‘சஹஜ… சஹஜ… என எல்லாரும் சஹஜம் பற்றிப் பேசுகிறார்கள்.
ஆனால் அதன் அர்த்தம் யாருக்குத்தான் தெரியும்?’
– சாந்தி தாஸ்
ஆன்மா, ஜீவாத்மா, ஜடப்பொருள் அனைத்துமே ஒரே பரம்பொருளின் பல்வேறு வெளிப்பாடுகளே என்ற புரிதலே அனைத்திலும் உயர்ந்த, இறுதி ஞானம். சிறைபோன்ற இந்தப் பிரபஞ்சத்தில் இருந்து விடுபட்டு விடுதலையை நோக்கிய பயணம்; சொர்க்கமும் நகரமும் ஒன்றாகும் நிலை. நித்தியத்துவத்தில் ஐக்கியமாகும் தருணம். அங்குப் புனிதமோ மலினமோ ஆன்மிக இன்பமோ புலன் உணர்ச்சிகளோ எதுவும் கிடையாது. அங்கு இருக்கும் அனைத்துமே அதி தூய்மையானது. தளைகள் அற்றது. இந்தப் பிறப்பும் இறப்பும் நிறைந்த உலகம் ஒரு மாயச் சுழல்.
உடல் சார்ந்த காதலினுள் ஆழமான ஆன்மிக மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை நம் இந்தியாவில் வலுவாக நிலவுகிறது. வரையறைக்குட்பட்ட ஒன்று, முடிவிலியுடன் கலக்கும் ‘புதிரான இணைப்பு’க்கு பூவுலகக் காதலர்கள் பரஸ்பர அணைப்பில் ஈருடல் ஓருயிராகக் கலப்பதைவிட வேறு எதை மிகச் சிறந்த உவமையாகச் சொல்லமுடியும்? உடல் நீதியான நெருக்கம், ஸ்பரிசம், ஒன்று கலத்தல் இவையெல்லாம் காதலின் அம்சங்கள். காதல் என்பது சுயம்களை அங்கீகரிப்பதுவுமே. இருவருடைய உடலும் ஒன்றாகிவிடும். ஏனென்றால் ஆன்மாக்களின் கலப்பும் அங்கு நிகழ்கிறது. இரு தனி நபர்களின் பரஸ்பர அன்பு மற்றும் புரிதலையும் தாண்டிய ஒன்றிணைப்பு.
சொர்க்கத்தினுள் நுழைந்துவிட்டவருக்குச் சொர்க்கத்தின் கதவு எவ்வளவு முக்கியத்துவமற்றதாக ஆகியிருக்குமோ அதுபோல் காதலில் ஈடுபடும் இந்த இரு நபரின் ஆன்மாக்கள் கலக்கையில் ஒருவர் மற்றவருக்கு முக்கியத்துவம் அற்றவராகியிருப்பார். ஓர் அல்ஜீப்ரா கணக்கில் சமன்பாடே உண்மை. அதற்கான வழிமுறைகள், கருதுகோள்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பது போன்றது. எவரொருவருடைய ஈகோ – ஆளுமையாவது முழித்துக்கொண்டால் த்வைதம் என்ற இரண்டும் வேறு என்ற மயக்க நிலைக்குத் திரும்புவதாக ஆகிவிடும்.
ஆத்மார்த்தமான காதலை அறிவுகொண்டு புரிந்துகொள்ளமுடியாது. நேசிக்கப்படுபவர், உலகியல் பார்வையில் முக்கியத்துவமற்றவராக இருக்கலாம். இதன் பின்விளைவுகள் சமூகரீதியில் ஏன் தார்மிகரீதியில் கூட விபரீதமானதாக அழிவைத் தருவதாகக்கூட இருக்கலாம். எனினும் நேசிப்பவரின் கண்கள் நேசிக்கப்படுபவரில் இருக்கும் தெய்விகத்தையும் எல்லையற்ற அம்சத்தையும் கண்டுகொள்கிறது. இன்னொருவரால் ஒருவர் இப்படி ஆத்மார்த்தமாக நேசிக்கப்படுவதில் பெருமிதம் கொள்ள எதுவும் இல்லை. ஏனென்றால் இதே முழுமையும் முடிவற்ற தன்மையும் பூவுலகில் இருக்கும் ஒவ்வொரு மணல் துகளிலும் இருக்கிறது. பரந்து விரிந்த கடலில் இருப்பதுவே ஒற்றை மழைத்துளியில் இருப்பதுபோல் பரம்பொருளே எங்கும் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது.
இப்படியான பந்தத்தை முன்னெடுத்துச் சென்று இலக்கை (முக்தியை) அடையவேண்டும். அது உண்மையான முன்னேற்றமாக இருக்கவேண்டும். வெறும் மேலோட்டமானதாக இருக்கக்கூடாது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும் ஒரே ஆன்மப் பக்குவம் கொண்டவர்களாகவும் ஒரே ஒழுக்க அலைவரிசையிலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் சாந்திதாஸ் சொல்வதுபோல் ஒரு பெண் தகுதியற்ற ஓர் ஆணை நேசிப்பவராக முடங்கிவிடுவார். முட்களால் கிழிக்கப்பட்ட மலர் போலாகி, இதயம் நொறுங்கி உடைந்து போவார். ஆன்ம நிலையில் தாழ்வாக இருக்கும் ஒருவரை நேசிக்கும் ஓர் இளைஞன் நிம்மதியின்மையின் சுழலுக்குள் சிக்கி வாழ்க்கையைத் தொலைப்பார்.
மனிதக் காதலின் பல்வேறு நிலைகள் எல்லாம் ஆன்மிகப் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைப் பிரதிபலிப்பவையே. நாயக நாயகியரின் காதலானது எளிதில் புரிந்துகொள்ளமுடியாத உயரிய, புதிரான உணர்வுநிலையை வெளிப்படுத்துகிறது. ராதா – கிருஷ்ண பிரேமமானது இதற்கான மிகச் சிறந்த உதாரணம். மத்திய கால ஹிந்து தர்மத்தின் பிரதானக் கருப்பொருள் அதுதான். இந்த இடத்தில் மனித உடல் சார்ந்த காதலானது முக்திக்கான வழியாகப் பரிணமித்துவிடுகிறது.
நம் தேசத்தில் ஒழுக்க விதிகள் மிகவும் கறாரானவை. இப்படியான பிரேமம் உலகியல் அம்சங்கள் அனைத்தையும் ஏன் வாழ்க்கையையே இறைக் காதலில் சரணாகதி அடையச் செய்துவிடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர், கோபிகைகளிடம் சொல்கிறார்: நீங்கள் வைராகிகளாக அனைத்தையும் துறந்தவர்களாக என்னை வந்தடைந்திருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு நான் பட்டிருக்கும் கடனைத் தீர்க்கவே முடியாது என்று சொல்கிறார். கோபிகைகளின் அன்றாடக் கடமைகளோ அவர்களுடைய சொத்து சுகங்களோ ஸ்ரீ கிருஷ்ணரைத் தமது நாயகனாக வரிந்துகொள்வதில் இருந்து அவர்களைத் தடுக்கவே இல்லை. அந்தப் பெருங்காதலன் அனைவரையும் தன் வசியத்தால் மயக்கிவிடுகிறார்.
இவையெல்லாம் யதார்த்த நிகழ்வுகளை மாயையின் கண்ணாடியில் தெரியும் நிகழ்வுகளாகக் குறியீட்டு மொழியில் குறிப்பிடுகின்றன. இங்குச் சொல்லப்படும் யதார்த்தம் என்பது ஆழ் மன உலகில் நடக்கக்கூடியது. அங்கு ஸ்ரீ கிருஷ்ணரே கடவுள் (பரமாத்மா); கோபிகைகள் எல்லாம் ஜீவாத்மாக்கள். பிருந்தாவனம் என்பது பிரக்னையின் ஒரு களம் / நிலை. கோபிகைகளுக்கும், யது குலத் திலகனுக்கும் இடையிலான பிரேம பந்தத்தை மனித உடல் சார்ந்த உணர்வுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளக்கூடாது. புராண இலக்கியங்களில் இப்படியான பிழையான புரிதல்களுக்கு எதிராக மிகத் தெளிவாகப் பல எச்சரிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் புனிதமான, புதிரான பந்தமானது எந்தவொரு விளக்கமும் தேவைப்படாமலேயே நமக்கு நன்கு புரிந்ததுதான். அதேநேரம் ‘சஹஜ’ என்ற ஒரு மரபும் இருக்கிறது. இதில் ஒரு நடைமுறை சார்ந்த விதிமுறை இருக்கிறது. இது தொடர்பாக நாம் இங்குப் பேசவிருப்பது புரிந்துகொள்ள மிகவும் கடினமானது. ஏனெனில் இது தொடர்பான விளக்கவுரைகள் அதிகம் நம்மிடம் இல்லை
இந்த சஹஜ சடங்கில் அழகிய கன்னிப் பெண்களை அம்மன் போல் வரித்து, அலங்கரித்து வழிபடுவார்கள். ஆன்மிகப் பரிணாம வளர்ச்சி மற்றும் மோட்ச நிலையை அடையும் நோக்கில் இது மேற்கொள்ளப்படும். இந்த கன்யா பூஜை வெறும் வழிபாட்டுச் சடங்கு அல்ல. அது பிரேமத்தின் வெளிப்பாடும் கூட.
தாந்த்ரிக பெளத்த மரபில் இது ஆரம்பித்ததாகத் தெரிகிறது. காணு பட்டர் பத்தாம் நூற்றாண்டில் வங்காள மொழியில் சஹஜ பாவம் – பிரேமம் பற்றிப் பாடல்கள் புனைந்திருக்கிறார். சஹஜ என்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பிறப்பிலேயே உருவான பந்தம். திட்டமிடல் இன்றி இயல்பாக உருவானது என்று இதை வரையறுக்கலாம். இந்த மரபு பற்றி 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாந்திதாஸ் மிக அற்புதமாகப் பாடல்கள் புனைந்திருக்கிறார். வேறு பல செய்யுள் மரபினரும் இதே உணர்வு நிலை, சடங்குகள் பற்றிப் பாடியிருக்கிறார்கள்.
சாந்திதாஸைப் பித்தனாகவே வங்காளிகள் குறிப்பிடுவதுண்டு. விசித்திரமான குண நலன்கள், சிந்தனைகள் கொண்டவர். இருந்தும் அனைவருடைய பிரியத்துக்குரியவராகவும் இருந்திருக்கிறார். அவர் ஒரு பிராமணர். போல்பூருக்கு அருகில் இருக்கும் வாசூலி தேவி கோவிலில் அர்ச்சகராக இருந்தார். ஒரு நாள் ஆற்றின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தபோது சில பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அங்கு ரமி என்ற இளம் பெண்ணும் இருந்தாள். யதேச்சையாக அவள் இவரைக் கண்ணோடு கண் பார்த்திருக்கிறாள். அந்தத் தருணம் அவர் வாழ்வில் மகத்தான ஞானம் கிடைத்த தருணமாகியிருக்கிறது. அன்றிருந்து அவர் மனம் பிரேம பாவத்தால் நிரம்பி வழியத் தொடங்கியது. ரமி மிகவும் அழகாக இருந்தாள். அவள் வண்ணார் குலத்தைச் சேர்ந்தவள். சாந்திதாஸோ பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர். அவளுக்கு அவருடைய பாத தூளியை மட்டுமே ஸ்பரிசிக்க முடியும். சாந்திதாஸ் பிரேம பாவ (Prema Bhavam) உணர்வில் திளைத்து வெளிப்படையாகத் தன் அன்பைப் பாடலாகப் பாட ஆரம்பித்தார். அன்றாடப் பூஜை கர்மாக்களைக் கைவிட்டார். ரமியின் நினைவு வரும்போதெல்லாம் சாந்திதாஸ் கனவிலும் மயக்கத்திலும் ஆழ்ந்தார்.
சாந்திதாஸ் இயற்றிய பாடல்கள் பக்தி பரவசம் மிகுந்தவை.
ஓ ஸகி… உன் காலடியில் சரணடைகிறேன்
உன்னைக் காணாத தருணங்களில்
என் மனம் அலைபாய்கிறது
நிராதரவான குழந்தைக்குத் தாயும் தந்தையும் எப்படியோ
நீ எனக்கு அப்படியே இருக்கிறாய்
என் தேவி நீயே
என் கழுத்தில் அணியப்படும் மலர் மாலை நீயே
என் பிரபஞ்சம் நீயே
நீ இல்லாதபோது இருளில் மூழ்குகிறது என் உலகம்
என் பிரார்த்தனைகளின் முழுப் பொருள் நீயே
உன் கருணையை
உன் வசீகரப் பேரழகை
என்னால் மறக்கவே இயலாது
இருந்தும் என் மனதில் எந்தவொரு இச்சையும் இல்லை.
மரபான சடங்கு சம்பிரதாயங்களை மீறி நடந்துகொண்டதற்காக சாந்தி தாஸை, சமூக விலக்கம் செய்தார்கள். அவருடைய சகோதரரின் பெரு முயற்சிகளினால் அவரை மன்னிக்கத் தயாரானார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை விதித்தனர்: ரமி மீதான பிரேமத்தை சாந்திதாஸ் முற்றாகக் கைவிடவேண்டும் என்று சொன்னார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ரமி, நேராக அவர் முன்னால் சென்று நின்றாள். அதற்கு முன்புவரை அவரை நேருக்கு நேர் அவள் இவ்வளவு வெளிப்படையாக அருகில் சென்று பார்த்திருக்கவில்லை. அவளைப் பார்த்த மாத்திரத்தில் சாந்திதாஸ், தான் செய்துகொடுத்த சத்தியத்தை அப்படியே மறந்துவிட்டார். கருவறையில் இருக்கும் தெய்வத் திருமேனியைத் தொழுவதுபோல் கரங்களைக் கூப்பித் தொழுதபடி அவள் முன்னால் பணிந்து நின்றார்.
அப்போது அங்கு இருந்த சில பிராமணர்களுக்கு ரமி உருவில் வந்திருப்பது யார் என்பது தெரியவந்தது. பிரபஞ்சத்தின் தாயான சாட்சாத் அந்த பராசக்தியே ரமியின் உருவில் வந்திருக்கிறாள் என்பதை சாந்திதாஸ் போலவே அவர்களும் தரிசித்தனர். அவர்கள் மனதில் இருந்த மாச்சர்யங்கள் எல்லாம் சலவை செய்யப்பட்டுவிட்டன. அந்த ஆதி அன்னையை அவர்களும் பார்த்தனர். ஆனால் அங்கிருந்த வேறு பலருக்கோ அவள் வெறும் வண்ணார் குலப் பெண்ணாக மட்டுமே தெரிந்தாள். எனவே சாந்திதாஸை ஊரில் இருந்து விலக்கி வைத்தனர்.
சஹஜ என்றால் என்ன என்பதை சாந்திதாஸ் தனது கவிதைகளில் விவரித்திருக்கிறார். காதலர்கள் தமக்குள் எதையும் மறைக்கவோ மறுக்கவோ கூடாது. அதேநேரம் எந்த நிலையிலும் ஆன்மிக வீழ்ச்சியும் அடையக்கூடாது. உள்முகமாக ஒரு பெண், பிரேமத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். புறத் தோற்றத்தில் எந்தச் சலனமும் இன்றி இருக்கவேண்டும். ஆழ் மன, ரகசிய பிரேமமானது ரகசியமாகவே வெளிப்படவேண்டும். ஆனால், அவள் ஆசைக்கு அடிமையாகக்கூடாது. பிறர் வெறுத்து ஒதுக்கும் பிரேமக் கடலில் அவள் நீந்தித் திளைக்கலாம். ஆனால், தடைசெய்யப்பட்ட நீரை அவள் ஒருபோதும் பருகக்கூடாது. புலன் இன்பமோ வலியோ எதனாலும் அவள் பீடிக்கப்படக்கூடாது.
ஆண்கள் ஆத்மார்த்தமாகப் பிரேமிக்கவேண்டும். பாம்பின் வாயில் பிடிக்கப்பட்டபின்னும் தவளையின் நடனத்தை ஆடவேண்டும்; சிலந்தி வலைக்கூட்டில் யானையைச் சிறைப்பிடிக்கவேண்டும். அதாவது மிக மிக அபாயகரமான சாகசங்களைச் செய்பவராக இருக்கும் நிலையிலும் தன்னிலை தவறாமல் இருக்கவேண்டும். அப்படி அனைத்தையும் கடந்த நிலையை எட்டும்போதுதான் பிரேமம் வழியான முக்தி சாத்தியமாகும்.
கேள் மானிடா
பெண்ணின் பிரேமம் மூலமாக முக்தி அடையும் வழியைச் சொல்கிறேன்
காய்ந்த சுள்ளியாக உன் உடம்பை ஆக்கிக் கொள்
யாராலும் பார்க்க முடியாதபடி
இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் பரம்பொருளைபிரேமத்தின் மறை ஞானத்தைத் தெரிந்துகொள்பவனாலேயே
கண்டுணரமுடியும்.
கோடியில் ஒருவர்தான் இதைச் சாதிக்க முடியும் என்றும் அவர் சொல்லியிருந்தால்கூட அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
உடல் காதல் என்பதும் இதைப் போன்றதுதான். 13-ம் நூற்றாண்டு ஐரோப்பிய கலாச்சாரத்தில், இலக்கியங்களில் இவை பற்றி ஏராளமான படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. ‘காதலைப் பற்றிச் சொல்வதென்றால், அந்த மலையின் அதி உயர்ந்த சிகரத்தில் கோடியில் ஒருவனாலேயே ஏறி நிற்கமுடியும்’ என்று நவீன கால ரஷ்யப் படைப்பாளி அலெக்சாண்டர் குப்ரின் குறிப்பிட்டிருக்கிறார்.
சஹஜ வழிபாட்டு மரபைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் முதலில் நாம் மோக்ஷம் என்று சொல்லப்படும் ஆன்ம விடுதலைபற்றி முதலில் புரிந்துகொண்டாகவேண்டும். உயிர்களின் முதலும் முடிவுமான இலக்கு அதுவே. வாழ்வின் ஒரே பொருளும் அதி உன்னத சத்தியமும் அதுவே; பிரபஞ்ச இயற்கையின் பரிபூரணத்துவம் அதிலேயே இருக்கிறது. சுய சிந்தனைகள், பெருமிதங்கள் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாவது. இருத்தல் கடந்த நிலை. நமக்குள் நம்முடையதாக எதுவுமே இல்லை என்ற உணர்வு நிலை. ஆசைகளே அற்ற நிலை. ஏனென்றால் ஆசைகள் இருந்தால் அது போதாமையைக் கொண்டுவரும். எனவே ஜீவன் முக்தராக விரும்புபவர் அல்லது ஆன்ம விடுதலை அடைய விரும்புபவர் செய்யும் செயல்கள் எல்லாம் எந்தவொரு எதிர்பார்ப்போ நோக்கமோ இன்றி பிரபஞ்ச இயக்கமாக வெளிப்படவேண்டும்.
ஜீவன் முக்தர் செய்யும் எதுவும் புகழவோ இகழவோ தகுந்ததாக இருக்காது. அவர் மனதில் உயர்வு, தாழ்வு என்ற எண்ணம் எதுவும் இருக்காது. நல்லது, கெட்டது ஆகியவற்றைச் செய்வது தான்தான் என்ற பிரக்ஞை கொண்டவரால் சத்தியத்தை உணரமுடியாது. ஆன்ம விடுதலை அடைந்தவர் செய்யும் எதுவும் சுய நலமானதாக / சுயம் சார்ந்ததாக இருக்காது. ஏனென்றால் அவருக்கு சுயம் என்ற போதமே இருக்காது. அவர் செய்பவை எல்லாவற்றிலும் அவர் முழுமையாக ஆன்ம வெளிப்பாடாகச் செய்வார். செயல்கள் மீது எந்தவிதப் பற்றும் இல்லாமல் செய்வார்.
பற்றற்றுச் செயல்படும்போதே ஒருவர் பந்த பாசத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார். விடுதலையடைந்த மனிதரே தன் மனம் விரும்புவதையெல்லாம் செய்யமுடியும். அதற்கு முதலில் அவர் மனதைப் போல் தளைகளற்ற நிலையை அடையவேண்டும் என்கிறார் நீட்சே. இதையே ரூமியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அதற்கு முதலில் ஒருவர் தன் மனதைச் சரணடையச் செய்யவேண்டும்.
இது ஒருவர் விரும்புவதையெல்லாம் செய்வதையோ செய்யாமல் இருப்பதையோ குறிப்பிடவில்லை. ஏனென்றால் இத்தகைய விடுதலை அடைந்தவருக்கு ஆசைகளோ சுயம் சார்ந்த சிந்தனைகளோ எதுவுமே இருக்காது. அவற்றிலிருந்தும் விடுதலையடைந்திருப்பார்கள். ஞானத்தின் வாசல்கள் சலவை செய்யப்பட்டு விட்டால் நாம் விட்டு விடுதலையாகிவிட்டோம் என்பது புரிந்துவிடும். அவனருள் இருந்தால்தான் அவன் தாள் பற்றவே முடியும். காணப்படாமலும் கேட்கப்படாமலும் இருக்கவேண்டும் என்று இறைவன் முடிவு செய்திருப்பதுதான் நம்மால் அவரைக் காணவும் கேட்கவும் முடியாமல் இருக்கிறது.
இந்த உலகம் பரம்பொருளின் உருவாக்கம் மட்டுமல்ல; அதுவே அனைத்திலும் வியாபித்தும் இருக்கிறது. தூய பிரேமம் தனக்கென எதையும் வேண்டி நிற்பதில்லை. அதற்கு எதுவும் தேவைப்படுவதும் இல்லை. எதையும் வழங்குவதும் இல்லை. சேர்க்கவோ எடுக்கவோ தேவையற்று முழுமையடைந்த சக்தியை உணர்வதே தூய பிரேமம். அந்த அதி உன்னத பிரேமத் தருணம் அல்லாமல் வேறு எந்த நேரத்திலும் நம்மால் இந்த முழுமையை உணரவேமுடியாது.
பெண்ணைப் பிரேமிப்பதன் மூலம் மட்டுமே இந்த விட்டு விடுதலையாகும் நிலையை அடைய முடியும் என்று நிச்சயம் சொல்லமுடியாது. உண்மையில் இது மிக மிக அபாயகரமான ஒரு வழி. பலருக்குச் சாத்தியமே இல்லாத வழி. நான் இந்த வழியை விமர்சிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. என் அளவில் விளக்கிச் சொல்லிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.
(தொடரும்)
___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின் தமிழாக்கம்.