Skip to content
Home » தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

துவாரகநாத் தாகூர்

நீலமணியின் மனமுடைந்த நிலையைக் கண்டு வருந்திய ஜோராபஹானை சேர்ந்த வைஷ்ணவ் தாஸ் என்ற பணக்கார வியாபாரி ஒரு பிகா நிலத்தை (ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு) அவருக்குப் பரிசாக வழங்கினார். ஜொரசங்கோ என்றழைக்கப்படும் அந்த இடத்தில் நீலமணி 1784இல் சிறியதொரு வீட்டைக் கட்டிக்கொண்டு குடியேறினார். மீண்டும் கம்பெனி ஊழியத்தை ஏற்றுக்கொண்டு ஒரிசாவிற்குப் பயணமானார்.

இதற்கிடையே மற்றவர்களின் தூற்றலைத் தாங்க முடியாத தர்ப்ப நாராயண் நீலமணிக்கு உண்மையிலேயே சேர வேண்டிய பணத்தைத் தர முன்வந்தார். அதன்பிறகு அந்தக் குடும்பத்தில் மீண்டும் சகஜநிலை திரும்பியது. இந்தப் பணத்தைக் கொண்டு அருகிலுள்ள இடங்களையும் விலைக்கு வாங்கி இன்றுள்ள ஜொரசங்கோ மாளிகையை நீலமணி கட்டினார். இதனருகே புகழ்பெற்ற மீன் சந்தை ஒன்று இருந்ததால் இந்தப் பகுதிக்கு மேச்சுவாபஜார் என்று பெயர். எனினும் பின்னாளில் இப்பகுதி ஜொரசங்கோ என்றே அழைக்கப்படலாயிற்று.

1793இல் இறந்துபோன நீலமணிக்கு ராம்லோசன், ராம் மணி, ராம் வல்லப் என்ற மூன்று மகன்களும் கமலாமணி என்ற மகளும் இருந்தனர். மூத்தவரான ராம் லோசன் தந்தையைப் போன்றே வணிக நுணுக்கங்கள் அறிந்தவராக, மேலும் செல்வத்தை ஈட்டும் திறன் பெற்றவராக இருந்தார். இவரது அழகான மனைவி அலக்சுந்தரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன் பிறகு அவருக்கு வேறு குழந்தை பிறக்கவில்லை.

இரண்டாவது மகனான ராம் மணி கல்கத்தா போலீஸில் பணிபுரிந்தார். இவரது முதல் மனைவி மேனகா அலக்சுந்தரியின் தங்கையும்கூட. இவருக்கு ராதாநாத், துவாரகநாத் என்று இரு மகன்கள். இரண்டாவது குழந்தை துவாரகநாத் பிறந்தவுடனேயே மேனகா இறந்துவிட, அலக் சுந்தரிதான் அவரை எடுத்து வளர்த்து வந்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு ராம் லோசம் இந்தக் குழந்தையை தன் மகனாக முறைப்படி தத்தெடுத்துக் கொண்டார்.

1794ஆம் ஆண்டு பிறந்த துவாரகநாத் மீது ராம்லோசனும் அலக்சுந்தரியும் மிகுந்த அன்பு கொண்டு வளர்த்து வந்தனர். உரிய வயதில் வீட்டிலேயே ஆசிரியரைக் கொண்டு வங்காளியும் வடமொழியும் கற்பிக்கப்பட்டது. அதே போன்று அன்றைய நீதித்துறையில் நடைமுறையில் இருந்த பாரசீக மொழி, அரேபிய மொழிகளையும் மவுல்வி ஒருவர் அவருக்குக் கற்பித்து வந்தார்.

அலக்சுந்தரி தினசரி ஜபம்-பூஜைக்கான மந்திரங்களையும் அவருக்குக் கற்பித்து வந்தார். அதனோடு கூடவே கல்கத்தாவில் இருந்த திரு. ஷெர்பார்ன் என்பவரின் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவரது விருப்பத்திற்குரிய மாணவர்களில் ஒருவராக இருந்த துவாரகநாத் பிந்தைய காலத்தில் திரு. ஷெர்பார்னின் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தொகையை வழங்கி வந்தார். துவாரகநாத்தின் 13 வயதில் 1807ஆம் ஆண்டு ராமலோசன் உயிர்நீத்தார். அதற்கு முன்பாகவே அவர் கல்கத்தாவில் இருந்த வீடுகள், வங்காள, ஒரிசா மாவட்டங்களில் இருந்த பெருமளவு நிலங்கள் ஆகியவற்றை துவாரகநாத் பெயருக்கு உயில் எழுதி வைத்திருந்தார்.

ராமலோசனின் மறைவிற்குப் பிறகு அலக்சுந்தரியும் துவாரகநாத்தின் மூத்த சகோதரனான ராதாநாத்தும் இந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து வந்தனர். அப்போது இந்த சொத்துக்களின் ஆண்டு வருமானம் ரூ. 30,000 ஆகும். துவாரகநாத் தனது 16வயதில் 1810ஆம் ஆண்டில் முறையான கல்விக்கு விடை கொடுத்துவிட்டு குடும்பச் சொத்துகளை மேற்பார்வையிடத் தொடங்கினார். 1811ஆம் ஆண்டில் ஜெசூர் பகுதியைச் சேர்ந்த ராம்தனுராய் என்பவரின் 9 வயது மகள் திகம்பரியைத் திருமணம் செய்து கொண்டார்.

1793ஆம் ஆண்டில் கார்ன்வாலிஸ் பிரபு வங்காளத்து நிலவுரிமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிரந்தரத் தீர்வு (பெர்மனெண்ட் செட்டில்மெண்ட்) என்ற விதியை அறிமுகப்படுத்தினார். இதன்படி ஜமீன் உரிமை பெற்றவர்கள் கிழக்கிந்திய கம்பெனி நிர்ணயித்த வரியைச் செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நிலத்தின் மீது நிரந்தர உரிமையைப் பெறுவர். இதன் விளைவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த ஜமீன்தார்கள் நிலம் தொடர்பான சச்சரவுகளுக்குத் தீர்வு காண கம்பெனி அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. பெரும்பாலான நேரங்களில் இவர்கள் பெரும் நஷ்டத்திற்கும் ஆளாக நேரிட்டது.

தனது சொந்த ஜமீன் நிலத்தினை மேற்பார்வையிட்டு வந்த துவாரகநாத் அன்றைய வங்காளத்தில் நிலவிய இந்த நிலையை உணர்ந்து கொண்டு கல்கத்தாவில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ராபர்ட் கட்லர் ஃபெர்கூசன் என்பவரின் கீழ் பிரிட்டிஷ் சட்டம் மற்றும் நீதிமன்ற செயல்முறைகள் குறித்துப் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

வெகு விரைவிலேயே அவருக்கிருந்த பாரசீக, அராபிய, ஆங்கில மொழி திறமையின் விளைவாக நிலம் தொடர்பான சச்சரவுகளில் ஜமீன்தார்களுக்கு உரிய ஆலோசனை, மனு தயாரித்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் (இதற்கு அவர் ஒரு வரிக்கு இரண்டு ரூபாய் வசூல் செய்து வந்தார்) போன்றவற்றைச் செய்து தருவதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 30,000 வரை வருமானம் பெற்று வந்தார் துவாரகநாத்.

ஜெசூர் ராஜா, திரிபுரா மகாராஜா, பர்தமான் ராஜா, ராணி கார்த்தியாயினி என அரசக் குடும்பத்தினர் பலரும் இவரது சேவையை நாடி வந்தனர். இவ்வாறு பல்வேறு வகையில் வருவாய் ஈட்டிய அவர் அன்றிருந்த பணக்காரர்களைப் போலவே வட்டிக்கு விட்டதோடு, நிலங்களில் முதலீடு செய்து, கூடவே பல்வேறு தொழில்களையும் தொடங்கினார். தன் குடும்பத்து நிலங்களை மேற்பார்வை செய்ய ஐரோப்பியர்களை வேலைக்கு அமர்த்திய முதல் இந்தியரும் அவரே.

கப்பல் போக்குவரத்து, நிலக்கரி உற்பத்தி-ஏற்றுமதி, பருத்தி, பட்டு, அபின், இண்டிகோ போன்ற பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த கப்பல்களை பழுது பார்ப்பதற்கான ஒரு தொழிற்சாலையையும் கல்கத்தாவிற்கு அருகே அவர் உருவாக்கியிருந்தார். பின்னர் மற்ற கம்பெனி கப்பல்களும் இங்கு வந்து நின்றன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையில் தனது பணத்தை முறையாக கையாள்வதற்கென 1828ஆம் ஆண்டில் யூனியன் வங்கியை உருவாக்கினார். 1795இல் தொடங்கி செயல்பட்டு வந்த பெங்கால் ஹுர்குரு என்ற வங்காளி மொழி தினசரி பத்திரிக்கையை 1834ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

அதேபோன்று அன்றைய இந்தியாவிலேயே முதன்முறையாக வில்லியம் கார் என்ற இண்டிகோ வர்த்தகருடன் கூட்டு சேர்ந்து கார், தாகூர் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை 1834ஆம் ஆண்டில் தொடங்கி அதன் மூலமாக ராணிகஞ்சில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்தை விலைக்கு வாங்கி நடத்தினார். மற்ற ஐரோப்பியர்களுடன் போட்டியிட்டு வென்றதோடு, இவரது ஏகபோகத்தை கிழக்கிந்திய கம்பெனி வெறுத்த போதிலும் வங்காள தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெங்கால் கோல் கம்பெனியை நிறுவினார்.

இந்திய ரயில்வே வளர்ச்சியில் பங்குபெற அவர் விரும்பினார் என்றாலும் அன்றைய கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி இடம் தர மறுத்தது. எனினும் நிலக்கரித் தொழிலில் அவரது ஆட்சி நீண்ட நாட்களுக்குக் கொடிகட்டிப் பறந்தது எனலாம். இதற்கிடையே யூனியன் வங்கி என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார். ஒருவகையில் இந்திய முதலாளித்துவத்தின் முதல் பிரதிநிதியாக துவாரகநாத் தாகூர் விளங்கினார் என்று கூறுவது மிகப் பொருத்தமான ஒன்றாகவே இருக்கும்.

இதே காலப்பகுதியில் வங்காள மறுமலர்ச்சியின் பிதாமகனாகிய ராஜா ராம்மோகன் ராயுடன் இணைந்து, கணவன் இறந்தபிறகு அவரது மனைவியை உயிரோடு எரிக்கும் சதி என்ற அவலமான சமூக நடைமுறைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து அதற்கெதிரான சட்டத்தை பெண்டிங் பிரபுவின் மூலம் நிறைவேற்றினார். குழந்தை விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்கும் இயக்கத்தை ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முன்னெடுத்தபோது அவரோடு தோளோடு தோள் நின்று போராடினார். ராஜாராம்மோகன் ராயின் அனைத்துச் சமூக நடவடிக்கைகளிலும் உற்ற தோழனாய் துவாரகநாத் இருந்தார்.

ஆங்கிலக் கல்வியே இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்று கருதி வந்த இந்த மூன்று பேரின் முன்முயற்சியில் கல்கத்தாவில் உயர் கல்விக்கென இந்து கல்லூரி (பின்னாளில் கல்கத்தா பல்கலைக்கழகமாக உருப்பெற்றது), கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆகியவை உருவாயின. இதற்கான கணிசமான நிதியையும் துவாரகநாத் வழங்கியிருந்தார்.

மேலும் இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயர்படிப்பிற்கான செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தவுடன் கிழக்கிந்திய கம்பெனியும் இரண்டு மாணவர்களுக்கான செலவை ஏற்றுக்கொண்டது.

1842ஆம் ஆண்டில் முதன் முறையாக தனது சொந்தக் கப்பலில் அவர் பிரிட்டனுக்குப் பயணமானபோது இந்த நான்கு மாணவர்களையும் அழைத்துச் சென்றார். இந்தப் பயணத்தின்போது பிரிட்டனின் விக்டோரியா மகாராணி, பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப் ஆகியோரைச் சந்தித்து அவர்களைப் பெரிதும் கவர்ந்தார். லண்டனிலும் பாரிசிலும் அவர் கொடுத்த விருந்துகள் மிகவும் புகழ்பெற்றவை. அன்றைய பத்திரிகைகள் துவாரகநாத் அளித்த விருந்துகள் பற்றி மிக விரிவாக எழுதின. கல்கத்தா பத்திரிக்கைகளிலும் வெளியாயின.

மத ஆச்சாரங்களில் திளைத்திருந்த தாய் அலக்சுந்தரி, மனைவி திகம்பரி ஆகியோரின் கடும் வெறுப்புக்கிடையே மேலைநாட்டவருடன் நெருங்கிப் பழகுவது, அவர்களுக்கு விருந்து வைப்பது என அன்றைய சமூக நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவராக துவாரகநாத் திகழ்ந்தார். அதே நேரத்தில் 1838ஆம் ஆண்டில் தாய் அலக்சுந்தரி மறைந்தபோது, ரூ. 50,000 வரை அவரது சிரார்த்தத்திற்கு செலவு செய்த அதே நேரத்தில், அவரது நினைவாக கல்வி உட்பட பல்வேறு சமூக நலச்செயல்களில் ஈடுபட்டு வந்த கல்கத்தா சாரிடபள் சொசைட்டிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

தாயின் மறைவிற்குப் பிறகு இவரது பொது நல நடவடிக்கைகள் மேலும் அதிகமாயின. மனைவி திகம்பரியின் மூலம் தேவேந்திரநாத், கிரீந்திரநாத், நாகேந்திரநாத் தாகூர் என இவருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். ஒரு கட்டத்தில் திகம்பரி இவரது கேளிக்கை விருந்து போன்ற நடவடிக்கைகளை வெறுத்தொதுக்கியபோது, துவாரகநாத் ஜொராசங்கோவில் இருந்து வெளியேறி தனி மாளிகை ஒன்றில் வசிக்கத் தொடங்கினார். அவரது விருந்துக் கொண்டாட்டங்கள் அங்கே தொடர்ந்து நடைபெற்றன. அவரது செல்வச் செழிப்பான தோற்றத்தையும் ஆடை அணிகலன்களையும் கண்ட மேலை நாட்டவர் அவரை ‘பிரின்ஸ் துவாரகநாத்’ என்றே குறிப்பிட்டு வந்தனர்.

1845ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று பெண்டிங் என்ற கப்பலில் மீண்டும் பிரிட்டனுக்குப் பயணமான துவாரகநாத் இம்முறையும் எகிப்து, இத்தாலி வழியாக லண்டனுக்குச் சென்று மீண்டும் விக்டோரியா மகாராணியைச் சந்தித்தார். பாரிசில் பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப்பைச் சந்தித்தார். வழக்கம்போல் விருந்துகளுக்கும் பஞ்சமில்லை. பாரிசில் அவர் அளித்த ஒரு விருந்தில் காஷ்மிர் போர்வைகள் சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விருந்து முடிந்தபிறகு அவை ஒவ்வொன்றையும் வந்திருந்த சீமாட்டிகளுக்கு துவாரகநாத் பரிசளித்ததை பாரீஸ் நாளிதழ்கள் மிக விரிவாக விவரித்திருந்தன.

1845 ஜூலை இறுதியில் திடீரென உடல்நலம் சீர்குலைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துவாரகநாத் ஆகஸ்ட் முதல் தேதி மாலை 6 மணிக்கு தனது 52 வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா தனது பிரதிநிதியை அனுப்பி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி உயிலின்படி அன்றைய அவரது சொத்துகளில் இருந்து வங்காளத்தில் உள்ள பார்வையிழந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கென ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

இவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஊடே இந்தியர்களின் வணிகத் திறனை நிரூபித்து, மக்களின் கல்வி, சமூக மாற்றம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராக வங்க மறுமலர்ச்சி இயக்கத்தில் தனித்தன்மையான ஒரு பங்கினை வகித்த துவாரகநாத் தாகூர் இன்று பெரிதும் மறக்கப்பட்டவராக இருக்கிறார் என்பது துயரத்திற்குரியது.

(தொடரும்)

 

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *