‘சிவிங்கிப்புலியா? கேள்விப்படாத பெயரா இருக்கே’ என்று பலர் யோசிக்கலாம். ஆங்கிலத்தில் ‘சீட்டா’ (Cheetah) என்று அறியப்படும் விலங்குதான் தமிழில் ‘சிவிங்கிப்புலி’ என்று அழைக்கப்படுகிறது.
சிறுத்தையையும் (Leopard), சிவிங்கிப்புலியையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. இரண்டும் பூனைக் குடும்பத்தை சேர்ந்ததாக இருப்பினும், இரண்டும் வெவ்வேறு இனங்கள். சிவிங்கிப்புலியின் தனித்துவம் என்னவென்றால், அது உலகிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு. ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 80 முதல் 130 கி.மீ வேகத்திற்கு ஓடக்கூடிய விலங்கு.
சரி, இப்பொழுது ஏன் சிவிங்கிப்புலியைப் பற்றிப் பேசவேண்டும்? காரணம், வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நமீபியா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 8 சிவிங்கிப்புலிகள் வரவிருக்கின்றன. அப்படி வரவிருக்கும் சிவிங்கிப்புலிகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ – பால்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விடப்போகிறார்கள்.
இந்தியாவில் ஒரு காலத்தில் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வகையான இனங்கள் இருந்தன. அவை புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கி, பனிச் சிறுத்தை மற்றும் படைச் சிறுத்தை (Clouded Lepord). இவற்றில் இப்பொழுது இந்தியாவில் ஐந்து மட்டுமே இருக்கின்றன. சிவிங்கிப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.
ஒரு காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை சிவிங்கிப்புலிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. முகலாய அரசர் அக்பர் தன்னுடைய அரண்மனையில் 1000 சிவிங்கிப்புலிகளை வளர்த்ததாக வரலாறு இருக்கிறது. அவர் காட்டிற்கு வேட்டையாடச் செல்லும்போது சிவிங்கிப்புலிகளையும் அழைத்துச் செல்வாராம்.
பொதுவாக சிவிங்கிப்புலிகள் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதாவது மனிதர்களால் வளர்க்கப்பட்ட சிவிங்கிப்புலிகள் புல்வெளிகளில் அவிழ்த்து விடப்படும், அது புல்வெளிகளில் திரியும் மான்களை வேட்டையாடும். சிவிங்கிப்புலி வேட்டையாடிய மானை வளர்ப்பவர் எடுத்துக்கொள்வார். வேட்டையாடப்பட்ட மான் கறியிலிருந்து ஒரு பகுதி சிவிங்கிப்புலிக்குக் கொடுக்கப்படும். சிவிங்கிப்புலி வேட்டையாடும் விலங்கு என்றாலும் அது மற்ற வேட்டையாடும் விலங்குகளைப் போன்று மூர்க்கமானது இல்லை. சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் சிவிங்கிப்புலிகள் பொதுவாகக் குட்டிகளை ஈனாது.
இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதாலும், அவை தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வந்ததாலும், சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டேவந்து அழியும் நிலைக்கு வந்தது.
1948ஆம் ஆண்டு, இந்தியாவில் சுர்குஜாவை (இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதி) ஆட்சி செய்து வந்த மகாராஜா ராமானுஜ பிரதாப் சிங் தியோ வனத்தில் கடைசியாகத் திரிந்த மூன்று சிவிங்கிப்புலிகளை வேட்டையாடி சுட்டுக் கொன்றார். இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை முற்றிலும் அழித்த பெருமை மகாராஜா ராமானுஜ பிரதாப் சிங்கையே சாரும். இதைவிடப் பிரமாதம், அவர் தன் வாழ்நாளில் 1360 புலிகளைக் கொன்று குவித்திருக்கிறார்.
இந்திய அரசாங்கம், 1952ஆம் ஆண்டு, இந்திய அரசிதழில் (கெஜட்டில்) சிவிங்கிப்புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்ற தகவலை வெளியிட்டது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல், சிவிங்கிப்புலிகளை இந்திய காடுகளில் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் 1970-களில் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியது. இதற்காக இந்திய அரசாங்கம் ஈரானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏன் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? காரணம், ஈரான் நாட்டில்தான் ஆசிய சிவிங்கிப்புலிகள் இருந்தன.
உலகில் இரண்டு வகையான சிவிங்கிப்புலிகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகள், மற்றொன்று ஆசிய சிவிங்கிப்புலிகள். எப்படி ஆப்பிரிக்க சிங்கம், ஆசிய சிங்கமோ; ஆப்பிரிக்க யானை, இந்திய யானையோ அதே மாதிரிதான்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஷா மன்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு கோமேனியின் ஆட்சி தொடங்கியது. அதன் பின்னர் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவிற்குச் சிவிங்கிப்புலிகளைக் கொண்டுவருவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஈரானிலும் சிவிங்கைப்புலிகளின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் ஈரான் நாட்டு வனத்தில் சுமார் 100-க்கும் குறைவான சிவிங்கிப்புலிகளே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இன்றைய தேதியில் சுமார் 7000 சிவிங்கிப்புலிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
2010ஆம் ஆண்டில் சிவிங்கிப்புலிகளை நமீபியாவிலிருந்தும், தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் கொண்டுவந்து இந்திய வனத்தில் விடுவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் இறங்கியது. சிவிங்கிப்புலிகளை எந்த இடத்தில் கொண்டுவந்து விடலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில், உதகமண்டலத்தில் உள்ள மோயார் பள்ளத்தாக்குப் பகுதியும் பரிசீலனையில் இருந்தது. இறுதியாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ – பால்பூர் வனவிலங்குச் சரணாலயத்தில் சிவிங்கிப்புலிகளை விடலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது.
குனோ – பால்பூர் சரணாலயத்தில் சிவிங்கிப்புலிகளை விடக்கூடாது; மாறாக, அந்த இடத்தில் குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்திலிருந்து ஆசிய சிங்கங்களைக் கொண்டுவந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில், 2012ஆம் ஆண்டு, வழக்குத் தொடுக்கப்பட்டது. குஜராத் அரசாங்கம் சிங்கத்தை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. 2020ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் சிவிங்கிப்புலிகளை குனோ – பால்பூர் சரணாலயத்தில் கொண்டுவந்து விடலாம் என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்குக் கொண்டுவரும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணைக்குழு (National Tiger Conservation Authority – NTCA) சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்குக் கொண்டுவந்து, அதைப் பாதுகாக்கும் விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவும் NTCAவிற்கு இந்த விவகாரத்தில் வழிகாட்டி வருகிறது.
முதல் கட்டமாக நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கைப்புலிகள் (நான்கு ஆண், நான்கு பெண்) வரவிருக்கின்றன. செப்டெம்பர் மாதம் 17ஆம் தேதி, விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு சிவிங்கிப்புலிகள் வருகின்றன. ஜெய்பூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவிங்கிப்புலிகள் குனோ – பால்பூர் வனவிலங்குச் சரணாலயத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளன.
சிவிங்கிப்புலிகள் வந்ததும் உடனே காட்டில் விட்டுவிடமாட்டார்கள். முதலில் அவற்றை 6 சதுர கி.மீ கொண்ட ஒரு பெரிய அடைப்பில் தனிமைப்படுத்திக் கண்காணிப்பார்கள். சிவிங்கிப்புலிகளுக்கு நம் நாட்டு தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்கிறதா என்று பார்ப்பார்கள். பின்னர் அடைப்புகளிலிருந்து சிவிங்கிப்புலிகளை வனத்திற்குள் விடுவார்கள். சிவிங்கிப்புலிகளுக்கு போதுமான இரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சிறுத்தை போன்ற விலங்குகள் குனோ – பால்பூர் சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்டு மற்ற காடுகளில் விடப்பட்டுள்ளன.
உலகத்திலேயே கண்டம் விட்டு கண்டம் தாண்டி வனவிலங்குகள் மறு அறிமுகப்படுத்தும் (reintroduction) நிகழ்ச்சி இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்தச் சிவிங்கிப்புலிகளின் மறு அறிமுகப்படுத்துதலை உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கியிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் சிங்கங்கள் குஜராத்திலிருந்து உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சந்திரப்பூர் காட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால் அந்தச் சிங்கங்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டன. இப்பொழுது நிலைமை வேறு. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பிற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும், பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அதனால் சிவிங்கிப்புலிகளின் இந்த மறு அறிமுகப்படுத்துதல் வெற்றிபெறும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
நமீபியாவிலிருந்து முதல் தொகுதி வந்த பிறகு தென் ஆப்ரிக்க நாட்டிலிருந்து இரண்டாவது தொகுதியாக சுமார் 12 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படப்போவதாக சொல்லப்படுகிறது.
செப்டெம்பர் 17ஆம் தேதிக்குப் பிறகு உலகில் உள்ள அனைத்துவித பூனை வகைகளும் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றன என்று நாம் பெருமை கொள்ளலாம். மேலும் சிவிங்கிப்புலிகளின் வருகையால் இந்தியாவில் உள்ள புல்வெளிக் காடுகள் பாதுகாக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
0