Skip to content
Home » தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்

தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்

ஜொரசங்கோ இல்லம்

ரவீந்திரரை அவரது மூத்த சகோதரர்களும் சகோதரிகளும்தான் பல்வேறு வழிகளிலும் செழுமைப்படுத்தினார்கள் என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். மகரிஷி தேவேந்திரரின் பிரம்ம சமாஜத்தின் இறைவணக்க முறையைக் கண்டிப்போடு பின்பற்றிய இந்தக் குடும்பம்தான் அந்நிய ஆட்சிக்கு எதிராக உருப்பெற்று வந்த எதிர்ப்புணர்வைப் படிப்படியாக உள்வாங்கிக்கொண்டது. பல்வேறு வழிகளிலும் தங்களது திறமைகளைக் கொண்டு மக்களிடையே அதைப் பரவலாகக் கொண்டு செல்வதிலும் வெற்றி பெற்றது.

ரவீந்திரரின் மூத்தோர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய திறன் பெற்றவர்களாக இருந்தனர் என்பதை அறியும்போதுதான், அவர்கள் எத்தகைய தாக்கத்தை அவர் மீது செலுத்தினர் என்பதை அறிய முடியும். அதற்கான அறிமுகம்தான் இப்பகுதி.

இவர்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் துவிஜேந்திரநாத் தாகூர் (1840-1926). படா பாபு (மூத்தவர்) என்று குடும்பத்தில் உள்ள அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த இவர் கவிஞர், கணித மேதை, தத்துவ ஞானி, ஓவியர் என்பது மட்டுமின்றி, வங்காளி மொழிக்கான சுருக்கெழுத்து முறை, இசைக் குறிப்புகளை எழுதுவது ஆகியவற்றையும் முதலில் உருவாக்கியவர்.

வடமொழியிலும் திறமை பெற்ற இவர் தனது 20வது வயதில் காளிதாசரின் மேகதூதம் என்ற காவியத்தை வங்காளி மொழியில் கவிதையாகவே படைத்தவர். மகரிஷி உருவாக்கிய தத்துவபோதினி பத்ரிகாவின் ஆசிரியராக 25 ஆண்டுகள் செயல்பட்டவர். வங்காளி மொழியின் மீது தீராத பற்று கொண்ட இவர் வங்கிய சாகித்ய பரிஷத், வங்கிய சாகித்ய சம்மேளன் ஆகிய அமைப்புகளின் செயலாளராகவும், தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பிரம்ம சமாஜத்தின் தத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் 1863 முதல் 1920 வரை ஏராளமான நூல்களையும் பிரசுரங்களையும் எழுதிய அவர், ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை மறுத்து எழுதிய நூல்கள் அன்றைய சூழலில் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பிரம்ம சமாஜத்தின் வழிபாட்டுப் பாடல்களை உருவாக்கி அவற்றுக்கு இசை வடிவம் கொடுத்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். கணிதத் துறையில் ஜியோமெட்ரி பிரிவில் புதிய கருதுகோள்களை முன்வைத்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கண்ணோட்டத்திற்கு விதை போடும் வகையில் சமூகத்தின் இதர பிரிவினருடன் இணைந்து ‘இந்து மேளா’ என்ற இயக்கத்தை முன்னெடுத்தவர். இதையொட்டி அவர் அந்நாளில் புகழ்பெற்ற பல தேசபக்திப் பாடல்களையும் எழுதினார். மண்ணின் விசுவாசி என்ற புனைபெயரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தவர்.

ரவீந்திரரின் சாந்திநிகேதன் தொடர்பான முயற்சிகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகரிஷி 1905இல் மறைந்தபிறகு நிரந்தரமாக சாந்திநிகேதனில் தங்கிவிட்ட இவர் ஜனவரி 19, 1926இல் மறைந்தார்.

இவரது மகன்வழி பேரனான சௌம்யேந்திரநாத் தாகூர் இந்திய இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தபோதிலும், ஜமீன்தாரி முறையை எதிர்த்து வங்காளம், அசாம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளை அணிதிரட்டியவர். கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன்முதலில் வங்காளி மொழியில் மொழிபெயர்த்தவர். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வந்த அவர், அன்றைய கம்யூனிஸ்ட் அகிலத்துடனும், ஸ்டாலினுடனும் ஆன தனது கருத்து வேறுபாடுகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தியவரும் ஆவார்.

பிரெஞ்சு, ருஷ்யன், ஜெர்மன், ஆங்கிலம், வங்காளி ஆகிய மொழிகளில் பல இடதுசாரி தத்துவ நூல்களை எழுதியவர். 1934இல் புரட்சிகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி 1974இல் தான் மறையும்வரை நடத்தி வந்த அவர், வங்கதேச விடுதலைக்கான போராட்டத்திலும் தீவிர பங்காற்றியவர்.

அடுத்த சகோதரரான சத்யேந்திரநாத் தாகூர் (1842-1923) நவீன இந்திய வரலாற்றில் தனியிடம் பெற்றவர். பிரிட்டிஷ் ஆட்சிப் பணியாக அன்றிருந்த ஐ.சி.எஸ். போட்டியில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் என்ற பெருமை பெற்றவர். வங்காளி, வடமொழி, ஆங்கிலம், மராத்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர், ஏனைய சகோதரர்களுக்கு வெகுகாலம் முன்பாகவே பெண் விடுதலை குறித்து தீவிர கவனம் செலுத்தியவர். தாகூர் குடும்பத்தின் மூலமாக சமூகத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில், இவரும் இவரது மனைவி ஞானதாநந்தினியும் மிகப்பெரும் பங்களிப்பைச் செலுத்தினர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் அதிகாரியாக பம்பாய் ராஜதானியில் பணிபுரிந்த போதிலும், கல்கத்தாவில் உருவாகியிருந்த இந்து மேளா அமைப்பின் மூலம் நாட்டுப்பற்றை மக்களிடையே பரப்புவதில் கணிசமான பங்கு வகித்தார். இவர் எழுதிய பாடல்கள் மக்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தன. தன் அண்ணனைப் போலவே வங்கிய சாகித்ய பரிஷத், வங்கிய சாகித்ய சம்மேளன் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் செயல்பட்டார்.

பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகளில் அன்றைய தலைவரான கேசப் சந்திர சென்னுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர். பின்னர் அந்த அமைப்பின் ஆச்சார்யராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைவராகவும் செயல்பட்டார். பிரம்ம சமாஜத்தின் வழிபாட்டுப் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வந்தார். பிரம்ம சமாஜத்தின் தத்துவபோதினி பத்ரிகாவின் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் செயல்பட்டார்.

திலகரின் பகவத்கீதை உரை, காளிதாசரின் மேகதூதம், துக்காராமின் அபாப்கா ஆகியவற்றை வங்காளியில் மொழிபெயர்த்தார். வங்காளி மொழியில் ஒன்பது நூல்களையும் ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் எழுதியுள்ள சத்யேந்திர நாத், வங்காளி சமூகத்தில் பெண் விடுதலைக்கான முதல் கலகக் குரலை முதலில் வீட்டிற்குள்ளேயே எழுப்பி, பின்பு தன் மனைவியின் மூலமாக அதை சமூகத்தில் பரவலாகப் பரவச் செய்ததில் தனியிடம் பெற்றவர்.

இந்தத் தம்பதியரே சமூக அவலங்கள், பெண் அடிமைத்தனம், அந்நிய அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிரான உணர்வுகளை ரவீந்திரரின் மனதில் வேர்விடச் செய்ததில் பெரும்பங்கினை வகித்தனர் எனலாம். அவரது முயற்சிகள் ஒவ்வொன்றையும் இத்தம்பதியினர் உத்வேகமூட்டி வளர்த்தனர். இவர்களின் சுரேந்திரநாத், இந்திராதேவி ஆகிய குழந்தைகள் இருவருமே தாகூரின் மிக நெருங்கிய சகாக்களாகத் திகழ்ந்தவர்கள். அவரது எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களும் கூட. நாட்டின் மேற்குப் பகுதியில் சத்யேந்திரநாத் பணிபுரிந்தபோதுதான் பல இடங்களுக்கும் பயணம் செய்து புதிய அனுபவங்களைப் பெறவும், புதிய கவிதைகளை எழுதவும் வாய்ப்பு உருவானது என்று ரவீந்திரர் பல தருணங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

மகரிஷியின் மூன்றாவது மகனான ஹேமேந்திரநாத் தாகூர் (1844-1884) பிரம்ம சமாஜத்தின் அமைப்புச் சட்டம் உருவானபிறகு இந்தக் குடும்பத்தில் பிறக்கும்போதே பிரம்ம சமாஜியாக உதித்தவர். வயதில் இளையவராக இருந்தபோதிலும் பிரம்ம சமாஜத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் மகரிஷிக்குமான தூதராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவர். குடும்ப நிலங்களை மேற்பார்வையிடும் பணியை மேற்கொண்டதோடு, குடும்பத்தில் தனக்கு பின்னாலிருந்த குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பையும் நிர்வகித்து வந்தவர்.

கண்டிப்பிற்குப் பெயர்போனவர் என்ற போதிலும் அவர்களது இசை, நாடகம், எழுத்து ஆகிய திறமைகளை ஊக்குவித்தவர். ‘குடும்பத்தின் விஞ்ஞானி’ என்று பட்டம்பெற்ற இவர் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். இயற்பியல், வேதியியல் ஆகியவை குறித்த பல கட்டுரைகளையும் எழுதியவர். ஒலி (ரேடியோ) அலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வந்தவர்.

யோகாவிலும் உடற்பயிற்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், மல்யுத்த வீரராக, ஜூடோ, நிஞ்சா போன்ற தற்காப்புக் கலைகளை அறிந்தவராகவும் இருந்தார். மிகுந்த முற்போக்கு எண்ணம் கொண்டவர். வழக்கமாக குடும்பத்துப் பெண்களுக்கு வங்காளத்திலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்விப்பதற்கு மாறாக, தனது பெண்களுக்கு அசாம், உத்திரப் பிரதேசம் போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வரன் தேடி மணம் செய்வித்தவர். தனது பெண்களுக்கு பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகள், இசை, நாடகம் ஆகியவற்றிலும் பயிற்சி அளித்தவர்.

தனது சகோதரிகளின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் தனிப்பட்ட அறக்கட்டளைகளை உருவாக்கியவர். குடும்ப நிலங்களில் பணிபுரிந்து வந்த விவசாயிகளிடம் மிகுந்த அன்பு செலுத்தி, அவர்களிடம் நற்பெயரை பெற்றவர். 40 வயதிலேயே இவரது மறைவு என்பது வங்காள அறிவியல் உலகிற்கு மிகப்பெரும் பேரிழப்பாக இருந்தது.

மகரிஷியின் ஐந்தாவது மகனான ஜோதீந்திரநாத் தாகூர் (1849-1925) நாடக ஆசிரியர், பாடலாசிரியர், இசை நிபுணர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், மிகச் சிறந்த அமைப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவராவார். மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க 1867இல் உருவாக்கப்பட்ட இந்து மேளாவின் தொடக்க நிகழ்வில் ‘துவக்கம்’ என்ற இவரது பாடல் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. இது போக, பிரம்மதர்மபோதினி சபா (1872), சரஸ்வத சமாஜ் (1872) ஆதி பிரம்ம சமாஜ் சங்கீத் வித்யாலயா (1875), சஞ்சீவன் சபா போன்ற பல அமைப்புகளையும் இவர் உருவாக்கினார்.

நாட்டுப் பற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நாடகங்களையும் எழுதி உருவாக்கினார். அதேபோன்று இசை நாடகங்களையும் எழுதி பரவலாக அறிமுகம் செய்தார். இவர் எழுதிய நாடகங்கள் ஜொரசங்கோ இல்லத்தின் பொதுக் கூடத்தில் முதலில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, பின்னர் கல்கத்தாவின் புகழ்பெற்ற நாடக அரங்குகளில் நடத்தப்பட்டன.

இந்தியாவின் பண்டைய வரலாற்றை எடுத்துக் கூறி, அதன் மூலம் நாட்டுப் பற்றை வளர்ப்பதாக இவரது நாடகங்கள் திகழ்ந்தன. சொந்த நாடகங்கள் மட்டுமின்றி, வடமொழி, பிரெஞ்சு, ஆங்கில நாடகங்களையும் வங்காளியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இசை நாடகம் ஒன்றை இவர் உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட ஓரிடத்தில், தேவையான இசைக் கோர்வையோடு இயைந்த ஒரு பாடலை உருவாக்க முடியாமல் இவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, சிறுவனான ரவீந்திரர் நாடகத்தில் அந்தத் தருணத்திற்கு உகந்த வகையில் ஒரு பாடலைச் சந்தத்தோடு உடனடியாக இவர் முன்னால் பாடினார். அந்தப் பாடல் மிகப் பொருத்தமாக இருந்ததோடு, அதற்காகவே ரசிகர்கள் கூட்டம் திரண்டதாகவும் செய்தி உண்டு.

ஜோதீந்திரநாத் பாடலாசிரியராக மட்டுமின்றி, இசை நிபுணராக, இசைக் கருவிகளை வாசிப்பவராகவும் இருந்தார். 1897இல் இசைக் குறிப்புகளை பதிவு செய்யும் முறையை கற்க உதவி செய்யும் ஸ்வரலிபி கீதிமாலா என்ற இவரது நூல் வங்காளி மொழியில் மிக முக்கியமான ஒன்றாகும். அன்று புகழ்பெற்றிருந்த 168 பாடல்களுக்கான இசைக் குறிப்புகள் இந்நூலில் அடங்கியிருந்தன. அதில் 68 பாடல்கள் ரவீந்திரர் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்ம சமாஜத்தில் இசைப் பள்ளி ஒன்றை தொடங்கியதோடு, இசை தொடர்பான இரண்டு இதழ்களையும் நடத்தி வந்தார். பியானோ அல்லது வயலினில் இவர் புதிய இசையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது அந்த இசைக்கேற்ப ரவீந்திரரும், அவரது மூத்த சகோதரியான சுவர்ண குமாரியும், அக்‌ஷய் சவுதரி என்பவரும் புதிய பாடல்களை புனைவது வழக்கம் என்று ரவீந்திரர் தனது நினைவலைகளில் குறிப்பிட்டிருந்தார்.

மனித உருவங்களை வரைவதில் மிகச் சிறந்தவராக இருந்த ஜோதீந்திரநாத் தனது தாத்தா துவாரகநாத் போலவே சணல், இண்டிகோ, கப்பல் போக்குவரத்து ஆகிய தொழில்களில் ஈடுபட்ட போதிலும் தொழில்துறையில் வெற்றி பெற இயலவில்லை. பாடல்கள், இசை, ஓவியம், நாடகம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு அவை அனைத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்த ஜோதீந்திரநாத் ராஞ்சியில் 1925ஆம் ஆண்டில் காலமானார்.

மகரிஷியின் நான்காவது மகனான பிரேந்திரநாத் (1845-1915) மனநலம் குன்றியவர். இவரது மகனான பாலேந்திரா சாந்திநிகேதன் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர். எனினும் மிக இளம் வயதிலேயே அவர் உயிர்நீத்தார். ஆறாவது மகனான பூர்ணேந்துநாத் (1851-1859) மிகச் சிறுவயதிலேயே உயிர்நீத்தார்.

ஏழாவது மகனான சோமேந்திரநாத் (1859-1925) மிகச் சிறுவயதிலிருந்தே ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே திருமணம் செய்து கொள்ளாமல் ஜொரசங்கோவில் ஓர் அறையில் தங்கியிருந்தார். அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் மிகுந்த அன்புடன் பழகியவர் என்ற பெயரும் பெற்றவர். படுத்தபடியே இவர் எழுப்பும் இசையொலிக்கு ஏற்ப பல பாடல்களை தான் இயற்றியதாகவும், எனினும் அவற்றில் பலவும் பதிவு செய்யப்படாமல் போனது என்றும் ரவீந்திரர் தனது நினைவலைகளில் குறிப்பிட்டிருந்தார்.

ஜொரசங்கோ குடும்பத்தின் இதர பெண்கள் ரவீந்திரரின் வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அடுத்த பத்தியில் காணலாம்.

(தொடரும்)

படம்: ஜொரசங்கோ இல்லம்

 

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *