குடும்ப நிலங்களை மேற்பார்வையிட வந்து, அங்கிருந்த விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கலங்கி, அவர்களின் மேம்பாட்டிற்காக சிந்திக்கவும் முயற்சியை மேற்கொள்ளவும் தொடங்கியிருந்த ரவீந்திரர், அவர்களது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சம்பவங்களையும் தனது எழுத்துகளில் பல வடிவங்களில் வெளியிடத் தொடங்கினார். அதில் அவர் தேர்ந்தெடுத்த சிறுகதை என்ற வடிவமானது வங்காள இலக்கிய உலகில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
1884ஆம் ஆண்டில் அவரது அண்ணன் ஜோதீந்திரநாத் சரோஜினி என்ற பெயர் கொண்ட படகுப் போக்குவரத்தை தொடங்கி நடத்தியபோது, ரவீந்திரர் ஒருமுறை அவருடன் பயணம் செய்தார். மக்கள் படகில் ஏறி இறங்க உதவும் வகையில் ஆங்காங்கே இருக்கும் படித்துறைகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தப் பயணம் பற்றி பாரதியில் அவர் எழுதிய கட்டுரையில் இந்தப் படித்துறைகள் அவர் மனதில் எவ்வளவு ஆழமாகப் படிந்து போயின என்பதைக் காண முடியும்.
‘இந்தச் சிதிலமடைந்த, பழைய படித்துறைகள்தான் எவ்வளவு அழகாக இருக்கின்றன! மனிதர்கள்தான் இவற்றை உருவாக்கினார்கள் என்பதே மறந்துவிடும்போல் இருக்கிறது. ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் மரங்களையும் கொடிகளையும் போலவே இவையும் கூட கங்கை நதிக் கரையின் ஒரு பகுதியாகத்தான் தோன்றுகிறது… வலுவான, வெண்மையான, தூய்மையான ஒன்றாக இருந்த அதன் கட்டமைப்பை உடைத்தெறிந்து, சிதைந்துபோன, அசுத்தமான ஒரு தோற்றத்தை அந்த இடத்தில் இயற்கை நிறுவியிருந்தது.
‘குளிக்கவும், தண்ணீர் எடுக்கவும் இங்கே வரும் சிறுவர்-சிறுமியரோடு இந்தப் படித்துறைக்கு தனிப்பட்டதோர் உறவு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அம்மா அல்லது அத்தையைப் போல அந்தப் படித்துறையும் பேரக் குழந்தைகளைப் போல அந்தக் குழந்தைகளும் எனக்குத் தோன்றினார்கள்.’
மனிதர்களுடனான இந்த உயிரோட்டமான உறவை அடிநாதமாகக் கொண்டுதான் அதே பாரதி இதழில் படித்துறை பேசுகிறது என்ற சிறுகதையை 1884ஆம் ஆண்டில் ரவீந்திரர் எழுதினார். இந்த உறவுதான் மனிதர்களின் இயக்கத்திற்கும் மாற்றத்திற்குமான நிரந்தர சாட்சியாக திகழ்கிறது என்றும் அவர் கருதினார். இந்த வகையில் மனிதர்களின் கதைகளின் சேமிப்புக் கிடங்காகவும் அவை திகழ்கின்றன என்று முன்வைத்து, ஒரு படித்துறையே ஓர் இளம் விதவையின் கதையை கூறுவதாக இந்தக் கதை அமைந்திருந்தது.
‘நான் ஒரு கதையை சொல்லத் தொடங்கும்போது, மற்றொரு கதை வந்து அதை நீரோட்டத்தில் தள்ளிவிட்டு விடுகிறது. இவ்வாறு என்னருகே கதைகள் வந்து வந்து போகின்றன. என்னால் அவற்றைப் பிடித்து வைத்துக் கொள்ள முடிவதில்லை. கற்றாழை இலைகளால் செய்யப்பட்ட சின்னச் சின்ன படகுகள் ஆற்றின் கரையோரத்தில் சுழன்றபடியும், மீண்டும் மீண்டும் தலைகீழாகக் கவிழந்தபடியும் இருப்பதைப் போல ஒரு கதை இன்று என் படிக்கட்டில் வந்து நிற்கிறது. அது எந்த நேரத்திலும் தண்ணீருக்குள் மூழ்கி விடவும் கூடும்.
‘வசீகரமான ஒரு சிறுமி தினமும் ஆற்றுக்கு வருவது வழக்கம். அவள் எவ்வளவு இனிமையானவள் என்றால், அவளது நிழல் நீரில் விழும்போது, அந்த நிழலை அப்படியே என் கைகளுக்குள் பிடித்து வைத்துக் கொள்ளத் தோன்றும். அந்தப் படிகளில் அவள் மிக மெதுவாக கால்களை வைத்து இறங்கும்போது, படிகளின் மீது படிந்திருக்கும் பாசி மிகுந்த மகிழ்ச்சியோடு துள்ளுவதைப் போல எனக்குத் தோன்றும்.
‘அவளது தோழிகள் பல்வேறு செல்லப் பெயரிட்டு அவளை அழைத்தாலும், அவள் பெயர் குசும் என்று எனக்குத் தெரிந்தது. அங்கேயே பிறந்து வளர்ந்தவளைப் போல மிகுந்த நேசத்துடன் அவள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஒரு கட்டத்தில் அவள் ஆற்றுக்கு வருவது நின்று போனது. அவளுக்குத் திருமணமாகி, வேறொரு கிராமத்தில் கணவனுடன் வாசிக்கப் போய் விட்டாள் என்று அவளது தோழிகளின் பேச்சில் இருந்து தெரிந்தது.
‘நாட்கள் ஓடின. திடீரென்று ஒரு நாள் அந்தப் படிக்கட்டுகள் பழைய மகிழ்ச்சி பொங்கும் அதிர்வை உணர்ந்தன. அது குசுமின் கால்களிலிருந்து மட்டுமே வெளிப்படக் கூடியது. என்றாலும் அவள் படிக்கட்டில் அடியெடுத்து வைத்தபோது, அந்தப் பழைய இன்னிசை போன்ற சலசலப்பு இருக்கவில்லை. அவள் ஒரு விதவையாகத் தன் கிராமத்திற்கு திரும்பியிருந்தாள். பல வருடங்கள் கடந்து போயின. இதற்கிடையே, மழைக் காலத்தில் பொங்கித் ததும்பும் கங்கையைப் போல அவள் ஓர் இளம் அழகியாக உருவெடுத்திருந்தாள்.
‘ஒரு நாள் அந்தக் கிராமத்திற்கு நெடிதுயர்ந்த, அழகான சந்நியாசி ஒருவர் வந்து படித்துறைக்கு அருகே இருந்த சிவன் கோவிலில் வந்து தங்கினார். அவர் கூறும் இறைமொழிகளைக் கேட்க, கிராமத்து ஆண்களும் பெண்களும் அணிதிரண்டு வந்தனர். குசும் அவர்களில் ஒருத்தி அல்ல. ஒரு நாள் சூரிய கிரகணம் வந்தது. அன்று தொலைதூர கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் புனித கங்கையில் குளிக்க ஒன்று திரண்டனர்.
‘அவர்களில் குசும் திருமணம் செய்து கொண்டு சில மாதங்களைக் கழித்த கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருத்தி அந்த சந்நியாசியைப் பார்த்துவிட்டு ‘இவர் குசுமின் கணவரைப் போலவே இருக்கிறார்’ என்று சொன்னாள். அதற்கு மற்றொருத்தி ‘இருந்தாலும் அவன்தான் இறந்து போய்விட்டானே! அவன் எப்படித் திரும்ப வரமுடியும்?’ என்று கேட்டாள். மூன்றாவதாக ஒரு பெண் ‘அவனுக்கு இவ்வளவு நீளமான தாடியும் இருந்ததில்லை!’ என்று சொன்னதும் விஷயத்தை அத்தோடு முடித்துக் கொண்டு அந்தப் பெண்கள் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிப் போனார்கள்.
‘ஒரு நாள் மாலையில் – அன்று முழு நிலவு நாள் – குசும் ஆற்றங்கரைக்கு வந்து படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். அங்கே வேறு யாரும் இல்லை. சற்று நேரத்திற்குப் பிறகு சந்நியாசி கோயிலை விட்டு வெளியே வந்து படித்துறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போதுதான் படிக்கட்டு ஒன்றில் ஒரு பெண் தன்னந்தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தார். சற்றே தயங்கிவிட்டு மீண்டும் கோயிலுக்குத் திரும்ப அவர் எண்ணியபோது, குசும் தலையை உயர்த்தினாள்.
‘முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு குசும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, தலை முக்காத்தை கீழிறக்கியபடியே சந்நியாசியை தலை குனிந்து வணங்கினாள். ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டார் சந்நியாசி. குசும் தன் பெயரை சொன்னாள்.
‘இந்த சம்பவத்திற்குப் பிறகு குசும் ஒவ்வொரு நாள் மாலையும் கோயிலுக்கு பூக்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, சந்நியாசியின் இறைமொழிகளை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுவிட்டுப் போவது வழக்கமாயிற்று. திடீரென்று குசும் மீண்டும் காணாமல் போனாள். நீண்ட நாட்கள் அவள் ஆற்றங்கரைப் பக்கமே வரவில்லை.
‘ஒரு நாள் சந்நியாசி ஆளனுப்பி அவளை வரச் சொன்னார். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கண்கள் தரையை பார்த்தபடி இருக்க அவள் வந்து நின்றாள். ‘நீண்ட நாட்களாக ஏன் வரவில்லை?’ என்று சந்நியாசி அவளைக் கோபித்துக் கொண்டபோது, ‘வேண்டுமென்றேதான் நான் வரவில்லை. எனக்குள் தோன்றும் பொல்லாத எண்ணங்களை நினைத்து மிகுந்த அவமானமாக இருக்கிறது. உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் தகுதி எனக்கில்லை’ என்று அவள் பதிலளித்தாள்.
‘சந்நியாசி அவளை மேலும் துருவிக் கேட்டபோது, ‘உங்களுடன் உறவு கொள்வதுபோல் எனக்குக் கனவு வருகிறது. என் கணவனைத் தவிர உங்களையும் என் காதலனாக எண்ணாமல் இருக்க முடியவில்லை’ என்று அவள் பதிலளித்ததும் சந்நியாசி திகைத்து நின்றுவிட்டார். பின்பு சுதாரித்துக் கொண்டு, இத்தகைய நினைப்பை விட்டுவிடுமாறு அவளை வேண்டிக் கொண்டு, அந்த கிராமத்தை விட்டே அவர் சென்று விட்டார். அதன் பிறகு ஊரில் யாருக்குமே அவரைப் பற்றி தகவல் தெரியவில்லை.
‘இப்போது குசும் மெதுவாக கரைபுரண்டு ஓடும் ஆற்றுநீரைப் பார்த்துக் கொண்டே படித்துறையில் இறங்குகிறாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்த ஆற்றை அவள் நேசித்து வந்திருக்கிறாள். நெருக்கடி மிக்க இந்த நேரத்தில் இந்த ஆறு அவளை தன் கைகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால் வேறு யார் அவள் உதவிக்கு வருவார்கள்? ‘சளக்’ என்று சத்தம் கேட்டது. அதன் பிறகு ஒன்றுமேயில்லை.’
கதை இவ்வாறு முடிந்திருந்தது.
1884 ஆம் ஆண்டு பாரதி யில் இந்தச் சிறுகதை வெளியாவதற்கு முன்பு, 1873இல் வங்க தர்ஷன் இதழில் பூர்ண சந்திர சாட்டர்ஜீ என்பவர் மதுமதி என்ற கதையை அறிமுகம் செய்தார். அவரது சகோதரர் பங்கிம் சாட்டர்ஜீயும் தன் பங்கிற்கு ஜுகலாங்குரியா (1874), ராதா ராணி (1875) ஆகிய கதைகளை எழுதியிருந்தார். ரவீந்திரரின் மூத்த சகோதரியான சுவர்ணகுமாரியும் ரவீந்திரருக்கு வெகு முன்பாகவே நாவல்களையும் சிறுகதைகளையும் பதிப்பித்திருந்தார்.
எனினும் இந்தியாவில் நவீன சிறுகதை வடிவத்தில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு அதை ஓர் இலக்கிய வடிவமாக நிலைநிறுத்திய ரவீந்திரரின் முதல் சிறுகதையான ‘படித்துறை பேசுகிறது’ என்பதில் இருந்துதான் அந்த வரலாறு தொடங்குகிறது என்று இந்தப் புதிய இலக்கிய வடிவத்தின் வரலாற்றை எழுதியோர் வலியுறுத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து 1891 முதல் ஹிடாபாடி என்ற இலக்கிய இதழில் அவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வந்தார். 1901ஆம் ஆண்டில் சாந்தி நிகேதனில் அவர் தனது பள்ளியை தொடங்கும்வரை வங்காள கிராமப் புறங்களில் தங்கியிருந்த காலத்தில் மொத்தம் 59 சிறுகதைகளை எழுதியிருந்தார். பின்னாளில் நாவல் வடிவத்தை நோக்கி அவர் திரும்பிய பிறகும்கூட, சிறுகதை வடிவத்தை அவர் கைவிட்டுவிடவில்லை. 1941 ஆகஸ்ட் மாதம் அவர் மறைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட ‘ஒரு முஸ்லிம் பெண்ணின் கதை’ என்ற கதைக்கான வடிவமைப்பை இறுதிப்படுத்தியிருந்தார்.
ரவீந்திரரின் கதைகள் அனைத்திலுமே பெண்கள், குறிப்பாக இளம் சிறுமிகளும், சிறு குழந்தைகளும் கதாசிரியரின் மேன்மையையும் கருணையையும் மொத்தமாகக் கைப்பற்றியிருந்தனர். அவர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் அவரது கதைகள் இருந்தன.
குறிப்பாக, ‘போஸ்ட் மாஸ்டர்’ என்ற கதையில் வரும் ரத்தன் என்ற சிறுமியின் உணர்வுகளை ரவீந்திரர் சித்தரித்ததைப் போலவே திரைப்பட மேதை சத்யஜித் ரே மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருப்பார். இதுபோன்று ஏராளமான கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரது கடிதங்கள் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘சிறுகதைகளை எழுதுவதைத் தவிர, வேறு எதையும் நான் செய்யாமல் இருந்தாலும், நான் மகிழ்ச்சி அடைவதோடு ஒரு சில வாசகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யவும் முடியும். இந்த மகிழ்ச்சியின் முக்கிய காரணம் எனது பாத்திரங்கள் என்னோடு சேர்ந்து பயணம் செய்வதுதான். மழைக் காலத்தில் என் அறையில் நான் அடைந்து கிடக்கும்போதும் அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். வசந்த காலத்தில் பத்மா நதிக் கரையில் நான் நடந்து செல்லும்போதும் அவர்கள் என்னோடு நடந்து வருகின்றனர். இன்று அதிகாலையில் இருந்தே கிரிபாலா என்ற சிறுமி எனது கற்பனை உலகத்திற்குள் நுழைந்துவிட்டாள்.’
பல்வேறு வகையான குடும்பச் சூழ்நிலைகளில் வாழும் சிறுமிகளையும், இளம் பெண்களையும் பார்த்து, ஒரு குறிப்பிட்ட சூழலில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைத் தன் கற்பனையில் இருத்தி அவர் புனைந்த கதைகள் வங்காள பெண்களின் மனதை அவர் எவ்வளவு ஆழமாக உணர்ந்திருந்தார் என்பதை எடுத்துக் கூறின. இந்தக் கதைகளுக்கு பெண்கள் மத்தியில் இருந்து எழுந்த பிரதிபலிப்புகள் அவரது ஊகம் மிகச் சரியானதே என்பதை உறுதி செய்தது.
சமீபத்தில் தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முதல் சிறுகதை என்று கூறப்படும் வ. வே. சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதை தாகூரின் சிறுகதை ஒன்றில் இருந்து தாக்கம் பெற்ற ஒன்றுதான் என்று குறிப்பிட்டதையும் இங்கு நினைவு கூரலாம். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் இத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதே உண்மையாகும்.
(தொடரும்)