Skip to content
Home » சிவ தாண்டவம் #13 – இந்திய இசை – 2

சிவ தாண்டவம் #13 – இந்திய இசை – 2

சிவ தாண்டவம்

ஐரோப்பிய இசையில் ஒரு ஸ்வரத்தில் இருந்து இன்னொன்றுக்கு நழுவிச் செல்லுதல் மிகவும் முக்கியமான அம்சம். இந்திய இசையில் ஸ்வர மாற்றத்தைவிட இரண்டுக்கு இடையிலான இடைவெளிக்கு முக்கியத்துவம் தரப்படும். அதன் அடிப்படையிலேயே இசையின் / ஒலியின் தொடர்ச்சியை நாம் உணர்கிறோம். இதற்கு நேர்மாறாக ஐரோப்பியப் பாடல்களில் ஹார்மோனி ஒத்திசைவுக்காக மேலிருந்து கீழாகப் பகுக்கப்பட்டிருக்கும். குரலுடன் சேர்ந்து கேட்கும் பின்னணி இசைக்கருவிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே அதைப் புதிதாகக் கேட்கும் இந்திய செவிகளுக்கு அந்த இசை பெரிதும் இடைவெளிகள் கொண்டதாகவே தோன்றும்.

இந்திய மரபில் ஆலாபனை நீங்கலாக அனைத்துப் பாடல்களும் வரையறுக்கப்பட்ட இறுக்கமான தாளகதியைக் கொண்டவை. முதல் முறை கேட்கும்போது இவற்றை முறையாகப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஏனென்றால் இந்திய தாளகதிகள் எல்லாம் சாஹித்யத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஐரோப்பிய இசையில் தாளங்கள் எல்லாம் நடனங்கள், அணிவகுப்பு ஆகியவற்றில் இருப்பதுபோல், உச்சரிப்பு அழுத்தங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஐரோப்பிய தாளம் என்பது இரண்டு அல்லது மூன்றின் மடங்குகளாக அளவிடப்படுகிறது. ஹிந்து இசையானது இரண்டு, மூன்றின் கூட்டல்களாக அளவிடப்படுகின்றன. சில தாளகதிகள் மிகவும் விஸ்தாரமானவை. உதாரணமாக ஆதி தாளம் என்பது 5+5+2+2. இடைவெட்டுத் தாளங்கள் அதிகம் பயன்படுத்துவதால் அது மேலும் சிக்கலான வடிவமாகிறது. இந்திய இசை ஒருவகையில் ராகங்களைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. அதே நேரம் உணர்வு நிலைகளைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. ஒரு தாள கதி எங்கு முடிகிறது எங்கு ஆரம்பிக்கிறது என்பதை வெளி நாட்டவர்களுக்குக் கண்டுபிடிப்பது சிரமம். சாஹித்யங்களுடன் நல்ல பரிச்சயம் இருக்கும் இந்திய ரசிகர்களுக்கு அது மிகவும் எளிதுதான். இந்திய இசையின் தாளகதியைப் புரிந்துகொள்ள சாஹித்யத்துக்கு (வார்த்தைகளுக்கு) முக்கியத்துவம் தரவேண்டும். தாள அதிர்வுகளுக்கு அல்ல.

இந்திய இசையில் மிருதங்கம் (தபேலா) அல்லது தம்புரா அல்லது இரண்டும் பக்கவாத்தியமாகப் பயன்படுத்தப்படும். தம்புரா ஒரு தந்தி இசைக் கருவி. நான்கு தந்திகள் இருக்கும். உச்ச ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என அனைத்து ராகங்களுக்கும் பொதுவான ஸ்தாயிகளில் ஒத்திசைவு செய்யப்படும். பாடகரின் குரலுக்கு ஏற்ப இது மாற்றியமைக்கப்படும். நான்கு தந்திகளிலும் சீவா எனப்படும் நூல் துண்டு பொருத்தப்பட்டிருக்கும். இவையே தம்புரா ஒலியின் உயிர் போன்றவை. இந்தத் தந்திகள் தொடர்ந்து பின்னணியில் இதமாக இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த வலிமையான அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்படும் அலங்காரம் மிகு மாளிகையாகப் பாடல்கள் திகழும்.

தம்புராவை வெறும் தனி இசைக் கருவி என்று குறுக்கிவிடமுடியாது. நவீனப் பாடல்களுக்குப் பின்னணியாக ஒலிக்கும் பியானோ இசைபோல் தனியாகக் கவனத்துக்கு உரிய கருவியும் அல்ல. இந்தியப் பாடல்களுக்கான இதமான சூழலை உருவாக்கித் தருகிறது. அந்தத் தம்புராவின் இசைவெளியில் பாடல்கள் ஜீவனுடன் செழுமைபெற்றுச் செல்கின்றன.

இந்திய இசையில் தம்புரா நீங்கலாக வேறு தனி இசைக் கருவிகளும் இருக்கின்றன. அந்த வகையில் மிக முக்கியமானது வீணை. செவ்வியல் இசைக் கருவி. ஐரோப்பியர்களின் வயலினுக்கும் ஜப்பானியர்களின் கோட்டோ வாத்தியத்துக்கும் இணையானது. நுட்பமான இசை சங்கதிகளை வெளிப்படுத்துவதில் மனிதக் குரலுக்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடியது. இடது கையால் ஸ்வரங்கள் இசைக்கப்படும். வலது கையால் வீணைத் தந்திகள் இழுக்கப்படும். அதி நுட்பமான ஸ்ருதி மாறுபாடுகளைத் தந்தியின் நீளத்தை மாற்றி அமைப்பதன் மூலம் உருவாக்குவார்கள். இடது கையை கிடைமட்டமாக அசைத்து இசைப்பார்கள்.

பாடலைச் சாராமல் தனியான லயத்தில் தம்புராவை இசைக்க வேண்டும். அதுவே அதில் இருக்கும் சவால். ஆனால் வீணையில் எண்ணற்ற நுணுக்கங்கள், சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். வீணை இசைப்பதில் தேர்ச்சிபெற வேண்டுமென்றால் குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுவதுண்டு.

இந்தியப் பாடகர் ஒரு கவிஞரும் கூட. ஒரு கவிஞர் பாடகரும் கூட. மனிதக் காதல் அல்லது இறை காதல்… இதுவே பெரும்பாலான கலைப்படைப்புகளின் முக்கிய கருப்பொருள். அல்லது இறைவனைப் போற்றிப் புகழும் துதிகள். இந்திய இசைப் பாடல்களின் வார்த்தைகள் எல்லாம் ஆத்மார்த்தமானவை. உணர்வுப்பூர்வமானவை. ஒரு பாடகர் இசைக்கலைஞராகவும் இருப்பார். எனினும் இசையில் சாஹித்யம் என்பது இசையைச் சுமந்து செல்லும் வாகனம் போலவே இருக்கிறது. வார்த்தைகள் மிகவும் சுருக்கமாக இருக்கும். கதை ஒன்றைச் சொல்வதைவிட உணர்வு நிலையையே பெரிதும் பிரதிபலிக்கும். தமக்கான தர்க்க ஒழுங்குக்குள் இயங்குவதைவிட இசைக்கு உறுதுணையாகவே சாஹித்யங்கள் இருக்கும். நவீன ஓவியங்களில் நிறங்களின் சேர்க்கைக்கும் கலை வெளிப்பாட்டுக்கும் கருப்பொருள் என்பது ஓர் அடித்தளமாக மட்டுமே இருப்பதுபோல் இருக்கும்.

இசையில் ஆலாபனை என்ற ஒன்று இருக்கிறது. அடிப்படை ராகத்தை ஒரு பாடகர் தனது மனோலயத்துக்கு ஏற்ப விஸ்தரித்துப் பாடுவார். இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதென்றால், இந்த ஆலாபனையில் அர்த்தமற்ற வார்த்தைகளே பயன்படுத்தப்படும். குரலே ஒரு இசைக்கருவியாகிவிடும். பாடலில் இடம்பெறும் வார்த்தைகளைவிடப் பாடலே மேலானது. இந்தியப் பாடகர் இப்படியான பாடல் வடிவத்தையே பெரிதும் விரும்புகிறார். பாடலில் இடம்பெறும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களை இந்தப் பாடகர்கள் ஒருவகையில் வெறுக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஐரோப்பாவில் இருப்பதைவிட இந்திய மரபில் குரலுக்கு அதனளவிலேயே மிகப் பெரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. வார்த்தைகளை இசையில் விளக்கி விவரிக்கும் ஒன்றாகக் குரல் பார்க்கப்படுவதில்லை. ரவீந்திர நாத் தாகூர் இதுபற்றிக் கூறியிருப்பவை:

‘யார் உனக்கு அந்நிய உடைகள் அணிவித்தது?’ என்ற பாடலைச் சிறு வயதில் கேட்டேன். பாடலின் அந்த ஒரு வரி எனக்குள் வித்தியாசமான சித்திரம் ஒன்றைத் தீட்டியது. இப்போதும் அந்த வரி என் நினைவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரி எனக்குள் ஏற்படுத்திய மந்திர உணர்வின் தாக்கத்தில் ஒரு பாடல் எழுதவேண்டும் என்று முயற்சி செய்தேன். அந்தப் பாடலை மனதுக்குள் பாடிப் பார்த்தபடி, ‘தேவி… எனக்கு உன்னைத் தெரியும்; எவ்வளவு விசித்திரமானவர் நீங்கள்…’ என்று ஆரம்ப வரிகள் மனதில் எழுந்தன. இந்தப் பாடலுக்கு இசையமைக்காவிட்டால் அந்தப் பாடலில் என்ன அர்த்தம் எஞ்சியிருக்கும்? ஆனால் அந்த ராகத்தின் வலிமையினால் அந்த விசித்திரமான தேவி என் மனதில் எழுந்தருளிவிட்டார். விசித்திரங்கள் நம் இந்த உலகில் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கின்றன…

புதிர் கடலின் மறு கரையில்
வெகு தொலைவில் அமைந்திருக்கிறது தேவியின் வீடு.
சில நேரங்களில்
இலையுதிர் கால காலைகளில் அவள் தென்படுவாள்;
சில நேரங்களில்
நள்ளிரவின் மலர்ச்சியில் தென்படுவாள்;
சில நேரங்களில்
நம் இதயத்தின் அடி ஆழத்தில் அவளின் சான்னித்தியத்தை உணர்வோம்;
வானத்து ஒலிகளில் என் செவிகளைக் குவிக்கும்போது
சில நேரம் அவள் குரல் என் காதில் மென்மையாக ஒலிக்கும்.
என் பாடலின் ராகம்
அந்த விசித்திரமான தேவியின் வாசலுக்கு
என்னை இட்டுச் சென்றது;

இந்த உலகம் முழுவதையும் கையகப்படுத்தியிருக்கிறாள்; இந்த உலகம் முழுவதிலும் ஊடுருவியும் இருக்கிறாள்.

உலகங்களில் எல்லாம் சஞ்சரித்து
இறுதியின் உன் வாசல் வந்து நிற்கிறேன்
விசித்திரமானவளே…. உன் விருந்தாளி நான்

பல நாட்கள் கழித்து தெருவில் யாரோ ஒருவர் பாடிக் கொண்டே போனதைக் கேட்டேன்:

அறிய முடியாத (ஆன்மப்) பறவை
கூண்டுக்கு உள்ளும் புறமுமாக
எப்படி வந்து போய்க் கொண்டிருக்கிறது?
என்னால் அதைப் பிடிக்க முடிந்தால்,
என் மனதை அதன் கால்களில் சங்கலியால் பிணைத்துவிடுவேனே.

இந்த நாட்டுப்புறப் பாடலும் அதே விஷயத்தைத்தான் சொல்கிறது! சில நேரங்களில் அறிய முடியாத பறவை, மூடிய சிறைக்குள் அடைபடுகிறது. எல்லையற்ற, அறிய முடியாத பரம்பொருள் பற்றி ஒரு வார்த்தை உச்சரிக்கிறது. அந்த ஒற்றை வார்த்தையில் மனம் என்றென்றைக்குமாக லயிக்க விரும்புகிறது. ஆனால் முடிவதில்லை. இசையன்றி, அந்த அறிய முடியாத பறவை வந்து போவதை நமக்கு உணர்த்துவது வேறெதுவாக இருக்கமுடியும்? இதனால்தான் நான் பாடல் புத்தகத்தை வெளியிட மிகவும் தயங்குவதுண்டு. ஏனென்றால் அச்சிடப்படும் புத்தகங்களில் இசையின் ஆன்மா முழுவதுமாக விடுபட்டுப் போயிருக்கும்’.

இந்திய இசை, அடிப்படையில் தனிநபர் சாராதது. அது வெளிப்படுத்தும் உணர்வும் அனுபவமும் அந்தத் தனி நபரின் உணர்வு அல்லது ஞானம் இவற்றையெல்லாம் தாண்டிய ஆழமான, அநாதியான, விசாலமான ஒன்றையே வெளிப்படுத்துகின்றன. கண்ணீர் இல்லாத சோகம் அது; குதூகலம் இல்லாத மகிழ்ச்சி அது; சாந்த நிலையில் வெளிப்படும் பரபரப்பு; சமநிலை பிறழாமல் வெளிப்படும் உணர்வெழுச்சி. ஒட்டு மொத்த மனித இனத்தின் ஆழ் மன உணர்வுகளின் தொகுப்பு. இந்திய இசை மேதை ஒருவர் கலை உந்துதல் பற்றிப் பேசுவதென்றால் அநாதியான வேதங்களைப் போன்றது அது; ஒரு கலைஞன் ஆழ் மனதைக் கேட்கவும் பார்க்கவும் செய்யும்போது அந்த உந்துதலைப் பெறுகிறான். அந்தக் கலைஞனின் வீணையின் தந்திகளில் இசையின் மறை ஞானத்தை வெளிப்படுத்தவேண்டியது வாக் தேவி சரஸ்வதி அல்லது இசை ரிஷி நாரதர் ஆகியோரின் வேலை. கிருஷ்ணனின் புல்லாங்குழல் இந்த உலக பந்தங்கள், கடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு அவனுடைய குழலிசையை மட்டுமே பின் தொடர்ந்து செல்லும்படிச் செய்யும். இவை மூலம்தான் கலை நிகழ்த்தப்படுகிறது; தனி மனித முயற்சியினால் அல்ல. கலை என்பது பாடகனின் குரலிலோ நடனக் கலைஞரின் அசைவிலோ இல்லை. இசைத் தெய்வங்கள் நம் மூலமாக இசையை, கலையை நிகழ்த்திக் கொள்கின்றன. அவர்களின் கைகளில் நாம் ஓர் இசைக் கருவி மாத்திரமே.

இசை என்பது சொர்க்கத்தின் நகல். இசைக் கலைஞர்கள் எல்லாம் இறைவனின் சீடர்கள். அந்த விண்ணுலகில் சஞ்சரித்தே தம் இசையைக் கற்றுக் கொள்கிறார்கள். கண்களால் பார்க்கப்படுவதும் யதார்த்த உலகில் பிரக்ஞை பூர்வமாக உணரப்படுவதுமானவற்றுக்கு அப்பால் ஆழ் மனதுக்குள் இருக்கும் அறிய முடியா ஊற்றில் இருந்து கலை ஞானம் அவர்களை அறியாமலே கொப்பளித்து வருகிறது. இதனால்தான் கலைப் படைப்புகளை நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது; கலை ரசனையை முறையாக வளர்த்தெடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

நாட்டிய சாஸ்திரத்தின் மகத்தான குருவான பரத முனிவருக்கு சிவபெருமான் கலை நுட்பங்களைக் கற்றுத் தரும்போது ’மனிதக் கலைகள் இயற்கை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஏனென்றால், மனிதர்களில் ஆழ் மனதும் புற உலக வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டவையாக இருக்கும்’ என்று விளக்கியிருக்கிறார். மனிதன் தன்னைத் தான் இன்னும் முழுமையாக உணரவில்லை. அவனுடைய செயல்பாடுகள் எல்லாம் மனதின் தீவிர எண்ணவோட்டங்களால்களால் உருவாகிறவையே. அவனுடைய பெருமைகள், திறமைகள் எல்லாம் சுய மைய-பிரக்ஞை பூர்வமானவையே.

நாம் வாழ்க்கை என்று சொல்வது ஒருங்கிணைக்கப்படாத பெரு வடிவம். கலையின் விதிகள், ஒத்திசைவுகள் ஆகியவற்றுக்கு அகப்படாதது. அப்பாற்பட்டது. நன்மை தீமைகளைத் தாண்டி இயங்கக்கூடியது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அது கடவுள்களிடம் இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு அசைவுகளும் ஆழ் மன வாழ்வில் பிரதிபலிக்கின்றன. கலை என்பது அந்த முழுமையான தன்னிச்சையான அநிச்சையான வெளிப்பாடுதான். உள்ளொளியின் அடையாளம் மற்றும் வெளிப்பாடுகள் எல்லாம் நம் மனதுக்குள் இருக்கும் விண்ணுலகின் வெளிப்பாடுகளே.

அப்படியாக, பிற எந்தவொன்றைவிடவும் கலை ஒன்றே மனித வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. திரு ஜான் யீட்ஸ், ‘இந்திய இசையின் கோட்பாடு மிகவும் விரிவானது; அதன் தொழில்நுட்பங்கள் மிகவும் கடினமானவை; எனவே அது வெறும் கலை மட்டும் அல்ல; அது வாழ்க்கையாகவுமே இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

இந்தியப் பாடகர் தன் அனுபவங்களின் ஒரு பகுதியையோ தற்காலிகமான ஒன்றையோ பாடவில்லை. உலகின் ஒட்டுமொத்த ஆழ்நிலை யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறார். ‘இங்குப் பாடுபவர்கள் எல்லாம் கடவுளைப் பாடுகிறார்கள்’ என்று சங்கராச்சாரியர் குறிப்பிட்டிருக்கிறார். விஷ்ணு புராணத்தில், ’எல்லாப் பாடல்களும் இறைவனின் அம்சமே. அவர் இசையை ஆடையாக அணிந்துகொள்கிறார்’ என்று குறிப்பிடுகிறது. ‘எத்தனை கலைஞர்கள்… எத்தனை ராகங்கள்… எத்தனை ராகினிகள்… இருந்தும் எத்தனை பேர் இறைவா உன்னைப் பாடுகிறார்கள்’ என்று கிரந்த சாஹிப் குறிப்பிடுகிறது.

இவற்றிலிருந்து நாம் ஒரு கலை நுட்பம் பற்றிய மீ மெய்யியல் விளக்கத்தை, குறிப்புணர்த்துதலைப் புரிந்துகொள்ளமுடியும்.

எல்லாக் கலைகளிலும் விவரிக்க முடிந்த மற்றும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மகத்தான அம்சங்கள் கலந்து இருக்கும். ஆண் அம்சங்கள், பெண் அம்சங்கள் எல்லாம் மிக நேர்த்தியாக முழுமை வடிவில் இணைந்து இருக்கும். பாடலுக்கு முன்பாக, பாடலினூடே, பாடல் முடிந்த பின்னும் எனத் தம்புராவின் ஸ்ருதியைத் தொடர்ச்சியாகக் கேட்கிறோம். அதுவே காலங்கடந்த முழுமை. அதி ஆதியில் இருந்தது. இப்போது இருக்கிறது. இனி எப்போதும் இருக்கவும் செய்யும். அதேநேரம் இயற்கையின் ஓர் அம்சமாக பாடல் ஒன்று பிறக்கிறது; ஒரு சுழற்சியை முடித்துக்கொண்டு திரும்புகிறது. பிளவுபடாத அந்த முழுமையின் பின்னணியில் இந்த அழகிய வடிவம் ஒன்று மிக அற்புதமான ஒத்திசைவுடன் ஆன்மா மற்றும் பருப்பொருளின் ஒற்றுமையாக வெளிப்படுகிறது.

இதனால்தான் இந்திய இசையானது புதிதாக எதையும் சேர்த்து முழுமைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல; அடிப்படைகளைச் சிதைக்காமலேயே முடியும் என்றாலும் அது அவசியமில்லை. அலங்காரங்களுக்காக ஆதார அடிப்படையைப் பிளவு படுத்துதல் என்றால் நாம் இன்னொரு புதிய ஸ்வரத்தை, இன்னொரு உலகை உருவாக்கவேண்டும். பாடலின் ஆன்மாவுக்குப் போட்டியாக அதன் சுதந்தரத்துக்குப் போட்டியாக உருவாக்கவேண்டியிருக்கும். அது அந்தப் பாடலின் ஆன்மாவை, அதன் மேன்மையை, அதன் கலை அமைதியைச் சீர்குலைத்துவிடும்.

இது பாடகரின் இலக்கைச் சிதைத்துவிடும். இந்த சுய மைய சிந்தனை கொண்ட உலகில் வாழும் நாம் அழியக்கூடியவர்கள்; ஆனால் நம்முடைய இந்த அழிவு என்பது ஒருவித மாயை. அது தொடர்பான உண்மைகள் எல்லாமே சுய புரிதல் சார்ந்தவை மட்டுமே. இந்த மாறக்கூடிய, பிரியக்கூடிய உலகில் எல்லையற்ற, கால வெளி கடந்த பேரமைதி ஒன்று இருக்கிறது. அதுவே அனைத்து உயிர்களின் இலக்கு. ’அந்த உன்னத நல் முத்துதான் எல்லாமுமானது. இந்த உலகத்தினருக்கு அது ஒன்றுமே இல்லை. ஆனால், ஞானம் பெற்றவர்களுக்கு அதுவே எல்லாம்’ என்று பேமன் (Behman) இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு மத குருவும் நமக்கு இந்த உயிர் மூச்சை, வழியை வழங்குகிறார்கள். ஆனால் அதில் பயணிப்பது மிகவும் சிரமம். அது மிக மிக நீளமான பாதை. நமது வீடுகள், சொத்து சுகங்கள், பெற்றோர், வாழ்க்கைத்துணைகள் என அனைத்தையும் துறக்கவேண்டும்; அதன் மூலம் நாம் அடையவிருக்கும் லட்சியம் என்பது, நம்முடைய குறைகள் மலிந்த மொழியில் சொல்வதென்றால், அப்படி ஒன்று இல்லை என்றுதான் சொல்லமுடியும். நம்மில் பலர் ஏராளமானவற்றைச் சொந்தமாக வைத்திருக்கிறோம். அவை எல்லாவற்றிலும் நமது சுய சிந்தனையையும் அடையாளத்தையும் கைவிடுவதுதான் மிக மிகக் கடினம். அந்த மாபெரும் தியாகத்தைச் செய்தால் அதை ஈடுகட்டும்வகையில் நமக்குப் பரிசு ஏதேனும் கிடைக்கும் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்ற கேள்வி எழும்.

இந்திய இசைக் கோட்பாடானது, காதலின் உன்மத்த நிலை மற்றும் கலை எழுச்சிகளில் நாம் அந்த மகத்தான பரிசின் தடயங்களைப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறது. கிரேக்கர்கள் சொல்லும் உணர்வுத் தூய்மை நிலை (catharsis) என்பது இதுவே. நவீன ஐரோப்பிய மரபில் கதே இதையே,

அழகை ஒவ்வொரு காலத்திலும் தேடியிருக்கிறார்கள்
தன்னிலிருந்து விடுதலை பெறுபவனே
அதைக் கண்டுகொள்கிறான்

என்று குறிப்பிடுகிறார்.

சொர்க்கம் என்பது நிஜம்தான் என்பதைக் கலை வெளிப்பாடு மற்றும் ரசனைகளின் மூலமாகவே நாம் அனுபவித்து உணரமுடிகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு பாடல் நம் ஆழ் மனதில், ஆழ் உணர்வில் ஏற்படுத்தும் தாக்கங்களே அது செய்யும் பிற மாயா ஜாலங்கள் எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதாகத் திகழ்கின்றன. இருந்தும் பாடகர் ஒரு மந்திரவாதி போன்றவர் மட்டுமே. அவர் பாடும் பாடல்கள் என்பவை சம்பிரதாயமானவையே; புனிதச் சடங்கு போன்றவையே. யதார்த்த நிலையுடனான தொடர்புகளைத் தடுக்கும் கற்பனை மற்றும் உணர்வுகளின் சக்கரத்தை அது நிறுத்திவைக்கும் செயலைச் செய்ய வடிவமைக்கப்பட்டதுதான். ஆனால் இந்த நிலையை எட்டவேண்டுமானால், பாடலைக் கேட்கும் ரசிகர் பாடகருடன் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும். தன் சிந்தையை அவரிடம் முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். அலைபாயும் மனதைக் குவித்து, பாடலில் நிலைநிறுத்தவேண்டும். புகழ்ச்சிக்கோ ஆர்வக் கோளாறுக்கோ நேரம் இல்லை.

அறியப்படாத கலையை நோக்கிய நம் அணுகுமுறையானது உணர்வுகள், உணர்ச்சிவசப்படுதல் எல்லாவற்றையும் கடந்ததாக இருக்கவேண்டும். நம் மனதில் இல்லாத எந்தவொன்றையும் அதனால் கொண்டுவர முடியாது. நாம் ஆசியக் கலையில் கண்டடைந்தாலும் ஐரோப்பியக் கலையில் கண்டடைந்தாலும் அனைத்துக் கலைகளின் ஒரே ஓர் அடி நாதமாக அந்தப் பேரானந்த அமைதி நிலையே இருக்கிறது.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *