Skip to content
Home » தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

நோபல் பரிசும் தாக்கமும்

1912ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உடலளவில் மிகவும் நலிந்தவராக, தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற நிச்சயம் ஏதுமில்லாதவராக லண்டனில் வந்திறங்கிய ரவீந்திரர், 1913 செப்டெம்பரில் இந்தியாவிற்குத் திரும்பக் கப்பலேறினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில அறிவுலகினரின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதில் அவர் வெற்றி பெற்றிருந்தார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் இருந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் கீழைத்தேய வாழ்க்கைத் தத்துவத்தை, அதன் நாகரீக வரலாற்றை வலுவாக எடுத்துக்கூறும் ஒரு பேச்சாளராகவும் அவர் உருவெடுத்தார்.

1913 ஜூலையில் லண்டனில் அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலம் பெருமளவிற்குச் சீரடைந்தது. இவ்வகையில், புகழோடும், நல்ல உடல்நலத்தோடும் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.

எட்டு வயதில் எழுதத் தொடங்கிய அவர் வங்காளி இலக்கிய உலகில் படிப்படியாகவே தன் தகுதியை நிலைநிறுத்திக் கொண்டு வந்தார். தொடக்கத்தில் கவிதைகள், பின்பு சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அவர் கால்வைத்த பகுதிகள் அனைத்திலும் தன் முத்திரையைப் பதித்து வந்தார். அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்த வாசகர்களும் கூட வெகுவிரைவிலேயே அவரது அறிவுக் கூர்மையின் பல்வேறு வீச்சுக்களையும் நன்கு உணரவும் பாராட்டவும் தலைப்பட்டனர்.

எனினும் இந்தப் படைப்புகள் அனைத்தையுமே பல்வேறு குடும்ப, சமூக நெருக்கடிகளுக்கும், துயரங்களுக்கும் இடையேதான் அவர் உருவாக்கினார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.

தாகூர் என்ற புகழ்பெற்றதொரு குடும்பப் பின்னணியில் இருந்து வெளிப்பட்ட ஓர் எழுத்தாளர் என்ற வகையில், பல்வேறு முரண்பாடுகளையும் மனக்கசப்புகளையும் மனதிற்குள் இருத்தியபடி, அன்றைய வங்காள சமூகத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற அவர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அவரைச் சீண்டிய, புறக்கணித்த, எள்ளிநகையாடிய பெருமகன்களோ ஏராளம். இவை அனைத்தையும் கடந்து, தொடர்ந்து எழுதி, நூல்களை வெளியிட்டு, தன் வாசகர்களை அவர் வியப்பில் ஆழ்த்தி வந்தார் என்பதுதான் அவரது தனித்தன்மையாக இருந்தது.

இதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலையை மேற்குலகில் ரவீந்திரர் எதிர்கொண்டார். ஆங்கில இலக்கிய உலகிற்குள் அவரின் நுழைவு ஒரு புயலாக இருந்தது. அந்த மொழியின் வாசகர்கள் இதுவரை தாங்கள் கண்டறியாத புதியதோர் அனுபவத்தை அவரது எழுத்திலிருந்து பெற்றனர்.

முதன்முதலாக ஆங்கிலத்தில் வெளியான கீதாஞ்சலி, இந்தியப் பாரம்பரியம், உபநிடதங்கள், இந்தியாவின் கலாசார வரலாறு ஆகியவை பற்றி ஏதுமறியாத மக்களிடையே புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அந்த மொழியின் புகழ்பெற்ற கவிஞர்கள் மட்டுமின்றி, இன்னபிற துறைகளை சேர்ந்த அறிஞர் பெருமக்களின் மீதும் அந்த எழுத்து மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரவீந்திரரின் நண்பரான ரொதென்ஸ்டைன்தான் லண்டனில் இருந்த இந்தியா சொசைட்டியை அணுகி அவர்களின் உறுப்பினர்களிடையே பிரத்தியேகமாக வழங்குவதற்கென இந்த கவிதைத் தொகுப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி ரவீந்திரரின் கவிதைத் தொகுப்பு முதன்முறையாக ஆங்கிலத்தில் கீதாஞ்சலி என்ற தலைப்பில் வெறும் 750 பிரதிகளுடன் தனிப்பட்ட சுற்றுக்கான வகையில் வெளியானது. அதன்பிறகு மேக்மில்லன் பதிப்பகத்தையும் கீதாஞ்சலியை வெளியிடுமாறு ரொதென்ஸ்டைன் கேட்டுக் கொண்டார்.

புகழ்பெற்ற பதிப்பகம் ஒன்று ஆங்கில இலக்கிய உலகில் முன்பின் தெரியாத ஓர் எழுத்தாளரின், அதுவும் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட தானாக முன்வராது. ரொதென்ஸ்டைனின் தொடர்ச்சியான நெருக்கடிதான் ரவீந்திரர் நோபல் பரிசைப் பெறுவதற்கு முன்பாகவே மேக்மில்லன் பதிப்பகம் கீதாஞ்சலியினை வெளியிடக் காரணமாக இருந்தது.

அதைப்போலவே, கீதாஞ்சலியின் பரவலான புகழுக்கு ஆங்கில கவிஞர் ஈட்ஸ் அந்தக் கவிதைகளை பெருமளவிற்குத் திருத்தி அமைத்ததே காரணமாக இருந்தது என பிரிட்டனிலும் இந்தியாவிலும் இருந்த பலரும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ரொதென்ஸ்டைன் இதனை வலுவாக மறுத்து எழுதியிருந்தார்:

‘தாகூரின் ஆங்கிலத்தை ஈட்ஸ் திருத்தி எழுதியதன் விளைவாகவே கீதாஞ்சலி பரவலான புகழைப் பெற்றது என இந்தியாவில் கூறப்பட்டு வருவதாக அறிந்தேன். இக்கருத்து எவ்வளவு தவறானது என்பதை என்னால் மிக எளிதாக நிரூபித்துவிட முடியும். வங்காளியிலும் ஆங்கிலத்திலும் ஆன கீதாஞ்சலியின் கையெழுத்துப் பிரதி என்னிடம்தான் உள்ளது.

அதில் அங்குமிங்குமாக ஒரு சில லேசான மாற்றங்களை மட்டுமே செய்யவேண்டியிருக்கும் என ஈட்ஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வகையில் இந்த நூல் தாகூரின் கையெழுத்துப் பிரதியில் இருந்ததைப் போலவே, ஈட்ஸ் தெரிவித்த ஒரு சில மாற்றங்களுடன் அச்சிடப்பட்டது.’

1913 நவம்பர் 13 அன்று கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரருக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி வந்தபோது அவர் சாந்தி நிகேதனில் இருந்தார். தங்கள் குருதேவிற்குக் கிடைத்துள்ள பெருமையைக் கண்டு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ரவீந்திரரும் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்திருக்கத்தான் வேண்டும். தன் தாய்நாட்டை நேசிப்பவர் என்ற வகையில் உலக இலக்கிய அரங்கில் இதன் மூலம் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள பெருமையும் அதன் ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடும். இந்தச் செய்தி கிடைத்த ஐந்து நாட்களுக்குப் பிறகு ரவீந்திரர் மேற்குலகிற்குத் தன்னை அறிமுகம் செய்து வைத்த நண்பரான ரொதென்ஸ்டைனுக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்:

‘நோபல் பரிசின் மூலம் எனக்களிக்கப்பட்ட மிகப்பெரும் மரியாதை குறித்த செய்தியை பெற்ற அதே கணத்தில் எனது இதயம் அன்போடும் நன்றியோடும் உங்களை நோக்கித்தான் திரும்பியது. என் நண்பர்கள் அனைவரிலுமே இந்தச் செய்தியை அறிந்து அதிகமான மகிழ்ச்சியை அடைந்தவர் நீங்களாகத்தான் இருக்கும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு இது பெரும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் எனக்கு இது மிகப்பெரும் சோதனைக் காலமாகவே இருக்கும்.

‘மக்களின் ஆர்வம் என்ற சூறாவளி எனக்குள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக கடிதங்களும் தந்திகளும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளன. இவர்களில் பெரும்பாலோர் என்னோடு நட்புணர்வோடு பழகியவர்கள் அல்ல; இவர்களில் பலரும் என் எழுத்துக்களில் ஓரே ஒரு வரியைக் கூடப் படித்தவர்கள் அல்ல; இத்தகையோர்தான் இப்போது பேரானந்தத்தோடு குரலெழுப்பி வருகின்றனர். உண்மையில் இவர்கள் எனக்குக் கிடைத்த பெருமைக்குத்தான் மேலும் பெருமை சேர்க்க முயற்சிக்கிறார்களே தவிர, எனக்கல்ல.’

இலக்கியப் பிரிவில் அந்த ஆண்டிற்கான (1913) நோபல் பரிசுக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து ஸ்வீடிஷ் அகாதெமியில் இருந்து தந்தி வந்தது. இந்த நற்செய்திக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ரவீந்திரர் ஸ்வீடிஷ் அகாதெமிக்கு அனுப்பி வைத்த பதில் தந்தியில் கீதாஞ்சலி நூலில் இடம்பெற்றிருந்த 63வது பாடலின் சில வரிகளை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்:

‘எனக்கு முன்பின் அறிமுகமில்லாத நண்பர்களுக்கு
என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்;
எனக்குச் சொந்தமில்லாத இல்லங்களில்
எனக்கு இருக்கை அளித்திருக்கிறீர்;
தொலைதூரத்தை எனக்கு நெருக்கமாகவும்
முன்பின் அறிமுகமில்லாதவரை
எனக்கு ஒரு சகோதரனாகவும் ஆக்கியிருக்கிறீர்’

என்று அவர் பரம்பொருளை நோக்கி வடித்த கீதாஞ்சலியில் இடம்பெற்றிருந்த கவிதை அப்படியே அகாதெமிக்கும் பொருந்துவதாக இருந்தது எனலாம்.

அதேநேரத்தில் வங்காளி மொழிக்கும் இலக்கியத்திற்கும் தான் இதுவரை ஆற்றி வந்துள்ள சேவைகளை அரைமனதோடு பாராட்டுவதற்குக் கூட தன் நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு வெளிநாட்டில் கிடைத்த அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதை நினைக்கையில் அவர் மனம் மிகவும் கலக்கமுற்றது.

இத்தகையதொரு பின்னணியில்தான் கல்கத்தாவின் புகழ்பெற்ற பெருமக்கள் 500 பேர் அடங்கிய குழு ஒன்று ரவீந்திரருக்கு நேரில் பாராட்டுக்களை தெரிவிக்கும் நோக்கத்துடன் ஒரு சிறப்பு ரயிலில் நவம்பர் 23ஆம் நாள் போல்பூர் வந்து இறங்கினர். அவர்களை உபசரிக்க மிகப்பெரும் விருந்துக்கும் சாந்திநிகேதனில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வந்தவர்கள் பல்வேறு வகையில் அவரை பாராட்டி முடித்தபிறகு, அதற்குப் பதிலளிக்கும் விதமாக ரவீந்திரர் பேசுகையில், ‘உங்களின் பாராட்டுக்களில் உண்மையே இல்லாதபோது, அதை ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை’ எனக் கூறியதும் வந்திருந்த பிரமுகர்கள் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி போல்பூர் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான சாந்திநிகேதன் ஊழியர்கள் அவர்களுக்காக தயார் செய்திருந்த இனிப்பு-கார வகைகளை கூடைகளில் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்று அவர்களை சமாதானப்படுத்தி அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர். அவர்களில் சிலர் ரவீந்திரரின் நலம்விரும்பிகளாக இருந்ததால், நிலைமையை சமாளித்து, அந்தக் கூடைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டனர்.

எனினும், அடுத்தநாள் காலையில் கல்கத்தா பத்திரிகைகள் ரவீந்திரரின் ‘திமிரை’, ‘இறுமாப்பை’ கண்டித்து, திட்டித் தீர்த்தன. அதற்கு நேர்மாறான வகையில், விடுதலைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான விபின் சந்திர பால், தன் இந்து ரிவ்யூ நாளிதழில் ‘இத்தகையதொரு சூழ்நிலையில் ரவீந்திரரின் நிலையையும் உணர்வையும் ஒத்த எவருமே தன் மனக் கசப்புகளை மறைத்துவைக்க முடியாது. கல்கத்தா பிரமுகர்களின் பாராட்டுகளுக்கு அவர் அளித்த பதில் நாகரீகமற்றதோ, பொருத்தமற்றதோ அல்ல’ என்று ரவீந்திரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

நோபல் பரிசைப் போன்ற உலகப் புகழ்பெற்ற பரிசு ஓர் ஆசியருக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியே எல்லா இடங்களிலும் அதிர்ச்சி கலந்த வியப்பினை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு ஒரு தனிமனிதருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என்பதை விட இதுவரை மேற்கத்திய உலகால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியான ஆசியாவிற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகவும், அந்தப் பகுதியின் புத்துயிர்ப்பை எடுத்துக் கூறுவதாகவும் விளங்கியது.

ஆசியாவின் ‘உள்ளம்’ உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை, அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் கண்ணைக் கவரும்படியான ஒரு பொருளாக இல்லாமல், உயிரோட்டத்தோடு கூடிய ஒன்றாக அதனைக் கருத வேண்டும் என்பதை மேற்கத்திய அறிவுலகத்தின் ஆழ்மனதிற்குள் பதியச் செய்த முதல் நபர் ரவீந்திரரே ஆவார்.

ப்ரெஞ்சு எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான ழீன் குகனென் பின்னாளில் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘தன் நாட்டில் புகழ்பெற்ற ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஐரோப்பா கண்டம் முழுவதாலுமே கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டார் என்பதே மனித இயல்பில் உள்ள போதாமையை நிரூபிக்கிறது. இந்தக் கருத்தோட்டங்கள் நமது கருத்தோட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பதை அறியும்போதுதான், நமது ஐரோப்பிய கருத்தோட்டங்களின் சார்புத் தன்மையைப் பற்றி நாம் உணர்கிறோம். நமது கருத்தோட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தோட்டங்களை ஏற்றுக்கொண்டு, பல லட்சக்கணக்கானோர் இந்த உலகின் வேறொரு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையே போதுமான அளவிற்கு நாம் புரிந்துகொள்ளவில்லை.’

ஐஸ்லாந்தைச் சேர்ந்த இலக்கியவாதியும் 1955ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஹல்தோஸ் லாஸ்னெஸ் தாகூரின் நூற்றாண்டை ஒட்டி சாகித்ய அகாதெமி வெளியிட்ட சிறப்புமலரில் ரவீந்திரரின் தனித்துவமிக்க எழுத்தை கீழ்கண்டவாறு பாராட்டியிருந்தார்:

‘தாகூரின் கவித்துவமிக்க வசன கவிதை நடையை ஸ்காண்டிநேவிய நாடுகள் பலவும் பயன்படுத்த முயன்றன. என் இளமைக் காலத்தில் நானும்கூட இந்த வடிவத்தில் எழுத முயற்சித்து, தோல்வி அடைந்திருக்கிறேன். கீதாஞ்சலியின் உள்ளடக்கத்திற்கு அதன் வடிவம் என்பது இரண்டாம் பட்சம்தான். எனவேதான் மேற்குலகில் இருந்த தாகூரின் சீடர்கள் பலரும் இதில் தோல்வியுற நேர்ந்தது.

‘எவ்வளவு பொறாமைப்படத்தக்க ஒரு கடவுளாக தாகூரின் கடவுள் இருக்கிறார்? ‘நேசமிக்க நண்பன்; ஆசைக்குரியவன்; அன்றலர்ந்த தாமரையைப் போன்றவன்; ஆற்றில் மிதந்து செல்லும் படகில் அமர்ந்தபடி குழலூதிக் கொண்டிருப்பவன்; முன்பின் அறியாதவன்’ என அவருக்குத்தான் எத்தனை எத்தனை தோற்றங்கள்?

‘தாகூர் சித்தரிக்கும் கடவுளைப் போன்ற ஒருவரை மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த யூதர்களின் விவிலிய வழிக் கவிதைகளில் வேண்டுமானால் உங்களால் காண முடியும். சீனாவைச் சேர்ந்த லாவோ சி-யின் தாவோ டே சிங்-இல் அவ்வப்போது அவரைப் பார்க்க முடியும். ஆனால் ஐரோப்பாவிலோ, கிறித்துவின் நகல் என்ற நூலை எழுதிய மத்தியக்கால துறவிகள் காற்றோட்டமில்லாத, இயற்கையின் நறுமணம் வீசாத குறுகிய அறைகளிலும் பிரசங்க மேடைகளிலும் கடவுளின் அதிசயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

‘இன்றைய மேற்குலகில் நமது கடவுளானவர் உலகத்தின் மிகப் பெரும் நிறுவனத்தில் ஓர் இயக்குநராக அல்லது சிறுபிள்ளைகளின் கற்பனையான விளையாட்டுத் தோழனாகத்தான் இருக்கிறார். அபாயத்தை சந்திக்கும்போதும் மரணத்தை எதிர்கொள்ளும்போதும்தான் அவரை நோக்கி நாம் கதறுகிறோம். இதனால்தான் தாகூரின் இறையியல் மிக்க யதார்த்த உணர்வு மேற்குலகம் வியந்து பார்க்கச் செய்யும் கீழைத்தேய அதிசயமாக மிக நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்.’

இவ்வாறு ரவீந்திரரின் பெருமைகளை மேற்குலகம் விதந்து போற்றுவதற்கு வழியமைத்து, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஆங்கில கவிஞரான தாமஸ் ஸ்டர்ஜ் மூர் ஆவார். கவிஞர் யீட்ஸுடன் இணைந்து இலக்கியக் கழகம் ஒன்றை நடத்தி வந்த அவர், கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன்பே ரவீந்திரரை சந்தித்து உரையாடி, அவரது கவிதைகளின் வலிமையை உணர்ந்தவராக இருந்தார். ராயல் சொசைட்டியின் ஓர் உறுப்பினர் ஆன அவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தாகூருக்கு வழங்க வேண்டும் என ஸ்வீடிஷ் அகாதெமிக்குப் பரிந்துரை செய்தார்.

இதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த ஹரால்ட் ஜார்னே என்பவருக்கு அதில் பெருமளவு விருப்பமில்லாமல்தான் இருந்தது. கருத்தைக் கவரும் தாகூரின் எழுத்துக்களில் அவரது சொந்த எழுத்து எவ்வளவு இருக்கும்? இந்திய இலக்கியத்தின் செவ்வியல் பாரம்பரியத்தைச் சேர்ந்த கருத்துக்கள் அதில் எவ்வளவு இருக்கும்? என்பதைக் கணிக்க முடியாது என்றும் அவர் கருதினார். அதுவும்போக, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு என்று வரும்போது, இந்தத் தயக்கம் சற்று கூடுதலாகவே இருந்திருக்கும்.

என்றாலும், ஸ்வீடிஷ் அகாதெமிக்குள் தாகூருக்கு ஆதரவாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்களில் ஒருவர் பெர் ஹால்ஸ்ட்ராம். தாகூரின்மீது ஏற்பட்ட வியப்பு அவரை ஆழமான ஆய்வினை மேற்கொள்ள வைத்து, அது குறித்த பல குறிப்புகளையும் எழுதி, குழு உறுப்பினர்களிடையேயான உரையாடலை தூண்ட வைத்தது. இதன் விளைவாக, மூன்றாண்டுகளுக்குப் பிறகு இலக்கியத்திற்காக அதே நோபல் பரிசை பெறவிருந்த ஸ்வீடிஷ் கவிஞரும் நாவலாசிரியரும் அன்றைய ஆண்டின் அகாதெமி தேர்வுக் குழு உறுப்பினருமான வெர்னர் வான் ஹைடென்ஸ்டாம் கீதாஞ்சலி குறித்த ஓர் ஆய்வுக் கட்டுரையை குழுவின் முன்வைத்தார்.

தாகூர் ஆங்கிலத்தில் வழங்கியிருந்த கீதாஞ்சலியை அவர் படித்தது மட்டுமின்றி, ஸ்வீடிஷ்-நார்வேஜியன் மொழியில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு (அது போதுமான அளவிற்கு சிறப்பாக இல்லை என்ற போதிலும்) ஒன்றையும் படித்துவிட்டு, அவர் கீழ்கண்டவாறு தன் கருத்தை பதிவு செய்திருந்தார்:

‘இந்தக் கவிதைகளை நான் படித்தபோது அவை என்னை பெரிதும் பாதித்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இவற்றுக்குச் சமதையான, இசைவான ஓர் எழுத்தைப் படித்ததாக எனக்கு நினைவில்லை. அவை பல மணிநேரங்களுக்கு எனக்கு மகிழ்ச்சியூட்டிக் கொண்டே இருந்தன. புத்தம்புதிய, தெள்ளிய நீரூற்றிலிருந்து கைகளால் ஏந்திக் குடிக்கும் நீரின் சுவையை ஒத்ததாக அது இருந்தது.

அவரது ஒவ்வொரு சிந்தனையிலும், உணர்விலும், ஆழமாக வேரூன்றியிருந்த தீவிரமான, அன்புமிகுந்த பக்தி, உளத்தூய்மை, மிக உயர்ந்த, இயற்கையான, எளிமை நிரம்பிய அவரது எழுத்துநடை ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து, மிக ஆழமான, மிக மிக அரிதான இயற்கையழகை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தன.

‘சச்சரவிற்குரிய, அவமதிப்பிற்குரிய எதுவும் அவரது எழுத்தில் இல்லை.

வீணான, உலக நடப்பினையே பெரிதெனக் கருதுகின்ற, சிறுபிள்ளைத்தனமான எதுவும் அவரது எழுத்தில் இல்லை. நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியுள்ள ஒரு கவிஞர் உண்டென்றால், அது இவர்தான்…. உண்மையிலேயே மகத்தான ஆகிருதியுள்ள, மிகப் பொருத்தமான ஒருவரை நாம் இறுதியில் கண்டெடுத்துள்ளோம்.

‘இவரை நாம் விட்டுவிடக் கூடாது. முதன்முறையாக – வரவிருக்கும் நீண்ட காலத்திற்கு இதுவே கடைசியாகவும் கூட இருக்கட்டும் – பத்திரிக்கைகளில் எல்லாம் வெளியாகி, புகழை குவிப்பதற்கு முன்பாக, முன்பின் அறிமுகமில்லாதபோதிலும் மகத்தான ஒரு பெயரை நாம் கண்டெடுத்துள்ளோம் என்று உலகம் நம்மை பாராட்டட்டும். இந்தப் பாராட்டினை நாம் பெற வேண்டுமென்றால், இன்னொரு ஆண்டிற்காக நாம் காத்திருக்காமல், இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், தாமதமின்றிச் செயல்பட வேண்டும்.’

ஆங்கிலேய இசை விற்பன்னரும், இசை விமர்சகரும், இதழாசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.எச். ஃபாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் (இந்திய இசையில் ஆர்வம் கொண்டவர்; பின்னாளில் ரவீந்திர சங்கீத்-ஐ உலகின் விரிவான கவனத்திற்குக் கொண்டு சென்றவர்) ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ரவீந்திரருக்கு கவுரவ பட்டம் ஒன்றை வழங்க வேண்டும் என்று முன்னதாகவே கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தப் பல்கலைக்கழகங்கள் இதுபற்றி யோசித்து, இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த கர்சான் பிரபுவை கலந்து ஆலோசித்தபோது, அவர் ‘தாகூரை விட ‘தனித்துவம் மிக்க’ பலர் இந்தியாவில் இருக்கின்றனர்’ என்று கூறிவிட, அந்த முயற்சி கைவிடப்பட்டது. (வங்காளப் பிரிவினையின்போது எழுந்த ரவீந்திரரின் உரத்த குரலை கர்சான் பிரபு மறந்துவிடவில்லை என்பது இதிலிருந்து நன்றாகவே தெரிய வருகிறது)

இந்த முயற்சி குறித்து தன் நினைவலைகளில் சுட்டிக் காட்டிய ரொதென்ஸ்டைன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

‘(கர்சன் பிரபு குறிப்பிட்ட ‘தனித்துவம் மிக்க’) அவர்கள் எல்லாம் யாரென்றுதான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ரவீந்திரரின் இலக்கியப் பங்களிப்பை வலுவாக அங்கீகரித்த முதல் நாடு இங்கிலாந்து அல்ல; வேறொரு நாடுதான் அதைச் செய்தது என்பதை நினைக்கும்போது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.’

இதைச் சரிசெய்யும் விதமாக பிரிட்டிஷ் அரசு 1915இல் அவருக்கு க்னைட்ஹூட் என்றழைக்கப்படும் மாவீரர் பட்டத்தை வழங்கியபோதிலும், 1919 ஏப்ரலில் நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ரவீந்திரர் இந்தப் பட்டத்தையும் துறந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

நோபல் பரிசைத் தொடர்ந்து ரவீந்திரர் ஓர் உலகக் குடிமகனாகப் பரிணமித்தார். உலகின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் அநியாயமோ அல்லது துயரமோ, அவருக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தன. அவற்றுக்கு எதிராக அவர் குரல்கொடுக்கவும் செய்தார். இந்த உணர்வோடுதான், உலகின் மிகப்பெரும் நாடுகளாகத் திகழ்ந்த பிரிட்டன், அமெரிக்கா மட்டுமின்றி, ஆசியாவின் வலுவான நாடுகளாகத் திகழ்ந்த சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் தவறுகளையும் சற்றும் தயக்கமின்றி அவர் கண்டித்து வந்தார்.

இத்தருணத்திலிருந்து ரவீந்திரரின் வாழ்க்கைப் பயணம் முற்றிலும் புதியதொரு திசையில் தொடர்ந்தது. இந்தப் புகழும் வெளிச்சமும் அவரை மேலும் புடம்போட்டு எடுக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருந்தது.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *