Skip to content
Home » தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

ரவீந்திரர் எழுதிய, எட்டு பகுதிகளைக் கொண்ட, 1600 வரிகளுக்கு மேலான, ‘காட்டுப் பூ’ என்ற நீண்ட கவிதை முதன்முதலாக ஞாநங்கூர் என்ற இலக்கிய இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது பதினான்கு. இமயமலை அடிவாரத்தில் மனித வாடையின்றி வளர்ந்த கமலா என்ற பெண்ணின் அன்பையும் வாழ்க்கையை இழந்து நின்ற அவளது சோக முடிவையும் கூறும் கவிதை இது.

பின்பு இதே இதழில் கவிதையின் பல்வேறு வடிவங்கள் பற்றிய கருத்துகளை முன்வைத்த இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றையும் அவர் எழுதினார். முறையான பள்ளிக் கல்வியைப் பெறாத ஒருவரின் கட்டுரை என்ற வகையில் இலக்கிய உலகில் தனித்த கவனத்தையும் அது பெற்றது.

ஜோராசங்கோ குடும்பம் பல்வேறு பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் நிரம்பிய ஒரு தேன்கூடு என்றே கூறலாம். கவிஞர்கள், அறிஞர்கள், இசை வல்லுனர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், ஜீனியஸ் என்று அழைக்கப்படும் அதீத அறிவு படைத்தவர்கள், அதே நேரத்தில் கிறுக்கும் பிடித்தவர்கள் என அனைத்து வகையானவர்களும் அந்தக் குடும்பத்தில் இருந்தனர். இவர்களோடு சேர்ந்து கொள்ள வெளியில் இருந்தும் அவர்களைப் போன்ற பலர் வந்தனர்.

1877 இல் ஜோதீந்தரநாத் தனது மூத்த அண்ணன் த்விஜேந்தரநாத்தை ஆசிரியராகக் கொண்டு பாரதி என்ற ஓர் இலக்கிய இதழைத் தொடங்கினார். ஜோராசங்கோ குடும்பத்தைச் சேர்ந்த த்விஜேந்தரநாத், ஹேமேந்திரநாத், சத்யேந்திரநாத், ஜோதீந்தரநாத் உள்ளிட்டு குடும்பத்தில் உள்ள பலரும் பங்களிப்பு செய்த இந்த இதழில் ரவீந்திரருக்கும் இடம் கிடைத்தது. அதிலிருந்து ரவீந்திரரின் எழுத்துக்கள் பல்வேறு வடிவங்களில் அந்த இதழில் வெள்ளப் பிரவாகமென வெளிவரத் தொடங்கின.

அவரது முதல் சிறுகதையான பிச்சைக்காரி, கருணா என்ற முற்றுப் பெறாத ஒரு நாவல், ருத்ர சந்தா என்ற வரலாற்று நாடகம், கவியின் கதை என்ற நீண்ட கவிதை போன்ற எழுத்துகள் மட்டுமின்றி மேற்கத்திய இலக்கியம் குறித்த கட்டுரைகள், பயணங்கள் குறித்த கடிதங்கள், மொழிபெயர்ப்புகள் என எண்ணற்ற வகையிலான படைப்புகள் ரவீந்திரரின் பேனாவில் இருந்து வெளிப்பட்டு இந்த இதழில் வெளியாயின.

இந்தக் காலப்பகுதியில் வடமொழி இலக்கியம், மத்திய கால வைணவ பக்தி இலக்கியங்கள், மேற்கத்திய இலக்கியம் ஆகியவை அவரது எழுத்துகளின் ஆதர்சமாக விளங்கின. இந்த வைணவ பக்தி இலக்கியத்தின் தனித்தன்மையான சொற்கோர்வையும் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்து இழுத்தன. அதே போன்ற நடையில் பல பாடல்களை எழுதிய ரவீந்திரர் அவற்றை பானு சின்ஹாவின் பாடல்கள் என்ற பெயரில் பாரதி இதழில் வெளியிட்டார்.

மத்திய கால வழக்கப்படி இந்தப் பாடல்களின் கடைசி வரியில் அதை எழுதிய பாடலாசிரியரின் பெயரும் இருக்கும். இந்தக் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்து எழுதிய முன்னுரையில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானு சின்ஹா என்பவரின் இந்தக் கவிதையை பிரம்ம சமாஜத்தின் நூலகத்தில் தான் கண்டெடுத்ததாக ரவீந்திரர் கூறியிருந்தார்.

உண்மையில் ரவி என்பது சூரியனைக் குறிப்பது போலவே பானு என்பதும் சூரியனையே குறிக்கும். 16 வயதில் இந்தப் புனைபெயரில் அவர் எழுதிய இந்தப் பாடல்கள் இலக்கிய உலகில் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இலக்கிய உலகில் பலரும் அவர் கூறியதை உண்மை என்றே நம்பிவிட்டனர்.

எடின்பர்க், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், லீப்ஸிக் ஆகிய பல்கலைக்கழகங்களில் பயின்று, அப்போது ஜெர்மனியில் பணிபுரிந்து வந்த நிஷிகாந்த சாட்டர்ஜீ என்ற அறிஞர் இந்தப் பாடல்களில் பெரிதும் கவரப்பட்டு ஜெர்மன் மொழியில் தான் எழுதிய நூலில் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார்.

ரவீந்திரர் இத்தகைய திறமை பெற்றவராக இருந்த போதிலும், அவரது தந்தை மகரிஷிக்கும் வீட்டில் இருந்த மூத்தவர்களுக்கும் இவர் இப்படி நேரத்தை வீணடிப்பதை விட மதிப்பிற்குரிய ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. முதல் இந்திய ஐசிஎஸ் அதிகாரி ஆன அவரது அண்ணன் சத்யேந்திரநாத் தான் லண்டன் செல்ல இருப்பதாகவும், அங்கு உரிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்து ஐசிஎஸ் அதிகாரியாகவோ அல்லது அன்றைய நாட்களில் மிகுந்த மதிப்பிற்குரிய தொழிலான பாரிஸ்டர் தேர்வுக்கோ ரவீந்திரரைத் தயார்ப்படுத்தலாம் என ஆலோசனை கூறி அதற்கு முன்பாக தான் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிந்து வந்த அகமதாபாத் நகருக்கு அவரை அழைத்துச் சென்றார்.

ஷாகிபாத் என்ற பகுதியில் இளவரசர் குர்ரமால் (பின்னாளில் பேரரசர் ஷாஜகான்) 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பங்களாதான் அப்போது மாவட்ட ஜட்ஜின் குடியிருப்பாக இருந்தது. இதன் முதல் மாடியில் இருந்து சபர்மதி ஆற்றைக் காண முடியும். (இப்போது இந்தக் கட்டடம் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது). ரவீந்திரரின் நான்கு மாத வாழ்க்கை இங்கு கழிந்தது. அப்போது அண்ணனின் நூலகத்தில் இருந்த ஆங்கில, வடமொழி நூல்களை ஆழ்ந்து கற்றதோடு தான் படித்த ஆங்கில, ஐரோப்பிய மொழிகளின் இலக்கியம் குறித்து பாரதி இதழுக்கு தொடர்ந்து கட்டுரைகளையும் அவர் அனுப்பி வந்தார்.

வாழ்க்கை என்பது இலக்கியத்தை விடப் பெரியது; அதை ஒரு குறிக்கோளுடன் முன் நகர்த்த வேண்டும் என்ற தந்தையின், மூத்தோரின் கருத்துப்படி, தன்னையொத்த மனிதர்களிடையே தானும் ஒரு மனிதனாக ஆக வேண்டும் என்ற உந்துதல் அவரைப் பற்றியிருந்தது. அப்போது எழுதிய ஒரு கவிதையில் இந்தக் கருத்தையே அவர் வெளிப்படுத்தினார். ‘காலத்தின் பக்கங்களில் என் அழியாத கையெழுத்தை விட்டுச் செல்ல’ தனக்கு ஊக்கம் தர வேண்டுமென தன் வாழ்க்கையின் தேவதையை (ஜீவன் தேவதா) அவர் வேண்டினார்.

இந்தக் காலப்பகுதியில்தான் அவர் தன் பாடல்களுக்கு இசை அமைக்கவும் தொடங்கினார். வார்த்தைகள் இசைக்கோர்வையோடு அவரிடமிருந்து வெளிப்பட்டன. இலக்கிய நயத்தோடும் இசை நயத்தோடும் கூடிய இத்தகைய பாடல்களை அவர் உருவாக்கினார். சில நேரங்களில் வார்த்தைகள் முதலிலும், பின்பு இசை என்பதாகவும், வேறு சில நேரங்களில் இசை முதலிலும் அதற்கான வார்த்தைகள் பின்பு என்பதாகவும் இந்தப் பாடல்கள் அமைந்திருந்தன.

இங்கிலாந்திற்குப் புறப்படும் முன்பாக ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ளவும், ஆண்- பெண் பேதமின்றி அனைவருடனும் கலந்து பழகவும் பயிற்சியைப் பெறுவதற்காக அவரது அண்ணன் பம்பாயில் இருந்த தன் மராத்தி நண்பரும் மருத்துவருமான ஆத்மாராம் பாண்டுரங்க துர்க்குட் இடம் அவரை அனுப்பி வைத்தார்.

ரவீந்திரருக்கு ‘கற்பிக்கும்’ பொறுப்பு அவரைவிடச் சற்றே மூத்தவரான அனா என்ற அன்னபூர்ணாவின் மீது விழுந்தது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே என்றும் நினைவை விட்டு நீங்காத நல்லதொரு உறவு உருவானது. தன் 80 வயதில் ரவீந்திரர் பின்வருமாறு எழுதியிருந்தார். ‘தனித்துவமான ஒரு பெயரை தனக்கு வைக்க வேண்டும் என்று அவள் கேட்டாள். நான் சொன்ன பெயர் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவளது பெயரையும் இணைத்து இசைக் கோர்வையுடன் கூடிய ஒரு பாடலையும் பைரவி ராகத்தில் நான் இயற்றினேன். அதைக் கேட்டவுடன், ‘கவிஞரே! நான் மரணப் படுக்கையில் இருந்தாலும் உன் கவிதை என்னை உயிர்ப்பிக்கும்.’ என்று அவள் சொன்னாள்.’

நளினி என்ற அந்தப் பெயரை தன் பிற்கால கவிதைகள் பலவற்றிலும் அவர் பயன்படுத்தி வந்தார். சிறிது காலத்திற்குப் பின்பு ஒரு ஸ்காட்லாந்து இளைஞரை மணந்த அனா, இளம் வயதிலேயே உயிர் நீத்தார்.

தன் நடு வயதில் எழுதிய வாழ்க்கைக் குறிப்பில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘ஒரு சில ஆண்டுகளில் இந்தப் பகுதிக்கு முற்றிலும் அறிமுகமில்லாத பறவைகள் கல்கத்தாவிற்கு வந்து எங்கள் வீட்டு ஆலமரத்தில் கூடுகளைக் கட்டும். அவற்றின் இறகுகளின் சலசலப்பில் எழும் இசையை நான் கற்றுக் கொள்வதற்கு முன்பாகவே அவை மீண்டும் அங்கிருந்து பறந்து போய்விடும். இருந்தாலும் தொலைதூரக் காடுகளில் இருந்த தங்கள் வீடுகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான, அழகான இசையை அவை தம்மோடு எடுத்து வந்தன.

‘அப்படித்தான் நம் வாழ்க்கைப் பயணத்தில், நாம் எதிர்பாராத திசையில் இருந்து ஏதாவது ஒரு தேவதை குறுக்கே வந்து, நம் மனதின் குரலைப் பேசி, நம் இதயத்தின் எல்லையை மேலும் விரிவாக்கும். நாம் அழைக்காமலே வந்த அந்த தேவதையை நாம் அழைக்கும்போது அவள் இருக்க மாட்டாள். என்றாலும், அவள் போகும்போது, நம் வாழ்க்கையின் எல்லா நேரங்களையும் செறிவூட்டும் வகையில், பூக்களால் அலங்கரித்த ஓர் ஊஞ்சலை நம் மனதில் விட்டுவிட்டுச் சென்றிருப்பாள்.’

நான்கு மாதங்களுக்குப் பிறகு, அண்ணன் சத்யேந்திரநாத் உடன் ரவீந்திரர் தன் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக எஸ்.எஸ். பூனா என்ற கப்பலில் ஏறினார். கெய்ரோ, பாரிஸ் வழியாக இந்தக் கடல் பயணம் இருந்தது. வழிநெடுகக் கண்ட காட்சிகளை எல்லாம் கடிதங்களாகத் தன் உறவினர்களுக்கு அவர் அனுப்பினார். அவை பாரதி இதழிலும் வெளிவந்தன. இவர்களுக்கு முன்பே தன் இரு குழந்தைகளுடன் இங்கிலாந்தில் உள்ள ப்ரைட்டன் என்ற நகரில் வசித்து வந்த அவரது அண்ணி ஞானதனந்தினியிடம் இருவரும் சென்று சேர்ந்தனர்.

சுரேன் (ஆறு வயது), இந்திரா (ஐந்து வயது) என்ற இந்தக் குழந்தைகள் இருவரும் தங்கள் அழகான சித்தப்பாவிடம் ஒட்டிக் கொண்டனர். இவர்கள் இருவருமே ரவீந்திரரின் மிக நெருக்கமான உறவுகளாக அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தனர். அதிலும் குறிப்பாக, இந்திரா ரவீந்திர சங்கீத்தை முறைப்படி தொகுப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.

சிறிது காலம் வீட்டில் இருந்தபடியே பொதுப் பள்ளிக்குச் சென்று ரவீந்திரர் படித்து வந்தார். அப்போது காலையில் பள்ளி நேரம் போக குழந்தைகளுடன் பொழுதைக் கழித்த அவர், மாலை நேரங்களில் அண்ணனின் ஆங்கிலேய நண்பர்கள் வந்து வீட்டில் சூழும்போது அவர்களது நடத்தையைப் புரிந்து கொள்வதில் செலவழித்தார். அவரது உணர்வுகள் அனைத்துமே கடித வடிவில் பாரதி இதழில் வெளியாயின.

பின்னர் நண்பர் ஒருவரது ஆலோசனையின் பேரில் ரவீந்திரர் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஒரு விடுதியில் அவர் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வழக்கறிஞர் தொழிலுக்கு அவரைத் தயார் செய்யும் வகையில் ஒரு பயிற்றுனர் மூலம் லத்தீன் மொழியைக் கற்றுத் தர ஏற்பாடானது. எனினும் அந்தப் பயிற்றுனர் தன் ஆய்வு குறித்தே பெரிதும் சிந்தித்து வந்தமையால் அந்த ஏற்பாடும் நின்று போனது. இடையில் சில காலம் அண்ணன் குடும்பத்துடன் தங்கியிருந்து மீண்டும் லண்டன் வந்த அவருக்கு டாக்டர் ஸ்காட் என்பவரின் குடும்பத்தில் தங்கிப் படிக்க ஏற்பாடானது.

டாக்டர் தம்பதியினரைத் தவிர, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள், மூன்று பணியாளர்கள் கொண்ட அந்தக் குடும்பச் சூழல் அவருக்கு அந்நிய மண்ணில் ஒரு சொர்க்கமாகவே தோன்றியது. தாயின் அன்பை நேரடியாகப் பெரும் வாய்ப்பில்லாத அவருக்கு இந்த ஏற்பாடு உண்மையிலேயே மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.

இத்தருணத்தில் இங்கிலாந்தில் பெண்களின் சுதந்திரமான நிலையை மிகவும் விதந்து அவர் அனுப்பிய கடிதங்கள் வழக்கம்போல பாரதியில் வெளியாயின. எனினும் அறியாப் பருவத்தினரான ரவீந்திரரை இத்தகைய சூழலில் விட்டு வைக்க வீட்டுப் பெரியவர்கள், குறிப்பாக அவரது தந்தை விரும்பவில்லை. அண்ணன் சத்யேந்திரநாத் திரும்பி வரும்போது ரவீந்திரரையும் கூட அழைத்து வருமாறு அவருக்கு உத்தரவு போனது.

எனினும், ரவீந்திரர் இதற்காக வருந்தவில்லை. உண்மையில் தனது படைப்பூக்கத் திறனுக்கு ஜோராசங்கோ சூழல்தான் மிகப் பொருத்தமானது என்று அவர் நம்பினார். திருமதி ஸ்காட், அவரது குழந்தைகளின் கண்ணீருக்கு இடையே ரவீந்திரர் இந்தியாவிற்குத் திரும்பினார்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *