Skip to content
Home » தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

நோபல் பரிசை நோக்கி…

‘யாருடைய அழைப்பின் பேரில், எப்போதிலிருந்து
இந்த மனித வெள்ளம் கடலை நோக்கி வந்து
கலந்ததென யாருக்கும் தெரியாது
ஆரியர், ஆரியல்லாதார், திராவிடர், சீனர்
சிந்தியர், ஹன், பத்தான், முகலாயர் என
அனைவரும் கலந்து, இணைந்து, ஓருடலாய் ஆயினர்
இப்போது, அதன் கதவுகள் மேற்குலகை நோக்கி….
கையில் பரிசுடன் அவர்களை அழைக்க
அவர்களும் வந்தனர்; கொடுத்தனர்; எடுத்தனர்;
சந்தித்தனர்; ஒன்றாய்த் திரண்டனர்
இந்தியா என்ற மாபெரும் மனிதக் கடலின்
கரையிலிருந்து யாரையுமே திருப்பியனுப்பலாகாது…’

கோரா நாவல் எழுதிய (1910) காலத்தில் எழுதிய இந்தக் கவிதையை மேம்படுத்தி 1912இல் கல்கத்தாவில் இந்திய வரலாற்றின் பாதை என்ற தலைப்பில் ரவீந்திரர் உரை நிகழ்த்தினார். அதே ஆண்டில், அதே உணர்வுடன், அவர் (காங்கிரஸ் மாநாட்டிற்கென) எழுதிய கவிதையே இன்று இந்தியாவின் தேசிய கீதமாகத் திகழ்கிறது.

வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட துயரங்கள், இழப்புகள், மறுதலிப்புகள், நடத்திய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள் அனைத்தும் நிரம்பிய வகையில் அவர் எழுதிய கவிதைகள் கீதாஞ்சலி என்ற தலைப்பில் 1910 இறுதியில் வெளியாயின. (இவற்றைப் பாடல்களாகப் பாடுகையில் அவை மேலும் இனிமை மிக்கவையாகத் திகழ்கின்றன).

வங்கத்தின் அறிவுலகினர் ஒன்றுசேர்ந்து 1912 ஜனவரி 28 அன்று ரவீந்திரரின் 50வது ஆண்டு நிறைவை கல்கத்தா டவுன் ஹாலில் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். ‘இந்த வரவேற்பும் வாழ்த்துகளும் இதுவரை கண்டிராதவை; இந்தியாவில் முதன்முறையாக ஓர் இலக்கியவாதிக்கு இத்தகைய பாராட்டு நிகழ்வு நடைபெற்றது’ என மாடர்ன் ரிவ்யூ குறிப்பிட்டிருந்தது.

வங்காளிகளின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த அதே நேரத்தில், சாந்திநிகேதன் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்திருந்த பெற்றோரில் ஒரு பகுதியினர் தங்கள் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து விடுவித்துக் கொண்டனர். இதற்குப் பின்னே பிரிட்டிஷ் அரசு அனுப்பியிருந்த ஒரு ரகசிய சுற்றறிக்கை இருந்தது. ‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு முற்றிலும் தகுதியற்ற பள்ளி அது’ என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

எனினும் பிரிட்டிஷ் அரசு மட்டுமே மேற்குலகின் பிரதிநிதியல்ல என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறுவதைப் போல, அமெரிக்க வழக்கறிஞரான மைரோன் பெல்ப்ஸ் என்பவர் அன்றைய நாளிதழ்கள் பலவற்றிலும் அந்தப் பள்ளியைப் புகழ்ந்து எழுதியதோடு, மிகுந்த மனிதத்தன்மையோடு அங்கு கல்வி வழங்கப்படுகிறது என்பதையும் விரிவாக விளக்கியிருந்தார்.

அதே ஆண்டு மார்ச் 19 அன்று ரவீந்திரர் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. எனினும் அதற்கு முதல்நாள் இரவு திடீரென அவரது உடல்நலம் கெட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் பயணிக்க தடை விதித்தனர். அவரது உடைமைகள் ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்டிருந்தன.

கப்பல் அடுத்து நின்ற மதராஸ் துறைமுகத்தில் அவை கீழிறக்கப்பட்டு, மீண்டும் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. திடீரென்று இந்தப் பயணம் ரத்தானது குறித்து அதிருப்தியுற்ற போதிலும், உடல்நிலையை சீரமைக்க, அவருக்கு மிகவும் பிடித்தமான பத்மா நதிக்கரையில் இருந்த ஷெலிடா எஸ்டேட் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கினார் ரவீந்திரர். இங்குதான் அவர் முதன்முறையாக கீதாஞ்சலி கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

அதற்குப் பின்னே ஒரு காரணமும் இருந்தது. ஐரோப்பாவில் ரவீந்திரரின் புகழ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சர் வில்லியம் ரொதென்ஸ்டைன் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஓர் ஓவியராவார். 1910இல் இந்தியா வந்த அவர் வாரணாசிக்குச் சென்றிருந்தபோது, சர் ஜான் உட்ராஃப், சர் ஹாரி ஸ்டீஃபன் ஆகிய இருவரும், கல்கத்தாவில் இருந்த அபனீந்திரநாத் தாகூர், காகேந்திரநாத் தாகூர் (ரவீந்திரரின் சித்தப்பாவின் பேரன்கள்) ஆகிய இரு சகோதர ஓவியர்களைப் பற்றிக் கூறியிருந்தனர். ரொதென்ஸ்டைன் கல்கத்தாவில் இந்த சகோதரர்களை ஜொரசங்கோவில் சந்தித்தபோது, அவர்களது சித்தப்பாவான ரவீந்திரரும் அப்போது அங்கிருந்தார்.

இதுபற்றி பின்னர் ரொதென்ஸ்டைன் நினைவுகூர்ந்தார். ‘ஒவ்வொருமுறை நான் ஜொரசங்கோ சென்றபோதும் அவர்களின் சித்தப்பா என்னை மிகவும் கவர்ந்தார். மிக அழகான, உயரமான, அந்த உயரத்திற்கேற்ற செழுமையான உருவம் கொண்டிருந்த அவர், வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா அணிந்து நாங்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார். அவரது தோற்றத்தால் கவரப்பட்ட நான், ‘உங்களை ஓவியமாக வரையலாமா?’ என்று கேட்டேன். அவரது உடலழகிற்கு ஈடான வகையில் அவரிடம் தென்பட்ட உள்ளொளியை எனது பென்சிலின் மூலம் வெளிக்கொண்டுவர நான் விரும்பினேன். அவரது காலத்திலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நபராக அவர் வெளிப்படுவார் என்பதற்கான அறிகுறி ஏதும் அப்போது எனக்குத் தென்படவில்லை.’

இந்தத் தருணத்தில்தான் அவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு உருவானது. ரொதென்ஸ்டைன் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘உங்களை நான் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நினைத்துக் கொண்டிருப்பேன். உங்களின் கவிதை அல்லது கதைகள் ஏதாகிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுமானால், என்னைச் சற்றே நினைவு வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தால் நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்.’

ரொதென்ஸ்டைன் லண்டன் திரும்பிய பிறகு, மாடர்ன் ரிவ்யூவில் வெளியாகியிருந்த ரவீந்திரரின் சிறுகதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அந்தச் சிறுகதை அவரை மிகவும் கவர்ந்தது. இதேபோன்ற அவரது கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேறு ஏதுமுள்ளதா என்று வினவியதோடு, ரவீந்திரர் எப்போது லண்டன் வந்தாலும் தான் அவரைக் கவனித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து, கல்கத்தாவில் இருந்த தன் நண்பர்களான அபனீந்திரநாத்-காகேந்திரநாத் சகோதரர்களுக்கு அவர் கடிதம் எழுதினார்.

அதற்குப் பதிலாக, சாந்திநிகேதன் பள்ளியில் அப்போது பணிபுரிந்து வந்த அஜித் சக்ரவர்த்தி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரவீந்திரரின் ஒரு சில கவிதைகள் அடங்கிய ஒரு சிறு நோட்டுப் புத்தகம் அவருக்கு வந்து சேர்ந்தது. ‘ஓரளவிற்கு சுமாரான மொழிபெயர்ப்பாக இருந்தாலும், அந்தக் கவிதைகள் பெரிதும் ஆன்மிகத் தன்மை கொண்டவையாக இருந்த நிலையில், நான் முன்பு படித்த சிறுகதையைவிட என்னைப் பெரிதும் கவர்ந்தவையாக இருந்தன’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க வந்திருந்த கூச்பிகார் அரசப் பரம்பரையைச் சேர்ந்த பிரமதலால் சென், அவர் தன்னோடு அழைத்து வந்திருந்த டாக்டர் பிரஜேந்திரநாத் சீல் (தத்துவ ஞானியும் பேரறிவு மிக்கவருமான அவர் மற்றவர்களிடம் குழந்தையைப் போல் பழகுபவர்) ஆகியோருடன் இதுபற்றி விவாதித்தார். ரொதென்ஸ்டைனின் ஆலோசனைப்படி இருவருமே லண்டன் வருமாறு கோரி ரவீந்திரருக்குக் கடிதம் எழுதினர்.

1912இல் ரவீந்திரர் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது அவரது மகன் ரதீந்திரநாத், மருமகள் ப்ரதிமா ஆகியோரும் உடனிருந்தனர். லண்டன் துறைமுகத்தில் இறங்கி, அங்கிருந்து ரயில் மூலம் சேரிங் கிராஸ் நிலையம் சென்று, அங்கிருந்து மெட்ரோ மூலம் ப்ளூம்ஸ்பரிக்குச் சென்றனர். இந்த மெட்ரோ பயணத்தின்போது ரவீந்திரரின் கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பின் வங்காளி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய கைப்பெட்டியை வண்டியிலேயே தவற விட்டுவிட்டு வந்தது மறுநாள் காலைதான் அவர்களுக்குத் தெரிய வந்தது.

ப்ளூம்ஸ்பரி மெட்ரோ ரயில் நிலையத்தில் அதைத் தேடி அலைந்த ரதீந்திரநாத், அங்கிருந்த தொலைந்து போன பொருட்களுக்கான அலுவலகத்தில் அதைக் கண்டுபிடித்து பின்னர் பெற்றுக் கொண்டு வந்தார்.

இந்தக் கையெழுத்துப் பிரதியை பெற்றுக்கொண்ட ரொதென்ஸ்டைன் அதைப் படித்துவிட்டு, இங்கிலாந்தின் அன்றைய முன்னணிக் கவிஞரான டபிள்யூ.பி. ஈட்ஸிடம் கொடுத்தார். அவரும் தான் போகுமிடமெல்லாம் அந்தப் பிரதியை எடுத்துச் சென்று படித்தார். மீண்டும் மீண்டும் படித்தார். ‘என் வாழ்நாள் முழுவதும் கனவு கண்ட ஓர் உலகத்தினை நான் அதில் கண்டேன். மிக உயரிய கலாசாரத்திலிருந்து வெளிப்பட்டதாக அது தோன்றியபோதிலும், புல்லையும் பூண்டையும் போல அனைவருக்கும் பொதுவானதொரு மண்ணிலிருந்தே உருப்பெற்றிருந்தது’ என பின்னர் ஈட்ஸ் கூறியிருந்தார்.

ஈட்ஸின் இந்த உற்சாகமான வரவேற்பினைக் கண்டு மகிழ்ந்த ரொதென்ஸ்டைன், தன் இல்லத்தில் நெருக்கமான நண்பர்களை அழைத்தார். அங்கு ஈட்ஸ் மிகுந்த உற்சாகத்தோடு ரவீந்திரரின் கவிதைகளைப் படித்துக் காட்டினார். எஸ்ரா பவுண்ட், மே சின்க்ளர், எர்னெஸ்ட் ரைஸ், அலைஸ் மேனெல், ஹென்றி நெவின்சன், சார்லஸ் ட்ரெவெல்யன் போன்ற அன்றைய ஆங்கில இலக்கிய உலகின் பெருமக்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பின்னாளில் தனக்கும் மகாத்மா காந்திக்கும் உற்ற நண்பராக உருவெடுக்கவிருந்த சார்லஸ் ஃப்ரீயர் ஆண்ட்ரூஸ் (சி.எஃப். ஆண்ட்ரூஸ் – பின்னாளில் தீனபந்து எனவும் அழைக்கப்பட்டவர்) என்பவரை இந்த நிகழ்வின்போதுதான் ரவீந்திரர் முதன்முறையாகச் சந்தித்தார்.

இங்கிலாந்தில் அவர் தங்கியிருந்த நான்கு மாத காலத்தில் ஆங்கில அறிவுலகின் ஜாம்பவான்களான பெர்னார்ட் ஷா, எச்.ஜி. வெல்ஸ், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஸ்டர்ஜ் மூர், டபிள்யூ.எச். ஹட்சன் போன்றோரைச் சந்தித்து உரையாடினார்.

1912 அக்டோபரில் அவர் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். ஹார்வார்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் பின்னர் 1913இல் சாதனா என்ற தலைப்பில் தனி நூலாக வெளியானது. 1912 நவம்பரில் கீதாஞ்சலியின் ஆங்கிலத் தொகுப்பை லண்டனில் உள்ள இந்தியா சொசைட்டி சிறப்பு வெளியீடாகக் கொண்டு வந்தது. பிரிட்டிஷ் இதழ்கள் இந்தக் கவிதைத் தொகுப்பினைப் பெரிதும் பாராட்டி எழுதின.

டைம்ஸ் லிட்ரரி சப்ளிமெண்ட் இதழ் அந்த நூல் குறித்து இவ்வாறு எழுதியிருந்தது: ‘அவரது (ரவீந்திரர்) கவிதைகளை படிக்கும்போது நமது சமகாலத்திய டேவிட்டின் உபதேசங்களைக் கேட்பது போல் தோன்றியது. இந்தக் கவிதைகள் கூறும் தத்துவம் தங்களுக்கானதல்ல என்று கூறி, அதன் தாக்கத்திற்கு உட்பட ஒரு சிலர் மறுக்கவும் கூடும். மிக அருமையான, அதே நேரத்தில் நமக்கு அந்நியமானதாக இது தோன்றுமானால், அதை வெறுத்து ஒதுக்குவதற்கு முன்பாக நம்மை நாமே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்: ‘நமது தத்துவம்தான் என்ன?’ நமது சிந்தனையில் சஞ்சலம் மிக்கவர்களாக நாம் இருக்கிறோம். ஆனால் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் சித்தரிக்கும் வகையில் நம்மிடம் எதுவுமில்லை.’

அமெரிக்காவில் அவரைச் சந்தித்த சக வங்காளியான வசந்த குமார் ராய் என்பவர் உங்கள் எழுத்துக்களை மேலும் அதிகமான அளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று ரவீந்திரரை கேட்டுக் கொண்டதோடு, ‘அப்படிச் செய்தால், உங்கள் எழுத்துகள் நன்கு பிரபலமாகும். இப்போது இல்லாவிட்டாலும், பின்னொரு நாளில் உங்கள் கவிதைக்காக நீங்கள் நோபல் பரிசைக் கூடப் பெற முடியும். இதுவரை இந்தியாவிலோ, ஆசியாவிலோ உள்ள எவரும் அந்தப் பரிசை வென்றதில்லை’ என்று குறிப்பிட்டபோது, ‘ஆசியர்கள் கூட அந்தப் பரிசுக்குப் போட்டி போடமுடியுமா?’ என்று ரவீந்திரர் அப்பாவித்தனமாக அவரிடம் கேட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில்தான் எஸ்ரா பவுண்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்க சிகாகோ நகரிலிருந்து வெளிவரும் பொயட்ரி (கவிதை) என்ற இதழின் ஆசிரியரான ஹேரியட் மன்றோ ரவீந்திரரின் ஆறு கவிதைகளை ஆங்கிலத்தில் தனது இதழில் வெளியிட்டார். அமெரிக்காவில் ரவீந்திரரின் எழுத்துகளை அச்சில் வெளியிட்ட முதல் இதழ் அதுவே ஆகும். சிகாகோ ட்ரிப்யூன் நாளிதழ் தனது தலையங்கத்தில் இந்தக் கவிதைகளை சுட்டிக்காட்டிப் பாராட்டியிருந்தது.

அதே ஆண்டில் லண்டனில் இருந்து செயல்படும் மேக்மில்லன் பதிப்பகம் கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பை வணிக ரீதியாக வெளியிடத் தீர்மானித்தது. அதற்கு முன்பு வெளியான இந்தியா சொசைட்டியின் பதிப்பு குறைந்த எண்ணிக்கையில் தனிப்பட்ட வெளியீடாக இருந்தது. இந்த முடிவை சார்லஸ் விப்ளி என்ற நூல் விமர்சகர் வரவேற்ற அதே நேரத்தில், ‘தாகூரின் புகழைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கண்மண் தெரியாமல் அவரது எழுத்துகள் அனைத்தையும் பதிப்பிக்க முயற்சிக்க வேண்டாம். இறைத் தன்மை மிகுந்த, மிகவும் நளினமான இந்த எழுத்தை அதிகமான அளவில் மக்களிடையே கொண்டு செல்வது ‘கலாபூர்வமான ஒரு தவறாக ஆகிவிடும்’. ஒருவகையில் பார்த்தால் பாதி நிரம்பிய கோப்பையே முழுமையாக நிரம்பிய கோப்பையை விட சிறப்பானதாக, திருப்தியளிப்பதாக இருக்கும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாக்மில்லன் பதிப்பகம் மார்ச் 1913இல் கீதாஞ்சலியின் முதல் பதிப்பை வணிக ரீதியாக வெளியிட்டது. 1913 நவம்பர் 13 அன்று நோபல் பரிசுக் கமிட்டி இலக்கியத்திற்கான பிரிவில் ரவீந்திரருக்கு அந்த ஆண்டின் பரிசை வழங்கவிருப்பதாக அறிவித்தது. நோபல் பரிசு குறித்த இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக மாக்மில்லன் பதிப்பகம் இடைப்பட்ட ஒன்பது மாத காலத்தில் கீதாஞ்சலியைப் பத்து முறை மறுபதிப்பு செய்தது என்பதிலிருந்தே அன்றைய ஆங்கில இலக்கிய உலகில் கீதாஞ்சலியும் தாகூரும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர் என்பதை நன்கு உணர முடியும்.

ரவீந்திரர் நோபல் பரிசைப் பெறுவதற்கு முன்பாகவே கூறப்பட்ட இந்த அறிவார்ந்த ஆலோசனைக்கு ரவீந்திரரோ மேக்மில்லன் பதிப்பகமோ செவி சாய்க்கவில்லை. அவர் நோபல் பரிசு பெற்ற பிறகு அவரது எழுத்துகள் பலவும் அவசரகதியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சந்தையில் வந்து குவிந்தன. ரவீந்திரரின் ஆழமான கருத்துக்களின் சாரத்தை சிறப்பாகவும் கவனமாகவும் வெளியிடத் தவறியதன் விளைவாக, வெகுவிரைவிலேயே அவை மேற்குலகினருக்கு திகட்டத் தொடங்கிவிட்டன.

மேலும், கீழைத்தேய மெய்யியல் சார்ந்த, இறைத்தன்மை மிக்க ஒரு தூதர் என்ற தோற்றம் கீதாஞ்சலியின் மூலம் ஆங்கில வாசகர்கள் மனதில் ஆழப் பதிந்து போயிருந்தது. இந்நிலையில் கீதாஞ்சலியைத் தொடர்ந்து வெளியான த கார்ட்னர், த க்ரெசெண்ட் மூன், சித்ரா, க்ளிம்ப்சஸ் ஆஃப் பெங்கால் போன்ற நூல்களில், மேற்குலகினரின் மனதில் பதிந்திருந்த இறைத்தூதர் போன்ற அவரது பிம்பம், இப்போது கண்களுக்குத் தென்படாமல் போனதால், இந்த முயற்சி, ஏற்கெனவே சார்லஸ் விப்ளி கணித்ததைப் போலவே, தோல்வியில் முடிந்தது எனலாம்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *