வெளிநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பதினேழு மாதங்களைக் கழித்துவிட்டு, 1880 பிப்ரவரியில் ரவீந்திரர் தன் அண்ணன் சத்யேந்திரநாத், அவரது குடும்பத்தினருடன் இந்தியாவிற்குத் திரும்பினார். அதுவும் முன்பு திட்டமிட்டிருந்தபடி எவ்வித படிப்பையும் முடிக்காமலே வெறுங்கையுடன் திரும்பினார்.
அவர் லண்டனில் இருந்தபோது எழுதத் தொடங்கி, முற்றுப் பெறாமல் இருந்த பாக்னா ஹ்ருதய் (உடைந்துபோன உள்ளம்) என்ற நீண்ட பாடல்களால் ஆன நாடகம் மட்டுமே அப்போது கையில் இருந்தது. 4,000க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாக, 37 காட்சிகளைக் கொண்ட இந்த நாடகம், நேசித்தவளின் அன்பை உதாசீனப்படுத்திய ஒருவரின் கதையாக, இறுதியில் உண்மையான நேசத்தைத் தேடி அவர் திரும்பி வரும்போது அவள் தன் வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் இருப்பதைக் காண நேரிடுவதாக அமைந்திருந்தது.
வங்காளி கவிதை உலகில் புதுமை படைத்த இந்த நாடகம் பாரதியில் வெளியாகி அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதில் தன் மனதைப் பறிகொடுத்த திரிபுரா மகாராஜா தன் முதலமைச்சரை நேரில் கல்கத்தாவிற்கு அனுப்பி தன் பாராட்டுதல்களை ரவீந்திரருக்குத் தெரிவித்தார். பின்னாளில் தனது எந்தத் தொகுப்பிலும் இந்த நாடகத்தை ரவீந்திரர் சேர்க்கவில்லை. எனினும் அவரது மறைவிற்குப் பிறகு வெளியான ரச்சனாவளி தொகுப்பில் இந்த நாடகம் இடம் பெற்றது.
இந்த நாடகத்தை ‘திருமதி ஹே______’ விற்கு சமர்ப்பணம் செய்வதாகக் கூறி அவர் எழுதியிருந்த கவிதை கடவுள் மீதான அதீத பக்தியை வெளிப்படுத்துவதாகவும் பொருள் கொள்ளப்பட்டது. அவ்வகையில் ஒரு சில திருத்தங்களுடன் தாகூரின் பிரம்ம சங்கீதம் என்ற பக்திப் பாடல்களில் ஒன்றாக இந்தக் கவிதை பிரம்மா சமாஜிகளால் தொடர்ந்து பாடப்பட்டது வந்தது.
பிறவி எனும் இந்தப் பெருங்கடலில்
நான் மீண்டும் வழிதவறாது காக்கும் துருவ நட்சத்திரம் நீ !
நான் போகுமிடமெலாம் நீ ஒளி வீசிக் கொண்டிருப்பாயாக!
உந்தன் ஒளியே என் கண்களுக்கு இதமூட்டுகிறது.
இருளடைந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியைப் போல்
என் உள்ளத்தில் நீ இருக்கிறாய். நான் வழி தவறினாலும்,
உந்தன் முகம் என்னை மீண்டும் நல்வழிப்படுத்தும்.
உடைந்துபோன இந்த உள்ளத்தை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.
அதன் ரத்தக்கறை, உன் கால்களுக்கு
செங்குழம்புப் பூச்சாகத் திகழட்டும்!
இவ்வாறு சமர்ப்பணம் செய்யப்பட்ட ‘திருமதி ஹே______’ என்பது அந்தக் குடும்பத்தினரால் ஹேகேட் என்ற கிரேக்க தேவதையின் பெயரால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவரது அண்ணி காதம்பரியே ஆகும். சிறுவயது முதல் அவர் தன்னிடம் காட்டி வந்த அன்பை, பரிவை, நேசத்தை ரவீந்திரர் தன் வாழ்நாள் முழுவதிலும் மற்றவர்களிடம் தேடிக்கொண்டே இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தொடர்ந்து 1881இல் வால்மீகி பிரதிபா (வால்மீகியின் அறிவுக் கூர்மை) என்ற தன் முதல் இசை நாடகத்தை ரவீந்திரர் உருவாக்கினார். வால்மீகி எவ்வாறு ஒரு பெருங்கவிஞராக மாறினார் என்பதை இந்த நாடகத்தில் வழக்கத்திற்கு மாறான வகையில் அவர் காட்டியிருந்தார். கொள்ளைக் கூட்டத் தலைவனான வால்மீகியின் கூட்டத்தினர் காளிக்குப் பலியிடப் பிடித்து வைத்திருந்த ஒரு சிறுமியின் அபயக் குரல் கேட்டு அங்கு வந்து அவளை மீட்கிறார்.
பின்பு தன் கொள்ளைக் கூட்டத்தையே கலைத்துவிட்டு, அந்தச் சிறுமியுடன் காட்டிலிருந்து வெளியேறும்போது, சரஸ்வதியே அவர் முன் தோன்றி, அவரிடம் மனிதத் தன்மையை தட்டியெழுப்பவே தான் சிறுமியாக உருவெடுத்து வந்ததாகக் கூறி, அவருக்குப் பாடல் புனையும் ஆற்றலையும் அளித்துவிட்டுக் கூறுகிறார்.
’உனது கல் நெஞ்சத்தையும் கரையச் செய்த இரக்கம் என்ற இசை கோடிக்கணக்கான இதயங்களை மென்மையாக்கி சீர்திருத்தும் மனிதத் தன்மை என்ற இசையாக உன் குரலில் இருந்து வெளிப்படட்டும். தேசம் தேசமாக உனது குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். எண்ணற்ற கவிஞர்களும் உனது பாடல்களை எதிரொலித்துக் கொண்டே இருப்பார்கள்!’
மனிதருள் புதைந்து கிடக்கும் ‘மனிதத் தன்மை’யை தட்டி எழுப்புவது என்பதே வாழ்வின் மகத்துவம் என்ற உண்மையை ரவீந்திரர் தன் பாடல்களில் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். இந்த நாடகத்தில் அவரே வால்மீகியாக நடித்ததோடு, அவருக்கு இசை நுணுக்கங்களை அறிமுகப்படுத்திய அவரது மூத்த அண்ணன் மகள் பிரதீபா இதில் சிறுமியாக நடித்திருந்தார். இந்த நாடகத்தில் இடம்பெற்ற பாடல்கள் அன்று இந்தியாவில் நிலவிய இசை வரம்புகளை மீறிய ஒன்றாக அமைந்திருந்தன.
இலக்கியத்தில் கலகம் செய்ததைப் போலவே, இசையிலும் புதியதொரு பார்வையை முன்னிறுத்தும் முதல் முயற்சியாக, மேலடுக்கில் வீற்றிருந்த இசையை மக்களின் இசையாக மாற்றுவதாக, இந்த நாடகம் அமைந்திருந்தது. மேலும் இசையையும் வார்த்தைகளையும் எளிதில் பிரித்து விட முடியாத வகையிலும் அதன் பாடல்கள் இருந்தன.
இதைத் தொடர்ந்து ராமாயண கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கல் மிர்கயா (துயரமிக்க வேட்டை) என்ற நாடகத்தையும் அவர் எழுதினார். இதில் தசரதனால் கொல்லப்படும் குருட்டு துறவியாக அவர் நடித்தார். இவை அனைத்துமே ஜோராசங்கோ வீட்டில் உருவாக்கப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில்தான் முதலில் அரங்கேறின.
அண்ணன் ஜோதீந்திர நாத்தும் அண்ணி காதம்பரியும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டபோது, ஜோராசங்கோவில் அவர்களது மூன்றாவது மாடி குடியிருப்பில் ரவீந்திரர் தனித்து விடப்பட்டார். கல்வித் தகுதி எதையும் பெறாமல் வெளிநாட்டிலிருந்து வெறும் கையுடன் திரும்பி வந்தது குறித்து வீட்டிலிருந்த பலரும், அவர் திறமைசாலி என்று தெரிந்த போதிலும், சற்றே மதிப்புக் குறைவாகத்தான் பார்த்தனர்.
அண்ணனின் ஊக்கமும், அண்ணியின் பரிவும் இன்றித் தனிமையில் இருந்த அவருக்குள் ஒருவித கழிவிரக்கம் உருவானது. பேனாவையும் காகிதத்தையும் ஒதுக்கி விட்டு, ஒரு சிலேட்டில் அழித்து அழித்து எழுதத் தொடங்கினார். அப்போது அவர் எழுதிய கவிதைகள் சந்தியா சங்கீத் (மாலை நேரப் பாடல்கள்) என்ற தலைப்பில் வெளியாயின.
தனிமையும் கழிவிரக்கமும் புறக்கணிப்பும் எனப் பல்வேறு உணர்வுகளையும் மனதிற்குள் தேக்கிய, துயரம் நிரம்பிய இந்தப் பாடல்களின் தலைப்புகளே அவரது அன்றைய மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்தன. ‘ஒரு விண்மீனின் தற்கொலை’, ‘நம்பிக்கையற்ற நம்பிக்கை’, ‘மகிழ்ச்சியின் ஓலம்’, ‘தூயரத்திற்கு ஓர் அழைப்பு’, தாங்கவொண்ணாத அன்பு’. துயரத்தின் சுவையில் தோய்த்து எழுதப்பட்ட இந்தப் பாடல்கள் வங்காளி இலக்கியத்திற்கு புதியதோர் ஒளியைப் பாய்ச்சுவதாக இருந்தன.
புதியதொரு தென்றலாக வீசிய அந்தப் பாடல்கள் ரவீந்திரரின் அறிவுக்கூர்மையை, அவரது வார்த்தைகளின் வீரியத்தை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்து வங்காள இலக்கிய உலகில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தின. எந்த அளவிற்கு என்றால், புகழ் பெற்ற அரசு அதிகாரியும், தேசியவாதியும், இலக்கியவாதியுமான ரமேஷ் சந்திர தத்தாவின் மகளின் திருமணத்திற்கு புகழ் பெற்ற எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு மாலை அணிவித்து வரவேற்க அவர் முற்பட்டபோது, சாட்டர்ஜி அந்த மாலையை வாங்கி அதே நேரத்தில் அங்கு வந்திருந்த ரவீந்திரருக்கு அணிவித்துவிட்டு சொன்னார்: ‘இந்த மரியாதை இவருக்குத்தான் ரமேஷ். இவரின் சந்தியா சங்கீத்தைப் படித்து விட்டாயா?’
உதாரணத்திற்கு
“எந்தப் பருவமானாலும் அதே பழைய ராகம்தான்.
வாழ்க்கை என்ற நாடகத்தில் ஆயிரமாயிரம் ராகங்கள்
ஏன் அதில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறாய்?
பாட வேறு ஒன்றும் இல்லையெனில் அமைதியாய் இரு!”
இதே காலப்பகுதியில் ‘இசையும் உணர்வும்’ என்ற தலைப்பில் கல்கத்தாவில் உரை நிகழ்த்திய அவரேதான் சீனாவில் அபினை வலிந்து திணிக்கும் பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்து ‘சீனாவில் மரணப் பயணம்’ என்ற கட்டுரையையும் எழுதினார். நாட்டின் எல்லைகளைக் கடந்து எங்கெல்லாம் மனித குலத்தின் மீது தீங்கு விளைவிக்கப்படுகிறதோ, அதை எதிர்த்து குரல் கொடுப்பவராகவும் அவர் இருந்தார். தீவிரமான தன்னுணர்வு, அதே நேரத்தில் ஒரு மனிதனாக தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய கவலை என்பது சிறு பருவத்திலிருந்து இறுதிக் காலம் வரையில் அவரது அடிப்படைத் தன்மையாக நீடித்தது.
அண்ணன் ஜோதீந்திர நாத்தும் அண்ணி காதம்பரியும் ஜோராசங்கோவில் இருந்து கல்கத்தாவின் மையப் பகுதியில் சடர் தெருவில் வந்து குடியேறியபோது, அங்குதான் ஒரு நாள் ரவீந்திரருக்கு புத்தொளி பிறந்தது. இந்தத் தருணம் பற்றி, தனது நினைவலைகளிலும், 1930ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் வழங்கிய ஹேப்பர்ட் சொற்பொழிவிலும் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார்.
‘என் கண்களுக்கு முன்னாலிருந்த திரை திடீரென விலகியதை உணர்ந்தேன். கண்ணுக்குப் புலப்படாத அந்தத் திரை விலகியதும், உலகமே சூரிய ஒளியில் குளித்திருப்பதை, எல்லா பக்கங்களிலும் அழகின், மகிழ்ச்சியின் அலைகள் பெருகிக் கொண்டே போவதை கண்டேன். என் முன்னால் இருந்த எல்லா பொருட்களில் இருந்தும், அனைவரிடமிருந்தும் வெளிப்பட்ட ஒளிச் சிதறலும் அதன் முக்கியத்துவமும் என் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.’
இந்த நிகழ்விற்குப் பிறகு தன் அருகாமையில் கைகோர்த்துச் செல்லும் தம்பதிகள், குழந்தையோடு விளையாடும் ஒரு தாய், மற்றொரு பசுவை உரசிக் கொண்டே செல்லும் ஒரு பசு, நாவால் தன் உடலை சுத்தமாக்கிக் கொள்ளும் அதன் அசைவுகள் என சாதாரணமாக அன்றாட வாழ்வில் நாம் காணும் காட்சிகள் இதுவரை கண்டிராத வகையில் அவருக்கு முக்கியத்துவம் பெற்றதாக மாறின. இந்தத் தருணத்தில் ‘நிழல்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்ற, உண்மையின் கதிர்கள் உள்நுழைய முடியாத ஒரு பருவத்தினைதான் கடந்து வந்திருப்பதை’ உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இதயமெனும் பெரும் காடு அங்கே
அதன் அனைத்துப் பக்கங்களிலுமோ
முடிவேயற்ற புதிர்ப் பாதைகள்
இங்குதான் நான் வழிதவறிப் போனேன்”
அவரது எழுத்தின் திசையையே மாற்றிய இந்த அனுபவத்திற்குப் பிறகு அவர் எழுதியதுதான் அருவியின் விழிப்பு என்ற புகழ் பெற்ற நீண்ட பாடல் ஆகும். அவரே கூறியதுபோல, ‘இந்தக் கவிதை ஒரு நீர்வீழ்ச்சியைப் போல வந்து விழுந்து அதன் போக்கிலேயே போய்க் கொண்டிருந்தது.’
இமயமலையில் இருளில் மூழ்கி உறைந்துபோன ஒரு குகையாக அவரது இதயம் அதுவரை இருந்தது எனில், திடீரென மேலெழுந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த இருளை விரட்டியடித்து, அந்தப் பனிப்பாறையை உருக்கிய பொழுதில், அதிலிருந்து விடுதலையான நீர் துள்ளிக் குதித்து வெளியேறி, பாறைகளில் மோதி ஒலியெழுப்பி, எதிர்ப்பட்ட ஒவ்வொரு தடைக்கல்லுக்கும் புதியதொரு இசையை எழுப்பிக்கொண்டே போனது என்று சித்தரிப்பதும் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும்.
இந்தக் களியாட்டத்தில் புதியதொரு உலகைத் தரிசித்த ரவீந்திரரின் கையிலிருந்து புத்தம் புதிய கவிதைகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன. இத்தருணத்தில் வெளிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பிரபாத் சங்கீத் (அதிகாலையின் பாடல்கள்) என்ற பெயரில் பின்னர் வெளியானது. இந்தப் பாடல்கள் சொற்கள், சந்தங்கள், அணியலங்காரம் என அனைத்து வகையிலும் அதுவரையில் அவர் எழுதியிருந்த கவிதைகளில் இருந்து பெரிதும் முன்னேற்றம் அடைந்த பாடல்களாக விளங்கின.
அவரது முந்தைய படைப்பான மாலை நேரப் பாடல்கள் பதின்பருவ தன்னுணர்வும் கழிவிரக்கமும் நிரம்பியதாக இருந்தது எனில், இந்தத் தொகுப்பு தன்னம்பிக்கை நிரம்பியதோர் இளைஞனின் குரலாக ஒலித்தது. மேலும் வங்காளி இலக்கியம் இதுவரை கண்டிராத மொழியையும் சந்தத்தையும் தன்னுள் அடக்கியதாக, அந்த மொழிக்கு புதியதொரு பாதையைச் சமைப்பதாகவும் இந்தத் தொகுப்பு அமைந்திருந்தது.
(தொடரும்)