Skip to content
Home » தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்

தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்

தாகூர்01

கீதாஞ்சலிஸ்ரீ எழுதிய ‘ரேத் சமாதி’ என்ற இந்தி நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. Tomb of Sand எனும் தலைப்பில் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் டெய்ஸி ராக்வெல். ரவீந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ நோபல் இலக்கியப் பரிசைப் பெற்று (1913) நூறாண்டுகளுக்குப் பிறகு, ஓர் இந்திய மொழி எழுத்தாளருக்குச் சர்வதேச விருது கிடைத்துள்ளது. இதைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளுக்கும் புகழுரைகளுக்கும் மத்தியில் ‘கீதாஞ்சலியில் இருந்து கீதாஞ்சலிக்கு’ என்றொரு குறிப்பை இணையத்தில் காண நேர்ந்தது.

தாகூருக்குக் கிடைத்த பெருமையை ‘ஓர் இந்தியருக்குக் கிடைத்த பெருமை‘ என்று பாரதி தலைமேல் வைத்துக் கொண்டாடியதையும், கீதாஞ்சலி உட்பட தாகூரின் எழுத்துக்கள் பலவற்றையும் தமிழுக்கு அவர் அறிமுகப்படுத்தியதையும் இத்தருணத்தில் நினைவு கூரமுடியும். அவ்வாறே, தாகூர் உருவாக்கிய சாந்திநிகேதனில் பல ஆண்டுகள் பணிபுரிந்த இந்தி மொழி அறிஞரும் நாவலாசிரியருமான ஹஸாரி பிரசாத் த்விவேதி ‘தாகூருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான் இந்தி மொழியின் சுயமரியாதை எழுச்சி பெறுவதற்குப் பெரிதும் உதவியது‘ என்று பிறிதொரு தருணத்தில் குறிப்பிட்டிருந்ததையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இவ்வாறு அந்நியரால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த இந்தியாவின் பெருமையை உலகளவில் எடுத்துரைக்கும் ஒரு நிகழ்வாக தாகூருக்குக் கிடைத்த நோபல் பரிசு இருந்தது. இதன் தாக்கம் வங்க மொழிக்கு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் பலவற்றுக்கும் உத்வேகமூட்டுவதாக இருந்தது. இதைத்தான் நாம் பாரதியின் எழுத்துக்களில் பார்க்கிறோம்.

1970களின் தொடக்கத்தில், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த நாட்களில், கலாநிதி க. கைலாசபதி எழுதிய ‘இரு மகாகவிகள்’, தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதியின் படைப்பாக்கத் திறனையும் தாகூரின் தனிச்சிறப்பியல்புகளையும் இந்நூல்கள் கவனப்படுத்தின.

எனினும் அந்நாட்களில் பாரதியின் மீதிருந்த ஆதூரமான பற்றால் தாகூரை நான் போதுமான அளவுக்குக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே உண்மை. பின்பு 1983இல் மேற்கு வங்க மாநில அரசின் செய்தி மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் துறையில் உதவி தகவல் அலுவலராகப் பொறுப்பேற்ற பிறகு, சக ஊழியர்களான வங்காளிகளுடன் கலந்துரையாடுவதன்மூலமும், வங்காளி மொழியை தட்டுத் தடுமாறிக் கற்றுக் கொள்வதன்மூலமும் கவிகுரு ரவீந்திரநாத் தாகூரை நெருங்கத் தொடங்கினேன்.

அதையொட்டி, 1984இல் தாகூரின் 124வது பிறந்ததின விழாவினை சென்னையில் சிறிய அளவில் நடத்தினேன். சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர் ந. சஞ்சீவி, தலைசிறந்த வங்காளி எழுத்துகளை தமிழுக்கு அறிமுகம் செய்த சகோதரர்களில் ஒருவரான த.நா. சேனாபதி ஆகிய இருவரையும் விழாவுக்கு அழைத்து வந்தேன்.

த.நா.சேனாபதி, த.நா. குமாரசாமி சகோதரர்கள் இருவருமே தாகூரின் சாந்தி நிகேதனில் பயின்றவர்கள். அவர்களிடமிருந்து தாகூர் பற்றிய பல தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். தாகூரின் 125வது பிறந்ததின விழா ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசுத்துறை கல்கத்தாவில் தொடங்கியபோது, தென்னகத் தலைநகரங்களில் கொண்டாட்டப் பணிகளை இணைந்து நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அதன் ஒரு பகுதியாக, அரசின் சார்பில் அழைப்பு விடுக்க, அப்போது நெல்லூரில் வசித்து வந்த பெஜவாடா (விஜயவாடா) கோபால ரெட்டி அவர்களைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு அமைந்தது. தாகூரின் சாந்தி நிகேதனில் பயின்றவர். அன்றைய மதராஸ் மாகாணத்தின் நிதி அமைச்சராகவும், விடுதலைக்குப்பிறகு நேரு அமைச்சரவையில் தகவல் –ஒலிபரப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் மூலம் தாகூர் பற்றிய பல அரிய தகவல்களை என்னால் பெறமுடிந்தது. (இவர் பற்றி இன்னும் சற்றே விரிவாக பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன்).

0

மகாகவி தாகூர் என்றழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) பல்வேறு தனிச் சிறப்புகளை தன்னளவில் கொண்டவர். அவரது கவிதைகள் இந்தியா, வங்க தேசம் ஆகிய நாடுகளின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கீதத்தின் முதல் வரிக்கும், அதன் இசை வடிவத்திற்கும் அவரே உந்துதலாக இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

ஆசிய கண்டத்திலேயே இலக்கியத்திற்கான நோபல் பரிசினை முதலில் பெற்ற இந்தியர்; 8 வயதில் முதல் கவிதை; 16 வயதில் முதல் கவிதைத் தொகுப்பு நூல்; 80 வயதில் இறக்கும்வரை 1,50,000 கவிதை வரிகள் எழுதியிருக்கிறார். இவைபோக, கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இசை நாடகங்கள், உரைகள் என்று அவர் படைப்புகள் மொத்தம் 37 தொகுதிகளில் இதுவரை வெளியாகியுள்ளன.

அவரது தனிச்சிறப்பான பங்களிப்பான ரவீந்திர சங்கீதம் என்றழைக்கப்படும் இசைப் பாடல்கள் மொத்தம் 2,233 ஆகும். கீதா பிதான் (பாடல்களின் தோட்டம்) என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கும் இவை அனைத்திற்கும் தாகூரே இசை அமைத்திருந்தார். ரவீந்திர சங்கீதம் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூஜா (நிவேதனம்), சுதேசி (தேசபக்தி), பிரேம் (அன்பு), பிரகிருதி (இயற்கை), விசித்திரம் (வியப்பு), சம்பிரதாயம் (பாரம்பரிய வகை) என்பவையே அவை.

தாகூர் பல்வேறு தருணங்களில் இந்தப் பாடல்களைத் தானே பாடியிருக்கிறார். வங்கத்தின் தனிச்சிறப்புமிக்க பாடகர்கள் அனைவருக்கும் தாகூரின் பாடல்களிலிருந்தே தங்கள் பயிற்சியை இன்றும் தொடங்குகிறார்கள். வங்காளிகளின் வீடுகளில் இந்தப் பாடல்களை பாடும் தகுதி பெற்றிராத நபர்களே இல்லை எனலாம்.

தனது 60வது வயதிற்குப் பிறகு எவ்வித முன்பயிற்சியுமின்றி ஓவியம் தீட்டத் தொடங்கிய தாகூர் 20,000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். பாரிஸ் உள்ளிட்ட உலகின் பல நகரங்களிலுள்ள கண்காட்சிகளில் அவை இடம்பெற்றிருக்கின்றன, பாராட்டுகளையும் அள்ளிக் குவித்துள்ளன.

0

இத்தகைய தனிச்சிறப்புமிக்க ஒரு மனிதர் சமூகத்தில் உருவாவதற்கான சூழல் அன்றைய வங்கத்தில் உருவாகியிருந்தது. 18-19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியாட்சியில் ஆங்கிலம் அறிமுகமானபோது, காலனியாட்சியின் தலைமையகமாக இருந்த வங்கத்தில் கணிசமான மக்கள் ஆங்கில அறிவையும் புதிய சிந்தனைகளையும் பெற்றனர். இதன் விளைவாகவே வங்கத்தில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது.

இந்த மறுமலர்ச்சி இயக்கத்தில் ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டவர் தாகூரின் தந்தையான தேவேந்திரநாத் தாகூர். பின்னர் அவர் ராஜாராம் மோகன் ராயுடன் இணைந்து சனாதன இந்து பழக்கங்களை எதிர்க்கும் பிரம்ம சமாஜம் என்ற இயக்கத்தை வழிநடத்திச் சென்றார். அருவமான இறைவன் என்ற கோட்பாட்டினை வலியுறுத்தி, மனிதர்களிடையே நிலவிய பேதத்தை மறுதலித்த இயக்கமாகவும் அது இருந்தது. கல்விக்கு, குறிப்பாக பெண் கல்விக்கு, மிகுந்த அழுத்தம் கொடுத்த இயக்கம் அது. இந்த இயக்கத்தின் தேவாலயங்களில் பாடுவதற்கான பாடல்களைத் தொடக்கத்தில் எழுதி வந்த ரவீந்திரநாத் ஒரு கட்டத்தில் அதன் செயலாளராகவும் ஆனார்.

வங்கத்தில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளின் மாற்றம், சமூக உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், கலாசாரப் படைப்புத்திறனின் புத்துயிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஓர் இயக்கமாகத் திகழ்ந்தது. இதனால் மனிதம் குறித்த கருத்துக்கள் மேலும் விரிவடைந்தது.

மனிதத்துக்கு விரிந்த அளவில் விளக்கம் தருவதாக, அதைப் பிரதிநிதித்துவம் செய்வதாக, கடந்த காலத்தின் கலாசாரம், அறிவுக்கான அடையாளங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் புதியதொரு மனிதன் உருவாவதை உறுதிப்படுத்துவதாக மறுமலர்ச்சி இயக்கம் அமைந்தது. புதிய மனிதனுக்கு உத்வேகமூட்டி, அவனது படைப்பாக்கத் திறனுக்கு உந்துசக்தியாக விளங்கியதோடு, இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம் போன்ற பல்வேறு கலைகளிலும் தலைசிறந்த விற்பன்னர்கள் உருவாவதற்கும் வழிவகுத்தது.

இவ்வாறு புதியதாக உருவெடுத்த அழகியலானது அன்றைய சமூக அமைப்பின் கட்டமைப்பிலும் உற்பத்தி உறவுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியதாகவும் இருந்தது. நவீன உலகம் என்று பெயர் சூட்டப்பட்ட முதலாளித்துவ எழுச்சியை, கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம்; பழையவற்றிலிருந்து புதியது என்று வேறுபடுத்திப் பார்ப்பதற்கான அறிவார்ந்த அம்சமாகவும் இந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைந்திருந்தது. (இந்தியாவில் நான்காவது மறுமலர்ச்சிக்கான தேவை என்ற கட்டுரையில் பேரா. கே.என். பணிக்கர்).

ராஜாராம் மோகன் ராயிலிருந்து தொடங்கி, சுவாமி விவேகானந்தர் வழியாக, ரவீந்திரநாத் தாகூர் வரை நீடித்த இந்த மறுமலர்ச்சி இயக்கம் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை வடக்கே சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், மேற்கே எம்.ஜி. ரானடேயின் பிரார்த்தனா சமாஜ், தெற்கே ஆந்திராவில் வீரேசலிங்கத்தின் இயக்கம் ஆகியவை எடுத்துக் காட்டுகின்றன. அன்று சமூகத்தில் தலையெடுத்து வந்த, ஆங்கில அறிவு பெற்ற, சமூகத்தில் உயர்சாதியினராக இருந்த, நடுத்தர வர்க்கத்தினரின் சமூக, இறையியல் தேவைகளை வெளிப்படுத்துவதாக, எப்படி வங்கத்தின் மறுமலர்ச்சி இயக்கம் எழுச்சி பெற்று வந்ததோ, அதைப் போன்றே அதன் தாக்கம் பெற்ற மேற்சொன்ன இயக்கங்களும், சமூகத்தில் உயர்சாதியினராக இருந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டு, புதிய நடுத்தர வர்க்கத்தின் தேவைகளைப் பிரதிபலித்தன.

இன்றைய தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இதன் தாக்கம் சற்றே தாமதமாக எழுந்தது. அதனை முன்னெடுத்தவர்களின் அடையாளமும் சற்றே வித்தியாசமானது. நாட்டின் பிற பகுதிகளில் மறுமலர்ச்சி இயக்கத்தை உயர்சாதியினர் முன்னெடுத்தனர் என்றால் இந்த இரு பகுதிகளிலும் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொண்டவர்களான நாராயண குரு, அய்யங்காளி, அய்யா வைகுண்டர், அயோத்திதாசர் போன்றவர்கள் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட படிநிலையில் இருந்தவர்கள். பிற பகுதிகளில் மறுமலர்ச்சியின் நாயகர்கள் முன்னெடுத்ததைப் போன்று, சமூகத்தில் அன்று நிலவிய சாதிய படிநிலையில் சீர்திருத்தங்களை கோருவதாக இல்லாமல், அதை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு புத்தொளி இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் எவ்வாறு வங்காள சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இன்றளவும் நீடித்து வருகிறார் என்பதைக் கண்டறிவதாகவும், அவரது படைப்புத்திறனின் பல்வேறு கூறுகளை எடுத்துக் கூறுவதாகவும் இந்தத் தொடர் அமையும்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

3 thoughts on “தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்”

 1. அரிய கருத்துகள், செய்திகளுடன் சிறந்த தொடக்கம். வாழ்த்துகள் வீபா.

 2. புத்தக எலி

  ரவீந்திரநாத் தாகூரைப்பற்றிய ஒருசில தகவல்களை நான் அறிந்திருந்தபோதும் அவரைப்பற்றின முழுமையான அறிவு எனக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஆக்கத்தில்
  ரவீந்திரநாத் தாகூரைப்பற்றிய பல தகவல்களை (சிறப்புகளை) அறிந்துகொள்ள முடிந்தது. அதுமட்டுமல்ல அநேக இடங்களில் அவரேக்குறித்து ஆச்சரியப்படவும் வைத்தது.

  இன்னும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள ( தொடர் ஆக்கத்திற்காக) மிகுந்த ஆவலாகவே உள்ளேன்..

  ரவீந்திரநாத் தாகூரைப்பற்றிய இந்த
  ஆக்கத்தை எங்களுக்கு அறிய தந்த வீ.பா. கணேசன் அவர்களுக்கு நன்றி மற்றும் உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.💐💐

 3. அருமையான தொடக்கம். நான் இது வரை அறிந்திராத விஷயங்கள்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *