Skip to content
Home » தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

தேவேந்திரநாத் தாகூர்

‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூருக்கும் திகம்பரிக்கும் முதல் மகனாக செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 15 மே 1817 அன்று பிறந்தார் தேவேந்திரநாத் தாகூர். ‘கவிகுரு’ ரவீந்திரநாத் தாகூரின் தந்தை. தான் வாழ்ந்த காலத்திற்கேற்ப அருஞ்செயல்களைப் புரிந்தவரும்கூட. வங்க மறுமலர்ச்சியைத் தொடங்கிய ராம் மோகன் ராய், அவரோடு உறுதுணையாக நின்று செயல்பட்ட துவாரகநாத் தாகூர் ஆகியோரின் பிரம்ம சபையை சனாதனிகளின் பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியிலும் பிரம்ம சமாஜம் என்ற ஆலமரமாக வளர்வதற்கு அடித்தளம் இட்டவர் அவர்.

1825ஆம் ஆண்டு வரை வீட்டிலேயே வங்காளி, வடமொழி, ஆங்கிலம், பாரசீகம், அரேபிய மொழிகளை கற்றுத் தேர்ந்த தேவேந்திரர் பின்பு ராய் உருவாக்கிய இந்து கல்லூரியில் 1831ஆம் ஆண்டில் சேர்ந்து சில ஆண்டுகள் படித்தார். மிகச் சிறு வயதிலிருந்தே பாட்டி அலக்சுந்தரியின் அரவணைப்பில் வளர்ந்த அவர் இறை நம்பிக்கை மிகுந்தவராக, இந்தியாவின் ஆன்மிகச் செழிப்பில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

தீவிர வணிகரான தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க வங்கிப்பணி, வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். குடும்ப ஜமீன் நிலங்களை மேற்பார்வையிடும் பொறுப்பும் மூத்த மகன் என்ற வகையில் அவரிடமே இருந்தது. எனினும் பாட்டியின் அடியொற்றி ஆன்மிகத் தேடலிலும் பெரிதும் கவனம் செலுத்தினார் தேவேந்திரர்.

1833இல் ராஜாராம் மோகன்ராய் மறைந்த பிறகு சனாதன பழக்க வழக்கங்களுக்கு எதிரான நிலைபாட்டினை கொண்டிருந்த அவரது பிரம்ம சபை மெதுவாகத் தேய்ந்து கொண்டிருந்தது. அதை எடுத்து நடத்த எவரும் முன்வரவில்லை. இத்தகையதொரு சூழலில்தான் 1838ஆம் ஆண்டில் பாட்டி அலக்சுந்தரியின் மறைவிற்குப் பிறகு தேவேந்திரரின் சிந்தனை தீவிர ஆன்மிகத்தில் ஈடுபடலாயிற்று. வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் என அவரது ஆய்வு மெதுவாக விரிந்துகொண்டே போனது.

இதுபற்றி ஓர் அறிவார்ந்த விவாதத்தைத் தொடங்கும் நோக்கத்துடன் 1839ஆம் ஆண்டில் தத்துவரஞ்சனி சபா என்ற அமைப்பைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். பின்னாளில் இது தத்துவபோதினி சபா என்று பெயர் மாற்றம் பெற்றது. உபநிடதங்களின் சாரத்தை எடுத்துக் கூறுவது, ஆன்மிக ரீதியான விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது என்பதே இந்தச் சபையின் நோக்கம். தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அறிவுசால் பெருமக்கள் 500 பேர் சபையில் உறுப்பினர்களாக இணைந்தனர் என்பதிலிருந்தே இந்தச் சபை அன்றைய சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர முடியும்.

மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இந்தச் சபையில் செயலராகச் சில காலம் பணியாற்றினார். வங்காளத்தின் மிகப்பெரிய, செல்வாக்கு மிக்க கலாசார அமைப்பாக 1854ஆம் ஆண்டு வரை இது செயல்பட்டது. இந்தச் சபையின் சார்பில் ஓர் அச்சகத்தையும் உருவாக்கி, தத்துவபோதினி பத்ரிகா என்ற மாத இதழையும் அவர் வெளியிட்டு வந்தார்.

இந்த இதழ் வங்காளியில் கல்கத்தாவிலிருந்தும், ஆங்கிலம் மற்றும் தமிழில் அன்றைய மதராஸிலிருந்தும், இந்தி மற்றும் உருது மொழியில் அன்றைய ஐக்கிய மாகாணத்தில் இருந்த பரேலியில் இருந்தும் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்ம சமாஜின் அதிகாரபூர்வ இதழாகவும் அது விளங்கியது.

பிரம்ம சமாஜின் நோக்கங்களுக்கு ஏற்ப இந்த இதழ் பெண் கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை முன்னிறுத்தியும், பொருட்களின் மீதான அதீத ஈடுபாடு, பலதார மணம் ஆகியவற்றைக் கண்டித்தும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. அதே நேரத்தில் பிரம்ம சமாஜின் வாராந்திர வழிபாட்டுக்கான செயல் திட்டங்களும் கிறித்துவ தேவாலயங்களில் உள்ள வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டன.

பிரம்ம சமாஜத்தின் வழிபாட்டுப் பாடல்களை அந்த நேரத்தில் எழுதியவர் சத்யஜித் ரேயின் தாத்தாவான உபேந்திர கிஷோர் ராய் சவுதுரி ஆவார். அவரே பாடல்களுக்கு இசையும் அமைத்தார். அவரது சகோதரர்கள் பலரும் பிரம்ம சமாஜிகளாக உருவெடுத்தனர். பின்னர் சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரேயும் பாடல்களை எழுதும் பணியில் அவரோடு சேர்ந்துகொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல்களை இறுதிப்படுத்தும் நிகழ்வுகள் ஜொராசங்கோவில் நடந்தன. ரேயின் தாத்தாவும் தந்தையும் இந்தக் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சுகுமார் ரே உடல்நலமின்றி மறையும் வரை ரவீந்திரர் அவரோடு மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவரது இறுதித் தருணத்தில் அருகில் அமர்ந்து சுகுமார் ரேயின் பாடல்களை ரவீந்திரர் பாடி மகிழ்வித்தார் என்பதே அவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த நட்பினை சுட்டிக் காட்டுவதாக இருக்கும்.

1848இல் ரிக் வேத சாரத்தை எடுத்துக் கூறும் தொடர் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார் தேவேந்திரர். இதுவே பின்னர் 1869இல் ‘பிரம்ம தர்மா’ என்ற நூலாக வெளிவந்தது. 1850இல் உபநிடதங்களில் ஒன்றான கடோபநிஷத்தை வங்காளியில் பதிப்பித்தார். தேவேந்திரரின் இத்தகைய முயற்சிகளால் பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கு நாடு முழுவதும் பரவியது.

இவ்வாறு தீவிரமாகச் செயல்பட்டு வந்த நேரத்தில்தான் வங்காளத்தின் ஞானகுருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘வேத, உபநிடத நெறிகளை பின்பற்றும் தேவேந்திரர் மகரிஷி ஜனக மகாராஜாவைப் போன்ற பெருமை மிக்கவர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகே அவரது பெயரோடு ‘மகரிஷி’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

எனினும் 1850களில் கிறித்துவ மத போதனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த மிகச் சிறந்த பேச்சாளரான கேசவ் சந்திர சென் (இவரது நாவன்மையால் பிரம்ம சமாஜத்தின் புகழ் கணிசமான அளவில் பெருகியது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்), நாத்திகரான அக்‌ஷய் குமார் தத்தா ஆகியோர் சமாஜின் தீவிரமான வேத நெறி சார்பைக் கண்டித்து பிரசாரம் செய்து வந்தனர். இதன் விளைவாக தேவேந்திரர் சார்ந்த பிரிவினர் ஆதி பிரம்ம சமாஜிகள் என்று அழைக்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த தேவேந்திரர் மன அமைதி தேடி நாட்டின் வடபகுதி எல்லையில் இருந்த சிம்லாவிற்குச் சென்று சில காலம் தங்கியிருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவின் பல்வேறு புண்ணியத் தலங்களுக்கும் பயணம் செய்த அவர் இறுதியில் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திற்குச் சென்றபோது செம்மண் படிந்த ஒரு நிலத்தில் இரண்டு ஏழிலைப் பாலை மரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி குடைவிரித்திருந்ததைக் கண்டு அதன் கீழ் சென்று அமர்ந்தபோது மனம் மிகவும் அமைதியானதாக உணர்ந்தார். உடனேயே அந்த மரங்கள் உள்ளிட்டு அருகிலிருந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி ஆசிரமம் போன்ற ஏற்பாட்டை செய்து கொண்டு அங்கேயே சில காலம் தங்கினார். இந்த இடத்திற்கு அமைதியின் இருப்பிடம் என்ற பொருளில் ‘சாந்திநிகேதன்’ என்று பெயர் வைத்தவரும் அவரே.

இதே இடத்தில்தான் சிறிது காலத்திற்குப் பிறகு அவரது கடைசி மகன் ரவீந்திரநாத் தாகூர் ஒரு குருகுலப் பள்ளியைத் தனது இரு குழந்தைகளுக்காக வேண்டி ஐந்து மாணவர்களுடன் தொடங்கினார். அதுவே பின்னாளில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக, கீழைத் தேயத்தின் தனிச்சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துக் கூறும் ஆவணப் பெட்டமாக உருவெடுத்தது.

பொதுச் சமூகத்தைப் பொறுத்தவரையில் 1851ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியான பிரிட்டிஷ் இந்தியர்கள் கழகம் என்ற அமைப்பு உருவானபோது அதன் செயலாளராகவும் தேவேந்திரர் செயல்பட்டார். கல்கத்தாவில் பெண்களுக்கான முதல் பள்ளியான பெதூன் கல்லூரியின் நிறுவனர்களில் அவரும் ஒருவர் என்பது மட்டுமல்ல; தன் குடும்பத்துப் பெண்களின் கல்விக்கு ஊக்கம் கொடுப்பவராகவும் இருந்தார். அவரது பெண்கள் இருவர் பிற்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களாகவும் இருந்தனர். அவரது இரண்டாவது மருமகளான ஞானதாநந்தினி கொசுவம் வைத்துப் புடைவை அணியும் பாணியை, முழங்கை வரை ரவிக்கை அணியும் வழக்கத்தை வங்காளத்தில் அறிமுகப்படுத்தியவர். மற்றொரு மருமகளான காதம்பரி அவரது கணவரின் ஊக்கத்தோடு ஹூக்ளி நதிக்கரையில் குதிரை சவாரி செய்து அன்றைய சமூகத்தின் முகத்தில் அறைந்தவர்.

ஞானதாநந்தினி, சத்யேந்திரநாத், ஜோதீந்திரநாத், காதம்பரி
ஞானதாநந்தினி, சத்யேந்திரநாத், ஜோதீந்திரநாத், காதம்பரி

1845 ஆகஸ்டில் துவாரகநாத் மறைந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தொடங்கிய தொழில்கள் ஒவ்வொன்றாகச் சீரழியத் தொடங்கின. அன்று பரவலாக நிலவிய தொழில் மந்தமும் பொருளாதார தேக்கமும்தான் அதற்குக் காரணம் என்றபோதிலும், இதனால் ஏற்பட்ட கடன் அனைத்தையும் அடைக்க வேண்டிய கடமை தேவேந்திரரின் மீது விழுந்தது.

துவாரகநாத் இறப்பதற்கு முன்பு எழுதிய உயில்படி ஜொரசங்கோ குடும்ப மாளிகை, நிலபுலங்கள் ஆகியவை குடும்பத்தினரின் கைகளிலேயே இருக்க முடியும் என்ற போதிலும், மற்ற சொத்துகளை எல்லாம் விற்று கடன் கொடுத்தவர்களிடம் தேவேந்திரர் ஒப்படைத்ததோடு, மீதமுள்ள கடனைத் திருப்பித் தரும் வரை வீடு மற்றும் நிலங்களின் பத்திரங்களையும் அவர்களிடம் ஒப்படைக்கவும் முன்வந்தார். அவரது இந்தச் செயல் உறவினர்கள் மட்டுமின்றி, கடன் கொடுத்தவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும், அவர் 1905ஆம் ஆண்டில் மறையும் வரையில் நிலத்தில் இருந்து வரும் வருவாயில் இருந்து படிப்படியாக தொடர்ந்து செலுத்தி கடன் முழுவதையும் அடைத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாகூர் குடும்பத்தின் பூர்விக நிலமான ஜெசூர் பகுதியில் பிறந்து வளர்ந்த சாரதா தேவியை (1826-1875) திருமணம் செய்து கொண்டார் தேவேந்திரர். இவர்கள் இருவருக்கும் மொத்தம் 15 குழந்தைகள் பிறந்தன. கடைசி குழந்தைதான் ஜொராசங்கோ தாகூர் குடும்பத்தின் பெயரை உலகமெங்கும் எடுத்துச் சென்ற ரவீந்திரநாத் தாகூர் (1861-1941). அவரது பதின்பருவத்தில்தான் தாய் சாரதா தேவி மறைந்தார்.

தாகூர் குடும்பத்தின் வழக்கப்படி குழந்தை பிறந்தபிறகு அதை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு முழுவதும் வீட்டு வேலைக்காரர்களிடமே இருந்தது. எனவே தாய்ப்பாசத்தின் ஏக்கத்தை தாகூர் தனது கவிதைகளில் அவ்வப்போது வெளியிட்டிருப்பதைக் காண முடியும். குடும்ப வழக்கப்படி நாலைந்து வயது வந்ததும் வீட்டிலேயே ஆசிரியரைக் கொண்டு கல்வி கற்பிக்கும் வழக்கம் அவருக்கும் தொடர்ந்தது.

ஆனால் கடைக்குட்டியான ரவீந்திரரைப் பொறுத்தவரையில் அவருக்கு முன் பிறந்த அண்ணன்களும் அக்காக்களும் கல்வியில், கலைகளில் சிறந்தவர்களாக ஏற்கெனவே இருந்தமையால் அவர்களின் திறமைகள் அனைத்தையும் கவனித்து அவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு சிறுவயது முதலே வாய்த்தது.

இந்தப் பின்னணியில்தான் 8 வயதில் அவர் கவிதை எழுதத் தொடங்கினார். தன் வயதொத்த குழந்தைகள் யாரும் இல்லாமல் தனித்து நின்ற ரவீந்திரரின் நிலையை உணர்ந்த தேவேந்திரர் ஒரு முறை வட இந்தியாவிற்கு பயணம் சென்றபோது அவரையும் உடன் அழைத்துச் சென்று வெளியுலகத்தை அறிமுகம் செய்தார். இந்த நேரத்தில்தான் ஒருமுறை ஆங்கிலத்தில் சானெட் என்று அழைக்கப்படும் 14 வரி கவிதை ஒன்றைச் சந்தத்தோடு அவர் பயிற்றுவித்தபோது, ரவீந்திரர் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஒரு வானவில்லை முதல் நாளன்று கண்ட தருணத்தை உள்ளடக்கி அதே சந்தத்தில் ஒரு பாடலைப் பாடினார். எதுகையும் மோனையும் இயைந்த தாகூரின் இந்தப் பாடல்தான் தேவேந்திரருக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.

இப்போது, ரவீந்திரரின் உடன் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். தேவேந்திரர் – சாரதா தேவி தம்பதியருக்கு முதன்முதலில் பிறந்த பெண் குழந்தை சில நாட்களிலேயே இறந்துவிட்டது. அதன்பிறகு துவிஜேந்தரநாத், சத்யேந்திரநாத், ஹேமேந்திரநாத், பிரேந்திரநாத், ஜோதீந்திரநாத், புண்யேந்திரநாத், பூதேந்திரநாத், சோமேந்திரநாத் ஆகிய சகோதரர்களும், சுவர்ணகுமாரி, சுகுமாரி, சாரதாமணி, வர்ணகுமாரி, சவுதாமினி ஆகிய சகோதரிகளும் ரவீந்திரருக்கு மூத்தவர்களாக இருந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவருமே தனித்தன்மை கொண்டவர்களாக விளங்கி, வங்காள சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்தனர் என்பதோடு, அதன் மாற்றத்திற்கான விதைகளைத் தூவியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

 

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *