திருமூலரின் திருமந்திர நூலில் 9வது தந்திரத்தில் இடம்பெறும் திருக்கூத்து தரிசனத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன் விளையாட்டதே (2722)
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. (2726)
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே. (2727)
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. (2730)
மாயையையும் மகா மாயையையும் கடப்பவர்களுக்கே இந்தக் களி நடனம் காட்சி கிடைக்கும்.
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. (2769)
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. (2774)
அப்படியாக ஆனந்தக் கூத்தனின் ஆடலே அனைத்திலும் வெளிப்படுகிறது.
இதுவே சிவ தாண்டவம். அண்ட வெளியில் நடக்கும் இந்தப் பெரு நடனமே நம் உடம்பிலும் மனத்திலும் நடக்கிறது என்பதை உணர்வதே மிகவும் அவசியம். எங்கும் இறைவன் இருக்கிறான்; எங்கும் மனம் வியாபித்திருக்கிறது. இன்னொரு பாடலில் இது இவ்விதம் வெளிப்படுகிறது:
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. (2760)
சிவ சிந்தனை அல்லாமல் பிற சிந்தனைகள் அனைத்தையும் மனத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும். உள்ளத்திலும் உடம்பிலும் சிவ நடனமே நடக்கும்வண்ணம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். அதுவே பந்த பாசங்களில் இருந்து விடுபட ஒரே வழி.
‘உண்மை விளக்கம்’ மேலும் சொல்கிறது:
மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்து
தானந்த மனைடத்தே தங்கியிடும் ஆனந்தம்
மொண்டருந்த நின்றாடல் காணுமருள் மூர்த்தியாகக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து. (37)
மோனமாகிய ஞான வரம்பில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும்மல வாசனையையும் அறவே நீக்கிவிடுவார்கள்; யான் எனும் செருக்கு அற்ற நிலையில் வெளிப்படும் சிவானந்த அமுதத்தை மொண்டு கண்களால் அருந்தும் பொருட்டு வெளியே புலப்பட நின்று சிவன் நடனம் ஆடுவார். அதுவே திருவருளையே காணும் வடிவமாகக் கொண்ட திருவம்பலத்தான் கூத்தாகும்.
மும்மலத்தை அழிக்கும் ஆன்ம ஞானிகள் தமது சுய போதத்தையும் அழித்துவிடுகிறார்கள். இப்போது அவர்கள் தமக்குள் பரம்பொருளை உணர்கிறார்கள். பேரானந்த நிலையில் இருக்கிறார்கள். அம்பலத்து ஆடலரசனின் ஆனந்த நடனத்தைக் கண் முன் காணும் பாக்கியம் பெறுகிறார்கள்.
‘மோனந்த மா முனிவர்’ என்ற பதத்துடன் திருமூலர் குறிப்பிட்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
‘யோகிகள் அதி உன்னத மோன நிலையை அடையும்போது தம்மை முழுமையாக இழந்து அங்கு அசைவற்ற நிலையை அடைகின்றனர். அவர்கள் அப்போது நிர்மலமான ஆகாயத்தை எட்டுகின்றனர். அங்கு அவர்கள் பேரொளியைத் தரிசிக்கின்றனர். அங்கு அவர்கள் வேதாந்த ஞானம் பெறுகின்றனர். உள்ளுக்குள் ஆழ்ந்து அசைவற்ற நிலையை அடைகின்றனர்’ என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
சிவபெருமான் அழிவின் கடவுள். எரியும் சுடுகாட்டை விரும்புபவர். ஆனால் எதை அவர் அழிக்கிறார்? விண்ணையும் மண்ணையும் யுக முடிவில் அழிப்பது மட்டுமல்ல; ஒவ்வொரு தனியான ஆன்மாவையும் பிணைத்திருக்கும் விலங்குகளையும் அழிக்கிறார்.*
(* அழிவு, அழிவு, அழிவு. உள்ளுக்குள் இருப்பவற்றை, தன்னகங்காரத்தை அழிப்பது, சுற்றி இருப்பவற்றை அழிப்பது. உங்களுக்கும் பிற உயிர்களுக்கும் அன்புடன் இடம் தரவேண்டும். அழிவு மிகவும் அவசியம். ஏனென்றால் அதற்குப் பின்னரே சிருஷ்டி சாத்தியமாகும். உலகில் உருவாக்கப்படுபவை எல்லாமே ஏற்கெனவே இருந்தவற்றின் சிதிலங்களில் இருந்து உருவானவையே. இந்த உலகில் புதியதென்று எதுவுமே இல்லை. வடிவம் மட்டுமே மாறுகிறது. அந்த வடிவங்களும் முழுமையாக அழிக்கப்படவேண்டும். நீங்கள் பருகும் கோப்பைகள் அனைத்தையும் உடையுங்கள் – லே லிவரே தெ மொனெல்லே – மார்செல் ஸ்க்வாப் – Marcel Schwob – Le Livre de Monelle).
0
சுடுகாடு என்பதை எதைக் குறிக்கிறது. அது எங்கே இருக்கிறது? பூத உடல்கள் எரிக்கப்படும் மயானம் அல்ல; பக்தர்களின் மனம் மயானம் போல் வெறுமையாக ஆக்கப்படவேண்டுமென்பதைக் குறிக்கிறது. ஒரு மனிதரின் சுய போதம் அழிக்கப்படவேண்டும்; மாயையும் கர்ம வினைகளும் அங்கு எரியூட்டப்படுகின்றன. அந்த மயானத்தில்தான் ஸ்ரீ நடராஜர் திரு நடனம் ஆடுகிறார். சுடலையாண்டி என்பது சிவ பெருமானின் இன்னொரு பெயர். அவரின் புன்னகையில் தில்லை நடராஜரின் பொன்னம்பல நடனத்தின் நளினத்துக்கும் சுடுகாட்டில் ஆடும் ஆனந்தக் கூத்துக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பையும் பார்க்கமுடிகிறது.
வங்காளத்தில் சாக்தர்களிடையேயும் இந்த நடனம் பற்றிய கருத்துருவம் இடம்பெற்றுள்ளது. அங்கு சிவபெருமானின் பெண் அம்சமே அதாவது சக்தி ரூபமே மிகுதியாகப் போற்றப்படுகிறது. அங்கு இப்படியான நடனமாடுபவர் காளிதேவி. அவர் நம் மனத்தில் நிலைபெற வேண்டுமென்றால் நம் இதயம் நெருப்பால் சுத்தம் செய்யப்படவேண்டும். அனைத்தையும் துறந்து காலியாக்கவேண்டும். காளி தேவிக்கான ஒரு வங்காளப் பிரார்த்தனைப் பாடல்:
காளி மா… உனக்கு சுடுகாடு ப்ரியமானது
எனவே என் மனதை மயானமாக்கிவிட்டேன்
மின்னும் கரிய நிறத்தவளே… சுடுகாட்டில் ஆடுபவளே
அழிவற்ற பெரு நடனத்தை ஆடு
என் சிந்தையில் சூனியமல்லாமல் எதுவுமில்லை
ஓ காளி அன்னையே…
சுடுகாட்டுத் தீ இரவும் பகலும் எரிகிறது
காற்றில் எங்கும் பறக்கிறது இறந்தவரின் சாம்பல்
உன் வருகைக்காகக் காத்து நிற்கிறேன்
மரணத்தை வென்ற மஹாகாலன் உன் காலடியில்
உன் களி நடனம் ஆடியபடியே என்னில் நுழை
கண்கள் மூடி காளியே
உன்னை நான் கருத்தில் நிறைத்துக்கொள்கிறேன் .
0
தென்னிந்தியாவுக்குத் திரும்புகிறேன். நம் தமிழ் இலக்கியங்களில் சிவ பெருமானின் நடனம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
‘சிவஞான சித்தியார்’, சுபக்க மூலம் நூலில் சொல்பவை: உலகில் இருக்கும் எண்ணற்ற ஆன்மாக்களுக்கு இகம், பரம் எனும் இரு உலகத்து நன்மைகளும் முக்தியும் கிடைக்க எம்பெருமான் ஐம்பூதங்களாலான தன் நடனத்தை ஆடுகிறார்.
மீண்டும் ‘உண்மை விளக்கம்’ சொல்வதைப் பார்ப்போம்:
சிவாயநம என்னும் திருவெழுத்தஞ்சாலே
அவாயமற நின்றாடுவான்
சிவபெருமான் திரு ஐந்தெழுத்தையே திருமேனியாகக் கொண்டு உயிர்களின் துன்பத்துக்குக் காரணமான பிறப்பு அறுபடும்படி நின்று ஆடுவார்.
மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தாளெடுத்து – நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதம் தான்
துடியை அசைத்துப் பக்குவமடைந்த ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை விலக்குகிறார். ஹோம அக்னியை ஏந்தியுள்ள கை அந்த ஆன்மாவின் தொல்வினைகளை முளைக்காதபடி அழிக்கும். ஊன்றுந் திருவடியானது ஆணவம், மலம், அவித்யா ஆகியவற்றை அழிக்கும். தூக்கிய திருவடி ஆன்மாவை ஆனந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இந்தத் திருநடனத்தைத் தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது.
உலக நிகழ்வுகள் எல்லாம் இறைவனின் திரு விளையாடல் என்று சைவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருமூலர் இது பற்றிச் சொல்லும்போது, அழிவற்ற நடனமே அவருடைய திருவிளையாடல்தான் என்கிறார். பரவச நிலையின் பாடல் (Skryabin’s Poem of Ecstasy) என்ற ஸ்க்ர்யபினின் படைப்பில் என்ன சொல்லியிருக்கிறாரென்றால் ஹிந்து சிற்பி நடராஜரின் எந்த மகத்தான நடனத்தைச் சிலையாக வடித்தாரோ அதையே பாடியிருக்கிறார்.
உயிராற்றல் (புருஷ சக்தி) துடிக்கிறது.
உயிர் ஏங்குகிறது.
உயிராற்றல் விசித்திர நிலையில் (யோக மாயையின்) அனைத்தையும் உருவாக்குகிறது.
அன்பின் களிப்பில் (பேரானந்தத்தில்) தன்னை ஒப்புக் கொடுக்கிறது.
தான் படைத்த சிருஷ்டி மலர்கள் (பிரபஞ்சம்) மத்தியில்
எல்லையற்று நீள்கிறது முத்தம்…
படைப்பின் அழகு கண்களை மயக்க
அவன் ஓடுகிறான்.
துள்ளிக் குதிக்கிறான்; சுழன்று ஆடுகிறான்.
தன் ஆடலில் (திருவிளையாடலில்) உற்சாகம், பேரானந்தம்,
காதல் போராட்டத்தில் விட்டு விடுதலையாகி, தெய்வ நிலை எட்டுகிறான்.
இலக்கற்ற செயல்களின் மாபெரும் களியாட்டத்தில்
பரஸ்பர ஏக்கங்களின் கூடலில்
காதல் மட்டும் பிரக்ஞையில்.
உயிராற்றல் தெய்வ நிலையின் இயல்பைக் கண்டடைகிறது (ஸ்வபாவம்)…
ஓ என் இனிய உலகமே… என் வாழ்வே… என் மலர்தலே… என் பரவசமே
உன் ஒவ்வொரு தருணமும் நான் உருவாக்குபவையே.
முந்தைய அனுபவங்கள் அனைத்தையும் மறுதலித்தபடி
முடிவற்ற மறுதலிப்பு (நேதி நேதி; இது அல்ல; அது அல்ல)…
ஆடலை அனுபவித்து, ஆனந்தப் புயலில் சிக்கி முக்கி
பரவசத்தின் பெருவெளியில் கடுகி விரைகிறான்
முடிவற்ற நிலையாமையில் (சம்சார சாகரம், நித்ய பாவம்)…
இலக்கற்ற, இந்த முடிவற்ற பறத்தலில் தெய்விக நிலையில்
உயிராற்றல் தன்னை உணர்ந்துகொள்கிறது.
சித்தத்தின் வலிமையில், தனிமையில், விட்டு விடுதலையாகி.
முடிவற்ற சிருஷ்டி, முடிவற்ற ஒளிர்தல், முழுவதும் உயிர்ப்பு
தெய்விக வழிகளில் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறான்…
ஓ என் உலகே உன்னில் நான் உறைகிறேன்.
என்னைப் பற்றிய உன் கனவின் மூலம் என் இருப்பு நிகழ்ந்தது.
விடுதலையின் ஓர் அலை… பேரானந்தத்தின் ஓர் அலை
ஒரு மாபெரும் எரிமலை வெடிப்பு (மஹா பிரளயம்)
இந்த பிரபஞ்சத்தை (சம்சார சாகத்தை) அரவணைத்து உள்ளிழுக்கிறது.
உயிர் அதன் உன்னத நிலையை எட்டுகிறது.
முடிவற்ற அலையடிப்பை உணர்கிறான்
சுந்ததர மனதின் தெய்விக ஆற்றலே (சக்தி)…
அனைத்துக்கும் துணிந்தவன்
அச்சமாக இருந்தது இப்போது ஆர்ப்பாட்டமாகிவிட்டது.
அபாயமாக இருந்தது இப்போது ஆனந்தமாகிவிட்டது.
பிரபஞ்சம் பெருங்களிப்பில் ஆடும் என்னில் எதிரொலிக்கிறது.
சிவபெருமானின் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அம்சம் ஏதோ அழியும் மாக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக அவர் ஆடுவதுபோல் சொல்லப்படுகிறது. ஆனால், பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையை நிலை நிறுத்தவே அவருடைய நடனம் நடக்கிறது. முக்தி தேடுபவர்களுக்கு அதை வழங்கவே நடக்கிறது. மனித நடனக் கலைஞர்களின் நடனத்தை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், அவையுமே கூட விட்டு விடுதலையாவதை இலக்காகக் கொண்டே நிகழ்த்தப்படுவதைப் புரிந்துகொள்ளமுடியும்.
எம்பெருமானின் நடனமானது அவருடைய சுயத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு அசைவும் ஸ்வபாவமாக வெளிப்படுபவை. தன்னிச்சையாக, எந்தவொரு இலக்கும் எதிர்பார்ப்புகளும் இன்றி வெளிப்படுபவை. ஏனென்றால் இறைவன் வேண்டுபவை வேண்டாதவை, இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றைக் கடந்தவர்.
இன்னொரு கோணத்தில் சிவபெருமானின் நடனம் என்பது, சி-வா-ய-ந-ம என்ற பஞ்சாக்ஷரத்துடன் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஐந்து அக்ஷரங்களையும் தியானித்தால் ஆன்மாவானது ஒளியும் இருளும் அற்ற பரவெளிக்குச் சென்று சேர்ந்துவிடும். அங்கு சிவமுடன் சக்தி ஐக்கியமாகிவிடும் என்று ‘உண்மை விளக்கம்’ கூறுகிறது.
உண்மை விளக்கத்தின் இன்னொரு பாடல் சொல்கிறது:
ஓங்கார மேதற் றிருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவரணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்
எம்பெருமானுக்கு உப அங்கமாக, பின்புலமாக உள்ள திருவாசி, ஓங்காரமாகும். அந்தத் திருவாசியில் அமைந்துள்ள சுடர்கள் ஓங்காரத்தின் நீங்காத மாத்ருகாக் கரங்கள் ஆகும். அதில் இருந்து நீங்காத எழுத்தே நிறைசுடர். ப்ரணவத்தை விட்டு நீங்காத பஞ்சாக்ஷரமே உள்ளொளி.
யான் எனது என்ற கர்வம் இல்லாதவர்களே திருவம்பலத்தானின் ஆடலின் இந்த அம்சத்தை அறிந்துகொள்ளமுடியும். அவர்கள் அதன் பின் பிறப்புகள் அறுபட்டு முக்திநிலையை எட்டிவிடுவார்கள். இதுவே சிதம்பர நடராஜரின் திரு நடனம் சொல்லும் உண்மை.
இந்த திருவாசி (அலங்கார வளைவு) பற்றி ‘திரு அருட்பயன்’ மேலும் தெளிவாக விளக்குகிறது. இது இயற்கையின் நடனமாகச் சொல்கிறது.
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடம் தான்நடுவே நாடு
இயற்கையின் முடிவற்ற நடனம் ஒரு பக்கம் நடக்கிறது. ஞானத்தின் நடனம் வேறொரு பக்கம் நடக்கிறது. பிந்தையதன் நடுவாந்தரத்தில் மனதை நிலை நிறுத்து என்று சொல்கிறது.
திரு. நல்லசாமி பிள்ளை இது தொடர்பாகத் தந்திருக்கும் விளக்கத்தை இங்குத் தருகிறேன்: முதல் நடனம் பருப்பொருள் சார்ந்தது. பெளதிகம் மற்றும் தனியான ஆற்றல் சார்ந்தது. இதுவே திருவாசி, ஓங்காரம். காளியின் நடனம் இது. இன்னொன்று சிவபெருமானின் நடனம். பஞ்சாக்ஷரமானது ஓங்காரத்தில் இருந்து பிரிக்க முடியாதது. அர்த்தமாத்ரா அல்லது ப்ரணவத்தின் நான்காவது எழுத்து சதுர்த்தம் மற்றும் துரியம். சிவபெருமான் தானாக இச்சை கொள்ளாமலோ அவராக ஆடாமலோ முதல் நடனம் சாத்தியமில்லை.
திருவாசியே பிரகிருதியைக் குறிக்கிறது. அதற்குள் சிவபெருமான் தன் தலை, கைகள், கால் கொண்டு அந்த வளைவைத் தொட்டுக்கொண்டு ஆடுவதென்பது எம்பெருமான் அகில உலகிலும் நிறைந்து நிற்கிறார் (புருஷ) என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டின் நடுவே அதாவது, சி-வ என்ற பதங்களுக்கும் ந-ம என்ற பதங்களுக்கும் இடையே ‘ய’ என்ற எழுத்து இருப்பதுபோல் தனியான ஆன்மா இருக்கிறது.
அப்படியாக, சிவபெருமானின் இந்த நடனத்தின் உள்ளார்ந்த பொருளாக நமக்குக் கிடைத்திருப்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
சிவபெருமானின் நடனம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. பிரபஞ்சத்தினுள் நடக்கும் அனைத்துச் செயல்களும் அவருடைய திருவிளையாடலே என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பிம்பம் அது. பிரபஞ்சமானது திருவாசியாக (வளைவாக) சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற ஆன்மாக்களை மாயையில் இருந்து விடுவித்து முக்தி அடையச் செய்வதே எம்பெருமானின் திரு நடனத்தின் நோக்கம்.
மூன்றாவதாக இந்த நடனம் நடக்கும் இடமான சிதம்பரமே இந்த உலகின் மையம். அது ஒவ்வொரு ஆன்மாவின் இதயத்திலும் உள்ளது.
இந்த நடனம் தொடர்பான கலை அழகியல் சார்ந்த விமர்சனத்தை இதுவரை நான் சொல்லவில்லை.
சிவபெருமானின் நடனத்தை உறைந்த சிலை என்பதில் இருந்து விலகி வந்து அற்புதமான அல்லது முழுமையடைந்திராத இலக்கியப் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி விளக்கியிருக்கிறேன். விஞ்ஞானப் பார்வை, மத சிந்தனை, கலை அழகு என அனைத்தும் கலந்து உருவான மகத்தான படைப்பு இது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இப்படி ஒரு மகத்தான சிந்தனை ரிஷிகளும் கலைஞர்களுமான அவர்களுக்கு எப்படித் தோன்றியது? யதார்த்தத்தின் சித்திரம்; வாழ்வில் சிக்கல்களுக்கான விடுதலை; இயற்கையின் ஆதாரக் கோட்பாடு; ஏதோ ஒரு நபருக்கோ ஓர் இனத்துக்கோ ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவர்களுக்கோ மட்டுமல்ல; எக்காலத்துக்குமான தத்துவஞானிகளுக்கும் கலைஞர்களுக்கும் பக்தர்களுக்கும் பொருந்தும்படியான சிந்தனை. சிற்பம் போன்ற உறை கலைகளில் தமது வாழ்வின் உள்ளொளியை வெளிக்கொணர பிரமப் பிரயத்தனப்படும் நபர்களுக்கெல்லாம் இந்த நடனம் எவ்வளவு நளினமாக எவ்வளவு வலிமையாக ஒரு மகத்தான முன்மாதிரியாகத் திகழ்கிறது.
தனித் துறை சார்ந்த நிபுணத்துவம் பெருகிவரும் இந்நாட்களில் இப்படியான பல்துறை சாதனை நமக்கு மிகவும் அசாதாரணமானதாகவே தென்படுகிறது. ஆனால், இப்படியான ஒன்றை உருவாக்கியவர்களுக்கு அந்நாட்களில் வாழ்க்கை என்பது இப்படியாக, தனித்தனியாக, ஒன்றுடன் ஒன்று கலக்காத பிரிவுகளாக இருந்திருக்கவில்லை. அதேநேரம் தனியான படைப்புகளை விமர்சிக்கும்போது (இசையின் கலைச் சொற்களின் அடிப்படையில் சொல்வதானால்) அது அடிப்படை தாள லயங்களை மிக நுட்பமாகவும் அழுத்தமாகவும் தவிர்க்கமுடியாத வகையில் வெளிப்படுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம்.
இந்த மகத்தான கலைப்படைப்பின் ஒவ்வொரு அங்கமும், அங்குலமும் வறட்டுக் கோட்பாடு சார்ந்தோ வெறும் மூட நம்பிக்கை சார்ந்ததாகவோ இல்லை; நேரடியாக, வெளிப்படையாகப் புரிந்துகொள்ளமுடியும்படியாக இருக்கின்றன. இன்றைய கலைஞர் ஒருவர் எவ்வளவு மிக உன்னதமானவராக இருந்தபோதிலும் சிவ நடனம் (தாண்டவம்) போன்ற அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைத்துறைகளும் மதித்துப் போற்றும்படியான ஒன்றை உருவாக்கிவிடமுடியாது.
காலம் முடிவற்றது என்பதைப் புரிந்துகொண்டால், ஒரு காலகட்டத்தின் மாறுபாடுகள் பல்வேறு நிலவியல் வெளிகளையும் காலவெளிகளையும் கடந்துசெல்வதைப் புரிந்துகொள்ளமுடியும். உடுக்கையின் மூலம் குறிப்பால் உணர்த்தப்படும் கால மாறுபாடு, நிலையற்று மாறும் மற்றும் அழிக்கும் நெருப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவையெல்லாம் பிரம்மாவின் இரவு பகல் கோட்பாட்டைக் குறிக்கும் குறியீடுகள்.
பிரம்மாவின் இரவில் இயற்கை செயலற்ற நிலையில் இருக்கிறது. சிவபெருமான் விரும்பாதவரையில் இயற்கையின் உயிர்ப்பு (நடனம்) நடைபெற வாய்ப்பு இல்லை. சிவன் தன் செயலற்ற நிலையில் இருந்து பெரும் பரவசத்துடன் கிளர்ந்தெழுந்து நடனமாடத் தொடங்குகிறார். உறைந்த நிலையில் இருக்கும் பருப் பொருட்களினூடாக நடன அதிர்வுகளும் (உடுக்கையின்) ஒலி அலைகளும் ஊடுருவுகின்றன. இயற்கையும் (உயிர்களும்) எழுந்து அவரைச் சுற்றியே ஆடத்தொடங்குகின்றன (சிருஷ்டி). பெரு நடனத்தின் அத்தனை அம்சங்களையும் அவரே நிலைநிறுத்துகிறார். ஒரு யுகம் முடியும் நிலையில், நடனமாடிக் கொண்டேயிருப்பவர், அனைத்து வடிவங்களையும் உருவங்களையும் பெயர்களையும் நெருப்பு கொண்டு அழித்து புதிய செயலற்ற நிலையை (யுக முடிவு) உருவாக்குகிறார். இது இலக்கியம் / கவிதை மட்டுமல்ல; விஞ்ஞான உண்மையும் கூட.
நடராஜர் சிலை, கடந்த காலத்தில் பல தலைமுறைகளினால் போற்றிப் புகழப்பட்டிருப்பதில் வியப்பு எதுவும் இல்லை. அனைத்துவிதமான மறுதலிப்புகளைக் கேட்டிருக்கிறோம். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் பழங்குடிகளின் மூட நம்பிக்கையில் வேர்களைத் தேடும் நபர்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம்; எல்லையற்ற பிரமாண்டத்தையும் எல்லையற்ற அணுத்துகளையும் ஆராய்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அனைத்தையும் கடந்து இன்றும் நாம் தில்லை நடராஜரை வணங்குபவராக மதித்துப் போற்றுபவராகவே நீடித்தும் வருகிறோம்.
(தொடரும்)
___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின் தமிழாக்கம்.