இதுவரையிலும் பல்வேறு இடங்களிலும் பரவிக் கிடந்த குடும்ப நிலங்களை மேற்பார்வை செய்து வந்த ஜோதீந்திரநாத் விதவிதமான வணிக முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய நிலையில், தன் இளைய மகன் ரவீந்திரரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மகரிஷி முடிவு செய்தார். அதற்கு முன்பாக அவருக்குத் திருமணம் செய்வது என்று தீர்மானித்து, அந்தப் பொறுப்பை தன் மருமகள்களான சத்யேந்திரநாத் மனைவி ஞானதநந்தினி, ஜோதீந்திரநாத் மனைவி காதம்பரி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
பிராலி பிராமணக் குடும்பத்தில் இருந்தே பெண் பார்க்க வேண்டிய நிலையில், (பொதுவாக அன்றைய பிராமணர்கள் இவர்களுடன் சம்மந்தம் வைத்துக் கொள்வதில்லை. ஒப்பீட்டளவில் இவர்களைத் தரம் தாழ்ந்தவர்களாகவே கருதுவார்கள்) பிராலி பிரிவினர் அதிகம் வசிக்கும் ஜெசூர் பகுதியில் இவர்கள் இருவரும் பெண் தேடச் சென்றனர்.
ஞானதநந்தினியும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். தாகூர் குடும்ப நிலத்தில் ஊழியம் செய்து வந்த பேணிமாதவ் ராய்சவுதரி என்பவரின் 10 வயது மகள் பவதாரிணியை (பின்னாளில் ரவீந்திரர் அவரது பெயரை, தனக்கு மிகவும் பிடித்த நளினி என்ற பெயர் வரும் வகையில், மிருணாளினி என்று மாற்றி வைத்தார்) இவர்கள் நிச்சயம் செய்துவர, 1882 டிசம்பர் 9 அன்று ஜோராசங்கோ இல்லத்திலேயே ரவீந்திரரின் திருமணம் நடைபெற்றது. அன்று இரவே அவரது மூத்த சகோதரி சவுதாமினியின் கணவர் உயிர் நீத்தார்.
நான்கே மாதங்களில் ரவீந்திரருக்கு மேலும் ஒரு பேரிடி காத்திருந்தது. 1884 ஏப்ரல் 19 அன்று ஜோதீந்திரநாத் மனைவியும் ரவீந்திரருக்குக் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தாயாக, நண்பராக, அவரது எழுத்துக்களுக்கான வழிகாட்டியாக என எல்லாமுமாக இருந்த அண்ணி காதம்பரி தேவி தற்கொலை செய்து கொண்டார். இந்தப் பேரிடியை தாங்காமல் அவர் நின்றிருந்த ஒரு சில வாரங்களுக்கு உள்ளேயே மூன்றாவது அண்ணனும், குடும்பத்தில் மருத்துவ அறிவியல் அறிஞரும், கல்விப் புலத்தில் அவரது வழிகாட்டியும் ஆன ஹேமேந்திரநாத் மரணமடைந்தார்.
இந்தத் திடீர் இழப்புகள் ரவீந்திரர் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தின. அவை அவரை உடைத்து நொறுக்கிவிடாமல், மேலும் வலுவோடு முதிர்ச்சி அடையச் செய்தன. நிராசையையோ மனக்கசப்பையோ ஏற்படுத்தவில்லை. விதிக்கு எதிராகக் குரலெழுப்பச் செய்யவில்லை. மாறாக, வாழ்க்கை மீதும் மரணத்தின் பொருள் குறித்தும் ஆழ்ந்த புரிதலை அவரிடம் ஏற்படுத்தியது. அவரது வார்த்தைகளிலேயே பார்க்கலாம்.
‘இதுவரை சிக்கெனப் பிடித்திருந்ததை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று. எனது சொந்த இழப்பைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த வரையில் நான் வருத்தத்தோடு இருந்தேன். மாறாக, இந்த மரணத்தின் மூலம் விடுதலை அடைந்தவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து இந்த இழப்பைப் பார்த்தபோது, மிகப் பெரும் நிம்மதி என் மனதில் வந்து கவிந்தது. இந்த விலகல் உணர்வு எனக்குள் வளரத் தொடங்கியபோது, கண்ணீரில் மூழ்கியிருந்த என் கண்களுக்கு முன்னால் இயற்கையின் அழகு மேலும் ஆழமான முக்கியத்துவம் பெற்றதாகத் தென்பட்டது. மரணம் என்ற அகன்ற திரையில் தீட்டப்பட்டிருந்த வாழ்க்கைச் சித்திரத்தை நான் கண்டபோது, அது உண்மையிலேயே மிக அழகானதாகத் தோன்றியது.’
ரவீந்திரரின் குடும்பம் ஏற்கனவே பாரதி என்ற இதழை நடத்தி வந்தது. அதனோடு கூடவே சத்யேந்திரநாத் மனைவி ஞானதநந்தினியின் முன்முயற்சியில் பாலக் என்ற சிறுவயதினருக்கான இதழ் தொடங்கியது. வழக்கம் போலவே, நர்சரி பாடல்கள், கவிதைகள், கதைகள், நாடகங்கள், நாவல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் அதன் பக்கங்களை இட்டு நிரப்ப வேண்டிய பொறுப்பும் ரவீந்திரர் மீது விழுந்தது. பின்னாட்களில் சிறுவயதினருக்கு, பதின்பருவத்தினருக்கு என மிகச் சிறந்த, அழகான படைப்புகளை அவர் உருவாக்குவதற்கான அடியுரமாக இந்த முயற்சி அமைந்தது.
இதற்கிடையே மகரிஷி அவரை ஆதி பிரம்ம சமாஜத்தின் செயலாளராக நியமித்தார். இதில் கூட்டு வழிபாட்டிற்கான பாடல்களை அவர் எழுதியதோடு, ராஜாராம் மோகன் ராய் பற்றியும், பிரம்ம சமாஜத்தின் குறிக்கோள்கள் பற்றியும் கட்டுரைகளை அவர் எழுதினார். அத்தருணத்தில் பாரம்பரியமான இந்து மதத்தின் பெருமைகளைப் பல்வேறு வகையிலும் பறைசாற்றி வந்த புகழ்பெற்ற எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜியுடன் கருத்துப் போர் ஒன்றையும் அவர் நடத்த வேண்டியிருந்தது.
ஒவ்வொரு தலைமுறையினரிடமுமே முன்னேற்றம் குறித்து ஒருவிதமான பிரமை நிலவுவது வழக்கம். அதிலும் குறிப்பாக, அறிவார்ந்த உலகமானது மேலும் முன்னே செல்ல வேண்டும் என்றும், இப்போது இருப்பதையே போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் இரு விதமாகப் பிளவுபட்டே வந்துள்ளது.
1880களில் இந்தப் பிளவு மிகவும் கூர்மையாக இருந்தது. பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் அழுத்தம் தரும் மேற்கத்திய கல்வி என்பது புதுமையான ஒன்றாகவும், சமூகத்தில் அதுவரையில் நிலவி வந்த பாரம்பரிய வகைப்பட்ட அறிவு மற்றும் வாழ்க்கை முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் இருந்தது. இந்தப் புதிய கல்வியால் கவரப்பட்டவர்கள் பழைய முறையில் உள்ள அனைத்தையுமே தவறெனக் குற்றம் கூறினர். இந்தப் புதிய கல்வியைக் கண்டு அஞ்சியவர்களோ பாரம்பரிய வழிகளின் பாதுகாப்பிலேயே இருப்பதில் தீவிரமாக இருந்தனர். இந்த இரு பிரிவினரின் வாதங்களிலுமே அடிப்படை இருந்தது.
இதை வெளிப்படுத்தும் விதமாக, ரவீந்திரர் ஒரு தாத்தாவிற்கும் அவரது பேரனுக்கும் இடையிலான கடிதங்கள் மூலம் இந்த இரு தரப்பினரின் வாதங்களை அழகாக முன்வைத்தார். ‘கங்கையாறு வெடித்துக் கிளம்பும் இமயமலைத் தொடர் எவ்வளவுதான் தூய்மையானதாக, அழகானதாக இருந்த போதிலும், அது தன் பாதையை மாற்றிக் கொண்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்ல முடியாது; தூசியும் அழுக்குகளும் நிரம்பிய சமவெளிப் பகுதிகளின் ஊடாக கடலில் சென்று கலப்பதுதான் அதன் இலக்காக, விதியாக இருக்கிறது’ என்று பேரன் எழுத, அதற்குப் பதிலடியாக, ‘ஓடிக் கொண்டே இருக்கும் நதியில் தட்டுத் தடுமாறிச் செல்லும் மரத் துண்டல்ல மனித வாழ்க்கை; மாறாக, சுழன்றடித்து, ஆர்ப்பரித்து வெள்ளமென ஓடும் நதி நீருக்கு மத்தியில் தனது மகத்தான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு பாறையைப் போன்றது மனித வாழ்க்கை.’ அன்றைய அறிவுலகில் நிலவிவந்த வாதப் பிரதிவாதங்களை வலுவோடும் அழகுணர்வோடும் முன்வைத்த ரவீந்திரரின் கட்டுரைகள் ஒவ்வொரு தலைமுறையும் நடத்தி வந்த போராட்டத்தை எடுத்துக் கூறின.
மிகப்பெரும் படைப்பாளிகள் ஒழுங்குமுறை அற்றவர்களாக, திடீர் திடீரென எழுச்சி கொள்பவர்களாக, பெரும்பாலும் பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள் என்ற பொதுவாக மக்கள் மத்தியில் நிலவும் சித்திரத்திற்கு முற்றிலும் மாறான வகையில் ரவீந்திரர் பெருமளவிற்கு சுயக் கட்டுப்பாடு மிக்கவராக இருந்தார். தொடக்க காலத்தில் அவர் பெற்ற பயிற்சியும், அவரது தந்தையின் முன் உதாரணமான வாழ்க்கையும் அவரிடத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது. அதனோடு கூடவே, தனது அதீதமான உணர்வு நிலைகளைக் கண்டு சிரிக்கும்படியான நகைச்சுவை உணர்வும் அவரிடம் மிகுந்திருந்தது. இத்தகைய தனித்திறமையே அவரைப் பல்வேறு தளங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உந்துசக்தியாக விளங்கியது.
1890 ஆகஸ்டில் ரவீந்திரர் இரண்டாவது முறையாகத் தன் நண்பரும் பாரிஸ்டருமான லோகேன் பாலித், அண்ணன் சத்யேந்திரநாத் ஆகியோருடன் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டு, இத்தாலி, பிரான்ஸ் வழியாக பிரிட்டன் சென்றார். எனினும் இரண்டு மாதங்களுக்குள் இந்தியா திரும்ப வேண்டும் என்ற உந்துதலில் தனியாகவே அக்டோபர் இறுதியில் கல்கத்தா வந்தடைந்தார்.
திரும்பிய உடனேயே கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மானசி (மனதைப் பற்றி) என்ற பெயரில் வெளியானது. இந்தக் கவிதைகள் இதுவரையில் இருந்தவற்றுக்கு முற்றிலும் மாறான வகையில் அவரது முதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, வங்காள இலக்கிய உலகில் அவரது பெயரை ஆழமாக நிலைநிறுத்துவதாகவும் இருந்தது.
இலக்கிய உலகில் தனக்கென ஓரிடத்தை அவர் பெற்றிருந்தபோதிலும், ரவீந்திரர் தன் குடும்பத்திற்கான கடமையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அவரது தந்தை மகரிஷி தேவேந்திரநாத் பிடிவாதமாக இருந்தார். இந்த முறை அவரால் தன் தந்தையின் உத்தரவைத் தட்டிக்கழிக்க முடியவில்லை.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரண்டாவது பெருநகரம் என்ற பெருமையை பெற்றிருந்த கால்கத்தாவிலேயே பிறந்து வளர்ந்த ரவீந்திரர் பெரும்பாலும் இதர நகரங்களுக்குத்தான் பயணம் செய்திருந்தார். தந்தையுடன் ஒரு முறை சாந்திநிகேதனுக்கும், அண்ணன் ஜோதீந்திரநாத் உடன் சிலமுறை குடும்ப நிலங்கள் இருந்த பகுதிகளுக்கும் சென்று வந்ததைத் தவிர, அடிப்படையில் ஒரு நகரவாசியாக, கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி ஏதும் அறியாதவராகவே ரவீந்திரர் அதுவரை இருந்தார்.
அவ்வகையில் இந்தப் பொறுப்பு அவரது கண்ணோட்டத்தையும் வாழ்க்கைப் போக்கையும் முற்றிலுமாக மாற்றியது எனலாம். இந்தப் புதிய வாழ்க்கை தனக்கு வழங்கிய அனுபவம் தன்னிகரற்றது என்றும் அதற்காக தன் தந்தைக்கு நன்றி பாராட்டுவதாகவும் அவர் தனது நினைவலைகளில் குறிப்பிட்டிருந்தார்.
குடும்ப நிலங்கள் இருந்த வங்காளத்தின் வடகிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா -இவற்றில் பெரும்பகுதி நிலங்கள் இன்று வங்க தேசம் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தன – பகுதிகளுக்கு அண்ணன் ஜோதீந்திரநாத் உடன் போய் அறிமுகம் ஆகியிருந்த நிலையில், பத்மா நதி (இது இன்றைய பீகார் – வங்காள எல்லையில் கங்கை நதி இரண்டாகப் பிரிவதில் ஒரு பிரிவு ஆகும். இன்றைய வங்க தேசத்தின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலப்பது. மற்றொரு பிரிவு பாகீரதி, ஹூக்ளி எனப் பல்வேறு பெயர்களில் கல்கத்தாவை கடந்து ஓடி கங்காசாகர் என்ற பகுதிக்கு அருகே வங்கக் கடலில் கலக்கிறது) ஊடாக ரவீந்திரர் ஒரு படகு வீட்டை (இதன் பெயரும் பத்மா தான்) தயார் செய்து கொண்டு, அதில் பயணம் செய்தபடியே குடும்ப நிலங்களையும் குத்தகைதாரர்களையும் மேற்பார்வையிடத் தொடங்கினார்.
இந்தக் காலத்தில்தான் வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஆண்டின் பல்வேறு பருவங்களிலும் அவர் கழித்த வாழ்க்கை இயற்கையுடனான அவரது நெருக்கத்தை மேலும் விரிவாக்கி வலுப்படுத்தியது. பத்மா நதி மற்றும் அதன் கிளை ஆறுகளின் வழியாக அவர் மேற்கொண்ட பயணங்கள் இந்தப் பகுதிகளின் அழகையும் இயற்கைச் செல்வத்தையும் தனது கவிதைகளிலும் இன்னபிற எழுத்துக்களிலும் செறிவாகச் சித்தரிக்க உதவின.
இவை அனைத்திற்கும் மேலாக ஒரு ஜமீன்தாராக அவர் நெருக்கமாகச் சென்று எதிர்கொண்ட கிராமப்புற வாழ்க்கை அவருக்குப் புதியதொரு தரிசனத்தை வழங்கியது. எழுத்தறிவற்ற கிராமப்புற ஏழை மக்கள், அவர்களது சலிப்பூட்டும் அன்றாட வேலைகள், வறட்சி, பஞ்சம் போன்ற இயற்கையின் திடீர் தாக்குதல்களுக்கு எதிரான அவர்களது தொடர்ச்சியான போராட்டம், நிலவுடைமையாளர்களின் அலட்சியப் போக்கு, மனிதத் தன்மையற்ற அவர்களின் அணுகுமுறை, அதற்குச் சற்றும் குறையாத வகையில் சமூகத்தில் நிலவிவந்த மடமை, கூடுதலாக, அந்நிய ஆட்சியின் சுமைகள் என அங்கு நிலவிய சூழல் அவர்களது வாழ்க்கையின் விடிவுக்கான வழியை மறித்து நின்ற சமூக – பொருளாதார நிலைமைகளை அவர் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவின.
இந்தப் புரிதல்தான் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் கிராமப் புறங்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. இந்த வறிய நிலைக்கான தீர்வு கல்வி மற்றும் கிராமப்புற சுயச் சார்பு மட்டுமே என்ற எண்ணமும் அவரிடத்தில் தீவிரமாக எழுந்தது. பின்னாட்களில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகளுக்கு இந்தக் காலத்தில் அவர் பெற்ற அனுபவமும் தெளிவுமே காரணமாக இருந்தன.
இந்தக் காலத்தில்தான் அவரது குடும்ப இதழான பாரதி க்குப் பதிலாக சாதனா என்ற இலக்கிய இதழை அண்ணன் மகன் சுதீந்திரநாத் ஆசிரியராக இருந்து நடத்தத் தொடங்கினார். வழக்கம்போலவே இந்த இதழின் பக்கங்களை நிரப்பும் கடமை ரவீந்திரரின் மீது விழுந்தது.
அதுவரையில் இயற்கை அழகு, பதின்பருவ உணர்வுகள், பிரம்ம சமாஜத்தின் தாக்கத்தால் உபநிடதக் கருத்துகளை முன்னெடுக்கும் ஆன்மிகப் பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்த அவரது எழுத்துகள், அவை கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் என எந்த வடிவத்தில் இருந்தாலும், நாடும், சமூகமும் எதிர்கொண்டு வந்த பிரச்னைகளை, அவற்றின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியதாக வெளிப்படத் தொடங்கின.
(தொடரும்)

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.com