்களில் மயானங்களில் சிவ பெருமானின் அல்லது தேவியின் இந்த நடனம் சைவ மற்றும் சாக்த மரபுகளில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆழமான தத்துவ உணர்வுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது நடனம் தில்லை அல்லது சிதம்பரத்தில் பொன்னம்பல மேடையில் நடராஜர் ஆடிய நடனம். ’கோவில் புராணம்’ என்ற நூலில் பிரபஞ்சத்தின் மையமான சிதம்பரத்தில் தாரக வனத்தில் அத்தனை தெய்வங்களும் ரிஷிகளும் வேண்டிக்கொண்டதன் பேரில் நடராஜர் இந்த நடனம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நடனத்தின் உண்மையான தாத்பரியத்துக்கு மாறுபட்ட முறையில் விளக்கம் தரும் அந்த ஸ்தல புராணக் கதையைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்கிறேன்:

தாரக வனத்தில் மீமாம்ச தத்துவப் பிரிவைச் சேர்ந்த ரிஷிகள் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்துவந்தனர். அவர்கள் சிவ பெருமானை எதிர்க்க வந்தனர். அவருடன் பெண் வடிவில் விஷ்ணுவும் ஆதிசேஷனும் இருந்தனர். முதலில் தமக்குள்ளாக கடுமையாக மோதிக்கொண்டனர் ரிஷிகள். அதன் பின்னர், அவர்களின் கோபம் சிவ பெருமான் மீது குவிந்தது. அவரை அழிக்க முன்வந்தனர். யாகம் ஒன்று செய்து அதில் தமது மந்திர சக்திகளைக் கொண்டு பயங்கரமான புலியை உருவாக்கி சிவ பெருமானை அழிக்க ஏவினர். ஆனால் சிவபெருமானோ புன்னகை பூத்தபடியே அந்தப் புலியை அடக்கித் தனது சுண்டு விரலின் நகம் கொண்டு புலியின் தோலை உரித்து அதைத் தனது இடையைச் சுற்றிப் பட்டாடை போல் கட்டிக் கொண்டார்.

வேறொரு புராணத்தில் ரிஷிகள் ஏவியது மதம் பிடித்த யானை என்றும், சிவன் அணிந்திருப்பது அந்த யானையின் தோலாடை என்றும் சொல்லப்படுகிறது.

தோல்வி கண்டு துவளாத ரிஷிகள் மீண்டும் யாகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு ஒரு ராட்சஸ நாகத்தை உயிர்ப்பித்தனர். அதையும் சிவ பெருமான் அடக்கி தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டார். அதன் பின் அவர் ஆனந்த நடனம் ஆட ஆரம்பித்தார். ரிஷிகள் கடைசியாக முயலகன் என்ற குள்ள அரக்கனை ஏவினர். தனது கால் விரல் நுனியால் முயலகனின் முதுகெலும்பை முறித்து மண்ணோடு மண்ணாகப் புதையச் செய்தார். தனது கடைசி எதிரியும் சரனடைந்ததைத் தொடர்ந்து கடவுளர்களும் ரிஷிகளும் கண்டு களிக்கும் வண்ணம் ஆனந்த நடனத்தைத் தொடர்ந்து ஆடினார்.

ஆதி சேஷனும் சிவபெருமானை வணங்கித் துதித்து ஒரு வரம்கேட்டார். இந்த அற்புத நடனத்தை நீங்கள் பிரபஞ்சத்தின் மையப்புள்ளியான புனித தில்லையில் மீண்டும் ஆடவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதன்படியே சிவபெருமானும் தில்லையில் நடனமாடிக் காட்டினார்.

தென்னிந்திய செப்புச் சிலைகளில் இடம்பெற்றிருக்கும் ஆடலரசர் நடராஜப் பெருமானின் நடனம் இந்த தில்லையம்பல நடனத்தையே சித்திரிக்கிறது. இந்தச் சிலைகள் சிற்சில நுணுக்கங்களில் வேறுபடுகின்றன. ஆனால், அனைத்தின் அடிப்படை அம்சமும் ஒன்றே. அது என்ன என்பது பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, ஸ்ரீ நடராஜரின் இந்த சிலை பற்றிக் கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன்.

இதில் சிவபெருமானுக்கு நான்கு கரங்கள் இருக்கின்றன. அள்ளி முடிந்த தலைமுடி அலங்காரமாக மின்னுகிறது. கேசத்தின் நுனிகள் காற்றில் விரிந்து பறக்கின்றன. தலை முடியில் ஒரு நாகம் சுருண்டு கிடக்கிறது. மண்டையோடு, கங்கை, பிறைச் சந்திரன், கொன்றைப்பூச்சரம் எல்லாம் அணிந்திருக்கிறார். வலது காதில் ஆண்களுக்கான கடுக்கண் அணிந்திருக்கிறார். இடது காதில் பெண்களின் தோடு அணிந்திருக்கிறார்.

கழுத்தில் ஆரங்கள், நகைகள், அணிந்திருக்கிறார். கைகளில் காப்புகள் அணிந்திருக்கிறார். இடுப்பில் நவரத்தின வளையம். காலில் தண்டை, கைகளில் மோதிரங்கள், காலில் மெட்டிகள் அணிந்திருக்கிறார். உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடை முழங்கால் வரையில் அணிந்திருக்கிறார். பூணூலும் மார்பில் நெளிந்தாடுகிறது.

ஒரு வலக்கையில் உடுக்கை; இன்னொரு வலக்கை யாருக்கும் அஞ்சாதே என்று அபய முத்திரை காட்டுகிறது. இடது கரங்களில் ஒன்று அக்னிக் கலசம் ஏந்தியிருக்கிறது. இன்னொரு இடக்கை காலடியில் விழுந்து கிடக்கும் முயலகனைச் சுட்டிக்காட்டுகிறது. கரங்களில் ஒரு நாகமும் நெளிந்து ஆடுகிறது. இடது காலைத் தூக்கி நின்று ஆடுகிறார். தாமரைப் பீடத்தில் இவை அனைத்தும் நிலைகொண்டிருக்கின்றன. தீப்பிழம்புகள் சுற்றிலும் எரிகின்றன. ஒட்டு மொத்த சிலையும் அதிகபட்சம் நான்கு அடிக்குள்ளாக இருக்கிறது.

இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை தள்ளிவைத்துப் பார்த்தாலும் இந்த நடனத்தின் பொருளைப் புரிந்துகொள்வது அப்படி ஒன்றும் சிரமமாக இருக்காது. இருந்தும் இந்த நடனம் பற்றி விவரிக்கும் சமகால இலக்கியங்கள் எண்ணற்றவை நமக்குக் கிடைத்துள்ளன. இந்த நடனத்தின் பொதுவான விளக்கமாக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சிற்பமும், நடனமும் குறிப்பதை அணு அணுவாக விவரிக்கவும் நம்மால் முடியும்.

இந்த நடராஜர் சிலைகளின் சில அம்சங்கள் சிவபெருமானுக்கு உரியவை. நடனத்துக்கு அல்ல. அவருடைய சிகை அமைப்பு யோகியுடையது போன்றது. வில்வ மாலை. மண்டையோடு; கங்கை (விண்ணுலகில் இருந்து பாயும் கங்கையின் வேகம் சிவபெருமானின் கேசத்தால் தடுக்கப்படுகிறது); நாகங்கள், உமையொரு பாகனின் அர்த்தநாரீஸ்வர அம்சத்தை குறிக்கும் ஆண், பெண் காதணிகள், நான்கு கரங்கள். உடுக்கையுமே கூட சிவ பெருமானின் இசைக்கருவியே. யோகியுமானவர்; நடனமாடும்போது அந்த உடுக்கைக்கு மேலும் கூடுதல் முக்கியத்துவம் வருகிறது.

சைவர்கள் இந்த சிவ பெருமானின் நடனத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்: ‘எம்பெருமான் ஆடலரசர். விறகுக்குள் நெருப்பு உள்ளுறைந்து இருப்பதுபோல் அவர் உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றில் கலந்து உள்ளுறைந்து இருக்கிறார். இரண்டையும் ஆட்டுவிக்கிறார்.’

திருவாதவூரார் புராணதத்தில் கடவுள் மாமுனிவரும், சிவஞானபோதத்தில் மெய்கண்டதேவரும் சொல்லியிருப்பது: விறகுக்குள் வெப்பம் உள்ளுறைந்து இருப்பதுபோல் இறைவன் அனைத்தினுள்ளும் நிரம்பியிருக்கிறார். (ரோமாபுரியின் தத்துவஞானி எகார்ட் வான் ஹோக்கிம் சொன்னதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்: காய்ந்த விறகுக்குள் நெருப்பு முழுமையாகவும் உள் ஊடுருவியும் கலந்திருப்பதுபோல் இறைவன் மனிதருக்குள் கலந்திருக்கிறார்.)

இந்த நடனம் சிருஷ்டி (படைப்பு, பரிணாமம்), ஸ்திதி (நிலைத்திருக்கச் செய்தல், காத்தல்) சம்ஹாரம் (அழித்தல், பரிணாமம்), திரபவம் (திரையிட்டு மறைத்தல், மாயை, ஓய்வு நிலை) அனுக்ரஹம் (முக்தி தருதல், கருணை) என சிவ பெருமானின் ஐந்து செயல்களைக் குறிக்கின்றன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஷ்வரர், சதாசிவம் என ஐந்து தெய்வங்களால் மேற்கொள்ளப்படுபவையாகவும் இந்தச் செயல்கள் இருக்கின்றன.

இந்த பிரபஞ்சச் செயல்பாடுதான் சிவ தாண்டவத்தின் ஆதார அம்சமாக இருக்கின்றது. மேலும் சில மேற்கோள்கள் சொல்கிறேன்.

உண்மை விளக்கம்’, பாடல் 35 சொல்கிறது:

தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தி லுற்றாதிரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

‘சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து சிருஷ்டி ஆரம்பிக்கிறது. அயப ஹஸ்தம் உலகைக் காக்கிறது. கையிலிருக்கும் அக்னி அழிவைக் குறிக்கிறது. தூக்கி நிற்கும் கால் முக்தி அளிப்பதைக் குறிக்கிறது.’  நான்காவது கரம் தூக்கி நிற்கும் காலைக் காட்டுவதன் மூலம் ஆன்மாவின் விடுதலையைச் சுட்டிக்காட்டவும் செய்கிறது.

சிதம்பர மும்மணிக் கோவை’ சொல்வது:

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்
தானே வகுத்தது உன் தமருகக் கரமே

தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே
தோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே

ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே

இத்தொழில் ஐந்தும் நின் மெய்த்தொழில்.

‘உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் எண்ணற்ற உயிர்களையும் சிருஷ்டி செய்கிறது. அபய ஹஸ்த பொற்கரம் உயிருள்ள உயிரற்றவை அனைத்தையும் காக்கிறது. அக்னிக் கலசம் ஏந்திய கரம் அனைத்தையும் மாற்றி அமைக்கிறது. ஊன்றிய பாதம் அன்றாட லெளகிக விஷயங்களில் உழலும் உயிர்களுக்கு இடமளிக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் நாடிவருபவர்களுக்கு நற்கதி அளிக்கிறது. இந்த ஐந்துமே உன் மெய்த்தொழில்களாகத் திகழ்கின்றன.’

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *