ஜொரசங்கோ குடும்பத்தின் கடைக்குட்டியான ரவீந்திரரின் மூத்த சகோதரர்களைப் போலவே, மூத்த சகோதரிகளும், அவரது அண்ணிகளும் தன்னளவில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கேயுரிய வகையில் ரவீந்திரரின்மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதை, அவர் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் நம்மால் காணமுடியும்.
அந்தக் குடும்பத்தினரின் எழுத்து, இசை, நாட்டியம், நாடகம், ஓவியம் என்று பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஜோதீந்திரநாத் 1877இல் பாரதி என்ற இதழைத் தொடங்கினார். குடும்பத்தின் மூத்த மகனான துவிஜேந்திரநாத் இந்த இதழுக்கு முதல் ஏழு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். பின்பு மகரிஷியின் நான்காவது மகளான சுவர்ணகுமாரி 11 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்தக் காலப்பகுதியில் இந்த இதழின் உள்ளடக்கம் ரவீந்திரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பில் பரவலாக விரிவடைந்தது.
பின்பு அவரது மகள்களான ஹிரண்மயி, ஜ்யோத்ஸ்னா (இவரும் சத்யேந்திரநாத் தாகூரைப் போலவே ஐசிஎஸ் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் மேற்குப் பகுதியில் பணிபுரிந்தவர்கள்) ஆகியோர் 12 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினர். அதன் பின்பு ஓராண்டு ரவீந்திரர் அதன் ஆசிரியராக இருந்தார். பின்பு மீண்டும் சுவர்ணகுமாரி 8 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். மீண்டும் ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அவர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து 50 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த அந்த இதழுக்கு முடிவுரை எழுதினார்.
இந்த இதழ் வெளிவரத் தொடங்கியபோது ரவீந்திரருக்கு 16 வயது. அதன் முதல் இதழில் இருந்தே அவர் கவிதை, பாடல், சிறுகதை, நாடகம், கட்டுரை, பயணக் கட்டுரை என பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்தார். இடைவெளியின்றித் தொடர்ந்து எழுதுவதற்கான நிர்ப்பந்தத்தை தனக்குக் கொடுத்ததும், வயதுக்கு மீறிய தனது எழுத்துகளை வெளியிட்டதும் இந்த இதழ்தான் என்று ரவீந்திரர் தனது நினைவலைகளில் கூறியிருப்பார்.
ஜொரசங்கோ இல்லத்தவரின் திறமைகளை மேலும் மேலும் வளர்ப்பதில் பாரதி இதழ் மிகப்பெரும் பங்களிப்பு செய்தது. இல்லத்து மருமகள்களான ஞானதாநந்தினி, காதம்பரி ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் ஞானதாநந்தினி சிறுவர்களின் எழுத்துகளை முன்னெடுப்பதற்கெனவே ‘பாலக்’ என்ற இதழை வெளியிடத் தொடங்கினார். இதில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளின் எழுத்துக்கள் மட்டுமின்றி, ரவீந்திரரின் எழுத்துக்களும் இடம்பெற்றன. இது 11 இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. பின்னர் இந்த இதழ் சுவர்ணகுமாரி ஆசிரியராக செயல்பட்டு வந்த பாரதியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இந்தச் சிறுவர் இதழில் ரவீந்திரர் தனது ஹசாரிபாக் சுற்றுலாப் பயணம் பற்றி ‘பத்து நாள் விடுமுறை’ என்ற தலைப்பிலும் 1878இல் இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது முதன்முதலில் எதிர்கொண்ட பனிப்பொழிவு பற்றியும் கட்டுரைகளை எழுதியிருந்தார்.
ரவீந்திரரின் மூத்த சகோதரி சவுதாமினி (1847-1920) சாரதா பிரசாத் கங்குலி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். வங்காளியிலும் வடமொழியிலும் மிகச் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த இவர், வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி அற்புத ராமாயணம் என்ற கவிதை நூலை வங்காளி மொழியில் எழுதினார். 19ஆம் நூற்றாண்டிலேயே சீதையின் பார்வையில் ராமாயணத்தை முன்வைத்தவர் என்ற பெருமையும் பெற்றவர். கல்கத்தாவில் பெண்களுக்கென தனியாக உருவாக்கப்பட்ட பெத்தூன் பள்ளியின் முதல் ஆண்டு மாணாக்கர்களில் ஒருவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரைத் தொடர்ந்து மற்ற சகோதரிகளும் பெத்தூன் பள்ளியில் படித்தார்கள்.
மகரிஷியின் இரண்டாவது மகளான சுகுமாரி (1850-1884) பாப்னா மாவட்டத்தில் (இன்று வங்கதேசத்தில் உள்ளது) பருய்பூர் என்ற ஊரின் ஜமீன் பரம்பரையில் வந்த துர்காதாஸ் சவுதரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் ஓர் அதிகாரியாக இருந்தவர். இவரது மகன்களில் ஒருவரான ப்ரமத சவுதரி வழக்கறிஞராக இருந்தபோதிலும், வங்க இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளராகக் கருதப்படுபவர்.
பீர்பால் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய கவிதைகளும், கதைகளும் புகழ்பெற்றவை. வங்காளி மொழியில் வடமொழி கலப்பை எதிர்த்து இயக்கம் நடத்திய முன்னோடி. அவர் நடத்திய சபுஜ் பத்ரா என்ற இதழ் வங்காளி இலக்கியத்தை நவீன உலகை நோக்கி நகர்த்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. இவரது மற்றொரு மகனான டாக்டர் மன்மதநாத் சவுதரி அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்திய சர்ஜன் ஜெனரலாக பணியாற்றியவர். இவர் சவுதாமினியின் பேத்தி லீலாதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இவரது மகள் தேவிகா ராணி ரோரிச் இந்தியத் திரைப்பட உலகின் முதல் நடிகை என்ற அடையாளத்தைப் பெற்றவர்.
மகரிஷியின் நான்காவது மகளான சுவர்ணகுமாரி (1855-1932) கவிஞர், நாவலாசிரியர், இசையமைப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். வங்காளி மொழியில் சிறுகதை, நாவல் ஆகிய துறைகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வங்காளி இலக்கியத்தில் பெண்களின் பங்கினைப் பெருமளவிற்கு விரிவுபடுத்தியவர். ஜொரசங்கோ குடும்பத்தின் பாரதி இதழை மிக நீண்ட காலம் ஆசிரியராக இருந்து நடத்தியவர். குறிப்பாக ரவீந்திரரின் பன்முக எழுத்துக்கு அடித்தளம் இட்டவர்.
இவர் ஜானகிநாத் கோஷால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். நதியா மாவட்டத்தில் பெரும் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகிநாத் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்ததால், குடும்பத்தினர் அவரை விலக்கி வைத்து சொத்துரிமையையும் பறித்துக் கொண்டனர். எனினும் தனது வணிகத் திறமையால் நிலபுலன்களை வாங்கி ஜமீன்தாராகவும் உயர்ந்தார்.
இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர்களில் ஒருவர். அன்னி பெசண்ட்டின் தியாசாஃபிகல் சொசைட்டி கிளையை வங்காளத்தில் தொடங்கியபோது சுவர்ண குமாரிதான் அதன் தலைவராக இருந்தார். பொது அரசியலில் நேரடியாக ஈடுபட்ட முதல் பெண்மணியாகவும் அவர் இருந்தார். இந்தியப் பொருட்களை முன்னிறுத்தும் நோக்கத்துடன் லக்ஷ்மி பண்டார் என்ற கடையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.
1896ஆம் ஆண்டில் சக்தி சமிதி என்ற அமைப்பை நிறுவினார். அன்றைய நாட்களில் பெண்களின் உரிமைகளுக்கெனவே உருவான முதல் அமைப்பான இந்தச் சமிதியின் நோக்கம் ஆதரவற்றோர், கணவனை இழந்தோர் ஆகியோரின் வாழ்க்கை நிலையை மாற்றுவதே ஆகும். அவர்களுக்குக் கல்வி வழங்குவதில் இருந்து தொடங்கி கைத்தொழிலை பயிற்றுவித்து அதன்மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள உதவுவதும் இதன் வழிமுறையாக இருந்தது. இந்தப் பெண்கள் உருவாக்கிய கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கென வங்காளத்தின் பல்வேறு நகரங்களில் கண்காட்சிகளை நடத்தி இந்தியப் பொருட்களின் மீது கவனத்தைத் திருப்புவதிலும் இந்த அமைப்பு வெற்றி பெற்றது.
சுவர்ணகுமாரியின் மூத்த மகள் ஹிரண்மயி விதவைகளுக்கான ஆசிரமத்தை நிறுவி அதை மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். இரண்டாவது மகளான சரளா தேவி (1872-1945) ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று பதக்கமும் பெற்றவர். தொடக்கத்தில் மைசூரில் மகாராஜா பள்ளியில் ஆசிரியையாக ஓராண்டு பணிபுரிந்து, உடல்நிலை பாதிப்பினால் மீண்டும் கல்கத்தா வந்து இளைஞர்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்களை நடத்தி வந்தார்.
சுவாமி விவேகானந்தர், நிவேதிதா ஆகியோருடன் நெருக்கமாக இருந்த இவர், அன்றைய தீவிரவாத குழுக்களில் ஒன்றான அனுசீலன் சமிதியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர். ஆர்யசமாஜ குடும்பத்தைச் சேர்ந்த ராம்புஜ் தத் சவுதரி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சரளா தேவி பஞ்சாபுக்கு இடம்பெயர்ந்து லாகூரில் வசித்து வந்தார். இவரது கணவர் காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டபோது, காந்திஜி இவருக்கு ஆறுதல் சொல்ல வீட்டிற்கு வந்திருக்கறிர் அப்போது இவருடைய கவிதையால், இலக்கியத் திறனால் பெரிதும் கவரப்பட்டார். காந்தியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக சரளா தேவி இருந்தார். மேலும் இவரது ஒரே மகன் விவேக் காந்தியின் பேத்தி ராதாவைத் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகரிஷியின் இரண்டாவது மகனும் இந்தியாவின் முதல் ஐசிஎஸ் அதிகாரியுமான சத்யேந்திரநாத்தின் மனைவியான ஞானதாநந்தினி (1850-1941) நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல ஜொரசங்கோ குடும்பத்தில் அதுவரை நிலவி வந்த நிலப்பிரபுத்துவ நடைமுறைகளை உடைத்தெறிந்து பெண்களின் விடுதலைக்கான அடித்தளம் இட்டவர். அந்தர் மஹால் என்று அழைக்கப்படும் உள்ளறைகளில் இருந்த பெண்களை, பெண் குழந்தைகளை புதிய உலகிற்கு அறிமுகம் செய்தவர். கணவரின் விருப்பத்திற்கேற்ப, இரண்டு குழந்தைகளுடன் ஆண் துணையின்றித் தனியாகக் கப்பலில் பயணம் செய்து இங்கிலாந்து சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அங்கு தனியாக வாழ்ந்து காட்டியவர்.
திருமணம் ஆனபோது எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்த ஒருவர் கணவரின் ஊக்கத்தால் எவ்வாறு தன்னை மேம்படுத்திக்கொண்டு சமூகத்தில் சம உரிமையை வென்றடைய முடியும் என்பதற்கு 19ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அவர் இருந்தார். வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமின்றி, பிரெஞ்சு, குஜராத்தி, மராத்தி மொழிகளையும் கற்றிருந்தார். ஆங்கிலேய நடையுடை பாவனைகளை பின்பற்றுவதில் முன்னோடியாக இருந்தபோதிலும், இந்தியா தன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை கொண்டவராகவும் இருந்தார்.
வங்காள பெண் உலகில் புதியதொரு பாதையை உருவாக்கியவர் என்று ஞானதாநந்தினியைக் குறிப்பிடலாம். வங்காளத்தில் முதலில் நாடகத்தில் நடித்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்ற அந்தஸ்து பெற்றவர். ஒரு ஐசிஎஸ் அதிகாரியின் மனைவி என்ற வகையில் கவர்னர் ஜெனரலின் கிறிஸ்துமஸ் விருந்துக்குத் தனியாகச் சென்றவர். ரவீந்திரரைச் சிறு குழந்தையாக கையில் எடுத்து வளர்த்து ஆளாக்கியவர். அவரது வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்ததிலிருந்து தொடங்கி அனைத்து வகையிலும் அவரது வாழ்க்கையின் அச்சாணியாகத் திகழ்ந்தவர். ரவீந்திரர் மறைவிற்குப் பிறகு தனது 91வது வயதில் உயிர் நீத்தார்.
இவரது மகள் இந்திரா தேவி சவுதுராணி மேலே குறிப்பிட்ட ப்ரமத சவுதரியைத் திருமணம் செய்து கொண்டார். சிறுவயதிலிருந்தே ரவீந்திரரின் மிக நெருங்கிய நட்பைப் பெற்றவராக, அவரது பாடல்களுக்கு இசை வடிவம் தருபவராக இருந்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் சரளா தேவியுடன் இணைந்து செயல்பட்டவர். பின்னாளில் சாந்திநிகேதனில் தங்கி சங்கீத் பவனத்தை உருவாக்கியவர். மிகச் சிறிய காலத்திற்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.
மகரிஷியின் ஐந்தாவது மகனான ஜோதிந்திரநாத்தின் மனைவியான காதம்பரி தேவி தன்னைவிட இரண்டு வயது குறைந்த சிறுவனான ரவீந்திரரின் சிறுவயது தோழியாக, வழிகாட்டியாக, ஆலோசகராக விளங்கி வந்தார் என்பதோடு, அவரது கவிதைகளின் தரத்தை மேம்படுத்தியதில் வேறு எவரையும்விட தனிப்பங்கு வகித்தார். இந்த உண்மை ஜொராசங்கோ குடும்பத்திலுள்ள அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது மட்டுமின்றி, ரவீந்திரர் தனது நூல்களில் பெரும்பாலானவற்றை இவரது நினைவிற்கே அர்ப்பணித்திருந்தார் என்பதிலிருந்தே அவரது வாழ்வில் காதம்பரி தேவி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பாரதி இதழின் உள்ளடக்கம், அழகியல் ஆகியவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ரவீந்திரர் – காதம்பரி தேவி ஆகிய இருவரைப் பற்றி எத்தனையோ கதைகள் அன்று உலவி வந்தபோதிலும், வீட்டின் கடைக்குட்டியான ரவீந்திரரின் திறமைகள் படிப்படியாக வெளிவருவதற்கான கிரியா ஊக்கியாக காதம்பரி தேவி இருந்தார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
மேற்கூறிய இவர்கள் அனைவரும் ரவீந்திரருக்கு வயதில் மூத்தவர்கள் என்ற வகையில் அவரது முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஊக்கத்தையும் தந்தார்கள் எனில், அவரது மனைவி மிருணாளினியோ தாகூரின் கனவான சாந்திநிகேதன் பள்ளியின் தொடக்க கால உருவாக்கத்தில் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தந்து உதவியவர். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் என ஆலமரமாக இன்று வளர்ந்திருக்கும் அந்தப் பள்ளிக்கு வித்திட்டவர். ஒரு குருகுலமாக உருவானபோது முதன்முதலில் அதில் சேர்ந்த ஆறு மாணவர்களின் (அதில் அவரது மகன் ரதீந்திரநாத்தும் அடக்கம்) அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொண்டவர். 1902 நவம்பரில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார்.
(தொடரும்)
படம்: ஜொரசங்கோ இல்லம்