பத்மா நதியில் பயணம் செய்தபடி தான் சந்தித்த குத்தகை விவசாயிகளின் மீது பேரன்பு செலுத்தினார் ரவீந்திரர். அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு அவர் எழுதிய கடிதங்களில் இந்த விவசாயிகள் குறித்த பல்வேறு உணர்வுகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
‘கடவுளின் நாதியற்ற குழந்தைகளான நமது குத்தகைதாரர்களைக் காணும்போதெல்லாம் என்னிடத்தில் பேரன்பு சுரக்கிறது. அவர்களுக்குத் தேவையெல்லாம் ஒரு வேளை உணவு மட்டும்தான். ஆனால் பூமி வறண்டு போகும்போதெல்லாம் அவர்களால் முடிந்தது அழுவது மட்டுமே. எப்படியாவது அவர்களின் பசி போக்கப்பட்டு விட்டால், மற்ற அனைத்தையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். இந்த உலகத்தில் துயரம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டுமானால், அவ்வாறே இருந்துவிட்டுப் போகட்டும். என்றாலும், அதனோடு கூடவே, முடிவே இல்லாத முயற்சியோடு, என்றும் அகலாத நம்பிக்கையை வளர்த்தெடுத்து, மனிதரிடையே சிறந்த குணத்தைத் தூண்டிவிடும்படியான ஏதாவதொரு வழி அல்லது ஏற்பாடு இருக்க வேண்டும்.’
11 மே 1893 அன்று எழுதிய மற்றொரு கடிதத்தில் ரவீந்திரர் இவ்வாறு கூறியிருந்தார். ‘இந்த அப்பாவி விவசாயிகள் சிலர் மரியாதை நிமித்தம் என்னை அடிக்கடி பார்க்க வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் வணக்கத்திற்கு உரியவனாக நான் இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை.
‘அவர்களின் எளிமையும் ஆழமான அன்பும் அவர்களை என்னைவிடப் பெரியவர்களாக ஆக்கி விடுகின்றன. குழந்தைகளிடம் எனக்கிருக்கும் அன்பைப் போலத்தான் அவர்கள் மீதும் அன்பு செலுத்துகிறேன். ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே சிறுவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள். ஆனால் இந்த வயதான குழந்தைகளோ எப்போதுமே வளர்வதில்லை. உள்ளார்ந்த உணர்வு மட்டும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் இணைக்க முடியுமானால், அவர்களின் நலன் குறித்த எனது ஆழமான கவலை நிச்சயமாக அவர்களைச் சென்றடைந்து ஏதாவது ஒரு வகையில் நன்மை பயக்கும்.’
இந்த ‘பெரிய, கடவுளின் குழந்தை’களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவியது மட்டுமின்றி, அவர்களைச் சுயச்சார்புடைய மனிதர்களாக வளர்த்தெடுக்கவும் அவர் முயற்சித்தார். மகாத்மா காந்தி இந்தியாவிற்கு வந்து பொது வாழ்வில் இறங்குவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே, நாடு விடுதலை பெற்றபிறகு வந்த அரசு இந்தப் பணியை மேற்கொள்ள முன்வருவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே, ரவீந்திரர் கிராமப்புற சமூக மேம்பாட்டிற்கான தனது முதல் பரிசோதனைகளைத் தொடங்கியிருந்தார்.
கிராமப்புற சமூக மேம்பாட்டிற்கான அவரது திட்டம் சுய உதவி, மனத் தெளிவு என்ற இரண்டு குறிக்கோள்களின் அடிப்படையில் ஆனது. அவரது குடும்ப நிலங்களில் பணிபுரிந்து வந்த விவசாயிகளிடையேதான் அவர் தனது முதல் பரிசோதனையை மேற்கொண்டார். அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கல்வி தொடர்பான தனது பரிசோதனையை சாந்திநிகேதனில் மேற்கொண்டு வந்த அதே நேரத்தில், அந்தக் கல்வி வளாகத்திற்கு அருகிலேயே கிராமப்புற மேம்பாட்டிற்கான பெருமளவிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு என ஸ்ரீநிகேதன் என்ற விவசாயத் தொழில்நுட்பக் கல்விக்கான மையத்தையும் அவர் நிறுவினார்.
வங்க மக்களிடையே முன்னோடியான ஓர் அறிவுஜீவியாக அவர் விளங்கிய போதிலும், ஒரு கவிஞராக இல்லாமல், ஒரு மனிதனாக, 1890 முதல் 1940 வரையிலான அரை நூற்றாண்டு காலப்பகுதியில் அவரது முக்கியக் கவலையெல்லாம் இந்திய விவசாயிகளைப் பற்றியதாகவே இருந்தது. முதலில் தனது குடும்ப நிலங்கள் இருந்த பகுதியிலும் பின்னர் ஸ்ரீநிகேதனிலும் விவசாயிகள் தங்களுக்கென்று சொந்தமாக கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும், சாலைகளையும், குடிநீர் தொட்டிகளையும், கூட்டுறவு அமைப்புகளையும், வங்கிகளையும், ஒரு வகையிலான சுயாட்சி அமைப்பையும் உருவாக்கிக் கொள்வதற்கு அவர் உதவினார்.
1913 ஆம் ஆண்டில் நோபல் பரிசுக்காக அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகையையும்கூட அவர் சாந்திநிகேதனுக்கு ஒப்பளித்தது மட்டுமின்றி, போடிசாரில் ஏற்கெனவே அவர் ஏற்படுத்தி இருந்த விவசாயக் கூட்டுறவு வங்கியில்தான் அந்தத் தொகையை அவர் முதலீடு செய்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். அந்தக் கூட்டுறவு வங்கியில் இருந்து குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன் வசதி கிடைக்கும் அதே நேரத்தில் சாந்திநிகேதன் பள்ளிக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியாகக் கிடைக்கும் ஏற்பாடுதான் அது.
அதுமட்டுமல்ல; அன்றும் இன்றும் இந்திய மேட்டுக்குடி வர்க்கத்தினர் செய்து வந்ததை/வருவதைப் போல தன் பிள்ளைகளை ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க அனுப்பவில்லை. மாறாக, 1906ஆம் ஆண்டிலேயே, அன்று உலகின் பெரும்பான்மையோரின் நம்பிக்கையைப் பெற்றிராத அமெரிக்காவில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தில் விவசாய அறிவியலில் பயிற்சிபெற தன் மகன் ரதீந்திரநாத் மட்டுமின்றி, மூன்றாவது மருமகன் நாகேந்திரநாத் கங்குலி, தன் நெருங்கிய நண்பரின் மகனான சந்தோஷ் சந்திர மஜூம்தார் ஆகியோரையும் விவசாயத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
ரவீந்திரரைப் பொறுத்தவரையில் இந்திய மக்களில் 90 சதவீதத்தினர் நிலத்தை நம்பியே வாழ்ந்து வரும் நிலையில், வேறெந்த வகையான வளர்ச்சியையும் விட விவசாய மேம்பாட்டிற்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பமே நம் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆக்ஸ்போர்ட்டில் இருந்து சிறந்த ‘நாகரீக மனிதனாக’ மாற கற்றுக் கொள்வதை விட, இலினொயில் இருந்து சிறந்த விவசாயியாக மாறுவதற்குத்தான் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்றுதான் அவர் கருதினார்.
பின்னாளில் கிராமப்புற மேம்பாட்டின் அவசியம் பற்றி அவர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘பிரச்சனைகளில் சிக்குண்டு மூச்சுத் திணறி வரும் கிராமப்புற வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வெள்ளப் பெருக்கைக் கொண்டுவர முயற்சிப்பதுதான் நமது நோக்கமாகும். இதற்கு அறிஞர்களும், கவிஞர்களும், இசை விற்பன்னர்களும், கலைஞர்களும், அறிவியல் நிபுணர்களும் இதில் இணைந்து செயல்பட வேண்டும்.’
ரவீந்திரரின் இந்த முயற்சியில் அவரோடு தோளோடு தோள் நின்று செயல்பட்டவர் லியனார்ட் எல்மிர்ஸ்ட் ஆவார். பிரிட்டனின் யார்க்ஷையரைச் சேர்ந்த இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்துவிட்டு, 1915 ஆம் ஆண்டில் இந்தியா வந்தபோது, இங்குள்ள விவசாயிகளின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தி, இந்திய விவசாயத்திற்கே தன்னை ஒப்பளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அந்த நேரத்தில் அலகாபாத் நகரில் கிறித்துவ போதகரும் விவசாய நிபுணருமான சாமுவேல் ஹிக்கின்பாட்டம் என்பவரைச் சந்தித்தார். அவர்தான் எல்மிர்ஸ்டை விவசாய அறிவியலில் பயிற்சி பெற்று இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தினார். அதன்படியே அமெரிக்காவில் இருந்த கார்னல் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
1921 ஆம் ஆண்டு ரவீந்திரர் அமெரிக்காவிற்குச் சென்றபோது எல்மிர்ஸ்டைச் சந்தித்துப் பேசினார். இந்த முதல் சந்திப்பின்போதே ‘கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை, அவர்களது சமூக சமநிலையை, அவர்களது படைப்புக் கலைகளைப் புத்துயிர் பெறச் செய்யும்படியான கருவிகளோடும் கருத்துகளோடும்’ இந்தியாவிற்கு உடனடியாக வருமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்தார் ரவீந்திரர்.
இந்தச் சந்திப்பு குறித்து எல்மிர்ஸ்ட் பின்னாளில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்: ‘நேற்றைக்கு முன் தினம் நான் கார்னல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது எனக்கு ஒரு தந்தி வந்தது. அதில் ‘நியூயார்க் நகரில் என்னை வந்து சந்திக்கவும் – ரவீந்திரநாத் தாகூர்’ என்று மட்டுமே இருந்தது. முதல் உலகப்போர் முடிந்த பிறகு விவசாயம் பற்றிப் படிப்பதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். அப்போது நான் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். எனது செலவுகளுக்காக முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். படிப்பை முடித்தபிறகு இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது.
‘இந்திய விவசாயம், கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில் ஒரு சில அம்சங்களை நான் நேரடியாக உணர்ந்து, அதுபற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அந்த நாட்டிற்குத் திரும்பி வேலை செய்யவேண்டும் என்று நான் விரும்பினேன். எனினும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு சேவகனாகவோ அல்லது ஒரு மத போதகராகவோ அங்கு செல்ல நான் விரும்பவில்லை. மாறாக, ஓர் இந்தியரோடு, முடிந்தால் தாகூர் போன்ற ஒரு நபரோடு இணைந்து இந்திய கிராமம் ஒன்றில் பணிபுரியவேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அந்த நேரத்தில் இத்தகைய புகழ்பெற்ற ஒருவரின் கவனத்தை எப்படி என் பக்கம் ஈர்க்க முடியும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
‘ஆங்கிலத்தில் வந்திருந்த அவரது எழுத்துகள் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்று முடித்த தருணத்தில் முதன்முதலாக கீதாஞ்சலியைப் படித்தபோது அது என் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்னைவிட்டு அகலவேயில்லை.
‘கார்னல் பல்கலைக்கழகத்தில் இறுதித் தேர்வுகளை எழுதி முடித்தபிறகு, நான் அங்கு வரவேண்டும் என்று இப்போதும் நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்று கேட்டு ரவீந்திரருக்கு கடிதம் எழுதினேன்.
‘இந்திய விவசாயத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு சில தொழில்நுட்பங்களில் நான் நன்கு பயிற்சி பெற்றிருந்தேன். படிப்பு முடிந்து யார்க்ஷையருக்குத் திரும்பிச் சென்றபோது நான் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்வதை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில்தான் ஆண்ட்ரூ (தாகூர்–காந்தியின் நெருங்கிய நண்பர்- தீனபந்து என்று அழைக்கப்பட்டவர்) ‘நிதி ஏதும் இல்லை. இப்போது வரவேண்டாம்’ என்று தந்தி அனுப்பியிருந்தார்.
‘எனினும் சாந்தினிகேதனில் தன்னார்வ ஆசிரியராக அப்போது பணிபுரிந்து, விடுமுறையில் வந்திருந்த பியர்சனின் உதவியால், தாகூருக்கும் எனக்கும் நண்பராக இருந்த ஓர் அமெரிக்கர் மிகுந்த தாராள மனத்துடன் அனுப்பியிருந்த டாலர்கள் கையில் கிடைத்ததும் ‘நிதி கிடைத்துள்ளது. நான் வரலாமா?’ என்று கேட்டு தந்தி அனுப்பினேன். ‘மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வரலாம்- ரவீந்தரநாத் தாகூர்’ என்று பதில் வந்தது. நானும் பியர்சனும் ஒரு ஜப்பானியக் கப்பலில் ஒன்றாகப் பயணித்து இந்தியா வந்தோம். அதன்பிறகு அவரோடு நெருங்கிப் பழகிய தருணங்கள் மூலம் அவரது சிறப்புகளை மேலும் அதிகமாக அறிந்து கொண்டபோது அவர் மீதான எனது மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தன.’
அந்த வகையில் 1921 நவம்பரில் சாந்தினிகேதனில் அவர் வந்திறங்கியதும் அப்போதுதான் அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்த தாகூரின் மகன் ரதீந்திரநாத், சந்தோஷ் சந்திர மஜூம்தார், காளி மோகன் கோஷ், கவ்ர் கோபால் கோஷ், சந்தோஷ் மித்ரா ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்டு கிராமப்புற மறுகட்டமைப்பிற்கான நிலையம் உருவானது.
1921 டிசம்பர் 23 அன்று இதுவரை தனியொரு கல்வி நிறுவனமாக இருந்த சாந்தினிகேதன் ஒரு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு விஸ்வபாரதி என்ற பெயர் பெற்றது. அதைத் தொடர்ந்து 1922 பிப்ரவரி 6 ஆம் நாள் இந்தப் புதிய நிலையம் ஸ்ரீநிகேதன் (செல்வத்தின் இருப்பிடம்) என்ற பெயரில் எல்மிர்ஸ்டை இயக்குனராகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. கிராமப்புறங்களில் மாறுபட்டதொரு வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்ரீநிகேதன் உருவாக்கப்பட்டது.
தனது குடும்ப நிலத்தில் பணிபுரிந்து வந்த விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று தொடக்கத்தில் விரும்பிய ரவீந்திரரின் கண்ணோட்டம் இப்போது மேலும் பரந்து விரிந்து விரிவான தொலைநோக்கு, முதிர்ச்சியான அணுகுமுறை ஆகியவற்றுடன் ஸ்ரீநிகேதனில் இருந்து செயல்படத் தொடங்கியது. உதாரணமாக, போடிசாரில் இருந்த குடும்ப நிலத்தின் குத்தகைதாரர்களை ஒன்றிணைத்து ஹிடாய்ஷி சபா என்றதொரு மக்கள் நலக் குழு ஒன்றையும் அவர் உருவாக்கினார்.
60 முதல் 70 ஆயிரம் மக்கள் வசிக்கும் சுமார் 125 கிராமங்களை இது உள்ளடக்கியிருந்தது. தாகூர் குடும்பம் வழங்கிய நிதியுதவியோடு கூடவே இந்தச் சபா தன் பங்கிற்கு நிதி திரட்டி, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், பொது நலனுக்கான இதர மையங்களையும் உருவாக்கிப் பராமரித்ததோடு, தன்னளவில் சுயாட்சியை நிலைநிறுத்தி வந்தது. இவ்வாறு மக்களின் கூட்டுறவு அடிப்படையிலான முயற்சிகளே பெரும்பான்மையோரின் வாழ்வு மேன்மைக்கும் வளத்திற்கும் அடிப்படை என்பதை அவர் நடைமுறையில் நிரூபித்தார்.
ஸ்ரீநிகேதனில் கிராமப்புற மேம்பாடு என்பது விவசாயக் கல்வி, சுகாதாரம், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. ரசாயன உரங்களில் இருந்து இயற்கை உரத்திற்கு மாறிச் செல்லும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மலேரியா நோயை ஒழிப்பதில் தீவிரம் காட்டப்பட்டது. 1923 ஆம் ஆண்டு ஒரு சிறு மருத்துவ நிலையம் தொடங்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டிலிருந்து கூட்டுறவு சுகாதார அமைப்புகள் நிறுவப்பட்டன.
இந்தச் செயல்பாடுகள் ஸ்ரீநிகேதனோடு நின்றுவிடவில்லை. தன்னார்வத் தொண்டர்கள் மூலம் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. 1930களில் இவ்வாறு 19 குழுக்கள் செயல்பட்டு வந்தன. 1926க்கும் 1928க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து ரவீந்திரர் எழுதிய பாடல்கள் வனவாணி (காட்டின் செய்தி) என்ற பெயரில் வெளியாயின.
நிலத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்ற பிரச்சனை மட்டுமின்றி, ஆண்டின் பெரும்பகுதியான நாட்களில் வேலையின்றி இருக்கும் மக்களை, அதுவும் இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமாக உள்ள ஒரு நாட்டில், அவர்களது சோம்பேறித்தனத்தை அகற்றி, எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற பிரச்சனையும் நிலவியது. நெல் போன்ற முக்கிய பயிரோடு கூடவே, துணைப் பயிர்களைப் பயிர் செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மேலும் கைத்தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் அவர்களை ஈடுபடுத்தியதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தையும் ஸ்ரீநிகேதன் உருவாக்கியது.
(தொடரும்)