Skip to content
Home » தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

கோரா

தன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான 1905இல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார். இதன் மூலம் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இந்தியாவின் இரண்டு பெரும் பிரிவினரிடையே அவர் ஏற்படுத்திய பிளவு, 42 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டைத் துண்டாடியதோடு, அத்தருணத்தில் இந்திய வரலாறு இதுவரை கண்டிராத வன்முறையையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளச் செய்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிளவுவாத சதிகள் பற்றி ஏற்கெனவே பலமுறை தன் எழுத்துகளின் மூலம் எச்சரித்திருந்த ரவீந்திரர் உடனடியாகக் களத்தில் இறங்கி, பொறி பறக்கும் உரைகளை நிகழ்த்தியதோடு, மக்களிடையே நாட்டுப்பற்றைத் தட்டியெழுப்பும் பல பாடல்களை எழுதி, வங்காளப் பிரிவினைக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். அத்தருணத்தில் அவர் எழுதிய பாடல்களில் ஒன்றுதான் ‘அமார் சோனார் பங்க்ளா’ (என் தங்க வங்கமே!) இது, பின்னாளில் வங்க தேசம் உருவானபிறகு, அந்த நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தத் தருணத்தில் அவர் எழுதிய பாடல்கள் எளிய வங்காளி மொழியில், நாட்டுப்புற இசையில் அமைந்திருந்ததால், மிக நீண்ட அரசியல் உரைகளை விட மிக எளிதாக மக்கள் மனதில் பதியும்படி அமைந்து, மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன. உணர்வுகளைத் தூண்டாமல், வெறியூட்டும் தன்மை ஏதுமின்றி இருந்த அந்தப் பாடல்கள் விடுதலைப் போராட்டக் காலம் முழுவதிலும் மக்களால் தொடர்ந்து பாடப்பட்டு வந்தன. உதாரணமாக,

‘என் நாட்டின் மண்ணும் நீரும் காற்றும் கனியும்
என்றும் இனிமையாக இருக்கட்டும் இறைவனே!
என் நாட்டின் இல்லங்களும் கடைகளும் வனங்களும் வயல்களும்
என்றும் நிரம்பியிருக்கட்டும் இறைவனே!
என் நாட்டு மக்களின் உறுதிமொழிகளும் நம்பிக்கையும் சொல்லும் செயலும்
என்றும் உண்மையானதாக இருக்கட்டும் இறைவனே!
என் நாட்டு புதல்வர், புதல்விகளின் வாழ்க்கையும் இதயமும்
என்றும் ஒன்றாய் இருக்கட்டும் இறைவனே!’

அதைப் போன்றே மகாத்மா காந்திக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும் மிகவும் பிடித்தமான கீழ்கண்ட பாடல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது:

‘உன் அறைகூவலுக்கு யாரும் செவிசாய்க்காது
அச்சமுற்று ஓடிப் போயினர் எனினும்
அதிர்ஷ்டமற்றவரே கவலை வேண்டாம்!
உன் இதயத்தை மேலும் விரித்துக் கொண்டு
தனியாகவே குரலெழுப்பு!
சுழல்காற்று சுழன்றடிக்கும் இரவில் தீபமேற்றி வழிகாட்ட
யாரும் முன்வரவில்லையெனில்
அதிர்ஷ்டமற்றவரே கவலை வேண்டாம்!
துன்பம் தன்தீபத்தை உன் இதயத்தில் ஏற்றட்டும்!
அதுவே உனக்கு வழிகாட்டட்டும்!’

(ஏக்லா சலோரே என்ற பாடல்)

மிகுந்த தன்னெழுச்சியோடு ஜோராசங்கோவில் இருந்து கால்நடையாக முஸ்லீம் மீனவர்கள் அதிகமாக வசித்து வந்த கித்தர்பூர் வரை பாடல்களைப் பாடியபடி முன்னேறிய ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமின்றி, இந்து-முஸ்லீம் சகோதர உணர்வை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ‘ராக்கி’கட்டி விடுதலை இயக்கத்தை நோக்கி அவர்களை கவர்ந்திழுத்தார் ரவீந்திரர்.

எனினும், இந்த அணிதிரட்டல் தவிர்க்கமுடியாத வகையில் வன்முறையில் இறங்கத் தொடங்கியபோது, மிகுந்த வருத்தத்துடன் அவர் களத்திலிருந்து விலகிக் கொண்டார். தன் பாடல்களால் ஆயிரக்கணக்கானோரைக் கவர்ந்து இழுத்துவிட்டு, இப்போது போராட்டத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். போராட்டக் களத்திலிருந்து அவர் விலகியது தேச விடுதலை இயக்கத்திற்கு இழப்பாகக் கூட இருந்திருக்கலாம்; ஆனால் சாந்திநிகேதனும் வங்காளி இலக்கியமும் அதனால் பயன் பெற்றன என்றே சொல்ல வேண்டும்.

இத்தருணத்தில் சமூக, அரசியல் பிரச்சனைகள் குறித்தும், கல்வி, இலக்கிய விமர்சனம், நாட்டுப்புற இலக்கியம், வார்த்தைகள்- ஒலிகள் குறித்த ஆய்வு என எண்ணற்ற வகையில் அவர் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். மேலும் கேலி-கிண்டல் நிரம்பிய பல பதிவுகளையும் எழுதினார். இவை அனைத்தும் பின்னர் தொகுக்கப்பட்டு கேயா என்ற பெயரில் தனி நூலாக வெளியானது. சமீபகாலத்தில் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்த துயரங்களும் அதிருப்திகளும் அவரது துணிவை மேலும் வலுப்படுத்தின. பின்னாளில் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்த மாற்றத்திற்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளவும் இவை ஒருவகையில் உதவின.

1907 நவம்பரில் குடும்ப வாழ்க்கையின் மிகப்பெரும் சோகம் அவரைத் தாக்கியது. பலவகையிலும் தந்தையைப் போன்ற குணத்தையும் திறமைகளையும் கொண்டிருந்த ரவீந்திரரின் இளைய மகன் சமீந்திரா தன் 13 ஆம் வயதில் காலரா நோயினால் திடீரென காலமானார். மூத்த மகள் பெலா பீகாரில் வசித்து வர, மூத்த மகன் ரதீந்திரநாத் அதற்கு முந்தைய ஆண்டுதான் விவசாய அறிவியல் தொழில்நுட்ப படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்க, மூன்றாவது மகள் மீராவிற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்க, ரவீந்திரர் இப்போது யாருமற்ற தனிமரமாக நின்ற நிலையில், குடும்ப நிலங்கள் அதிகமிருக்கும் ஷெலிடாவில் சில காலம் தங்கியிருந்தார்.

மக்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராக அவர் இருந்ததால், மக்கள் அவரை விரும்பவில்லை. தன் காலத்தையும் தாண்டிய வகையில் அத்தியாவசியமான சிந்தனைகளைக் கொண்டவராக அவர் திகழ்ந்தார். அவரது இலக்கிய மேதமையைக் கூட அவர்கள் அரைகுறை மனதோடுதான் ஏற்றுக்கொண்டு பாராட்டினர். இத்தகைய வெளியுலகச் சூழலோடு கூடவே, உள்ளார்ந்த துயரங்களும் அவரைத் தனித்து நிற்க வைத்தன. முற்றிலும் தன் சொந்த திறனையும், ஆதாரங்களையும் மட்டுமே நம்பியபடிதான் அவர் தன் மனதிற்குகந்தபரம்பொருளுடன் உரையாடினார். இந்த உரையாடல்களே பின்னாளில் கீதாஞ்சலி (1910) என்ற கவிதைத் தொகுப்பாக உருவெடுத்து அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து புகழைக் கொண்டு வந்து சேர்த்தது.

மற்ற எல்லாத் துறவிகளையும் ஞானிகளையும் போலவே, அவரது ஆன்மீகத் தேடல் என்பது அவர் ஆழ்ந்து அனுபவித்து வந்த துயரம், தனிமை ஆகியவற்றில் இருந்தே பிறந்தது. அவர் பெற்ற உள்ளொளியின் தனிச்சிறப்பு மிக்க அம்சம் என்னவெனில், துறவிகளையும் ஞானிகளையும் போல அல்லாமல், அவர் பெற்ற இந்த அனுபவங்கள் இந்த உலகையும், இந்த வாழ்க்கையையும் மேலும் மேலும் அதிகமாக அவரை நேசிக்கச் செய்ததே ஆகும்.

மக்கள் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளத் தவறியபோதிலும், ரவீந்திரர் தன் நாட்டையும் அதன் மரபுகளையும் ஆழமாக நேசித்தவர். அதே நேரத்தில் பாரம்பரியமான மதிப்பீடுகள் என்ற பெயரில் திணிக்கப்படும் கருத்துகளை வெறுத்தவர். இந்தப் பழமை–புதுமை என்ற இரண்டையுமே அவர் எவ்வாறு மதிப்பீடு செய்தார் என்பதற்கான சாட்சிதான் அவர் எழுதிய கோரா என்ற நாவலாகும்.

ரவீந்திரரின் பேத்தி நந்திதாவின் (மூன்றாவது மகளான மீராவின் மகள்) கணவரும், சாகித்ய அகாதெமியின் முதல் செயலாளரும், சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்திற்கு அளப்பரிய பல செயல்களைச் செய்தவரும், மிகச் சிறந்த இலக்கிய, வரலாற்று ஆசிரியருமான கிருஷ்ணா கிருபளானி (இவர் பிறப்பால் பஞ்சாபி) இந்த நாவல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘கோரா வெறும் நாவல் மட்டுமல்ல; மாறிக் கொண்டிருந்த இந்திய வரலாற்றின் மிக முக்கியமான, அறிவார்ந்த காலத்தில் எழுதப்பட்ட ஓர் இந்தியக் காவியம். ருஷ்ய மொழிக்கு டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவல் எந்த அளவிற்கு முக்கியம் ஆனதோ, அந்த அளவிற்கு கோரா நாவல் வங்காளி புனைவுலகிற்கு முக்கியமானதாகும்.

‘இந்த நாவலின் கதை நிகழ்ந்த காலப்பகுதியில் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்களின் எழுச்சிக்குப் பிந்தைய காலம்) அப்போதிருந்த அறிவுஜீவிகளைப் பற்றி, அவர்களது விருப்பங்கள், பலவீனங்கள் பற்றி, மெதுவாக மீண்டும் தலையெடுக்க முயற்சித்து வந்த இந்து மதவாதத்தில் தன் வேர்களை நாட்டியிருந்த இந்திய தேசியவாதத்தின் குணாம்சம் பற்றி, பின்பு அது மெதுவாக பரந்து விரிந்த மனித நேயத்தை நோக்கி தன் கரங்களை நீட்டுவது பற்றி என அக்காலத்தின் சிறப்பியல்புகளை துல்லியமாக எடுத்துரைக்கும் நாவலாக அமைந்திருந்தது.’

நந்தினி பட்டாச்சார்யா என்ற ஆங்கில பேராசிரியர் ‘கோரா – எ கிரிடிக்கல் கம்பானியன்’ என்ற தலைப்பில் 330 பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு நூலில் இந்த நாவலின் தனிச்சிறப்பை விதந்தோதியிருந்தார். இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள கே. செல்லப்பன் அவர்களுக்கு சாகித்ய அகாதெமியின் 2021ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ரவீந்திரர் எழுதிய மொத்தம் 12 நாவல்களிலேயே இந்த நாவல்தான் மிகப் பெரியதாகும். ராமானந்த சாட்டர்ஜி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ப்ரபாசி என்ற இதழில் 1907 ஆகஸ்ட் முதல் 1910 பிப்ரவரி வரை இந்த நாவல் தொடராக வெளிவந்தது. ஆசிரியரிடம் தான் முன்பணமாகப் பெற்றிருந்த ரூ.300-ஐ மனதில் இருத்திக் கொண்டிருந்த ரவீந்திரர் இத்தொடருக்கான பங்களிப்பை ஒரு முறைகூடத் தவறவிட்டதில்லை. அவர் பெரிதும் நேசித்த இளைய மகன் சமீந்திராவின் மரணத்தின்போதுகூட தொடர் நிற்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

1910 பிப்ரவரியில் தனியொரு நூலாக வெளியானபோதும், தொடரில் வெளியான பல பகுதிகள் அதில் நீக்கப்பட்டிருந்தன. 1928ஆம் ஆண்டில் விஸ்வபாரதி இந்த நாவலை மீண்டும் பதிப்பித்தபோது, நீக்கப்பட்ட பகுதிகளில் சில சேர்க்கப்பட்டன. 1941ஆம் ஆண்டில் வெளியான ரவீந்திர ரச்சனாவளி என்ற தொகுப்பில் விடுபட்ட பகுதிகளில் மேலும் சிலவும் இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டு, அதுவே இன்றுவரை அதிகாரபூர்வமான பதிப்பாகக் கருதப்படுகிறது.

1904ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும், சுவாமி விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதா ரவீந்திரரின் விருந்தினராக அவரது ஷெலிடா எஸ்டேட்டிற்குச் சென்றிருந்தார். வேறொரு மதத்திலிருந்து புதிதாக மதம் மாறியவர்கள் எவ்வாறு அந்தப் புதிய மதம் குறித்து தீவிரமாக இருப்பார்களோ, அதைப் போன்றே அவரும் ரவீந்திரருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், இந்து மதத்தின் பழமையான தத்துவங்களின் சிறப்பியல்புகளைப் பற்றித் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மாலை நேரத்தில், ‘பத்மா’ படகு வீட்டில் அமர்ந்தபடி அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, ‘ஏதாவது ஒரு கதை சொல்லுங்கள்’ என்று நிவேதிதா கேட்க, ஏற்கெனவே தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த இந்தக் கதையை ரவீந்திரர் விவரித்தார்.

இறுதியில் கோரா தன் உண்மையான பெற்றோர் இந்தியரல்ல; அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் என்பதைத் தெரிந்து கொண்டதும், அவனை அதுவரை நேசித்து வந்த பிரம்மசமாஜி பெண்ணான சுசரிதா அவனை நிராகரிக்கிறாள் என்று ரவீந்திரர் கதையை முடித்ததும், சகோதரி நிவேதிதா கதையின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ‘அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்காமலிருப்பது மிகப்பெரிய சோகம். நீங்கள் இந்துப் பெண்களுக்கு நியாயமாக நடந்துகொள்ளவில்லை. நிஜ வாழ்க்கையில் நடக்க இயலாத ஒன்றை இலக்கியத்திலாவது நீங்கள் நடத்திக் காட்டக் கூடாதா? அவர்களை ஒன்று சேருங்கள்! அவர்கள் ஒன்றுசேரத்தான் வேண்டும்!’ என்று வற்புறுத்தியபிறகே, தான் இந்தக் கதையின் முடிவை மாற்றியதாக 1922இல் பியர்சன் என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாவலை வங்காளத்தின் முதல் அரசியல் நாவல் எனவும் இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறித்து மக்களிடையே நிலவிய ஆதரவு-எதிர்ப்பு என்ற இருவேறு போக்கினை அது சித்தரித்தது. அதே நேரத்தில், பழமைவாத இந்து சமூகத்திற்கு எதிராக, அருவமானதோர் இறைவனை முன்வைத்து, பிரம்ம சமாஜம் எழுந்து வந்த நிலையில், இந்த இருதரப்பிலுமே மேற்சொன்ன ஆதரவு-எதிர்ப்பு நிலை நிலவிவந்ததை, மிக நுணுக்கமாக அது சித்தரித்தது.

அதே போன்று, பெண்களிலும் கூட முற்போக்கு எண்ணங்கொண்ட, சாதி-மத வேறுபாடு காட்டாத இந்துப் பெண்கள், இன்னமும் பழமைவாதப் பிடிப்புள்ள பிரம்ம சமாஜப் பெண்கள் என அன்று நிலவிய சமூக வேறுபாடுகளை மிக ஆழமாக அது சித்தரித்தது.

1857ஆம் ஆண்டு வெடித்தெழுந்த சிப்பாய் கலகத்தின்போது கொல்லப்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன்தான் கோரா. கருணை மிகுந்த ஒரு பிராமணப் பெண் அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அழகும் தீவிரமும் ஆர்வமும் மிக்கவனாக வளரும் கோரா இந்துப் பழமைவாதத்தை, அதன் சாதீய அடுக்குகளை தீவிரமாக நம்புவனாக, தீண்டாமையைக் கடைப்பிடிப்பவனாக, அதை நியாயப்படுத்தி வாதாடுபவனாக இருக்கிறான். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரே இறை தத்துவம் இந்து மதத் தத்துவமே என்ற கருத்தை வலியுறுத்த முற்படுகையில், தன் நெருங்கிய நண்பனையும் பிரிகிறான். தான் நேசிக்கும் பெண்ணையும் அதற்காகக் கைவிடத் தயாராகிறான்.

அந்தத் தருணத்தில்தான் தன் பிறப்பு குறித்த உண்மை அவனுக்குத் தெரியவருகிறது. இதுவரையில் தான் ஆழமாக நம்பி வந்த இந்து தர்மப்படி பார்க்கையில், தான் ஒரு மிலேச்சனாக, தீண்டத்தகாதவர்களை விட மோசமான ஒருவனாக, மாறியிருப்பதை அவன் உணர்கிறான். அதுவரை தான் தீவிரமாக முன்னெடுத்துவந்த பழமையான இந்து சமூகத்தில் தனக்கு இடமில்லாத நிலையை அவன் எதிர்கொள்கிறான். இந்த நிலைதான் மதத்தின் உண்மையான பொருளை அவனுக்குப் புரியவைக்கிறது.

இந்தியாவில் பிறந்த ஓர் இந்தியனாக தன்னை உணர்ந்த வகையில், அவன் சொல்கிறான்: ‘இன்றுதான் நான் உண்மையிலேயே விடுதலை பெற்றேன். உண்மையிலேயே ஒரு இந்தியனாக ஆனேன். எனக்குள் இந்து-முஸ்லீம்-கிறித்துவ மதங்கள் குறித்த பகையுணர்வு ஏதுமில்லை. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சாதியும் என் சாதியே. அவர்களின் உணவுதான் என் உணவும்’ என்று கூறி புதிய இந்தியாவை நோக்கிய போராட்டத்தில் இறங்க, தன் காதலியோடு கரம் கோர்த்துச் செல்வதாக அந்தக் கதை முடிகிறது.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *