Skip to content
Home » சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

சிவ தாண்டவம்

போட்டிகளும் ஏய்ப்புகளும் நிறைந்த நவீனச் சமுதாயம், பெண்களில் சொற்பமானவர்களுக்கு மட்டுமே மிகுதியான வசதி வாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறது. இவற்றிலும்கூட அவர்களின் நளினம், புத்திசாலித்தனமான முறையில் திருமணம் செய்துகொள்ளுதல், நடை உடை பாவனைகளை மேற்கொள்ளுதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புதல், அல்லது விரும்புபவர்களைக் காதலித்தல், சட்டப்பூர்வமான அதிகாரங்கள், வலிமைகளைப் பெறுதல் ஆகிய அனைத்தையும் அவர்களிடமிருந்து பறித்தேவிட்டிருக்கிறது. ஒரு பெண் தன் மீதான நம்பிக்கைக்குப் பதிலாக ஊரோடு ஒத்துவாழும்படி பொதுப் புத்திக்கு ஏற்ப நடந்துகொள்ள நேர்வதென்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி.

மேற்குலகில் 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னர், பல பத்தாண்டுகளாக, படிப்படியாகப் பெண்களின் செல்வாக்கு குறைந்தவண்ணம் வந்திருக்கிறது. மத விஷயங்கள், கவிதைகள், இசை, கட்டடக்கலை, ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெண்களின் செல்வாக்கும் பங்கு ஆகியவையெல்லாம் அளப்பரியதாக முன்பு இருந்தது. ஆனால், (கிறிஸ்தவ) மத சீர்திருத்த நடவடிக்கைகளை ஆண்கள் முன்னெடுக்க ஆரம்பித்தபோது, சர்ச்சின் அங்கீகாரம் இல்லாத காதல் / திருமணங்களுக்கு அனுமதி கிடையாது என்று சொல்ல ஆரம்பித்தனர்; இசையை இறுக்கமான ஒழுங்குக்குள் அடைத்தனர்; உணர்வுகள், ஞானம் ஆகியவற்றை அகற்றிவிட்டு வெறும் புத்தக அறிவை மூளையில் திணித்தனர். உடலிலும் உடையிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அதையெல்லாம் நாகரிகம் என்று நம்பவைத்தனர்.

எலிசபெத்திய காலக் கவிதைகள் பண்பற்றவை என்று சொல்லப்பட்டன. இறுதியாக ஏகாதிபத்தியவாதியாவது எப்படி என்று கற்றுக் கொடுத்தனர். மேற்கத்திய ஆண்கள் எல்லாம் உலகின் பிற நாடுகளை நாகரிகப்படுத்தவும் காலனியமயமாக்கவும் தனியாகப் புறப்பட்டுச் சென்றனர். ஐரோப்பியப் பெண்களைச் செய்வதற்கு எந்த முக்கிய பணியும் இல்லாமல் தனியே விட்டனர். திருமணங்கள் செய்ய வாய்ப்பு குறைவாகவே கிடைத்தது. அப்படியே கிடைத்தாலும் திருமண வயது கடந்து 10-15 வருடங்கள் தாமதமாகிவிட்டிருந்தது. அந்தப் பெண்களுக்கு அதிருப்தி ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ‘வெறும் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல; தன் வாழ்க்கைக்கே ஓர் அர்த்தம் கற்பித்துக்கொள்ளும் வகையில்’ தனக்கான சொந்த வழியைக் கண்டடைய முயற்சி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

ஐரோப்பிய ஆண்கள் இப்படியாக உலகம் முழுவதும் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் மூழ்கிய காலகட்டத்தில் எத்தனை பெண்கள் தமது வாழ்க்கையில் இலக்கைக் கண்டடைந்துவிட்டிருந்தார்கள்? என்னே ஒரு வாக்குமூலம்? ஐரோப்பியப் பெண்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கு எல்லாம் நஷ்ட ஈடாக இந்தச் சொற்பச் சுதந்தரம் கிடைக்கத்தான் வேண்டும். பிரதிநிதித்துவ அரசுகளின் லட்சணம் என்ன என்பதை உலகம் பார்த்துவிட்டிருக்கிறது. பெரும்பான்மைகளின் சர்வாதிகார மனோபாவம் அந்த அரசுகளின் பயனின்மையை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பெண்கள் மட்டுமல்ல; ஆண்களுமே நவீன அரசாங்கங்களின் மீதான மன மயக்கங்களில் இருந்து வெளியே வந்தாக வேண்டும். தமது வாழ்க்கைப் பிரச்னைகளைத் தாமே சரி செய்துகொள்ள ஆரம்பிக்கவேண்டும். நேரடிச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கவேண்டும். அடுத்தவர்களின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் வேலைகளைக் கைவிடவேண்டும்.

எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதருக்கும் தன்னுடைய கடமைகளைத் தாண்டி அடுத்தவர்களுக்கான வேலைகளைச் செய்துகொடுக்கும் கால அவகாசமும் வலிமையும் இல்லை. இது பெண்களுக்குமே பொருந்தும். உரிமைகளுக்கான முழக்கங்கள், அதிகார மோகம் இவற்றையெல்லாம் தாண்டி அடுத்தவர்களின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு கர்த்தரால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது என்ற ஐரோப்பியரின் பிழையான எண்ணத்தினால் விளைந்திருக்கும் தீமைகளைப் பட்டியலிடவே முடியாது. ‘உலகைக் கைதூக்கி விடுதல்’, ‘வெள்ளை மனிதர்களின் பொறுப்புச் சுமை’ என்ற கோட்பாடுகளின் விளைவுகள் எல்லாம் இதற்கான மிக அழுத்தமான எடுத்துக்காட்டுகளே. நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும் நரகத்தின் பாதைகள் பெரும்பாலும் இப்படியான நல்லெண்ணங்களினால்தான் போடப்படுகின்றன என்பதையும் மறக்கக்கூடாது.

மேல்நிலையாக்கம் என்பதில் ஓர் அடிப்படை பலவீனம் ஒன்று இருக்கிறது. ஆண்களின் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவே அது இருக்கிறது. பெண்ணியவாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் உண்மையில் ஆண் மைய சிந்தனைகளால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்திய தேசியவாதி என்பவர் ஐரோப்பிய லட்சியங்களால் அடிமைப்படுத்தப்பட்டவராக இருப்பதுபோலவே அவர்கள் இருக்கிறார்கள். தொழில் புரட்சி உலகின் பிரதிநிதியைப்போல் நவீனக்காலப் பெண்களும் தொழில் உழைப்பையே ஓய்வைவிடப் பெரிதாக மதிக்கிறார். தனது வாழ்க்கையைப் புறவெளிக்குக் கொண்டுவருவதிலேயே குறியாக இருக்கிறார். ஆண்கள் செய்யும் தொழில்களில் வெற்றி பெறவேண்டும் என்று துடிக்கிறார். தனது பெண்மை குறித்தும் பாலினத் தன்மை குறித்தும் வெட்கப்படுபவராக இருக்கிறார்.

நவீனப் பெண் காரண காரியங்களைச் சிந்திக்கும் குணம் உடையவளாகத் தன்னைச் சொல்லிக் கொள்கிறார். ஆண்களைப் போலவே கல்வியறிவும் நிபுணத்துவமும் கொண்டவராகவே சொல்லிக் கொள்கிறார். அவளுடைய சிறந்த ஆண் நண்பர்கள் அவள் தரப்பாக இதே விஷயங்களையே முன்வைக்கிறார்கள். இப்படியாக நவீனப் பெண், தன் இயல்புக்கு மாறாக நடந்துகொள்ள விரும்புவதால் நிஜமான பெண்ணிய இலக்கைக் கொண்டவராக இருப்பதில்லை. அதுபோலவே வலிமையற்றவராகவும் ஆகிநிற்கிறார்.

இருக்கும் சொற்பத்தையும் ஆண்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதென்பது இந்திய அரசியல்வாதிகளின் நிலையைப் போன்றதுதான். ஆனால் ஆண்களால் செய்ய முடிந்தவற்றையெல்லாம் பெண்களாலும் செய்ய முடியும் என்பது (நமது பிராந்தியத்தின் அனைத்து வலிகளையும் நாங்களே தாங்குகிறோம் என்கிறார் ஆலிவ் ஸ்ரெனெர்) இந்தியர்களுக்கு ஜனநாயகத்தில் பயிற்சிகள் கொடுத்தால் தம்மைத் தாமே ஆட்சி செய்துகொள்ளத் தயாராவார்கள் என்று சொல்வதைப் போன்றது. சுய நம்பிக்கையின்மையின் தெளிவான வெளிப்பாடு. ஆணுக்கு அல்லது ஆங்கிலேய ஆணுக்குச் சமம் என்று பெண்கள் சொல்வதென்பதில் என்னே ஒரு பெருமிதம்! அந்த ஆண் அல்லது ஆங்கிலேய ஆண் அந்தக் கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும். என்னே ஒரு மேலாதிக்க மனோபாவம் பாருங்கள்!

தொழில் புரட்சி சமூகத்துக்கு முந்தைய மனிதனின் ஆன்மாவின் தெளிவான உள்ளுணர்வு / புரிதல் என்னவென்றால் ஆண் மற்றும் பெண்ணின் குண நலன்கள் ஒருபோதும் ஒப்பிட்டு அளக்க முடியாதவை என்பதுதான். இரு பாலினமும் வெவ்வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார் நோவாலிஸ். ஆண்களின் உணர்ச்சிமயம் என்பது அறிவார்ந்த வடிவில் இருக்கும். பெண்களின் அறிவார்ந்த அம்சம் என்பது உணர்ச்சிமயமாக இருக்கும். ஆண்களுக்கு இரண்டாம்பட்சமானதென்பது பெண்களுக்கு அதி முக்கியமானதாக இருக்கும். இரு பாலுமே அளவிடமுடியாததாகவே இருக்கின்றன. அவர்களை வகுப்பது (வரையறுப்பது) மிகவும் கடினம். அவர்களைக் குத்துமதிப்பாகத்தான் அளவிடமுடியும்.

இந்த இடத்தில் இந்துக்களின் பார்வை மிகவும் சரியானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா? ஆணும் பெண்ணும் ஒரேவிதமான மனநிலை, செயல்பாடுகள் கொண்டவர்களாக இருக்கத் தேவையில்லை. வாழ்வின் கோலங்கள் அளவு கடந்தவையாக இருப்பதென்பதுதான் பாலின வேறுபாடு அளவு கடந்ததாக இருக்கவேண்டும் என்று ஆக்கியிருக்கிறது.

தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் அல்லாமல் கவிஞர்கள், படைப்பூக்கம் கொண்ட மகத்தானவர்கள் எல்லாம் பெண்களிடம் எதிர்பார்ப்பது என்ன? வளம்; விபத்தாக எந்தவிதத் திட்டமிடலும் இல்லாததாக இருக்காமல், மகத்தானவர்களின் வழிகாட்டுதலில் முன்னேற வேண்டிய மனித இனத்துக்கு அது மிக மிக அவசியமானது. அவர்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது உயிர் வாழ்க்கையையே.

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது தொடர்பாக மகத்தான மனிதர்கள் அக்கறை காட்டியிருக்கவே இல்லை. தாந்தேக்கு உத்வேகம் ஊட்டியது பெட்ரைஸின் அறிவுத் திறமை அல்ல; சாந்திதாஸுக்கு உத்வேகம் ஊட்டியது சலவைப் பெண்ணின் அறிவு அல்ல. கூ சுலைன் தன் மனைவியாக எம்மரைத் தேர்வு செய்ததற்கான காரணங்களாக அவளுடைய அழகு, குரலினிமை, இனியவை பேசுதல், தையல் ஊசி கலைத்திறமை, ஞானம், பரோபகாரச் சிந்தை இவற்றையே சொல்கிறார். ‘அழிவற்ற ஆன்மாவைப் போன்று விசித்திரமானவள்’ என்றுதான் ஹெலனைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் சுடர் மிகும் ஒளியுடன் திகழ்ந்தவள். ராதையின் பேரொளி அவள் நின்ற நிலத்தையே பொன் போல் மின்னவைத்தது. பழங்கால ஆங்கிலக் கவி இதுபோல் ஒன்று பாடியிருக்கிறார்.

அவளுடைய அன்பு ஒளி மிகுந்தது
கை விளக்கு ஒன்று இருளைப் பிரகாசிக்கச் செய்வதுபோன்றது.

இலக்கியமானாலும் போர் சாகங்களென்றாலும் பெண்களில் மிளிரும் இந்த ஒளியே பிற குணங்களைவிட ஆண்களைச் சாகசங்கள் செய்யத் தூண்டுகிறது.

அனைவருக்கும் போரின் வீர தீரங்கள் நன்கு தெரியும். நெல்சனைப் பற்றி லேடி ஹேமில்டன் போற்றிப் புகழ்வது நமக்கு ஆச்சரியத்தை அளிப்பதே இல்லை. ஆனால் போர் என்பது அதி ஆதிச் செயல்பாடு. புத்தர் போன்று மிக உயர்ந்த தத்துவ நிலையில் இருப்பவர்கள் அதை வெளிப்படையாக வெறுக்கிறார்கள். ஆனால், நமக்கு ஒரு கலைஞன் மேற்கொள்ளும் போர் பற்றிப் புரிந்துகொள்ளமுடியவில்லை. உடலளவிலும் மனதளவிலும் ஒரு படைப்பூக்கச் செயல்பாடு ஏற்படுத்தும் மிக அதிகமான மிகக் கடுமையான தாக்கம் பற்றி நமக்குப் புரிவதில்லை. தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள உலகையும் வென்றெடுக்க ஒரு கலைஞன் இடைவிடாமல் போராடியாக வேண்டியிருக்கிறது. ஒருவித வன்முறை, அறியாமை, சில நேரங்களில் திட்டமிட்ட எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பை மீறியே அந்தக் கலை மேதைமையை அவரால் எட்ட முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, படைப்பூக்கச் சிந்தனைகளை எதிர்த்தபடி உயிர்களில் உறைந்திருக்கும் தாமஸ குணங்களையும் மீறியே ஒரு கலைஞர் தன் படைப்புகளை வெளிப்படுத்துகிறார்.

பெண்களின் தீவிர அன்பு என்பது அவர்கள் மேல் விசுவாசமாக இருப்பவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு மட்டுமல்ல; அவர்களுடைய சாகசங்களுக்கு மூலாதாரமான சக்தியைக் கொடுப்பதே அந்த அன்புதான். அந்த நேசம்/சக்தி இல்லாவிட்டால் அந்தச் சாதனையை ஆண்களால் செய்திருக்கவே முடியாது. அதி உன்னதமான ஆணாக இருக்கும் கடவுள் உறைந்த நிலையில்தான் இருக்கிறார். அவருக்குள் இருக்கும் சக்தி என்பது எப்போதுமே பெண் அம்சமே. அந்தச் சக்தியே தேவலோகத்தில் இருப்பவர்களை அரக்கர்களுக்கு எதிரான போரில் வழி நடத்தி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

தேவைகள் சார்ந்து செயல்படும் ஓர் ஆண் போரிலோ வேட்டையிலோ தன் வாழ்நாளைக் கழிக்கிறான். பெண்களுக்கு பெளதிக மற்றும் ஆன்மிகப் பாதுகாப்பு தேவைப்பட்டபோது ஆண்களுக்குப் பெண்கள் பெரிதாகச் சேவைகள் செய்துகொண்டிருக்க முடியவில்லை. ஆண்களை மதித்துப் போற்றுவது பெண்களின் இயல்பாக இருந்திருப்பதை நாட்டுப்புறப் பாடல்களிலும் காவியங்களிலும் பார்த்தோம். கணவனே கண் கண்ட தெய்வம்; அவருக்கு சேவை செய்வதே அவளின் தர்மம்; அவருக்கு உண்மையாக இருப்பதே அவளின் விரதம், தவம்; கணவரே அவளின் ஆன்மிக குரு என்று இன்னொரு இந்திய புனித நூல் சொல்கிறது. இதே புனித மரபானது ஒரு மகனுக்குத் தாய் கற்றுத் தரும் ஞானம் என்பது பிற அனைத்துக் கல்விகளையும் விட எட்டு மடங்கு செயல் ஊக்கம் மிகுந்தது என்றும் சொல்கிறது.

முடிவற்ற அமைதிக் கால வாழ்க்கையாக இருந்தாலும் மிக அற்புதமான வாழ்க்கைக்குப் பந்த பாசங்கள் மிகவும் அவசியம். போர்த்தொழில் பிரதானமாக இருந்த காலத்தில் ஒரு பெண்ணின் இதமான அரவணைப்பு எந்த அளவுக்குத் தேவையானதாக இருந்ததோ அது போலவே இன்றும் ஓர் ஆணுக்குப் பெண்ணின் இதமான அண்மை மிகவும் அவசியமே. இந்த அரவணைப்பு இல்லாவிட்டால் எவரொருவராலும் எந்தவொரு மகத்தான சாதனையையும் செய்ய முடியாது. அப்படி ஏதேனும் செய்திருந்தால் அது முழுமையான சாதனையாக இருக்காது. தான் விரும்பும் குணங்களை ஓர் ஆணிடம் உருவாக்கும் வலிமை பெண்களுக்கு உண்டு. ஒரு பெண்ணுக்கு நேரடியாகத் தரப்படும் சிறப்பான அம்சங்கள் மூலமான வலிமையைவிட இது மிக அதிக, எல்லையற்ற வலிமையை அவளுக்குத் தருவதாக இருக்கிறது.

நவீன தொழில்மயவாதியின் மீது நாம் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கவிரும்பவில்லை. அப்படி வார்ப்புக்குள் திணிப்பதால் எதையும் நம்மால் சாதிக்கவும் முடியாது. கீழைத்தேய மரபில் பெண்களின் நிலை என்பது இப்போது இறுகியதாக, உறைந்த படிவமாக ஆக்கப்பட்டுவிட்டிருக்கிறது. சுதந்தரமான செவ்வியல் கலை வடிவம் என்பது இன்று கற்றுக்கொண்டு செய்யப்படும் செயற்கை கலைவடிவமாக ஆகியிருப்பதுபோல் ஆகிவிட்டது. இருந்தும் முன்னொரு காலத்தில் பெண்களின் இயல்பான, உயிர்த்துடிப்பான வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. நமது நவீன லட்சியத் தனி நபர்வாதக் கோட்பாடுகளின் மூலம் என்றென்றைக்குமாக எல்லாவித அடையாளங்கள், வடிவங்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. திருமணம் செய்துகொள்வதோ திருமணம் செய்துகொள்ளப்படுவதோ எதுவும் இல்லாத நிலை சொர்க்கத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். அப்படியான நிலையில் ஒவ்வொரு உயிரும் தத்தமது உள்ளார்ந்த இயல்புக்கு ஏற்பவும் தன்னைத் தானே கண்டடையும் விதத்திலும் இயங்க ஆரம்பித்தால் மத்திய காலக் கலை இலக்கியங்கள் மற்றும் கீழைத்தேய மரபுகளில் வெளிப்பட்டிருக்கும் மரபான திட்டமிட்ட தெளிவான வழிமுறைகளிலேயே மனித இனம் நடக்க ஆரம்பிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்குமான இயல்பான உறவானது அதே விதிமுறைகளுக்கு உட்பட்டவிதமாகவே வெளிப்படும். இல்லையென்றால், நடப்பவை எப்படியாக இருந்தாலும் அவற்றை நாம் அவ்விதமாகவே ஏற்றுக்கொண்டாகவேண்டும்.

விடுதலை முழக்கங்களைத் தீவிரமாக அதிவேகமாக முன்வைப்பதற்கு முன்பாக அதாவது கீழைத்தேயப் பெண்களை சீர்திருத்தவும் தொழில்மயமாக்கவும் முயற்சிகள் எடுப்பதற்கு முன்பாகக் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் வேறு வழியில் செல்லும் இன்றைய காலகட்டத்தில் கீழைத் தேயப் பெண்கள் ஆசியாவுக்கு மட்டுமேயான மாபெரும் மரபைக் கட்டிக் காத்துவரவில்லை. அவளுமே புற அம்சங்களில் தனது சக்தியைச் செலவிடும்படிச் செய்யப்பட்டுவிட்டால் மரபான இலக்கியங்கள், கலைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் படியான பெண்கள் இந்த உலகில் வாழ்ந்திருந்தார்களா என்று சந்தேகிக்கும்படியான நிலை உருவாகிவிடும். பெண்கள் சுயநலமில்லாமலும் உனர்ச்சிவசப்பட்டும், நாணப்பட்டும் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் நினைவின் அடுக்குகளில் இருந்து மறந்தேபோய்விடும். டேய்ர்ட்ரே, ப்ரைன்ஹில்ட், அலெஸ்டிஸ், சீதா தேவி, ராதா இவர்களும் இவர்களின் வாழ்க்கையும் வெறும் பெயர்கள் மாத்திரமே என்று ஆகிவிடும். அது மனித குலத்தின் மிகப் பெரிய இழப்பாக இருக்கும். ‘போதுமான பெண்ணிய லட்சியங்கள் நம் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் இருந்திருக்கவில்லை’ என்று இந்த இழப்பை நவீன மேற்கத்திய சிந்தனைப் போக்குகள் சிலவற்றில் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நடந்திருக்கும் தொழில் புரட்சி என்பது புற அம்சங்கள் சார்ந்தது. மிகச் சமீபகாலத்தில் நடந்தேறியிருப்பது. இங்கு கட்டிளம் காளைகளுக்குப் பஞ்சமில்லை. எனினும் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் புனிதக் கடமை இன்றும் பெற்றோர் வசமே இருக்கிறது. எது ஆன்மிகம் எது புலன் இன்பம் சார்ந்தது என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. நவ நாகரிக மோகத்தில் இந்தியப் பெண்கள் தமது உடலைச் சிதைத்துக் கொள்வதில்லை (வாட்டிக்கொள்வதில்லை). அவர்கள் உரிமைகளைவிட இன்றும் கடமைகளையே பெரிதாகக் கருதுகிறார்கள். விதவையாவது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானதோ அதுபோலவே குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருப்பதையும் பெரும் துயரத்துக்குரியதாகவே கருதுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்தியாவின் பெண்கள் எல்லாம் வெறும் ஆண்களின் மதிப்பீடுகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் எடைபோடவோ ஏற்றுக்கொள்ளவோபடவில்லை. அப்படியானால் மேற்கத்திய உலகம், கீழைத்தேயப் பெண்களுக்குச் சிற்சில வெளிப்புற அம்சங்களில் அல்லாமல் வேறு என்ன ஆக்கப்பூர்வமான உதவியைச் செய்துவிடமுடியும்? லெளகிக வாழ்க்கை குறித்து அது பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தரக்கூடும். எனினும் அது தான் கற்றுக் கொண்ட பல தவறான பாடங்களை மறந்தாகவேண்டியிருக்கிறது. அந்தவகையில் நாம் இன்னும் மறக்காமல் வைத்திருக்கும் பல விஷயங்களை அவற்றை மறக்கத் தேவையான காலம் வருவதற்கு முன்பாகக் கைவிட்டுவிடக்கூடாது. அவற்றை இறுகப்பற்றிக் கொண்டிருந்தாகவேண்டும். அவை கீழைத்தேயப் பெண்களுடையவை மட்டுமல்ல. பெண் இனத்தின் இயல்பான வெளிப்பாடுகள் அவை.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *