Skip to content
Home » சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

சிவ தாண்டவம்

இந்தியாவில் இப்போதும் குடும்பமே மைய சமூக அமைப்பாக இருந்துவருகிறது. நவீன காலச் சூழ்நிலைகளில் வீடு என்ற அமைப்பு காப்பாற்றப்படவேண்டிய ஒன்று தானென்றால், அதற்கு ஒரே வழி உரிய சமரசங்கள் அவசியப்படக்கூடிய திருமண பந்தம் நிலையானதாக இருந்தாகவேண்டும். இப்போது பெருமளவுக்கு அனுசரித்துச்செல்லும் நிலை இருந்துவருகிறது. எனினும் இந்த நடைமுறைக்குச் சற்று மேலும் கீழுமான ஒரு நிலை உருவாகியாகவேண்டும்.

இயல்பான திருமண பந்தத்தின் ஆக்கப்பூர்வமான அடிப்படைகளாக நாம் எதையெல்லாம் மதிக்கலாம்?

ஹிந்து சமூகவியலாளர்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது சமூக மற்றும் தார்மிக உறவு. குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒருவகையில் சமூகக் கடனைத் திருப்பித் தருவது / சமூகக் கடமையைச் சரியாகச் செய்வது போன்றது. காதல் என்பது எல்லையற்ற சுதந்தரத்தின் தற்காலிக அனுபவம். மதம் சார்ந்தது; அதனளவில் அது சமூக விரோதமானது. ஒருவரோடு முழுமையான இணைவதென்பது மற்றவற்றை மறுதலிப்பதுதான். காதல் மயக்கத்தில், சில வாரங்கள் அல்லது மாதங்கள் காதலனும் காதலியும் மனதளவில் முடிந்தவரையில் ஒன்று கலந்து உருவாகும் ஒளியினால் முழு வாழ்க்கையும் வெளிச்சம் பெறுகிறது. ஆனால் எல்லா காதல்களும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். எண்ணற்ற மன நிறைவுகளை வாரி வழங்கிய உள் மன மயக்கத்தின் ஒளி மெள்ள மெள்ள யதார்த்த ஒளியின் முன்னால் மங்கத் தொடங்கும். விண்ணில் பறந்துகொண்டிருந்த காதலர் மண்ணில் இறங்குவார்கள்.

பொதுவான விருப்பம், கடமை, நட்புக்குத் தேவைப்படும் பரஸ்பர மனநிலை, அக்கறை, பொறுமை இவையெல்லாம் இப்போதும் நீடித்திருந்தால் அந்தக் காதலர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருப்பார்கள். இந்த அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு இருவரின் திருமண வாழ்க்கையின் பெருமளவிலான காலங்களில் மகிழ்ச்சி நிலவும்.

ஹிந்து திருமண பந்தம் இந்தச் சிந்தனைகளை, நிபந்தனைகளைக் காதலுக்கு முன்பாகவே முன்வைத்துவிடுகிறது. காதல் இன்பமே இலக்கு என்று அது சொல்வதில்லை. திருமண உறவுக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னரே காதல் இன்பம் என்று வரையறுத்திருக்கிறது. காதலித்துத் திருமணம் என்பதைவிட திருமணத்துக்குப் பின் காதல் என்பதாக அது முன்வைக்கிறது.

ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து வாழ் நாள் முழுவதும் ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்னர்தானே மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் ஈடுபட்ட உடனேயே கிடைக்கும் உடனடி இன்பமே இலக்கு என்று சொல்லப்படுவதில்லையே. இந்த இடத்தில் ’தொழில்’ என்ற வார்த்தையை நன்கு யோசித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். கீழைத்தேய நாடுகளில் திருமணம் என்பது கீழைத்தேயக் கலைஞர்களின் கலை போன்றது. மரபான, பாரம்பரியமான உருவங்களை அப்படியே வரைந்து, உருவாக்கி பூர்த்தி செய்வதுதான் இலக்கு. உணர்வுநிலைகளின் வெடிப்புகளைச் சார்ந்து அந்தக் கலை வெளிப்பாடு இருக்காது.

ஆண்கள் ராமபிரானைப் போல் இருக்கவேண்டும்; பெண்கள் சீதையைப் போல் இருக்கவேண்டும் என்பதுதான் இந்திய திருமண பந்தத்தின் இலக்கு. தனி நபர்களின் ’தனித்தன்மையை’ வெளிப்படுத்துவது அல்ல. சூத்திரங்கள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுவிட்டன. கணவன், மனைவி இருவருக்கும் அவரவருக்கான பொறுப்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் மனு ஸ்மிருதியை நாம் நன்கு புரிந்துகொள்ளமுடியும். கணவன் எப்படி இருந்தாலும் மனைவி அவரை தெய்வமாகப் போற்றவேண்டும்; கணவரின் குறைகளுக்காக, பெண்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தில் இருந்து மனைவி பிறழ்வது அவளுடைய கண்ணியத்துக்கே இழுக்கு. கணவரின் நன்மைக்காக அல்ல; அவளுக்காகவும் சமூக நன்மைக்காகவும் அவள் அதைச் செய்யவேண்டும். புருஷ பிரகிருதி பந்தத்தைப் போலவே திருமண பந்தமும் இருக்கவேண்டும்.

மேற்கத்திய தனிநபர்வாதம் எவ்வளவு எண்ணற்ற சாத்தியக் கூறுகளை முன்வைத்தாலும் ஹிந்து சமூகமானது குல ஒழுக்கத்தை (குல தர்மத்தை) அடிப்படையாகக் கொண்டு உருவானது. எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும் பொதுவான தர்மம் (விதிமுறை) என்று எதுவும் இல்லை என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு குலங்களுக்கு உள்ளேயும் ஒரு தனி நபரின் சுதந்தரமானது அந்தக் குலத்தின் நலனுக்கு உட்பட்டது. கடமையே அனைத்திலும் உயர்வானது.

ஒருவருடைய கடமை என்பது தனி மனிதரின் சுதந்தரத்தை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கு சீதையை ராமன் தண்டித்த நிகழ்ச்சி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கையை வென்று அயோத்தி அரியணையில் ஏறிய பின் நடந்த சம்பவம் இது. சீதையின் கற்பின் மீது ராமருக்கு எந்தவொரு சந்தேகமும் கிடையாது. சமூக விதிகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே அவர் செயல்படுகிறார். மக்கள் மத்தியில் சீதையின் கற்பு பற்றிச் சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்ததால் அவர் சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிடுகிறார்.

பிற ஆடவருடைய வீட்டில் சில காலம் இருந்த ஒரு பெண்ணை அவள் எவ்வளவுதான் கற்புக்கரசியாக இருந்தாலும் மன்னரே மன்னித்து ஏற்றுக்கொண்டால் மக்களிடையே நல்லொழுக்கம் சீர்குலைந்துவிடும். ஏனென்றால், அன்பினால் தூண்டப்பட்டும் நியாயமான காரணங்கள் இல்லாமலும் பாரபட்சமான முறையில் மன்னித்தும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்படியாக ஓர் ஆண் அல்லது பெண்ணின் விருப்பங்களே சமூக ஒழுங்கைவிட முக்கியமானதாக ஆகிவிடும்.

பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் கீழைத்தேயத் திருமண பந்தத்துக்கும் தனி நபர் விருப்பத்துடன் நடக்கும் மேற்கத்திய திருமணங்களுக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வேறுபாட்டுக்கு மிகவும் சரியான விளக்கம் இதுவே. எங்கே ஏய்ப்பு இல்லையோ அங்கே அதிருப்திக்கு இடம் இருக்காது. எந்த அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இந்தப் பந்தம் கட்டமைக்கப்படுகிறதோ அது மாறாமல் இருக்கும்வரையில் ஹிந்து திருமணங்கள் எல்லாம் ஒருபோதும் ரத்தாகாது. சமூகக் கடமைகள் முறையாகப் பூர்த்திசெய்யப்படும்போது, சமூகக் கடன்கள் ஒழுங்காகத் திருப்பித் தரப்படும்போது குடும்பத் தலைவர் மட்டும் சமூக உறுப்பினருக்கு உண்டான கடமைகள், உரிமைகள் இவற்றை மட்டும் கைவிட்டுவிடலாமா? திருமண பந்தத்தில் குழந்தைகள் பிறக்கவில்லையென்றால் முதல் மனைவியின் சம்மதத்துடன் ஏன்… அவருடைய விருப்பத்தின் மூலம் இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொள்வதும் சரிதான்.

கீழைத்தேய உலகில் பெண்களுக்கு என்னென்ன வாய்ப்புகள், உரிமைகள் தரப்பட்டுள்ளன என்ற கேள்வி சில நேரங்களில் கேட்கப்படுவதுண்டு.

ஒரு பெண் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ளமுடியும்?

இந்த மனித வாழ்க்கையில் பெண்ணாக வாழவே அவளுக்கு வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பெண் தன்மையை உணர்வதற்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அல்ல. மேற்கத்திய உலகில் இதற்கு நேர் எதிராகச் சொல்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நமக்குக் கல்வியாகத் தரப்படுபவை மேம்போக்கானவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இன்றைய கல்வி என்பது பெரிதும் கிளிப்பிள்ளைபோல் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் பயிற்சியையே தருகிறது. இப்படியான கல்வியை ஆசியர்களுக்குத் தந்ததில் பெரிய நன்மை எதுவும் கிடைத்திருக்கவில்லை. நவீனக்காலப் பெற்றோர் தமது பெண் குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஃபிரெஞ்சு, அல்லது கொஞ்சம் போல் வயலின் கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள்.

இந்தியாவில் கலைகள் எல்லாம் அந்தந்தக் குலங்களின் தொழிலாகவும் இடைவிடாத அர்ப்பணிப்பும் பயிற்சியும் இருந்தாலே கற்றுக் கொள்ள முடியும் என்பதாகவும் இருக்கின்றன. மேம்போக்காகவோ பொழுதுபோக்காகவோ தனிச் சிறப்புப் பயிற்சி என்பதாகவோ எந்தக் கலையும் கற்றுத் தரப்படுவதில்லை. பெண்கள் குல வழி வாழ்க்கையின் பரம்பரைத் தொடர்ச்சியின் பிரதிநிதி. தனது நேரத்தை வேறொன்றுக்குப் பிரித்து அல்லது திசைமாற்றிக் கொடுத்தால் இந்தப் பரம்பரைக் கடமையைச் சரிவரச் செய்யமுடியாமல் போய்விடும். ஒரு வைஸ்யர் தன்னை ஒரு க்ஷத்ரியராகவோ அல்லது க்ஷத்ரியர் தன்னை ஒரு பிராமணராகவோ காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. அதுபோலவே ஒரு பெண்ணும் தன்னை ஒரு பெண் என்பதைத் தாண்டி வேறெதுவாகவும் காட்டிக்கொள்ளத் தேவையில்லை.

மேற்குலகப் பட்டதாரிப் பெண்களில் 75% பேர் திருமணம் செய்துகொள்வதில்லை. குழந்தைகளின் செயல்பாடுகள், மனநிலைகள் எல்லாம் பள்ளிப் பருவத்துக்கு முன்பே ஆறில் ஐந்து பங்குக்கு வீடுகளிலேயே தீர்மானமாகிவிடுகின்றன. ஆழமாகப் பதிந்துவிடும் அந்தப் பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றமுடியாது. குழந்தைகளின் உள்ளுணர்வுகள் எல்லாம் வலிமையானவை; பழக்கவழக்கங்கள் எல்லாம் முழு வடிவம் பெறாதநிலையில் இருக்கும். அப்படியான மிக முக்கியமான காலகட்டத்தில் ஒரு பெண் தனது பரம்பரைக் கடமையை அல்லது குழந்தை வளர்ப்பின் மூலம் முன்னோர்களுக்குச் செலுத்தவேண்டிய கடனைச் செலுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பது சரியா?

சமூகக் கடமைகள் அல்லது மகிழ்ச்சித் தேடல்கள் அல்லது சுய விருப்பத்தின்படித் தேர்ந்தெடுக்கும் தொழில் வாழ்க்கை அல்லது தவிர்க்கமுடியாத வேலைப் பளு ஆகியவையெல்லாம் அவர்களை வெளி உலகுக்கு இழுத்துச் சென்றுவிடும். இவையெல்லாம் ஒரு பெண் தன்னுடைய பரம்பரைக்கான கடமையைச் செய்வதில் இருந்து தவற வைத்துவிடும்.

ஓர் அரசு, பெண்ணுக்குத் தான் கொடுக்கும் பாதுகாப்புக்குப் பதிலாக, எதிர்காலக் குடிமகன்களை உருவாக்கித் தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசை காட்டியோ மிரட்டியோ எதையும் செய்யவைக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று நவீனத்துவத்தின் ஆதரவாளர் குறிப்பிடுகிறார். அதேநேரம் ஆண்களை ராணுவ சேவைக்குக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் சமூகத்துக்கு (அரசுக்கு) உண்டு என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது. இதிலும் ஒருவிதக் கட்டாயப்படுத்தலே இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

இன்றைய உலகின் கட்டாயப்படுத்தலை எதிர்க்கும் நபர்கள் ராணுவத்துக்கு அதாவது அழிவுத் தொழிலுக்கு ஆட்களைக் கட்டுப்படுத்தித் தேர்ந்தெடுப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் நாம் வேறொருவிதமான கட்டாயப்படுத்தலுக்கு அதாவது சேவை அடிப்படையிலான கூட்டுறவுக்குப் பழகிவிட்டிருக்கிறோம். எதிர்காலம் தொடர்பான வலுவான கோட்பாடுகளான தனிநபர் வாதம் மற்றும் தொழிற்சங்கவாதம் இரண்டின் அடிப்படையில் பார்த்தால் கடமையைச் செய்யாமல் உரிமை என்று எதுவும் இருக்கமுடியாது என்பது தெரியவரும்.

சமூகக் கூட்டுறவு என்ற அடிப்படையில் சமூக நலனுக்குத் தேவையான செயல்பாடுகளைச் செய்யும்படி அதன் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தும் முழு உரிமை உண்டு என்றே சொல்லப்படுகிறது. அரசின்மைக் கோட்பாடு கொண்ட அனார்க்கிஸ்ட்கள் போன்றவர்களே தன்னிச்சையாக முழுமையாகச் சமூக நன்மைகள், சமூகப் பாதுகாப்பு அனைத்தையும் மறுதலிக்கிறார்கள். அவர்களுக்கே சமூகத்தின் நிபந்தனைகளை (கோரிக்கைகளை) புறக்கணிக்கும் உரிமை உண்டு.

ஓர் உயிர்த்துடிப்பு மிகுந்த சமுதாயம் ஒருவருக்கு ஆதரவு தேவைப்படும்வரையில் அது ஆன்மிக நலன் சார்ந்ததாக இருக்கும்வரையில் முழு ஆதரவு தரவே செய்யும். சிந்தனையாளர்கள், கலைஞர்கள் போல் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரியும்படியாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; வெறும் சோம்பேறிபோல் தோற்றமளிக்கும் சில குறிப்பிட்ட முழுமையான கலகக்காரர்களுக்கும் அந்த ஆதரவைத் தரும். ஆனால் இந்தச் சோம்பேறி, அரசின்மைவாதியாகவோ அரச அதிகாரியாகவோ இருந்தாலும் ஆடம்பரங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரமுடியாது. அவருக்குத் தரப்படுபவையெல்லாம் அன்பினால் தரப்படுகிறது; சட்டப்பூர்வமாக அல்ல.

0

தனி நபர் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடமை நிறைவேற்றம் என்பது தன்னியல்பான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது. சிந்தனையாளர், கலைஞர் ஆகியவர்களைப் பொறுத்தவரையிலும் அதுவே நடைமுறையாக இருக்கிறது. தனிநபர்வாதியும்கூடஎதுவும் செய்யாமல் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதிகபட்சமாக அவர் பிறரைக் கட்டாயப்படுத்திச் செய்யவைப்பார்.

பொதுவாக ஒரு பெண்ணின் கடமை அல்லது இயல்பு – தனிநபராக இல்லாவிட்டாலும் ஒரு குழுவாகப் பெண்ணினம் என்ற வகையில் பார்த்தால் – ஆன்மிக அளவிலும் உடலளவிலும் தாயாக இருப்பதுதான். அப்படியென்றால், இந்தத் தாய்மைக் கடமை அல்லது உரிமையை மறுக்கும் சுதந்தரத்தைப் பெண்களுக்குத் தருவதற்கு பதிலாக, அதற்கு இப்போது கிடைக்கும் மதிப்பையும் மரியாதையையும் பாதுகாப்பையும் விடக் கூடுதலாகக் கொடுக்கத்தானே வேண்டும். எனவே ஆசியர்களிடமிருந்து உலகுக்குக் கற்றுக்கொள்ள இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. இந்தப் பகுதிகளில்தான் கர்ப்பவதிகள் மங்களகரமாக மதிக்கப்பட்டு மிக உயர்வாகப் போற்றப்படுகிறார்கள். தொழில்மயமான மதச் சார்பற்ற மேற்குலக சமூகங்களில் வெளிப்படையான புதிரைப் போலவே இருக்கிறாள். கர்ப்பமாக இருப்பதை மறைத்துக்கொண்டும் அதை அவமானமாகக் கருதியபடியும் தனக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியக்கேடை உருவாக்கும்படியாகவும் நடக்கவேண்டியிருக்கிறது.

ஐரோப்பிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான காலகட்டமான மத்திய காலத்துக் கலைகள், இலக்கியங்கள் ஆகியவற்றில் இப்படியான நிலை இல்லை. கன்னி மேரியின் விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் எளிய மக்கள் திரளுக்கு மேரியின் கன்னிமையைவிடத் தாய்மையே மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துவந்திருக்கிறது.

ஹிந்து பெண்களின் வாழ்க்கை என்பது மிக உயரிய லட்சியத்தைப் பூர்த்திசெய்வதாக இருக்கிறது என்று சொல்லும்போது அந்த இந்திய சமூக நடைமுறையையே மீண்டும் கொண்டுவரவேண்டும்; அதையே பிரதியெடுக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. கட்டுமானக்கலையில் கோதிக் வடிவங்களை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று சொல்வதைப் போன்றது அது. அது அவசியமில்லை. கடந்த கால மர வேலைப்பாடுகளை மீண்டும் உருவாக்குவதென்பது இன்றைய நிலையில் பொருந்தாததாக, இயற்கைக்கு மாறானதாகவே இருக்கும். அந்நாட்களில் இருந்தவர்களுக்கு முழுமையானதாக இருந்தவை இன்றைய நமக்கு முழுமையானதாக இருக்கமுடியாது.

மனிதர்களுக்காகத்தான் திருமணம். திருமணத்துக்காக மனிதர்கள் அல்ல. ஐரோப்பிய நவீன மனிதர் இந்தக் கருத்தை வெகு விரைவில் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆசியாவில் காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளக்கூடும். தற்காலிகத் திருமணம், தாய்மைக்கான ஊக்கம், தாய்வழி சொத்துரிமை அல்லது நம் மரபில் ஆன்மிகரீதியாகவோ பொருளாதாரத் தேவைகள் சார்ந்தோ உருவாகியிருக்கும் விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்வார்கள். இது ஆசிய வழிமுறையைவிடவோ மத்திய கால ஐரோப்பிய அமைப்புகளைவிடவோ மிகவும் சிறந்தவை என்பதால் அல்ல; இவையெல்லாம் நம் ஆழ்மன வாழ்க்கைக்கும் விருப்பங்களுக்கும் நெருக்கமானவை என்பதால்.

நமது சமூக அமைப்பை இன்னொருவருடைய சமூக அமைப்புடன் ஒப்பிடும்போது ஆதி காலம் தொடர்பாகவோ எதிர்காலம் பற்றிய நம்பிக்கையிலோ சொல்லவில்லை. முடிந்தவரையில் நல்வாழ்க்கைக்கு உதவும் வழிமுறையைக் கண்டடைதல் என்ற நோக்கிலேயே சொல்கிறேன். இலக்குகளே வழிமுறையைத் தீர்மானிக்கட்டும் என்பதே நமது லட்சியவாதத்துக்கான அடிப்படையாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக, இந்தியாவில் நடைமுறையில் இருந்த சதி வழக்கம் பற்றிப் பார்ப்போம். அந்த வார்த்தையின் அர்த்தத்தைப் பெரிதும் பரந்துபட்டவகையில்தான் இதுவரையில் எடுத்துக்கொண்டுவந்திருக்கிறோம். தன் கணவன் இறந்த பின்னர் வாழ விரும்பாத பெண்களை ’சதி’ என்று அழைக்கிறோம். இந்தப் பெயர் ஐரோப்பியர்களுக்கு நன்கு பரிச்சயமாகியிருக்கிறது.

உடலும் மனமும் பின்னிப் பிணைதல், மரணத்தையும் தாண்டித் தொடரும் பந்தம் என்பவையெல்லாம் மேற்கத்தியர்களால் மிகப் பெரிய ஒடுக்குமுறையாக விமர்சிக்கப்படுகின்றன. சதி மாதாக்களைப் பற்றி நம்முடைய சிந்தனை வேறுவகையானது. நாம் அவர்களைப் பரிதாபத்துக்குரியவர்களாக அல்ல; மரியாதையுடனும் மதிப்புடனும் அன்புடனும் பார்க்கிறோம். சதிகள் குறித்து வெட்கப்படவில்லை; மாறாக அதைப் பெருமிதமாகவே கருதுகிறோம். நம்மிடையே மிகவும் ‘முற்போக்கான’ சிந்தனை கொண்டவர்களுமே அப்படித்தான் பார்க்கிறார்கள்.

நமது குழந்தைகளின் குழந்தைகள் எல்லாம் வரும் காலத்தில் சரியோ தவறோ தனது தேசத்துக்காக உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களைப் பற்றி இதேபோல் கருணையுடன் பரிவுடன் பார்க்கக்கூடும். அப்போது நமக்கு அது சமநிலையோடு கூடிய தீர்மானமாக அல்லாமல் மிகவும் அன்பும் கருணையும் மிகுதியினால் எடுத்த தவறான முடிவாகத் தென்படலாம்.

சதி பற்றியும் பெண்களின் கண்மூடித்தனமான பதி பக்தி பற்றியும் நாம் விமர்சிப்பதென்பது தேச பக்தி மீதும் இறுதி முடிவுகளை நாம் முன்வைப்பதுபோலவே ஆகும். ஒரு மகத்தான முழுமை ஒன்றுக்காக சுயத்தை அழித்துக்கொள்வதைப் பகுத்தாராயும் குணம் கொண்டவர்கள் என்ற வகையில் நாம் வெறுக்கமுடியாது. அல்லது அற்ப வாழ்க்கைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கவும் முடியாது. இருந்தும் சதி செய்துகொள்வதைப் பயனற்ற, முன்யோசனையற்ற தியாகம் என்றும் தேச பக்திக்கான உயிர் துறப்பதை ஆன்மிக ரீதியாகவும் உயர்ந்தது என்றும் சொல்கிறோம். உரிமைகளைக் கணக்குப் போட்டுப் பெறுவதைவிட முன்யோசனையற்ற தியாகமே மேலானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

உரிமைகளைப் போராடிப் பெறும் பெண்ணியத்தின் பார்வையில் இந்தியப் பெண்களின் மீதான விமர்சனமானது, நம்மிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தேச பக்தர் எப்படிச் சுயநலமான விஷயத்தினால் எந்தப் பாதிப்பும் அடையாமல் இருப்பாரோ அல்லது பயன் தராத ஒன்றைப் பற்றி பயன்பாட்டுவாதி எப்படி அக்கறையற்று இருப்பாரோ அதுபோலவே பெண்ணியம் நம்மிடையே எந்தச் செல்வாக்கும் செலுத்தவில்லை. சதி செய்துகொண்டவர்களும் தேச பக்தர்களும் என்ன கொள்கைக்காக உயிரைத் துறந்தனர் என்பதை நாம் எந்தவகையிலும் எதிர்ப்பதில்லை. ஆனால், உயிர் வாழ்ந்து அதிகச் சேவை செய்யமுடிந்த உயரிய கொள்கைகள் நிறைய இருக்கின்றன என்பதையும் பார்க்கமுடிகிறது.

சதி என்பது பெண் அடிமைத்தனம்; ஆண்கள் தமது நன்மைகளுக்காகப் பெண்கள் மீது திணிக்கப்பட்டது; இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்தது என்றெல்லாம் சதி பற்றிப் பொதுவாக, என்ன காரணத்தினாலோ நம்பப்படுகிறது. இவையெல்லாம் வரலாற்று ஆதாரம் இல்லாதவை. அரச குடும்பங்களில் ஓரளவுக்கு சமூக வழக்கமாக இருந்திருக்கிறது. விருப்பம் இல்லாத தனிநபர்கள் மீது சில நேரங்களில் வலுக்கட்டாயமாகத் திணிக்கவும் பட்டிருக்கிறது. இன்றும் கூட பிற நபர்களின் கொள்கைகளுக்காக ஆதரவாளர்கள் துன்பப்படவும் உயிர் துறக்கவும் கட்டாயப்படுத்தப்படுவதுபோல் அன்றும் நடந்திருக்கிறது. ராஜா ராம்மோகன் ராயின் முன்னெடுப்பினால் சதி நடைமுறை சட்டப்பூர்வமாக 1829-ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அது நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பிரச்னை பெரிதாக இருந்த மற்றும் மத வெறுப்பு மிகுந்திருந்த காலகட்டத்தைவிட இப்போது சதியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நடுநிலையாகக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *