Skip to content
Home » தாகூர் #22 – ஜெர்மனியில் பாராட்டுமழை

தாகூர் #22 – ஜெர்மனியில் பாராட்டுமழை

ஜெர்மனியில் பாராட்டுமழை

ஐரோப்பியப் பயணத்தின்போது ஜெர்மனியில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் தனித்துவமானது. இத்தனைக்கும் அன்றைய தேதியில் ரவீந்திரரின் முக்கிய நூல்கள் எதுவும் ஜெர்மன் மொழியில் வெளியிடப்படவில்லை. பெர்லின் பல்கலைக்கழகம் ஜூன் 2ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்த இந்த வரவேற்பில் திரளாகக் கூடியிருந்த மக்கள், இருக்கைகளுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டபோது, பல இளம்பெண்கள் இந்த நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். உட்கார இடமில்லாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளியேற்றப்பட்டதால், அதற்கு அடுத்த நாளும் அவர்களுக்கிடையே ரவீந்திரர் மீண்டும் உரையாற்ற நேரிட்டது.

இந்த வரவேற்பு குறித்து லண்டன் நாளிதழ் ஒன்று ஜூன் 3ஆம் தேதியன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: ‘பெர்லின் நகரில் இருந்த பிரிட்டிஷ் தூதர் வைகவுண்ட் டி அபெர்னானின் மனைவியால் ரவீந்திரருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்குள் அல்ல; அவர் வசித்து வந்த தெருவிற்கு உள்ளேயும் கூட நுழைய முடியாத அளவிற்கு மக்கள் பெருந்திரளாக அங்கே கூடியிருந்தனர். அவரின் இந்த இழப்பைச் சரி செய்யும் வகையில் அதற்கு அடுத்தநாள் ரவீந்திரர் பிரிட்டிஷ் தூதரின் இல்லத்திற்கு வருகை தந்தார்.’

பெர்லின் பல்கலைக்கழகத்தில் ரவீந்திரர் ஆற்றிய உரை பல்கலைக்கழக விதிமுறைகளின்படி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளின் விமானங்கள் பொழிந்த குண்டு மழையினால் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி ஆவணங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின. எனினும், கடுமையான முயற்சிக்குப் பிறகு, ரவீந்திரர் அப்போது நிகழ்த்திய உரையின் இறுதிப்பகுதி மட்டும் மீட்டெடுக்கப்பட்டது. ரவீந்திரரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது (1961) இந்தியாவிற்கு வருகைதந்த ஜெர்மன் எழுத்தாளர்கள் குழு இந்தப் பகுதியளவிலான உரையின் ஒரு நகலை இந்திய சாகித்ய அகாதெமியிடம் வழங்கியது. இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட உரையின் இறுதிப்பகுதி இதுதான்:

‘இந்தியா வென்றடைய வேண்டும் என்று விழைகின்ற விடுதலை என்ற கருத்து, ஆன்மீக ரீதியான ஒற்றுமையைக் கண்டடைவதையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த மகத்தான உண்மைக்கு நியாயமாக இருப்பதுதான் இந்தியாவின் முன்னுள்ள கடமையாகும். இன்றைய உலகை ஆட்டிப் படைத்து வரும் ஆசையெனும் புயற்காற்றால் அது அணைந்துவிட நாம் அனுமதிக்கலாகாது. எனவேதான் இந்தியா தன்னை உணர்ந்து கொள்வதை உறுதி செய்யும்படியான ஒரு குறிக்கோளைக் கண்டடைவதில் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

‘அந்தக் குறிக்கோளானது வணிகத் தன்மை கொண்டதாகவோ, தேசியத் தன்மை கொண்டதாகவோ இருக்காது. அது வெறும் சுய உறுதி மட்டுமே அல்ல; மாறாக அது தன்னையே வென்றதாக, தன்னையே அர்ப்பணிப்பதாக இருக்க வேண்டும். இந்த உண்மையின் குரல் கடந்த காலத்தில் இன மோதல்களின் இரைச்சல்களுக்கு மத்தியில் இந்தியாவின் காடுகளில் எதிரொலித்து வந்தன. அதுதான் உபநிடதங்களில் வெளிப்பட்டன; கீதையில் விரிவாக விளக்கப்பட்டது. மனித குலம் முழுவதுமே அறிந்ததோர் உண்மையாக இதை மாற்றவே கவுதம புத்தர் உலகத்து இன்பங்களைத் துறந்தார். கபீர், நானக் போன்ற இந்தியாவின் தலைசிறந்த மகான்களும் இந்தச் செய்தியைத்தான் தொடர்ந்து எதிரொலித்து வந்தனர்.

‘இன்றும் அதன் இதயத்தின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் இந்தியாவின் இந்த மகத்தான சாதனைதான் இந்து, முஸ்லீம், பவுத்த, கிறித்துவ செய்திகளை தனக்குள் ஒன்றிணைக்க – அதுவும்கூட உடல்வலிமையைக் கொண்டோ, அல்லது நிராசையான உணர்வினாலோ அல்ல; மாறாக, தீவிர ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவான நல்லிணக்கத்தின் மூலம் – அது காத்துக் கொண்டிருக்கிறது.’

முதலாம் உலகப் பெரும்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் விளைவாக, ஜெர்மனி மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த தருணம் அது. எனவே தனது சிறப்புரையின் மூலம் திரட்டப்பட்ட நிதியை ம்யூனிக் நகரின் சோகை பிடித்த குழந்தைகளின் நலனுக்காகச் செலவிடுமாறு ரவீந்திரர் கொடுத்துவிட்டார்.

ஜெர்மனியின் பல்வேறு நகரங்களும் அவரைத் தங்கள் ஊருக்கு வருமாறு அழைத்தபோதிலும், அவரால் அவற்றை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனினும் தர்ம்ஸ்டட் நகரின் ஹெஸே பிரபுவின் அழைப்பை மட்டும் அவரால் மறுதலிக்க முடியவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு 1911ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவர் சந்தித்த ஹெர்மன் கேசெர்லிங் பிரபுவை அவர் மீண்டும் பார்க்க விரும்பினார்.

தர்ம்ஸ்டட் நகரில் அவர் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்தார். அங்கே அதிகாரபூர்வமான நிகழ்ச்சிகளோ, உரைகளோ எதுவும் இல்லை. எனினும் அவர் தங்கியிருந்த அரண்மனைத் தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் கூட்டம் கூடிவிடும். ரவீந்திரர் தான் தங்கியிருக்கும் அறையிலிருந்து வெளியே வந்து அவர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். கேசெர்லிங் பிரபுதான் அவருக்கு அப்போது மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்.

ஒரு ஞாயிறன்று கேசெர்லிங் பிரபு அவரை ஊருக்கு வெளியேயிருந்த ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். சிறு குன்றின் மேலிருந்த கல்மேடையில் அவர்கள் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திலேயே விடுமுறையைக் கழிக்க அங்கு வந்த மக்கள் அந்த மேடையைச் சுற்றித் திரளத் தொடங்கினர். யாருடைய தூண்டுதலும் இல்லாமலேயே அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டாகப் பாடத் தொடங்கி விட்டனர். ஒன்றுக்குப் பின் ஒன்றாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சேர்ந்திசை நிகழ்ச்சி தொடர்ந்தது. அங்கு குழுமியிருந்த சுமார் இரண்டாயிரம் பேர் எவ்விதத் தயக்கமுமின்றி, யாருடைய தூண்டுதலுமின்றி ஒருமித்த குரலில் இந்த இசைக் கச்சேரியை நிகழ்த்தியதை ஜெர்மனிக்கு அப்பால் வேறெங்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என ரதீந்திரநாத் பின்னர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். திடீரென்று வெளிப்பட்ட இந்த மக்களின் பாராட்டு கவிஞரைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெர்மனியின் அந்தச் சின்னஞ்சிறு நகரில் இருந்த கலைஞர்களின் குழு ஒன்று முற்றிலும் வேறு வகையான பிரிவினர் கவிஞரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டுவிட்டனர் என்று புகார் எழுப்பியதோடு, அவரை தங்கள் கிளப்புக்கு வருமாறும் அழைத்தனர். ரவீந்திரர் அங்கு சென்றபோது, அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்து, மிகுந்த இரைச்சலோடு இருந்தது. மேஜைகளில் பீர் கோப்பைகள் நிரம்பிக் கிடந்தன. அறையெங்கும் சுருட்டுப் புகை அடைந்து கிடந்தது. அங்கிருந்த எவருமே கவிஞரை வரவேற்க எழுந்து நிற்கவில்லை.

எனினும் இவை எதையும் பொருட்படுத்தாமல் ரவீந்திரர் அவர்கள் மத்தியில் சென்று அமர்ந்து, அவர்களின் ஆன்மீக, அரசியல் கேள்விகளுக்கு மிகவும் சுதந்திரமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த அதே தருணத்தில், மேஜைகளில் இருந்த பீர் கோப்பைகள் மேஜைக்குக் கீழே சென்றுவிட்டன. சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தவர்கள் அவற்றை அணைத்துவிட்டு, மிகுந்த கவனத்தோடு கவிஞர் கூறுவதை கேட்கலாயினர். பின்னர் அவர்களின் பாராட்டு மழையில் நனைந்தபடி வெளியே வந்தபோது, ‘இதைவிடப் பெரிய வெற்றியை தான் எப்போதும் அடைந்ததில்லை!’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டார். இந்த நகரத்தில் அவர் தங்கியிருந்த ஒரு வார காலமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஓர் இந்தியக் கவிஞருக்கு ஜெர்மனியில் கிடைத்த உற்சாகமான வரவேற்பு பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்ப லண்டனில் இருந்து வெளிவரும் ’டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழின் ஜெர்மன் நாட்டு நிருபர் ‘ஹாம்பர்க் நகரில் கவிஞருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு ‘இந்தியச் சந்தையை பிடிப்பதற்காக’ ஜெர்மன் முதலாளிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

‘லே எக்ளேர்’ என்ற பிரெஞ்சுப் பத்திரிக்கை இவ்வாறு கூறியிருந்தது: ‘ஓர் இந்து டால்ஸ்டாயைப் போல ரவீந்திரநாத் தாகூர் தோற்றமளிக்கிறார். எதிர்பார்ப்பது போலவே, தனது பிரசாரத்திற்கு ஜெர்மனி அவரைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜெர்மனிக்கு உள்ளேயே அனைத்தும் அடங்கிவிடும் என்ற பார்வையை முழுமனதோடு ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். இதனாலேயே ரைன் நதிக்கு அப்பாலுள்ள பத்திரிக்கைகள் அனைத்துமே அவரைப் புகழ்ந்து தள்ளுகின்றன’ என்று குறிப்பிட்டது.

தனது இந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் டாக்டர் ருடால்ஃப் யூகெனுக்கு ரவீந்திரர் அனுப்பிவைத்த ஒரு வாழ்த்துச் செய்தியையும் அது மேற்கோள் காட்டியது. எனினும் இந்தச் செய்தியில் இருந்த ‘ஜெர்மனி மட்டும் இப்படிச் செய்தால்’ என்ற வார்த்தையை மட்டும் அது ‘வசதியாக’ மறந்து விட்டிருந்தது. ரவீந்திரர் அனுப்பியிருந்த செய்தி இதுதான்:

‘தனது நவீன காலத்துப் பாவங்களுக்கான பிராயச்சித்தமாகத் தவமிருந்து, தூய்மையோடும், வலிமையோடும் வெளிப்பட வேண்டும் என்பதுதான் ஜெர்மனியின் விதியாக இருக்குமானால், தன்னை முற்றாகப் பொசுக்கிய தீயை, அதன் உண்மையான விடுதலைக்கான விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மகத்தான ஓர் எதிர்காலத்திற்கான வழியைக் காட்டும் ஓர் ஒளிவிளக்காக எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதை மட்டும் அது அறிந்திருக்குமானால், மனிதகுல வரலாற்றில் அது பாராட்டிற்குரிய நாடாகத் திகழும்.’

ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து, அவர் வியன்னாவில் இரண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு, செக்கோஸ்லோவாகியாவின் தலைநகரமான ப்ரேக்கிற்குச் சென்று அங்குள்ள சார்லஸ், ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தினார். இந்தப் பயணத்தின்போது புகழ்பெற்ற இந்திய வல்லுநர்களான பேராசிரியர்கள் எம். விண்டர்னிட்ஸ், வி. லெஸ்னி ஆகியோரைச் சந்தித்து, அவர்களோடு ஆழ்ந்த நட்புறவை உருவாக்கிக் கொண்டார். இவர்கள் இருவருமே பின்னாளில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

இவர்களில் தாகூரின் எழுத்துகளை வங்காளியிலிருந்து நேரடியாக செக் மொழியில் மொழிபெயர்த்த முதல் வெளிநாட்டு அறிஞராக பேராசிரியர் லெஸ்னி திகழ்ந்தார். 1914ஆம் ஆண்டிலேயே செக் மொழியில் ரவீந்திரரின் கவிதைகளை அவர் மொழிபெயர்த்திருந்தார். சாந்திநிகேதனில் தங்கிச் சென்ற பிறகு, ரவீந்திரரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் அவர் எழுதினார். இந்தப் பயணத்தின்போது ரவீந்திரர் புகழ்பெற்ற செக் எழுத்தாளர் காரெல் காபெக் மற்றும் இசையமைப்பாளர் லியோஸ் ஜானாசெக் ஆகியோருடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

கிழக்கு-மேற்கு நாடுகளின் ஒத்துழைப்பினைக் கோரி, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ரவீந்திரர் குரலெழுப்பி வந்த அதேநேரத்தில்தான், இந்தியாவின் மற்றொரு மகத்தான குரலாக எழும்பி வந்த காந்தி அதற்கு நேரெதிரான நிலைபாட்டினை இந்திய மக்கள் முன் வைத்தார். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்து, மதித்த போதிலும், இந்த இரு தலைவர்களின் முரண்பாடு இறுதிவரை நீடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1921 ஜூலை முதல் நாள் பிரான்சின் மார்செயில்ஸ் துறைமுகத்திலிருந்து இந்தியாவை நோக்கி அவர் தன் பயணத்தைத் தொடங்கினார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று, இந்தியர்கள் பலரும் கிடைக்காதா என ஏங்கித் தவித்த இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டபோதிலும், கொண்ட கொள்கைக்காக அதை உதறித் தள்ளிவிட்டு, இந்திய அரசியல் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முடிவோடு இந்தியாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த, நேதாஜி என்ற அடைமொழியுடன் வங்காளத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையாக உருவாகவிருந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற 24 வயது இளைஞரும் அதே கப்பலில்தான் பயணம் செய்தார்.

அப்போது அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்ததைப் போலவே, ரவீந்திரரின் எதிர்காலமும் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகவே இருந்தது. வன்முறை-அகிம்சை என்ற இரு கருத்துகளின் மீது ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட பார்வையினைக் கொண்டிருந்த அந்த இரண்டு வங்காளிகளும், பயணம் செய்த கப்பல் பம்பாய் துறைமுகத்தில் நங்கூரமிடும்வரை, இந்தியாவில் அப்போது வேகமாகப் பரவிவந்த புதிய அரசியல் இயக்கங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டே வந்தனர். 14 மாத கால சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ரவீந்திரர் மீண்டும் சாந்திநிகேதனுக்குத் திரும்பினார்.

வரவிருக்கும் காலம் தனக்கு அமைதியைத் தரும் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை என்பதை அமெரிக்காவிலிருந்து ஆண்ட்ரூஸுக்கு அவர் எழுதிய கடிதம் வெளிப்படுத்தியிருந்தது: ‘நான் இந்தியாவிற்குத் திரும்பும்போது எனது மக்களே என்னைப் புறக்கணிப்பார்கள் என்றுதான் நான் அஞ்சுகிறேன். என் தாய்நாட்டில் எனக்கான தனிமைச்சிறை காத்திருக்கிறது. அவர்களின் தற்போதைய எண்ணப் போக்கினைப் பார்க்கும்போது, தாய்நாட்டை விட கடவுளையே பெரிதாக நம்பும் என் தாய்நாட்டு மக்கள் என்னை அணுகுவதற்குப் பொறுமையற்றவர்களாகவே இருக்கின்றனர். என் நாட்டு மக்களின் மீது நான் பெரிதும் அன்பு செலுத்துகிறேன். அவர்களின் அன்பை பெரிதும் மதிக்கிறேன்.

‘எனினும் ஆற்றின் போக்கு எனக்கு எதிராக இருக்கும் இடத்தை நோக்கியே என் படகை செலுத்த வேண்டிய நிலையை காலம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. பெருங்கடலின் ஒரு கரையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே கலாசார ரீதியான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்று நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுகரையில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய பிரசாரம் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எத்தகைய விதி இது என்று என்னை மலைக்க வைக்கிறது.’

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *