Skip to content
Home » தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

வில்லியம் கோட்டை

மேதமை என்பது இயல்பாகவே வருவது; உருவாக்கப்படுவதில்லை. என்றாலும் பரம்பரை, பிறந்து வளரும் சூழல் ஆகியவற்றிலிருந்து எவரும் தப்பித்துவிட முடியாது. அவ்வகையில் ரவீந்திரரின் படைப்புத் திறனை, அவரது எண்ணற்ற படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அவை அனைத்திற்கும் உரமாக விளங்கிய அவரது முன்னோர்களை, குடும்பப் பின்னணியை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

15ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் டெல்லி சுல்தான் ஆட்சி, கான் ஜஹான் அலி என்பவரை வங்காளத்தின் ஜெசூர் பகுதியின் கவர்னராக நியமித்து அனுப்பி வைத்தது. இப்பகுதியில் டெல்லியின் ஆட்சியை நிலைநிறுத்தி விரிவாக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்தச் சமயத்தில் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு பிராமண இளைஞன் ஓர் இஸ்லாமியப் பெண்ணின்மீது காதல் வசப்பட்டான். அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு முஸ்லிமாகவும் மாறினான். முகமது தாஹிர் என்று பெயர் சூட்டிக்கொண்ட அந்த இளைஞன் விரைவில் கவர்னரின் வலது கையாக மாறினான்.

சிறிது காலத்திற்குப் பிறகு இந்த ஆட்சிப் பகுதிக்குள் இருந்த செங்குரியா பர்காணாவின் பொறுப்பு தாஹிரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுவாக மக்களால் பீர் அலி என்று அழைக்கப்பட்டு வந்த தாஹீரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராய் சவுதரி என்ற பிராமண ஜமீன்தார் குடும்பமும் இருந்தது. இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் பலரும் பீர் அலியின் நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வகித்து வந்தனர். இவர்களில் காமதேவ், ஜெயதேவ் என்ற இரு சகோதரர்கள் பீர் அலியின் திவானாகப் பணிபுரிந்து வந்தனர்.

ஒரு நாள் ரம்ஜான் நோன்புக் காலத்தில் பீர் அலி அதிகாரிகள் புடைசூழ வீற்றிருந்தபோது, தோட்டக்காரன், அரண்மனை தோட்டத்தில் விளைந்த பெரியதொரு எலுமிச்சை பழத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கி முகர்ந்த பீர் அலி, ‘என்னவொரு நறுமணம்!’ என்று வியப்போடு கூறியபோது, அருகிலிருந்த காமதேவ் புனித ரம்ஜான் நோன்பை அவர் மீறி விட்டதாகக் குறிப்பிட்டார். எப்படி என்று பீர் அலி வினவியபோது ஒரு பொருளை நுகர்ந்தாலே அதைப் பாதியளவு உண்டதாக ஆகிவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக காமதேவ் பதில் அளித்திருக்கிறார். அப்போது பீர் அலி அதற்குப் பதிலளிக்காமல் விட்டுவிட்டாலும், அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகத் தொடங்கியது.

சில நாட்களுக்குப் பிறகு பீர் அலி தனது பர்காணாவில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். விருந்துக் கூடத்தில் சாதி வரிசைப்படி பிராமணர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குச் சற்று தள்ளி இதர சாதியினர் அமர்ந்திருந்தனர். கூடத்திற்கு அருகே இருந்த ஓர் அறையில் இவர்கள் உண்பதற்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியின் மணம் மெதுவாக வீசத் தொடங்கியபோது, காமதேவ், ஜெயதேவ் உள்ளிட்ட பிராமணர்கள் தங்கள் மேலாடையால் மூக்கைப் பொத்திக் கொண்டனர்.

‘என்ன ஆயிற்று உங்களுக்கு?’ என்று பீர் அலி கேட்டபோது, ‘எங்களுக்குத் தடை செய்யப்பட்ட இறைச்சியின் மணம் வீசுகிறது, பிரபு!’ என்று காமதேவ் பதிலளித்தார். ‘உங்கள் மூக்கைப் பொத்திக்கொள்வதற்கு முன்பாக அந்த இறைச்சியின் மணத்தை நுகர்ந்து விட்டீர்கள். அதாவது பாதி உண்டுவிட்டதாக அர்த்தம். எனவே இருந்து முழுமையாக உண்டுவிட்டுப் போகலாம்!’ என்று பீர் அலி கூறியவுடன் அங்கிருந்த பிராமணர்கள் அடித்துப் பிடித்துக் கூடத்தை விட்டு வெளியேறினர்.

எனினும் காமதேவ், ஜெயதேவ் சகோதரர்கள் மட்டும் வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டு இறைச்சியை உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர்கள் இருவரும் கமாலுதீன் கான் சவுதரி, ஜமாலுதீன் கான் சவுதரி என்ற பெயருடன் மதம் மாறினர். ஜெசூர் நகருக்குப் பத்து மைல் தூரத்தில் இருந்த சிங்கியா கிராமம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த விருந்தில் பங்கேற்று, இறைச்சியை உண்ணாமல் தப்பி வந்த பிராமணர்களும் சமூகத்தின் தண்டனையிலிருந்து தப்பவில்லை. அவர்கள் அனைவரும் பிராமண சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ‘பீர் அலி பிராமணர்கள்’ என்று அடையாளமும் இடப்பட்டது. இதுவே பின்னர் ‘பிராலி’ பிராமணர்கள் என மருவியது. இவர்களில் ரதிதேவ், சுக்தேவ் என்ற சகோதரர்களின் நிலைதான் பரிதாபத்திற்கு உரியது. சமூக விலக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரதிதேவ் தன் சொத்துக்களைத் தம்பி சுக்தேவிடம் ஒப்படைத்துவிட்டு, துறவறம் பூண்டு ஊரை விட்டே வெளியேறினார்.

சுக்தேவிற்கு ஒரு சகோதரியும் திருமண வயதில் ஒரு மகளும் இருந்தனர். இருவருக்கும் வரன் தேடுவது இப்போது பெரும் பிரச்னை ஆனது. எனினும் அருகிலுள்ள குல்னா மாவட்டத்தில் பிதாபோக் கிராமத்தைச் சேர்ந்த பிராமணரும் வேத வித்தகருமான புருஷோத்தம் ஒருநாள் ஆற்றில் குளித்து விட்டு வெளியேறியபோது சுக்தேவ் அவரை வணங்கி ஒரு வரம் கேட்டார். இத்தகைய தருணத்தில் நன்கு கற்றறிந்த பிராமணர்கள் வரம் தர மறுப்பதில்லை என்ற நிலையில், சுக்தேவின் கோரிக்கையை ஏற்று அவரது மகளை புருஷோத்தம் மணந்துகொண்டார். அதே போன்று சொத்தைக் காட்டி ஒரு பிராமண இளைஞரைக் கவர்ந்து சகோதரிக்கும் சுக்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

புருஷோத்தமரின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த மகேஸ்வர், சுக்தேவ் என்ற சகோதரர்கள் ஜெசூரில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் மகேஸ்வரின் மகனான பஞ்சணன் குஷாரி என்பவரே தாகூர் குடும்பத்தின் வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முன்னோராக விளங்குகிறார். ஒரு தருணத்தில் பஞ்சணன் குஷாரி, தன் சித்தப்பா சுக்தேவுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு அன்று ஆதி கங்கை என்றும், இன்று ஹூக்ளி என்றும் அழைக்கப்படும் கங்கையின் கிளைநதியின் ஓரத்தில் இருந்த கோவிந்த்பூர் என்ற கிராமத்தில் வந்து குடியேறினார். இது 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த நிகழ்வு.

அந்த நாட்களில் கோவிந்த்பூர், காளிகாட், சுதனூடி ஆகிய மூன்று ஆற்றங்கரையோர கிராமங்கள்தான் பிரிட்டிஷ், பிரெஞ்ச், டச்சு, போர்ச்சுகீசிய வணிகர்கள் கரையிறங்கி வணிகம் செய்வதற்கான மையமாக விளங்கின. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ஜாப் சர்னாக் 24 ஆகஸ்ட் 1686 அன்று இப்பகுதியில் வந்திறங்கி, தங்களுக்கான சேமிப்புக் கிடங்கைக் கட்டுவதற்கென அன்றைய நவாபிடம் இந்த மூன்று கிராமங்களையும் ரூ.13,000க்கு விலைக்கு வாங்கினார். இந்தப் பகுதியே பின்னர் கல்கத்தா என்ற பெருநகரமாகவும், லண்டனுக்கு அடுத்து பிரிட்டிஷ் பேரரசின் இரண்டாவது பெருநகரமாகவும் உருவெடுத்தது. இந்த நிகழ்வே பின்னாளில் உலகின் மிகப் பெரும் பேரரசாக பிரிட்டன் உருவாகவும் வழிவகுத்தது.

இந்த ஆற்றங்கரையோர கிராமங்களில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மீனவர்கள். வெளிநாட்டுக் கப்பல்களில் வந்திறங்கும் பொருட்களை இறக்கும் வேலைகளை அவர்கள் செய்து வந்தனர். தங்கள் கிராமத்தை வந்தடைந்த பிராமணர்களான பஞ்சணன் குஷாரி, சுக்தேவ் ஆகியோரை இந்த மீனவர்கள் வணங்கும்போது கடவுளுக்கு இணையானவர் என்ற பொருளில் தாக்கூர் (தெய்வாம்சம் பெற்றவர்) என்று அழைத்து வந்தனர். இவ்விருவரும் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் கப்பல்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கி வந்தனர். இந்த வெளிநாட்டவர்களும் தங்கள் காதில் விழுந்த தாக்கூர் என்ற பெயர்தான் இவர்களின் குடும்பப் பெயர் என்று கருதிக் கொண்டு இவர்களை தாகூர் (Tagore) என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வாறு குஷாரி என்ற குடும்பப் பெயர் அப்படியே மறைந்து போய் தாகூர் என்ற பெயர் நிலைத்தது.

பிரிட்டிஷ் கம்பெனி அதிகாரிகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு பஞ்சணன் தன் மகன்களான ஜெயராம், சந்தோஷ்ராம் ஆகிய இருவருக்கும் கம்பெனியில் நல்ல வேலையை ஏற்படுத்தித் தந்தார். 1707இல் கல்கத்தாவின் முதல் கலெக்டரான ரால்ஃப் செல்டன் இவர்களை வரிவசூலிக்கும் அமீன்களாக நியமித்தார். பஞ்சணனின் வழிகாட்டுதலுடன் இருவரும் நன்றாகவே வருவாய் ஈட்டி, புதிதாக உருவாகி வந்த கல்கத்தா நகரின் மையப்பகுதிகளில் நிலங்களையும் வீடுகளையும் வாங்கிப் போட்டனர். நகரின் மையப் பகுதியில் தோட்டங்கள் நிரம்பிய மாளிகை ஒன்றையும் ஜெயராம் கட்டிக் கொண்டார். (இப்பகுதி தற்போது தர்மதலா என்று அழைக்கப்படுகிறது)

1741-42இல் எந்த நேரத்திலும் மராத்தா படைகள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி, வில்லியம் கோட்டையைச் சுற்றி ஓர் அகழியை உருவாக்கியது. இதற்கு மராத்தா பள்ளம் என்றே பெயர். பின்னாளில் இது மூடப்பட்டு நகரின் சுற்றுவட்டச் சாலையாக மாறியது. தற்போது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் சாலை என்று அதற்குப் பெயர்.

இந்த அகழியை கட்டும் பொறுப்பு ஜெயராமிடம் தரப்பட்டது. இதுபோன்ற கம்பெனியின் பல்வேறு வேலைகளின் மூலம் ஜெயராம் கணிசமான பொருளைச் சேர்த்திருந்தார். 1756இல் அன்றைய வங்காள நவாப் சிராஜ் உத் தவ்லா வில்லியம் கோட்டை மீது தாக்குதல் நடத்தியபோது, ஜெயராமின் மாளிகையும் சேதமுற்றது. 1757இல் நடைபெற்ற பிளாசி போருக்குப் பிறகு சிராஜ் உத் தவ்லா தோற்கடிக்கப்பட்டு, அவரது இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி ராபர்ட் கிளைவ் நியமித்த மீர் ஜாஃபர், இந்த சேதத்திற்கு இழப்பீடாக ஜெயராமிற்கு ரூ. 18,000 வழங்கினார்.

இவ்வாறு கம்பெனி மூலம் பெரும் செல்வத்தைச் சேர்த்திருந்த ஜெயராமுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவர்களில் ஒருவரான ஆனந்த்ராம் என்பவர்தான் சரளமாக ஆங்கிலம் பேசிய முதல் இந்தியராக இருந்தார். எனினும் தந்தைக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். கோவிந்த்ராம் என்ற மகன்தான் வில்லியம் கோட்டையைப் புதுப்பிக்கும் வேலையை மேற்கொண்டவர். மீதமிருந்த இரண்டு மகன்களான நீலமணி, தர்ப்பநாராயண் ஆகியோரே ஜொரசங்கோ, பதுரியாகாட் என்று புகழ்பெற்ற தாகூர் குடும்பத்தின் இரண்டு கிளைகளின் முன்னோடிகளாக இருந்தனர்.

இவர்கள் இருவரும் கங்கை கரையோரமாக இருந்த பதுரியாகாட் என்ற பகுதியில் மிகப் பெரும் மாளிகை ஒன்றை உருவாகி 1765வரை ஒன்றாக வசித்து வந்தனர். அந்த ஆண்டில்தான் ராபர்ட் கிளைவ் முகலாயப் பேரரசரிடம் இருந்து வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஆட்சிப் பொறுப்பை பெற்றிருந்தார். இதில் ஒரிசா பகுதியின் சிரேஸ்தாரராக நீலமணி நியமிக்கப்பட்டார். இளையவரான தர்ப்பநாராயண் குடும்ப விஷயங்களை கவனித்துக் கொண்டதோடு, அன்று பிரெஞ்சு கம்பெனியின் ஆளுகையில் இருந்த சந்திரநாகூரின் திவானாகவும் செயல்பட்டு வந்தார். நீலமணி பின்னர் சிட்டகாங் பகுதிக்கு பொறுப்பு வகித்தார். கல்கத்தாவிற்கு வெளியே இருந்த காலம் முழுவதிலும் தான் சம்பாதித்த செல்வத்தை நீலமணி தொடர்ந்து தம்பிக்கு அனுப்பி வந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நீலமணி வீட்டிற்குத் திரும்பியபோது அவர் அவ்வப்போது அனுப்பி வைத்த தொகை குறித்து இரு சகோதரர்களுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. தம்பியின் வாதத்தில் திருப்தியடையாத நீலமணி தன் மூன்று மகன்களையும் ஒரு மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவரது ஒரு கையில், குடும்ப தெய்வ விக்ரகமான லஷ்மி –ஜனார்த்தன் சிலையும், மற்றொரு கையில் தம்பி தர்ப்ப நாராயண், அவர் அனுப்பி வைத்த தொகை இதுதான் என்று, வலியுறுத்திக் கூறித் தந்த ரூ. 1 லட்சம் அடங்கிய ஒரு பையும் இருந்தன.

(தொடரும்)

 

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *