Skip to content
Home » தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

ரவீந்திரநாத் தாகூர்

இதுவரையில் ரவீந்திரரின் குடும்பப் பின்னணி, அவரது முன்னோர்களின் பன்முகத் திறமைகள், தாகூரின் வளர்ச்சியில் அவர்களின் தாக்கம் ஆகியவை குறித்துப் பார்த்தோம். இனி இந்தியாவின் கல்வி, மொழி, கலை, சமூகம், பண்பாடு போன்ற பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாளில் மகரிஷி தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதா தேவிக்கும் 14வது குழந்தையாக, 8ஆவது மகனாக ரவீந்திரர் பிறந்தபோது இந்தியா பிரிட்டிஷாரின் காலடியில் நசுங்கிக் கிடந்தது. அவர் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவின் முதல் சுதந்தரப் போர் என்று வரலாற்றில் அழைக்கப்படும் சிப்பாய் எழுச்சி கொடூரமான முறையில் நசுக்கி ஒடுக்கப்பட்டு, இந்தியாவின், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல்வேறு சமஸ்தான அரசுகள் கிழக்கிந்திய கம்பெனியின் கிடுக்கிக் பிடிக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

சிப்பாய் எழுச்சி ஒடுக்கப்பட்ட பிறகு, வர்த்தகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்த கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் பறிக்கப்பட்டது. 1858ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியின்கீழ் கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதிகள் கொண்டுவரப்பட்ட போதிலும், 1877ஆம் ஆண்டில்தான் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா இந்தியாவின் பேரரசி என அறிவிக்கப்பட்டு, பிரிட்டிஷ் அரச பரம்பரையின் ஒரு ஆட்சிப் பகுதியாக இந்தியா மாறியது.

பல நூற்றாண்டுகளாகவே இந்தியா என்ற கனவைச் சுமந்து திரிந்த ஐரோப்பிய அரச பரம்பரைகளில் ஒன்றான பிரிட்டிஷ் அரசின் இந்தச் சாதனை, அதன் மணிமகுடத்தில் ஒளிவீசும் கோஹினூர் வைரமாக என்றென்றும் திகழும் என்ற நம்பிக்கையும் அன்றைய ஆட்சியாளர்களிடம் இருந்தது.

ஆட்சியாளர்கள் அவ்வாறு நினைப்பது இயல்பான ஒன்றுதான். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அன்றைய மக்களில் பலரும்கூட இத்தகைய நம்பிக்கை கொண்டவர்களாக, அதை வரவேற்பவர்களாக இருந்தார்கள் என்பதுதான். இதற்கான காரணமும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாகத்தான் இருந்தது.

இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவியிருந்த பல்வேறு ஆட்சிப் பகுதிகளும் ஒன்றையொன்று விழுங்குவதற்காக அன்றாடம் போர்களில் ஈடுபடுவதாக, அந்தச் செலவுகளுக்காகத் தன் ஆட்சிப் பகுதி மக்களை கசக்கிப் பிழிவதாகத்தான் இருந்து வந்தன. இவற்றின் உள்ளார்ந்த பதவிப் போட்டிகள், சதிகள், சூழ்ச்சிகள் ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டே கிழக்கிந்திய கம்பெனி தனது ஆட்சிப் பகுதியைப் படிப்படியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்தது.

ஒன்றையொன்று அடித்து விழுங்கும் மிருகவெறியோடு நாடெங்கும் செயல்பட்டு வந்த இந்த ஆட்சியாளர்களை, எங்கிருந்தோ வந்த வெள்ளைப் பரங்கியர்கள் தங்கள் சூழ்ச்சித்திறனாலும் ஆயுத பலத்தாலும் வீழ்த்தி, நாட்டிற்குள் ஒருவித சமநிலையை கொண்டு வந்திருப்பதைக் கண்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும் தாங்கள் விழுங்கப்படலாம் என்ற காட்டு நியதியில் இருந்து தப்பித்த மக்களுக்கு, அந்த இடத்தில் உருவாகிய சுடுகாட்டு அமைதி தங்களுக்குக் கிடைத்த ஒரு வரமாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

தங்களது சுதந்தரத்தை இழந்துவிட்டோம் என்ற உணர்வுகூட இல்லாமல், கலாசார ரீதியாகப் பழைய அடிமைத்தனத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கிய மக்களில் ஒரு பிரிவினர் மேற்கத்திய நாகரீகத்தைப் புதிய வாழ்க்கை நெறியாகவும், மற்றொரு பிரிவினர் மனித வாழ்க்கையே ஆண்டவனில் இருந்து ஆள்பவன் வரையில் அடிமைப்பட்டுக் கிடப்பதே என்ற பாரம்பரிய நெறிமுறையைப் பின்பற்றுவோராகவும் இருந்த காலம் அது. இந்த இரு பிரிவினரின் ஊடாட்டமாகவே வங்கத்தில் மறுமலர்ச்சி இயக்கம் எழுச்சி பெற்றது. அதன் தாக்கம் தாகூரின் குடும்பத்திலும் இருந்தது என்பதையே அவரது முன்னோரின் வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது.

தாகூர் பிறந்து வளர்ந்து தனது 80வது வயதில் 1941இல் உயிர் நீத்தபோது இந்தியாவின் இந்தக் கையறுநிலை முற்றிலுமாக மாறியிருந்ததைக் காண முடியும். இந்த மாற்றத்திற்கு அவரது குடும்பமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்றும் கூறலாம். கிழக்கிந்திய கம்பெனியின் வரிவசூல் அதிகாரிகளாக, ஒப்பந்ததாரர்களாக இருந்து பெரும் செல்வம் ஈட்டிய கொள்ளுத்தாத்தா நீலமணியின் காலத்திற்குப் பிறகு, தாகூரின் தாத்தா ’பிரின்ஸ்’ துவாரகநாத் வெள்ளைக்காரர்களுக்குச் சமதையாகவும், போட்டியாகவும், பல்வேறு தொழில்களைத் தொடங்கியவராக, இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் முதல் தொழிலதிபர் என்று போற்றத்தக்க தகுதியுடையவராகவும் இருந்தார்.

சிந்து சமவெளி நாகரிகம், அசோகரின் கல்வெட்டுகள் என இந்தியாவின் அனைத்து வகையான வளங்களையும் வரலாற்றையும் வெளிக்கொண்டு வருவதில் பெரும்பங்கு வகித்த ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, ஜூவாலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, பொடானிகல் அண்ட் ஜியாலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, கல்கத்தாவின் இந்தியன் மியூசியம் போன்ற எண்ணற்ற ஆய்வுக் கழகங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய ஏசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால் என்ற ஆய்வுக் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர், தாளாளர் என்ற அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்தியராக, அன்றைய கம்பெனி ஆட்சியில் நவீன அறிவியலை, கல்விக் கூடங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவராக துவாரகநாத் இருந்தார்.

அவரது தந்தையான மகரிஷி தேவேந்திரநாத் தன் முன்னோர்கள் ஈட்டிய பெரும் செல்வத்தை இழந்தபோதிலும், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து, அருவமான இறைவனை முன்னிறுத்திய பிரம்ம சமாஜத்தைக் கட்டியெழுப்பி புதியதொரு மனித சமூகத்தை உருவாக்க முயற்சித்தவர்.

இம்மூவருக்கு அடுத்த தலைமுறையினரான ரவீந்திரரின் மூத்த சகோதரர்களான துவிஜேந்திரநாத், சத்யேந்திரநாத், ஹேமேந்திரநாத், ஜோதீந்திரநாத் ஆகியோர், பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமைத்தளையிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, விடுதலைப் போராட்டத்தினை நோக்கி முன்னேறிய இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பிற்கு முன்னோடியான ‘இந்து மேளா’ என்ற கலாசார-அரசியல் நிகழ்வை 1867ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கல்கத்தாவில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள். 1875ஆம் ஆண்டு இந்த விழாவின் தொடக்க நிகழ்விற்கான பாடலை 14வயதே ஆன ரவீந்திரர் எழுதியிருந்தார் என்று பார்த்தோம். தேசபக்தி நிரம்பிய பாடல்கள், நாடகங்கள், ஓவியங்கள் என பல்வேறு வகையில் விடுதலை உணர்வை மக்களிடையே விதைத்தவர்களாக இவர்கள் இருந்தனர்.

இந்த வரிசையில் வந்த ரவீந்திரர் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை ரசித்து, போற்றி, ஆராதிக்கும் கலைஞராக, கவிஞராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு கவிஞராக இருந்து, சராசரி மனிதனுக்கும் தெய்வாம்சம் கொண்டவர் என்று கூறப்படுபவருக்கும் இடைப்பட்ட ஒரு நிலையினை எட்டிப்பிடித்தவராக அவர் உயர்ந்தார். தொட்ட அனைத்துமே மேலும் மேலும் செழிப்புறும் வகையில் கூர்ந்த அறிவுத் திறன் பெற்றவராக அவர் உருப்பெற்றார்.

கதிரவனின் பெயரைத் தாங்கிய ரவீந்திரரின் எழுத்துக்கள் அவரது காலத்தின் மீது இதமாகவும் விரிவாகவும் ஒளியைப் பாய்ச்சின; அவர் பிறந்த மண்ணின் மனோநிலையை, நெறிமுறையை விரிவாக்கின; இதுவரை காணாத சிந்தனைப் பரப்பை அவை வெளிச்சமிட்டுக் காட்டின; மேற்குலகச் சிந்தனை, கீழைத்தேய சிந்தனை ஆகியவற்றை இணைக்கும் வானவில்லாகவும் அவை இருந்தன. அவரது மேதமையின் வீச்சு அவரது எழுத்துக்களின் ஊடாக வங்க மொழிக்கு வளம் சேர்த்தது. அந்த மொழிக்கு அவர் அறிமுகப்படுத்திய பல்வேறுபட்ட இலக்கிய வடிவங்கள், அவற்றின் அழகு ஆகியவை வியப்பூட்டும் வகையில் விரிந்து பரந்தவை.

பல நூற்றாண்டுக்கால தடைகளிலிருந்து விடுவிக்கும் வகையிலான ஒரு மொழியை, செறிவான, அதேநேரத்தில் நெகிழ்வான ஒரு நடையை, படித்தவனும் பாமரனும் திளைத்து மகிழும்படியான ஓர் இலக்கியத்தை அவர் வழங்கினார். அவர் கைபடாத இலக்கிய வகையே இல்லை எனலாம்.

கவிதை, இசைப்பாடல், நாடகம், இசை நாடகம், கட்டுரை, சிறுகதை, நாவல், வசன கவிதை, ஓவியம், டூடில் என்று அழைக்கப்படும் கிறுக்கோவியங்கள் (சினிமாவையும் கூட அவர் விட்டு வைக்கவில்லை; 1932இல் நாதிர் பூஜா என்ற அவரது இசை நாடகத்தை அவரே இயக்குநராக இருந்து திரைப்படமாக உருவாக்கினார்) என அனைத்து வகையான கலை வடிவங்களையும் கைக்கொண்டு, வங்காளி சமூகத்தின் உயிர்ப்பைத் தட்டி எழுப்பிய முதல் கலைஞர் அவரே. தாய் மொழியில் எழுதியபோதிலும், மேற்கத்திய வகை அல்லது கீழைத்தேய வகை, புராதனம் அல்லது நவீனம் என்று எந்த அடிப்படையில் சோதித்தாலும் தனித்து நிற்கும்படியான செழுமையான இலக்கியத்தைப் படைத்த ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

அவரது கவிதைகளைப் பற்றி, கட்டுரைகளைப் பற்றி, கற்றறிந்த அறிஞர்கள் புளகாங்கிதத்தோடு பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கும் அதே வேளையில், வங்காளத்தின் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஒரு மீனவனோ, விவசாயியோ, கைவினை கலைஞனோ அல்லது கல்கத்தாவில் நெருக்கமான சந்துக்களில் வசிக்கும் ஒரு கூலித் தொழிலாளியோ மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் அவரது பாடலை உரத்துப் பாடுவதையும் நம்மால் காண முடியும்.

இதுகுறித்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பின்னாளில் இந்திய அரசின் செயலாளராக ஆன எட்வின் மாண்டேகு பிரிட்டிஷ் அதிகாரி என்ற வகையில் இந்தியாவில் ஒரு முறை பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓர் இரவில் காட்டுப்பகுதியின் ஊடாகப் பயணம் செய்ய நேர்ந்தது. அங்கு வெட்டவெளியான ஒரு இடத்தில் சிலர் நெருப்பைச் சுற்றி வட்டமாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, தானும் குதிரையிலிருந்து இறங்கி அமர்ந்து கொண்டு, அவர்கள் பாடும் பாடல்களை கேட்டவாறு இருந்தார்.

சற்று நேரத்திற்குப் பின் ஏழ்மைத் தோற்றத்தோடு கூடிய ஒரு சிறுவனும் அங்கு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். அவன் முறை வந்தபோது அந்தச் சிறுவன் பாடிய பாடலும் அதன் இசையும் அவரை மயக்கியது. ‘யார் எழுதிய பாடல் இது’ என்று கேட்டபோது, ‘எனக்குத் தெரியாது. எங்கு பார்த்தாலும் இந்தப் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். கேட்க நன்றாக இருந்ததால் நானும் பாடக் கற்றுக் கொண்டேன்’ என்று அந்தச் சிறுவன் கூறியிருக்கிறான்.

வேறொரு தருணத்தில் அதே பாடலை அவர் கேட்டவுடன், இதை எழுதியவர் யார் என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் ரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரை முதன்முதலாக தான் அறிந்து கொண்டதாக மாண்டேகு குறிப்பிட்டிருந்தார். அதுவும் தாகூர் நோபல் பரிசு பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சம்பவம் இது.

இப்போதும் வங்காளத்தில் இந்த அனுபவத்தைப் பெற முடியும். ஒவ்வொரு பருவத்தின்போதும், இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தைப் பார்க்கும்போதும், மனித மனத்தில் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் அதை வெளிப்படுத்தும் வகையில் பாடுவதற்கும் நினைவுகூர்வதற்கும் அவரது பாடல்கள் எண்ணற்றவை உள்ளன.

அரங்கினுள்ளே இசை நிகழ்ச்சிகளில் பாடப்படுவதைப் போலவே மதச் சடங்குகளை நடத்த மக்கள் கூடியிருக்கும் தருணங்களிலும் அவரது பாடல்கள் ஒலிக்கின்றன. அன்றைய தேசபக்தர்கள் தூக்குக்கயிறை முத்தமிட்ட தருணத்தில் தாகூரின் பாடல் வரிகளே அவர்களது உதடுகளில் இருந்து வெளிப்பட்டன. அதைப் போலவே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த காதலர்களும் அவரது கவிதைகளை ஆயுதமாக்கிக் கொள்கின்றனர்.

இதில் மிக முக்கியமானது என்னவெனில், தாகூர் தனது எழுத்துகளின்மூலம் இந்தியாவின் கலாசார, அறிவுசார் வளர்ச்சிக்கான பெரும் ஊக்கத்தை வழங்கினார். தாய்மொழியின் மீதான நம்பிக்கையை அவர் செல்லும் இடங்களில் எல்லாம் விதைத்தார். நவீன காலத்தில் இந்திய மொழிகளில் உருவான மறுமலர்ச்சிக்கு அவரே ஆதர்சமாகவும் முன் உதாரணமாகவும் திகழ்ந்தார்.

அவரது பங்களிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைவது என்னவெனில், தங்களது சொந்தப் பாரம்பரியம் குறித்து பெருமைகொள்ள மக்களுக்குக் கற்பித்த அதேநேரத்தில், அதே பாரம்பரியம் முன்வைக்கும் கட்டுத்தளைகளை எல்லாம் உடைத்தெறிவதற்கான துணிவையும் அவர் தானே முன் உதாரணமாக இருந்து மக்களுக்கு ஊட்டினார். நேதாஜிக்கு மிகவும் பிடித்த பாடலான ‘ஏக்லா சலோ ரே! (தனியாக நடைபோடு!) என்ற அவரது பாடல் இதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ஆகும்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *