Skip to content
Home » சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

சஹஜ

காதல் பற்றிப் பேசும்போது சொல்லப்படாததைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போம். படைப்பாளிகள் உண்மையில் எதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்? சாந்திதாஸ் – ரமி காதல் தொடர்பாக அதாவது ஓர் ஆணுக்கும் பணிப்பெண்ணுக்கும் இடையிலான உடல் சார் காதல் எப்படிப்பட்டதாக இருந்தது? இது பற்றி நமக்கு முழுவதும் தெரிந்திருந்தாலுமே அது நமக்கு எதையும் பெரிதாக உணர்த்துவதாக இருக்காது. ஒரு பெண்ணை காம எண்ணங்களால் பார்த்துவிட்டால் (மனைவியாக இருந்தாலும்) அவர் மனதளவில் சோரம் போய்விட்டார் என்றே அர்த்தம். காம இச்சை என்பதே ஒருவகையான சிற்றின்ப ஒழுக்ககீனமே. இதன் மறுதலையாக ஒரு பெண்ணைக் காம இச்சையின்றித் தழுவுபவர் தன் ஒழுக்கத்தில் இருந்து துளியும் வழுவாதவரே. அங்குச் செயல் என்பதும் செயலற்ற நிலையே. ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதன் மூலம் அல்ல; அச் செயலில் மனம் லயிக்காமல் பற்றற்று நிற்பதன் மூலமே ஆன்மிக வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம். எனவே இந்த சஹஜ மரபில் ஆசைகளை அடக்குபவர் தோற்றுப் போகிறார்.

நடக்காமல் இருப்பது எளிதுதான்; பூமியில் கால் படாமல் நடக்கவேண்டும். அதுவே ஆன்மிகச் சாதனை. பூமியின், உயிர் வாழ்க்கையின் அழகுகள் எல்லாம் நம் பிறப்புரிமையே. அவற்றில் மனம் ஈடுபட்டால் அற்ப மானிடரைப்போல் அந்தப் புலன் இன்பங்களில் மூழ்கிவிடுவோம் என்று பயந்து அவற்றை மறுதலிப்பது, அவற்றைச் செய்யாமல் இருப்பது என்பது அவற்றைச் செய்வது போன்றதுதான். நாம் எந்தக் காம இச்சைகளில் இருந்து விலக முயற்சி செய்கிறோமோ அதனுடனேயே நம்மைப் பிணைப்பதாக ஆகும். உடல், மனம், ஆன்மா என ஒரு மனிதரின் அகம், புறம் எல்லாமே ஒருமுகப்பட்டு நிற்பதுதான் விட்டு விடுதலையாகி நிற்பவர்களின் செயல்களின் ஆதார அம்சமாக இருக்கும்.

அப்படியான நிலையில் அவர்களின் செயல் என்பவை எதையும் பற்றிக்கொண்டிருப்பதில்லை. எதிர்பார்ப்பும் இல்லாமையும் உணர்வு அடிமைகளை உந்திச் செயலாற்ற வைப்பதுபோல் ஆன்மிக அளவில் சுதந்தரமானவர்களை உந்துவது பேரானந்தப் பெருநிலையாக இருக்கும். தேடல் குணம் கொண்டவர்களே சக்கையை விடுத்து சாறில் நிலைத்து நிற்கமுடியும். ஆன்மிக உச்சம் பெற்றவர்களின் செயல்பற்றி மதிப்பிட, அழியும் மானிடரால் முடியாது.

இந்திய கலாச்சாரம் ஆன்மிகமயமானது என்று சொல்லும்போது நாம் அது உணர்ச்சிகள் அற்றது என்று சொல்லவரவில்லை. உண்மையில் மனிதர்களால் உணரமுடிந்த உணர்ச்சிநிலைகளையெல்லாம் விட உணர்ச்சிப்பூர்வமானது. அது எந்த அளவுக்கு உணர்ச்சிமயமானது என்றால் அதனால் மட்டுமே, காதல் துணையின் இதயத்தின் 360 முழுமையான நுட்பமான உணர்வுகள் பற்றி விவரிக்கமுடியும்; காதலனின் மென்மையான பற்கள் துணையின் தளிர் உடலில் பதிந்து உருவாக்கும் மென் தடங்கள் பற்றி நிறுத்தி நிதானமாக விவரிக்கமுடியும். சந்தன மலர்கள் கொண்டு மென்முலைகளை அலங்கரிக்கமுடியும். அதி காம நிலைகளில் பேரின்பத்தைக் கண்டடைய முடியும். இவையெல்லாம் சுய கட்டுப்பாட்டுக்குள் இருந்தபடி வெறுமனே உடல் சார்ந்து உணர்ச்சிவசப்படுபவர்களாலும் அதி சாகச விரும்பிகளாலும் இந்த ஆன்மக் கிளர்ச்சி அனுபவங்களை உணர்ந்துகொள்ளவே முடியாது. அப்படிப் புரிந்துகொள்ளவே முடியாத, உடலின்பம் தாண்டிய விஷயங்களைப் பேசக்கூடிய உயரத்தை இந்திய மனநிலை எட்டியிருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் மேற்கத்திய இளம் பெண்ணின் ‘அறியாப் பருவ வெகுளித்தனம்’ மற்றும் முதலிரவு தொடர்பான மூர்க்கமான காமக் களியாட்டம் மற்றும் திருமண விழா மது பானக் கொண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் உடல் இன்பத்தைப் புரிந்துகொள்ளும் கலாச்சாரச் செழுமை அவசியம். சஹஜ எதைக் குறிக்கிறது என்ற புரிதல் கிடைக்கவேன்றுமென்றால் தனிப்பட்ட அல்லது காதல் / காமம் சார்ந்த மாறுபட்ட இன மரபு சார்ந்த புரிதல் மிகவும் அவசியம். ஓட்டத்துக்கும் நடனத்துக்கும் இசைக்கும் சுகாதாரத்துக்கும் தொடர்புடைய ஒரு கல்வி அவசியம்.

உடலின்பம் என்பது அதனளவில் அரிதான ஒன்றாகவோ போதையேறும் அளவுக்குப் பரவசமூட்டுவதாகவோ இருக்கக்கூடாது. ஒரு வனம், மலர், மலை போன்றவை ரசிப்பதுபோல் பெண்ணையும் ரசிக்கவேண்டும். பொறுமையுடன் அணுகுபவர்களுக்கு அவை தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதுபோல் அந்த அனுபவம் நிகழவேண்டும். உடல் சார்ந்த நெருக்குதலின் அடிப்படையில் மட்டுமே காமத்தில் ஈடுபடக்கூடாது. உச்சியை எட்ட ஒரு சில நிமிடங்களே போதுமானது. ஆனால் முன் தயாரிப்புகளுக்குப் பல மணி நேரங்கள் தேவை.

துணைவரிடமிருந்து எதிர்பார்ப்பது வெறும் இன்பத்தை அல்ல; முழுமையான எதிர்வினையை; ஒப்புக்கொடுத்தலை. தியாகம், சகிப்புத்தன்மை போன்றவற்றை இங்கு நான் சொல்லவில்லை. துணைவரை முழுமையாக மகிழ்விக்கக்கூடியது எதுவோ அதைச் சொல்கிறேன். இப்படியான நிபந்தனைகளின் அடிப்படையில் பார்த்தால் அதில் ஆவேசத்துக்கும் ஆதிக்கத்துக்கும் இடமில்லை. பர்ட்டன் சொல்கிறார்: முஸல்மான்கள் தங்கள் அடிமைகளையும் நேசித்தனர்; பெண்களைப் போலவே அடிமைகளையும் தன் விருப்பத்துக்கு இணங்கச் செய்வதென்பது அவர்களின் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் (இந்தியாவில் அடிமை முறையே கிடையாது. அல்லது மிக மிகச் சொற்பமாகவே இருந்தது).

நவீன ஐரோப்பிய இலக்கியங்களில் காதல் என்ற உணர்வு பெருமளவுக்கு நிறைந்து இருப்பதாக லேஃப்கேடியோ ஹேர்ன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்துஸ்தானில் வைஷ்ணவ மரபில் இருக்கும் காதல் ரசத்துக்கு இணையாக இதைச் சொல்லவே முடியாது. ஐரோப்பிய காதல் காவியங்களில் விவரணைக்கு மேலாக எதுவும் இருக்காது. மேற்கத்திய உலகின் பாலியல் சுதந்தரம் என்பது மிகவும் லட்சியவாத சிந்தனைகள் கொண்டது. காதலின் ஆன்மிக முக்கியத்துவமானது புரிந்துகொள்ளப்படாதவரையில் அது உடலியல் சார்ந்ததாகவேதான் வளர்ந்துவரவேண்டிய நிலையிலும் இருந்தது.

நவீன ஹெடோனிஸ (புலனின்பவியல்) அடிப்படையில் பார்த்தால் சஹஜ மரபைப் புரிந்துகொள்வதற்கான கூறுகள் எதுவுமே அதில் இல்லை. இதில் எந்தப் புலனின்பமும் இறுதி இலக்காகக் கொள்ளப்படவில்லை. வேறொன்றை அடைவதற்கான வழிமுறையாகவே சொல்லப்படுகிறது. புலனின்பக் கோட்பாட்டுக்கும் சஹஜ வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது தாவோ தத்துவம் சார்ந்தது. ஆசையற்ற நிலையை அடிப்படையாகக் கொண்டது. நமக்கான நன்மைகள் எல்லாம் நம்மைத் தேடி வருகின்றன. நான் அவற்றைத் தன்முனைப்புடன் கைக்கொள்ள முயலும்போது அவை கை நழுவிப் போகின்றன.

பற்றுகளற்ற சஹஜ மரபில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு இடம் உண்டா?

இல்லை என்றே நான் நினைக்கிறேன். முந்தைய காலத்தில் உலகியல் இச்சைகளைத் துறந்து கானகங்களில் ஆஸ்ரமங்களில் வாழ்ந்த முனிவர்களை மையலுற்றுத் தேடிச் சென்ற பெண்கள் தமது விருப்பத்தின் பேரில் குழந்தைப் பாக்கியத்தை வேண்டிக் கொண்டபோது அதை நிறைவேற்றித் தருவது சரி என்றே கருதப்பட்டது. ஆனால், அது முற்றிலும் வேறுவகையானது. துறவு நிலையைப் பின்பற்றுவதால் உன்னத மனிதர்கள் வாரிசுகள் அற்றுப் போவதைத் தடுக்கும்வகையில் முன்வைக்கப்பட்ட புத்திசாலித்தனமான மண உறவு முறை. சஹஜ மரபு இதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அதன் சடங்கு சம்பிரதாயங்களே இலக்கு என்கிறது. சமூக, திருமண விதிமுறைகளோடு அதை ஒப்பிடமுடியாது.

சஹஜ மரபிலான காதலை வெளிப்படுத்த முன்வருபவர்கள் ‘பழங்கால மனிதர்களைப் போல்’ வாரிசுகளைப் பெறுவதில் அக்கறை கொள்ளக்கூடாது. நாமே இந்தப் பிரபஞ்சம் (பரம்பொருள்) என்ற நிலையில் சந்ததிகளை எதற்கு விரும்பவேண்டும் என்று சொன்னவர்களைப்போல் நடந்துகொள்ளவேண்டும். சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவது பந்த பாசங்கள், உடமைகள் மீது ஆசை கொள்வதாக ஆகும். அவற்றின் மீதான ஆசை என்பது உலகியல் இன்பங்கள்மீதான ஆசை என்று ஆகிவிடும். அது வெறும் இன்ப நுகர்வு மாத்திரமே. சஹஜ மரபில் இப்படியான ஆசைகளுக்கு இடமில்லை. அவதார புருஷர்களின் பிறப்பின்போது நடப்பதுபோல் நடந்துகொண்டாலே இது சாத்தியமாகும். தேவ கர்ப்பம், கன்னிக்குப் பிறந்த குழந்தை என்பதில் அந்தக் கன்னிப் பெண், காம இச்சையால் ஒருபோதும் தூண்டப்படவில்லை அல்லவா. அப்படியான ஒரு நிலையையே சஹஜ முன்வைக்கிறது.

சஹஜ மரபைத் திருமண பந்தத்துடன் இணைத்துச் சொல்லமுடியாது. ஏனெனில் திருமணங்கள் மிகத் தெளிவான பந்தத்தையும் ஒப்பந்தத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அந்த உறவு மிகத் தெளிவாகச் சில இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. சமூக, மத கடமைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் அந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு ‘முன்னோருக்குப் பட்ட கடனைத் தீர்க்கும்’ நோக்கில் திருமணங்கள் செய்துகொள்ளப்படுகின்றன.

வாழ்க்கையானது முழுக்கவும் தார்மிக நெறிமுறைகளுக்கு உட்பட்டது என்று நம்புபவர்கள் எல்லாம் உடலுறவு என்பது புனிதமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்று முன்வைக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், பெற்றோராக இருந்து செய்யவேண்டிய கடமைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்றியாகவேண்டும் என்று சொல்கிறார்கள். வாழ்க்கையின் இன்பங்களைத் தேடிச் சென்று அதே நேரம் அதன் மூலம் விளையும் கனிகளை (குழந்தைகளையும் பொறுப்புகளையும்) கைவிட்டுச் செல்வதில் ஒருவித அநியாயம் நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், உடலின்பமானது தேடிக் கண்டடையும் இன்பம் என்று இந்தக் கோட்பாடு முன் அனுமானித்துச் சொல்கிறது. நாம் சஹஜ மரபில் இதுவரை பார்த்ததென்பது முற்றிலும் மாறானது. எந்தவொரு தேடலும் எதிர்பார்ப்பும் இல்லாத செயல்பாடு அது.

நமக்கானது அல்ல என்று விதிக்கப்பட்டதைத் தேடிச் செல்லும்போதுதான் நாம் வழி தவறிச் செல்கிறோம்; நம் மீதும் பிறர் மீதும் முடிவற்ற துயரங்களைக் கொண்டுவருகிறோம். எதையும் தேடிச் செல்லாதவர்களுக்கு எல்லாம் தாமாகவே கிடைக்கும். நமக்கு எது மிகவும் தேவையோ அதை நாம் தேடவேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை பார்த்தவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் உடலின்பம் என்பதை அளவுக்கு மிஞ்சிய பரவச அனுபவமாகக் கருதத் தேவையில்லை. தன்னியல்பாகவே ஒரு கட்டுப்பாடு கொண்டவர்கள் பிற சந்தர்ப்பங்களில் திட்டமிட்டுக் கட்டுப்படுத்திக் கொண்ட அனுபவம் வாய்க்கப் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இவ்வகையான புலனடக்கம் என்பது ஒருவிதப் பயிற்சியின் மூலமே கைவரப்பெற்றிருக்கும். வலிந்து, செயற்கையாக, குழந்தை பிறப்பைத் தடுப்பதென்பது தன்னியல்பான புலனடக்கம் என்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை எல்லாம் விலக்குவதாக அமைந்துவிடுகிறது.

எந்தவொரு தருணத்திலும் சந்ததி விருத்தியைத் தவிர்க்க நியாயமான காரணம் கொண்டவர்கள், அதைத் தமது உள்ளார்ந்த வலுவின் மூலம் செய்பவர்களாக இருக்கவேண்டும். இதை முழுமையாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் வலிமையும் இல்லாதவர்கள் தம்மால் திருப்திப்படுத்த முடியாத பெண்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் உருவாகும்.

சஹஜ மரபில் ஒருவர் சுய ஏய்ப்பு (மாமிசம் மறுக்கப்படும்போது நாய்க்குணம் எவ்வளவு இதமாக ஆன்மாவின் துளியைக் கேட்டுப் பெறுகிறது – நீட்சே), அடக்கப்பட்ட ஆசைகளின் பிரவாகம், உடல் சார்ந்த நெருக்கடிகள், தூண்டுதல்கள் இவற்றையெல்லாம் எப்படித் தவிர்க்கமுடியும்?

உயர்நிலையை எட்டியவர்களுக்கு உடலுறவின் போது நடக்கக்கூடிய உடல் மூலமான, நுட்பமான, உயிர் மூலத்துக்கு மிகவும் அவசியமான பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் நெருக்கம் மூலமே எந்தவிதப் பந்த பாசமற்ற முறையில் நடந்தேறமுடியும். புராண உலகங்களில் பார்வையின் மூலமே கருத்தரித்த கதைகளையெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம். இப்படியான உயர் தளங்களில் இயங்க வெகு சிலராலேயே முடியும். அப்படியானால் அழியும் பந்தபாசங்கள் தேவைப்படுபவர்களுக்கு நாம் இவற்றை மறுதலித்தாக வேண்டுமா? சஹஜ மரபின் பற்றற்ற நெருக்கத்தை (கலவியை) இவர்களுக்கு மறுதலிக்கத்தான் வேண்டுமா? ஏன் அப்படிச் செய்யவேண்டும்? சுய வாழ்க்கையின் மூடுண்ட குகைகளைத் துறக்க முடியாதவர்களுமே கூட பனி மலையின் தூய குளிர் காற்றைச் சில நேரம் சுவாசிக்க முடியும்தானே.

பிரம்மச்சரிய (கற்பு) நிலை தவறாமல் இருக்க முடியாதவர்களுக்கு இதை மறுதலிக்கத்தான் வேண்டும்: ஒருவருக்குத் தன் வலிமை, ஆன்மிக நிலை என்ன என்பது தெரிந்திருக்கவேண்டும். சாத்தியமில்லாதவற்றை முயன்று பார்க்கத் தேவையில்லை. நமது ஆன்மிக நிலைகளைக் குழப்பிக் கொள்ளாமல், ஒன்றின் போதாமையை இன்னொன்றுக்கான நியாயப்படுத்தலாக ஆக்கிக்கொண்டுவிடவும் கூடாது. சுய விருப்பு வெறுப்புகளை சுய விருப்பு வெறுப்புகளாகவும் முழுமை நிலையை முழுமை நிலையாகவும் புரிந்துகொண்டு உண்மை நிலை என்ன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து அங்கீகரிக்கவேண்டும். சீஸருக்குரியதை, சீஸருக்குரியதை மட்டும், சீஸரிடம் கொடுக்கவேண்டும்.

சஹஜ மரபின் சிரமங்கள், அர்த்தம் பற்றி சாந்திதாஸ் சொல்பவற்றை நாம் இப்போது நன்கு புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். தேடிச் சென்றிராத, அசைக்கமுடியாத ஸ்படிகத் தூய்மை மிகுந்த, அதி நெருக்கமான தருணங்களிலும் திட்டமிடலோ வலிந்து செய்வதோ எதுவும் இல்லாமல் தன்னியல்பான கட்டுப்பாட்டை நிலைத்திருக்கச் செய்யும் நிலை. ஒரு போதும் உன்னதத்தில் இருந்து பிறழாத நிலை. இச்சைகளின் தூண்டுதல் இருக்கும்போது எதையும் உணரத்தலைப்படக்கூடாது. தூண்டுதல்களை வெறுமனே தாண்டிவந்தால் போதாது. இதற்கு இச்சைகளின் தூண்டுதல்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று எந்தப் பிரார்த்தனையும், வைப்பதில்லை. தன் முயற்சியையும் எடுப்பதில்லை. அது அவரிடம் தானாகவே எழுகிறது.

சஹஜ மரபில் செய்யப்படுபவை எல்லாம் முழுக்கவும் அன்புக்காகவே செய்யப்படுகின்றன. பரஸ்பரம் ஒருவர் மற்றவருக்காக எதுவும் செய்வதில்லை. எதிர்வினை எதையும் கிளர்ந்தெழவைக்கும் எந்த முயற்சியும் இதில் இருக்காது. கட்டுப்படுத்திக் கொள்ளவும் இதில் எதுவும் இருக்காது. இச்சை மற்றும் சரணாகதி இவற்றிலெல்லாம் இருந்து வெகு தொலைவுக்கு விலகியதொரு நிலை. மயக்கும் தந்திரங்கள், வெட்கம், ஆன்மிகக் குறியீட்டு நிலை, மனித அனுபவங்கள் என அனைத்திலிருந்தும் விலகிய அதி உன்னத நிலை, அதுவே சஹஜ நிலை.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *