Skip to content
Home » தாகூர் #8 – இளம் கவிஞர்

தாகூர் #8 – இளம் கவிஞர்

இளம் கவிஞர்

(முந்தைய அத்தியாயங்களை இங்கே வாசிக்கலாம்)

இலக்கியம், பல்வேறு கலைப் படைப்புகள் எனத் தொட்ட அனைத்திலும் உச்சத்தை எட்டிப் பிடித்த ரவீந்திரநாத் தாகூர் இந்தியக் கலாசார மறுமலர்ச்சியில் முன்னோடியானதொரு பங்கினை வகித்தவரும் கூட. அதன் காரணமாகவே, மகாத்மா காந்தியோடு இணைந்த வகையில், நவீன இந்தியாவின் சிற்பி என்றும் அவர் அங்கீகாரம் பெற்றவர் ஆகிறார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு ‘கண்டறிந்த இந்தியா’ (Discovery of India) என்ற தனது புகழ்பெற்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்:

‘20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியின் தனித்தன்மை மிக்க மனிதர்களாக, சந்தேகத்திற்கு இடமின்றி காந்தியும் தாகூரும் திகழ்கின்றனர். அதிலும் குறிப்பாக, வருங்கால தலைமுறையினரின் மனங்களின் மீது மாபெரும் செல்வாக்கு செலுத்தியவராக தாகூர் திகழ்கிறார். அவர் வங்காளி மொழியில் எழுதி வந்தபோதிலும், இந்தியாவின் நவீன மொழிகள் அனைத்துமே அவரது எழுத்துகளால் ஓரளவிற்குப் புடம் போட்டு எடுக்கப்பட்டன. வேறு எந்த இந்தியரையும் விட கிழக்கு- மேற்கு நாடுகளின் சிறப்பியல்புகளுக்கு இடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்தியதிலும், இந்திய தேசியத்தின் அடித்தளங்களை விரிவுபடுத்துவதிலும் அவரது உதவி மிகப் பெரியதாகும்.’

தாகூர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அவரது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் இந்தியாவின் கலை, கலாசாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தது.

தனது சுயசரிதையிலும் அவர் இதைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார்: ‘மூன்று இயக்கங்கள் சங்கமிக்கும் தருணத்தில்தான் நான் பிறந்து, வளர்ந்தேன். இந்த மூன்று இயக்கங்களுமே புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தவை. இதில் முதலாவது, ராஜா ராம்மோகன் ராய் தொடங்கிய மத சீர்திருத்த இயக்கம் (அருவமற்ற ஓர் இறைவன் என்ற கருத்தை உபநிடதங்களின் மூலம் முன் வைத்த பிரம்ம சமாஜம்); இரண்டாவது, தன் மாயாஜால எழுத்துக்களின் மூலம் நீண்ட கால உறக்கத்தில் இருந்த வங்காளி இலக்கியத்தைத் தட்டி எழுப்பி, அந்த மொழியின் மீது பூட்டப்பட்டிருந்த பாரம்பரியமான விலங்குகளை எல்லாம் உடைத்து நொறுக்கி, பங்கிம் சந்திரர் முன்னெடுத்த இலக்கியப் புரட்சி; மூன்றாவதாக, மேற்கத்திய உலகால் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட அரசியல்-கலாசார மேலாதிக்கத்தைக் கண்டித்து உருவெடுத்த இந்திய தேசிய இயக்கம்.’

தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இந்த மூன்று இயக்கங்களிலுமே தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள். அவ்வகையில் தாகூரின் பணியும் கூட இந்த மும்முனைப் புரட்சியின் விளைவைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே இருந்தது.

இலக்கியத்தின் அனைத்து வடிவங்களையும் கையாண்டவராக இருந்தபோதிலும், தனது உயிரோட்டமான கவிதைகளாலும் இசைப் பாடல்களாலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ரவீந்திரர்.

முதல் கவிதையை எழுதியபோது அவருக்கு வயது எட்டு. அவரைக் கவிதை எழுதத் தூண்டிய அண்ணன் மகன் அவரைவிட எட்டு வயதே மூத்தவர். ‘கவிதை எழுதுவது மிகவும் எளிது; வார்த்தைகளின் கோர்வைதான் அது’ என்று உற்சாகமூட்டி அவரை எழுத வைத்தார். இந்த அனுபவம் அவருக்குப் புதியதொரு ஊக்கத்தைத் தந்தது.

இதற்கெனவே ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி, அவ்வப்போது தன் மனதில் தோன்றியதை எல்லாம் பதிவு செய்யத் தொடங்கினார். அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், ‘புதிதாக கொம்பு முளைத்திருக்கும் ஒரு மான், அதன் வலிமையைச் சோதிக்க, கண்ணில் பட்ட மரங்களை எல்லாம் அந்தக் கொம்பால் குத்திப் பார்ப்பது போல நானும் என் கவிதையும் இருந்தோம்.’

வீட்டில் இருந்த பெரியவர்களுக்கோ இதைக் கண்டு மிகவும் பெருமை. வீட்டிற்கு வருவோரிடம் எல்லாம் சிறுவன் ரவீந்திரரை ஓர் இளம் கவிஞர் என்று அறிமுகம் செய்வார்கள். அவரும் வந்திருப்போரின் முன்னால் தன் கவிதைகளில் ஒன்றை வாசிப்பார். அதிலொன்று:

‘தடாகத்தில் பூத்திருந்த தாமரையைப் பறிக்க நீந்தினேன்;
எனது கையின் ஒவ்வொரு அசைவிற்கும்
அது விலகிக்கொண்டே சென்றது.
என்னால் அதைப் பறிக்கவே முடியவில்லை.’

இவ்வாறு அந்தப் பிள்ளைப் பருவத்தில் எழுதிய கவிதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகம் பின்னர் காணாமல் போனது.

வசதியான வீட்டுப் பிள்ளை என்ற போதிலும் அந்த வீட்டின் அன்றாட நடைமுறைகள் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தன. அதிகாலை வெளிச்சம் வருவதற்கு முன்பாகவே தூக்கத்திலிருந்து எழுப்பப்படும் அவருக்கு ‘ஒற்றைக் கண்’ ஆசிரியர் ஒருவர் மல்யுத்தப் பயிற்சியைத் தொடங்குவார்.

அது முடிந்து உடலில் உள்ள தூசியை எல்லாம் தட்டி விடும் நேரத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் வந்து, அறையில் தொங்கவிடப்பட்டிருக்கும் எலும்புக் கூட்டில் உள்ள ஒவ்வொரு எலும்பின் மருத்துவப் பெயரையும், கரடு முரடான வார்த்தைகளைக் கொண்ட லத்தீன் மொழியில் மனதில் பதியுமாறு திரும்பத் திரும்ப சொல்லுமாறு செய்வார்.

காலை ஏழு மணிக்கு கணித ஆசிரியர் வந்து சிலேட் பலகையில் கணிதம், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி ஆகியவற்றைப் போட வைப்பார். சில நாட்களில் ஒரு சில செய்முறைகளோடு இயற்கை அறிவியல் அறிமுகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து வங்காளி, வடமொழி பாடங்கள் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கு, ரவீந்திரரின் வார்த்தைகளில், ‘உப்பு சப்பில்லாத’ அரிசி சோறு, பருப்பு, மீன் குழம்புடன் காலை உணவை முடித்து பத்து மணிக்கு பள்ளியை நோக்கிப் பயணம்.

மாலை நான்கரை மணிக்கு வீட்டிற்குத் திரும்பும்போது உடற்பயிற்சி ஆசிரியர் காத்திருப்பார். அவரைத் தொடர்ந்து ஓவிய ஆசிரியர். இரவு கவியும் நேரத்தில் ஆங்கில ஆசிரியர் வந்து எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடம் நடத்தும்போது, ரவீந்திரர் தூங்கித் தூங்கி விழுவது வழக்கம்.

இதற்கிடையே இசை வகுப்புகளும் உண்டு என்றாலும், அது குறிப்பிட்ட கால அட்டவணையில் நடப்பதில்லை. அந்த வீட்டில் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு வகையில் பாடகர்களாக, கருவிகளை இசைப்பவர்களாக என இசையோடு தொடர்பு உடையவர்களாகவே இருந்தனர். ரவீந்திரருக்கு நல்ல குரல் வளம் இருந்ததோடு, அது எத்தகைய இசை வடிவமாக இருந்த போதிலும், காதால் கேட்பதை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறமை இருந்தது.

அவரது மூத்த அண்ணனின் மகள் பிரதீபாவிற்கு மிகச் சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கும்போது, ரவீந்திரருக்கு இசை நுணுக்கங்களை அவர் புரிய வைப்பது வழக்கமாக இருந்தது. காதால் கேட்பதை அப்படியே கிரகித்துக் கொள்ளும் திறன் படைத்த அவருக்கு இசையை முறையாகக் கற்றுக் கொள்ளும் பொறுமை இருக்கவில்லை.

இருந்தும் கூட, 2,000க்கும் மேற்பட்ட தன் பாடல்களுக்கு அவர் இசை வடிவம் தந்தார். அதுவும் இந்துஸ்தானி, கர்நாடக இசை, நாட்டுப்புற இசை, பவுல் என்று அழைக்கப்பட்ட மக்களிடையே நல்லிணக்கத்தை பரப்பிய இசை என பல்வேறு இசை வடிவங்களை உள்வாங்கி,புதிய இசைப்பாடல்களை உருவாக்கி ரவீந்திர சங்கீதம் என்றதொரு அறிவுப் பெட்டகத்தையும் அவர் படைத்தார்.

அவ்வகையில் ரவீந்திரரின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலைஞர்களாக, கவிஞர்களாக, இசை விற்பன்னர்களாக இருந்ததால், அவரது குடும்பச் சூழலில் படைப்பூக்கம் என்பது மிக இயற்கையான ஒன்றாக இருந்தது.

இந்தப் பின்னணியில், மகரிஷி தேவேந்திரநாத் வழக்கமான தன் இமாலயப் பயணத்தின்போது 12 வயது ரவீந்திரரை முதன்முறையாகத் தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்தப் பயணம்தான் அவரை முற்றிலுமாக உருமாற்றியது. ‘அதுவரை என்னைப் பிணைத்திருந்த கடுமையான நடைமுறைகள் என்ற விலங்குகள் இந்தப் பயணத்தின்போதுதான் தெறித்து விழுந்தன’ என்று அவர் தன் நினைவலைகளில் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தம் போல்பூர். கல்கத்தா என்ற மாபெரும் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ரவீந்திரருக்கு கிராமப்புற வங்காளத்தின் அறிமுகம் முதன்முதலாக இங்குதான் கிடைத்தது. பரந்த நிலப்பரப்பும் அதைத் தொட்டுவிட எத்தனிக்கும் தொடுவானமும் என மனதில் ஆழப்பதிந்த இந்தக் கிராமப்புற இயற்கை அழகு பின்னாளில் அவரது கவிதைகள் பலவற்றிலும் வெளிப்பட்டது மட்டுமின்றி, சாந்திநிகேதன் என்ற மாபெரும் கல்விப் புலம் அங்கு உருப்பெறவும் காரணமாக அமைந்தது. இந்தப் பயணம் திரிவேணி சங்கமம், அமிர்தசரஸ் பொற்கோவில் என தொடர்ந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள டல்ஹவ்சியில் முடிவடைந்தது.

இந்தப் பயணத்தின்போது தேவேந்திரநாத் தனது மகனின் கல்விக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். வடமொழி, வங்காளி, ஆங்கில இலக்கியங்களின் செறிவு மிக்க பகுதிகளை அவர் அறிமுகம் செய்தார். தன் வாழ்க்கையின் மையக் கருவாகத் திகழ்ந்த உபநிடதப் பாடல்களையும் அவருக்கு அறிமுகம் செய்தார்.

இரவு நேரங்களில் வானத்து விண்மீன்களை சுட்டிக் காட்டி வானியலையும் அவருக்குப் போதித்தார். இதனோடு கூடவே, பயணத்தின்போது கண்ட இயற்கைச் சூழல்கள் அவருக்கு விடுதலை உணர்வை ஊட்டின. தந்தையுடனான இந்தப் பயணம் முடிவடைந்தபோது, ‘கன்னங்கரேல் என்றிருக்கும் ஒரு வாத்துக் குஞ்சு என்பதில் இருந்து அனைவரும் கண்டு வியக்கும் ஓர் அன்னப் பறவையாக’ அவர் உருமாற்றம் பெற்றிருந்தார்.

அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பதில் தொடங்கி, பின்னிரவு நேரத்தில் வானத்து விண்மீன்களின் பயணத்தைத் தொடர்வது வரை, இந்தப் பயணத்தில் தான் பெற்ற பயிற்சிகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன என்று ரவீந்திரர் தனது நினைவலைகளில் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வெவ்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து படித்த போதிலும், இறுதியில் அன்றைய பள்ளிக் கல்வியை வெறுத்து தனது 14 வயதில் வெளியேறிய ரவீந்திரருக்கோ புதியதோர் உலகம் காத்திருந்தது. ஒரு புறம் இயற்கையை வர்ணித்த கவிதைகள், மறுபுறம் அருவமான இறையை இறைந்து போற்றும் பிரம்ம சமாஜப் பாடல்கள் என கவிதைகள், இசைப் பாடல்களாய் அவரது படைப்பாற்றல் விரிவடையத் தொடங்கியது.

ரவீந்திரர் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொள்வதற்கு சற்று முன்பாக 1875 மார்ச் 8 அன்று அவரது அன்னை சாரதா தேவி உயிர் நீத்தார். அவர் எதிர்கொண்ட முதல் இறப்பு இது. குடும்பத்தின் கடைக்குட்டியான அவரை மூத்த சகோதரர்களில் ஒருவரான ஜோதீந்திரநாத்தும் அவரது இளம் மனைவி காதம்பரியும் அரவணைத்துக் கொண்டனர்.

ரவீந்திரர் பெரிதும் போற்றிய கவிஞரான பிகாரிலால் சக்ரவர்த்தியின் கவிதைகளின் ரசிகையான காதம்பரி, இந்த இருவரின் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பேசியபடியே ரவீந்திரரின் எழுத்துகள் மேலும் கூர்மை ஆவதற்கு ஒரு கிரியா ஊக்கியாகத் திகழ்ந்தார். அந்நாட்களில் காதம்பரியின் அங்கீகாரத்தைப் பெறுவதே அவரது இலக்காக இருந்தது.

மறுபுறத்தில் ஜோதீந்திரநாத் தன் படைப்பு முயற்சிகள் அனைத்திலும் ரவீந்திரரை இணைத்துக் கொண்டார். பியானோவில் அவர் இசைக்கும் குறிப்புகளுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவதில் இருந்து தொடங்கி, நாடகத்தின் எந்த இடத்தில் பாடல் தேவைப்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கான பாடலை எழுதுவது வரை அண்ணனுக்கு உதவி செய்தபடியே படைப்புத் திறனில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே வந்தார் ரவீந்திரர்.

அந்தப் பதின்பருவ வயதில் அண்ணி காதம்பரி அவருக்குத் தேவையான உணர்வுபூர்வமான உந்துதலையும் அன்பு நிரம்பிய நேசத்தையும் வழங்கினார் எனில், அண்ணன் ஜோதீந்திரநாத் மேலெழுந்து வந்த அவரது திறமைக்கு வழியமைத்து, அது மேலும் வளர்வதற்கான ஓர் ஒழுங்குமுறையை வடிவமைத்தவராகத் திகழ்ந்தார் எனலாம்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *