Skip to content
Home » சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

சிவ தாண்டவம்

ஐரோப்பாவின் உள் நாட்டுப் போர்க் காலத்தில் பரிவை வெளிப்படுத்துவதுபோல் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுபோல் கலைகளில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் சரியானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியத்தின் கெளரவமெல்லாம் பகை ஆதிக்கச் சக்திகளின் மோதலினால் முழுவதுமாக இடிந்து நொறுங்கிவிடும்.

இன்னொரு இனத்தினர் மேல் ஆதிக்கம் செலுத்துவது வெட்கப்படவேண்டிய விஷயம். வெற்றியாளர்கள் உலகை நாகரிகப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளே உயர்ந்ததென்று சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால் உலகப் பொது நாகரிகம் என்பது பரஸ்பரப் புரிதல், பரஸ்பர நன்மைகள் செய்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது; பொதுவான மனித குலத் தேவைகள், மனித குல இலக்குகள் சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றையே அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம் முன்வைக்கின்றன. பலதரப்பட்ட மனிதர்களின் பொதுவான மனித குலச் சிந்தனைகள், நன்மைகள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக வில்லியம் ஷேக்ஸ்பியரைவிட வேறு யாரும் சொல்லிவிடவில்லை.

நாகரிகம் என்பது எந்தவொரு நாடு, மொழி, ஆதிக்க சக்தி ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அது உலகு தழுவியதாக மனித இனம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தாகவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த நாகரிகம் அழிந்துபோகும். தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பங்கள் அதி வேகமாக அதிகரித்துவரும் இன்றையச் சூழலில் நாகரிகம் என்பது மனித குலத்தின் பொதுவான நன்மைகள், உள்ளொளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையவேண்டும். பொதுவான இலக்குகள் இல்லையென்றால் கூட்டுறவு சாத்தியமில்லை.

நடந்து முடித்திருக்கும் காலகட்டத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் ஆசிய, ஐரோப்பிய மரபுகளில் இருந்து ஒரு கிளை பிரிதல் நடந்திருப்பதாகத் தெரிகிறது. ஆரியர்களும் ஐரோப்பியர்களின் அருகருகே வாழும் அளவுக்கு உலகில் போதிய இடம் இருக்கத்தான் செய்கிறது என்று இந்த சிந்தனைப் போக்கு கொண்டவர்கள் சொல்கிறார்கள். செயற்கையான எல்லைக் கோடுகள் எல்லாம் மிகவும் பலவீனமானவை. தான் மட்டுமே மனித குலத்தின் ஒரே பிரதிநிதி என்று எந்த மக்கள் பிரிவு நினைக்கிறதோ அது இன்னொன்றின் அழிவை அல்லது அதைத் தனக்கு அடிமைப்படுத்துவதையே இலக்காகக் கொண்டிருக்கும்.

அடக்கி ஆளும் சிந்தனை முழுக்கவும் தவறு. கிளை பிரிந்து செல்லுதல் என்பது மேம்போக்கான தளத்தில் மட்டுமே இருக்கிறது. அடி ஆழத்தில் ஐரோப்பிய, ஆசிய அடையாளங்களும் சிந்தனைகளுமே வேரூன்றியிருக்கின்றன. ஐரோப்பியருக்கும் ஆசியருக்கும் பொதுவான இறுதி இலக்கு என்று எதையும் நம்மால் வகுத்துச் சொல்லமுடியாதா என்ன?எல்லா நாடுகள், கண்டங்களுக்கும் எல்லாக் காலங்களிலும் இவை ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது புரியவில்லையா?

உபநிடதங்களின் சாரங்களைப் புரிந்துகொண்ட கெளதம புத்தர், சங்கரர், கபீர்தாஸர், ரூமி, லாவோ சீ, இயேசு (நான் இதுவரை ஆசிய வழிகாட்டிகளைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன்) ஆகியோரின் சீடர்களெல்லாம் பிளேட்டோ, காண்டே, தூலர், பெஹ்மென், ரூய்ஸ்ப்ரோக், விட்மன், நீட்சே, பிளேக் ஆகியோரின் சீடர்களிடமிருந்து அந்நியமானவர்களா என்ன? தொழில் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருப்பவர்கள் உயர்ந்த சித்தாந்தங்களை முன்வைத்ததாகச் சொல்லிக் கொண்டாலும் ஆசிய இலக்கியங்களில் ஆசிய நன்மைகள் மட்டுமே பேசப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இந்தக் குறுகிய பிரிவினைச் சிந்தனைகளில் இருந்து விடுபடவேண்டும் என்பதையே அவற்றில் பார்க்கிறோம்.

‘என்னை முழுமையாக அழித்துக் கொண்டு நிரந்தர மரணத்தைத் தழுவுவேன். நியாயத் தீர்ப்பு நாள் வரும்போது நான் அழிக்க முடியாதவன் என்பது தெரியவரும். என்னை மீட்டெடுத்து என் சுய ஆளுமையிடம் திருப்பித் தரப்படுவேன்.’

தத்துவம், மதம் ஆகியவற்றில் மட்டுமல்ல; சத்தியம் அன்பு ஆகியவற்றில் மட்டுமல்ல; கலைகளிலும் ஆசியாவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்தே இருக்கின்றன. இந்த மூன்று அம்சங்களில் இருக்கும் ஒற்றுமையானது மனிதர்கள் எல்லாரும் அவர்களின் உன்னத நிலையில் ஒரே மாதிரியானவர்களே என்பதே தெரியவருகிறது.

நாடகம், கவிதை (இலக்கியம்) ஆகியவை தொடர்பான கீழைத்தேய, மேலைத்தேயக் கோட்பாடுகளில் இருக்கும் ஒற்றுமையை இப்போது பார்ப்போம். நாம் பெரிதும் கொண்டாடும் ஷேக்ஸ்பியரை எடுத்துக் கொள்வோம். இந்திய மரபான நாடகக் கலையுடன் மிக நெருங்கியதாக இருப்பது அவருடைய படைப்புகளே. நாடகக் கலையின் பிரம்மா சொல்கிறார்:

‘உலக இயக்கங்களின் அடிப்படையில் இந்த நாடகத்தை எழுதியது நானே; வேலையானாலும் விளையாட்டானாலும் சிரிப்பானாலும் அமைதியானாலும் போரானாலும் காதலானாலும் வன்முறையானாலும் தார்மிக ஒழுக்கங்களைப் பின்பற்றுபவர்களுக்கு நியாயத்தின் கனிகள் / பலன்கள் கிடைக்கின்றன. இன்பத்தைத் தேடிச் செல்பவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. ஆன்மாவின் அத்தனை உணர்நிலைகளையும் அறிந்தவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கிறது. உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு அதன் சுக துக்கங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு நடப்பவர்களுக்கு அவை கிடைக்கின்றன. தொழிலோ, ஞானமோ, கலையோ, ஒன்றிணைப்போ எதுவானாலும் அவை எல்லாம் இங்கேயே அடையப்பட வேண்டியவையே. இந்த உலகில் களிப்புக்கும், ஞானங்களுக்கும் தத்துவத்துக்கும் உலக நிகழ்வுகளுக்கும் இடம்தருவதாக அந்த நாடகமே இருக்கிறது.’

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற வாழ்வின் நான்கு இலக்குகளை எந்த அளவுக்குப் பூர்த்தி செய்கிறதோ அந்த அளவுக்கு ஒரு கவிதை / இலக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆன்ம விடுதலை எப்படி கவிதையால் சாத்தியமாகும் என்று ஒரு மேற்கத்தியர் கேட்கக்கூடும். அழகியல் ரசனை சார்ந்த பற்றற்ற நிலையை எட்டுவதையே அது குறிக்கும். நன்மை தீமை என்ற சுழலில் இருந்து விடுதலையடையும் நிலையை அது குறிக்கும். தனஞ்ஜயர் சொல்கிறார்:

‘மகிழ்ச்சி, சோகம், கொடூரம், கருணை, உயர்வு தாழ்வு, சூட்சுமம், ஸ்தூலம், உண்மை, புனைவு என எந்தவொரு கருப்பொருளானாலும் அழகியல் ரசனையை வெளிப்படுத்த இவை அனைத்தினாலும் முடியும். எந்த ஒன்றாலும் அந்தக் கலை அனுபவத்தைக் கடத்த முடியாது என்று எதுவும் இல்லை.’

சாங் சூ சொல்வதை,

‘துறவியின் மனம் அலையடங்கி இருக்கும் நிலையில் இந்தப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகிவிடுகிறது…’

விட்மன், நன்மையின் கலைஞனாக மட்டுமல்ல; தீமையின் கலைஞனாகவுமே தன்னை அவர் முன்வைப்பதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

ஆசிய மரபில் சொல்லப்படும் பற்றற்ற தன்மை என்பது சில நேரங்களில் செயலற்ற தன்மைக்கு இட்டுச் செல்கிறது என்று சொல்வதுண்டு. இப்போது இதை உண்மை என்று எடுத்துக்கொண்டு பார்த்தோமானால் இந்த ஆசிய அணுகுமுறையானது ஐரோப்பிய இளைய தலைமுறையிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்று ஐரோப்பிய தேசங்களில் நிலவும் ஒழுங்கின்மை, குழப்பம் ஆகியவை மாறவேண்டுமென்றால் ராணுவச் செயல்பாடுகளுக்கு உகந்த வயதில் புற உலகப் போர்கள் மட்டுமல்ல ஆன்மிக அக உலகப் போர்களிலும் அந்த இளைய தலைமுறை ஈடுபட்டாகவேண்டும். இளமையின் தூண்டுதலானது ஒரு மனிதரின் உள்ளொளிக்கு ஈடானது அல்ல. வருங்காலத்தில், ஐரோப்பியரைப் போல் உத்வேகத்துடனும் ஆசியர்களைப் போன்ற நிதானத்துடனும் இயங்கும் புதிய தலைமுறையை நாம் உருவாக்கியாகவேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் சொன்னவை:

சுத துக்கங்கள், லாப நஷ்டங்கள், வெற்றி தோல்வி ஆகியவற்றைச் சமமாகப் பாவிக்கும் மனதுடன் போருக்குத் தயாராகவேண்டும்; செயல்களுடன் பற்றுக் கொண்டு செயல்படுவது மூடர்களின் குணம். எனவே உலகில் ஒழுங்கைக் கொண்டுவர விரும்பும் ஞானவான்கள் பற்றற்றுச் செயல்படவேண்டும்.

தனி நபர் சுதந்தரம் என்னவிதக் கட்டற்ற எல்லைகளுக்குச் சென்றிருக்கிறது என்பது ஐரோப்பாவுக்கும் தெரிந்திருக்கும். உலகில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவந்தாகவேண்டும் என்பது புரிந்திருக்கும். ஆனால் ஐரோப்பிய பாணி வளர்ச்சியில் தெளிவான இலக்கு இல்லாததால் அதில் ஒரு குழப்பம் எப்போதும் நீடித்து வந்திருக்கிறது. ஆசியாவை நோக்கி அவர்கள் நகர்ந்து வந்ததென்பது இப்போது நடந்தாகவேண்டிய ஒரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது. ஏனென்றால், ஆசிய சிந்தனைகள் உலகம் முழுவதும் ஒரே பரம்பொருளின் அம்சங்களே; உலக வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று பரஸ்பரச் சார்புடன் வாழப்படவேண்டியதுதான் என்ற உண்மைகளை மீண்டும் அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.

குறுகிய பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் சமூகத்தில் வாழ்க்கையின் லட்சியங்கள், பலன்களை எட்டமுடியாது என்பதை ஐரோப்பா இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் மேதைமையை நாம் புகழ்வதென்பது அந்தத் தனி நபருக்கான மரியாதையாக மட்டுமல்ல; ஒட்டு மொத்த மனிதகுலச் சகோதரத்துவத்தை முன்வைக்கும் மேதைமைக்கும் சேர்த்தே மரியாதை செலுத்துகிறோம். அந்த அறிவார்ந்த சகோதரத்துவ சிந்தனைகள், பொதுவான மனித குல நன்மைகளுக்காக அனைத்து மக்களுடன் நாம் கூட்டுறவுடன் செயல்படவேண்டும் என்று சொல்கிறது. மேற்குலகம், கிழக்குலகம் இரண்டும் சேர்ந்து ஒற்றுமை, ஒருமைப்பாடு அடிப்படையிலான ஒரு சமூக ஒழுங்கை உருவாக்கவேண்டும் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *