Skip to content
Home » தாகூர் #18 – எழுத்தும் இயக்கமும்

தாகூர் #18 – எழுத்தும் இயக்கமும்

தாகூர் அமெரிக்க பயணம்

நோபல் பரிசு பற்றிய செய்தி வருவதற்கு முன்பாகவே அன்றைய வைஸ்ராய் ஹார்டிங் பிரபு ரவீந்திரருக்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சிறப்புப் பட்டம் ஒன்றை வழங்கவேண்டும் என 1913 அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் அவரது அருமையை உணர்ந்திருந்த போதிலும், கீழ்மட்டங்களில் இருந்தவர்கள் அதற்குப் பல்வேறு தடைகளை உருவாக்கினர். இவற்றுக்கு மத்தியில்தான் 1913 டிசம்பர் 26 அன்று கல்கத்தா பல்கலைக்கழகம் ரவீந்திரருக்கும் புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு அறிஞரான சில்வெய்ன் லெவிக்கும் சிறப்புப் பட்டத்தை (டி.லிட்) வழங்கியது. (லெவி, பின்னர் சாந்திநிகேதனில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்).

கல்கத்தா பல்கலைக்கழக ‘அறிஞர்’களால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். 1914ஆம் ஆண்டின் மெட்ரிகுலேஷன் தேர்வில் வங்காளி மொழிக்காக கல்கத்தா பல்கலைக்கழகம் தயாரித்திருந்த கேள்வித்தாளில் ரவீந்திரரின் எழுத்தில் ஒரு சிறுபகுதியை முன்வைத்து ‘இந்தப் பகுதியை ‘தூய்மையான, அழகான வார்த்தைகளில் வங்காளி மொழியில் திருத்தி எழுதவும்’ என்றதொரு கேள்வியை உருவாக்கி ரவீந்திரரின் எழுத்தைச் சிறுமைப்படுத்த முயன்றது.

எனினும் இந்த ஆண்டில் (1913) அவரது ஒரே ஒரு நூல்கூட வரவில்லை. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்தியப் பண்பாடு குறித்து அவர் ஆற்றிய உரைகள் ‘சாதனா’ என்ற தலைப்பில் 1913இல் வெளிவந்தது. அதுபோக, த கார்ட்னர், த க்ரெசெண்ட் மூன், சித்ரா போன்ற அவர் எழுதிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அப்போது வெளிவந்தன.

இக்காலப்பகுதியில் அவர் எழுதிய கவிதைகள் கீதிமால்யா, கீதாலி என்ற தலைப்பில் இரு தொகுப்புகளாக 1914இல் வெளிவந்தன. இந்த இருநூல்களுமே கீதாஞ்சலியின் தொடர்ச்சி என்றே கூறத்தக்க வகையில் இருந்தன. மேற்குலகம் அவரது எழுத்தை அங்கீகரித்துப் போற்றியதானது ஓர் உத்வேகத்தை அவருக்குள் ஏற்படுத்தியது என்பதையும் இவை எடுத்துரைக்கின்றன. உள்நாட்டில் அவர் எதிர்கொண்ட வெறுப்பு நிரம்பிய புறக்கணிப்பிற்கு இந்த அங்கீகாரம் ஒரு மருந்தாகத் திகழ்ந்தது.

இதே காலப்பகுதியில் அண்ணி ஞானதநந்தினியின் முயற்சியில் தொடங்கப்பட்ட சிறுவர் இதழான பாலகாவில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது அண்ணன் மகள் இந்திராவின் கணவரும் வங்காளி இலக்கிய உலகில் புதிய வகையிலான எழுத்துநடைக்கான போராட்டத்தை முன்னெடுத்தவரும், பீர்பால் என்ற புனைபெயரில் புகழ்பெற்றவருமான பிரமத சவுதுரி நடத்தி வந்த இலக்கிய இதழான சபுஜ் பத்ராவில் (பசும் இலைகள்) இலக்கிய ரீதியான பரிசோதனை முயற்சிகளையும் ரவீந்திரர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இலக்கிய உலகில் அவரது போராட்டத்தின் ஆடுகளமாக சபுஜ் பத்ரா விளங்கியது. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், இலக்கிய விவாதங்கள் என அவர் இந்த இதழ்களை இட்டு நிரப்பிக் கொண்டேயிருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் அவர் எழுதிய கதைகள் தரத்திலும் உள்ளடக்கத்திலும் 1890களில் பத்மா நதிக்கரையில் படகுவீட்டில் வசித்தபடி எழுதிய கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. ஒளியும் நிழலும் வண்ணங்களும் ஒன்றுகலந்த பின்னணியில், பத்மா நதிக்கரையில் வெளிப்பட்ட, மெல்லிய அன்பும் முரணும் நிரம்பிய வாழ்க்கையை தரிசித்தபடி, அவர் வெளிக்கொண்டு வந்த கதைகள் அவரது அன்பிற்குரிய சிறந்த கதைகளாக அவருக்குத் தோன்றியதோடு, அந்தக் கதைகளை மீண்டும் படித்தபோது தன் வாழ்க்கையிலிருந்து கரைந்துபோன, மீண்டும் வர வாய்ப்பில்லாத ஓர் அழகை எண்ணியும் அவர் ஏங்கினார்.

பத்மா நதிக்கரையோரத்தில் கடந்துபோன தன் வாழ்க்கையை நினைவுகூர்ந்து 1932இல் ரவீந்திரர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘வங்காள கிராமப்புறங்களில் இயற்கையை நான் நேருக்கு நேராக சந்தித்தபோது, என்னுடைய நாட்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தன. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிதான் எளிமையான, ஆரவாரமற்ற கதைகளின் மூலம் வெளிப்பட்டன. இப்போது நான் கிராமப்புற வங்காளத்தின் அன்பான விருந்தோம்பலில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். விளைவாக மோட்டார் காரில் பயணம் செய்யும் என் பேனாவிற்கு தென்றலோடு தென்றலாய் நிழல்கவிந்த பாதையில் உருவான இலக்கியம் எப்போதுமே தென்படாமல் போனதாகி விட்டது.’

எனினும், இந்த இருவேறுபட்ட வாழ்க்கையிலிருந்துதான் இரண்டு வகையான கதைகளை அவர் அறுவடை செய்தார். அவற்றின் உள்ளடக்கம், கதை மாந்தர்களின் சித்திரம், அவர்களின் மனிதம், கதையை சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் வங்காளி இலக்கியத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்தவையாகவும் அவை விளங்கின. ஓர் இலக்கிய விமர்சகரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘அவரது பழைய கதைகள் புத்தம்புதிதாக கனிந்த ஒரு பழத்தின் நறுமணத்தை வெளிப்படுத்தியது எனில், அவரது புதிய கதைகள் நன்கு பதப்படுத்தப்பட்ட, பசியைத் தூண்டும்படியான பாலாடைக்கட்டியின் நறுமணத்தைப் பரப்புவதாக இருந்தன.’

இந்தத் தருணத்தில்தான் 1915-16இல் பாலகா சிறுவர் இதழில் தொடராக வெளியான கரே பாய்ரே (வீடும் உலகமும்) என்ற நாவல் 1916இல் வெளியானது. அதே ஆண்டில் சபுஜ் பத்ரா இதழில் சதுர் ரங்கா (நால் வண்ணம்) என்ற வடிவமைப்பில் புதுமையை அறிமுகம் செய்த நாவல் வெளியானது.

கர்சான் பிரபுவின் வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் பகுதிகளாக வங்காளம் பிரிந்த நிலையில் உருவான குழப்ப நிலையை கரே பாய்ரே நாவல் சித்தரித்தது. அதே நேரத்தில் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென தேசியவாத இயக்கம் குரலெழுப்பி வந்தது. ஜமீன்தாரான நிகில் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் அழகான மனைவி விமலாவுடன் வாழ்ந்து வருகிறான். அவனது நண்பனும் புரட்சிக்காரனுமான சந்தீப் அங்கு வரும்வரை எல்லாமே அமைதியாகத்தான் இருக்கிறது.

அமைதியை விரும்பும் நிகிலுக்கு நேர் எதிரானவனாக இருக்கும் சந்தீப் வெகுவிரைவிலேயே அப்பாவியான விமலாவைக் கவர்கிறான். என்ன நடக்கிறது என்பதை உணரும் நிகில் (சிறுவயதிலேயே திருமணம் செய்தவள் என்ற வகையில், உலக நடப்பை உணராதவள் என்ற வகையில்) அவளது உணர்வைப் புரிந்து கொண்டு அவள் விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று விமலாவிடம் கூறுகிறான். தன்னை உண்மையிலேயே விரும்புவது தன் கணவன் நிகில்தான் என்பதை விரைவிலேயே உணர்கிறாள் விமலா. வீட்டிற்குள் மட்டுமல்ல; வெளியிலும் கூட அவள் விரும்பியபடி வாழ்ந்து கொள்ளலாம் என்று கூறுகிறான் நிகில்.

ரவீந்திரரின் அண்ணன் மகனான சுரேந்திரநாத் இந்த நாவலை (ஓரளவிற்குச் சுமாராக) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். எனினும் அதுவே ரொதென்ஸ்டைன், ஈட்ஸ் போன்ற பலராலும் பாராட்டப்பட்டது. ஜெர்மனியில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான தாகூரின் எழுத்துகளில் ஒன்றாக இந்த நாவல் திகழ்ந்தது. ஐன்ஸ்டைன், ஹெர்மன் ஹெஸே, ப்ரெக்ட் போன்றோரும் இந்த நாவலை விதந்து போற்றினர்.

எனினும் வங்காளத்தில் இந்த நாவல் வெளியானபோது கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது. வெளியாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகும்கூட தன் கதையை நியாயப்படுத்தி ரவீந்திரர் வாதாட வேண்டியிருந்தது. இந்த முப்பரிமாண உளவியலை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட மேதையான சத்யஜித் ரே மிகச் சிறப்பான வகையில் படமாக்கி, ரவீந்திரரின் எழுத்து வன்மையை ஓர் அழியா ஓவியமாக மாற்றியிருந்தார்.

1915 மார்ச் இறுதியில் வங்காளத்தின் முதல் கவர்னரான கார்மைக்கேல் பிரபு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார். ஜூன் மாதம் ரவீந்திரருக்கு பிரிட்டிஷ் அரசரின் மாவீரர் (க்னைட்ஹுட்) பட்டம் வழங்கப்பட்டது. எனினும் 1919 ஏப்ரலில் பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயரின் படுகொலை வெறியாட்டத்தைக் கண்டித்து ரவீந்திரர் இந்தப் பட்டத்தைத் துறந்தார்.

முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே 1916 மே 3 அன்று ரவீந்திரர் தன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். ரங்கூன், ஹாங்காங் வழியாக மே 29அன்று ஜப்பானின் கோபே நகரத்தில் இறங்கினார். தன் பயணத்தினூடே மக்களைக் கண்ணுற்ற பிறகு அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘இந்த நாட்டு மக்களின் இதயம் அருவியைப் போல ஆர்ப்பரிப்பதாக இல்லாமல், ஓர் ஏரியைப் போல மவுனமாக இருக்கிறது.’

உலகப் புகழ்பெற்ற கவிஞரிடம் தங்கள் கைவிசிறி அல்லது ஆட்டோகிராஃப் புத்தகத்தை நீட்டி ஏதாவது எழுதுங்கள் என்று இளம் ரசிகைகள் வேண்டிக் கொண்டபோது அவர் எழுதிக் கொடுத்த சிறுசிறு வாசகங்கள் பின்னாளில் தொகுக்கப்பட்டு ஸ்ட்ரே பேர்ட்ஸ், லக்கான் என்ற தலைப்பில் தனிநூல்களாக வெளியாயின.

அவற்றில் சில, அவரது வங்காளி கவிதைகளின் ஆங்கில ஆக்கமாகவும், வேறு சில நேரடியாகவே அவர் ஆங்கிலத்தில் எழுதியதாகவும் இருந்தன. இவற்றில் சில, கருத்தைக் கவர்வதாக திகழ்ந்தன:

‘நாம் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்றுதான் ஒரு காலத்தில் நாம் கனவு கண்டு கொண்டிருந்தோம். விழித்துப் பார்க்கையில் நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாயிருப்பதைக் கண்டோம்.’

‘நீ சிரித்தாய்; ஏதோ ஒன்றைப் பேசினாய்; இதற்காகவே நான் இத்தனை நாட்களாய் காத்துக் கொண்டிருந்தேன்.’

‘சிறந்ததை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது; ஏனெனில் சிறந்ததுதான் என்னைத் தேர்வு செய்திருக்கிறது.’

‘மனிதன் மீது இன்னமும் நம்பிக்கையைக் கைவிட்டு விடவில்லை என்ற கடவுளின் செய்தியோடுதான் ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகிற்குள் வருகிறது.’

‘நல்லதைச் செய்வதிலேயே காலத்தைக் கழிப்பவனுக்கு நல்லவனாய் தோற்றமளிக்க நேரம் கிடைப்பதில்லை.’

‘நீங்கள் போற்றி வணங்கும் சிலை தூள் தூளாயிற்று. உங்கள் சிலையை விட கடவுளின் தூசி மகத்துவம் மிக்கது என்பதை நிரூபிக்க…’

நாட்டின் எல்லையை விரிவாக்கிக் கொள்ளும் நோக்குடன் ராணுவ தயாரிப்புகளில் அப்போது ஈடுபட்டு வந்த ஜப்பானுக்கு அவர் சொன்னார்: ‘மற்ற இனங்களின்மீது நீங்கள் சுமத்தும் துயரமும் துன்பமும் மீண்டும் உங்களை வந்தடையாது என்றோ, உங்கள் வீட்டைச் சுற்றி நீங்கள் விதைத்துள்ள பகைமை எல்லா நேரத்திலும் உங்களைப் பாதுகாக்கும் சுவராக இருக்கும் என்றோ ஒரு கணமும் நினைக்காதீர்கள்.’

பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுதந்திரம் என்றால் என்னவென்று சுதந்திரமானதொரு நாட்டு மக்களுக்குப் போதிக்க நினைப்பதா? என்று ஜப்பானின் ஆளும் வர்க்கத்தினர் முகம் சுளித்தனர். என்றாலும், ஜப்பானின் அறிவுஜீவிகள் அவர் துணிவோடு இதை எடுத்துக் கூறியதற்காக என்றும் ரவீந்திரர் மீது பெருமதிப்பு கொண்டவர்களாக இருந்தனர்.

1916 செப்டெம்பர் 18 அன்று ரவீந்திரர் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வந்திறங்கினார். அதற்கு முன்பாக கனடாவின் வான்கூவர் நகருக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அதை அவர் ஏற்க மறுத்தார். 1914ஆம் ஆண்டில் கனடாவில் சென்று குடியேறும் திட்டத்துடன் புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் (இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபியர்கள்; சீக்கியர்கள்) கோம கட்டா மாரு என்ற ஜப்பானிய கப்பலை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சென்றபோது பிரிட்டிஷ் அரசின் வற்புறுத்தலால் அவர்களை கனடா அரசு தரையிறங்க விடாமல் தடுத்து மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பியது.

இந்தியாவில் வந்திறங்கியவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு கடுமையான தண்டனைகளை வழங்கியது. இந்தச் சம்பவம் அன்று இந்தியாவில் விடுதலை உணர்வு கொண்டிருந்தோர் மத்தியில் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. ரவீந்திரரும் மனதளவில் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த நிலையில்தான், கனடாவின் அழைப்பை இப்போது புறக்கணித்தார். அவரது இந்தச் செயல் பிரிட்டிஷ், கனடா, அமெரிக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்களை தூண்டி விட்டது.

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரவீந்திரர், உலகம் முழுவதையுமே தன் வீடாகக் கருதுகின்ற மனிதனை முன்னிறுத்தியும், தன் நாட்டு நலனை மட்டுமே பெரிதெனக் கருதும் தேசியவாதம் என்ற கருத்தை எதிர்த்தும் தொடர்ந்து பேசி வந்தார். எனினும், அந்தப் பகுதிகளில் வசித்து வந்த சீக்கியர்களுக்கு இந்தக் கருத்து உகந்ததாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக, இந்தியத் தேசியத்தைக் கண்டித்தே அவர் பேசுகிறார் என்ற கருத்தே அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் பிரிட்டிஷ் அரசர் ரவீந்திரருக்கு மாவீரர் பட்டத்தை வழங்கியதும் அவர்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

அவர்களில் ஒருவர் ‘எக்சாமினர்’ என்ற நாளிதழுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘இந்தியாவின் இதயம் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிகர இயக்கத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியின் விடுதலைக்கான யுத்தத்தின்போது ஜெர்மன் கவிஞரான கதே அதிலிருந்து விலகி நின்றதைப் போலவே, திரு. தாகூரும் இந்த இயக்கத்திலிருந்து விலகியே நிற்கிறார்.’

இந்தப் பின்னணியில்தான் ரவீந்திரரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது. அவர் தங்கியிருந்த ஓட்டலின் வரவேற்பறையில் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவருக்கு இடையே உருவான கருத்து வேறுபாடு கைகலப்பில் முடிந்து, ஓட்டல் காவலர்கள் மூலம் சதித்திட்டம் வெளிப்பட்டது. அதற்கடுத்த நாள் அவர் சாண்ட்டா பார்பராவிற்குப் புறப்பட்டபோது, அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும் 1918இல் இந்தச் சம்பவம் இந்தியாவில் அவருக்குப் பெரும் பிரச்சனையை உருவாக்கியது.

மறுபுறத்திலோ அவர் எழுதி மாக்மில்லன் பதிப்பகம் வெளியிடுவதாக இருந்த ‘தேசியவாதம்’ என்ற நூலை அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு அர்ப்பணிக்க ரவீந்திரர் விரும்பினார். எனினும், ‘பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதால்’ அத்தகைய கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டாம் என அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதர் அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை கூறியதால், ரவீந்திரரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாது என அமெரிக்க அதிபரின் செயலகம் மாக்மில்லன் பதிப்பகத்தாரிடம் தெரிவித்து விட்டது.

அதேநேரத்தில் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்திய விடுதலையை முன்னெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கத்தார் கட்சியுடன் ரவீந்திரர் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்றும், அமெரிக்காவிலுள்ள ஜெர்மனி நாட்டு ஏஜெண்டுகளை சந்திக்கவே அவர் அங்கு சென்றிருக்கிறார் என்றும், பிரிட்டிஷ் உளவுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக, அன்றைய வங்காள கவர்னரின் நேர்முகச் செயலாளர் கவுர்லே ஓராண்டிற்குப் பிறகு தன்னிடம் கூறியதாக (தீனபந்து) ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். அமெரிக்க மக்களிடையே ரவீந்திரர் நற்பெயரை பெற்றுவிடாமல் தடுக்கும் வகையில் பிரிட்டிஷ் உளவுத்துறை ரகசியமாகச் செயல்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

இத்தகையதொரு தருணத்தில்தான் 1916 அக்டோபர் 11 அன்று தன் மகன் ரதீந்திரநாத்திற்கு எழுதிய கடிதத்தில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘இந்தியாவிற்கும் உலகத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புக் கண்ணியாக சாந்திநிகேதனை உருவாக்க வேண்டும் என்றே நான் கருதி வருகிறேன். மனிதம் பற்றிய ஆய்விற்கான உலகளாவிய மையம் ஒன்றை நான் அங்கே உருவாக்க வேண்டும்.

சிறுபிள்ளைத்தனமான தேசியவாதத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. உலகிலுள்ள அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான முதல் அடிவைப்பு போல்பூர் மண்ணில் இருந்து தொடங்கட்டும். நாடு, புவியியல் ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள ஒன்றாக அந்த இடத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்.’

ரவீந்திரரின் எழுத்துகளைக் கொண்ட பத்து தொகுதிகளை அலசி ஆராய்ந்து 1916 டிசம்பர் 10 அன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு விமர்சனக் கட்டுரை இவ்வாறு நிறைவு பெற்றிருந்தது:

‘உலகத்தின் மகத்தான மதச்சார்பற்ற நபர் என்பதாக இல்லாவிடினும், நமது கவனத்திற்கும் போற்றுதலுக்கும் இன்று மிகவும் தகுதியான நபர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். மனிதனும், சக மனிதனும், ஒரு நாடும் மற்றொரு நாடும், ஒரு கருத்தும் மாற்றுக் கருத்தும் துரதிர்ஷ்டமான வகையில் பிளவுபட்டு நிற்கும் நிலையில், மனிதனின் இருப்பை நிறைவு செய்வதென்பது அதிகாரத்தினால் அல்லாமல், முழுமையான புரிதலில்தான் அடங்கியிருக்கிறது என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல அவர் முன்வந்திருக்கிறார்.’

ஐரோப்பாவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த (உலகப்) போரில் அமெரிக்காவும் இணையவிருப்பதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், தேசியவாதத்திற்கு எதிரான தன் செய்தியை பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது புரிந்திருந்த நிலையில், 1917 ஜனவரி இறுதியில் ரவீந்திரர் அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டு, ஜப்பானில் ஒரு மாதம் தங்கியிருந்துவிட்டு, அந்த ஆண்டு மார்ச் மாதம் வங்காளத்தை வந்தடைந்தார். இதையடுத்த இரண்டாண்டுகளுக்கு, வேறுவழியின்றி, அவர் இந்திய அரசியலில் பல்வேறு வகைகளில் தலையிட நேர்ந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *